Home

Thursday 28 June 2018

ராஜாஜியின் மற்றொரு முகம் - கட்டுரை



பெங்களூரில் சட்டப்படிப்பை முடித்த ராஜாஜி சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். 1900 -1920 காலகட்டத்தில் மாகாணத்தின் மிகமுக்கியமான வழக்கறிஞர் அவர். வெற்றிகரமான முறையில் தன் தொழிலை நடத்திவந்தவர். சேலம் நகராட்சியில் உறுப்பினராகவும் செயலாற்றியவர். அப்போது ஆங்கில அரசு கொண்டுவந்த ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் உருவாகிப் பெருகிய எதிர்ப்பலை, சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. ராஜாஜியின் வாழ்க்கையிலும் அது திருப்பத்தை உருவாக்கியது. காந்தியடிகள் தொடங்கிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது, தமிழகத்தில் வேதாரண்யம் யாத்திரையை நிகழ்த்தினார் ராஜாஜி.

வைராக்கியம் - சிறுகதை




நெற்றியில் வழிந்த வேர்வையை வழித்தபடியே அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். வெப்பத்தில் தோல் எரிந்தது. அடுப்பிலிருந்து அனல் வீசுவதுபோல காற்று உடலைச் சுட்டது.  உள்பக்கமாக கதவை நெருங்கி வரும் காலடியோசையைக் கேட்டபடி மூச்சை வாங்கினேன். கதவைத் திறந்துகொண்டேவாடி வா, பன்னெண்டு மணிக்குலாம் வரன்னு சொன்னாளே, இன்னம் காணமேன்னு இப்பதான் நெனச்சேன், வா வா, உள்ள வாஎன்று சிரித்தாள் பூங்கோதை அத்தை. அவள் காதுத் தோட்டில் வெயில் பட்டு மின்னியது.

Monday 18 June 2018

பொம்மைக்காரி - சிறுகதை




-1-

                ஒவ்வொரு பொம்மையையும் ஒரு பிடி வைக்கோலில் வைத்து சுருட்டிக் கொடுத்தாள் வள்ளி.  அதை வாங்கி அடிபடாதபடி பக்குவமாக ஒன்றன்மீது ஒன்றாக கவனமுடன் கூடைக்குள் அடுக்கினான் மாரி.  இரண்டு கூடைகள் நிறைய அடுக்கி முடித்த பிறகும் பொம்மைகள் எஞ்சியிருந்தன.  மிச்சமிருந்த வைக்கோலை வாரி சுவரோரமாக ஒதுக்கி அதன்மீது எல்லா பொம்மைகளையும் அடுக்கினாள்.  வர்ணம் கலந்த சட்டிகள் குடிசைக்கு வெளியே மரத்தடியில் காணப்பட்டன.  அவற்றை அங்கேயே விடுவதா அல்லது எடுப்பதா என்ற குழப்பத்தோடு மாரியையே பார்த்தபடி நின்றாள். 

தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்



தங்கப்பாவின் கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அதன் பாய்ச்சலில் ஒரு தடையுமில்லை. சீரான வேகத்துடனும் தாளலயத்துடனும் சொற்கள் உற்பத்தியானபடி இருக்கின்றன. எடுத்துரைப்பில் அவருடைய பாடல்களில் ஒரு சின்னப் பிசகுகூட இருப்பதில்லை. அவர் பாடல்களை மனமொன்றிப் படிக்கும்போது அச்சொற்களின் கதகதப்பு நம் மனத்தில் மெல்லமெல்லப் படியத் தொடங்குகிறது. அந்த வெப்பம் பெருகப்பெருக அச்சொற்கள் ஏதோ ஒரு புள்ளியில் நம் நெஞ்சிலிருந்து பெருகுவதைப்போல ஓர் உணர்வு உருவாகத் தொடங்குகிறது. அந்த அனுபவத்தை நம் அனுபவமாக எண்ணும் விருப்பமும் ஏற்படுகிறது. அவருடைய அரைநூற்றாண்டுக்காலக் கவிதைகளில் அத்தகு விருப்பத்தை உருவாக்குபவையே மிகுதி. அது அவருடைய தனிப்பட்ட வெற்றி.

Wednesday 13 June 2018

கதவு திறந்தே இருக்கிறது – யானைகளின் உலகம்



எழுபதுகளின் இறுதியில் எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு எங்கேயாவது ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என்பதே சராசரி இந்திய இளைஞனின் கனவாக இருந்தது. அந்த அளவுக்கு அன்று வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. ஆனால் விலங்கியலில் பட்டம் பெற்றிருந்த ராமன் சுகுமார் என்னும் இளைஞனின் எண்ணமோ வேறாக இருந்தது. கல்லூரிக்காலத்தில் வகுப்பு நண்பர்களுடன் தற்செயலாகச் சென்றிருந்த வனச்சுற்றுலாவின்போது பார்த்த யானைகளால் ஈர்க்கப்பட்டு, யானைகளைப்பற்றி மேலும் ஆய்வு செய்து தெரிந்துகொள்ளும் கனவுகள் நிறைந்த மனத்துடன் இருந்தார் அவர்.  அதனால் பெங்களூரில் இருந்த அறிவியல் கழகத்தில் இயற்கையியல் துறையில் ஓர் ஆய்வுமாணவனாகப் பதிவு செய்துகொண்டார்.

தங்கப்பா: தனிமைப்பயணி

.பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மறுநாள் விடிந்தபின்பும் உறங்கிக்கொண்டிருந்தோம். என் கைபேசிக்கு வந்த அழைப்புமணிச்சத்தம் கேட்டுத்தான் இருவரும் விழித்தோம். கைபேசியின் திரையில் செங்கதிரின் பெயரைப் பார்த்ததுமே மனம் துணுக்குற்றது. சற்றே பதற்றத்தோடு வணக்கம் தம்பிஎன்று நான் சொல்லி முடிக்கும் முன்பே செங்கதிர்அப்பா போயிட்டார் அண்ணாஎன்றான்.

Monday 11 June 2018

வாசிப்பும் வாழ்க்கையும்



அரசர்களின் காலத்தில் ஆநிரை கவர்தல் என்னும் சாகசம் அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. ஆநிரை கவர்தல் என்பது ஒரு போருக்கான அறைகூவல். ஒரு படை அடுத்த நாட்டின் எல்லைக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும் பசுக்களை கூட்டம்கூட்டமாக கவர்ந்துகொண்டு வந்துவிடுவதும் அதை அவமானமாகக் கருதிய அந்த நாட்டு அரசன் தனது படைகளுடன் சென்று போரிட்டு, மீட்டுக்கொண்டு வருவதும் அக்காலத்தில் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது

பாடல் என்னும் கொண்டாட்டம்



குழந்தைகளுக்கு பாடல்கள் ஏன் பிடிக்கின்றன என்கிற கேள்வியிலிருந்து தொடங்கலாம். ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளும் முன்பாக, ஒரு மொழியைப் புரிந்துகொள்ளும் முன்பாக குழந்தையின் செவியையும் மனத்தையும் நிறைப்பவை அதன் தாய் பாடும் தாலாட்டுப்பாடல்கள். அதன் இசை குழந்தையை மயக்குகிறது. உறங்கவைக்கிறது. பாதுகாப்பாக உணரவைக்கிறது. வளரும் பருவத்தில் லயமும் சந்தமும் மிகுந்த சின்னச்சின்ன சொற்களால் உருவாகும் ஓசை குழந்தையின் நெஞ்சை ஈர்க்கிறது. சந்தத்தன்மையும் இசையும் கொண்ட சொற்கள் நிரம்பியிருப்பதாலேயே, குழந்தைகளுக்குப் பாடல்கள் பிடிக்கின்றன.