Home

Monday 29 March 2021

புன்னகையின் தரிசனம் - கட்டுரை

 

துறவிகளுக்கென ஒரு நெறி உண்டு. அவர்கள் தம் பயணத்தில் அடுத்த வேளைக்கென எதையும் சேமித்துக்கொண்டு சுமந்து செல்வதில்லை. கிட்டுமோ கிடைக்காதோ என நினைத்து அச்சம் கொள்வதுமில்லை. அந்தந்த வேளையில் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்குரிய உணவு. அதற்கு சற்றும் குறைவில்லாத நெறிகளைக் கொண்டவர்கள் கவிஞர்கள். அவர்களும் தம் எழுத்துப் பயணத்தில் எதையும் சுமந்துகொண்டு செல்வதில்லை. தம் கண்ணில் தென்படும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகப் பார்க்கமுடிகிறது. அவர்கள் காதில் விழும் ஒவ்வொரு ஓசைத்துணுக்கிலும் அவர்களால் ஏதோ ஒன்றை புதுமையாகக் கேட்கமுடிகிறது. அந்தத் தரிசனங்களே அவர்களுடைய ஆக்கங்கள். காற்றைப்போல, வெளிச்சத்தைப்போல அவர்கள் அத்தரிசனங்களை உணர்ந்துகொள்கிறார்கள். அந்தத் தரிசனம்  என்பது பயிற்சியின் வழியாக அடையும் வெறும் திறமையல்ல. அது அவர்களிடம் தானாகவே நிகழ்கிறது. அப்படி தானாக நிகழும் வகையில் ஏதோ ஒன்று அவர்களுடைய ஆளுமையில் படிந்துள்ளது. அந்த ஆளுமையைக் கொண்டிருப்பதால்தான் அவர்கள் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள்.

Tuesday 23 March 2021

கோவை அய்யாமுத்து : துயரம் தீண்டாத வானம் - கட்டுரை

 

கதராடைகளை அணிந்து அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலும் அரசைப் புறக்கணித்தல், தேர்தலில் பங்கேற்காமல் சட்டசபையைப் புறக்கணித்தல் என மூன்றுவகையான புறக்கணிப்புகளை ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு செயல்திட்டமாக  காந்தியடிகள் வகுத்தளித்தார். தொடக்கத்தில் அரசு அவருடைய குரலைப் பொருட்படுத்தவில்லை. ஆயினும் அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு தேசம் முழுதும் பெருகிய மக்கள் ஆதரவைக் கண்டு திகைத்த அரசு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் கட்டுரைகளை எழுதியதாக காந்தியடிகள் மீது தேசதுரோகக் குற்றம் சுமத்தி 10.03.1922 அன்று கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. அவருக்கு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாண்டுகளில் சிறையில் அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்தது. அவசரமாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அவர் 05.02.1924 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பாதுகாப்பு - சிறுகதை

வணக்கம் மிஸ்டர் ரங்கராஜ். தீபிகா அனிமல்ஸ் கேர் அசோசியேஷன்ஸிலிருந்து பேசுகிறேன். என் பெயர் சதாசிவராவ். நீங்கள் ராவ் என்றே அழைக்கலாம். இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் நீங்கள் அனுப்பிய மின் அஞ்சலை இப்போது தான் படித்தேன். உங்களைப்போன்ற பெரிய மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் எங்கள் அசோசியேஷன்ஸ் மிகவும் பெருமை கொள்கிறது”.

இவ்வளவு சீக்கிரம் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை மிஸ்டர் ராவ். தொடர்புத் தளத்திலேயே இருந்தீர்களா?”

Sunday 14 March 2021

உயரத்தை நோக்கி - சிறுகதை

 

ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்ததும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஒரே ஒருநாள் பழக்கத்தில் ஒரு வாரமாகத் தொடர்ந்து வரத் தொடங்கிவிட்டது. புதிய ஊரில் புதிய நட்பு. வாழ்க்கைக்கான ஒரு திசையைத்தேடி தன்னைப் போலவே இடம்பெயர்ந்து வந்ததாக இருக்குமோ என்று தோன்றியது. உள்ளே சென்று வழக்கம் போல கைநிறைய அரிசியை அள்ளிவந்து வைத்தாள். அது கொத்தியெடுக்கும் வேகத்தையே நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தாள். புத்தம் புதிய ஜன்னல் திரைச்சீலை காற்றில் அசைந்தது. பதினோரு மணியளவில் கூட காற்றின் குளுமை ஆச்சரியப்படவைத்தது. நடந்து அருகிலிருந்து மற்றொரு ஜன்னலருகே சென்றாள். பளிச்சென்றிருந்த வானமும் அருகருகே நின்றிருந்த உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளும் மலைப்பைத் தந்தன.

வற்றாத நினைவுகள் - புதிய கட்டுரைத் தொகுதிக்கான முன்னுரை

 

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையில் அமைந்த எங்கள் சிற்றூரில் பேருந்துகள் நிற்குமிடத்தின் பெயர் சத்திரம். இந்த இடத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று புதிதாகப் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடும். அந்த அளவுக்கு கட்டடங்களாலும் கடைகளாலும் சூழப்பட்ட இடமாக இப்போது காட்சியளிக்கிறது அந்த இடம். உண்மையிலேயே அங்கே ஒரு சத்திரம் இயங்கிவந்தது. பருமனான தூண்கள். இருபது பேர் படுத்துத் தூங்கும் அளவுக்கு பெரிய பெரிய கல்திண்ணைகள். ஓடு வேயப்பட்ட கூரை. பின்கட்டையும் முன்கட்டையும் இணைக்கும் வகையிலும் வெளிச்சமும் காற்றும் தாராளமாக வந்துபோகும் வகையிலும் அமைந்த இடைநாழி. இதுதான் சத்திரத்தின் எளிய சித்திரம். முன்னால் வட்டமாக ஒரு பெரிய கிணறு இருக்கும். கிணற்றையொட்டி ஒரு பெரிய மகிழமரமும் ஒரு நாவல்மரமும் இருக்கும். என் சிறுவயது நாட்களில் அதிகாலையில் நடமாட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே சென்று காற்றில் உதிர்ந்துகிடக்கும் நாவற்பழங்களையும் மகிழம்பூக்களையும் சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிய காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.

Sunday 7 March 2021

தெளிவு - சிறுகதை

 


உதடு குவித்து முகத்தைப் பறக்கவிட்ட மோகனின் உருவம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. வெறுமை படர்ந்த கணிப்பொறித் திரையை பெருமூச்சுடன் பார்த்தாள் ராதா. மெதுவாக சுவர்க்கடிகாரத்தை அண்ணாந்து நோக்கினாள். ஐந்து. ஜன்னல் வழியாக குளுமை படித்த காற்று வீசியது. அவன் பேசத் தொடங்கியபோது கடிகாரமுள் மூன்றில் இருந்தது. ஏறத்தாழ இரண்டுமணிநேரம் நீண்ட பேச்சு.

அறையும் அறைசார்ந்த இடமும் - சிறுகதை

 

பத்துக்கு எட்டு அல்லது ஏழுதான் அந்த அறையின் நீள அகலமாக இருக்கும். சீனிவாசராவ் மாற்றலாகி ஐதராபாத்திற்குப் போகும்போது அந்த அறை எனக்குக் கிடைக்கும்படிச் செய்துவிட்டுப் போனார். நான் என் செலவிலேயே சுவர்களுக்கு வர்ணமடித்து நாலைந்து ஜாடிகளில் ரோஜாப் பதியனும் குரோட்டன்களும் வாங்கி நட்டு அழகாக்கி இருந்தேன். மினுக் மினுக்கென்று எரிந்த இரண்டு பல்புகளை மாற்றி டியூப்லைட்டைக் கூடப் பொருத்தினேன். நல்ல காற்று. நல்ல வெளிச்சம். பத்து நிமிஷத்தில் நடந்து போகிற அளவுக்குப் பக்கத்திலேயே ஆபீஸ் இருந்தது. ஒரு நாலைந்து வாரங்களுக்குள் வீட்டுக்காரர்கள் நெருக்கமாகிவிட்டார். அவர்களுடைய ஆறு வயசுக் குழந்தை ‘‘அங்கிள் அங்கிள் கதை சொல்லுங்க அங்கிள்’’ என்று கேட்டபடி மாடிப்படி ஏறி வந்து என் மடியில் உட்கார்ந்து கொள்கிற அளவுக்கு நெருங்கிவிட்டோம். அந்த அண்ணி இட்லி தோசை சுடும் நாள்களில் எனக்காக ஒரு தட்டு மேலே வந்தது.