Home

Monday 28 September 2015

ஆறுதல்

சில அபூர்வமான காட்சிகள் கண்ணால் பார்க்கநேரும் கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன. பத்துப் பேரிடமாவது உடனடியாக அக்காட்சிகளைப்பற்றி மீண்டும்மீண்டும் சொன்னால்தான் மனத்தின் பரபரப்பு அடங்குகிறது.  பைக்காரா நிர்வீழ்ச்சிக்கு அருகே ஒரு வெட்டவெளியில் தன்னந்தனியாக உயரமாக வளர்ந்து நின்றிருந்த தைல மரத்தின் உச்சியில் தனிமையில் கூவிக்கொண்டிருந்த ஒரு ரெட்டைவால்குருவி, உச்சிவெயில் சுட்டுப்பொசுக்கும் ஒரு கோடையில் பறவைகளேயற்ற வானத்தில் கொஞ்சம்கூட இறகுகளை அசைக்காமல் வட்டமிட்டபடி பறந்த ஒரு கழுகு, மேய்ச்சல் இடத்திலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் மாடுகளுக்கு நடுவே ஒரு எருமையின் முதுகில் ஆனந்தமாக பாடியபடி சென்ற ஒரு சிறுவன், பள்ளிக்கூடப்பையை ஒரு தாழ்ந்த மரக்கிளையில் தொங்கவைத்துவிட்டு வேலியில் உட்கார்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்காக ஓசையில்லாமல் அடிமேல் அடிவைத்துப் பின்தொடர்ந்து சென்ற இரட்டைச்சடைபோட்ட ஒரு சிறுமி, கொல்லிமலையிலிருந்து திரும்பிவர பேருந்து கிடைக்காமல் ஒரு பெருங்கூட்டமே அலைமோதிக் கொண்டிருந்தபோது, எவ்விதப் பரபரப்பும் காட்டாமல் தன் கணவரான கிழவர் தலைசாய மடியில் இடம்கொடுத்துவிட்டு, மடித்த தாள்களையே விசிறியாக்கி அவருக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி எனப் பல காட்சிகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இச்சித்திரங்களின் வரிசையில் இந்திரா நகர் பூங்காவில் பார்க்கநேர்ந்த ஒரு நிலக்கடலை விற்பனையாளரின் சித்திரமும்  முக்கியமான ஒன்று. வழக்கமாக நிலக்கடலை விற்பவர்கள் எப்படி இருப்பார்களோ, அப்படி இல்லாமலிருந்தார் அவர். அதுவே அவருடைய தோற்றம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனதற்குக் காரணம்.

அருவி என்னும் அதிசயம்

கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு அருகே உள்ள அம்புதீர்த்தத்தில் பிறந்து ஏறத்தாழ நு¡ற்றிஇருபத்தைந்து கிலோமிட்டர் தொலைவு ஷிமோகா, வடகன்னடப் பகுதிகளில் ஓடிப் பாய்ந்து ஹொன்னாவர் என்னும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பாதிக்கும் மேல் நிறைவேற்றி வைக்கிற மின்உற்பத்தி நிலையம் இந்த நதியின் குறுக்கில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் இன்றும் நினைத்துப் பெருமை பாராட்டுகிற பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யாவின் மேற்பார்வையில் கட்டப்பட்ட லிங்கனமக்கி அணைக்கட்டும் இந்த நதியின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டது. (அவருடைய பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்  இன்னொரு அணைக்கட்டு காவிரியின் குறுக்கில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு.) இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் அருவி ஷராவதி நதியின் கொடையாகும். ஏறத்தாழ எண்ணு¡று அடிகள் உயரத்திலிருந்து இந்த அருவி பொங்கி வழிவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Friday 18 September 2015

சப்தமும் நிசப்தமும் தேவதச்சனின் கவிதை

எல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். எதிரில் இறகுப்பூப்பந்து விளையாகிற சிறுமிகளையும் அருகில் இருக்கிற தோப்பையும் சுற்றுச்சுவரையும் சாலையையும் கடந்து செல்லும் வாகனங்களையும் மாறிமாறி வேடிக்கை பார்ப்பார். ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு சிந்தி,வணக்கம் சொல்லி, பெயர் சொல்லி அறிமுகமாகி, நெருக்கமாகப் பேசத் தொடங்குவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்தன. பேசிப்பேசித்தான் அவருடைய மனதைப் புரிந்துகொண்டேன்.

எளிமையும் வலிமையும் தேவதச்சனின் "யாருமற்ற நிழல்"

சாதாரணமாக நம் கண்ணில் படுகிற பல காட்சிகளிலும் காதால் கேட்கிற சொற்களிலும் பொதிந்திருக்கிற நுட்பத்தை ஆழ்ந்த கவித்துவத்தோடு முன்வைக்கும் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகுக்கு வலிமை சேர்ப்பவை. பார்வைக்கு எளியவையாக தோற்றமளிக்கும் வரிகள் கவித்துவச் சுடருடன் ஒளிரும்போது நம் மனத்தில் இடம் பிடித்துவிடுகின்றன. தொகுப்பின் தலைப்பாக உள்ள "யாருமற்ற நிழல்" அழகான படிமமாக மலர்ந்து வாசகர்களை ஈர்க்கிறது. உண்மையில் இத்தலைப்பில் தொகுப்பில் ஒரு கவிதையும் இல்லை. மொத்தக் கவிதைகளுக்கும் பொருந்திவருகிற மாதிரி இத்தலைப்பு அமைந்துவிடுகிறது. அன்பின் நிழலா, வாழ்வின் நிழலா, நிம்மதியின் நிழலா, எதன் நிழல் இது? ஏன் யாருமற்ற நிழலாக உள்ளது? நிழலின் அருமையை ஏன் யாருமே உணரவில்லை? நிழலில் வந்து நிற்கக்கூட நேரமில்லாமல் எதை அடைவதற்காக இந்த வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ஒருவேளை அருகிலேயே இருக்கிற நிழலின் இருப்பை உணராமல் எங்கோ இருக்கிற நிழலைத் தேடித்தான் நாம் ஓடுகிறோமா? இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி ஓடுவதே மானுடனின் விதியா? இப்படி பல திசைகளiல் எண்ணங்கள் பயணமிட இத்தலைப்பு தூண்டுதலாக அமைகிறது.

Wednesday 16 September 2015

மூன்று பெண்கள்

ஜூலை மாத உயிர்எழுத்துஇதழில் வண்ணதாசன் எழுதிய நாபிக்கமலம்சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. நாபிக்கமலம் நாபிக்கமலம் என்று ஆழ்மனத்தில் அசைபோட்டபடி இருந்தபோதே, இதயக்கமலம் என்றொரு சொல் எங்கிருந்தோ பிறந்துவந்து இணைந்து கொண்டது. பிறகு இதயக்கமலம், நாபிக்கமலம் ஆகிய இரு இணைசொற்களையும் நாலைந்து முறை இணைத்து இணைத்து சொல்லிப் பார்த்தேன். சட்டெனெ என் அகத்தில் ஒரு சுடர் மின்னி மறைந்ததை உணரமுடிந்தது. கதையின் மையம் அதைத்தான் காட்சிப்படுத்துகிறது. நாபிக்கமலத்தில் ஒருத்தியும் இதயக்கமலத்தில் இன்னொருத்தியும் இருக்க, ஓர் ஆண் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. பெண்நட்பு என்பதை ஏற்றுக் கொள்வதில் பெண்துணைக்கு உருவாகும் தயக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

கண்ணாடித் துண்டில் ஒளிரும் நிலா

சிறுகதை இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் ருசிய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். நாற்பத்துநான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர் பல அமரகதைகளையும் முக்கியமான நாடகங்களையும் படைத்திருக்கிறார். பலசரக்குக்கடை நடத்திவந்த குடும்பத்தில் பிறந்த செகாவ் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். மருத்துவராகப் பணிசெய்துகொண்டே படைப் பாளியாகவும் வாழ்ந்து வந்தார். மருத்துவப் படிப்பின் போது செலவுக்காகச் சில நடைச்சித்திரங்களைப் பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக எழுதிச் சம் பாதித்தார். ஓர் அவசரத்துக்காக எழுதத் தொடங்கிய செகாவ் நாளடைவில் ருசிய மண்ணில் தன்னை ஒரு முக்கியமான எழுத்தாளுமைகளில் ஒருவராக நிறுவிக்கொண்டார். பச்சோந்தி, மெலிந்தவரும் உடல் பருத்தவரும், வான்கா, கீழ்நிலை இராணுவ வீரர் ப்ரிஷி பேயெவ், ஆறாவது வார்டு ஆகிய படைப்புகள் அவருக்கு உலக அளவில் பெயர் வாங்கித் தந்தவை. அவருடைய முக்கியமான நாடகங்கள் கடற்பறவை, மூன்று சகோதரிகள்.

Monday 7 September 2015

மழை விளையாடும் குன்று

மிகச் சிறந்த ஒரு பாடலை அல்லது படைப்பைப் படிக்கும்போது, வாசிப் பனுபவத்தின் பரவசத்தில் அது எப்படித்தான் எழுதப் பட்டிருக்குமோ என்றொரு கேள்வி தானாகவே பிறப்பது இயற்கை. இக்கேள்விக்கு விடை சொல்ல மிக விரிவான ஓர் ஆய்வையே நாம் நிகழ்த்தவேண்டும்பல தளங்களில் இந்த விடைக்கான தடயங்களைத் தேடித்தேடிச் சென்று, சேகரித்துத் தொகுத்து, பின்பு சில குறிப்பிட்ட அடிப்படைகளையொட்டிப் பகுத்து, அந்த ஆய்வு வழங்கக் கூடிய முடிவை அறிந்துகொள்ளலாம்அவ்வளவு நீண்ட கள ஆய்வை நிகழ்த்தி நிறுவ மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறதுகுறைந்த கால அவகாசத்தில் முடிவையறிய உதவக்கூடிய ஒரு தகவலோடு இந்த உரையைத் தொடங்குகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், பாரதி யாருடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில், நமக்கு உதவக்கூடிய அந்தத் தகவல் உள்ளதுபாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்துவந்த சமயம் அதுஒவ்வொரு நாளும் மாலை வேளையில் மனைவியோடும் மகளோடும் மகளைப் போன்ற யதுகிரியோடும் கடற்கரையில் அமர்ந்து பேசி, பொழுது போக்கி, வேடிக்கை பார்த்து, விளை யாட்டுக் கதைகளைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்