Home

Tuesday 23 March 2021

கோவை அய்யாமுத்து : துயரம் தீண்டாத வானம் - கட்டுரை

 

கதராடைகளை அணிந்து அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலும் அரசைப் புறக்கணித்தல், தேர்தலில் பங்கேற்காமல் சட்டசபையைப் புறக்கணித்தல் என மூன்றுவகையான புறக்கணிப்புகளை ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு செயல்திட்டமாக  காந்தியடிகள் வகுத்தளித்தார். தொடக்கத்தில் அரசு அவருடைய குரலைப் பொருட்படுத்தவில்லை. ஆயினும் அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு தேசம் முழுதும் பெருகிய மக்கள் ஆதரவைக் கண்டு திகைத்த அரசு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் கட்டுரைகளை எழுதியதாக காந்தியடிகள் மீது தேசதுரோகக் குற்றம் சுமத்தி 10.03.1922 அன்று கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. அவருக்கு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாண்டுகளில் சிறையில் அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்தது. அவசரமாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அவர் 05.02.1924 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

சிறைத்தண்டனை அவருடைய உடல்நிலையை பலவீனப்படுத்தியிருந்தாலும் மனவலிமையை சிதைக்கமுடியவில்லை. வலிமை என்பதை எப்போதும் உடலாற்றல் சார்ந்ததாக அன்றி வெல்லமுடியாத மன உறுதி சார்ந்ததென உறுதியோடு நம்பிய காந்தியடிகள் அறவழியில் தியாக உணர்வோடு கதராடைகள் உடுத்தி எளிய வாழ்க்கையை வாழ்வதன் வழியாக அரசுடன் ஒத்துழைக்காமல் வாழும்படி மக்களை நோக்கி மீண்டும் உரையாடலைத் தொடங்கினார். 26.12.1924 அன்று பெல்காம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அதைப்பற்றி உரையாற்றினார். அன்று தேர்தலில் பங்கெடுக்கும் சுயராஜ்ஜியக்கட்சியினரின் முடிவை  அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதே நேரத்தில் அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணித்து நூல் நூற்பதற்கும் கதராடைகளை அணிவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். நாடு முழுக்க காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் 1925ஆம் ஆண்டுக்குரிய சந்தாத்தொகையை பணத்துக்குப் பதிலாக இருபதாயிரம் அடி நீளத்துக்கு நூலை நூற்று சிட்டமாக மட்டுமே மூன்று மாத காலத்துக்குள் கண்டிப்பாகச் செலுத்தவேண்டும் என்றொரு விதியை உருவாக்கினார். அன்று காந்தியடிகள் உரையால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் .அய்யாமுத்து. 

கோவை நகரின் பிரதிநிதியாக மாநாட்டுக்குச் சென்றிருந்தார் அவர். 1921இல் காந்தியடிகள் கோவைக்கு வந்திருந்தபோதே அவருடைய உரையால் கவரப்பட்டு, ரோவர் அன்ட் கம்பெனி என்னும் பெயரில் தான் நடத்திவந்த  அயல்நாட்டுப் பொருட்கள் விற்கும் கடையை அன்றே மூடிவிட்டு ரங்கூனுக்குச் சென்றுவிட்டார் அவர். 1923இல் ஊருக்குத் திரும்பிவந்து தன் மனைவியுடன் காங்கிரஸில் சேர்ந்து நூல்நூற்கத் தொடங்கினார். கதராடைகளைச் சுமந்து சென்று விற்பனை செய்வதன் வழியாக கதரின் புகழைப் பரப்புவதற்குப் பாடுபட்டார். அன்று முதல் தமிழ்நாட்டில் கதர் என்றால் அய்யாமுத்து, அய்யாமுத்து என்றால் கதர் என்ற நிலை உருவாகியது. 1924இல் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் தடையை மீறிப் பேசியதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறையில் கழித்தார். விடுதலைக்குப் பிறகு திருச்செங்கோடில் இராஜாஜியின் ஆர்வத்தால் உருவாகிக்கொண்டிருந்த காந்தி ஆசிரமத்தை நிறுவுவதிலும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்துவதிலும் உதவினார்.

பெல்காமிலிருந்து திரும்பியதும் பொள்ளாச்சி வட்ட அரசியல் மாநாட்டை தன் மனைவியின் ஊரான கிணத்துக்கடவு என்னும் இடத்தில் இரண்டு நாட்கள் நடத்தினார் அய்யாமுத்து. தமிழகத்திலிருந்து பல தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கதரின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்., மாநாட்டை நடத்தியதன் மூலம் கிணத்துக்கடவைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்தில் வசித்துவந்த பலருடைய நட்பை அவர் பெற்றார். நண்பர்கள் துணையோடு ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்துக்குச் சென்று மக்களைத் திரட்டி சின்னச்சின்ன பொதுக்கூட்டங்கள் நடத்தி நிர்மாணப்பணிகளைப் பற்றி எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட்டார். தம் பகுதியை எப்படியாவது கதர்க்கோட்டையாக மாற்றவேண்டும் என்ற விழைவுடன் அவர் ஓய்வின்றி பாடுபட்டார்.

எல்லோருக்கும் முன்மாதிரியாக ஒவ்வொரு நாளும் அவரும் அவர் மனைவியும் தம் வீட்டில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து இராட்டையில் நூல் நூற்றனர். அதை நேரில் கண்ட ஊரார்கள் படிப்படியாக தம் வீடுகளிலும் நூல்நூற்கத் தொடங்கினர். உள்ளூரிலேயே இரண்டு தறிகளை ஏற்பாடு செய்து, நெசவில் ஈடுபடுத்தினார். திருப்பூரிலிருந்து கதராடைகளைக் கொண்டு வந்து, நண்பருடைய வீட்டு வாசலிலேயே கடைவிரித்து விற்பனையைத் தொடங்கினார். மாலை வேளைகளில் மதுக்கடைகள் முன்பாக மதுவினால் உருவாகும் கேடுகளைப்பற்றி எடுத்துரைக்கும் பரப்புரையில் ஈடுபட்டார். அய்யாமுத்துவின் அயராத உழைப்பின் காரணமாக அப்பகுதி முழுதும் கதருக்கு ஆதரவாக மாறியது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் கதராடைகள் வாங்கி அணியத் தொடங்கினர்.

தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் பொதுவான வகையில் அப்போது அகிலபாரத சர்க்கா சங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அய்யாமுத்துவின் அர்ப்பணிப்பைக் கண்ட சர்க்கா சங்கச் செயலாளர் ஒருமுறை அவரைச் சந்தித்து கதர்நெசவு நிகழும் கிராமங்களுக்குச் சென்று, அங்கு நிகழும் செயல்பாடுகளைக் கவனித்து திருத்தி மேம்படுத்தும் பரிசோதகர் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  இரண்டு மூன்று மாதங்களில் எல்லாக் கிளைகளும் எல்லா நெசவாளிகளும் அவருக்கு நெருக்கமானார்கள். எர்ணாகுளத்தில் ஒரு புதிய கிளையைத் தொடங்கி செயல்பட வழிவகுத்தார். ஒரு கட்டத்தில் கானூர் கதர் உற்பத்திச்சாலையின் நிர்வாகப் பொறுப்பு அவரைத் தேடி வந்தது.

கானூரில் நூல் நூற்கும் ஆர்வமுள்ளவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தனர். ஆனால் நூல் உற்பத்தியாகும் அளவுக்கு நெசவு செய்பவர்கள் குறைவாக இருந்தார்கள். நெசவாளர்கள் வெளியூரிலிருந்து வரவேண்டியிருந்தது. நெசவாளர்களுக்கு உதவுவதற்காக கானூர்க்கிளையை புஞ்சைப்புளியம்பட்டி என்னும் கிராமத்துக்கு மாற்றினார் அய்யாமுத்து. நெய்யப்பட்ட துணிகளை சத்தியமங்கலத்துக்கு அருகிலிருந்த பவானியாற்றுப் படுகையில் சுத்தம் செய்யவும் சலவை செய்து விலைவிவரத்தாள் ஒட்டவும் கட்டு கட்டி விற்பனைக்கு திருப்பூர் அனுப்பவும் புஞ்சைப்புளியம்பட்டி பல வகைகளில் பொருத்தமாக இருந்தது. அய்யாமுத்துவின் இடையறாத உழைப்பின் பயனாக, கிளை தயாரித்த ஆடைகளுக்கு சந்தையில் நல்ல மதிப்பை உருவானது.

ஒருமுறை இராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் நெய்யப்பட்ட நூல் மூட்டைமூட்டைகளாகத் தேங்கிவிட்டன. அந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கு  பொதுவாக முரட்டுநூலை நூற்கும் பயிற்சியில் மட்டுமே தேர்ந்தவர்களாக இருந்தனர். துப்பட்டிகள், படுக்கைவிரிப்புகள், துண்டுகள் என பலவற்றை நெய்தபிறகும் ஏராளமான மூட்டைகள் தேங்கியிருந்தன. அவற்றைச் சேமித்துவைக்கத் தகுதியான இடமுமில்லை. பேரிழப்பு நேர்ந்துவிடுமோ என ஆசிரமத்தினர் கவலையில் மூழ்கியிருந்த சமயத்தில் அங்கே சென்ற அய்யாமுத்து தேங்கிய நூல்மூட்டைக்கு விலைபேசி முடித்து பவானிக்குக் கொண்டு சென்று புதுவகையான சாயத்தில் தோய்த்து உலர்த்தி புதிய வடிவமைப்புடன் ஜமுக்காளங்களைத் தயார்செய்தார். தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் அவை வேகமாக விற்றுத் தீர்ந்துவிட, அவருடைய கிளைக்கு நல்ல வருமானம் கிடைத்தது. சமயம் வாய்க்கும்போதெல்லாம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராங்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து கதரைப்பற்றி எடுத்துரைத்து காங்கிரஸின்பக்கம் அவர்களைத் திசைதிருப்பினார். புஞ்சைப்புளியம்பட்டியிலேயே தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகள் கல்வி கற்க ஒரு பள்ளியைத் தொடங்கினார்.

29.01.1929 அன்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேரு நிறைவேற்றிய சுதந்திரத் தீர்மானத்தை உறுதிசெய்யும் விதமாக 26.01.1930 அன்று நாடெங்கும் கொடியேற்றி சுதந்திரநாளாகக் கொண்டாடவேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது. அதையொட்டி எல்லா இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரநாள் கொண்டாடப்பட்டது. எங்கெங்கும் கதரைப்பற்றிய பேச்சு பெருகியது. கதராடைகளுக்கான தேவை பெருகியது. பல விற்பனை நிலையங்களிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன. கதர்ப்பிரச்சாரத்தோடு கள்ளுக்கடை மறியல்களிலும் அய்யாமுத்து ஈடுபட்டார். அதன் மூலம் கடைமுதலாளிகளின் எதிர்ப்புகளுக்கு அவர் இலக்காக வேண்டியிருந்தது. எப்படியாவது அவரை சிறையில் தள்ளிவிட வேண்டும் என்று பலரும் பலமுறை முயற்சி செய்தனர். அவர் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் யாருமின்றி, அவரே தம் வழக்குகளுக்காக வாதாடி வெற்றி பெற்றார். ஒருமுறை ஒரு நீதிபதி எந்தப் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளக் கூடாது என தடை விதித்திருந்தார். தடையை மீறி அவர் கோவையில் நிகழ்ந்த ஒரு மாநாட்டில் பேசியதால் அய்யாமுத்துக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1930 தண்டியிலும் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தன் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையான அய்யாமுத்து மீண்டும் கள், சாராயக்கடைகளின் முன்பும் அயல்நாட்டு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பாகவும் நண்பர்களைத் திரட்டிச் சென்று மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார். அந்த மறியலில் அய்யாமுத்து தன் மனைவியையும் ஈடுபடுத்தி சிறைபுகுந்தார்.  சில மாதங்களுக்குப் பிறகு காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சிறையிலிருந்த சத்தியாகிரகிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தங்குதடையின்றி மக்கள் தம் தேவைக்காக கடற்கரையில் விளையும் உப்பை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கள், சாராயக்கடைகள், துணிக்கடைகள் முன்பாக அமைதியான முறையில் மறியல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க லண்டனுக்குச் சென்ற காந்தியடிகள் ஏமாற்றத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார். அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தது அரசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசமெங்கும் பல தலைவர்களையும் கைது செய்தது. அதைத் தொடர்ந்து எங்கெங்கும் அடக்குமுறை தாண்டவமாடியது. பம்பாயின் செளபாத்திக்கடற்கரையில் கூடியிருந்த மக்கள் காவலர்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். மறுநாள் அதிகாலையில் அய்யாமுத்துவின் வீட்டுக்கு வந்த காவலர் ஒருவர் எந்தப் பொதுக்கூட்டத்தையும் நடத்தவோ பேசவோ கூடாது என ஒரு தடையுத்தரவை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் அய்யாமுத்துவால் அமைதியாக இருக்கமுடியவில்லை. பஞ்சைப்புளியம்பட்டியிலேயே ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஈரோடு, திருச்சி, கொடுமுடி, காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், இராஜபாளையம், திருநெல்வேலி என தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து கண்டனக்கூட்டங்களில் உரையாற்றினார். அதன் விளைவாக ஊருக்குத் திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாகவே பெண்களைத் திரட்டிக்கொண்டு தேசியக்கொடியை ஏந்தி தெருவில் ஊர்வலம் சென்றதற்காக அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

ஓராண்டுக்காலம் சிறைத்தண்டனை முடிந்து விடுதலையானதும் அகிலபாரத சர்க்கா சங்கத்தின் தமிழக, கேரளப் பகுதியைச் சேர்ந்த கிளைகளுக்குச் செயலாளராக அய்யாமுத்து பொறுப்பேற்றார். கேரளத்தில் இருபது கிளைகளும் தமிழகத்தில் இருபத்தெட்டு கிளைகளும் அப்போது செயல்பட்டு வந்தன. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். பல சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கிவந்தன. கோவையில் மட்டும் சுற்றுவட்டாரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட உற்பத்திச்சாலைகள் இருந்தன. எல்லாக் கிளைகளுக்கும் நடுநாயகமாக விளங்கியது திருப்பூர் வஸ்திராலயம். எல்லா இடங்களிலும் உற்பத்தியாகும் கதரும் உபரிநூலும் வஸ்திராலயத்துக்கு வந்துவிடும். தரம் பிரித்து சலவை செய்வதும் சாயமேற்றுவதும் வெளியூரிலிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதும் வஸ்திராலயத்தின் வேலையாகும்.

அய்யாமுத்து பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது பல கிளைகள் திறமையுடன் செயல்படவில்லை. திறமையாகச் செயல்பட்ட கிளைகளில் கணக்குவழக்கு சரியாக இல்லை. கதரின் வழியாக நாட்டின் கெளரவத்தை உயர்த்தும் கனவு என்பதே முற்றிலும் இல்லை. மதுநுட்பமும் திறனும் வாய்ந்த அய்யாமுத்து படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக தீர்த்து வைத்தார். இதனால் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்தில் இருப்பவர்கள் வரைக்கும் பலருடைய கசப்புக்கும் பகைக்கும் ஆளாக நேர்ந்தது. ஆனால் கதரின் பெருமையை உயர்த்துவதையும் சங்கத்தின் வருவாயைப் பெருக்குவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அய்யாமுத்து அதைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை. அவருடைய கடுமையான கண்காணிப்பின் வழியாகவும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாலும் உற்பத்தியையும் விற்பனையையும் சம அளவில் துரிதப்படுத்தியதாலும், இடைத்தரகர்களை ஒழித்ததாலும் அவர்   பொறுப்பேற்றுக்கொண்ட முதலாண்டின் முடிவிலேயே நஷ்டத்திலிருந்து மீண்டு சங்கம் தன் ஆறாண்டு கால வரலாற்றில் முதன்முதலாக இலாபத்தின் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது.

இராட்டைகளின் நூற்பு வேகத்தை அதிகரிப்பதற்காக அய்யாமுத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது மிகுந்த பயனை அளித்தது. இராட்டையில் பெரிய சக்கரத்துக்கும் சிறிய கதிருக்கும் நடுவில் இரண்டு வட்டைகளால் இணைக்கப்பட்ட மற்றொரு சக்கரத்தைப் பூட்டுவதன் வழியாக நூற்புவேகம் பெருகும் என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. ஆனால் அவருக்குத் தேவையான சக்கரத்தைத் தயாரித்துக்கொடுக்க பெரிய தொழிற்சாலைகள் எதுவும் தயாராகவில்லை. இதனால் நண்பர்கள் உதவியுடன் அவரே ஒரு சின்னத் தொழிற்பட்டறையை நிறுவி தமக்குத் தேவையான ஐம்பதாயிரம் விசைச்சக்கரங்களைத் தயாரித்து தமக்கு நூல் நூற்று அளிக்கும் கிராமங்களுக்குச் சென்று அவர்களுடைய இராட்டைகளில் பொருத்தினார்.  இப்படி ஒவ்வொரு சிக்கலான கட்டத்திலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அதற்குப் பிறகே நூல் உற்பத்தி பெருகியது. நூற்பு வேகம், நூற்பு சமநிலை, நூலின் வலிமை ஆகிய அம்சங்களைப் பிரபலப்படுத்தும் வகையில் நூற்புப்போட்டிகள் வைத்து பரிசளிப்பதன் வழியாக நூல்நூற்பவர்களுக்கு ஊக்கம் பிறக்க வழிவகுத்தார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனை வஸ்திராலயங்கள் கூடுதல் நேரம் பணியாற்றும்படி செய்தார். அந்த நாட்களில் சத்தியமூர்த்தி, தி.சே.செள.ராஜன், வைத்தியநாத ஐயர் போன்ற தலைவர்களை விற்பனை நிலையங்களுக்கு வரவழைத்து வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஏற்பாடு செய்தார். எங்கெங்கு கதருக்கு ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் கட்சி வேறுபாடின்றி தலைவர்களை நாடி விற்பனையைப் பெருக்கினார். பொருட்காட்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார். வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவில் மாநாடுகள் நடைபெறும்போது, அங்கெல்லாம் கதராடைகளை விற்பனை செய்யும் கடைகளைத் திறந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். பத்திரிகையாளர்களை கதர் உற்பத்தி மையங்களுக்கு வரவழைத்து, அவற்றைப்பற்றிய செய்திகளை எழுதும்படி கேட்டுக்கொண்டார். கதருக்கென்றே குடிநூல் என்னும் மாதப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தினார். இலட்சக்கணக்கில் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்தி இலாபமீட்டும் மையமாக மாற்றியது அய்யாமுத்துவின் தனிப்பட்ட சாதனை. அவருக்குள் ஊறியிருந்த தேசபக்தியும் கதர்பக்தியும் மட்டுமே அதற்குக் காரணங்கள்.

06.02.1934 அன்று கோவையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர்   திரண்டிருந்த கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். கோவை நகரில் கதரியக்கத்துக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து தனக்கு துயரம் தரும் ஒரு செய்தியையும் பகிர்ந்துகொண்டார். அன்று கோவையை அடைவதற்கு முன்னால் நாலைந்து மைல்கள் தொலைவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் வண்டியை நிறுத்தி தன்னைச் சந்தித்ததைப் பற்றித் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் தம் கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதிக்காரர்களின் அடக்குமுறை அதிகரிப்பதாகவும் தம் வேலைவாய்ப்புகளைத் தடுப்பதாகவும் கூறிய அச்சகோதரர்கள் அழுததாகவும் சொன்னார்.  தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது ஒருவகையில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே தூய்மைப்படுத்திக்கொள்ளும் பிராயச்சித்த முயற்சியாகும். தம் இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் இந்தப் பிராயச்சித்த முயற்சியில் அர்ப்பணிப்புனர்வோடு ஈடுபடவேண்டும் என்று தெரிவித்த காந்தியடிகள் உடனடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்று இரவு நவாப் ராஜமாணிக்கம் நடத்திய நந்தனார் கதை நாடகத்தைக் காண்பதற்காக அய்யாமுத்துவுடன் காந்தியடிகள் சென்றார். அந்த அரங்கில் அவருக்கு அரிஜன சேவா நிதிக்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் அளிக்கப்பட்டது. காந்தியடிகள் தமக்கு வாசித்துக் கொடுக்கப்பட்ட  வரவேற்புப் பத்திரத்தை ஏலம் விட்டபோது அதை பன்னிரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார் அய்யாமுத்து. இந்த நாடகக்குழுவின் முயற்சி மக்களுக்கு நலம் பயக்குமென நம்புவதாக அந்தப் பாராட்டுப் பத்திரத்திலேயே எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார் காந்தியடிகள்.

சர்க்கா சங்கத்திலிருந்து கேரளக் கிளைகளைப் பிரித்து தனியமைப்பொன்று உருவாக்கப்படும் என்னும் அகிலபாரத சங்கத்தின் தீர்மானத்தை ஒட்டி 1934-35 நிதியாண்டின் முடிவில் ஒரு தனி அமைப்பு உருவானது. அய்யாமுத்து தன்னுடன் தங்கி செயலாற்றி வந்த கேசவன் கர்த்தா என்பவரை அந்தப் புதிய அமைப்புக்குப் பொறுப்பாளராக அனுப்பிவைத்தார். தமிழகக்கிளைகளுக்கு மட்டும் அய்யாமுத்து பொறுப்பாளராக இருந்தார்.

பொறுப்பேற்றுக்கொண்ட முதல் ஆண்டிலேயே நஷ்டத்தை முற்றிலும் தவிர்த்து சங்கம் இலாபக்கணக்கில் அடியெடுத்து வைத்தது. ஒவ்வொரு ஆண்டும் அந்த இலாபக்கணக்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. அதற்கு அவருடைய கறாரான நிர்வாகத்திறனும் கண்காணிப்பும் மட்டுமே காரணங்கள். ஒவ்வொரு கிளையிலிருந்தும் வரவுசெலவுக் குறிப்புகள் ஒவ்வொரு நாளும் தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்பதிலும் ஒவ்வொரு நாளும் விற்பனைத்தொகை வங்கியில் செலுத்தப்படவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. அதுவரை அந்தப் பணத்தை தாராளமாக பயன்படுத்தி வந்தவர்கள் அவரைப் பகையாக நினைக்கத் தொடங்கினர். அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அவரைப்பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி முதலில் அவருடைய பெயருக்கும் புகழுக்கும் தீங்கு விளைவிக்க முயற்சி செய்தனர். அடுத்து அவரைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பொய்ப்புகார்களை எழுதி மத்திய சர்க்கா சங்கத்துக்கு அனுப்பிவைத்தனர். சிற்சில சமயங்களில் காந்தியடிகளுக்கே நேரடியாக கடிதங்களை எழுதினர்.  ஒவ்வொரு முறையும் அவர் மேலிடத்துக்கு விளக்கம் கொடுத்து மீளவேண்டியிருந்தது. ஒரு நிர்வாகத்தை தூய்மையாக நடத்த விழையும் முனைப்புக்கு எதிராக பெருகிவரும் வெறுப்பை அவரால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை. இருப்பினும் தன் உயிர்மூச்சான கதரியக்கத்தின் நலனை மனத்தில் நினைத்து அமைதி காத்தார்.

1935-36 நிதியாண்டிலும் கதர்விற்பனை பெருகி நல்ல இலாபம் கிடைத்திருந்தது. காந்தியடிகளின் தலைமையில் 09.02.1936 அன்று காந்தியடிகளின் தலைமையில் கூடிய அகில பாரத சர்க்கா சங்கம் தமிழ்நாட்டுக் கிளைகளின் செயலராக மீண்டும் அய்யாமுத்துவையே தேர்ந்தெடுத்தது. அவருக்கு எதிரான பகைமையுணர்வும் கண்ணுக்குத் தென்படாமல் வளரத் தொடங்கியது.

அப்போது, அச்சு, சாய வேலைகள் யாவும் திருப்பூரில் தொடக்கத்தில் ஒரு வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்தது. பெருகிவரும் உற்பத்திக்கு இணையாக அங்கு இடவசதியும் தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. அதனால் சர்க்கா சங்கத்துக்கென்றே சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி கட்டடங்களைக் கட்டி அச்சு சாய வேலைகளுடன் கைராட்டினங்கள் செய்தல், கதர்த்தொண்டர்களுக்குப் பயிற்சியளித்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம் என்று நினைத்தார் அய்யாமுத்து. இதற்காக அலைந்து திரிந்து திருப்பூர் - அவினாசி சாலையில் அவினாசிலிங்ம்பாளையம் என்னும் ஊரில் சங்கத்தின் பெயரில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி அந்த இடத்துக்கு காந்தி நகர் என்று பெயர்சூட்டினார். 11.10.1936 அன்று கோவைக்கு வருகை புரிந்த நேருவை அங்கு வரவழைத்து அந்தப் புதிய நகருக்கு அடிக்கல் நாட்டவைத்தார். அதைத் தொடர்ந்து கட்டடவேலை உடனே தொடங்கியது.

விலை மலிவாக இருந்ததால் அதற்கு அருகிலேயே மேலும் நான்கு ஏக்கர் நிலத்தை தன் சொந்தப் பணத்தில் வாங்கிய அய்யாமுத்து அதை எட்டு சின்னச்சின்ன மனைகளாகப் பிரித்து சங்க ஊழியர்களுக்கு விற்றார். மற்றவர்களைப்போல தனக்கும் ஒரு வீட்டை அங்கு கட்டிக்கொண்டு குடியேறினார். அங்குள்ள ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக காந்தி வித்யாலயம் என்னும் பெயரில் ஒரு பள்ளியையும் தொடங்கினார். இதற்கிடையில் சேலம், மதுரை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்ற கதர் சுதேசிப்பொருட்காட்சியில் விற்பனை மையங்களை உருவாக்கி கதராடைகளின் விற்பனைக்காகவும் பாடுபட்டார். கதரைப்பற்றிய செய்திகளை மக்களிடையில் பரப்பும் எண்ணத்தோடு 1937இல் குடிநூல் என்னும் மாத இதழைத் தொடங்கினார்.

அய்யாமுத்துவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்கமுடியாத ஒருவர் முதலில் அவருடைய நடத்தையைப்பற்றி  தப்பும் தவறுமாக உயர்மட்டத் தலைமைக்கு கடிதம் எழுதினார். வேறு அலுவல் தொடர்பாக தென்னகத்துக்கு வந்த தலைமைப்பொறுப்பாளர் தனியறையில் அய்யாமுத்துவிடம் விசாரணை நடத்தினார். உண்மை நிலவரத்தை அய்யாமுத்து தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. ஒருமுறை பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் கதர்விற்பனைக்காக சரக்குகளை எடுத்துச் சென்ற விற்பனை ஊழியர் திரும்பிவந்து அய்யாமுத்து பற்றி காந்தியடிகள் கேலியும் கிண்டலோடும் சொன்னதாக அவரிடமே அரைகுறையாகத் தெரிவித்தார். அது அவரை பெரிதும் புண்படுத்திவிட்டது. இறுதியில் காந்தியடிகளுக்கே கடிதம் எழுதி முழுத்தகவலையும் தெரிந்துகொண்டு தெளிவடைய வேண்டியிருந்தது.

.19.02.1938 அன்று ஹரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாகவே சென்று விற்பனை மையங்களை ஒழுங்குபடுத்தினார் அய்யாமுத்து. புடவைகள் மீது விதம்விதமான வடிவமைப்புகளை அச்சடிப்பதற்கு வசதியாக அச்சுக்கட்டைகள் தயாரிக்கும் தொழிலை அந்த ஊரில் குடிசைத்தொழில் போலச் செய்துவந்தார்கள். அவர்கள் வசிக்கும் தெருவுக்குச் சென்று நேரிடையாகப் பார்வையிட்டார். வெள்ளைக் கதர்ப்புடவைகளுக்குப் பொருத்தமான வடிவமைப்புக்குப் பயன்படக்கூடிய அச்சுக்கட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் கூடுதலான உற்பத்திக்கு தமிழ்நாட்டுக் கிளைக்கு கூடுதலான மூலதனம் தேவை என்றும் தெரிவித்தார். காந்தியடிகள் ஒரு கதர் யாத்திரையை மேற்கொண்டால் கதரியக்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் திரட்டிவிடமுடியும் என்று ஆலோசனை வழங்கினார். அய்யாமுத்துவின் ஆர்வத்தைக் கண்டு புன்னகைத்த காந்தியடிகள் தற்போதைய வேலை நெருக்கடிகளுக்கு நடுவில் யாத்திரைக்கு நேரமில்லை என்று தெரிவித்தார். பிறகு ஒரிசாவில் தெலாங் என்னுமிடத்தில் ஒரு மாதம் கழித்து நிகழவிருந்த காந்தி சேவா சங்கக் கூட்டத்துக்கு வருமாறும் அங்கே தமிழ்நாட்டுக் கிளைக்காக கடன் கிடைக்க வழிவகுத்துக் கொடுக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

25.03.1938 முதல் 31.03.1938 வரை தெலாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அய்யாமுத்து கலந்துகொண்டார். தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத கோவில்களுக்குச் செல்வதில்லை என்று தான் பூண்டிருந்த உறுதிக்கு மாறாக தன் மனைவி கஸ்தூர்பாவும் தன் செயலர் மகாதேவ தேசாயும் சென்று வந்ததை ஒட்டி  காந்தியடிகள் கடிந்து பேசினார். ரத்த அழுத்த அளவு அதிகரித்துவிட்டதால் அவரால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. மறுநாள்தான் கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காந்தி சேவா சங்க நிதியிலிருந்து தமிழ்நாடு சர்க்கா சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்குவதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதுமட்டுமன்றி, கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் ஐம்பதினாயிரம் ரூபாய் வரைக்கும் ஏதேனும் ஒரு வங்கியில் கடனாகப் பெறலாம் என்பதற்குரிய ஆணையையும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார் காந்தியடிகள். சென்ற காரியம் மனநிறைவுடன் முடிந்ததென்றாலும் காந்தியடிகளின் உறுதியை மறந்து கோவிலுக்குள் சென்றுவந்தது பற்றிய குற்ற உணர்வுடன் ஊருக்குத் திரும்பினார் அய்யாமுத்து.

ஊருக்குத் திரும்பியதுமே ஈரோட்டில் நடைபெற்று வந்த லண்டன் மிஷன் கோடைக்கால ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று உரையாற்ற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘இந்தியக்கல்வியில் கைராட்டினம்என்னும் தலைப்பில் வார்தா கல்வித்திட்டத்தை  விளக்கியும் அரசியல் பொருளாதார சமுதாய அமைப்பில் கைராட்டினத்தால் விளையும் பயன்கள் பற்றியும் ஒன்றரை மணி நேரம் விரிவாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கீழக்காடு, பூந்தோட்டம், அம்மாபேட்டை போன்ற இடங்களில் நடைபெற்ற மாநாட்டுப்பந்தல்களில் கதர்க்கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்திமுடித்தார். 

1939ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுதும் பஞ்சநிலை நிலவியது. வருமானத்துக்கான வழியென நினைத்து நூற்பதற்கு ஏராளமான பேர் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் நூலையே கூலி கொடுத்து வாங்கமுடியாமல் சர்க்கா சங்கம் திணறியது. வாங்கிய நூலைப் பாதுகாக்கவும் போதிய கட்டடவசதியும் இல்லை. இந்தச் சூழலில் நூற்புக்கூலியை உயர்த்திக் கொடுக்கும்படி ஒரு கடிதம் வந்தது. அன்றைய பொருளாதார நிலையில் கூலியை உயர்த்தியளிப்பது நல்லதல்ல என்றும் சங்கம் தன் ஆணையை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் பொறுப்பிலிருந்து தான் விலகிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினை சற்றே ஓய்ந்த நிலையில்  மீண்டும் மற்றொரு பிரச்சினை முளைத்தது. சென்னையில் ஆண்டுத்தணிக்கை நடத்தும் குழு வழக்கமாக தனக்கு ஏற்படும் ஐயங்களுக்கு செயலரிடம் விளக்கம் கேட்டு பதிவு செய்துகொள்வதே மரபாக இருக்கும் நிலையில் அய்யாமுத்து மீதான அவதூறுகளையே ஐயங்களாக மாற்றிப் புனைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை நேரிடையாக காந்தியடிகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து விட்டது. காந்தியடிகளும் அவசரப்பட்டு அய்யாமுத்துவை உடனடியாக பொறுப்பிலிருந்து விடுவிக்கும் ஆணையில் கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டார். பதவி முக்கியமல்ல என்றாலும் விளக்கம் கொடுக்கவேண்டியது முக்கியம் என்ற எண்ணத்தில் காந்தியடிகளை நேரில் சென்று சந்தித்தார் அய்யாமுத்து. காந்தியடிகள் தன்வசம் இருந்த தணிக்கையறிக்கையை அவரிடம் கொடுத்தார். தணிக்கைக்குழுவின் மரபுமீறலைச் சுட்டிக்காட்டிய அய்யாமுத்து எல்லா ஐயங்களுக்கும் விரிவாக விளக்கமளித்தார். அவசரப்பட்டு பதவிநீக்கக் கடிதத்தில் கையெழுத்து போட்டதற்கு வருத்தம் தெரிவித்த காந்தியடிகள் ஊருக்குத் திரும்பிச் சென்று செயலராக பணிகளைத் தொடரும்படி கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்தார். ஒவ்வொரு முறையும் தன் நேர்மையை நிரூபிக்கவேண்டிய சூழல்கள் உருவாவதையொட்டி உள்ளூர அய்யாமுத்துவின் மனத்தில் சலிப்பு படரத் தொடங்கியது. அதையும் மீறி கதரியக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே அவர் சோர்வின்றி  தொடர்ந்து செயல்பட்டார்.

காந்தியடிகளின் எழுபத்தோராவது பிறந்தநாள் வார்தாவிலேயே கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் ஒரு பகுதியாக கதர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கதரியக்கத் தொண்டர்கள் வந்து கண்காட்சியில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து அய்யாமுத்து சென்று விற்பனை நிலையத்தைத் திறந்தார். பிரார்த்தனைக் கூட்டத்துக்குக் கிளம்பும் முன்பு காந்தியடிகளைச் சந்தித்து உரையாடுவதற்குச் சென்றார் அய்யாமுத்து. தன் கட்டுப்பாட்டில் உள்ள  கிளைகளைக் கண்காணிக்க அடிக்கடி சென்று வருவதற்கு வசதியாக அவர் ஒரு கார் வாங்கிவைத்திருந்த நேரம் அது. வழக்கம்போல யாரோ அச்செய்தியை தப்பும் தவறுமாக அவர் காதுவரைக்கும் கொண்டு சென்றுவிட்டனர். குடும்பநலத்தையும் சங்கநலத்தையும் விசாரித்த பிறகு காந்தியடிகள் மெதுவாக கார் விஷயத்தைத் தொட்டார். எளிய வாழ்வை மேற்கொண்டவர்களால்தான் ஏழ்மையில் மூழ்கியிருப்பவர்களுக்கு சிறப்பான சேவை செய்யமுடியும் என்றும் காரை விற்றுவிடுமாறும் காந்தியடிகள் சொன்னார். அய்யாமுத்து சொன்ன விளக்கங்கள் எதுவும் அவர்முன் எடுபடவில்லை. வேறு வழியின்றி காந்தியடிகளின் கட்டளைக்கு இணங்கி ஊர் திரும்பியதும் முதல் வேலையாக தனது காரை விற்றார்.

கதர் மாநாடுகள், கதர் கூப்பன் விற்பனை, கதர் கண்காட்சிகள் என அடுத்தடுத்து அவர் தொடர்ந்து இயங்கியபடி இருந்தாலும் 1940 ஆம் ஆண்டு மீண்டும் பிரச்சினை முளைத்தது. திருப்பூர் காந்தி நகரில் அவர் உருவாக்கிக்கொண்டிருந்த பட்டறக்கூடத்துக்கான நிலத்தை வாங்கியது தொடர்பாக யாரோ பிழையான தகவல்களை காந்தியடிகள் வரைக்கும் கொண்டுசென்றனர். அவரும் ஏழை நெசவாளர்களின் பணத்தை கல்லிலும் காரையிலும் முடக்கவேண்டாம் என்று அய்யாமுத்துவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அது அவரை மிகவும் புண்படுத்தியது. தன் சேவையின் மதிப்பை உணராதவர்கள் நடுவில் தொடர்ந்து பணியாற்றுவதை அவர் மனம் விரும்பவில்லை. அக்கணமே எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவிக்கும்படி அவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். புதிதாக வந்தவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அங்கே தான் கட்டியிருந்த வீட்டையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு கோவைக்குச் சென்று ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

காலமெல்லாம் கதரோடு வாழ்ந்த அவரால் கதரிலிருந்து விலகியிருக்க முடியவில்லை. வெள்ளக்கோவிலில் ஒரு கடையைத் தொடங்கி கதராடைகளை வாங்கி விற்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கதராடை கொள்முதலில் பிரச்சினை ஏற்பட்ட போது கைத்தறி ஆடைகளை விற்றார். ஓய்வு நேரங்களில் நாடகங்கள் எழுதினார். திரைப்படத்துக்கு உரையாடலும் பாட்டும் எழுதினார். காந்தியடிகள் பற்றியும் இராஜாஜி பற்றியும் தனித்தனியாக நூல்களை எழுதி வெளியிட்டார். 1950இல் நாசிக் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியதிலிருந்து அரசியலிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தார். அவர் மனம் இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பியது. கோதைவாடி என்னும் ஊரில் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கினார்.

சுதந்திர தின வெள்ளிவிழா 1972இல் கொண்டாடப்பட்டபோது தாமிரப்பட்டயங்கள் வழங்கி கெளரவிப்பதற்காக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் தில்லிக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து சென்ற தியாகிகளில் அய்யாமுத்துவும் ஒருவர். ஆனால் அக்கறையோடு வரவேற்று உபசரித்து உரையாடி உள்ளத்தை மலரச் செய்யும் ஒருவரைக் கூட அந்த விழாவில் பார்க்கமுடியவில்லையே என்ற ஆற்றாமையால் எந்த விருந்திலும் கலந்துகொள்ள விருப்பமில்லாமல் சென்னைக்குத் திரும்பி வந்துவிட்டார்.

ஒன்றையே நினைப்பதும் அதைப்பற்றி காலமெல்லாம் வெளிப்படையாக பேசுவதும் அதையே முழுமையான அர்ப்பணிப்புணர்வுடன் செய்வதும் மகத்தான மனிதர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகளாகும். இந்த மூன்று நிலைகளிலும் உள்ள இசைவே மகத்துவத்தின் விதை. எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் ஒருமைகொண்ட மனிதர்களை ஒருபோதும் துயரம் தீண்டுவதில்லை. அய்யாமுத்து துயரம் தீண்டாத அபூர்வ மனிதர்.

( கிராமராஜ்ஜியம் - மார்ச் 2021 )