Home

Monday, 11 June 2018

வாசிப்பும் வாழ்க்கையும்



அரசர்களின் காலத்தில் ஆநிரை கவர்தல் என்னும் சாகசம் அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. ஆநிரை கவர்தல் என்பது ஒரு போருக்கான அறைகூவல். ஒரு படை அடுத்த நாட்டின் எல்லைக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும் பசுக்களை கூட்டம்கூட்டமாக கவர்ந்துகொண்டு வந்துவிடுவதும் அதை அவமானமாகக் கருதிய அந்த நாட்டு அரசன் தனது படைகளுடன் சென்று போரிட்டு, மீட்டுக்கொண்டு வருவதும் அக்காலத்தில் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது

பசுக்களைமட்டுமல்ல, அவை மேயும் மேய்ச்சல் நிலங்களை அழிப்பதும் அவை நீரருந்தும் நீர்நிலைகளைச் சிதைப்பதும் கூட போருக்கான அறைகூவல்கள். மேய்ச்சல் சமூகத்துக்கு பசுக்கள் மாபெரும் செல்வம். அவற்றைத் தக்கவைக்க தொடர்ந்து போரிட்டபடியே இருந்தார்கள் மக்கள். மேய்ச்சல் சமூகம் மெல்லமெல்ல வளர்ச்சியடைந்து இன்று ஜனநாயக சமூகமாக வளர்ந்து நிற்கிறது. இன்றும் போர்கள் நிகழ்கின்றன. இந்தப் போரின் மறைமுக இலக்குகள் நூலகங்கள். உலகப்போர் நிகழ்ந்த சமயத்தில் எண்ணற்ற நூலகங்கள் கொளுத்தப்பட்டதையும் இலங்கைப்போர் நிகழ்ந்த சமயத்தில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதையும் நினைத்துக்கொண்டால் இந்த உண்மையை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். நூலகம் என்பது ஓர் இனத்தின் அடையாளம். ஒரு மொழியின் அடையாளம். அறிவுச்சுரங்கம். சிந்தனையின் வரலாற்று ஆவணம். நூலகத்தை அழிப்பது என்பது அனைத்தையும் அழிப்பதற்கு இணையான செயலாகும். இன்னொரு கோணத்தில் நூலகத்தைக் காத்து பயன்படுத்துவது என்பது ஓர் இனத்தை, மொழியை, பண்பாட்டை, சிந்தனையை என அனைத்தையும் பாதுகாத்து வளர்ப்பதற்கு இணையான செயலாகும்.
இன்று தமிழகத்தில் கிராம நூலகங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. நூலகங்களைப் பயன்படுத்தத் தூண்டும் பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும்தான் உள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவர்களே பெரிய வழிகாட்டிகள். பள்ளிக்கல்வி என்பது வேறு. நூலக வாசிப்பு என்பது வேறு. பள்ளிக்கல்வி என்பது அடுத்தடுத்த வகுப்புகளில் தேர்ச்சியடைந்து தகுதியை வளர்த்துக்கொள்ள உதவும் கல்வி முறை ஆகும். நூலக வாசிப்பு என்பது இந்தச் சமூகத்தை, மானுட மோதல்களை, சிந்தனை வளர்ச்சியை, அறிஞர்களின் மகத்தான பங்களிப்பை, தத்துவங்களை, ஞானத்தை, கனவுகளை, பல்வேறு தளங்களாகப் பிரிந்திருக்கும் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும் வழிமுறை ஆகும். பள்ளிக்கல்வியை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ பெற்ற யாராக இருந்தாலும் நூலக வாசிப்பின் வழியாக தன் சிந்தனைத்திறனை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.
நூலக வாசிப்பு நம் சிந்தனைத்திறனை எப்படி மேம்படுத்தும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. பொய் என்பது இல்லாமல் அரிச்சந்திரன் என்னும் அரசர் வாழ்ந்ததையும் அதனால் அவர் எதிர்கொள்ள நேர்ந்த துன்பங்களையும் அவனது மன உறுதியால் அனைத்தையும் வென்று உயர்ந்ததையும் ஒரு கதையாக வாசிக்கும் ஓர் இளம் மனம் மாபெரும் மன எழுச்சியை அடையக்கூடும். அந்த மன எழுச்சியே சிந்தனையின் முதல் தூண்டுதல். அது பொய் என்றால் என்ன, வாய்மை என்றால் என்ன என வினாக்களை தனக்குள் எழுப்பி அவற்றின் பின்னணியில் அனைத்தையும் தொகுத்துக்கொள்ள முயற்சி செய்யும். மானுட வரலாறு முழுக்க பொய்யால் வாழ்ந்தவர்களையும் வாய்மையால் வாழ்ந்தவர்களையும் கண்டறிய முற்படும்.
பொய், வாய்மை ஆகியவற்றைப்போலவே கனிவு, சீற்றம், இரக்கம், இரக்கமின்மை, ஈகை, ஈயாமை, தியாகம், பொறாமை என வெவ்வேறு புள்ளிகள் வழியாக நீளும் மானுட வரலாற்றை ஒரு வாசகர் அறிந்துகொள்கிறார். பல வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கையை அந்த வாசிப்பு அவருக்கு அறிமுகப்படுத்துகிறது. புத்தன், ஏசு, காந்தி போன்ற மாபெரும் ஆளுமைகளை அறிந்துகொள்கிறார். அவர் மனம் அறிந்த அனைத்தையும் தொகுத்தும் பகுத்தும் மெல்லமெல்ல தனக்கென ஒரு அறிவுப்பார்வையை வந்தடையும். அதை ஓர் அளவுகோலாகக் கொண்டு ஒவ்வொன்றையும் அளந்துபார்க்க முயற்சி செய்யும். இதுதான் சிந்தனைத்திறன் சிறுகச்சிறுக மேம்பட்டு வளரும் விதம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் ஒற்றை வரியை வாழ்க்கை முழுதும் நல்ல துணையாகக் கொள்ளமுடியும். ’இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்என்னும் வரி இருளடர்ந்த மனத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் வலிமை மிகுந்த வரியாகும். ’கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதாவர்என்னும் குறளையும்கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப்படும்என்னும் இரண்டு குறள்களையும் இணைத்து கண்-கல்வி- கனிவு என ஒரு வாசகனே கண்டறியும் சமன்பாடு உணர்த்துகிற உண்மை மிகவும் வலிமையுடையது. வாசிப்பு வழியாக ஒவ்வொருவரும் தமக்கே உரிய போக்கில் இந்த உண்மைகளைக் கண்டறிந்து தம் வாழ்வில் இறுதிநாள் வரைக்கும் கடைபிடிக்கக்கூடிய கொள்கைகளாக வகுத்துக்கொள்கிறார்கள். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் நூல் காந்தியடிகளின் நெஞ்சில் ஆழமான முறையில் தாக்கத்தை உருவாக்கியதை சத்திய சோதனை நூலில் அவரே பதிவு செய்திருக்கிறார்.
நூல் வாசிப்பைப் புறக்கணிக்கும் ஒருவருக்கு இத்தகு திறமை இருப்பதில்லை. இத்தகையோர் தாம் காதால் கேட்கிற ஒரு செய்தியையே உண்மையென நம்புகிறார்கள் அல்லது தம் காதில் விழுகிற ஒற்றை வாக்கியத்தை தனது சிந்தனை என்பதுபோல நடித்து அதையே எல்லா இடங்களிலும் பேசித் திரிகிறார்கள். இத்தகையோரை நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்றுஎன வள்ளுவப்பெருந்தகை இடித்துரைப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நூல் வாசிப்பு என்பதை சிந்தனைத்திறம் என்றொரு நெறியை வகுத்து, சிந்தனைத்திறம் கொண்டவர்களை மனிதர்கள் என்றும் சிந்தனைத்திறம் இல்லாதவர்களை மண்பொம்மைகள் என்றும் வகைபடுத்துவதை இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒரு அளவுகோலாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.