ரெளலட் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காந்தியடிகள் தஞ்சாவூருக்கு 24.03.1919 அன்று வந்தார். ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்துக்குத் திரண்டு வந்து காந்தியடிகளை
வரவேற்றனர். தஞ்சாவூரில் புகழ்பெற்ற வழக்கறிஞரும் ‘தமிழ் வரலாறு’ என்னும் புத்தகத்தை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசன் பிள்ளை காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து
ஊர்வலமாக தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தமிழகப்பகுதிகளில் பயணம் செய்யும்போது தமிழில் கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்ட காந்தியடிகள் பெரிய கோவிலுக்குச் சென்ற தருணத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். பதிவேட்டுக்கு அருகில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேனா வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் சுதேசியமயமாக இருக்கும் நாணத்தட்டையால் மட்டுமே எழுதவேண்டுமென்றும் ஒவ்வொரு செயலிலும் சுதேசியத்தைக் கடைபிடிக்கவேண்டியது மிகமிக முக்கியமென்றும் ஆலய தர்மகர்த்தாக்களிடம் தெரிவித்தார்.
அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சத்தியாக்கிரக விரதத்தைப்பற்றி உரையாற்றினார் காந்தியடிகள். சத்தியாக்கிரக விரதத்தால் மன உறுதி பெருகும். மாபெரும் செயல்களைச் செய்யக்கூடிய ஆற்றல் கிட்டும். மனசாட்சிக்கு மாறாக எந்தவொரு செயலையும் நாம் ஒருபோதும்
செய்யக்கூடாது. அறமற்றதும் அநீதியுமான சட்டங்களுக்கு எதிராகப் போராடி தேசநலனுக்கும் பொதுமக்கள் முன்னேற்றத்துக்கும் செயலாற்றுவதற்குத் தேவையான ஆற்றலை சத்தியாக்கிரக விரதம் வழங்கும். அந்தச் சக்தியே அதன் பெருமை என்றெல்லாம் விரிவாகப் பேசி பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார்.
சீற்றமில்லாமலும்
பழிவாங்கும் எண்ணமற்றும் சத்தியத்தின் வழியில் செயல்பட்டு தேச முன்னேற்றத்துக்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அகிம்சைக்கொள்கையை வலியுறுத்திப் பேசினார். இறுதியில் ரெளலட் சட்டத்தை அரசாங்கமே முன்வந்து ரத்து செய்யும் அளவுக்கு மக்களுடைய சத்தியாக்கிரகம் அமையவேண்டும் என்று சொல்லி தன் உரையை முடித்தார். அந்நிகழ்ச்சியிலேயே காந்தியடிகளின் முன்னிலையில் எழுபத்தைந்து பேர்கள் சத்தியாக்கிரக விரதத்தைக் கடைபிடிப்பதாக வாக்குறுதியளித்து கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள்.
மக்கள் கூட்டத்தில் ஒருவனாக காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லையும் கேட்டபடி உணர்ச்சிக்கோலத்தில் நின்றிருந்தான் ஒரு சிறுவன். தேச நலனுக்காக உழைக்கும்படி அவர் விடுத்த அழைப்பைக் கேட்டு அச்சிறுவனின் மனம் பொங்கியது. அந்தச் சத்திய வெள்ளத்துடன் தானும் இணைந்துகொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். தஞ்சாவூரில் புனித பீட்டர்ஸ் ஆங்கிலப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருந்த மாணவன் அவன். காந்தியடிகள் என்னும் பெயரை தினந்தோறும் செய்தித்தாட்களில் மட்டுமே படித்துப்படித்து அவர் மீது அளவற்ற பக்தியை வளர்த்துக்கொண்டிருந்த அச்சிறுவன் தஞ்சாவூருக்கே காந்தியடிகள் வருகை தரும் சூழலில் அவரைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்துவிட்டான். காந்தியடிகள் வருவதற்கு முதல்நாளே அப்பள்ளியின் முதல்வர் காந்தியடிகளைப் பார்ப்பதற்கு மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தார். அந்த அறிவிப்பை மீறித்தான் அம்மாணவன் கூட்டத்துக்கு வந்திருந்தான். அவன் கூட்டத்துக்குச் சென்ற செய்தி எப்படியோ பள்ளி முழுதும் பரவிவிட்டது. பள்ளி முதல்வர் அச்சிறுவனை அழைத்து “நீ காந்தியைப் பார்க்கச் சென்றது உண்மையா?” என்று கேட்டு மிரட்டினார். சத்தியத்தின் மேன்மையைப்பற்றி காந்தியடிகள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் நெஞ்சில் நிரம்பியிருந்த சூழலில் அச்சிறுவன் உண்மையை ஒத்துக்கொண்டான். முதல் முறையாக தவறு செய்தவன் என்பதால் அவனை மன்னிப்பதாகச் சொன்ன முதல்வர் அவனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார். காந்தியடிகள் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த அச்சிறுவன் பெயர் கே.வைத்தியநாதன்.
வைத்தியநாதனுக்கு மருத்துவம் படிக்க விருப்பமிருந்தது. அரசு ஊழியர்களாக இருந்த அவருடைய மூத்த சகோதரர்கள் அவரை வழக்கறிஞராக உருவாக்க விரும்பினார்கள். அதனால் அந்தக் கனவுடன் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டார். கல்வியைத் தொடர்ந்தாலும் அவர் மனம் தேசிய இயக்கச் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் திருச்சியில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு தினமும் சென்று செய்தித்தாட்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர். அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கே திரண்டிருக்கும் தொண்டர்களுக்காக கடிதங்களையும் துண்டறிக்கைகளையும் எழுதிக் கொடுத்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பாக நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்த காந்தியடிகள் மாணவர்களும் வழக்கறிஞர்களும் அரசுப்பணிகளில் இருப்பவர்களும் ஆங்கில அரசுக்கு எவ்விதத்திலும் ஒத்துழைக்காமல் எதிர்ப்பை வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அச்சமயத்தில் தமிழகப் பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சிக்கும் வருகை புரிந்தார். காந்தியடிகள் வருவதை முன்னிட்டு திருச்சி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் வசித்துவந்த எண்ணற்ற தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த தொண்டர்களையும் அவர்களோடு இருந்த வைத்தியநாதனையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
ஒன்பது நாள் சிறைவாசத்துக்குப் பிறகு பத்தாவது நாள் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தனர். மற்றவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கல்லூரி மாணவனாக இருந்ததால் வைத்தியநாதனை மட்டும் எச்சரித்துவிட்டு விடுதலை செய்தார். ஆனால் கல்லூரி முதல்வர் அவரை கல்லூரியில் சேர்த்துக்கொள்ளத்
தயாராக இல்லை. நீதிபதியிடமிருந்து சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லிவிட்டார். சான்றிதழ் தரவேண்டுமெனில் இனி வாழ்நாளில் ஒருபோதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கையெழுத்து போட்டுத் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சத்தியத்தில் பற்று கொண்ட வைத்தியநாதனுக்கு நீதிபதி வலியுறுத்தும் வகையில் எழுதிக் கொடுக்க விருப்பமில்லை.
அதனால் அவர் கல்லூரியை விட்டு விலகவேண்டிய சூழல் ஏற்பட்டது. சான்றிதழ்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தின் வசமே இருந்ததால் வேறெந்த இடத்துக்காவது சென்று படிப்பைத் தொடரும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
மருத்துவராகும் பழைய கனவைப் பின்தொடர்ந்து செல்ல விரும்பிய வைத்தியநாதன் வ.வெ.சு.ஐயரிடமிருந்து ஒரு பரிந்துரைக்கடிதம் வாங்கிக்கொண்டு பெல்லாரியில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவரைச் சந்திக்கச் சென்றார். அவரை ஆசிரமத்தில் தங்கச் சொல்லிவிட்டு ஏதோ வேலையாக வெளியூர் சென்றிருந்த மருத்துவர் நீண்ட காலமாகியும் ஆசிரமத்துக்குத் திரும்பவில்லை. அங்கிருந்த ஒரு துறவி, வைத்தியநாதன் மீது பரிவுகொண்டு ஐதராபாத்தில் வசிக்கும் தன் நண்பரைச் சென்று சந்திக்கும்படி அனுப்பிவைத்தார். அவருடைய பரிந்துரை வழியாக வைத்தியநாதனுக்கு நிஜாம் ரயில்வேயில் எழுத்தர் வேலை கிடைத்தது. மறுநாளே வேலையில் சேர்ந்துகொள்ளும்படி அதிகாரி சொல்லிவிட்டார். ஆனால்,
அலுவலகத்துக்கு
கோட்டும் தொப்பியும்
மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். வைத்தியநாதனிடம் இருந்ததெல்லாம் வேட்டியும் சட்டையும் மட்டுமே. அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் தன்னிடமிருந்த கதர்த்துணியில் வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஒரு தையல் தொழிலாளியிடம் கொடுத்து கோட்டும் தொப்பியும் தைத்து வாங்கி வைத்தியநாதனுக்குக் கொடுத்தார். வைத்தியநாதனின் வாழ்க்கையில் அப்படித்தான் கதர் இடம்பெறத் தொடங்கியது.
ரயில்வே ஊழியர்களில் கதர்ப்பிரச்சாரத்தில் ஆர்வமுள்ள சிலர் இருந்தார்கள். வைத்தியநாதனுக்கு அவர்களுடைய நட்பு கிடைத்தது. மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகும் விடுமுறை நாட்களிலும் அவர்களோடு சேர்ந்து நகர்முழுதும் அலைந்து கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்த் தொடங்கினார். கதராடைகளை மூட்டையாகக் கட்டி தோளில் தூக்கிச் சென்று விற்பனை செய்தார். நண்பர்கள் இணைந்து செகந்தராபாத்தில் டொக்காலம்மா கோவிலுக்கு அருகில் நடத்திய கதராடை விற்பனைக்கடையிலும் பணிபுரிந்தார்.
ஏறத்தாழ ஆறரை ஆண்டுக் காலம் மட்டுமே அவருடைய ரயில்வே பணி நீடித்தது. 1930இல் அவ்வேலையை உதறிவிட்டு சென்னைக்குச் சென்று பிற காங்கிரஸ் தொண்டர்களோடு இணைந்து கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் காலையில் அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் நின்று சில மணிநேரங்கள் மறியல் செய்வதும் பிறகு கதர்த்துணிகளின் மேன்மையையும் நூல்நூற்றலின் அவசியத்தையும் எடுத்துரைப்பதும் அவருடைய பணிகளாக மாறின. கதரென்னும் ஒளிவிளக்கிலிருந்து பெருகும் வெளிச்சத்தின் துணையோடு இருளடர்ந்த வாழ்க்கைப்பாதையை அனைவரும் கடந்து சென்றுவிடலாம் என்பது வைத்தியநாதனின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது.
ஒருநாள் வைத்தியநாதன் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து
அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்தார் ஒரு காவலர். “உங்களிடம் ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்” என்று தனியே அழைத்துச் சென்றார். வைத்தியநாதனின் செயல்பாடுகளையெல்லாம் காவல்நிலைய அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வருவதாகவும் அவரைப்போன்ற காங்கிரஸ் தொண்டர்களை இரக்கமின்றி அடித்துக் கைதுசெய்யவேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்து உடனடியாக வைத்தியநாதன் மற்ற தொண்டர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு எங்கேனும் கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடுவது மட்டுமே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழியென்றும் தெரிவித்தார். காவலர் தெரிவித்த
செய்தி அவருக்குத் திகைப்பூட்டினாலும் அச்சம் கொள்ளவில்லை. அக்கணமே ”காவலராக இருந்துகொண்டு, இதை ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் வைத்தியநாதன். “நான் சம்பளத்துக்காக இந்த வேலையைச் செய்பவன். ஆனால் காந்தியோடு தொடர்புடையவர்கள் மீது மதிப்புள்ளவன். எனக்கு உங்களைப்போன்றவர்களை அடிக்க விருப்பமில்லை” என்றார். பிறகு, “அதுமட்டுமல்ல, நான் இந்த வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கலில் அகப்பட்டுக்கொண்டால் என் மனசாட்சியே என்னைக் கொன்றுவிடும்” என்று தொடர்ந்தார். அவருடைய நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்ட வைத்தியநாதன் அவருக்கு நன்றி தெரிவித்தார். அதே சமயத்தில் “நடப்பதையெல்லாம் அகிம்சை வழியில் எதிர்கொள்வது என்பதையே நாங்கள் காந்தியடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். பின்வாங்குவது என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் “என் ஆலோசனையாக ஒரே ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். ஓய்வுபெறும் சூழலைச் சுட்டிக் காட்டிவிட்டு நீங்கள் விடுப்பெடுத்துக்கொண்டு செல்லுங்கள். எது நடந்தாலும் நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்றும் எடுத்துரைத்து காவலரை அனுப்பிவைத்தார்.
காவலர் தடுக்க நினைத்த நிகழ்ச்சி வேறொரு நாளில் நடந்துவிட்டது.
ஒருநாள் காவல்நிலையம் இருந்த தெருவில் வைத்தியநாதனும்
பிற தொண்டர்களும் இணைந்து சுதந்திரப்பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாகச் சென்ற தருணத்தில் காவலர்கள் தாக்கி கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு,
அனைவருக்கும் ஆறு மாத காலம் தண்டனை
விதிக்கப்பட்டது. வேலூர்
சிறையிலும் பெல்லாரி சிறையிலும் வைத்தியநாதனின் தண்டனைக்காலம் கழிந்தது.
விடுதலைக்குப் பிறகு நண்பர்களோடு புறப்பட்டுச் சென்று கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அம்மாநாட்டுக்கு வல்லபாய் படேல் தலைமை தாங்கி நடத்தினார். மாநாடு நடைபெறுவதற்கு ஆறு நாட்கள் முன்புதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள். அதையொட்டி கசப்பும் விரக்தியும் கோபமும் படிந்த விவாதங்கள் மாநாட்டில் ஓங்கிய குரலில் நிகழ்ந்தன. காந்தியடிகள், நேரு, படேல், அப்துல் கபார்கான் ஆகிய பல தலைவர்களின் உரைகளை நேரில் கேட்கும் வாய்ப்பு வைத்தியநாதனுக்குக் கிடைத்தது.
காந்தியடிகள் வலியுறுத்திய நிர்மாணப்பணிகளில் அவருக்கு ஆர்வம் மிகுந்தது.
ஐதராபாத்துக்குத் திரும்பியதும் மனைவியையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை உணர்ந்து வருமானம்
தரக்கூடிய ஒரு வேலையைத் தேடத் தொடங்கினார். கடைசியில் சுந்தரம் என்னும் மருத்துவரின் உதவியால் செகந்திராபாத்தில் ஒரு கேபிள் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வைத்தியநாதனுக்கு வேலை கிடைத்தது. நிரந்தரமான ஒரு வருமானம் அவருடைய மனச்சுமைகளை அகற்ற உதவியாக இருந்தது.
அதே நேரத்தில் தன் மனநிறைவுக்காக அவர் ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் சேர்ந்து கதர் விற்பனைக்கும் பிரச்சாரத்துக்கும் சென்றுவந்தார். வீட்டில் தன் மனைவியையும் பிள்ளைகளையும் கதராடைகள் அணியச் செய்தார். ஒவ்வொரு நாளும் காலையில் அனைவரும் அவருடன் சேர்ந்து மன ஈடுபாட்டோடு குறிப்பிட்ட நேரம் நூல்நூற்றார்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆடைத்தேவையை அவர் மிக எளிதாகச் சமாளித்தார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சமாக ஒரு சிட்டம் நூல் நூற்கவேண்டும் என்பது அவருடைய வீட்டில் எழுதாத விதியாக இருந்தது. வயதில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவிதியாகவே அது இருந்தது. நீட்டலளவையில் ஒரு சிட்டம் என்பது எண்ணூற்று நாற்பது கெஜம். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு, யாராவது ஒருவர் ஒரு நாளில் இந்த அளவைத் தொடவில்லை என்றால், வைத்தியநாதன் அன்றைய தினம் உணவு உட்கொள்ள மறுத்துவிடுவார் வைத்தியநாதன். ஊரெல்லாம் அலைந்து திரிந்து வீட்டுக்குத் திரும்புகிறவர் உணவைத் தவிர்ப்பதைக் காணப் பொறுக்காமல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு சிட்டம் நிபந்தனையை நினைவில் கொண்டு கண்ணும் கருத்துமாக இயங்கி நூற்றுவிடுவார்கள்.
கதராடைகளை
மூட்டையாகக் கட்டி சுமந்துகொண்டு விற்பனை செய்வதற்காக தினந்தோறும் நகரத் தெருக்களில்
அலைவது அவர் வழக்கம். ஒருநாள் தற்செயலாக, மிர்ஜாபள்ளி
என்னும் இடத்தை அவரும் பிற தொண்டர்களும் கடந்துசெல்லும்போது, அவரை அங்கு வசித்துவந்த இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் கவனித்தார். பிறகு ஒவ்வொருநாளும் துணிமூட்டைகளோடு வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல்
அவர்கள் நடந்துபோவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும்
என அவருக்குத் தோன்றியது. முடிவில் சில மிதிவண்டிகளை வாங்கி தன்
வீட்டருகில் நிறுத்தினார். அடுத்தநாள் துணிமூட்டைகளோடு வந்த வைத்தியநாதனையும்
மற்ற தொண்டர்களையும் அழைத்து, அவர்கள் சுமைகளோடு நடந்துசெல்லவேண்டாம்
என்றும் மிர்ஜாபள்ளியைக் கடந்துபோகும் தருணங்களில் தம் மிதிவண்டிகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்
என்றும் தெரிவித்தார். அவர்களுக்காகவே அவை எப்போதும் திறந்த நிலையிலேயே
இருக்குமென்றும் தேவைப்படும் நேரங்களில் மிதிவண்டிகளை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டார். அந்த உதவி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
வைத்தியநாதனும் மற்ற தொண்டர்களும் மிர்ஜாபள்ளியின் சுற்றுவட்டாரப்பகுதிகளில்
விற்பனையை மேற்கொள்ளும்போதெல்லாம் அவருடைய மிதிவண்டிகளைப் பயன்படுத்திக்கொண்டனர்.
கதர் உற்பத்தியை ஒரு தேசியக் கைத்தொழிலாக வளர்த்தெடுக்க விரும்பிய காந்தியடிகள் அகில பாரத சர்க்கா சங்கத்தை ஏற்படுத்தினார். அதன் கிளைகள் கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்கப்பட்டன. கதர் வழியாக நம் நாடு ஆடைத் தேவையில் தன்னிறைவை அடையமுடியும் என்று காந்தியடிகள் உறுதியாக நம்பினார். கதர் உற்பத்தி என்னும் அடித்தளத்தின் மீது சுதேசி இயக்கத்தை வலிமையோடு நிறுத்திவைத்துவிடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது.
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை சராசரியாக ஐநூறு என வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு ஒருவருடைய
துணித்தேவை இருபது கெஜம் என்று கணக்கிட்டால், ஒரு கிராமத்துக்கு பத்தாயிரம் கெஜம் துணி தேவைப்படும். ஒரு சதுர கெஜம் துணியை நெய்ய நாலு சிட்டம் நூல் தேவை. பத்தாயிரம் கெஜத்துக்கு நாற்பதாயிரம் கெஜம் நூல் தேவை. கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் நூல் நூற்றாலேயே இத்தேவையை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இதற்கு மேல் நூற்பதும் விற்பதும் சங்கத்துக்கு லாபத்தைக் கொடுக்கும். பிரச்சாரத்தின் மையக்கருத்தாக இந்த அம்சத்தை சர்க்கா சங்கத்தினர் எடுத்துரைக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் ஆழ்மன விருப்பம்.
ஐதராபாத் சர்க்கா சங்கத்தின் பொறுப்பை ராமகிருஷ்ண தூத் என்பவரிடம் ஒப்படைத்தார் காந்தியடிகள். அதை விரும்பி ஏற்றுக்கொண்ட தூத் தனக்கு உதவியாக வைத்தியநாதனை எடுத்துக்கொள்ள காந்தியடிகளிடம் அனுமதி கேட்டார். வைத்தியநாதனுக்கும் அதில் விருப்பம் இருந்தது.
கேபிள் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வேலையைப் பார்த்தபடியே சங்க வேலைகளில் உதவுவதாக வாக்களித்தார் அவர். ஆனால் அவர் முழுநேர ஊழியராக வேலைசெய்யவேண்டும் என்பதே சங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. வார்தாவுக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்து தன் நிலைமையை எடுத்துரைத்தார் வைத்தியநாதன். அவருடைய கதர் ஈடுபாட்டை காந்தியடிகளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆயினும் சங்கப்பணிகளை பகுதிநேரப் பணியாக ஒதுக்கிக்கொடுக்க அவருக்கும் விருப்பமில்லை. முழுநேர ஊழியராக வைத்தியநாதன் பணியாற்றுவதே நல்லது
என அவரும் நினைத்தார். தன் முடிவை வைத்தியநாதனிடம் வெளிப்படையாகத்
தெரிவித்து, சங்கத்தின்
வழியாக மாதத்துக்கு எழுபத்தைந்து ரூபாய் சம்பளமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார். அப்போது அவர் கேபிள் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் அதைவிட கூடுதலாக சம்பளம் பெற்றுவந்தார். குழந்தைகள் நிறைந்த குடும்பத்துக்கு அந்த அளவுக்கு பணத்தேவையும் இருந்தது. நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரை வைத்தியநாதனின் மனைவியைச் சந்திக்க வைத்து, அக்குடும்பத்தின் மாதாந்திரச் செலவுக்கணக்கு விவரங்களைத் தெரிந்துகொண்டார் காந்தியடிகள்.
பிறிதொரு நாளில்
வைத்தியநாதனை அழைத்த காந்தியடிகள் சர்க்கா சங்கத்திலிருந்து எழுபத்தைந்து ரூபாயும் தன்னிடமிருக்கும் பொதுநிதியிலிருந்து எழுபத்தைந்து ரூபாயும் சேர்த்து நூற்றைம்பது ரூபாயை மாதச்சம்பளமாக
அளிப்பதாகத் தெரிவித்தார். வைத்தியநாதன் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டு கம்பெனி வேலையிலிருந்து விலகி சர்க்கா சங்கத்தின் முழுநேர ஊழியராக வேலை செய்யத் தொடங்கினார்.
கதர்ப்பிரச்சாரம் வழியாக மக்களிடையே நூல்நூற்கும் ஆர்வத்தை உருவாக்குவதும் அடுத்த கட்டமாக அவர்களுக்கு ராட்டையையும் பஞ்சையும் கொடுத்து நூல்நூற்க வைப்பதும் பிறகு நூற்கப்பட்ட நூலை கதராடை மையத்தின் வழியாக வாங்கவைத்து துணியாக நெய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதும் வைத்தியநாதனின் தினசரி அலுவல்களாக இருந்தன. நூல்நூற்கும் செயல் ஒரே நேரத்தில் வருமானத்துக்குரிய வழியாகவும் சுதேசிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் அமைந்திருப்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளும்படி எடுத்துரைப்பதே பிரச்சாரத்தின் முக்கியமான பணி. கதர் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாக எல்லா வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தார் வைத்தியநாதன். இடைவிடாத பயணங்களாலும் பிரச்சாரங்களாலும் எண்ணற்ற கிராமங்களில் நூல்நூற்கும் மையங்களும், அதிக அலைச்சலின்றி அங்கிருந்து நூலைக் கொண்டுசேர்க்கும் வகையில் வாரங்கல், மகபூப்நகர், கம்மம், கரீம்நகர், ஜகதியால் போன்ற நகரங்களில் விற்பனை மையங்களும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் நெய்யப்பட்ட கதர்த்துணிகளை மூட்டைகளாகக் கட்டி
தலைச்சுமையாக சுமந்து சென்றும்
வண்டிகளில் எடுத்துச் சென்றும் விற்பனை செய்வதற்கு பயிற்சி பெற்ற பல ஊழியர்கள் இருந்தார்கள்.
காந்தியடிகளே அகில பாரத சர்க்கா சங்கத்தின் தலைவராக இருந்ததால், சங்கத்தின் நடவடிக்கைகளைப்பற்றிய ஆண்டறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் வார்தாவிலேயே நடைபெற்றது. வரவுசெலவுக் கணக்குகளை மட்டுமன்றி, கதராடைகளில் மேற்கொள்ளவேண்டிய புதிய வடிவங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பற்றிய கலந்துரையாடலாகவும் அந்தக் கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத் சங்கத்தின் சார்பாக அக்கூட்டத்தில் வைத்தியநாதன் கலந்துகொண்டார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து
வந்திருந்த சர்க்கா சங்கத்தினர் அனைவரும் தம் அறிக்கையை இந்தி மொழியிலேயே தயாரித்து வந்திருந்தனர். வைத்தியநாதன் பேச்சுமொழியாக இந்தியைத் தெரிந்துவைத்திருந்தாரே தவிர, முழுமையான அளவில் எழுத்துபழக்கம் உள்ளவர் அல்ல. அதனால், தம் அறிக்கையை ஆங்கிலத்தில் அவர் எழுதிச் சென்று படித்தார். கூட்டம் முடிந்ததும் வைத்தியநாதனை தனியாக அழைத்துப் பேசிய காந்தியடிகள் “உங்களுக்கு இந்திமொழி தெரியாதா?” என்று கேட்டார். ”என்னால் இந்தியில் நன்றாகப் பேசமுடியும். ஆனால் எழுத்துமொழியில் போதிய பயிற்சி இல்லை. அதனால்தான் அறிக்கையை ஆங்கிலத்தில் எழுதினேன்” என்று பதில் சொன்னார் வைத்தியநாதன். காந்தியடிகள் புன்னகையோடு அவருடைய தோளைத் தொட்டு “இந்திமொழிப் பயிற்சியை இப்போதிருந்தே தொடங்கிவிடுங்கள். அடுத்த ஆண்டு அறிக்கையை நீங்கள் இந்தியில்தான் எழுதி வாசிக்கவேண்டும்” என்று தெரிவித்தார் காந்தியடிகள். வைத்தியநாதன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்.
அன்று சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரோடும் இணைந்து மதிய உணவை உண்டார் காந்தியடிகள். வைத்தியநாதனை தனக்கு அருகிலேயே அமரவைத்துக்கொண்டார் காந்தியடிகள். அனைவருடைய தட்டுகளிலும் உணவு பரிமாறப்பட்டது. உணவு உட்கொள்ளும் முன்பாக, ஒருவர் வேகமாக வந்து காந்தியடிகளின் தட்டில் மட்டும் பச்சை நிறத்தில் ஒரு சட்னியை வைத்துவிட்டுச் சென்றார். தன்னுடைய தட்டில் பரிமாறப்படாமல் காந்தியடிகளின் தட்டில் மட்டும் வைக்கப்பட்ட சட்னியை குழப்பத்தோடு பார்த்தார் வைத்தியநாதன். பிரார்த்தனைக்குப் பிறகு உணவுண்ணத் தொடங்கும் வேளையில் “உங்களுக்குப் பரிமாறப்பட்ட அந்தப் பச்சைநிறச் சட்னி ஏன் மற்றவர்களுக்குப் பரிமாறப்படவில்லை?” என்று காந்தியடிகளிடமே அப்பாவித்தனமாகக் கேட்டார்.
அதைக் கேட்டுப் புன்னகை புரிந்த காந்தியடிகள் “உங்களுக்கும் வழங்கச் சொல்கிறேன். ஆனால் தட்டில் வைத்த பிறகு நீங்கள் கண்டிப்பாக அதைச் சாப்பிட்டே ஆகவேண்டும், சரிதானே?” என்றொரு நிபந்தனையை முன்வைத்தார். வைத்தியநாதனும் ஆர்வத்தில் தலையசைத்தார். உடனே காந்தியடிகள் பரிமாறுவரை அழைத்து வைத்தியநாதனுக்கு சட்னியை வைக்கும்படி சொன்னார். அவரும் கொண்டுவந்து வைத்தியநாதனின் தட்டில் வைத்துவிட்டுச் சென்றார். ஆர்வத்துடன் அந்தச் சட்னியைத் தொட்டுச் சுவைத்தார் வைத்தியநாதன். அக்கணமே அவர் முகம் கசப்பில் சுருங்கியது. நாக்கில் வைத்ததுமே அது வேப்பிலைகளை அரைத்து உருவாக்கிய சட்னி என்பது புரிந்துவிட்டது. “எப்படி, சுவையாக இருக்கிறதா?” என்று கேட்ட காந்தியடிகள் வேப்பிலையின் மேன்மையைப் பற்றி வைத்தியநாதனுக்கு எடுத்துரைத்தார். அவர் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட வைத்தியநாதன் கொடுத்த வாக்குறுதிக்கு உடன்பட்டு தட்டில் வைக்கப்பட்ட சட்னியைச் சாப்பிட்டு முடித்தார்.
கிராமக் கைத்தொழில் வளர்ச்சியின் வழியாகவும் கதராடைகளைப் பயன்படுத்துவதன் வழியாகவும் இந்திய தேசத்துக்கு பொலிவுமிக்க ஒரு புதிய முகத்தை அளிக்கும் கனவுகளைத் தன் நெஞ்சில் சுமந்திருந்த காந்தியடிகள் விடுதலை பெற்ற இந்தியாவில் 30.01.1948 அன்று கொல்லப்பட்டு மறைந்தார். நாடே துயரத்தில் ஆழ்ந்தது. அவருடைய சாம்பல் நாடெங்கும் அனுப்பிவைக்கப்பட்டு, கடல்களிலும் ஆறுகளிலும் கரைக்கப்பட்டது. அவர் மறைந்த பதினான்காம் நாள் காந்தியடிகளின் அஸ்திக்கலசம் ஐதராபாத்துக்கு வந்து சேர்ந்தது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து பிரிந்துவரும் மூஸி ஆறு ஐதராபாத் வழியாகப் பாய்ந்துசெல்கிறது. வைத்தியநாதனும் அவர் நண்பர்களும் பொதுமக்களோடு ஊர்வலமாகச் சென்று மூஸி ஆற்றில் அஸ்தியைக் கரைத்தனர்.
தொடக்கத்தில் இந்தியாவோடு இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம் ரஜாக்குகளின் கலகம் அடக்கப்பட்டதற்குப் பிறகு, 1948ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இணைந்துகொண்டது. அகில பாரத சர்க்கா சங்கத்தின் கிளையாக இயங்கிய ஐதராபாத் சர்க்கா சங்கம், சுயேச்சையான ஐதராபாத் காதி சமிதியாக உருமாறி தன் பணிகளைத் தொடர்ந்தது. கதர் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, இடைவிடாத பயணங்களை மேற்கொண்டு பல புதிய பகுதிகளில் அலைந்து கதர் விற்பனை மையங்களை ஏற்படுத்தினார். காதி சமிதி, காதி கிராமோதய ஆயோக் என மாற்றம் பெற்றபோது கதர் விற்பனையை மட்டுமன்றி கிராமக் கைத்தொழில் மேம்பாட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கையான முறையில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தும் வகையில் ஒரு தொழிலைக் கண்டறிந்து, அத்தொழிலில் கிராமத்தினருக்குப் பயிற்சியளித்து, அவர்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பதன் வழியாக கிராமப்பொருளாதரத்தை மேம்படுத்தும் கடமையை அந்த அமைப்பினர் மேற்கொள்ளவேண்டி வந்தது. தேனீ வளர்ப்பு, சோப்பு செய்தல், காகிதம் செய்தல், கருப்பஞ்சாறிலிருந்தும் பனஞ்சாறிலிருந்தும் வெல்லம் தயாரித்தல், மண்பாண்டம் செய்தல், கயிறு திரித்தல் போன்ற பல வழிமுறைகளை கிராம வளர்ச்சிக்காக வைத்தியநாதன் உருவாக்கியளித்தார்.
சிவரம்பள்ளியில் நடைபெற்ற சர்வோதய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வினோபா வந்திருந்தபோது, கிராமோத்யோக் வேலையாக அந்த ஊரில் தங்கியிருந்த வைத்தியநாதன் அவரைச் சந்தித்து உரையாடினார். அவர் கண்களுக்கு காந்தியடிகளின் மருவடிவமாகவே வினோபா தெரிந்தார். நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையை வைத்தியநாதன் ஆர்வமுடன் கேட்டார். மாநாட்டுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட நடைப்பயணத்திலும் அவர் கலந்துகொண்டு போச்சம்பள்ளிக்குச் சென்றார். வினோபாவின் உரையைக் கேட்டு மனம் நெகிழ்ந்து ராமச்சந்திர ரெட்டி என்பவர் தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும்படி சொன்ன சம்பவத்தை நேருக்குநேர் பார்த்த சாட்சியாக நின்றிருந்தார் வைத்தியநாதன். பிற்காலத்தில் வைத்தியநாதனின் சேவைகளுக்கு மதிப்பளித்து தஞ்சாவூருக்கு அருகில் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டபோது, அந்நிலத்தை அங்கு வாழ்ந்த ஏழை விவசாயிகளுக்கு அன்பளிப்பாக பிரித்து வழங்கினார்.
(சர்வோதயம் மலர்கிறது - பிப்ரவரி 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )