Home

Sunday 7 March 2021

அறையும் அறைசார்ந்த இடமும் - சிறுகதை

 

பத்துக்கு எட்டு அல்லது ஏழுதான் அந்த அறையின் நீள அகலமாக இருக்கும். சீனிவாசராவ் மாற்றலாகி ஐதராபாத்திற்குப் போகும்போது அந்த அறை எனக்குக் கிடைக்கும்படிச் செய்துவிட்டுப் போனார். நான் என் செலவிலேயே சுவர்களுக்கு வர்ணமடித்து நாலைந்து ஜாடிகளில் ரோஜாப் பதியனும் குரோட்டன்களும் வாங்கி நட்டு அழகாக்கி இருந்தேன். மினுக் மினுக்கென்று எரிந்த இரண்டு பல்புகளை மாற்றி டியூப்லைட்டைக் கூடப் பொருத்தினேன். நல்ல காற்று. நல்ல வெளிச்சம். பத்து நிமிஷத்தில் நடந்து போகிற அளவுக்குப் பக்கத்திலேயே ஆபீஸ் இருந்தது. ஒரு நாலைந்து வாரங்களுக்குள் வீட்டுக்காரர்கள் நெருக்கமாகிவிட்டார். அவர்களுடைய ஆறு வயசுக் குழந்தை ‘‘அங்கிள் அங்கிள் கதை சொல்லுங்க அங்கிள்’’ என்று கேட்டபடி மாடிப்படி ஏறி வந்து என் மடியில் உட்கார்ந்து கொள்கிற அளவுக்கு நெருங்கிவிட்டோம். அந்த அண்ணி இட்லி தோசை சுடும் நாள்களில் எனக்காக ஒரு தட்டு மேலே வந்தது.

பதற்றப்படும் அளவுக்குத் திடீரென ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் சாயங்காலம் பரட்டைத் தலையும் பூப்போட்ட லுங்கியும் வாயில் புகையும் பீடியுமாக வந்து, வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து தரம் நடந்து இரண்டு முறை நின்று முறைத்தவன் யாரோ வழிப்போக்கனாய்த்தான் இருக்க வேண்டும் என்று நம்பினேன். முகவரி தெரியாமல் தடுமாறுகிற ஆளாகக் கூட இருக்கலாம் என்று அண்ணியிடம் சொன்னேன். அவள் அப்படி இல்லை என்று தலையசைத்தாள்.

கவர்ச்சியான சுருள்முடி. எந்தப் பிரயாசையும் இல்லாமல் நெற்றியின் ஒரு பக்கம் சரிந்து விழும் ஒரு கொத்து முடியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நல்ல கறுப்பு. அடர்ந்த புருவம். உருண்ட கண்கள். கிளி மூக்கு. கழுத்தில் தாயத்து. லுங்கியின் முடிச்சை அவிழ்ப்பதும் கட்டுவதுமாக இருந்த கைகள். ‘‘சரியான ரௌடி’’ என்றாள் அண்ணி. அவன் புறப்பட்டுப் போன மனோதைரியத்தில் வாய்க்கு வந்ததைச் சொல்லித் திட்டினாள்.

ஏழு மணிக்குச் சுதாகர் வந்தார். அவர் உள்ளே நுழையும் போதே குழந்தை அந்த விஷயத்தைத் தொடங்கியது. அப்புறம் அண்ணி புலம்பிக்கொட்டினாள். ‘‘யாரு... யாரு’’ என்றார் அவர்.

‘‘அவன்தான். சேவாநகர்க்காரி மொவன்’’

சுதாகரின் முகம் உடனே சுருங்கியது. கண்களில் வெறுப்பேறியது.

‘‘உள்ள சேத்தியா அந்தக் கூத்தியாமொவன?’’

‘‘அங்கேயே தெருவுலயே நின்னு சுத்திட்டுப் போய்ட்டான்.’’

‘‘கால முறிச்சி அனுப்பணும். அப்பதான் நாய்க்குப் புத்தி வரும்.

எனக்கு எதுவும் புரியவில்லை. புரியாத சங்கதியைக் கேட்டபடி உட்கார்ந்திருக்கவும் விருப்பமில்லை. எழுந்து மேலே போய்விட்டேன்.

மறுநாள் காலை சுதாகர் வாசலைத் திறந்துகொண்டு அலுவலகத்திற்குச் செல்ல இறங்கும்போது அவன் வந்து நின்றான். அதே லுங்கி. அதே கோலம். பீடி மட்டும் இல்லை. மாடியில் இருந்து பார்த்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவசரமாக இறங்கினேன். அவன் சற்று எட்டிப் பார்த்த அண்ணியிடம் மரியாதையாக. ‘‘சௌக்கியங்களா அண்ணி?’’ என்று கேட்டான். அண்ணி அதிர்ந்து கதவுக்குப் பின் ஒதுங்கினாள்.

‘‘என்னடா... திறந்த வூட்டுல எதுவோ நொழையுமே அதுமாதிரி நுழையறியே... ஓறவு கொண்டாடலாம்னு நெனைக்கறியா? ஒரு தரம் சொன்னா ஒனக்கு ஒறைக்காதா? மரியாதையா வெளிய போய்டு, இல்லன்னா நடக்கறதே வேற...’’

‘‘நாய்னு சொல். பேய்னு சொல்லு. ஒனக்கு உரிமை இருக்குது. ஒரு அண்ணனுக்கு அந்த உரிமை கூட இல்லையா’’

‘‘யாருடா... யாருடா ஒனக்கு அண்ணன்... நாலு இழுத்தா தெரியும் ஒனக்கு...’’

சுதாகர் தாவி அவன் சட்டையைப் பிடிக்கப் போனார். நான்தான் வேகமாய்ச் சென்று அவரைத் தடுத்தேன். ‘‘பாருங்க... என்ன தெனாவட்டா பதில் சொல்றான்’’ என்று மீண்டும் எகிறினார் சுதாகர். ‘‘இருங்க இருங்க கேக்கலாம்’’ என்று அவரை அமர்த்தி விட்டு நானே அவன் முன் நின்றேன். அவனுக்கும் என்னிடம் பேசுவதில் வசதியாக இருந்திருக்க வேண்டும்.

‘‘நீயே ஞாயத்தை கேளு சார். என்ன சொல்ல வரான்னுகூட கேக்கறதுக்கு தயாரா இல்லாம நாலு இழுக்கட்டுமா எட்டு இழுக்கட்டுமான்னு பேசினா என்ன அர்த்தம் சார். இழுக்கறத்துக்கு இவருக்கு மட்டுமா கை இருக்குது? இல்ல இவர் இழுக்கற வரிக்கும் என் கை பூப்பறிக்குமா?’’ என்றான் அவன்.

‘‘கடவுள் சத்தியமாக இவருக்கு நான் தம்பி மொறைதான் சார்... ஆத்தாதான் வேற வேற சார்... அப்பன்காரன் ஒன்னு. எந்த அப்பன்காரனுக்கு இவர் பொறந்தாரோ அதே அப்பனுக்குத் தான் நானும் பொறந்தேன்.’’

சுதாகர் முகம் கறுத்தது. தர்மசங்கடத்தில் நெளிந்தார். கிடைத்த மௌனத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அவன் என்னிடம் முறையிடத் தொடங்கினான்.

‘‘என் பேரு அங்கப்பன் சார். கடவுள் சத்தியமா நான் பொய் சொல்லலை. இவுங்கப்பாவுக்கும் எங்கம்மாவுக்கும் ஒரு தொடுப்பு இருந்திச்சு. அதெல்லாம் அந்தக் காலம். ரெண்டு மூணு வருஷம் வச்சிருந்திட்டு ஒதுங்கிட்டாரு அவரு. எங்கம்மா வைராக்கியக்காரி சார். ஐயோ, உட்டுட்டுப் போய்ட்டாரேன்னு அழுவல. அதக்குடு அதக்குடு இதக்குடுன்னு கேக்கல. அப்படியே ஒதுங்கிட்டா. கண்ணம்மாவா கொக்கான்னுதான் இப்பவும் எங்க பக்கத்துல பேசிக்குவாங்க. கைக்கு கெடைச்ச வேலய செஞ்சிதான் கடைசிவரிக்கும் காலம் தள்ளினா...’’

என்னால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் சுதாகரின் மௌனத்தைக் கண்டபோது நம்ப வேண்டியதாக இருந்தது. சர்வமும் ஒடுங்க அவர் அங்கப்பனையே பார்த்தபடி இருந்தார்.

‘‘அவளவிட வைராக்கியமாக வாழணும்னு நெனைக்கறவன் சார் நான். இப்ப ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்குது. துபாய்க்கு வான்னு ஒரு பார்ட்டி கூப்புடுது. ஒரு அம்பதாயிரம் தேவைப்படுது. வெளிய பொரட்ட முடியல சார். அதான் அண்ணாச்சிகிட்ட கேக்கலாமின்னு வந்தன் சார்.’’

அதுவரை மௌனமாய் இருந்த சுதாகர் அவன் மீது எரிந்து விழுந்தார்.

‘‘அம்பது பைசா கூட தரமுடியாது. கண்ட கண்ட பசங்களுக்குக் கொடுக்க இங்க ஒண்ணும் கொட்டி வைச்சிருக்கல. மொதல்ல வீட்ட விட்டு வெளிய எறங்கு.’’

நான் அவர் முகத்தின் ஜாடையை அப்போதுதான் முதன்முதல் பார்ப்பது போலப் பார்த்தேன். அதே சுருள்முடி. அதே கண்கள். அதே மூக்கு, கடவுளே!

‘‘என்னப்பத்தி எது வேணும்னாலும் பேசு. எங்கம்மாவப்பத்தி எதுவும் பேசாத. அப்புறம் ஒன் வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில் ஏறிடும்.’’

சுதாகர் ஓர் அடி முன்னால் வைத்தார். அவனை அடிக்கக் கையை ஓங்கினார். நான் அவசரமாய்த் தடுத்தேன். அங்கப்பன் எழுந்து விட்டான்.

‘‘இன்னிக்கே தர வேணாம். நல்லா யோசிச்சி குடு. எனாமா தர வேணாம். கடனா குடுத்தாலும் போதும்.’’

அவன் இறங்கிப் போய்விட்டான். சுதாகர் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். எரிச்சலில் இறந்து போன தன் அப்பாவை அசிங்கம்அசிங்கமாய்த் திட்டினார். அதிர்ச்சியில் உறைந்த அண்ணி பேசமுடியாமல் நின்றிருந்தார்.

அதே வாரத்தில் மேலும் இரண்டு முறை வந்து நின்றான். அங்கப்பன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் வசைகளைத் தவிர சுதாகர் வாயில் வேறு வார்த்தைகள் வரவில்லை.

ஒனக்கு நாலு ஆளத் தெரியும்னா எனக்கும் நாலு ஆளத் தெரியும். கை கால ஒடைச்சி மொடமாக்கிடுவன். உஷார்.’’

‘‘இந்த மெரட்டல் வேலையெல்லாம் வேற எங்கனா வச்சிக்க. எங்கிட்ட நடக்காது. ஸ்டேஷன்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டிவைக்கச் சொல்லிடுவேன்.’’

‘‘அண்ணன் மொற கொண்டாடிக்கிட்டு நொழயலாம்ன்னு கனவு காணாத. ஒழுங்கா ஒன் வழிய பாத்துகிட்டு நீயா போனா சரி. இல்ல கொலதான் விழும்.

சுதாகர் திட்டத்திட்டத்தான் அங்கப்பன் வீட்டுக்கு வருவதும் அதிகமானது. தினம் ஒரு முறையாவது வந்து சுதாகரைக் கொதிப்பேற்றிக்கொண்டிருந்தான்.

சுதாகரைப் பார்க்கப்பார்க்கப் பாவமாக இருந்தது. அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு சதா காலமும் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினார். எந்த நேரமும் அங்கப்பன் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கக் கூடும் என்பது போல அச்சத்தில் மூழ்கியிருந்தார். சாப்பாடு கூடச் சரியாச் சாப்பிடுவதில்லை. அண்ணியின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு அரைத்தட்டு சோறு சாப்பிடுவார் அவ்வளவுதான். மிச்ச நேரம் முழுக்க வாசலே கதி. இரும்புத்தடி, விறகுக் கட்டை, கத்தி, அரிவாள், சைக்கிள் செயின் என எந்தப் பக்கத்தில் கை நீட்டினாலும் ஏதாவது ஒன்று கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். இடம் மாற்றி இடம் மாற்றி அடுக்குவதுதான் அவர் தினசரி வேலை.

தினசரி பார்த்துப்பார்த்து அது ஒரு நாடகக் காட்சி போல ஆகிவிட்டது. அங்கப்பன் வந்து வாசலைத் திறப்பான். சுதாகர் ஓடிச் சென்று அவனை மறிப்பார். அவன் சிரித்தபடியே பணம் கேட்பான். சுதாகர் ஆத்திரமாய் அவனை நெட்டித்தள்ளி முறைப்பார். மிரட்டுவார். இறுதியில் அங்கப்பன். ‘‘அவசரமில்லண்ணா, அக்டோபர் முப்பத்தொன்னுக்குள் தந்தா போதும்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவான்.

சுதாகர் ஆளே மாறிவிட்டார். தனக்குத்தானே பிதற்றிக் கொள்ளத் தொடங்கினார். உடல் இளைத்துவிட்டது. சட்டையின் அழுக்கைக்கூடப் பொருட்படுத்தாதவராய் மாறிப் போனார். சதாநேரமும் எரிச்சல். கோபம். வசவு. அக்காட்சியைக் கண்கொண்டு பார்க்கவும் மனசின்றிப் போய்விட்டது. ஓடிப் போய் அறைக்குள் முடங்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் தைக்கக் கொடுத்திருந்த பேண்ட் சட்டையை வாங்கிக் கொண்டு திரும்பும் போது வழியில் அங்கப்பன் எதிர்ப்பட்டான். நான் நிதானிப்பதற்குள் அவன் என் முன் வந்து நின்று. ‘‘சௌக்கியமா சார்என்று குசலம் விசாரித்தான். நான் பதில் சொல்வதற்குள், ‘‘நீதான் பொது ஆளு சார். நீதான் ஞாயத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும்’’ என்றபடி சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைத்தான்.

‘‘ஆஸ்தில பங்கு குடுன்னா சார் நான் கேக்கறன்? ஏதோ அம்பதாயிரம். அதுவும் கடனா கேக்கறேன். ஒரு தம்பிக்காரனுக்கு அதுகூடத் தர இஷ்டமில்லன்னா என்ன அர்த்தம் சார்?’’

அவன் கண்களில் மெல்லமெல்லச் சிவப்பேறிக் கொண்டிருந்தது.

‘‘கேக்கற வரைக்கும் மொறயா கேட்டுப் பாப்பன். அதுக்கப்புறம் என் வழியே வேற. ரெண்டுல ஒன்னு பாத்துட்டுத்தான் மறுவேல பாப்பன். அக்டோபர் முப்பத்தொன்னு ஞாபகம் இருக்கட்டும்.’’

விரலை ஆட்டிஆட்டிச் சொல்லிவிட்டுப் போனான் அவன். சாயங்காலம் நான் வீட்டுக்குத் திரும்பும்போது வாசலிலேயே சுதாகர் என்னை மறித்துக்கொண்டார். அவர் முகத்தில் சவரம் செய்யப்படாத தாடி முள்முள்ளாய் முளைத்திருந்தது.

‘‘என்ன சார்... கடத் தெருவுல ஒங்ககிட்ட வந்து கொழைஞ்சான் போல இருக்குது.’’

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நான் கண்காணிக்கப்படுகிறேன் என்பதையே என்னால் தாங்க இயலவில்லை. நான் பேச வாயெடுப்பதற்குள், ‘‘என்ன வேணுமாம் தொரைக்கி?’’ என்று கேட்டார்.

‘‘அதான் பணம்.’’

‘‘அவுங்க ஆத்தா சம்பாரிச்ச பணம் கொட்டிக் கெடக்குது பாரு... தொர வந்து கேட்டதும் அள்ளி நீட்டறதுக்கு...’’

நான் அவர் கண்களைப் பார்த்தேன்.

‘‘ஒரு சல்லிக்காசு கூட தரமாட்டேன் சார். பாத்தா சொல்லிடுங்க தெரியுதா?’’

நான் அவசரமாய்த் தலையசைத்தேன்.

மறுநாள் அதிகாலை பால் வாங்கப் போன இடத்தில் அங்கப்பன் நின்றிருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடி வந்தான். ‘‘என்ன சார் ஏதாச்சிம் விசேஷம் இருக்குதா?’’ என்று விசாரித்தான். நான் உதட்டைப் பிதுக்கினேன். அவன் முகம் வெளிறி விட்டது.

‘‘முப்பத்தொன்னுக்குள்ளே நல்ல சேதி கெடைச்சா சரி சார்.’’

இந்தச் சந்திப்பும் சுதாகருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நேராக மாடிக்கு வந்து விட்டார். ‘‘என்ன சார் மறுபடியும் வந்து கொழயறானா?’’ என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் நின்றிருந்தேன்.

‘‘கால்ல விழுந்து கேட்டா கூட காலணா கெடைக்காது. சொல்லிடுங்க சார்.’’

இதற்கிடையில் வீட்டு நிலைமை மோசமாகியது. சுதாகர் வீட்டுக்குள் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். மனைவியைப் போட்டு அடித்தார். குழந்தை மீது எரிந்து விழுந்தார். சமயத்தில் சோபாவில் உட்கார்ந்து அவரும் ஓவென்று அழுதார். ஆபீஸ் விஷயமாக பனசங்கரியில் இருந்த வங்கியொன்றுக்குச் சென்று திரும்பியபோது அவன் மீண்டும் என் பார்வையில் பட்டான். மீண்டும்மீண்டும் அதே கெஞ்சல். கோரிக்கை. எச்சரிக்கை, கேட்டுக்கேட்டுப் புளித்துவிட்டது. இம்முறை தைரியமாக. ‘‘சரி சரி பார்க்கலாம்’’ என்று பதில் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பியதுமே, ‘‘என்ன சார் சொன்னீங்களா?’’ என்று கேட்டார் சுதாகர் & அப்படிக் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. அவர் புலன்கள் சதா நேரமும் விழித்திருந்தன. இலைகள் அசையும் சத்தத்தைக் கூட சந்தேகத்தோடு கண்காணித்தார். வீட்டை நோக்கும் ஒவ்வொரு ஆளையும் சந்தேகப் பார்வையோடு கூர்ந்து கவனித்தார். தூக்கம் இல்லாததால் கண்கள் உள்ளொடுங்கிவிட்டன.

முப்பத்தொன்றாம் தேதிக்கு இன்னும் இரண்டு தினங்களே பாக்கியிருந்தன. என் மனசில் பதற்றம் கூடியது. ஊரை விட்டுப் போய் விடலாமா என்று ஒரு யோசனை வந்தது. நடக்க இருக்கிற அசம்பாவிதத்திற்கு எந்த விதத்திலும் சாட்சியாக இருக்க வேண்டாமே எனத் தோன்றியது. அதே சமயம் கோழை போல ஓடுவது நியாயமாக என்ற குரலும் எழுந்து குழம்பியது.

மறுநாள் அலுவலகத்திற்குக் கிளம்பும் நேரம் அங்கப்பன் நேரிடையாக மாடிக்கே வந்துவிட்டான். சுதாகரின் கண்காணிப்பை மீறி எப்படி மேலே ஏறினான் என்று ஆச்சரியமாக இருந்தது. அவனைப் பார்த்ததும் இதயத் துடிப்பு அதிகரித்தது. அவசரமாய் ‘‘என்ன?’’ என்றேன். ‘‘கீழ வா சார். ஒரு முக்கியமான விஷயம்’’ என்றான் அவன். நான் கதவைக் கூடச் சாத்தாமல் அவனோடு கீழே இறங்கினேன். காலடிச் சத்தத்தைக் கேட்டதுமே சுதாகர் வெளியே ஓடி வந்தார். அங்கப்பனைப் பார்த்ததுமே அவர் உடல் பதறியது. உதடுகள் துடித்தன. கையும் காலும் பரபரத்தன.

‘‘அவருக்கும் கஷ்டம் வேணாம். எனக்கும் கஷ்டம் வேணாம். அம்பதாயிரத்துக்குப் பதிலா ஒரு இருபத்தஞ்சாயிரம் குடுக்கச் சொல்லு சார். நா இந்த ஊர விட்டே போயிடறேன் சார்.’’

நான் சுதாகர் பக்கம் திரும்பினேன். அவர் காறித் துப்பினார்.

‘‘என்னடா மெரட்டறியா? பேரம் பேசிப் பாக்கறியா? இருபத்தஞ்சி நயா பைசா கூடக் கெடையாது. ஒழுங்கா நடைய கட்டு.’’

அங்கப்பன் முகத்தைப் பார்த்தேன். அவன் முகம் இறுகத் தொடங்கியது. ஒரு கணம் அமைதியாக இருந்தான்.

‘‘நாளைக்கி முப்பத்தொன்னு சார். கௌம்பியாவணும். ஒரு பத்தாயிரமாவது தரச் சொல்லு சார். வேற ஒன்னும் வேணாம். இந்த ஊர் முகத்திலியே முழிக்காம போயிடறேன் சார்.’’

அவன் இவ்வளவு தூரம் இறங்கி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை நான். அதற்கும்கூட சுதாகர் ஏதோ பதில் சொன்னபடி குதிக்கத் தொடங்கினார். நான் அவசரமாய் அங்கப்பனுக்குச் சமாதானம் சொல்லி சாயங்காலமாய்ப் பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தேன்.

‘‘முப்பத்தொன்னாம் முப்பத்தொன்னு. யாருக்குடா கெடு வைக்கற. பெரிய பிஸ்தாவா நீ? ஏமாந்தா அடிச்சிக்கிடலாம்ன்னு பாத்தியா? ஆளுக்கு ஆயிரம் குடுத்து அடிச்சிப்போட ஏற்பாடு செஞ்சாலும் செய்வனே தவிர ஒனக்கு ஒரு தம்பிடி தரமாட்டன்டா நாயே.’’

சுதாகர் சத்தம் போட்டுத் திட்டினார். ஏறத்தாழ அரை மணி நேரம் தொடர்ந்து வசைமழை. அன்று மாலை வீட்டை விட்டுச் சென்றவர் நேராக நகருக்குள் சென்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ‘‘அங்கப்பன் வீடு எது?’’ என்று கேட்டு அலைந்ததாய்த் தெரிந்தது.

அன்று இரவு தூக்கமே இல்லை. மாடி அறையைச் சாத்திவிட்டு நானும் கீழே வந்து படியில் உட்கார்ந்திருந்தேன். விடியும் வரை ஏதேதோ சிந்தனைகள். காலண்டரில் முப்பத்தொன்றாம் தேதித் தாளைப் பார்க்கப் பயமாக இருந்தது. எந்த நேரமும் ஆள் கூட்டத்தோடு அங்கப்பன் வந்து தாக்கக் கூடும் என்று எதிர்பார்த்தேன். அவனை எப்படித் தடுப்பது எப்படிச் சமாதானம் சொல்வது என்று யோசிப்பதிலேயே ஒவ்வொரு நிமிடமும் கழிந்தது. நான் இருக்கும் வரை அந்த வீட்டில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அன்று முழுக்க அவன் வரவே இல்லை. என் இதயத்தில் இனம் புரியாத கலக்கம் மூண்டது. அவனை ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று மனதார விரும்பினேன்.

அவன் வராததற்கும் முதல் நாள் இரவு சுதாகரின் அறைக்குள் கேட்ட உரையாடலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற என் மனம் கணக்குப் போட்டது.

மாடிப்படிக்கட்டில் நான் உட்கார்ந்திருப்பது தெரியாமலேயே இருவரும் பேசிக்கொண்டார்கள்.

‘‘பொறுக்கி மாதிரிதான் இருக்கான். ஆனா பாத்தா பாவமா இருக்குது. என்னதா இருந்தாலும் ஒங்க அப்பாவுக்குப் பொறந்தவன்தான். ஒரு பத்தாயிரம் போனா போவுதுன்னு குடுத்துத் தலை முழுகுங்க.’’

‘‘வாய மூடுடி கழுத. அந்த மாடில இருக்கறவனும் அப்படித்தான் சொல்றான். நீயும் அதே சொல்றியா. என்னை என்ன மூளை இல்லாதவன்னு நெனச்சிட்டிங்களா?’’

‘‘அதுக்கில்லிங்க...’’

‘‘வாயத் தெறக்காதடீ. எல்லாம் எனக்குத் தெரியும். ஏதாவது பேசனா ஒன்னயும் தொலைச்சிடுவன் தொலைச்சி. ஜாக்கிரத.’’

அந்தக் குரல். அந்த எரிச்சல். அந்தக் கோபம். எதுவுமே சுதாகருடையது போல இல்லை. அவர் முகம் கூட ஒரு வேட்டை நாயின் முகம் போல இருந்தது.

நகரின் பாதைகளில் இதற்குமுன் அங்கப்பன் பார்வையில் பட்ட இடங்களில் எல்லாம் அவனைத் தேடினேன். எந்தப் பயனும் இல்லை. அதற்கு மேல் எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. காலி செய்து விட்டு வேறு அறைக்கு மாற்றிக் கொண்டேன். மீண்டும்மீண்டும் அந்த உரையாடலும் அந்த முகமும் என் மனசில் மோதி வதைப்பதில் இருந்து மீள வேறு வழி தெரியவில்லை.

அண்ணியும் குழந்தையும் மட்டும் நான் பிரிந்து செல்வதில் மனம் வருந்தினார்கள். சுதாகர் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளவில்லை. மெழுகுப்பொம்மை போல இருந்தது அவர் முகம்.

 

(தினமணி கதிர் 1997)