Home

Friday, 21 February 2020

வினோபா : மகத்தான சாதனை - கட்டுரை



25.03.1916 அன்று கல்லூரி இடைநிலைப் படிப்பின் இறுதித்தேர்வை எழுதுவதற்காக பம்பாய் செல்லும் ரயிலில் பயணம் செய்தார் ஓர் இளைஞர். சிறுவயது முதல் காசியையும் இமயத்தையும் காணும் கனவுகளை மனத்தில் தேக்கிவைத்திருந்தவர் அவர். பயணத்தின்போது அக்கனவுகள் மீண்டும் துளிர்த்தெழ, அந்த உந்துதலில் சட்டென சூரத் நிலையத்தில் இறங்கி காசிக்குச் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். அங்கு தங்கி சமஸ்கிருதம் பயிலத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் காசிக்கு வரும் அரசியல் போராட்ட வீரர்களைச் சந்தித்து உரையாடினார்.

ஒருநாள் அவர் தங்கியிருந்த இடத்தில் தற்செயலாக கைக்குக் கிடைத்தஆசிரம பத்ரிகாஎன்னும் பழைய பத்திரிகையை எடுத்துப் புரட்டினார் இளைஞர். அதில் பிப்ரவரி மாதம் இந்துப் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு காந்தியடிகள் பேசிய உரையின் சுருக்கம் வெளியாகியிருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆடம்பரத்தையும் மக்களை அடக்கியாள்வதற்காக அவர்கள் கையாளும் வன்முறையையும் சுட்டிக்காட்டி காந்தியடிகள் உரையாற்றியிருந்தார். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளையும் அவர் உரை விமர்சித்திருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ விருப்பமற்றவர்கள் அவர்களை நேருக்குநேர் பார்த்து ஆங்கிலேயர்களே, எங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என உரைக்கும் மனத்துணிவைக் கொண்டிருக்கவேண்டும். அதற்காக அவர்கள் சிறைத்தண்டனை விதித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரமும் வேண்டும். அதைவிடுத்து வெடிகுண்டு வீசுவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது ஆகியவற்றால் ஒருபயனும் விளையாது. அனைவரும் ஒன்று திரண்டு அகிம்சை வழியில் ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்பதே சிறந்த வழியாகும் என வெளியாகியிருந்த பத்திரிகைக்குறிப்பைப் படித்து உற்சாகம் கொண்டார் அந்த இளைஞர். அவர் பெயர் வினாயக் நரஹரி பாவே. பிற்காலத்தில் வினோபா என்று அழைக்கப்பட்டவர்.
அன்றே காந்தியடிகளுக்கு வினோபா ஒரு கடிதம் எழுதினார். பத்திரிகையில் படித்த செய்தியைப்பற்றி குறிப்பிட்டுவிட்டு, அகிம்சை பற்றியும் வாழ்க்கைபற்றியும் தன் மனத்தில் எழுந்த சில கேள்விகளை முன்வைத்து விளக்கங்களை வேண்டினார். காந்தியடிகளிடமிருந்து அவருக்கு உடனே பதில் வந்தது. அவர் எழுதியிருந்த விளக்கங்களை ஒட்டி மீண்டும் அவர் மனத்தில் கேள்விகள் எழ,  காந்தியடிகளுக்கு அடுத்ததொரு கடிதத்தை எழுதி அனுப்பினார் அவர். அதற்கும் காந்தியடிகளிடமிருந்து பதில் வந்தது. வினோபா அடுத்ததொரு கேள்விப்பட்டியலை அனுப்பியதுமே கடிதத்திலேயே விளக்கம் தருவது சிரமமென்றும் அகமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்துக்கு வந்து சந்திக்கும்படி எழுதிவிட்டு, சந்திக்கவேண்டிய நாள், நேரம் அனைத்தையும் தெரிவித்திருந்தார். குறித்த நேரத்தில் ஆசிரமத்துக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார் வினோபா. ஆசிரமத்தின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார் அவர். அது அவர் வாழ்வின் போக்கையே திசைமாற்றியது.
அன்றுவரை ஆசிரமத்தில் கழிப்பறைகளைத் தூய்மையாக்கும் பொருட்டு தனிப்பட்ட துப்புரவுப்பணியாளர் இருந்தார். அவர் வெளியிலிருந்து வந்து மலத்தை வாளியில் சுமந்து சென்று குழியில் கொட்டிவிட்டு தூய்மைசெய்துவிட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர் வேலைக்கு வரவில்லை. அவருடைய மகன் வந்திருந்தார். அவரால் மலம் நிரம்பிய வாளியைத் தூக்கிக்கொண்டு நடக்கமுடியவில்லை. அதைப் பார்த்த வினோபா ஓடோடிச் சென்று வாளியைச் சுமந்து சென்று உதவினார். அடுத்தநாள் கழிவறைகளைத் தூய்மை செய்வதிலும் அச்சிறுவனுக்கு உதவிகள் செய்தார். அதைக் கண்ணுற்ற ஆசிரமவாசிகள் வினோபாவை அழைத்து, அது அவர் செய்யவேண்டிய வேலையல்ல என்று தடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் பேச்சைப் பொருட்படுத்தாமல் தினமும் அந்த வேலைகளைச் செய்தார் வினோபா.
அச்செய்தி காந்தியடிகளின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் அனைவரையும் அழைத்து, ”மலமள்ளுவதும் கழிப்பறைகளைத் தூய்மை செய்வதும் புனிதமான செயல்கள். இனிமேல் ஆசிரமத்துக்கு தனிப்பணியாளர் அவசியமில்லை. ஆசிரமத்தில் உள்ள அனைவரும் ஒரு நாளைக்கு ஒருவரென முறைவைத்து கழிப்பறை வேலையைச் செய்யவேண்டும். இதற்கு உடன்படாதவர்கள் இந்தக் கணமே ஆசிரமத்தைவிட்டு வெளியேறலாம்என்று அறிவித்தார். அந்த அறிவிப்பை விரும்பாத காந்தியடிகளின் சகோதரி உட்பட பலரும் ஆசிரமத்தைவிட்டு அன்றே வெளியேறினார்கள். எந்த வேலையும் உயர்வோ தாழ்வோ இல்லை. மனிதர்களிடையிலும் பேதமெதுவும் இல்லை. அனைவரும் ஒன்றே என்று அறிவித்தார் காந்தியடிகள். புதிய விதியொன்று ஆசிரம விதிப்பட்டியலில் ஒன்றென மாற ஏதோ ஒருவகையில் வினோபா காரணமாக  இருந்தார்.
இயல்பாகவே அறிவாற்றல் மிக்கவராக இருந்தார் வினோபா. கற்பதும் கற்பிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்கள். நேரத்தை ஒருபொருட்டாகக் கருதாமல் ஓய்வின்றி உழைக்கக்கூடியவர். காய்கறி நறுக்குவது, தானியங்களைத் தூய்மை செய்வது, பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவது என எந்த வேலை செய்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி அருகில் இருப்பவர்களுக்குக் கற்பித்தபடியே செய்வார். அவர் பன்முக ஆற்றல் உள்ளவர். அவர் இருக்குமிடத்தில்  பாடமும் நடக்கும், வேலையும் நடக்குமென்று காந்தியடிகள் அடிக்கடி கூறுவதுண்டு.
இடைவிடாத வேலைச்சுமைகளினாலும் பல்வேறு விரதங்களாலும் வினோபா மெலிந்து உடல்நலம் குன்றினார். உடனே காந்தியடிகள் அவரை மருத்துவம் பார்த்துக்கொள்ளவும் ஓய்வெடுக்கவும் வை என்னும் ஊருக்கு அனுப்பிவைத்தார். ஏறத்தாழ ஓராண்டுக்காலம் அங்கு தங்கியிருந்தார் வினோபா. அந்த ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி வினோபா முழுமையாக சமஸ்கிருதம் கற்று தேர்ச்சி பெற்றார்.
ஆசிரம வாழ்வைப்போலவே சிறைவாழ்க்கையையும் இன்முகத்துடன் எதிர்கொண்டவர் வினோபா. 1923 ஆம் ஆண்டில் நாக்பூரில் கொடியேற்றி வைத்துவிட்டு தேச விடுதலையைப்பற்றியும் ஆங்கிலேயர் ஆட்சியால் உருவான அவலங்களைப்பற்றியும் பொதுமக்களிடையே உரையாற்றினார் வினோபா. அகிம்சை வழியை ஏற்று விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது அவருடைய முதல் சிறைவாசம். இதைத் தொடர்ந்து 1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்றார். 1941 ஆம் ஆண்டில் கைதானபோது ஓராண்டு காலம் தண்டனை கிடைத்தது.  வெள்ளையனே வெளியேறு/ போராட்டத்தின்போது அவர் சிறையில் மூன்றாண்டுக்காலம் கழிக்கவேண்டியிருந்தது.
ஒருமுறை சிறையில் இருக்கும்போது வினோபா தன் தாயை நினைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல சமயங்களில் அவருக்கு அருகில் அமர்ந்து கீதை வரிகளைப் படித்துக் காட்டியதும் அவற்றின் பொருளை பல நடைமுறைக்கதைகளோடு இணைத்தும் ஒப்பிட்டும் புரியும்படி விரிவுபடுத்திச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதுஒருநாள் நம் மண்ணில் வாழும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிய மராத்தியில் கீதைக்கு நீ ஓர் உரை எழுதுவாயா?” என்று கேட்டதும் நினைவுக்கு வந்தது. அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற சிறைவாசமே பொருத்தமான இடம் என உணர்ந்து உடனடியாக செயலில் இறங்கி எழுதி முடித்தார். அது மட்டுமன்றி, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்ற கைதிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் விரிவான எடுத்துக்காட்டுகளுடன் கீதையைப்பற்றிய உரைகளை நிகழ்த்துவார். கீதையைப்பற்றிய தொடர்ந்த பேச்சுகளால், அவர் நிகழ்த்திய உரைகள் அனைத்தும் மனப்பாடமாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வாய்ப்பாட்டுப்புத்தகம் போல வினோபாவுக்கு கீதை ஆகிவிட்டது. கீதை என்பது நடைமுறைக்குப் பொருந்தாத ஏதோ தத்துவங்களைக் கொண்ட நூல் என்று நினைத்திருந்தவர்களைக்கூட அது எந்த அளவுக்கு தினசரி வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள ஓர் உற்ற கருவியாக எப்படியெல்லாம்  உதவுகிறது என உணரவைத்தது.  மேலும் சுயராஜ்ஜியம் பற்றிய முக்கியமானதொரு நூலையும் வினோபா எழுதினார். நாமதேவர், ஞானேஸ்வரர்,  ஏகநாதர் போன்ற ஞானிகள் பாடிய வழிபாட்டுப் பாடல்களையெல்லாம் தொகுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைந்தார்.
சிறைச்சாலையில் சாதாரணக் கைதிகளோடு ஒருவராக அடைத்துவைக்கப்படுவதையே வினோபா எப்போதும் விரும்பினார். எந்த விதத்திலும் தான் மற்றவர்களைவிட மேலானவன் கிடையாது என்பதை உணர்ந்துகொள்ள சிறைவாசம் சிறந்ததொரு வாய்ப்பு என்பதே அவர் எண்ணம். சிறைவாழ்க்கையே ஆசிரமவாழ்க்கைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. ஓர் உடை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், ஒரு பானை என எல்லாமே தேவைக்கு மட்டுமே அங்கு இருந்தன. குறித்த நேரத்தில் உறங்கச்செல்வது, குறித்த நேரத்தில் எழுந்திருப்பது, குளிப்பது, உண்பது, உழைப்பது என ஒவ்வொரு செயலிலும் நேரம் தவறாமை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான சுவையற்ற உணவு ஆழ்மன விருப்பத்திலிருந்து விடுபட்டு நிற்க உதவியாக இருக்கிறது. சிறைச்சாலையே உண்மையான ஆசிரமம் என்று குறிப்பிட்டு தனக்கு நேர்ந்த துன்பங்களையெல்லாம் இன்பமாக மாற்றிக்கொண்டார் வினோபா. எந்தச் செயலைச் செய்தாலும், அதில் நம் ஆழத்துக்குள் அமைந்திருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்தமுடியும் என்னும் உறுதியான நம்பிக்கையோடு வாழ்ந்தார் வினோபா.
ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களின் மனநிலையைப் பண்படுத்தும் விதமாக, ஓய்வு நேரத்தில் ஆசிரமத்துக்கு வெளியே குடிசைப்பகுதிகளில் நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களைச் சந்தித்து பணிவிடை செய்யவேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்தார் காந்தியடிகள். செவிலியர்போல உடனிருந்து நோய் முற்றிலும் நீங்கி குணமடையும் வரை சேவை செய்யவேண்டுமென்று தெரிவித்தார். வினோபா உடனடியாக இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். இதனால் குடிசைவாசிகள் மருத்துவத்துக்காகச் செய்யும் செலவு பெருமளவில் மிச்சமானது.
இப்பணியை நாடு முழுதும் பரவலாக்கும் வகையில் ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தும்படி வினோபாவிடம் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். அவர் சொற்களுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக ஒரு சுற்றுப்பயணத்தை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கினார் வினோபா. சின்னச்சின்ன கிராமங்களுக்கெல்லாம் சென்று ஆதரவற்றவர்களுக்குச் சேவை செய்தார். இந்தத் திட்டம் முழுமை பெறும் நேரத்தில் 30.01.1948 அன்று காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மறைவால் வினோபா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். எந்தத் திசையில் செல்வதென்னும் தெளிவைப் பெறமுடியாமல் குழம்பித் தவித்தார். மெல்ல மெல்ல அவராகவே அந்தத் துக்கத்திலிருந்து மீண்டார். காந்தியடிகள் விட்டுச் சென்ற பணிகளில் தொடர்வதையே தன் தலையாய கடமையென நினைத்துச் செயல்படத் தொடங்கினார். காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க அல்லும்பகலும் பாடுபடுவதையே தன் வாழ்நாள் இலக்காக வகுத்துக்கொண்டார் வினோபா. காந்தியடிகளின் சாம்பலைத் தாம் நதியில் கரைக்கும் சடங்கைச் செய்துகொண்டிருந்த சமயத்தில்  வினோபாவின் உடல் ஒருகணம் சிலிர்த்தடங்கியது. அக்கணத்தில் தாம் புதிதாகப் பிறந்து வந்தாக நினைத்துக்கொண்டார் வினோபா. தம் எஞ்சிய வாழ்நாள் முழுதும் மக்களுக்குச் சேவையாற்றுவதில் மட்டுமே கழிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நமது ஆட்சிமுறை கிராமங்களை மையமாகக் கொண்ட்தாக இருக்கவேண்டுமென விரும்பினார் வினோபா. அரசியலும் ஆன்மிகமும் சரியான விகிதத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆட்சியை நல்லவிதமாக நடத்தமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஏதேனும் ஒன்றை ஏற்று ஒன்றைப் புறக்கணித்தாலும் நல்லாட்சி செய்வது சாத்தியமற்றுப் போய்விடும். போட்டிகள் மிகுந்த இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிகளுக்கு அளவே இல்லை. இரக்கம், ஒத்துழைப்பு, தன்னம்பிக்கை, கூட்டுறவு மனப்பான்மை ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே அனைத்துவிதமான நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும். ஒருவர் மீது ஒருவர் காட்டும் பரிவின் அடிப்படையில் சர்வோதயம் என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். ‘சர்வஎன்னும் சொல்லுக்கு அனைவருக்கும் என்று பொருள். ’உதயம்என்னும் சொல்லுக்கு விடியல் என்று பொருள். சர்வோதயம் என்பது அனைவருக்குமான விடியல். அனைவரும் இன்பமுடன் கூடி வாழ வழியுரைக்கும் தத்துவம்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்பது உறுதியாகப் புலப்பட்ட நிலையில் இந்தியாவில் எப்படிப்பட்ட ஆட்சி நிலவவேண்டும் என்பதை ஒட்டி மாபெரும் மக்கள் தொண்டரான வினோபாவின் நெஞ்சில் ஒரு கொள்கைத்திட்டம் இருந்தது. அதை அவர் மக்கள் கூட்டங்கள் பலவற்றில் முன்வைத்திருந்தார். உண்மையிலேயே அனைவருக்கும் விடியலைத் தரும் மகத்தானதொரு திட்டம் அது. எப்படிப்பட்ட இலட்சியக்கனவுகளுடன் மாமனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவாவது அத்திட்டங்களின் அம்சங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
1.   உலகம் தழுவிய சகோதரத்துவம்.
2.   நாட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்காக கூட்டுறவு முறையில் இயங்கவைத்தல்.
3.   உருவாக்கப்படும் ஒவ்வொரு திட்டத்தை ஒட்டியும் திறமைசாலிகள் பங்கெடுத்து வெற்றியைத் தேடித் தருதல். மற்றவர்கள் தமக்குகந்த வகையில் சிறிதளவாவது பங்காற்றுதல்.
4.   சமுதாயத்தில் ஒவ்வொருவரும் சமமான  வகையில் முன்னேற்றம் அடைதல்.
5.   ஆட்சி அதிகாரத்தை முடிந்த அளவுக்குப் பரவலாக்குதல்.
6.   மிகக்குறைந்த அளவே நிர்வாகத் தலையீடு
7.   எளிமையான, சிக்கலற்ற நிர்வாக அமைப்பு
8.   மிகவும் குறைந்த அளவு செலவு செய்தல்
9.   தேசத்தின் பாதுகாப்புக்காக, போதிய படைபலம்
10. நாட்டுமக்கள் அனைவரும் கல்வியில் தேர்ச்சி பெறும் வகையில் செயல்திட்டங்களை வகுத்தளித்தல். அரசு கூறுவதையே கற்பிக்கவேண்டும் என்று ஆணையிட்டு கற்பிக்கும் முறை கூடாது.
1951 ஆம் ஆண்டில் ஐதராபாத்திலிருந்து சிறிது தொலைவிலிருக்கும் சிவரம்பள்ளி என்னும் சிற்றூரில் நிகழ்ந்த மூன்றாவது சர்வோதய மாநாட்டில் பங்கேற்பதற்காக நாக்பூருக்கு அருகிலிருந்த தன் ஆசிரமத்திலிருந்து புறப்பட்டார் வினோபா. நாக்பூரிலிருந்து ஐதராபாத் ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இருந்தது. இத்தொலைவை நடந்தே கடக்க முடிவெடுத்தார் அவர். தங்க நேர்ந்த ஒவ்வொரு ஊரிலும் காந்தியடிகளின் அகிம்சைத்தத்துவத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு  எடுத்துரைக்க நடைப்பயணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் கருதினார். நினைத்தவாறே ஒவ்வொரு ஊரிலும் மக்களிடையில் உரையாற்றியது அவருக்கு மிகவும் நிறைவளித்தது. அதைத் தொடர்ந்து சிவரம்பள்ளியிலும் மாநாடு சிறப்புற நடந்துமுடிந்தது.
ஆசிரமத்துக்குத் திரும்ப தொண்டர்கள் அனைவரும் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அந்த வழிப்பயணத்தையும் நடைப்பயணமாகவே வைத்துக்கொள்ளலாம் என அவர் அறிவித்தார். தொண்டர்கள் அவருடைய திட்டத்துக்கு உடன்பட்டனர். ஒரு மாறுதலுக்காக இந்தப் பயணத்தை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த தெலுங்கானா கிராமங்கள் வழியாகச் செல்லலாமென முடிவெடுத்தார் அவர். கம்யூனிஸ்டுகள் அடிக்கடி தாக்குதல் நிகழ்த்தும் பகுதி என்பதால், கலவரத்துக்கு அஞ்சி அப்பயணத்தைத் தடுக்க பலர் நினைத்தார்கள். ஆயினும் விவசாயிகளை நேருக்குநேர் சந்தித்து அவர்களுடைய பிரச்சினையைக் கேட்டறிவதற்கும் முடிந்த அளவு அவர்களுக்கு உதவுவதற்கும்  இப்பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார் வினோபா.
பயணம் தொடங்கிய மூன்றாவது நாள். கலவரப்பகுதியாக இருந்த போச்சம்பள்ளி கிராமத்தில் வினோபாவும் தொண்டர்களும் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உண்மையில் ஒருகாலத்தில் நல்ல விளைச்சலை வழங்கிய நிலப்பகுதியாகவே அக்கிராமம் இருந்தது. முறையான நீர்ப்பாசன வசதி இல்லாததாலும் நிலத்தடி நீர்ச்சத்து குறைந்திருந்ததாலும் விவசாயத்துக்குப் பொருத்தமற்ற வகையில் நிலம் வெடித்து தரிசாக மாறிவிட்டது. சாராயத்துக்குப் பேர்போன இடம் என்பதால், மக்கள் எளிதில் சாராயத்துக்கு அடிமையாக மாறிவிட்டனர். வன்முறையின் மூலம் சாராயக்கடைகளை அகற்றி, மது அடிமைகளாக மாறியிருந்த மக்களை நல்வழிப்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தனர் கம்யூனிஸ்டுகள். விவசாயத்துக்குத் தேவையான நிலங்களை நிலக்கிழார்களிடமிருந்து கையகப்படுத்தி கிராம மக்களுக்கு அளித்தனர். அதனால் அடிக்கடி கலவரங்கள் நிகழ்ந்தன.
போச்சம்பள்ளியில் வசிப்பவர்களிடம் பேசிப்பேசி பிரச்சினையின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்டார் வினோபா. ஏறத்தாழ எழுநூறு குடும்பங்கள் அக்கிராமத்தில் வசித்து வந்தன. அவர்களில் மூன்றில் இருபங்கினர் நிலமற்ற விவசாயிகள். அங்கிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் தங்கி கிராம மக்கள், கம்யூனிஸ்டுகள், நிலக்கிழார்கள் ஆகிய மூன்று தரப்பினரையும் வரவழைத்து உரையாட முற்பட்டார் வினோபா. ஆனால் வினோபா சொல்வதை கம்யூனிஸ்டு தரப்பினர் காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. தாம் செய்வதும் வினோபா செய்ய நினைப்பதும் ஒன்றே என வாதாடினர். முடிவு ஒன்றே என்றாலும் வழிமுறை வேறுவேறு என்று சுட்டிக்காட்டினார் வினோபா. வன்முறையை விதைத்தால் வன்முறையையே அறுவடை செய்யவேண்டிய சூழலே எதிர்காலத்தில் உருவாகும் என்றும் எடுத்துரைத்தார்.
குடிப்பழக்கம் எவ்வளவு கொடுமையானது என்பதை கிராமத்தினருக்கு பொறுமையாக எடுத்துரைத்தார் வினோபா. அவர்கள் அப்பழக்கத்தை விட்டுவிடுவதாக வாக்களித்தார்கள். தொடர்ந்து குறைந்தபட்சமாக எண்பது ஏக்கர் நிலம் கிடைத்தால் போதும், இங்கிருக்கும் எங்கள் குடும்பங்கள் எப்படியோ பிழைத்துக்கொள்ளும். அரசாங்கத்திடம் பேசி வாங்கித் தருவீர்களா?” என்று கேட்டார்கள். மேலும்  நிலம் கிடைத்தால் இங்கு வம்புக்கும் இடமிருக்காது, வன்முறைக்கும் இடமிருக்காதுஎன்றும் சொன்னார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தத்தளித்தார் வினோபா. ”அரசாங்கத்திடம் கேட்டால் நிச்சயம் கொடுக்கும், கொடுக்கவேண்டும். அந்த முயற்சியில் நாம் இறங்கலாம். ஆனால் அதெல்லாம் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படலாம். ஆனால் இன்றைக்கு, இக்கணத்தில் கருணையுடன் உங்களுக்கு உதவ, இந்த ஊரில் யாரும் முன்வரமாட்டார்களா?  என்று நா தழுதழுக்க அவர் கேட்டபடி அனைவரையும் பார்த்தார்.
எதிர்பாராத கணமொன்றில் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்றார். வினோபாவைப் பார்த்து வணங்கியபடிநான் ராமச்சந்திர ரெட்டி. என்னிடம் நூறு ஏக்கர் நிலமுள்ளது. நான் அதை ஹரிஜனர்களுக்கு தானமாக அளிக்கிறேன்என்று சொன்னார். வினோபா மனம் நெகிழ்ந்து ஒருமுறை பார்த்தார். ஒருகணம் அச்சொற்களை வினோபாவால் நம்பவும்  முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர் சொன்னதை மறுபடியும்  கூடியிருப்போர் அனைவருடைய நெஞ்சிலும் பதியும்வண்ணம் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். ராமச்சந்திர ரெட்டியின் அறிவிப்பு திட்டமிட்ட ஒன்றோ அல்லது பேசிவைத்த முடிவோ அல்ல. தற்செயலாக அது நிகழ்ந்துவிட்டது. தானம் வழங்கும் ஒரு புதிய வழிமுறை இந்தியாவிலேயே முதன்முறையாக அக்கணத்தில் பிறந்தது. மனமாற்றத்தைத் தூண்டும் வகையில் ஒருவரோடு உரையாடுவதன் வழியாக, இந்தியா முழுதும் நிலவிவரும் நிலப்பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்னும் மன உறுதி வினோபாவின் நெஞ்சில் உருவாக இந்த நிகழ்ச்சி காரணமாக அமைந்துவிட்டது. அவருடைய பூதான இயக்கம் இப்படித்தான் தொடங்கியது.
நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்களிடமிருந்து நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை தானமாகப் பெறுவது சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டதும் ஆசிரமத்துக்குத் திரும்பும் திட்டத்தை மாற்றி தெலுங்கானா பகுதியிலேயே ஏறத்தாழ ஏழு வாரங்களில் இருநூறு கிராமங்கள் வழியாக நடைப்பயணம் செய்தார்.  அவருடைய பயணம் தொடரமுடியாதபடி நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு வழியெங்கும் பல தொல்லைகள் ஏற்பட்டன. மனிதர்களால் ஏற்பட்ட தொல்லைகளே மிகுதி. அனைத்தையும் தம் அன்பாலும் அமைதியாலும் கடந்துசென்றார் வினோபா. ஏழு வாரங்கள் முடிவடையும் தருணத்தில் ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் ஏக்கர் நிலம் தானமாகப் பெறப்பட்டு நிலமற்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் முடிவில் பூதான இயக்கத்தை மற்ற மாநிலங்களில் பரப்புவதற்காக வினோபா புறப்பட்டுச் சென்றார். ஆயினும் வினோபா விடுத்த பூதான கோரிக்கையை முன்வைத்து ஆந்திரம் முழுக்க அலைந்து திரிந்த பூதான இயக்கத் தொண்டர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கினார்கள்.
பேராசையே அடக்குமுறைக்கு அடிப்படையான காரணம் என நினைத்தார் வினோபா. ஒருவர் தனக்குள் ஊற்றெடுக்கும் பேராசையையும் உடமையுணர்வையும் வெற்றிகொள்ளும் முனைப்பு கொண்டிருந்தால், மனிதர்களிடையே நிலவிவரும் பிரிவுகளின் பொருளின்மையையும் சுரண்டலுக்கான காரணத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அக்கணத்தில் மாபெரும் கருணையின் ஊற்றே அவர்களுடைய நெஞ்சிலிருந்து பொங்கியெழும். அடைபட்டிருக்கும் கருணையின் ஊற்றுக்கண்ணைத் திறப்பதையே தன் முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார் வினோபா.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர் தானமாகப் பெற்று நிலமற்றவர்களுக்கு அக்கணமே வழங்கிவிடுவதை பழக்கமாகக் கொண்டிருந்தார் வினோபா. அவர் கடந்து செல்லும் கிராமங்கள் தோறும் தானமாகக் கிட்டும் நிலங்களின் அளவு பெருகிக்கொண்டே சென்றது. வழக்கமாக வினோபாவும் அவருடைய சீடர்களும் அதிகாலையில் மூன்று மணிக்கு எழுந்து காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு நடைப்பயணத்தைத் தொடங்குவார்கள். அறுபதைத் தொடும் வயதில் அவருக்கு உடல்நலம் சார்ந்த பல பிரச்சினைகள் இருந்தன. ஆனாலும் துளிகூட அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக நடந்தார் வினோபா. அவருடைய சீடர்களுடன் இருவரோ மூவரோ அயல்நாட்டைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துகொள்வார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். காலை உணவுக்குப் பிறகு கிராமத்தில் சுற்றியலைந்து தாழ்த்தப்பட்டவர்களையும் மற்றவர்களையும் சந்தித்து உரையாடி ஊரில் உள்ள நிலவரத்தை முதலில் புரிந்துகொள்வார்கள். பிறகு தேவைகள் என்னென்ன என்பதைக் கேட்டு குறித்துக்கொள்வார்கள்.
மாலை வேளையில் பிரார்த்தனைப்பாடலோடு சந்திப்பு தொடங்கும்.  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் கூட்டத்துக்குத் திரண்டு வந்திருப்பார்கள். அவர்களை நோக்கி கீதையிலிருந்தும் பல்வேறு ஞானியரின் வாழ்க்கையிலிருந்தும் பல பகுதிகளை எடுத்துச் சொல்லி, மனிதநேயம், பகிர்ந்துண்ணும் பண்பாட்டின் மேன்மை, மானுட உறவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பார் வினோபா. நிலமற்ற விவசாய உழைப்பாளிகள் படும் துயரத்தை மனமுருகும் வண்ணம் எடுத்துரைப்பார். அவருடைய உணர்ச்சி ததும்பும் உரையைக் கேட்டு, அனைவருடைய உள்ளங்களிலும் கருணை ஊற்றெடுக்கும். நிகழ்ச்சியின் இறுதியில் நிலமற்ற உழைப்பாளிகளுக்கு நிலம் வழங்கும்படி நிலாக்கிழார்களிடம் வேண்டுவார். நிலக்கிழார்கள் தாமாகவே முன்வந்து தமக்குச் சொந்தமான நிலங்களை ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தானமாக வழங்குவதைப்பற்றி அறிவிப்பார்கள்.
இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான மைல் தொலைவை வினோபாவும் அவர் தொண்டர்களும் நடைப்பயணமாகவே எண்ணற்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாடினார்கள். நாடெங்கும் பூதானத்தைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. 1951 ஆம் ஆண்டில் தொடங்கிய அவருடைய நடைப்பயணம் 1957 வரை தொடர்ந்தது. இப்பயணங்களின் முடிவில் மொத்தத்தில் நாற்பது மில்லியன் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெறப்பட்டு நிலமற்ற தாழ்த்தப்பட்டோருக்கும் எளியோருக்கும் வழங்கப்பட்டிருந்தது. வேறெந்த தேசத்திலும் நிகழாத சாதனையை வினோபா இந்தியாவில் நிகழ்த்தியிருந்தார்.
தனிப்பட்ட மனிதர்கள் தானமாகப் பெறும் நிலங்களில் சிலர் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. சிறிது காலம் பயிரிட்டு அறுவடை செய்தபிறகு, தரிசாகப் போட்டுவிடத் தொடங்கினர். சிலர் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டனர். சிலர் அடகுவைக்க முற்பட்டனர். சிலர் தம்வசம் இருக்கும் நிலத்தை விவசாயம் செய்வதற்காக வேறொருவருக்கு கைமாற்றிக் கொடுத்தனர். இதனால் தானம் பெற்றதன் நோக்கம் அடிபட்டுப் போவதைப் பார்த்து மனவேதனைப்பட்டார் வினோபா. அதனால் நீண்ட யோசனைகளுக்குப் பிறகு அவர் புதியதொரு முடிவெடுத்தார். ஒரு கிராமத்தில்  தானமாகப் பெறும் நிலங்களை தனிப்பட்டவர்களுக்குப் பிரித்தளிக்காமல் அக்கிராமத்தலைமையின் பொறுப்பில் விடுவதென்றும் ஒருவர் தம்மால் பயிர்செய்ய முடிந்த அளவுக்கு நிலத்தை தலைமையிடமிருந்து பெற்று பயிர் செய்துகொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துச் செயலாற்றி, ஒவ்வொருவரும் பயன்பெறும்  கூட்டுப்பண்ணை முறையை அறிமுகப்படுத்துவது அவர் விருப்பமாக இருந்தது. வினோபா இம்முறைக்கு கிராமதான் என்று பெயர்சூட்டினார். ஏறத்தாழ பத்தாண்டு கால இடைவிடாத பயணங்கள் வழியாக ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கிராமங்களில் கிராமதான் பெறப்பட்டு கிராமத்தலைமையின் மேற்பார்வையின் கீழ் அனைவரும் கூடி உழைக்கும் விதமாக மாற்றியமைக்கப்பட்டது. 1951 முதல் 1970 வரை சலிப்பின்றி இடைவிடாமல் தொடர்ந்த வினோபாவின் நடைப்பயணம் மகத்தானதொரு சாதனை.
ஜெய் ஜகத்என்பது வினோபா வழங்கிய மகத்தான சொல். அனைவரும் ஒன்றென வாழ்ந்தால் மட்டுமே உலகம் வாழும். அனைவரும் சமமென்னும் சொல்லைவிட அனைவரும் ஒன்றென்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவருக்குள்ளும் வாழும் இறைவன் ஒருவனே. ஆதலால் அனைவரும் ஒன்றே. வினோபா வலியுறுத்தும் ஒற்றுமை என்னும் சொல்லுக்குப் பின்னால் அனைவரையும் ஒன்றிணைக்கும் தத்துவப்பார்வை உள்ளது. சமுதாய அளவிலும் பொருளாதார அளவிலும் சமத்துவத்தை உருவாக்கலாம். ஆயினும் மனதளவில் ஏற்படும் சமத்துவத்தால் மட்டுமே ஒற்றுமை உருவாகும். அப்போதுதான் உலகம் தழுவிய மானுடமும் சாத்தியப்படும். அந்த அன்புப்பாதையில் அனைவரையும் அழைத்துச் செல்ல முனைந்தவர் வினோபா.

(அம்ருதா - ஜனவரி 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)