Home

Monday 28 September 2015

ஆறுதல்

சில அபூர்வமான காட்சிகள் கண்ணால் பார்க்கநேரும் கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன. பத்துப் பேரிடமாவது உடனடியாக அக்காட்சிகளைப்பற்றி மீண்டும்மீண்டும் சொன்னால்தான் மனத்தின் பரபரப்பு அடங்குகிறது.  பைக்காரா நிர்வீழ்ச்சிக்கு அருகே ஒரு வெட்டவெளியில் தன்னந்தனியாக உயரமாக வளர்ந்து நின்றிருந்த தைல மரத்தின் உச்சியில் தனிமையில் கூவிக்கொண்டிருந்த ஒரு ரெட்டைவால்குருவி, உச்சிவெயில் சுட்டுப்பொசுக்கும் ஒரு கோடையில் பறவைகளேயற்ற வானத்தில் கொஞ்சம்கூட இறகுகளை அசைக்காமல் வட்டமிட்டபடி பறந்த ஒரு கழுகு, மேய்ச்சல் இடத்திலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் மாடுகளுக்கு நடுவே ஒரு எருமையின் முதுகில் ஆனந்தமாக பாடியபடி சென்ற ஒரு சிறுவன், பள்ளிக்கூடப்பையை ஒரு தாழ்ந்த மரக்கிளையில் தொங்கவைத்துவிட்டு வேலியில் உட்கார்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்காக ஓசையில்லாமல் அடிமேல் அடிவைத்துப் பின்தொடர்ந்து சென்ற இரட்டைச்சடைபோட்ட ஒரு சிறுமி, கொல்லிமலையிலிருந்து திரும்பிவர பேருந்து கிடைக்காமல் ஒரு பெருங்கூட்டமே அலைமோதிக் கொண்டிருந்தபோது, எவ்விதப் பரபரப்பும் காட்டாமல் தன் கணவரான கிழவர் தலைசாய மடியில் இடம்கொடுத்துவிட்டு, மடித்த தாள்களையே விசிறியாக்கி அவருக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி எனப் பல காட்சிகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இச்சித்திரங்களின் வரிசையில் இந்திரா நகர் பூங்காவில் பார்க்கநேர்ந்த ஒரு நிலக்கடலை விற்பனையாளரின் சித்திரமும்  முக்கியமான ஒன்று. வழக்கமாக நிலக்கடலை விற்பவர்கள் எப்படி இருப்பார்களோ, அப்படி இல்லாமலிருந்தார் அவர். அதுவே அவருடைய தோற்றம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனதற்குக் காரணம்.
                பளிச்சென அவர் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து உடுத்தியிருப்பார். ஏதோ தொழிற்சாலை வேலைக்கு சீருடை அணிந்துகொண்டு கிளம்பியதைப்போல. தலைமுடியையும் படிய வாரியிருப்பார். உயரத்துக்குப் பொருத்தமான  நீண்ட கால்கள். மெல்லிய உடல்வாகு. நிறுத்தப்பட்ட மிதிவண்டியில் நிலக்கடலைக் கூடையைவிட்டு சற்றே தள்ளி நின்றிருந்தால் நிலக்கடலை விற்பவர் என்று சொல்ல கொஞ்சம் தயக்கமாகவே இருக்கும். கடலைக்குவியலுக்கு நடுவே கைக்கு அடக்கமான ஒரு ஒலிநாடாப் பெட்டியிலிருந்து பழைய பாடல்கள் ஒலிக்கும்.
                எனக்கும் அவருக்கும் பழக்கம் உண்டானதே ஒரு சுவையான சம்பவம். ஒரு ஞாயிறு மாலையில் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களோடும் பிள்ளைகளோடும் பூங்காவின் புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி வரலாமே என்று வெளியே வந்தபோது நிலக்கடலைக் கூடையோடு மிதிவண்டியைமட்டுமே பார்த்தேன். அருகில் வேறொருவர் மிளகாய்த்து¡ள் தடவிய மாங்காய்த்துண்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கத்தில் தர்பூசணித் துண்டுகள் வேகவேகமாக விற்பனையாகிக்கொண்டிருந்தன. எங்கே போனார் நிலக்கடலைக்காரர் என்று யோசித்தபடி அங்குமிங்கும் பார்வையைப் படரவிட்டேன். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஒலிநாடாப் பெட்டியிலிருந்து வந்த பாட்டின் வரிகள்தான் என்னை அங்குமிங்கும் நகரவிடாதபடி நிறுத்திவைத்தன. "பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே" என்ற வரிகளிலிருந்த உருக்கம் சட்டென்று என்னோடு ஒட்டிக்கொண்டது. விற்பனையாளரைத் தேடுவதுபோல என் கண்கள் அங்குமிங்கும் சுழன்றனவே தவிர பார்வையில் யாருமே தென்படவில்லை. ஒரே கணத்தில் என் எண்ணங்களும் கவனமும் அந்த வரிகளைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டன. அந்தப் பாடல் முடிந்தபிறகுதான் எனக்கு வந்தவேலை உறைத்தது.
                "என்ன சார் வேணும்?" பக்கத்தில் ஒரு தைல மரத்தின் நிழலிலிருந்து ஒருவர் கேட்டார்.
                "கடலை வேணும். ஆளக் காணமேன்னுதான் பாத்துட்டிருக்கேன்" நான் தயக்கத்துடனேயே சொன்னேன்.
                "சொல்லுங்க, எவ்வளவு வேணும்?" அவர் வேகமாக முன்னகர்ந்து வந்து ஒரு தாளை இழுத்தார். அவர் விரல்கள் தன்னிச்சையாக அதை மடித்து நொடியில் பொட்டலத்துக்குத் தகுந்தமாதிரி கூம்பாக்கியது.
                "கடக்காரரு வரட்டுமே, உங்களுக்கு எதுக்கு சிரமம்?"
                "சார், நான்தான்  விக்கற ஆளு. சொல்லுங்க, எவ்வளவு வேணும்?" அவர் புன்னகைத்தபடி மீண்டும் கேட்டார். உடனடியாக எனக்கு நம்பிக்கை வரவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. முதல் கணம் தடுமாறி, பிறகு இயல்பான நிலைக்குத் திரும்பினேன்.  
                "ரெண்டுரெண்டு ரூபாயக்கா ஒரு எட்டுப் பொட்டலம் போடுங்க."
                அவர் விரல்கள் செயல்பட்ட வேகம் ஆச்சரியமாக இருந்தது. தட்டச்சு எந்திரத்தில் எழுத்துகளைப் பார்க்காமலேயே இயங்குகிற விரல்களைப்போல தன்னிச்சையாகச் செயல்பட்டன. ஒலிநாடாப் பெட்டியில் ஏது¡ங்காத கண்ணென்ற ஒன்றுஏ பாடல் தொடங்கியது.
                பொட்டலங்களை வாங்கிக்கொண்டு இருபது ரூபாய்த்தாளைக் கொடுத்தேன். மிச்சம் கொடுக்க அவரிடம் சில்லறை இல்லை. தன் கால்சட்டைப் பையிலும் கூடைக்கு அருகே வைத்திருந்த சின்னப்பெட்டியிலும் தேடித்தேடிப் பார்த்தார். ஐந்தும் பத்துமான நோட்டுகள் இருந்தனவே தவிர, சில்லறைகள் இல்லை.
                "சில்லறை இல்லிங்களே சார், இன்னும் ரெண்டு பொட்டலம் கொடுத்திரட்டுமா?"
                "பரவாயில்லை. பூங்காவவிட்டு கெளம்பிப் போகறப்போ வாங்கிக்கறேன்."
                ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் சில்லறை வாங்க மறந்துபோனது. மழை வருவதுபோல காற்று சில்லென்று வீசியதால் வீடு திரும்புவதிலேயே கவனம் பதிந்தருந்தது.
அடுத்த ஞாயிறு பூங்காவுக்குச் சென்றிருந்தபோது அதே மரத்தடியில் நிலக்கடலை விற்றுக்கொண்டிருந்தார் அவர். நான் போய் நின்றதுமே "என்ன சார் போனவாரம் சில்லறை பாக்கி வாங்காமலேயே கெளம்பிப் போயிட்டீங்களே" அவர் சுட்டிக்காட்டியபிறகுதான் எனக்கு நினைவு வந்தது. அவர் ஒலிநாடாவில்  "மெளனமான நேரம், இளமனதில் என்ன பாரம்" என்ற பாடல் வரிகள் மிதந்துவந்தன. பொட்டலங்களை வாங்கிக்கொண்டு பாடலைக் கேட்டபடி ஓரமாக நின்றேன்.
                "பாட்டுன்னா ரொம்ப விருப்பமா உங்களுக்கு?" மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
                "ஆமாம் சார், சின்ன வயசுலேருந்து அப்படி ஒரு பழக்கம். பாட்ட கேக்கும்போது மனசுக்கு இதமா இருக்கும். சிந்தனைங்க அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் அலைபாயாது. ஏதோ ஒரு நிம்மதியா இருக்கும்."
                "பாடுவிங்களா?"
                "அதெல்லாம் தெரியாது சார். ஆயிரம் பாட்டுங்க கேட்டிருப்பேன். ஆனா ஒரு பாட்டகூட உருப்படியா பாட வராது. மூணுவரி நாலுவரிக்குமேல எதுவுமே மனசுல நிக்காது" அவர் கூச்சத்துடன் தலைகவிழ்ந்தார்.
                "இதுக்கு ஏன் கூச்சப்படறிங்க? எனக்கும் அப்படித்தான். எதக்கேட்டாலும் கேட்டமாதிரி இருக்குமே தவிர சொந்தமா நாலுவரி பாடத் தெரியாது."
                அதைத்தொடர்ந்து பூங்காவுக்குச் செல்லும் ஒவ்வொரு வாரமும் அவரிடம் சிறிதுநேரம் பேசாமல் திரும்பியதில்லை. அவர் பெயர் முத்துசாமி. பாடல்கள் மட்டுமே எங்கள் பேச்சின் மையப்பொருளாக இருந்தது. டி.எம்.செளந்திரராஜன் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடகர் என்பதை மிகவிரைவில் புரிந்துகொண்டேன்.
                "அவரப்போல குரல்ல ஏற்ற இறக்கங்கள காட்டறதுக்கு மத்தவங்க ரொம்ப சிரமப்படணும். அவர் பாட ஆரம்பிச்சார்னா எந்த சிரமுமே இல்லாம ஏற்ற இறக்கங்கள ரொம்ப சுலபமா செஞ்சிடறமாதிரி இருக்கும். ஒரே ஒரு வரி போதும், அப்படியே நம்ம கையப்பிடிச்சி அழச்சிம்போயிடுவாரு. தாலாட்டு, கொஞ்சல், அழுகை, சந்தோஷம், கோபம், வெறுப்பு, விரக்தி, சலிப்பு எல்லாத்தயும் ரொம்ப லாவகமா குரல்ல கொண்டாந்துருவாரு. பெரிய மேதை சார் அவரு."
                "அவர் பாடனதுல எந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும் ஒங்களுக்கு?"
                "உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காகன்னு எம்.ஜி.ஆருக்காக ஒரு பாட்டு பாடியிருப்பாரே, அதுதான் ரொம்ப புடிக்கும்? அந்தத் துள்ளல், சந்தோஷம், குழந்தைத்தனமான நம்பிக்கை, பரபரப்பு எல்லாத்தயுமே அந்தக் குரல்ல பார்க்கமுடியும்."
                "சந்தோஷமான குரல்ல அவர் பாடனது இன்னும் ஏராளமா இருக்கே?"
                "இருக்கலாம் சார். எந்தப் பாட்டுக்கும் இல்லாத விசேஷம் இந்தப் பாட்டுல இருக்குது சார். பாசம்ங்கற படத்துலதான் இந்தப் பாட்டு வருது. சாருக்கு அந்தப் படம் பாத்த ஞாபகம் இருக்குதா?"
                "பாத்திருக்கேன், ஆனா சரியா ஞாபகம் இல்ல."
                "சின்னப்புள்ளயா ஜெயிலுக்குப் போய் வாலிபனா திரும்பி வரும் ஒரு பாத்திரம் முதன்முதலா இந்த உலகத்த பாக்கற உற்சாகத்துல பாடறமாதிரி இந்தப் பாட்டு வரும். மனிதர்கள்மேலயும் உறவுகள்மேலயும் உலகத்துமேலயும் அவ்வளவு நம்பிக்கை அந்தப் பாத்திரத்துக்கு. ஆனால் வாழ்க்கை அவ்வளவு சுலபமா இல்லயே சார். நம்பிக்கை நாசம்தானே இங்க வாழ்க்கையா இருக்குது. பெத்தெடுத்த அம்மாவ கண்டுபிடிக்கமுடியலை. அம்மாவ கண்டுபிடிக்கும்போது அவளே பாத்து வெறுக்கிற மாதிரி நிலைமை. ஒவ்வொரு நம்பிக்கையா உதிர்ந்துபோய் கடைசியா அந்தப் பாத்திரம் தற்கொலை செஞ்சிகிட்டு இறந்துபோயிடுது. அந்தப் பாத்திரத்துடைய செத்த உடலோட, அது நம்பன உலகம், மலை, கடல், ஏரி, இயற்கை எல்லாத்தயும் திரை மறுபடியும் காட்டுது. அந்தப் பாட்டுக்குரல் மறுபடியும் கேக்குது. உங்களத்தானே மலைபோல நம்பியிருந்தேன். இப்படி கைவிட்டீங்களேன்னு வருத்தமாவும் ஏமாற்றமாவும் கேக்கறமாதிரி இருக்கும். பாட்ட கேக்கும்போது எந்த அளவுக்கு டி.எம்.எஸ். துள்ளலயும் சந்தோஷத்தயும் வெளிப்படுத்தறாரோ அந்த அளவுக்கு அந்த நம்பிக்கை நாசமாயிடுச்சேங்கற ஆதங்கம் நம்ம நெஞ்சிலேருந்து பொங்கியெழுந்து அந்தக் குரலோடு சேந்துக்கறமாதிரி இருக்கும். அதுதான் இந்த டி.எம்.எஸ்.  பாட்டுல இருக்கற விசேஷம்."
                அவர் விளக்கிச்சொல்லும் விதத்தைக் கேட்கக்கேட்க மனத்துக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.  "ரொம்ப அனுபவிச்சி சொல்றத பாத்தா அந்தப் படத்த எனக்கும் பாக்கணும்போல இருக்குது. எப்பவாவது டிவியில இந்தப் பாட்டு வந்தா நல்ல கவனிச்சிப் பார்க்கணும்னு தோணுது."
                ஒரு ஞாயிறு அன்று நிலக்கடலைப் பொட்டலங்களுக்கு முத்துசாமி பணம் பெற்றுக்கொள்ள மறுத்தார்.  "இருக்கட்டுமே, இன்னைக்கு புள்ளைங்களுக்கு நான் கொடுத்ததா வச்சிக்குங்க" என்று சிரித்தார். வற்புறுத்திக் கேட்டபிறகுதான் "இன்னைக்கு என் பொண்ணுக்கு பொறந்தநாள் சார், அதனால இன்னைக்கு கடலை வாங்கற எந்தச் சின்னப்புள்ளைங்ககிட்டயும் பணம் வாங்கக்கூடாதுன்னு மனசுல ஒரு சங்கல்பம்" என்றார்.
அருகில் நின்றிருந்த நண்பரின் மகளை அவர் கண்கள் ஒருகணம் ஏக்கமுடன் ஏறிட்டுத் தாழ்ந்தன.
                "என்ன வயசு உங்க பொண்ணுக்கு?"
                "பதிமூணு முடிஞ்சி பதினாலு ஆரம்பிக்குது சார்."
                "என்ன பேரு?"
                "சரோஜா."
                "ரொம்ப நல்லா இருக்கே. சரோஜா இங்க வந்திருக்காளா? எங்களுக்கு கடலை கொடுக்கறிங்களே, நாங்களும் அவளுக்கு ஏதாச்சிம் கொடுப்பமில்லையா?"
                "வரேன்னுதான் சொல்லியிருந்தா. என்னன்னு தெரியலை, இன்னும் காணோம். பஸ் கிஸ் கெடைக்காம தடுமாறுதோ என்னமோ. அவளத்தான் எதிர்பார்த்துகிட்டிருக்கேன்."
                "வந்தா மறக்காம கூப்புடுங்க, நாங்க அதோ அந்த பாக்குமரத்தடியிலதான் உக்காந்திருப்போம்."
                "கண்டிப்பா கூப்படறேன் சார். நீங்க வந்து கொழந்தைகிட்ட நாலு நல்ல வார்த்த சொல்லணும். உங்களமாதிரி நல்லவங்க நாலுபேரோட ஆசீர்வாதம் புள்ளைக்கு கெடைக்கணுமே சார்."
                நாங்கள் உள்ளே நகர்ந்தோம். பிள்ளைகள் பந்தைத் து¡க்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டை ஆடினார்கள். இரவு கவிகிறவரை ஒரே ஆட்டம்தான். பூங்காவைவிட்டு வெளியேறும்வரை நிலக்கடலைக்காரரின் அழைப்பு வரவே இல்லை. வியாபார மும்முரத்தில் ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கக் கூடுமோ என்று தோன்றியது.  அவர் மகளைப் பார்க்கும் ஆர்வம்தான் என்னை அவருடைய கடைப்பக்கம் செலுத்தியது. அவர்மட்டுமே தனியாக யாரோ ஒரு அம்மாவுக்கு பொட்டலம் மடித்துக்கொடுத்தபடி இருந்தார்.
                "என்னங்க மறந்துட்டீங்களா?"
                முத்துசாமியின்  முகத்தில் வாட்டம் படிந்திருப்பதை சிலகணங்கள் கழித்த பிறகுதான் பார்த்தேன். "என்னாச்சி, வரலைங்களா?" என்று குரலைத் தாழ்த்தி மெதுவாகக் கேட்டேன்.
                "தெரியலை சார். கண்டிப்பா வரேன்னுதான் சொல்லியிருந்தா. என்னாச்சின்னு எனக்கும் புரியலை. அப்பறமா பாக்கும்போதுதான் விசாரிக்கணும்."
                "சரி, கவலைப்படாதீங்க. கெளம்பும்போது ஏதாச்சிம் நடந்திருக்கும். இந்தாங்க, இந்த பிஸ்கட் பாக்கெட்டுங்கள சரோஜாகிட்ட எங்க சார்பா கொடுத்திருங்க" கடைக்காரர் நெகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார்.
                அடுத்த வாரம் சந்தித்தபோது சரோஜாவைப்பற்றித்தான் முதலில் கேட்டேன்.
                "பாவம், கொழந்தை கஷ்டப்பட்டு பஸ் புடிச்சி வந்திருக்கா சார். ஆனா பூங்கா அடையாளம் தெரியாம ரொம்ப தடுமாறிட்டிருக்கா. இங்கதான் நாலஞ்சி இருக்குதே. எதுன்னு தெரியாம கொழம்பிட்டிருக்கா. குழந்தைக்காக நான் இந்த பூங்காவில காத்திட்டிருக்கேன். குழந்தை என்னைத் தேடி அந்த பூங்காவில சுத்திப் பாத்துட்டு ஏமாந்து போயிட்டிருக்குது. ரெண்டு நாள் கழிச்சி வந்து சொன்னபிறகுதான் எனக்கே புரிஞ்சிது."
                "ரெண்டு நாள் கழிச்சா? என்ன சொல்றிங்க?"  கேள்விக்குறியோடு அவர் முகத்தை ஏறிட்ட கணத்தில் அவர் முகத்தில் வலியின் கோடுகள் படர்ந்து மறைந்ததைக் கவனித்தேன். சிறிதுநேரம் சங்கடத்தோடு கடலை வாணலியைக் கிளறிக்கொண்டிருந்தார்.
                "என்ன சார்? ஏதாச்சிம் உளறிட்டனா? இப்ப மனசு சரியில்லை. இன்னோர் நாளைக்கு எல்லாத்தயும் சொல்றனே. தனியா நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நெஞ்சிலயே சுமந்துட்டிருக்கமுடியும்? எனக்கும் யார்கிட்டயாவது எறக்கிவச்சா தேவலைன்னுதான் தோணுது?"
                அவர் குரல் மிகவும் நெகிழ்ச்சியோடு ஒலித்தது. ஏதோ மனவருத்தம் என்கிற அளவில் அக்கணத்தில் புரிந்துகொண்டேன். அப்போதும் ஒலிநாடாவிலிருந்து ஏதோ ஒரு பாடல் ஒலித்தபடி இருந்தது.
                அடுத்த வாரம் என்னால் பூங்காவுக்குச் செல்லவே முடியவில்லை. அதற்கடுத்த வாரம் அவர் தென்படவில்லை. மூன்றாவது வாரம்தான் சந்திக்க முடிந்தது. ஒலிநாடாப் பெட்டிக்குள் அகப்பட்டுக்கொண்ட நாடாவின் சிக்கலை ஒரு சின்னக் குச்சியால் அவிழ்த்துக்கொண்டிருந்தார்.
                "என்னங்க முத்துசாமி, பாக்கவே முடியலை? வெளியூரு போயிட்டீங்களா?"
                "ஆமாங்க சார். சரக்கு தீந்து போயிடுச்சி. ஊருபக்கம் போனா கொறஞ்ச வெலையில வாங்கியாரலாம்னு போயிருந்தேன். நம்ம நேரம், கூடுதலா ரெண்டுநாளு தங்கறமாதிரி ஆயிடுச்சி."
                பூங்காவைவிட்டு ஆட்களெல்லாரும் வெளியேற்றப்படும்வரை தொட்டுத்தொட்டு ஏதேதோ உலகத்துக்கதைகளைப் பேசினார். சந்தடி குறைந்தபிறகு மிதிவண்டியைத் தள்ளியபடி "வாங்க சார் பேசிகிட்டே போவலாம்" என்றபடி நடந்தார். சிறிது தொலைவில் தென்பட்ட ஆளில்லாத விளக்குக்கம்பம்வரை நடந்து நின்றோம் . சில நொடிகளுக்குப் பிறகு அவர் தன்னைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார். சில நேரங்களில் என்னை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்த்து அருகில் இன்னும் வீடுகட்டப்படாத மனையில் அடர்த்தியாகப் பூத்திருந்த அஞ்சுமல்லியைப் பார்த்தபடி சொன்னார். சில நேரங்களில் கருத்த வானத்தை அண்ணாந்து பார்த்தபடியும் சொன்னார். ஏறத்தாழ ஒன்றரைமணிநேரம் அவர் பேச்சு நீண்டது. அதன் சுருக்கம் இதுதான்.
                எல்லாரையும் போலவே பதினாறு பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டட வேலைக்காகத்தான் முத்துசாமி பெங்க்ளுருக்கு வந்தார். நல்ல வருமானம். கையில் பணம் புரள வாழ்கிற மகன் தவறான வழியில் இறங்கிவிடக்கூடாது என்பதற்காக அவர் பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்துவைத்து அனுப்பினார்கள். மனைவி சாரதாவோடு அவர் மடிவாளாவுக்கு அருகே ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். முதலாம் ஆண்டு முடிவில் சரோஜா பிறந்தாள். இனிய சுகமான வாழ்க்கை. அந்த சுகத்தைக் கெடுத்துக்கொள்கிறவராக அவரே அமைந்துபோனார் என்பதுதான் துரதிருஷ்டவசமானது. என்ன காரணத்தாலோ, செய்துகொண்டிருக்கும் வேலைமீது திடீரென அலுப்பு தோன்றும் அவருக்கு. உடனே அதை உதறிவிடுவார். வேறொரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். மிதிவண்டியில் கீரைக்கட்டுகளையும் காய்கறிகளையும் வைத்துக்கொண்டு தெருத்தெருவாய் கூவி விற்பார். அதுவும் ஒருநாள் அலுத்துக்கொள்ளும்போது எங்காவது ஒரு பூங்காவில் கடலையோ வெள்ளரிப்பிஞ்சோ விற்பார். அதுவும் அலுக்கம்போது ஐஸ்கிரீம் விற்பார். எல்லாம் அலுத்துவிட்டது என்று சொல்லும் தருணத்தில் எங்காவது ஒரு கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இரவுநேரக் காவலராக வேலை செய்யப் போவார். திடீரென  ஒருநாள் காலையில் எழுந்து பழையபடி கட்டட வேலைக்குச் செல்வார். இப்படி ஒரு புதிரான வாழ்க்கை நடத்தினாலும் மனைவிக்கோ அல்லது  பிறந்த குழந்தைக்கோ எந்தக் குறையும் நேராதபடி பார்த்துக்கொள்வார். சாரதா மறுபடியும் கருவுற்று இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தையையும் மூன்றாவதாக ஒரு பெண்குழந்தையையும் பெற்றெடுத்தாள். அப்போதுதான் யாருமே எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தது. சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் கால் முறிந்தது. கூடவே பணிபுரிந்த விநாயகம் என்பவன்தான் அண்ணாத்த அண்ணாத்த என்று அழைத்தபடி எல்லாவிதமான மருத்துவ வசதிகளையும் செய்துகொடுத்தான். மாவுக்கட்டோடு வீட்டுத் திண்ணையில் அவர் படுத்துக்கொண்டபோது, குடும்பச் செலவுகளுக்கு அவனே பணம் கொடுத்து உதவினான். பல நேரங்களில் அவன் அங்கேயே தங்கினான். குழந்தைகள் அவனை அன்போடு சித்தப்பா என்றே அழைத்தார்கள்.  முதலில் தயக்கம் இருந்தாலும் நாளடைவில் சாரதாவும் அவனோடு  இயல்பாகச் சிரித்துப் பேசினாள். "என் தம்பிமாதிரி இவன்" என்று சொல்லி அவரே ஒரு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கினார். குழந்தைகளை பொழுதுபோக்காக திரைப்படங்களுக்கும் கோயில்களுக்கும் அவன் அழைத்துச் சென்றபோது சாரதாவும் சேர்ந்துகொண்டாள். தொடக்கத்தில் எப்போதாவது ஒருமுறை வீட்டில் தங்கக்கூடிய விநாயகம் மெல்லமெல்ல நிரந்தரமாகவே அங்கே தங்கத் தொடங்கினான். கால் முழுக்குணமடைவதற்கு ஏறத்தாழ ஓராண்டு பிடித்தது. அதற்குள் வீட்டு நிலைமை  தலைகீழாகிவிட்டது. தன் மனைவிக்கும் அவனுக்கும் இடையிலிருந்த நெருக்கத்தை அவரே ஒருமுறை கண்ணால் பார்க்கநேர்ந்தது. கண்டித்தபோது, அது விபரீதமான அளவுக்கு அதிகமாகப் பெருகியது. அந்தக் குடும்பத்தில் அதிகப்படியான சுமையாக தன்னுடைய இருப்பு மாறிப்போன அவலத்தை அறிந்து வருத்தத்தில் மூழ்கினார். நாலைந்துநாள் தொடர்ச்சியாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.  காலையில் சாரதாவை அழைத்து தான் வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் தன்னால் இனிமேல் ஒருபோதும் அவளுக்கு எவ்விதமான பிரச்சனையும் வராது என்றும் வளரும் குழந்தைகளுக்கு தாயன்பு முக்கியம் என்பதாலேயே அவர்களை அவள்வசமே விட்டுச் செல்வதாகவும் எப்போதாவது அவர்களைப் பார்க்கும் ஆவல் எழும்போது வந்து பார்ப்பதை தயவுசெய்து தடைசெய்துவிடக்கூடாது என்றும் சொல்லிவிட்டு வேகவேகமாக வெளியேறிவிட்டார். சின்னசந்திரா பக்கமாக ஒதுக்குப்புறத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டார். மறுபடியும் கட்டடவேலைக்குச் செல்ல விருப்பமில்லாததால் பருவத்துக்குத் தகுந்தமாதிரி நிலக்கடலை, கொய்யாக்காய், மாங்காய், ஐஸ் என்று கூடையில் வைத்துக்கொண்டு விற்றுப் பிழைக்கத் தொடங்கினார். பத்து ஆண்டுகள் எப்படியோ உருண்டோடிவிட்டன.
                இவ்வளவு கடுமையான சோகத்தை அவர் மனம் சுமந்துகொண்டிருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைக்கவில்லை. ஈடுசெய்யமுடியாத அவருடைய இழப்பை எண்ணி வருத்தமே பெருகியது.
                "பத்து வருஷத்துல ஒருமுறைகூட அந்த விநாயகத்த நீங்க பாக்கலையா?"  மெதுவாக அவரிடம் கேட்டேன் நான்.
                "அவன பாக்கறதுக்கு எனக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை சார். நம்பிக்கைத் துரோகம் செஞ்சவன எப்படி சார் பார்க்கறது?" கசப்பான சிரிப்பொன்றை அவர் உதடுகள் உதிர்த்தன.
                "அவன ஒரு வார்த்த நீங்க கண்டிச்சிருந்திங்கன்னா, ஒருவேளை நிலைமை சீராகியிருக்குமோ என்னமோன்னு தோணுது" நான் என் ஆலோசனையை முன்வைத்தேன்.  
                "அப்படி ஆவாதுங்க சார். அவன் பெரிய கில்லாடி. பேச்சிலயே ஆள மடக்கிகட்டிடுவான். ஒருவேள அவன  கண்டிச்சி வெளியே தள்ளியிருந்தா, பின்னாலயே இவளும் போயிருப்பா. அப்படித்தான் அன்னைக்கு இருந்தது நான் பாத்த நெலைமை. அவ ஓடிப் போனவளா மாறிட்டா குழந்தைங்க நிலைமை ரொம்ப மோசமாயிடுமில்லையா? அதயெல்லாம் யோசிச்சிதான் நான் விலகிக்கற முடிவை எடுத்தேன்.  எல்லாமே நமக்கு நல்லதா நடக்குதுன்னுதான் நாம நம்பறோம். ஆனா உள்ளூர எல்லாமே விரோதமா நடக்குதுங்கறத நம்பறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுங்களா? ஏதோ தொலைவிலிருந்தே அவங்கள பாத்துக்கறேனே, அதுதான் இந்தக் கஷ்டத்திலயும் எனக்கு இருக்கற ஒரே ஆறுதல்."
                அதற்குப் பிறகு வெகுநேரம் அவர் எதுவுமே பேசவில்லை. மிதிவண்டியை உருட்டியபடி நடக்கத் தொடங்கினார். சாலைத் திருப்பம் வாகனங்களின் வெளிச்சத்தில் மின்னியது. அவர் மிதிவண்டியில் ஏறி உட்கார்ந்தார்.
                "எதோ உங்ககிட்ட சொன்னதுல மனசு லேசா இருக்குது. இன்னிக்கு ராத்திரிபூரா பாட்டு கேக்கப்போறேன். அப்பதான் இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். வரேன் சார், அடுத்த வாரம் பாக்கலாம்."
                என்ன பதில் சொல்வதென்று புரியாத குழப்பத்தில் தலையைமட்டும் அசைத்து கைகளை உயர்த்துவதற்குள் முத்துசாமியின் வாகனம் சாலையில் இறங்கி ஓடத் தொடங்கிவிட்டது.