எழுபதுகளின் இறுதியில் எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு எங்கேயாவது ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என்பதே சராசரி இந்திய இளைஞனின் கனவாக இருந்தது. அந்த அளவுக்கு அன்று வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. ஆனால் விலங்கியலில் பட்டம் பெற்றிருந்த ராமன் சுகுமார் என்னும் இளைஞனின் எண்ணமோ வேறாக இருந்தது. கல்லூரிக்காலத்தில் வகுப்பு நண்பர்களுடன் தற்செயலாகச் சென்றிருந்த வனச்சுற்றுலாவின்போது பார்த்த யானைகளால் ஈர்க்கப்பட்டு, யானைகளைப்பற்றி மேலும் ஆய்வு செய்து தெரிந்துகொள்ளும் கனவுகள் நிறைந்த மனத்துடன் இருந்தார் அவர். அதனால் பெங்களூரில் இருந்த அறிவியல் கழகத்தில் இயற்கையியல் துறையில் ஓர் ஆய்வுமாணவனாகப் பதிவு செய்துகொண்டார்.
மனிதர்கள்-யானைகள் மோதல்தான் அவருடைய ஆய்வுக்களம். காட்டை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் பெருகியபடி இருந்த காலம் அது. விவசாயிகள் காட்டின் விளிம்புப்பகுதிகளை சிறுகச்சிறுக விவசாய நிலங்களாக மாற்றியபடி இருந்தார்கள். காட்டுக்குள் போதிய உணவோ நீரோ கிட்டாத நேரங்களில் காட்டைவிட்டு வெளியே வரும் யானைகள் நிலங்களில் புகுந்து நாசமாக்கி வந்தன. சினம் கொண்ட மனிதர்கள் யானைகளை விஷமிட்டும் மின்சார வேலியைக் கட்டியும் கொல்லத்தொடங்கினார்கள். அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இரக்கமில்லாத வனக்கொள்ளையர்கள் தந்தங்களுக்காக யானைகளை கொல்லத் தொடங்கினார்கள். யானைகள்-மனிதர்கள் மோதலைத் தவிர்த்து சரிசெய்வதற்கான வழிகள் குறித்த சிந்தனைகளை முன்னெடுக்க இந்த ஆய்வு உதவக்கூடும் என அவர் கருதினார். இதற்காக பத்தாண்டுக் காலம் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் அலைந்து திரிந்து யானைகள் பற்றிய தகவல்களைத் திரட்டினார்.
பத்தாண்டு கால அனுபவங்களை உள்ளடக்கி ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரையை எழுதினார் ராமன் சுகுமார். நூறு பக்கங்களே என்றபோதும் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் யானைகள் பின்னால் அலைந்து திரிந்ததைப்போல ஏராளமான அசலான அனுபவங்களால் அந்தக் கட்டுரை நிறைந்திருந்தது. அதனாலேயே அதற்கொரு இலக்கிய மதிப்பு உருவானது. Elephant
Days and Nights: Ten years with the Indian Elephant என்னும் ஆங்கில நூலை ’என்றென்றும் யானைகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் ஜீவானந்தம். 2015-ஆம் ஆண்டில் அதை தமிழினி பதிப்பகம் வெளியிட்டது.
யானை என்பது பொதுப்பெயரெனினும் ஆண்யானைக்கும் பெண்யானைக்கும்
இடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்னும் குறிப்பிலிருந்து தொடங்கும் ராமன் சுகுமார்
முன்வைக்கும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானதாக உள்ளது. ஒரு யானைக்குடும்பத்தின் தலைமைப்பொறுப்பு எப்போதும் பெண்யானையிடமே உள்ளது. ஆண்யானை, குட்டியானைகள் அனைத்தும் பெண்யானையின் பொறுப்பில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன. எங்கு சென்றாலும் கூட்டமாகவே அவை செல்கின்றன. வளர்ச்சிப்பருவத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ஆண்யானைக்குட்டி தன்னை ஒரு வலிமைமிக்க விலங்கு என நினைக்கத் தொடங்குகிறது. அக்கணம் முதல் அது அக்கூட்டத்திலிருந்து தன்னைத்தானே விலக்கிக்கொண்டு ஒட்டியும் ஒட்டாததுமான மனநிலையில் வாழ்கிறது. பதினைந்து அல்லது பதினாறு வயதை எட்டும்போது அந்த ஆண்யானைக்கு மதம் பிடிக்கிறது.
என்ன செய்கிறோம் என்னும் தன்னுணர்வே அப்போது யானைக்கு இருப்பதில்லை. ஓரிடத்தில் நிலைகொள்ள முடியாமல் இங்குமங்கும் அலைகிறது. தன்னைச் சுற்றி காட்டில் எது நடந்தாலும் அக்கணத்தில் அதை யானை பொருட்படுத்துவதில்லை. அதன் உடல்முழுதும் ஒருவித வேகம் படர்கிறது. குட்டைத் தண்ணீரில் இறங்கி, துதிக்கையால் நீரை அளைந்து, உறிஞ்சிப் பீய்ச்சியடித்து ஒரு கலக்கு கலக்குகிறது. திடீரென வேகம் கொண்டு குளத்துக்குள் மூழ்கி ஆழத்தில் உள்ள சேற்றைத் தோண்டி தண்ணீருக்கு மேல் அள்ளி விசிறி விளையாடுகிறது. திளைக்கத் திளைக்க ஆடிவிட்டு குளத்தைவிட்டு வெளியேறி காட்டுக்குள் செல்கிறது. இரவும் பகலும் தனிமையில் திரிகிறது. தனக்கான ஒரு பெண் யானையைத் தேடியலைந்து கண்டடைகிறது. நீண்ட காலத்துக்கு அத்துடன் கூடி வாழ்கிறது. கருச்சுமந்த பெண்யானை குட்டிகளை ஈன்றெடுத்து, அவற்றை அன்போடு பராமரிக்கிறது. ஓர் ஆரோக்கியமான யானையின் சராசரி வயது 70.
ஒரு கூட்டத்தில் ஆண்குட்டிகள் வளரவளர விளையாட்டுச்சண்டைகள் அதிகரிக்கின்றன. இந்த மோதல்களின் போது குட்டிகள் தம் துதிக்கைகளால் ஒன்றையொன்று தள்ளிக்கொள்கின்றன. ஒரு கோணத்தில் இது தாக்குதலாகவும் இன்னொரு கோணத்தில் தம் வலிமையைப் பரிசோதித்துக்கொள்ளும் விளையாட்டாகவும் தோன்றும். ஆனால் காயமடையும் எல்லை வரைக்கும் இம்மோதல் செல்வதில்லை. இந்த விளையாட்டுச் சண்டை மூலம் தன் வலிமை என்ன, பலவீனம் என்ன என்பதை அவை அறிகின்றன. இதன் மூலமே ஒரு கூட்டத்தில் ஒரு குட்டியின் இடமென்ன என்பது தானாகவே அறிவிக்கப்படாத செய்தியாகிவிடுகின்றது.
மூத்த யானைகளிடமிருந்தும் குட்டி யானைகள் பல நேரடியான அனுபவப்பாடங்களை அறிந்துகொள்கின்றன. பிறக்கும்போது குட்டியின் மூளை பெரிய யானையின் மூளை அளவில் 35 விழுக்காடே இருக்கும். எதை உண்பது, எதிரியை எப்படி விரட்டுவது, எப்போது இடம்பெயர்வது, எப்போது இடம்பெயர்வது, தாக்குதலைச் சமாளிப்பது எப்படி போன்ற விஷயங்களையெல்லாம் பார்த்துப்பார்த்தே அவை தம் மூளையில் பதிவு செய்துகொள்கின்றன. இந்த அனுபவத்தின் வழியாகவே ஒவ்வொரு யானையும் தனித்தன்மை பெறுகின்றது.
வனத்தில் இயற்கைச்சூழலில் வாழும் யானைகளைவிட பராமரிக்கப்படும் யானைகள் கூடுதலாக சில ஆண்டுகள் வாழ்கின்றன. 79 ஆண்டுகள் வாழ்ந்த ‘பெரி’ என்னும் யானையே தென்னிந்தியாவில் நீண்ட ஆயுள் கொண்ட யானையாகும். முதுமலையில் பராமரிக்கப்பட்ட தாரா என்ற மற்றொரு யானை 75 ஆண்டுகள் வரை வாழ்ந்தது.
நீண்ட கால கண்காணிப்பின் விளைவாக யானைகளின் வாழ்க்கைமுறை முழுவதையும் அறிந்திருக்கிறார் ராமன் சுகுமார். காட்டுப்பகுதியில் சின்னச்சின்ன கூட்டமாக அங்கங்கே வாழ்கிற மனிதர்களைப்போலவே யானைகளும் சின்னச்சின்ன கூட்டமாகவே வாழ்கின்றன. கிட்டத்தட்ட ஒரு குடும்பவாழ்க்கைபோல என்றே சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இருப்பிடத்தைவிட்டு வெளியே வருகிறது. ஒரு கூட்டத்தின் நேரத்தில் இன்னொரு கூட்டம் குறுக்கிடுவதில்லை. அந்த அளவுக்கு ஒரு தன்னொழுங்கை தன்னிச்சையாகவே அவை கடைபிடிக்கின்றன. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பெயரைச் சூட்டி, அவற்றின் நடத்தை பற்றியும் பழக்கவழக்கங்கள் பற்றியும் ஏராளமான தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார் ராமன்.
ஒரு யானைக்குட்டி ஒரு கிராமத்துக்கே செல்லப்பிள்ளையாக மாறிய ஒரு சம்பவத்தை ராமன் தன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஏறத்தாழ ஒரு புனைகதைக்குரிய சுவாரசியத்துடன் அப்பகுதி அமைந்துள்ளது. தன் சுற்றத்தைவிட்டு எப்படியோ பிரிந்துவிட்ட ஒரு யானைக்குட்டி இரண்டுமூன்று தினங்களாக தன் குடும்பத்தைத் தேடியலைகிறது. இடிமின்னலுடன் பெருகிய மழையில் அகப்பட்டுக்கொள்கிறது. பெருக்கெடுத்தோடிய ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டு எப்படியோ தப்பிவிடுகிறது. குட்டி மெல்ல சமாளித்து எழுந்து நின்று, ஆற்றைக் கடந்து கரையேறியது. இருளில் திசையறியாது தவித்து நின்றபோதில் அவ்வழியாக மேய்ச்சல் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த மாடுகள் பின்னால் நடந்து செல்லத் தொடங்கியது. மாடுகள் தன் கிராமத்தில் தமக்குரிய பட்டியில் அடைந்துகொள்ள, யானைக்குட்டி பட்டிக்கு வெளியே நின்றது. காலையில் அங்கு வந்து பார்த்த கிராமத்து மக்கள் முதலில் அதைக் கட்டு மிரண்டனர். பின்பு தயக்கத்துடன் நெருங்கிச் சென்று தொட்டுப் பார்த்தார்கள். பிறகு கன்றோடு கன்றாக அதையும் சேர்த்து வளர்க்கத் தொடங்கினார்கள். சில நாட்களிலேயே கிராமத்துக்கே அது செல்லப்பிள்ளையாகிவிட்டது. சிறுவர்கள் அதன் மீது ஏறி மேயப்போகும் மாடுகளுடன் காட்டுப்பகுதிக்குச் சென்று வந்தார்கள். காட்டிலிருந்து திரும்பும் சமயங்களில் அது அவர்களுக்காக விறகுக் கட்டைகளைச் சுமந்துவந்து போட்டது.
யானை-மனிதன் உறவு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் தொடங்கியிருக்கவேண்டும். மரங்களைச் சுமந்த யானை மனிதர்களையும் சுமக்கத் தொடங்கி, இறுதியில் மன்னனின் வாகனமானது. படைகளில் துணை செய்தது. வழிபடும் தெய்வமெனப் பணிந்த மனிதன், மறுபுறம் அவற்றைக் கொன்று உண்ணவும் தயங்கவில்லை. தந்தங்களுக்காக வேட்டையாடிக் கொல்லவும் தயக்கம் காட்டியதில்லை.
தொன்மக்கதைகளிலும் வரலாற்றிலும் யானைகள் இடம்பெறும் காட்சிகளையெல்லாம் மிகச்சுருக்கமாக ஒன்றிரண்டு வரிகளில் சொல்லித் தொகுத்தபடி செல்லும் ராமன் சுகுமார் காலம் காலமாக மனிதனுக்கும் யானைக்கும் இடையே தொடர்ந்துவரும் உறவை உணரும்படி செய்கிறார். கி.மு.மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டிலேயே யானை வழிபாட்டுப் பொருளாகிவிட்டது. விவசாயம் சார்ந்த பண்டைக்காலத்தில் வயலில் புகுந்து விளைச்சலை அழிக்கும் யானைகளைக் கண்டு மக்கள் அஞ்சி வணங்கத் தொடங்கினார்கள். யானைகளை அடக்கும் முறைகளையும் பழக்கும் முறைகளையும் நெருக்கம் பாராட்டி நட்புகொள்ளும் முறைகளையும் எல்லோரும் அறிந்துகொள்வதற்காக கஜசாஸ்திரம் என்னும் நூல் எழுதப்பட்டது. யானை பற்றிய அச்சம் மெல்ல மெல்ல நீங்கிய பிறகு யானை மானுடரின் விருப்பத் தெய்வமானது.
திம்பம் என்னும் காட்டுப்பகுதியில் முன்னூறு யானைகள் கொண்ட ஒரு பெருங்குழுவை ஒருசேரக் கண்ட அனுபவத்தை ராமன் சுகுமார் முன்வைத்திருக்கும் பகுதி ஒரு புனைவுப்படைப்பைப்போல உள்ளது. தான் அடைந்த பரவசத்தை ஒவ்வொரு வாசகனும் பெறும் வண்ணம் அவர் சொற்கள் அமைந்துள்ளன. வித்தியாசமான முக அமைப்பையோ, தந்த அமைப்பையோ கொண்ட யானைக்கு ஒரு சிறப்புப்பெயர் சூட்டி, அதன் நடவடிக்கைகளை அருகில் நின்று குறிப்பெடுப்பதற்காக அவர் பின்தொடர்ந்து சென்ற அனுபவங்கள் ஒவ்வொரு வாசகனையும் தானாகவே யானையைப் பின்தொடரும் பயணியாக மாற்றிவிடுகிறது.
தந்தக்கொள்ளை மிக அதிகமாக நிகழ்ந்த காலம் எண்பதுகளையொட்டிய ஆண்டுகளாகும். ஒரு குண்டு போட்டு சுடும் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்துவது எல்லாம் பழைய கதையாகிவிட தானியங்கித் துப்பாக்கி, ஏ.கே.47 வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி யானைகள் கொல்லப்பட்டன. தந்தங்கள் எடுக்கப்பட்டதுமே எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்பட்டன. பல வன அதிகாரிகளே இதற்கு உடந்தையாக செயல்பட்டார்கள். யானை வேட்டைக்கார்ரகளும் வன அதிகாரிகளும் இணைந்துகொள்ளும் சூழலில் பேரழிவைத் தவிர்க்க முடிவதில்லை. இத்தகு ஆபத்தான சூழலில் செயல்பட்டு தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் செயலாற்றிய சிதம்பரம் என்னும் ரேஞ்சர் மிகமுக்கியமானவர். கோபிநத்தம் பகுதியில் செவ்விக்கவுண்டர், வீரப்பன் போன்றோரால் கொல்லப்பட்ட யானைகளும் கைமாறிய தந்தங்களும் ஏராளம். ஆப்பிரிக்க
தந்த இறக்குமதியாளர் என்னும் உரிமத்தை வைத்துக்கொண்டு அவர்கள் உருவாக்கிய பேரழிவு மிகுதி.
வாய் சிதைந்த ஒரு யானையைப் படம் பிடித்த அனுபவத்தை சில வரிகளில் முன்வைத்துவிட்டு அவர் கடந்துபோனாலும், வாசிப்பவனால் கடக்கமுடியாத பகுதியாகவே அது இருக்கிறது. மனிதன் மனம் எந்த அளவுக்கு கீழ்மையாலும் இரக்கமின்மையாலும் நிறைந்திருக்கிறது என்பதை உணரவும் நிறுவவும் அந்த ஒரு பகுதியே போதும். வயலுக்குள் வரும் யானைகளைக் கொல்வதற்காக யானை விரும்பியுண்ணும் பழங்களை வயல்களிடையே பார்வை படும் இடங்களில் வைக்கிறார்கள் விவசாயிகள். வெடிமருந்தால் நிரப்பப்பட்ட பழங்கள் அவை. பசியுடன் ஓடிவரும் யானை அந்தப் பழத்தை துதிக்கையால் எடுத்து வாயில் வைத்து அழுத்தி சாற்றை உறிஞ்ச முயற்சி செய்யும். அந்த அழுத்தத்தில் வெடி வெடித்துச் சிதறும். மென்மை மிக்க துதிக்கையின் முனைப்பகுதி சிதைந்துபோகும். வாய் கோணல்மாணலாகக் கிழிந்துபோகும்.
அதற்குப் பிறகு அந்த யானையால் உரித்துக் கொடுக்கப்படும் ஒரு வாழைப்பழத்தைக்கூட உண்ணமுடியாமல் போகும். பசிக்கு உண்ணவும் முடியாமல் தாகத்துக்கு நீரருந்தவும் முடியாமல் வாட்டமுற்று மெலிந்து, இறுதியில் உயிரைத் துறந்துவிடும். யானையைக் கொல்வது பற்றிய குற்ற உணர்ச்சியே மனிதர்களிடம் இல்லை. விலகிய தந்த அமைப்பின் விசேஷத்தாலேயே ஒரு யானைக்குப் பெயர்சூட்டி தொடர்ந்து கவனித்து வருகிறார் ராமன் சுகுமாரன். எவ்வளவு தொலைவில் அது தெரிந்தாலும், அவரால் அந்த யானையை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் அந்த யானையைப் பார்க்கிறார். வாய் சிதைந்துபோன நிலையில் உடல் மெலிந்து காட்சியளிக்கிறது அது. ஒரு படம் எடுத்துக்கொண்டு மெளனமாகத் திரும்பிவிடுகிறார்.
பிறந்ததிலிருந்து வளர்ந்து ஆளாவது வரை யானையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பற்றி ராமன் சுகுமார் அளித்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றும் யானைகளோடு நெருக்கம் கொள்ளத் தூண்டும் அளவுக்கு சுவாரசியமாக உள்ளன. பிறந்த குட்டியின் கால்கள் வலிமையற்றவை. நாளாக நாளாகத்தான் அவை வலிமை கொள்கின்றன. அப்போதும் கால்களைப் பயன்படுத்தி நடப்பதற்கு அவை தடுமாறும். கொஞ்சம் கொஞ்சமாகவே அவை நிற்கவும் நடக்கவும் கற்கின்றன. குட்டிகள் முதலில் தாய் யானையின் நிழல்களுக்கிடையிலேயே நடந்து பழகுகின்றன. அந்த நிழலையே அது பாதுகாப்பானதாகக் கருதுகிறது.
ஒரு குட்டி பிறந்ததிலிருந்து எழுந்து நடக்க ஒரு வார காலம் தேவைப்படுகிறது. பிறகு குளத்தில் இறங்கி விளையாடுகிறது. துதிக்கைப்பயன்பாடு பற்றிய அறிவு அப்போது அதற்கு இருப்பதில்லை. நேரடியாக வாயைத் திறந்தே அருந்துகிறது. ஒரு மாதத்துக்குப் பிறகே ஒரு குட்டி தனக்குத் தேவையான புல்லைப் பிடுங்கித் தின்ன முயற்சி செய்கிறது. தனது துதிக்கையால் மண்ணை வாரி மேலே இறைத்துக்கொண்டு, உடல்சூட்டைத் தணித்துக்கொள்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகே அது தண்ணீரில் சுதந்திரமாக இறங்கிக் குளிக்கவும் விளையாடவும் தொடங்குகிறது. எனினும் தாயுடனான நெருக்கத்தை முற்றாகக் கைவிடுவதில்லை. சின்ன ஆபத்துக் காலத்திலும் தாயின் கால்களுக்கடியில் ஓடி ஒளிந்துவிடுகிறது. ஓராண்டு நெருங்கும்போது இலை தழைகளைத் தின்னவும் மூங்கிலை உடைத்து முன்காலால் அழுத்திப் பிய்த்துத் தின்னவும் கற்றுக்கொள்கின்றன. இரண்டு வயதாகும்போதுதான்
சுயமாகவே தனக்குரிய
உணவைத் தேடி வெளியே செல்லவும் உண்ணவும் பழகுகிறது.
காட்டுக்குள் வாழ்ந்துபெற்ற அனுபவக்குறிப்புகளும் கண்டறிந்த ஆய்வுக்குறிப்புகளும் நிறைந்த இப்புத்தகம் ஒரே அமர்வில் படிக்கத்தக்க விதமாக அமைந்துள்ளது. டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு, புத்தகத்தை இன்னும் நெருக்கமாக உணரவைக்கிறது. சமகாலத்தில் யானைகள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பல ஆளுமைகள் கட்டுரையின் ஏதோ ஒரு பகுதியில் வந்துபோனபடி இருக்கிறார்கள். யானையிடம் செயல்படும் ‘கேளா ஒலி’ ஆற்றல் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட ம.கிருஷ்ணன், யானை மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழ்வாசகர்களுக்கு அறிமுகமுள்ளவர்கள்.
யானைகளுக்காகவே
வாழ்பவர்கள் அவர்கள். அவர்கள் பங்கேற்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சி மேற்குவங்காளத்தில் நடைபெற்றது. அதில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட ராமன் சுகுமாரன் அதுவரைக்கும் தான் சேகரித்துவைத்திருக்கும் ஆவணங்களும் சேகரிப்புகளும் சரியானவை என்பதையும் தன் ஆய்வு செல்லும் திசை சரியானதே என்பதையும் அந்தச் சந்திப்பின் விளைவாக உறுதிசெய்துகொள்ள முடிந்தது.
”நாட்டின் எல்லையில் உள்ள காடுகளை யானைகளின் வாழ்விடமாகப் பாதுகாப்பது அரசனின் கடமை. யானைகளைக் கொல்பவர்கள் யாராக இருந்தபோதும் மரணமே அவர்களுக்குத் தண்டனை” என்று கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் விதி சமைத்திருக்கிறது. ஆயினும் விதி சமைக்கப்பட்ட இந்த மண்ணில்தான் இரக்கமே இல்லாமல் யானைக்கொலைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆய்வின் மூலம் அதை நிறுவும் ராமன் சுகுமாரன் மானுடமனசாட்சியின் முன் யானைகள் காப்பாற்றப்படவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கிறார். வனத்தின் உயிர் புலி என
வைத்துக்கொண்டால்
அதன் உடல் யானை என்பது அவர் வாக்கு. துரதிருஷ்டவசமாக, நம் அலட்சியப்போக்கினால் நம் உடலை நாமே சிறுகச்சிறுக சிதைத்துக்கொண்டிருக்கிறோம்
”தொண்ணூறுகளுக்குப் பிறகு யானைகளின் வாழ்விடங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. புளிஞ்சூர் – கோழிப்பாளையம் இடையேயான முக்கிய வலசைப்பாதை
மீனாட்சி என்னும் செல்லப்பெயரைக்கொண்ட யானையின் தலைமையில் ஒரு கூட்டத்தாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது விளைநிலமாக மாற்றப்பட்டுவிட்டது. யானைகள் வலம்வர விரிவான வலசைப்பாதை தேவை. மனிதர்களின் தேவைக்கும் யானைகளின் தேவைக்கும் இடையே நியாயமான சமரசப் புள்ளியை நாம் கண்டடைய வேண்டும். ஒருவேளை அம்முயற்சியில் நாம் ஈடுபடவில்லையென்றால் யானைகளின் எதிர்காலமே பெரிய கேள்விக்குறியாகிவிடும்” என்னும் ராமன் சுகுமாரின் பின்னுரைக்குறிப்பை ஓர் அபாய அறிவிப்பாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.