Home

Sunday 14 March 2021

உயரத்தை நோக்கி - சிறுகதை

 

ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்ததும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஒரே ஒருநாள் பழக்கத்தில் ஒரு வாரமாகத் தொடர்ந்து வரத் தொடங்கிவிட்டது. புதிய ஊரில் புதிய நட்பு. வாழ்க்கைக்கான ஒரு திசையைத்தேடி தன்னைப் போலவே இடம்பெயர்ந்து வந்ததாக இருக்குமோ என்று தோன்றியது. உள்ளே சென்று வழக்கம் போல கைநிறைய அரிசியை அள்ளிவந்து வைத்தாள். அது கொத்தியெடுக்கும் வேகத்தையே நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தாள். புத்தம் புதிய ஜன்னல் திரைச்சீலை காற்றில் அசைந்தது. பதினோரு மணியளவில் கூட காற்றின் குளுமை ஆச்சரியப்படவைத்தது. நடந்து அருகிலிருந்து மற்றொரு ஜன்னலருகே சென்றாள். பளிச்சென்றிருந்த வானமும் அருகருகே நின்றிருந்த உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளும் மலைப்பைத் தந்தன.

குடியிருப்புக்கு அருகில் தள்ளித் தெரிந்த சாலையில் வாகனங்கள் எங்கிருந்தோ விடுதலை பெற்றவைபோல சீறிப் பாய்ந்தவாறிருந்தன. கட்டுப்பாடில்லாமல் பறக்க அவற்றின் வேகத்தையே சில கணங்கள் பார்த்தாள். சாலை ஓரங்களில் உயரமாக வளர்ந்திருக்கும் மரங்களில் செவ்வண்ணத்தில் பூத்துக் குலுங்கிய பூக்கள் பளிச்சென்று அசைந்தன. நாலாவது மாடியிலிருந்து பார்க்கும் கோணத்தில் பச்சையும் செவ்வண்ணமும் திட்டுத்திட்டாகப் படர்ந்த ஒரு பெரிய போர்வை நெளிவது போலத் தோன்றியது. ஒரு விமானம் சீறியபடி ஒரே நொடியில் அந்தப் பரப்பைக் கடந்து போனது. ஒரு குடியிருப்புக்காக ஒழுங்குப்படுத்தப்படும் பக்கத்து நிலப்பரப்பில் ஒரு மரத்திலிருந்து வெட்டுப்பட்ட ஒரு கிளை முறிந்து கீழே விழுந்தது. பறவைகள் தாவி வேறு திசைநோக்கிப் பறந்தன. ஒரு கொத்து இலை வெட்டவெளியைத் துழாவி அலைந்தபடி மண்ணில் இறங்கிச் சரிந்தது-.

பத்மா நாற்காலியில் வந்து அமர்ந்தாள். அரிசியைக் கொத்தியெடுக்கும் பறவையின்மீது மீண்டும் அவள் பார்வை படிந்தது-. சில கணங்களுக்குப் பிறகு சுவரருகே தொங்கிக்கொண்டிருந்தது நாட்காட்டி ஓவியத்தின் பக்கம் நகர்ந்தது. வானை நோக்கித் தாவும் கடற்பறவையின் ஓவியம். வெண்மேகத் திட்டுகள் நிரம்பிய நீல வான்வெளியைக் கிழித்துக்கொண்டு பறக்கும் கடற்பறவையின் வேகம் ஓவியத்தில் துல்லியமாகத் தெரிந்தது. அவற்றின் சிறகுகள் உயிர்த்துடிப்போடு காணப்பட்டன. வைத்த கண் எடுக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மா. மோதிரம் வாங்கிய நகைக்கடையில் அன்பளிப்பாக தரப்பட்ட நாட்காட்டி அது. பார்த்த கணத்திலேயே செல்வம் அந்த ஓவியங்களில் ஆழ்ந்துவிட்டான். இன்னும் உயரே, இன்னும் உயரேன்னு பறக்கறதுல கடற்பறவைக்கு இருக்கற ஆசை கட்டுப்படுத்த முடியாத பிறவிக்குணம்னு சொல்வாங்க பத்மாஎன்று அந்த ஓவியத்தைப் பார்த்தபடி காதோரமாகக் கிசுகிசுத்தான். கிசுகிசுப்பின் முடிவில் அவள் காது மடலில் தொங்கும் ஜிமிக்கியை ஊதிவிட்டான். அக்கணம் உடல்முழுதும் ரத்த ஓட்டம் வேகமாகப் பொங்கி அடங்கியது.

முதலில் ஆளுக்கொரு புதிய கைப்பேசியையும் அதற்குரிய இணைப்பெண்களையும் வாங்கிக்கொண்டார்கள். பிறகு நாற்காலி, கட்டில், மெத்தை, முக்கியமான பாத்திரங்கள், குளிர்ச்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப்பெட்டி எல்லாவற்றுக்கும் நல்ல கடைகளாகப் பார்த்து பணம் செலுத்தினான். எல்லாமே நேற்றிலிருந்து வரத்தொடங்கிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டி மட்டுமே பாக்கி.

செல்வம் ஊருக்குக் கிளம்பிச் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. ஒருவாரம் கூடவே இருந்தவன் திடீரென இல்லாமல் போனதும் வெறுமை கவிந்துவிட்டது. மனம் மீண்டும் மீண்டும் அவனையே யோசித்தது. ஊருக்குச் சென்ற பிறகுகூட தொடர்ச்சியாக கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். நேற்றிலிருந்துதான் அழைப்புகள் வரவில்லை. அவளாக முயற்சி செய்யும் தருணங்களில் எல்லாம் அவனுடைய எண் தொடர்பு வளையத்துக்கு அப்பால் இருப்பதாகவே தகவல் வந்தது. குழப்பமும் அச்சமும் மாறிமாறி அவள் நெஞ்சில் குடிபுகுந்து வாட்டின. திங்கள் கிழமை முதல் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலையில் மனம் படிந்துவிட்டால் இந்த இடைவெளிகள் தாமாக மறைந்துவிடும் என்று தோன்றியது.

முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்ததில் அவள் மனம் துள்ளியது. தன் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அவளுக்குத் தோன்றியது. கணிப்பொறித் துறையில் ஒரு பட்டம். ஒரு பட்டயச் சான்றிதழ். தெளிவான தடையற்ற ஆங்கிலம். ஆறு ஆண்டுகாளானாலும் அந்தத் தீவிரம் அவளுக்குள் மங்காத தீபமாகக் கூடர்விட்டபடி இருந்தது. அவள் பறந்திருக்கவேண்டிய திசையே வேறு. அம்மாவும் அப்பாவும் கட்டாயப்படுத்தி திருமணம் என்னும் என்றொரு திசையை நோக்கி செலுத்திவிட்டனர். அப்பாவுக்கு கடுமையான நீரிழிவு. அம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை அருகில் அழைத்துவந்த மார்புப் புற்றுநோய். மரணக் காட்சிகள் அவளைப் பணியவைத்துவிட்டன. சிறிதும் விருப்பமின்றி நரசிம்மனுடன் தொடங்கிய இல்லறவாழ்வில் அவள் மனம் ஈடுபடவே இல்ல. ஆறாவதுக்கு மேல் படிக்க முடியாமல் தொழில் சந்தையில் தொழில் பழகி வெற்றி பெற்றவன் அவன். இந்த பூமியில் உற்பத்தியாகும் எல்லாவற்றையும் குறைந்த விலைக்கு வாங்கி போதிய லாபத்துடன் விற்றுவிடும் திறமைசாலி. சாதாரண ஒரு இரும்பு ஆணியைக்கூட ஒன்பது கதைகள் சொல்லி பத்து மடங்கு விலையில் விற்றுவிடமுடியும் அவனால். அவன் சிரிப்பு. குழைவான உரையாடல். சரம்சரமாக தயக்கமே இல்லாமல் வாயிலிருந்து உதிர்க்கிற கெட்ட வசைகள். நாடகத்தனமான பணிவு. எதுவுமே அவளைத் தொடவில்லை. அவன் நெருக்கம் ஒருபோதும் அவள் ஆழ்மனத்தைத் தீண்டியதே இல்லை. எப்போதும் அவனுக்கு எதிரான திசையிலேயே இருந்தாள் அவள். பெற்றெடுத்த இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்தவர்களால் வளர்க்கப்பட்டார்கள். பெற்றோரின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை சகித்துக்கொள்ள இயலாத ஒன்றாக மாறிவிட்டது. வசைகளைப் பொழிந்தபடி இருக்கும் அவன் உரையாடல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் சாக்கடையில் நிற்பதுபோல அவள் மனம் கூசும். அந்த நாட்களில் இணைய மையத்தில் தற்செயலாகப் பழகி நெருக்கமாக செல்வத்தின் தொடர்புமட்டுமே அவளுக்குக் கிட்டிய மிகப் பெரிய ஆறுதல். இரண்டு வருடப் பழக்கம் அவன் வழியாக அவள் பெற்ற ஆறுதலை மேலும் மேலும் வளர்த்தெடுத்தது. மிகப்பெரிய கனவுக்கான விதை அவள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து முளைவிடத் தொடங்கியது. வேகவேகமாக அது செடியாகி, பிறகு கொடியாகி மனம் முழுதும் படர்ந்து விரிந்தது.

என்ன பத்மா? ஏதாவது பயமா இருக்குதா?” புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்று சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது அடங்கிய குரலில் செல்வம் கேட்டதை நினைத்துக் கொண்டாள்.

ஒரு பயமும் இலல. இந்த ஆறு வருஷம் என் வாழ்க்கையிலேயே இல்லைன்னு தோணுது செல்வம். டெலிட் கமான்ட் குடுத்து அந்த மெமரியே அழிஞ்சிபோன மாதிரி இருக்குது. புதுசா ஃபார்மட் பண்ணின சிஸ்டம் மாதிரி இருக்குது மனசு. முதன்முதலா பெங்களூருலதான் எனக்கு வேல கெடச்சிது தெரியுமா? விப்ரோ கம்பெனி. ஆனா சேரலை. எல்லாரும் சேந்து வேணாம் வேணாம்னு தடுத்துட்டாங்க. இப்ப அதே பெங்களூருக்கு விதி அழச்சிட்டு போவறத நெனைச்சா விசித்திரமா இருக்குது.குளிரூட்டப்பட்ட இருக்கையிலிருந்து வளைந்து அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னதை மனம் மறுபடியும் அசைபோட்டது-.

ஆனா எனக்கு பயமா இருக்குது பத்மா. நரசிம்மன் ரொம்ப பெரிய ஆளு. எதையாவது செஞ்சி எப்படியாவது சாதிக்கணும்ன்னு நெனைக்கிற வெறி உள்ளவரு. அவர் கண்லேருந்து தப்பிச்சி எவ்வளவு காலத்துக்கு பெங்களூருல இருக்கமுடியுமோ தெரியலை. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் எப்பவுமே ஒரு படபடப்பு ஓடிட்டே இருக்குது.அவன் விரல்களை வாங்கி தன் கைக்குள் வைத்து அழுத்தமாக மூடிக்கொண்டு மௌனமானாள் பத்மா.

நடுக்கமும் கலவரமும் நிறைந்த அவன் சொற்கள் ஆழ்மனத்தில் அவளை துண்டுதுண்டாக வெட்டியதுபோல உணர்ந்தாள். முதன்முறையாக பிள்ளைகளை நினைத்துக் கொண்டாள். ஐயோ என் பிள்ளைகளேஎன்று அக்கணமே திரும்பி ஓடோடிச்சென்று அவர்களை வாரி அணைத்துக் கொள்ள வேண்டு போல ஒரு வேகம் புரண்டது. பிசகிவிட்ட என் புத்திய செருப்பாலதான அடிச்சிக்கணும். என்ன மன்னிச்சிடு. இந்தப் புள்ளைங்களுக்குத் தாயா இந்த வீட்டுலயே ஒதுங்கி இனிமே காலத்த கழச்சிக்கிறேன். தயவுசெஞ்சி என்ன ஒன்னும் செஞ்சிடாதஎன்று நரசிம்மனிடம் கெஞ்சுவதுபோல ஒரு காட்சி எழுந்தது. மாட்ட அடிக்கற மாதிரி அடிக்கறியே, நீ என்ன மனுஷனா மிருகமா? நாகரிகம்னா என்னன்னு தெரியுமா ஒனக்கு?- ஒரு காட்டுமிராண்டிக்கு வாழ்க்கப்பட்டு என் வாழ்க்கயே வீணா போச்சி. உன் கூட வாழறதுக்கு பதிலா ஒரு வாய் விஷத்த குடிச்சிட்டு நிம்மதியா உயிர உட்டுடலாம்என்று கண்ணீருடன் கலங்கி நிற்பதுபோல ஒரு தவிப்பு பொங்கிப் பொங்கிப் படர்ந்தது-. தயவு செஞ்சி என் வழியில என்ன விட்டுடு. எந்த விதத்துலயும் உனக்கு நான் பொருத்தமானவளே இல்லஎன்று விளக்க முனைவதுபோல ஒரு தோற்றம் அரும்பியது. என்னப் பெத்தவங்கதான் சொந்தம் சொந்தம்னு ஒரு குழியில் தள்ள நெனைச்சாங்கன்னா, எந்தத் தகுதியில அதுக்கு நீ ஒத்துக்கிட்ட? ஒரு நாளாவது அதப்பத்தி நீ யோசிச்சிப் பாத்திருக்கியாஎன்று விரல்நீட்டி கேள்விகேட்பது போல ஓர் எண்ணம் உருவானது. இறுதியில் எல்லாவற்றையும் வேகமாக அழித்துவிட்டு ஒரு பயமும் வேணாம் செல்வம். யாரும் ஒன்னும் செய்யமுடியாது. நம்ம உறுதியே நம்மள காப்பாத்தும். தைரியமா இருக்கணும் புரியுதா?” என்று சொன்னபடி அவன் உள்ளங்கையில் முகம்பதித்து முத்தமிட்டாள். சூடான ஒரு துளி கண்ணிர் அவன் முன்கையில் விழுந்தது. ஆதரவாக அவள் முகத்தைத் தன்னைநோக்கித் திருப்பிய செல்வம் ஈரமான இமைகளை தன் விரல்களால் அழுத்தித் துடைத்தான். ம்ஹூம்என்று தலையசைத்தபடி அவள் கண்களையே வெதுநேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தான்.

இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினார்கள். பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து உரிமையாளரோடு பேசி முன்பணம் கொடுத்து இந்தத் தொகுப்பு வீட்டுக்கு குடிவந்தார்கள். அப்புறம் இரண்டு நாட்கள் அங்குமிங்கும் சுற்றி வீட்டுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளாகப் பார்த்துப்பார்த்து வாங்கினார்கள். பிறகு, நகரத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். ஒரு அமெரிக்க நிறுவனம் நடத்தில் நேர்காணலில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றாகிவிட்டது. ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை.

அரிசியைக் கொத்திக்கொண்டிருந்த புறா சட்டென ஜன்னலுக்கு அப்பால் பறந்து போவதைப் பார்த்தாள். கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து செல்வத்தின் எண்களை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். சில நிமிடங்களின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தொடர்பு வளையத்திலேயே அவன் இல்லை என்னும் அறிவிப்பு வந்தது. தச் என்று நாக்கு சப்புக் கொட்டியபடி கைப்பேசியை தலையணைமேல் வைத்தாள். தலையணையில் படிந்திருந்த மங்கலான எண்ணெய்க்கறை அவள் ஞாபகங்களைக் கிளறின. படுக்கையறை அனுபவங்கள் ஒவ்வொன்றையும் ஆசையோடு அசை போட்டாள். திடீரென வயது குறைந்தது போல உணர்ந்தது அவள் மனம், செல்வம் வாங்கிப் போட்டுவிட்ட புதிய மோதிரத்தை இமைக்காமல் சிறிதுநேரம் பார்த்தபடி இருந்தாள். அவளையறியாமல் உதடுகளில் புன்னகை அரும்பியது. உதடுகளுக்கருகே விரலை உயர்த்தி  மோதிரத்துக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். சந்தோஷமாக இருந்தது. உடலே மென்மையுற்று ஒரு பூவாக மாறிவிட்டது போலிருந்தது. மனம் அந்த நினைவிலிருந்து விடுபட மறுத்து இறுக்கமாக அதையே தழுவிக்கிடந்தது. நெஞ்சில் ஒருவிதமான தவிப்பு பொங்கியது.

அதே நினைவுடன் குளிப்பதற்குச் சென்றாள். மேலிருந்து கோடுகளாக இறங்கும் தண்ணீர்த்தாரைகளின் கீழே உடைகளைக் களைந்துவிட்டபடி நின்றுபடி தன் உடலை ஒரு முறை ஆழமாகப் பார்த்துக் கொண்டாள். வயிறுமட்டுமே சற்றே அகன்று தளர்ந்திருக்க, மற்ற குழைவுகளும் நெளிவுகளும் அப்படியே இருப்பதாக நினைத்துக்கொண்டாள். செல்வத்தின் நினைவு மறுபடியும் மூண்டு கலைந்தது. ஈரத்தைத் துடைத்தபடி குளியலறையைவிட்டு வெளியே வந்து பெட்டியைத் திறந்து உடைகளை எடுத்தாள். ஆறு புத்தம் புதிய சூடிதார்கள். வேலைக்குச் செல்வதற்காக வாங்கியவை. எல்லாமே செல்வத்தின் தேர்வு. இரண்டாவதாக இருந்த வெளிர்நீல நிற சூடிதாரை அவள் விரல்கள் எடுக்க முனைந்தன. முதல்நாள் வேலைக்குப் போவும்போது போட்டுக்கறதுக்காக இது. ரொம்ப எடுப்பா இருக்கும்என்று அதைத் தேர்வு செய்யும்போது செல்வம் சொன்ன வார்த்தைகள் காதருகே ஒலிப்பதுபோல இருந்தன. புன்சிரிப்போடு அதை அப்படியே நகர்த்திவிட்டு மஞ்சளும் வெளிர்பச்சையும் இணைந்த இன்னொரு சூடிதாரை எடுத்து அணிந்தாள். துப்பட்டாவை கழுத்தில் சுற்றியபடி கண்ணாடி முன் நின்று ஒரு முறை பார்த்துக்கொண்டாள். திருப்தியாக இருந்தது. கண்ணாடியின் விளிம்பில் ஒட்ட வைத்திருந்த பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். காரணமில்லாமல் சிரிப்பு வந்தது.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவோடு பொருத்தப்பட்ட வட்டமான சிறிய ஆடிக்குமிழ் வழியாகப் பார்த்தாள். இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அருகில் பிரிக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டி. கதவைத் திறந்து என்ன?” என்றாள்.

ஸாரி மேடம், ரெண்டு நாள் லேட்டாய்டுச்சி. பெட்ரோல் விலை ஏறிடுச்சின்னு நடந்த ஸ்டிரைக்கால வண்டிங்க ஓடலை மேடம். இன்னைக்குக் காலையிலதான் புது சரக்கு வந்துச்சி. மொதல் டெலிவரி உங்களுக்குத்தான் மேடம்.

உள்ளே வரச் சொன்னாள். ஆளுக்கொரு பக்கம் பிடித்து பெட்டியை உள்ளே கொண்டுவந்தார்கள். கூடத்தில் பொருத்தமான இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பரபரவென்று பெட்டியைத் திறந்து தொலைக்காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து ஒரு முறை சுத்தமாகத் துடைத்தார்கள். பத்மா நாற்காலியில் அமர்ந்தபடி துப்பட்டாவை விரலில் சுற்றிக்கொண்டே வேடிக்கை பார்த்தாள்.

ப்ளக் பாய்ண்ட் எங்க மேடம்?”

அதோ அங்க. அந்த காலண்டர் பக்கத்துல

அவள் சுட்டிக் காட்டிய இடத்திலிருந்து இணைப்பை இழுத்துப் பொருத்தினார்கள். ஒரு மூலையில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கேபிள் இணைப்பை தனியாக இழுத்து வந்து பொருத்தினார்கள். ஒருவன் தொலைக்காட்சிக்கு உயிரூட்டி புதிய இயக்கியின் வழியாக சேனல்களை வரிசைப்படுத்தத் தொடங்கினான். சன் சேனல மொதல்ல வைக்கட்டுமா மேடம்?-” என்றபடி அவன் பத்மாவைப் பாத்தான். சரிசரிஎன்றபடி அவள் நாற்காலியில் சாய்ந்துகொண்டாள். இன்னொருவன் வெற்று அட்டைப் பெட்டிகளை ஒழுங்கு செய்தான்.

தமிழ் நல்லா பேசறிங்களே? எந்த ஊரு நீங்க?” அவனிடம் பேச்சுக் கொடுத்தாள் பத்மா.

தர்மபுரி பக்கம் மேடம்.

கல்யாணம் ஆயிடுச்சா?”

அவனுக்கு இப்பத்தான் பொண்ணு பாத்துகிட்டிருக்காங்க. வர தையில முடிச்சிருவாங்க மேடம்.

உங்களுக்கு?”

அதுக்கெல்லாம் நேரமில்ல மேடம். அப்படியொரு வாழ்க்கை அமைப்பு நமக்குஅவன் பெருமூச்சும் முகத்தில் சட்டென படிந்த கசப்பான சிரிப்பும் அவள் ஆவலைத் தூண்டியது.

என்னன்னு சொல்லுங்க. தெரிஞ்சிக்கலாமேமெதுவாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

அது பெரிய சோகக்கத மேடம்என்றபடி ஒருகணம் அவளை நிமிர்ந்து பார்த்தான். பிறகு மெதுவாகச் சொல்லத் தொடங்கினான். ஒங்களமாதிரி ஒரு அக்கா எனக்கிருந்தா மேடம். நல்லா படிக்கற பொண்ணு. எங்க மாவட்டத்துலயே ப்ளஸ் டூல மொதல் மார்க் எடுத்தவ அவ. தொண்ணத்தஞ்சி பர்சென்ட். ஜெயலலிதாவே கூப்ட்டு ப்ரைஸ்லாம் அந்தக் காலத்துல கொடுத்திருக்காங்க. இஞ்சினீரிங்கோடிப்ளமோவோ மேல படிக்கறேன்னு சொன்னா. எங்க அம்மா அப்பா கேக்கலை. என்ன படிச்சாலும் கடைசியா கரண்டிதான்டி புடிக்கணும்னு சொல்லிச்சொல்லியே அவ வாய அடச்சிட்டாங்க. ஆசஆசயா கிளிய வளத்து பூனைகிட்ட குடுத்த மாதிரி பிடிவாதமா ஒத்தக்கால்ல நின்னு மொறப்பையனுக்கு கட்டி வச்சிட்டாங்க. மோட்டார் காய்ல் ரிப்போர் பண்ற மெக்கானிக் அவன்.

அப்பறம்?”

அடுத்தடுத்து ரெண்டு புள்ளய பெத்தா. அதுக்கு நடுவுல எங்க மாமன்காரனுக்கு வேற ஒரு பொண்ணுகூட தொடர்பாயிடுச்சி. மொதல்லிருந்தே அது இருக்கும்போல. மறச்சிட்டான் பாவி. திடீர்னு ஒருநாள் அவளோட வடக்குப் பக்கம் ஓடிட்டான். எவ்வளவு தேடியும் ஆளு கெடைக்கலை. அக்காவுக்கு ஒரு பக்கம் வேதனை. இன்னொரு பக்கம் அவமானம். என்ன நெனைச்சாளோ தெரியலை. ஒரு நாள் ராத்திரி அரளிவிதைய அரைச்சிக் குடிச்சிட்டு நிம்மதியா போயி சேர்ந்துட்டா. ரெண்டு பொட்டைப் புள்ளைங்களயும் வச்சிகிட்டு என்ன செய்யறது சொல்லுங்க. பத்தாங்கிளாஸ்க்கு மேல என்னால படிக்க முடியலை. நம்ம அக்கா படிக்க நெனைச்சத பசங்களாச்சிம் படிக்கணும்னு ஒரு வைராக்கியம். புள்ளைங்கள தூக்கிகிட்டு இங்க வந்துட்டன். நாலு வருஷம் ஓடிப்போச்சி மேடம். பெரிய பொண்ணு ரெண்டாவது போவுது. சின்னது ஒன்னாவுது. அச்சு அசல் அக்கா மாதிரிதான் ரெண்டும். இதுங்கள வளர்த்து ஆளாக்கனா போதும்ன்னு ஒதுங்கி நின்னுட்டன் மேடம்அவனுடைய தீவிரம் அவளை மேற்கொண்டு பேசவிடவில்லை. அமைதியாக வேடிக்கை பார்த்தாள். சிறிது நேரத்தில் அவர்கள் வேலை முடிந்தது.

எல்லா சேனலும் வருதுங்க மேடம். எதாவது பிரச்சனைன்னா ஒரு போன் பண்ணுங்க. வந்து சரி பண்ணிடலாம்.

இயக்கியை தொலைக்காட்சிப் பெட்டியின் அருகிலேயே வைத்துவிட்டு புறப்படத் தயாரானார்கள். ஒரு நிமிஷம்என்றபடி கைப்பையைத் திறந்து நூறு ரூபாய் தாளொன்றை எடுத்து அவனிடம் பொதுவாகத் தந்தாள். பைக்குள் இருந்த ஐந்தாறு சாக்லெட்டுகளையும் சட்டென எடுத்து இந்தாங்க. இதயும் வச்சிக்குங்க. புள்ளைங்ககிட்ட குடுங்கஎன்று நீட்டினாள். அவன் சந்தோஷமாகச் சிரித்தபடி வாங்கிக்கொண்டான்.

கொழந்தைக்கும் ஆதரவா, உங்களுக்கும் தொணையா யாராச்சிம் கெடைப்பாங்களான்னு தேடிப் பாருங்க. அப்படியே விட்டுராதிங்க.புன்னகைத்தபடி அவனிடம் சொன்னாள். அந்த சௌடேஸ்வரி அம்மனே பொண்ணா பொறந்து வந்தாதான் அப்படி கெடைக்கும்அவன் தலையைக் குனிந்து கொண்டு சிரித்தான். பிறகு பாக்கலாம்மாஎன்றான். வணக்கம் சொல்லிவிட்டு இருவரும் வெளியேறினார்கள்.

கதவை மூடி தாழிட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள். நிறைந்திருந்த மனம் திடுமென வெறுமையில் கவிழ்ந்துவிட்டதில் குழப்பம் கொண்டாள். செல்வம் செல்வம் என்று அவள் உதடுகள் தாமாக முணுமுணுத்தன. தொலைக்காட்சி வந்துவிட்ட செய்தியை உடனே அவனுக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். கைப்பேசியை எடுத்து மறுபடியும் செல்வத்தின் எண்களை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். வளையத்துக்கு வெளியே இருக்கும் அதே பழைய செய்திதான் வந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு என்று மனம் சலித்தது.

புறப்பட்டுப்போன அன்று இருபதுக்கும் மேற்பட்ட முறைகள் அழைத்துப் பேசினான். குளித்தாயா? தண்ணீர் வந்ததா? சமைத்தாயா? என்ன சமைத்தாய்-? சாப்பிட்டாயா? பால் வந்ததா? காலையில் பனி எப்படி இருக்கிறது? குளிர்கிறதா? வெளியே எங்காவது சென்றாயா? ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தான். தொகுப்பு வீட்டருகே பத்து நிமிட நடையில் மிகப்பெரிய பூங்கா ஒன்று இருப்பதாகவும் அங்கே ஏராளமான பெண்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் ஊருக்குத் திரும்பியதும் அழைத்துச் செல்வதாகவும் தினந்தினமும் காலைநடை அவசியம் என்றும் முடிவில்லாமல் பேசினான். மறுநாள் கூட பத்து பதினைந்து முறைகள் விட்டு விட்டுப் பேசினான். நேற்றுக் காலை வந்த அழைப்புதான் கடைசி. அதற்கப்புறம் அவன் எண்ணிலிருந்து அழைப்பே இல்லை. இங்கிருந்து செல்லும் அழைப்புக்களால் அவன் எண்ணைத் தொடவே முடியவில்லை.

சேனல்களை மாற்றியபடியே இருந்ததில் ஜன்னலருகே புறா மீண்டும் வந்து அமர்ந்ததை அவள் கவனிக்கவில்லை. எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக அரிசிமணிகளைக் கொத்தியெடுக்கும் புறாவையே சிறிது நேரம் பார்த்தாள்.

கைப்பேசியின் அழைப்பொலி எழுந்தது. சட்டென ஆவலுடன் தாவி எடுத்தாள். தெரியாத எண்கள். உள்ளூர் அழைப்பு. செல்வம் இல்லை என்றதும் ஒரு கணம் மனம் சலித்தது. நிறுவனத்தின் அழைப்பாக இருக்குமோ என்றொரு சந்தேகம் வந்தது-. குழப்பத்துடன் பொத்தானை அழுத்தி ஹலோஎன்றாள். மறுமுனையில் பதில் இல்லை. திரும்பத் திரும்ப இரண்டு தரம் ஹலோஎன்றாள். பதிலே இல்லாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

எழுந்து நின்றாள். அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலவினாள். தலைக்குள் பத்து பதினைந்து வாகனங்கள் ஒரே நேரத்தில் உறுமிச் சீறுவதைப்போல இருந்தது.

சன் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்க, சமையலறைக்குச் சென்று காய்கறிகளை நறுக்கினாள். தமிழ் உரையாடல்கள் மனத்துக்குத் தெம்பாக இருந்தன. பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துக் கழுவி குக்கர் வைத்தாள். இன்னொரு சின்ன குக்கரில் பருப்பை வேகவைத்தாள். வேலையில் லயம் கூடிவந்த போது சின்னதாக உற்சாகம் படர்ந்தது. மெதுவாக ஒரு திரைப்படப் பாட்டை முணுமுணுத்தாள். அரைமணிநேரம் பொழுது போனதே தெரியவில்லை. சமையலை முடித்துவிட்டு கையைக் கழுவித் துடைத்தபடி கூடத்துக்கு வந்தாள். ஏதோ மேலைநாட்டு கூட்டு நடனக் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. ஈடுபாடின்றி பார்த்தவாறு அருகிலிருந்த வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அனிச்சையாக கைப்பேசியை எடுத்து செல்வத்தின் எண்களை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். தொடர்பு கிடைக்கவில்லை. தொடர்ச்சியான ஏமாற்றம் ஒருவித அச்சத்தை அவள் மனத்தில் படரவைத்தது-

கதவின் அழைப்புமணியைக் கேட்டு அவள் மனம் ஒருகணம் குழம்பியது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒலியென அவள் முதலில் நம்பினாள். இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் ஒலித்த பிறகுதான் அவளுக்குத் தன்னுணர்வு திரும்பியது. கலவரத்தோடு தாழிட்ட கதவைப் பார்த்தாள். அதற்குள் தடதடவென்று கதவு தொடர்ச்சியாகத் தட்டப்பட்டது.- ஒருவரல்ல, வந்திருப்பது பலர் என்று தோன்றியது. இந்த நேரத்தில் யார் என்று குழப்பத்தோடு நடந்துசென்று குமிழியில் கண்களை வைத்துப் பார்த்தாள். நரசிம்மன். அவனுக்குப் பின்னால் ஒரு கூட்டமே இருந்தது. ஒருகணம் அப்படியே செய்வதறியாமல் உறைந்து நின்றாள். இடைவிடாமல் கதவு தட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. பின்வாங்கி உடனே நாற்காலி அருகே வந்தாள். மறுகணம் படுக்கையறைக்கு ஓடினாள். அதற்கடுத்த கணமே வெளியேறி சமையலறைக்குள் தாவினாள். அடிவயிற்றில் நடுக்கம் பரவியது. வேர்வை பொங்கியது. ஐயோ என்று வாய்விட்டு அலறினாள். எவ்விதமான கோர்வையும் இல்லாமல் ஏதேதோ எண்ணங்கள் பரவி அலைந்தன. பணம், செல்வத்தின் நெருக்கம், வெற்றி பெற்ற நேர்காணல், மரங்களின் நிழல் விரிந்த பாதையில் செல்வத்துடன் சென்ற இரவு நடை. அனைத்தையும் கிழித்துக் கொண்டு மீண்டும் அந்த முகம் வந்து நின்றது. பொறுமையின்றி கோபம் துடிக்கும் கண்கள். வசைகள். கூச்சல்.

கதவ தெறடி தேவடியா. ஊருவிட்டு ஊரு வந்துட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சிட்டியா”.

அறைவது போல ஆத்திரமுடன் வெளிப்பட்ட குரல் தெளிவாக அவள் காதில் விழுந்தது. விசித்திரமான நடுக்கத்துடன் திரும்பி கூடத்துக்கு வந்தாள். பித்துபிடித்தவள் போல ஜன்னலோரம் அரிசி கொத்தும் புறாவைப் பார்த்தாள். அக்கணம் ஏராளமான முடிவுகளை அவள் மனம் திட்டமிட்டது. பால்கனியின் பக்கம் தாவி தென்படும் திசையில் படிகளைப் பற்றி இறங்கி தப்பி ஓடிவிடுவது ஒரு முடிவு. நாலாவது மாடியிலிருந்து எதையும் யோசிக்காமல் ஒரே தாவலாகத் தாவி பூமியில் தலைமோதிச் சிதற இறப்பது இன்னொரு முடிவு. காவல் துறையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபத்துக்கு உதவி கேட்பது மற்றொரு முடிவு. கண்மண் தெரியாமல் விழும் எல்லா அடிகளையும் வசைகளையும் வாங்கியபடி அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு சரணடைவது வேறொரு முடிவு. தன் தேவைகள் என்ன என்பதைத் தெளிவாகப் பேசி விளங்க வைத்து நல்லவனாக்கித் திருப்பி அனுப்புவது பிறிதொரு முடிவு.

எல்லாமே மாறிமாறிக் குழப்பியபடி இருக்க நடுங்கிய கைகளுடன் நாற்காலியின் மீது கழற்றிப் போட்ட துப்பட்டாவைத் தொட்டாள். மறுகணமே நாற்காலியை இழுத்து மின்விசிறிக்கு நேராகப் போட்டு துப்பட்டாவின் ஒரு முனையை விசிறித் தண்டோடு இறுக்கமாகப் பிணைத்து மறுமுனையைக் கழுத்தில் சுற்றிச் சுருக்கிட்டாள். செல்வம் செல்வம் என்று அவள் உதடுகள் முணுமுணுத்துகொண்டிருக்க, நாற்காலியை வேகமாக உதைத்துத் தள்ளினாள். கால்களும் கைகளும் கோணலாக இழுத்துத் துடிக்க, பிதுங்கித் தெறித்த கண்கள் அரிசியை கொத்தும் பறவையைப் பார்த்தபடி உறைந்தன.

 

(வடக்கு வாசல் இலக்கியமலர் 2008)