Home

Sunday 14 March 2021

வற்றாத நினைவுகள் - புதிய கட்டுரைத் தொகுதிக்கான முன்னுரை

 

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையில் அமைந்த எங்கள் சிற்றூரில் பேருந்துகள் நிற்குமிடத்தின் பெயர் சத்திரம். இந்த இடத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று புதிதாகப் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடும். அந்த அளவுக்கு கட்டடங்களாலும் கடைகளாலும் சூழப்பட்ட இடமாக இப்போது காட்சியளிக்கிறது அந்த இடம். உண்மையிலேயே அங்கே ஒரு சத்திரம் இயங்கிவந்தது. பருமனான தூண்கள். இருபது பேர் படுத்துத் தூங்கும் அளவுக்கு பெரிய பெரிய கல்திண்ணைகள். ஓடு வேயப்பட்ட கூரை. பின்கட்டையும் முன்கட்டையும் இணைக்கும் வகையிலும் வெளிச்சமும் காற்றும் தாராளமாக வந்துபோகும் வகையிலும் அமைந்த இடைநாழி. இதுதான் சத்திரத்தின் எளிய சித்திரம். முன்னால் வட்டமாக ஒரு பெரிய கிணறு இருக்கும். கிணற்றையொட்டி ஒரு பெரிய மகிழமரமும் ஒரு நாவல்மரமும் இருக்கும். என் சிறுவயது நாட்களில் அதிகாலையில் நடமாட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே சென்று காற்றில் உதிர்ந்துகிடக்கும் நாவற்பழங்களையும் மகிழம்பூக்களையும் சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிய காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.




இன்று அவ்விடத்தில் மரமோ, கிணறோ, சத்திரமோ எதுவுமே இல்லை. அனைத்தும் அரைநூற்றாண்டுக்கு முந்தைய நினைவாக மாறிவிட்டது. இப்போது எங்கெங்கும் கடைகள். கட்டடங்கள்.

இன்றும் அந்த இடத்துக்குச் சென்று நிற்கும்போது எங்கிருந்தோ வரும் மகிழம்பூ மணம் என் நாசியையும் நெஞ்சையும் நிறைப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மண்மீது இல்லாத மகிழமரம் என் ஆழ்நெஞ்சில் வேர்விட்டு கிளைபரப்பி காற்றில் அசைந்து மலர்களை என்றென்றும் உதிர்த்தபடி நிற்கிறது.

 

·          

சத்திரத்திலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் பத்திரப்பதிவு அலுவலகம் இருந்தது. பல பேர் அமர்ந்தும் படுத்தும் கதைபேசும் கல்திண்ணைகளுக்கு நடுவில் ஒரு திண்ணை மட்டும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கிளைபோல அந்தக் காலத்தில் இயங்கிவந்தது.  கணக்குப்பிள்ளை மேசையை முன்னால் வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருப்பார் பத்திர எழுத்தர். சற்றே நரையோடிய கருத்த நெற்றியில் சந்தனக்கீற்று அழகாக வெட்டி ஒட்டியதுபோல கச்சிதமாகக் காட்சியளிக்கும். எங்கள் சிற்றூருக்கு அருகிலிருந்த இன்னொரு சிற்றூரான இளங்காடு என்னும் இடத்திலிருந்து காலையில் மிதிவண்டியில் வந்து இறங்குவார் அவர். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு மாலையில்தான் திரும்பிச் செல்வார். அந்தச் சந்தனக்கீற்று சிறிதுகூட கலையாமல் அப்படியே இருக்கும். அது ஓர் அதிசயம்.

அவருடைய சேவையை நாடிவந்தவர்கள் திண்ணையிலும் மரத்தடியிலும் அமர்ந்திருப்பார்கள். கையில் எடுத்த வேலையை முழுநிறைவோடு முடிக்கும் வரையில் அவர் அடுத்த வேலையைத் தொடுவதில்லை. அடுத்தவர்களிடம் பேசவும் மாட்டார். அதே சமயத்தில் வந்தவர்கள் சலித்துவிடாதபடி நேரத்துக்குச் சரியாக கிராமணியார் ஓட்டல் தேநீர் வந்து சேரும். அந்த வேலையையும் மற்ற குற்றேவல்களையும் செய்வதற்கு அவர் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தார். சுறுசுறுப்புக்குப் பேர்போனவன். ஏழெட்டு தேநீர்த்தம்ளர்களை வட்டவடிவக் கம்பிக்கொத்தில் வைத்துக்கொண்டு அவன் நடந்துவரும் காட்சியையும் ஒவ்வொன்றாக எடுத்துஇந்தாங்க ஐயாஎன்றபடி அவன் புன்னகை மிக்க முகத்துடன் அளிக்கும் காட்சியையும் ஒருபோதும் மறக்கமுடியாது. அவன் பெயர்கூட நினைவில் உள்ளது. தங்கராசு. அவன் என்னோடு தொடக்கப்பள்ளியில் படித்தவன். வீட்டுச்சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் நின்றுபோனவன். அவர்களைப் பார்த்துப் பேசும் அந்தப் புன்னகையில் சிறிதளவும் மாற்றமின்றிஎன்னடா நல்லா இருக்கியா? டீ குடிக்கிறியா?” என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் கேட்பான்.

பானுமதி டீச்சர் எப்படிடா இருக்காங்க?” என்னும் கேள்வியை அவன் ஒவ்வொரு முறையும் தவறாமல் கேட்பான். அவனுக்கு பானுமதி டீச்சரை அந்த அளவுக்குப் பிடிக்கும். அதே அளவுக்கு டீச்சருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். வகுப்பில் டீச்சருக்கு அவன் செல்லப்பிள்ளை. நேரு அணிக்கு தலைவனாக இருந்து வகுப்பறைத்தூய்மையை சாத்தியப்படுத்தி பலமுறை பாராட்டுகளைப் பெற்றவன். அனைத்துக்கும் மேலாக, மாலை வேளையில் டீச்சருக்காக கடைக்குச் சென்று தேநீர் வாங்கிவரும் வேலையை ஒரு கடமையைப்போல அவன் மிகுந்த அன்போடும் பணிவோடும் செய்துவந்தான்.

அந்த இடத்தில் நிற்கும் தருணங்களிலெல்லாம் தங்கராசுவின் குரல் என்னை அழைப்பதுபோல உள்ளது. அவனுடைய கலைந்த தலையும் புன்னகையும் பொருந்திய அவன் முகம் நினைவில் மிதந்தெழுந்து நிற்கிறது.

·          

சத்திரத்துத் திண்ணைகளுக்கு அருகில் மரத்தடி நிழலில் கூடையை வைத்துக்கொண்டு அமர்ந்து ஒரு பாட்டி மரவள்ளிக்கிழங்கும் கடலையும் விற்பதுண்டு. அரையணாவுக்கு கைநிறைய மரவள்ளிக்கிழங்கை அரிந்துகொடுப்பார். அதைத் தின்றுவிட்டு அடிபம்பில் தண்ணீர் குடித்தால் போதும், வயிறு நிறைந்துவிடும். மாலை விளையாட்டுக்குத் தேவையான தெம்பும் உற்சாகமும் தானாகப் பொங்கியெழும்.

அந்தப் பாட்டி பக்கத்திலிருந்த திரெளபதை அம்மன் கோவில் தெருவிலிருந்து தினமும் வருவார். அந்தத் தெருவைச் சேர்ந்த ஒரு பையன் எங்கள் வகுப்பில் படித்துவந்தான். அவன்தான் அந்தப் பாட்டிக்கு ஆஞ்சநேயர் பாட்டி என்று பெயர்சூட்டி வைத்திருந்தான். அதற்கு அவன் ஒரு கதை சொன்னான். ஒருநாள் எங்கோ மதிலிலிருந்து தாவி பாட்டியின் வீட்டுக் கூரைமீது ஒரு குரங்கு வந்து உட்கார்ந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் பலரும் சேர்ந்து போபோவென்று விரட்டினாலும் அது போகவில்லை. அது கீழே இறங்கி வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கினார் பாட்டி. உடனே வேகமாக வீட்டுக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துவந்து குரங்கின் கண்படும் தொலைவில் மதில்மீது வைத்துவிட்டுஅஞ்சநேயா அஞ்சநேயாஎன்று முணுமுணுத்தபடி கன்னத்தில் போட்டுக்கொண்டார். அந்தக் குரங்கும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டதுபோல பழத்தை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டது. அன்றே அவன் அவருக்கு ஆஞ்சநேயர் பாட்டி என்று பெயர் சூட்டிவிட்டான்.

சத்திரத்தை, கல்திண்ணையை, பத்திர எழுத்தரை, மகிழமரத்தை, தங்கராசுவை நினைத்துக்கொள்கிற தருணத்தில் ஆஞ்சநேயர் பாட்டியின் உருவமும் நினைவிலெழுகிறது. சத்திரம் என்கிற ஒரு பெயரைத் தவிர வேறு எதுவுமே இப்போது அங்கில்லை. தங்கராசுவோ, எழுத்தரோ, பாட்டியோ யாருமே இல்லை. என் நினைவில் மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய சாயலில் பல பாத்திரங்களை நான் எழுத நேர்ந்த சிறுகதைகளில் உருவாக்கியிருக்கிறேன். அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் இன்னும் என் நினைவில் பசுமையாக நிறைந்திருக்கிறார்கள்.

அவர்களோடு வேறு சிலரும் என் நினைவில் வாழ்கிறார்கள். அவர்கள் படைப்புலகத்தோடு தொடர்புடையவர்கள். ஆளுமைகள். இலக்கியத்துக்காக பங்காற்றியவர்கள். அவர்கள் இந்த மண்ணுலகிலிருந்து மறைந்தபோது அவர்களைப்பற்றிய நினைவுகளின் பதிவாக ஒருசில கட்டுரைகளை எழுதினேன். அவர்களிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் ஒருபோதும் நான் மறந்ததில்லை. அந்தக் கட்டுரைகளையெல்லாம் திரட்டித் தொகுத்து படித்தபோது, இன்னும் சில காலம் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணமே முதலில் எழுந்தது.

இந்த நேரத்தில் எழுத்தாளர் அசோகமித்திரனின் உருவம் என் நினைவில் எழுகிறது. தன் பால்யகால நினைவுகளைக்கூட மிகவும் துல்லியமாக நினைவுபடுத்திச் சொல்லும் திறமையும் படைப்புகளாகவும் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. சில இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக அவரோடு சேர்ந்து நானும் வெளியூர்களில் தங்கியிருக்கிறேன். பலவகைப்பட்ட தன் சிறுவயது நினைவுகளை அசைபோட்டவாறு பகிர்ந்துகொண்ட அந்த இரவு நேரங்களை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. தனித்தனியாக தான் எழுதிய எல்லாச் சிறுகதைகளும் ஏதோ ஒருவகையில் ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களே என்றும் வாழ்வனுபவங்களின் தொகுப்பு என்றும் அவர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வருகிறது. ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளாக அமைந்த இக்கட்டுரைத்தொகுதியை அசோகமித்திரன் அவர்களுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் உங்கள் நூலகம், யுகமாயினி, அம்ருதா, காலச்சுவடு, சங்கு, உயிர்மை ஆகிய அச்சிதழ்களிலும் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றியும் அன்பும். என் அன்புத்துணைவி அமுதாவின் ஊக்கமும் அன்பும் என் எழுத்து முயற்சிகளில் எப்போதும் துணையாக இருப்பவை. அவரை நினைக்காமல் ஒருநாள் கூட கழிந்ததில்லை. இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் பிரசுரித்திருக்கும் என்சிபிஎச் நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி