Home

Monday, 18 June 2018

பொம்மைக்காரி - சிறுகதை




-1-

                ஒவ்வொரு பொம்மையையும் ஒரு பிடி வைக்கோலில் வைத்து சுருட்டிக் கொடுத்தாள் வள்ளி.  அதை வாங்கி அடிபடாதபடி பக்குவமாக ஒன்றன்மீது ஒன்றாக கவனமுடன் கூடைக்குள் அடுக்கினான் மாரி.  இரண்டு கூடைகள் நிறைய அடுக்கி முடித்த பிறகும் பொம்மைகள் எஞ்சியிருந்தன.  மிச்சமிருந்த வைக்கோலை வாரி சுவரோரமாக ஒதுக்கி அதன்மீது எல்லா பொம்மைகளையும் அடுக்கினாள்.  வர்ணம் கலந்த சட்டிகள் குடிசைக்கு வெளியே மரத்தடியில் காணப்பட்டன.  அவற்றை அங்கேயே விடுவதா அல்லது எடுப்பதா என்ற குழப்பத்தோடு மாரியையே பார்த்தபடி நின்றாள். 

                அவன் சொல்லாமல் செய்கிற வேலை அவனுக்கு கடுமையான கோபத்தைத் தரும் என்பதை ஏழெட்டு வருஷ வாழ்க்கையில் அவள் அறிந்துவைத்திருந்தாள்.  சீக்கிரம் முடிக்கலாம் என்றோ அல்லது சிதறிக்கிடப்பவற்றை ஒழுங்குபடுத்தலாம் என்றோ தன்னிச்சையாக அவள் செய்த வேலைகள் பல முறை அவனிடம் அடிபடுவதிலேயே முடிந்தன. அடிபட்டு அடிபட்டு அவளும் ஒரு பொம்மையைப்போல மாறிவிட்டிருந்தாள்.  சோறுகுழம்பு ஆக்குவதுமட்டுமே அவளாக செய்கிற செயல்கள்.  பக்கத்தில் இருந்தாலும் சரி, சற்றே தொலைவில் இருந்தாலும் சரி, அடித்தொண்டையில் "வள்ளீ" என்று எதிரொலிக்கிறமாதிரி வேகமாகக் குரல்கொடுப்பதுதான் அவன் பழக்கம்.  ஒரு குரல் அல்லது இரண்டு குரல்.  அவ்வளவுதான்.  அதற்குள் அவன்முன்னால் ஓடிச் சென்று நின்றால்தான் பிழைக்கமுடியும்.  இல்லையென்றால் அடிகளைத் தவிர்க்கமுடியாது.  வாய்திறந்து காரணம் சொன்னாலும் அவனுக்குப் பிடிக்காது.  "வாய வளக்காதடி தேவடியா முண்ட" என்று வாயிலேயே குத்துவான்.
                கூடைகள்மீது பிய்ந்துபோன ஒரு போர்வையை போர்த்தி கட்டி முடிச்சுபோட்டு இறுக்கினான் மாரி. அவன் முதுகுப்பட்டைகள் கரிய பலகைகள்போல விரிந்து சுருங்கின. பக்கவாட்டில் மார்பெலும்புகள் தெரியாத அளவுக்குமட்டுமே தசை இருந்தது. நீளமான கைகள்.  அழுந்தி ஒடுங்கிய வயிறு.  உடல்முழுதும் கருகருவென முடியடர்ந்து சுருண்டிருந்தது. மண்புழுதியும் வர்ணக்கலவையும் பட்டு திரிதிரியாய் சுருண்டும் கற்றையாய் மடிப்புண்டு ஒதுங்கியும் ஒழுங்கில்லாமல் வளர்ந்த தலைமுடியை சுருட்டி கொண்டையாகக் கட்டியிருந்தான். "புடிச்சிவச்ச புள்ளயாராட்டம் எதுக்குடி நிக்கற?" என்று வள்ளியைப் பார்த்தான். பிறகு அவனாகவே "போடி, போயி அந்த வர்ண சட்டிங்கள கொண்டாந்து உள்ள வைடி.." என்று விரட்டினான்.  உடனே அவள் வெளியே ஓடினாள்.
                நிலா வெளிச்சத்தில் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த பனைமரங்களின் நிழல்கள் ஒற்றைக்காலை ஆட்டிக்கொண்டு யார்யாரோ நிற்பதுபோல பீதியைக் கொடுத்தன.  வர்ணச்சட்டிகளுக்கு அருகே ஒரு கறுப்பு நாய் சுற்றிச்சுற்றி வந்து முகர்ந்து பார்த்தது.  வள்ளியைக் கண்டதும் நிமிர்ந்து முறைத்தது. அதன் கண்களின்மினுமினுப்பு கலவரமூட்டுவதாக இருந்தது.  "தூ.. ஓடு.." என்று இரண்டடி வேகமாக வைத்து அதட்டியதும் அந்த நாய் ஓடியது.  வர்ணம் சிதறிவிடாதபடி ஒவ்வொரு சட்டியாக கொண்டுவந்து குடிசைக்குள் ஒரு மூலையில் கவனமாக அடுக்கினாள். 
                "வள்ளி, நெருப்புக்கட்ட எடுத்தா.." கூடைகளுக்குப் பக்கத்தில் சுவரில் சரிந்தவாக்கில் உட்கார்ந்திருந்த மாரி சத்தம் போட்டான்.  அவள் வெளியே சென்று கல்லடுப்பில் எரிந்துகொண்டிருந்த ஒரு சின்ன விறகுக்கட்டையை உருவி எடுத்துவந்து கொடுத்தாள். உடனே இடுப்புத் துணியில் முடிந்துவைத்திருந்த சுருட்டு முனையை அதில் காட்டிப் பற்றவைத்தான் மாரி. தீ பற்றிப் படரத் தொடங்கியதும் மறுமுனையில் வாயைவைத்து வேகவேகமாக ஊதினான்.  புகையின் நெடி குடிசையெங்கும் பரவியது.  தொடக்கத்தில் அவனுக்கு இந்தப் பழக்கம் இல்லை.  இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மாம்பழப்பட்டு சந்தையில் பொம்மை விற்கப் போன இடத்தில்தான் கற்றுக்கொண்டான்.  அன்று கள்ளுக்கடையிலிருந்து திரும்பி வந்தபோது அவன் வாயில் சுருட்டு இருந்தது. சாம்பல் நிறப் புகை அடர்த்தியாக அவன் வாய்வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியேறிச் செல்வதை அச்சத்தோடும் ஆச்சரியத்தோடும் அவள் பார்த்து நின்றாள். அவன் இடுப்புத் துணியின் மடிப்பில் ஒரு கட்டு சுருட்டு இருந்தது. அதற்கப்புறம் எந்தச் சந்தைக்குப் போனாலம் ஒரு கட்டு சுருட்டு வாங்கி வைத்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 
                மாரி குடிசைக்கு வெளியே வந்து நின்றான். இருள் படர்ந்த மரங்களின் தோற்றம் நீண்ட மலைத்தொடரின் மடிப்புகளைப்போல தெரிந்தன. வானத்தில் மிதக்கும் மேகங்களைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். அப்போது அனிச்சையாக அவன் எழுப்பிய சத்தம் ஒரு மிருகத்தின் ஊளையைப்போல இருந்தது. நிதானமாக சருகு நொறுங்க நடந்து ஒரு மரத்தடியில் நின்றான். புதரில் ஒதுங்கியிருந்த ஒரு காட்டுப்பூனை மிரண்டு வேறொரு திசையைநோக்கி ஓடியது.  நிலவையும் மேகத்திட்டுகளையும் பார்த்தபடி நின்ற நிலையிலேயே சிறுநீர் கழித்தான்.
                தோப்புக்குள் வலதுபக்கமாக நீண்டு சென்ற பாதையில் இறங்கி வேகமாக நடந்துபோனான்.  ஒரு நிமிடம் அன் போவதையே இமைகொட்டாமல் பார்த்தபடி நின்ற வள்ளி வேகமாக திரும்பி கல்அடுப்புக்குள் எருமுட்டைத் துண்டுகளையும் காய்ந்த விறகுகளையும் வைத்து தீமூட்டினாள்.  சுடர் பரவி நன்றாக எரியத் தொடங்கியதும் சோற்றுப் பானையை ஏற்றி உலையில் தண்ணீர் வைத்தாள்.  குடிசைக்குள் அடுக்குப் பானைக்குள் வைத்திருந்த நொய்யரிசியைக் கொண்டுவந்து கழுவி களைந்து உலையில் போட்டுவிட்டு அகப்பையால் ஒரு கிளறு கிளறியபிறகு வடிதட்டை வைத்து மூடினாள். 
                அடுப்புக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து சாயங்காலம் குளக்கரையில் தூண்டில் போட்ட பையனிடம் காட்டுக்கிழங்கு கொடுத்து வாங்கிய கெண்டை மீன்களை கழுவினாள்.  கழுத்துப் பக்கம் பாதியாக அரிந்து விரலை நுழைத்து குடலை வெளியே எடுத்து தள்ளிவிட்டு செதில்களையெல்லாம் தேய்த்து ஒதுக்கினாள். மீன் வாசனைக்கு எங்கிருந்தோ ஒரு பூனை ஓடிவந்து அருகில் நெருங்காமல் தள்ளி நின்று சத்தம் கொடுத்தது. அரிந்து கீழே போட்ட பகுதிகளையெல்லாம் வாரி ஒரு இலையில் வைத்து சுருட்டி பூனை நின்றிருந்த பக்கமாக கொண்டுசென்று வைத்தாள்.  ஆவலோடு குனிந்து அக்கழிவுகளைத் தின்றது பூனை. 
                கொதிக்கத் தொடங்கிய சோற்றை ஒரு முறை துழாவிவிட்டு குழம்புக்கு சாந்து அரைக்க உட்கார்ந்தாள்.  சட்டிக்கு அருகில் நெருங்கி வந்த பூனையை "ந்தா ஓடு.." என்று கையை வீசி விரட்டினாள். 
                சோறும் குழம்பும் தயாரான பிறகு, எல்லாவற்றையும் எடுத்து  ஓரமாக மூடிவைத்துவிட்டு தண்ணீர் நிரம்பிய பானையை தூக்கி அடுப்பில் வைத்தாள்.  விறகுக் கட்டையை வெளியே இழுத்து தீயைக் குறைத்தாள்.  தண்ணீர் சுடவைப்பதற்காக என்று கூடை நிறைய உலர்ந்த சருகுகளைச் சேகரித்துவைத்திருந்தாள்.  அந்தக் கூடையைத் தூக்கிவந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கையாக அள்ளிஅள்ளி அடுப்புக்குள் போட்டாள்.  மொறுமொறுவென்று சருகுகள் வெடித்துச் சிவந்து எரிந்து மடங்கிக் கரியானதும் இன்னொரு கை சருகுகளை அள்ளி வைத்தாள்.  உலர்ந்த சருகின் காம்பை கடித்து மென்றுமென்று துப்பியபடி எரியும் நெருப்பையே பார்த்தபடியிருந்தாள். அருகில் சருகுகள் மிதிபடும் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தாள். 
                தோப்பிலிருந்து பிரியும் பாதையிலிருந்த மேட்டிலேறி அவன் குடிசையை நோக்கி வருவது தெரிந்தது.  தண்ணீரை அவசரமாகத் தொட்டுப் பார்த்தாள்.  நன்றாக சூடேறிக் கொதித்தது.  வாய் அகன்ற இன்னொரு பானையை அருகில் இழுத்து அதற்குள் வெந்நீரை ஊற்றினாள்.  பக்கத்திலிருந்த வேறொரு பானையிலிருந்த தண்ணீரையும் அளவாக ஊற்றி விளவினாள்.
                அவன் வந்து நின்ற இடத்தில் அந்த வாய் அகன்ற வெந்நீர்ப் பானையை தூக்கிவந்து வைத்தாள் வள்ளி. தண்ணீரை விரலால் தொட்டுப் பார்த்து ம் என்றபடி ஒரு கல்மீது உட்கார்ந்தான்.  புளித்த கள்வாடை வயிற்றைப் புரட்டியது. அவசரம்அவசரமாக புடவையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஒரு சட்டி நிறைய தண்ணீரை மொண்டு அவன் முதுகில் மெதுவாக ஊற்றினாள். அடுத்தடுத்து அவன் தோள்களிலும் மார்பிலும் ஊற்றினாள்.  உடம்பில் எல்லாப் பாகங்களிலும் தண்ணீர் படும்படி உடலை வளைத்துவளைத்துக் காட்டினான் மாரி.  வண்டல் மண்ணைக் குழைத்து அவன் உடலை அழுத்தித் தேய்த்தாள்.  விரல் பட்ட இடமெல்லாம் கற்சிற்பம்போல உறுதியாக இருந்தது.  ஒவ்வொரு கையையும் நீட்டிப் பிடித்து அக்குளையும் கழுத்தையும் தேய்த்துவிட்டாள்.  சட்டியில் தண்ணீரை நிரப்பியெடுத்து மண்ணெல்லாம் கரைந்து அகல ஊற்றினாள்.  இன்னொரு முறை வெறும் கையால் உடல்முழுதும் தேய்த்து தண்ணீர் ஊற்றினாள்.   சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் எழுந்து நின்றான்.  எதுவும் பேசாமல் கையை நீட்டி அவளிடமிருந்து சட்டியை வாங்கினான்.  மிச்சமிருந்த தண்ணீரை மொண்டுமொண்டு முகத்தின்மீது ஊற்றி, தண்ணீர் தன் உடல்முழுதும் வழிந்தோடுவதை வேடிக்கை பார்த்தான்.  வாய்நிறைய தண்ணீரை நிரப்பி கொப்பளித்து துப்பினான். புடவையைச் சரிப்படுத்தியபடி குடிசைக்குள் ஓடிச் சென்ற   வள்ளி மாற்றுத்துணியை எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.
                ஈரம் சொட்டச்சொட்ட நடந்துவந்து அவளிடமிருந்து துணியை வாங்கிய மாரி முகத்தையும் மார்பையும் அழுத்தமாகத் துடைத்தான்.  பிறகு, அதே துணியை இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டான்.  ஈரக் கோவணத்தை அவிழ்த்து கல்லின்மீது போட்டுவிட்டு குடிசைக்கு வந்தான்.
                வாசலில் ஒரு கீற்றை எடுத்து அவசரமாக விரித்தாள் வள்ளி.  அடுப்புக்கு அருகில் இறக்கி மூடிவைத்திருந்த சோற்றுப்பானையையும் குழம்புச்சட்டியையும்  கொண்டுவந்து அவன் அருகில் வைத்தாள். சட்டியைத் திறந்ததுமே மீன்குழம்பு வாசனை குப்பென்று அடித்தது.  வாய் அகன்ற சட்டிக்குள் சோற்றை அள்ளி வைத்து குழம்பை மொண்டு ஊற்றினாள்.  அகப்பையால் துழாவி நாலைந்து மீன் துண்டுகளை எடுத்து வைத்தாள்.  ஏது எப்படி என்று ஒரு வார்த்தைகூட அவன் கேட்கவில்லை. சோற்றையும் குழம்பையும் நன்றாக சேர்த்துவைத்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வாய்க்குள் போட்டு மென்றான் அவன்.  கன்னங்கள் மேலும் கீழும் அசைந்தன.  பாதி சோறு வாயில் இருக்கும்போதே ஒரு துண்டுமீனை எடுத்து மென்று சுவைத்தான். அவன் மெல்லுவதைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அவள்.  உப்பு, காரம் பற்றி ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவள் மனம் தவித்தது.  எதுவுமே பேசாமல் இரண்டு மூன்று வாய் அள்ளி சாப்பிட்டு எழுந்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. இன்னொரு துண்டு மீனை எடுத்து மென்றபடி சோற்றை வேகவேகமாக உருட்டித் தின்றான். சட்டியில் பிசைந்த சோறு தீர்ந்ததும் இன்னும் கொஞ்சம் சோற்றை  அள்ளிப் போட்டு குழம்பை நிரப்பினாள் வள்ளி.  அவன் சோற்றை மெல்லும் சத்தம் வேடிக்கையாக இருந்தது.  நாலைந்து நாய்க்குட்டிகள் சேர்ந்து ஒன்றாக தண்ணீர் குடிக்கிறமாதிரி தோன்றியது.  இடது கைவிரலால் மூக்கில் வடியும் நீரைத் துடைத்தபடி பக்கவாட்டில் திரும்பி ஓரக்கண்ணால் அவளை ஒரு கணம் பார்த்தான் மாரி.  அவள் திடுக்கிட்டு திரும்பி அவன் தட்டைப் பார்த்தாள்.  மற்றொரு முறை சோறெடுத்து வைப்பதற்காக பானையை அவன் அருகில் நகர்த்தியபோது அவன் கையை நீட்டி "ம்.." என்று தடுத்தான்.  சட்டியில் மிச்சமிருந்த சோற்றையெல்லாம் ஒரே உருண்டையாக உருட்டி மீன்துண்டை அதன் நடுவில் வைத்து வாய்க்குள் தள்ளிவிட்டு எழுந்தான். 
                கையைக் கழுவிக்கொண்டு அவன் வெளியேறியதும் சோற்றுப்பானையையும் குழம்புச்சட்டியையும் ஓரமாக எடுத்துவைத்து மூடினாள் வள்ளி.  குடிசைக்குள் கொடியில் தொங்கிய ஒரு புடவையை எடுத்துக்கொண்டு பின்பக்கம் மகிழமரத்தடியில் இருந்த தாமரைக் குளத்தைநோக்கிச் சென்றாள்.  மேகங்களின் பிம்பம் தண்ணீரில் அரிசிச்சோறு பரப்பிவைத்த பாய்களைப்போல மின்னியது. 
                கட்டியிருந்த சேலையை அவிழ்த்து மார்புக்குமேல் முடிச்சிட்டபடி குளத்தில் இறங்கினாள்.  முழங்கால் ஆழத்துக்கு நடந்துசென்று பிறகு தண்ணீருக்குள் உட்கார்ந்தாள்.  கைநிறைய தண்ணீரை அள்ளியள்ளி முகத்தில் அடித்துக்கொண்டாள்.  உடல் சோர்வு கரைந்து அகல்வதை அவளால் உணரமுடிந்தது.  தண்ணீருக்குள் இருந்த சேற்றுமண்ணை அள்ளி உடல்முழுதும் தேய்த்துத் தேய்த்துக் குளித்தாள்.  துணிமுடிச்சைத் தளர்த்தி மார்புக்கடியே விரலால் தேய்த்து பிசுபிசுப்பை நீக்கிக்கொண்டாள்.  குளித்துமுடித்த பிறகு எழுந்துவந்து கரையில் வைத்திருந்த புடவையை எடுத்து சுற்றிக்கொண்டு ஈரப்புடவையைக் கசக்கிப் பிழிந்தாள்.  உடம்புக்கு ஒரு புதுத்தெம்பு வந்ததுபோல இருந்தது. 
                குடிசைக்குத் திரும்பி ஒரு சட்டியில் சோற்றை நிரப்பி குழம்பை ஊற்றிக்கொண்டு உட்கார்ந்தான். காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடாததால் சோற்றைப் பார்த்ததும் பசி தீவிரம் கொண்டது.  வேகமாக எடுத்து சாப்பிட்டு பழக்கமில்லாததால் மெதுவாக பிசைந்து உருட்டி சாப்பிட்டாள்.  திடீரென அவளுக்கு தன் அம்மாவின் ஞாபகம் வந்தது.  எட்டு பிள்ளைகளையும் வட்டமாக உட்காரவைத்து, தெருவில் சுற்றியலைந்து வாங்கி வந்த ஏகாளிச் சோற்றையும் குழம்புகளையும் ஒரே சட்டியில் போட்டுப் பிசைந்து உருட்டிஉருட்டி ஒவ்வொருவருடைய கையிலும் வைத்து சாப்பிடச் சொன்ன அம்மாவின் முகம் நெஞ்சில் மிதந்துவந்தது.  பருப்புக்குழம்பும் கவிச்சைக்குழம்பும் கலந்த கலவையான மணம் அக்கணத்தில்  தனது கையிலிருந்து எழுந்து படர்வதுபோல இருந்தது. அம்மா என்ற குரல் அவளைமீறி வெளிப்பட்டது. 
                சட்டிகளையெல்லாம் கழுவி உள்ளே கொண்டுவந்து அடுக்கினாள்.  வெளியே சென்ற மாரி வரக்கூடுமோ என்ற எண்ணத்தில் எதிர்பார்த்தபடி சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தாள்.  காணவில்லை.  களைப்பில் உடல்வலி மிகுதியாக இருந்தது. தரையில் பாயை விரித்து முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த போது அம்மாவின் ஞாபகம் மறுபடியும் வந்தது.  "கத்திரிக்கா கொழம்புவச்சி, கருவாட்ட சுட்டுவச்சி, என்ன பெத்த அம்மா, ஆசயா ஊட்டிடுவா, அன்பா பேசிடுவா, என்ன பெத்த அம்மா, நீ இல்லாம கத்திரிக்காவுக்கும் கதியில்ல.. கருவாட்டுக்கும் கதியில்ல.. என்ன பெத்த அம்மா, ஆச காட்டவும் ஆளில்ல, அன்பு காட்டவும் ஆளில்ல.." என்று மனத்துக்குள்ளேயே ஒப்பாரி வரிகள் ஓடின. நெஞ்சே கரைந்துபோனதுபோல தோன்றியது. ஏதேதோ எண்ணங்கள் கணக்கற்று சுழன்றன. பிறகு ஏதோ ஒரு நேரத்தில் சரிந்து தூங்கிவிட்டாள்.
                ஆழ்ந்த உறக்கத்தில் தன்னை யாரோ புரட்டிவிடுவதுபோல உணர்ந்து கண்களைத் திறந்தபோது மாரி அருகில் படுத்து அவள் தொடைகளை தன்னைநோக்கி இழுப்பதை உணர்ந்தாள்.  தூக்கம் மிதக்கும் அரைக்கண்களால் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவள்மீது அவன் அவசரமாகப் படர்ந்து ஒரு பாறையைப்போல அழுத்தினான். கால்களால் அவளை இறுக்கியபடி கெட்ட வார்த்தைகளால் அவளை இடைவிடாது திட்டினான்.  வெறிகொண்ட ஒரு மிருகத்தைப்போல அமைந்திருந்தது அவன் வேகம்.  அவள் தலைமுடியை இறுக்கி அழுத்தினான்.  கள்வாடை வாந்தி வருவதுபோல குமட்டியது.
                மூச்சுவாங்க எழுந்து மண்சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தான் மாரி.  ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்தான்.  நாலைந்து தரம் ஆழமாக இழுத்து புகையைவிட்டான்.  பிறகு அவள் பக்கமாகத் திரும்பி "நாளைக்கி சந்தையில உனக்கு ஒரு பொடவை எடுக்கணும்டி வள்ளி" என்றான். அவள் தூங்குவதற்காக கண்களை மறுபடியும் மூடியபடி "ம்.." என்றாள்.  "நம்ம பொம்ம வர்ணத்துல வாங்கலாமா..?" என்று மறுபடியும் கேட்டான். அவன் வார்த்தைகள் அரைகுறையாக காதில் விழ அவள் அதற்கும் "ம்.." என்றாள்.  "பொம்மக்காரன் பொண்டாட்டிக்கு பொம்மவர்ண பொடவ, பொம்ம வர்ண பொடவயில பொம்மபொம்மயா பூவு.." என்று பாட்டுக்கட்டி முனகினான். முனகும்போதே அந்த வரிகள் அவனுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்துவிட இன்னொரு முறை ஏற்ற இறக்கங்களுடன் குரலை இழுத்துப் பாடினான்.  திடீரென அவனுக்கு சந்தோஷம் தொற்றிக்கொண்டது. இன்னும் சற்றே உயர்ந்த குரலில் அதையே மறுபடியும் பாடினான்.  குடிசையின் மூலையில் வைத்திருந்த பல்லாவில் மிச்சமிருந்த கள்ளை எடுத்து நாலைந்து மிடறுகள் குடித்தான்.  அதன் புளித்த வாடையை அவன் நெஞ்சம் இனிமையாக உணர்ந்தது.  பிறகு மெல்ல நகர்ந்து வள்ளிக்கு அருகில் படுத்து உறக்கத்தில் மூழ்கினான். 

-2-

                விடிவதற்கு நெடுநேரத்துக்கு முன்பே விழிப்பு வந்து கண்களைத் திறந்தாள் வள்ளி.  எங்கும் நிறைந்திருறந்த அமைதியை அவள் மனம் மிகவும் விரும்பியது.  தற்செயலாக மாராப்புப்புடவை முழுக்க நழுவி ஒரு பாம்பைப்போல அருகில் சுருண்டு கிடப்பதை உணர்ந்து ஒருகணம் துணுக்குற்றாள்.  மறுகணமே அவள் பார்வை மாரியின் பக்கமாகத் திரும்பியது.  உருட்டிவிட்ட கற்சிலையைப்போல அசைவே இல்லாமல் கிடந்தான் அவன்.  அவசரமாக புடவையை இழுத்து திறந்துகிடந்த மார்புகளை மூடினாள்.  எழுந்து நின்று புடவையை சரிசெய்தபடி குடிசைக்கு வெளியே வந்து அடுப்பிலிருந்து கரியையும் சாம்பலையும் எடுத்து நுணுக்கி பல்விளக்கத் தொடங்கினாள்.  இன்னும் விடியாத வானத்தில் மேகங்கள் கூட்டம்கூட்டமாக காணப்பட்டன.  சுத்தமாக காற்றே இல்லை.  மரங்கள் அசைவே இல்லாமல் நின்றன. பானையில் இருந்த தண்ணீரை மொண்டு வாயைக் கழுவிக் கொப்பளித்தாள்.  பிறகு, முகத்தைத் துடைத்தபடி எதிரிலிருந்த தோப்புக்குள் நடந்துசென்று  காலைக்கடன்களை முடித்துவிட்டு திரும்பினாள். 
                அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். எழுப்ப பயமாக இருந்தது.  எழுப்பாவிட்டாலும் குற்றமாகிவிடும் என்றும் தோன்றியது.  மெதுவாக அவன் தோளைத் தொட்டாள். கருங்கல் போல இருந்தது.  பீதியோடு அசைத்து உலுக்கினாள்.   மூன்றாவது உலுக்கலில் ஏதோ கனவுகண்டு விழித்ததுபோல அரக்கப்பரக்க சத்தமிட்டபடி எழுந்து உட்கார்ந்தான்.  அவன் கோபத்தில் அடிக்கக்கூடுமோ என்று சட்டென பின்வாங்கி அவனை கூர்மையாகப் பார்த்தபடி நின்றாள்.  அவன் எதுவும் பேசாமல் அவளையே வெறித்துப் பார்த்துவிட்டு "வெடிஞ்சிடுச்சா?.." என்று மெதுவாகக் கேட்டான்.  அவள் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.  இடைவிடாமல் நாலைந்து கொட்டாவி விட்டபிறகு எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.  இடுப்பில் கட்டியிருந்த துணி சட்டென அவிழ்ந்து கீழே விழ நிர்வாணமாக நின்றான்.  அவள் சட்டென பின்வாங்கி பொம்மைக் கூடைகள் பக்கமாகச் சென்றாள்.  அவன் அவளையே முறைத்தபடி துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு "நீராகாரம் கலக்கி வைடி.." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். 
                இரண்டு கூடைகளையும் ஒவ்வொன்றாக இழுத்து வந்து வெளியே வைத்தாள் வள்ளி.  தலையில் சும்மாடு வைக்க வசதியாக இரண்டு துணியை எடுத்து முறுக்கி வட்டமாகச் சுற்றி கூடைகள்மீது வைத்தாள்.  சோற்றுப் பானையை இழுத்து கையைவிட்டு கலக்கி நீராகாரத்தை ஒரு சட்டியில் ஊற்றினாள். பிறகு அதில் உப்பு போட்டு கலக்கி நாலுவாய் குடித்தாள்.  சில்லென்று வயிற்றுக்குள் இறங்கியதும் ஒரு தெம்பு பிறப்பதுபோல இருந்தது. உதடுகளை நனைத்து நாக்கை சப்புக்கொட்டினாள். சோற்றை பிழிந்து குழம்புச்சட்டியில் போட்டுப் புரட்டினாள்.  பிசைந்த சோற்றையெல்லாம் இன்னொரு சட்டியில் போட்டு நிரப்பி ஒரு சின்னத் துணியால் மூடி அதை வேறொரு துணிக்குள் வைத்து முடிச்சிட்டு தோளில் போட்டுக்கொள்கிற மாதிரி எடுத்துவைத்தாள். அவசரமாக பானைகளையெல்லாம் ஒதுக்கி சாம்பலிட்டு தேய்த்து கழுவி சுவரோரமாக கவிழ்த்துவைத்தாள். 
                மாரி திரும்பிவந்து சாம்பலை எடுத்து வேகவேகமாக பல் தேய்த்து வாய் கொப்பளித்தான்.  அவசரமாக வாயைத் துடைத்துக்கொண்டு திரும்பியதும் நீராகாரத்தை எடுத்து நீட்டினாள் வள்ளி.  ஒரே மூச்சில் எல்லாவற்றையும் குடித்துவிட்டு வேகமாக ஏப்பம் விட்டபடி சட்டியை திருப்பிக் கொடுத்தான்.  உதடுகளிலிருந்து கழுத்தைநோக்கி கோடாக வழிந்து மார்பின் முடிக்குள் இறங்கிய துளிகளை புறங்கையால் துடைத்து உதறினான்.  "எல்லாத்தயும் எடுத்துட்டியா?" என்று வள்ளியைப் பார்த்து வேகமாக கேட்டான்.  "ம்.." என்றபடி அவனைப் பார்த்து தலையசைத்தாள் வள்ளி.  தலைமீது வைத்துக்கொள்ள சும்மாட்டுத் துணியை  அவனிடம் ஒன்றை நீட்டிவிட்டு ஒன்றை தனது தலைமீது வைத்துக்கொண்டாள்.  "வாயத் தொறந்தா முத்து உதுந்துடுமா?" என்றபடி ஒரு கூடையை தூக்கி அவள் தலைமீது வைத்தான் மாரி. சற்றே குனிந்து அதை வாங்கிக்கொண்ட வள்ளி தலையை முன்னும் பின்னுமாக அசைத்து சுமையைச் சரிப்படுத்திக்கொண்டாள். தன் சும்மாட்டுத் துணியை சரியாக வைத்துக்கொண்டு கால்களை அகட்டி உட்கார்ந்த வாக்கில் குனிந்து மற்றொரு கூடையை ஒரே மூச்சில் தூக்கி தன் தலைமீது வைத்துக்கொண்டு "ஐநாரப்பா.." என்றபடி நிமிர்ந்தான்.  பிறகு, ஓரமாக கட்டிவைக்கப்பட்டிருந்த சோற்றுமூட்டையையும் கைத்தடியையும் எடுத்துக்fகொண்டான்.  தோப்புக்குள் நீண்ட ஒற்றையடிப்பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.  வள்ளி அவனைப் பின்தொடர்ந்தாள்.
                அப்போதுதான் பறவைகள் தூக்கம் கலைந்து இரைச்சலிடத் தொடங்கின.  கலவையான அக்குரல்கள் ஏதோ ஒரு பெரிய மக்கள் கூட்டம் துணையாக நடப்பதுபோல இருந்தது.  மங்கலான வெளிச்சத்தில் இலைகளின் அடர்த்தியான பச்சை நிறம் தெரிந்தது.  ஒரு காட்டுப்பூனை அவர்களைப் பார்த்து வேகமாக மியாவ் என்று குரலெழுப்பியபடி ஒரு மரத்திலிருந்து குதித்து  அவர்களைத் தாண்டி வேறுபக்கமாக ஓடியது.  "சனியன், காலயிலயே குறுக்குல ஓடுது, வெளங்கனாப்பலத்தான் போல இன்னிக்கி.." என்றபடி காறித் துப்பினான் மாரி.
                தோப்பைக் கடந்ததும் தென்பெண்ணை ஆறு தெரிந்தது.  அதிக தண்ணீர் இல்லை.  பாதம் நனைகிற அளவுக்கு ஓடியது.  ஆற்றை நெருங்கும்போது தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஒரு பன்றிக்கூட்டம் முகத்தைத் திருப்பி அவர்களைப் பார்த்துவிட்டு விலகி ஓடியது.  காக்கைகள் ஒரு திசையிலிருந்து புறப்பட்டு இன்னொரு திசையைநோக்கிப் பறந்துசென்றன.  வள்ளி வந்து சேர்கிறவரைக்கும் மூச்சு வாங்கியபடி காத்திருந்தான் மாரி. நெருங்கி வந்ததும்  "இன்னாடி, கல்யாண ஊர்வலத்துல நடந்துவரமாரி நடக்கற? இந்த அன்ன நட நடந்தா பொழுது சாஞ்சிரும் போவறதுக்குள்ள.. ஒழுங்கா வேகமா நடடி" என்று சத்தம் போட்டான். பிறகு, இருவருமாக  ஆற்றில் இறங்கி நடந்தார்கள். தலைச்சுமையோடு மணலில் பாதங்கள் அழுந்த நடப்பது சிரமமாக இருந்தது.  வேர்வை பொங்கி கழுத்தில் வழிவதை உணரமுடிந்தது.
                மறுகரையில் ஏறி, வேறொரு ஒற்றையடிப்பாதை வழியாக காட்டுக்குள் நுழைந்தார்கள்.  காட்டில் ஏராளமான தேக்கு மரங்களும் நுணா மரங்களும் அடர்ந்திருந்தன.  நெடுந்தொலைவுக்குப் பிறகு, நரிப்பாறை தெரிந்தது.  ஒரு பக்கத்தில் அடர்த்தியான காட்டுச் செடிகள்.  புதர்கள். மறுபக்கத்தில் மூங்கில்காடு. கூடையைப் பிடித்திருக்கும் கையில் கொடிகள் உராய்ந்து கீறின.  அப்பறம் வெகுநேர நடைக்குப் பிறகு ஆட்டுக்குளம் வந்தது. ஏதோ ஒரு பிளவிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து சிறு வாய்க்காலாக ஓடிவந்து அதில் கலந்தது. காட்டுக்குள் போய்வரும் ஆடுகளும் மாடுகளும் தண்ணீர் குடித்து இளைப்பாறும் இடம்.  இடுப்பு உயரத்துக்கு அருகில் நின்றிருந்த பாறைமீது சாய்ந்து தலைச்சுமையை இறங்கிவைத்தான் மாரி. மூச்சு வாங்கியது. சும்மாட்டுத் துணியைப் பிரித்து உதறி, உடம்பில் வழியும் வேர்வையைத் துடைத்துக்கொண்டான்.  பின்னாலேயே வந்த வள்ளியும் தலைச்சுமையை பாறைமீது இறக்கினாள்.  அவள் உடம்பும் வேர்வையில் தெப்பமாக நனைந்துபோயிருந்தது.  முந்தானையை உதறி, கழுத்தில் வழியும் வேர்வையைத் துடைத்தாள்.  அவன் இடுப்பிலிருந்து மிச்சமிருந்த பாதிச்சுருட்டை எடுத்து பற்றவைத்து இழுத்தான்.  புகையை ஊதி வெளியேற்றியபோது உடம்பு லேசானதுபோல இருந்தது.  மீண்டும் புகையை இழுத்து அண்ணாந்து வானத்தைநோக்கி ஊதினான்.  ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்த இரண்டு குரங்குகள் அவனை உற்றுப் பார்த்தன. அவற்றைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.  வள்ளிக்கு அவற்றைக் காட்டினான்.  மரத்துக்குப் பின்னால் சென்று சிறுநீர் கழித்துவிட்டு திரும்பினாள் வள்ளி. 
                மீண்டும் கிளம்பியபோது வெயில் ஏறியிருந்தது. பாறையிலிருந்து பிரிந்து நீண்டு செல்லும் பாதையில் நடந்தார்கள்.  இரண்டு பக்கங்களிலும் ஏராளமான முள்மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.  யாரோ கிளையை வெட்டி தரையில் இழுத்துச் சென்ற அடையாளம் கோடு இழுத்ததுபோலத் தெரிந்தது. ஒரு புதரிலிருந்து இரண்டு முயல்கள் ஓடின.  பளிச்சென்றிருந்த அதன் வெள்ளை நிறம் திரும்பிப் பார்க்கவைத்தது. அடர்த்தியான கிளைகளில் ஊடுருவிக்கொண்டு நீளமான  வெள்ளைத் தண்டுபோல வெயில் உள்ளே இறங்கியது.  காலடி சத்தம் கேட்டு ஒரு புதருக்கடியே தரையைத் தோண்டிக்கொண்டிருந்த ஒரு பன்றி தலையைத் திருப்பிப் பார்த்தது.  அவர்களைப் பார்த்து உடல் சிலிர்த்து ஓடுவதற்குத் தயாராக மற்றொரு திசையில் கவனம் குவித்து நின்றது.  தன்னைத் தாண்டி அவர்கள் செல்வதைக் கண்ட பிறகுதான் மீண்டும் பள்ளம் தோண்டும் முயற்சியில் இறங்கியது. 
                திடீரென ஒரு கருங்குரங்கு மரத்திலிருந்து வள்ளியின் முன்னால் குதித்து முறைத்துப் பார்த்தது. கண்ணாடிச்சில்லுபோன்ற அதன் கண்களைக் கண்டு அவளுடைய உடல் நடுங்கியது.  ஓவென்று அச்சத்தில் தன்னிச்சையாக சத்தமிட்டாள். தலைமீது  இருக்கும் கூடையின் பிடியை விட்டுவிடுவோமோ என்று கைகள் நடுங்கின. காட்டில் அவளுடைய சத்தம் பேரோசையாக எதிரொலித்தது. முன்னால் சென்ற மாரி, நின்று திரும்பிப் பார்த்தான்.  "என்னாடி?" என்று அவளைநோக்கி சத்தமுடன் கேட்டான்.  அவளுக்கு முன்னால் நின்றிருந்த குரங்கை தாமதமாகத்தான் பார்த்தான்.  அது வள்ளியைப் பார்த்து அச்சுறுத்துகிறமாதிரி உர்ரென்று உறுமியது.  சூசூ என்று அதட்டியபடி நெருங்கி வந்ததும் கையில் இருந்த தடியை அதைநோக்கி வேகமாக வீசினான் மாரி.   தடி குரங்குக்கு பக்கத்தில் இருந்த மரத்தின்மீது மோதி விழுந்தது.  குரங்கு சட்டென விலகி மரத்தில் ஏறிக்கொண்டது.  வள்ளிக்கு அருகில் வந்த மாரி தன் சுமையோடு மெதுவாக உட்கார்ந்து கையால் தடவியெடுத்துக்கொண்டு நிமிர்ந்து அவளை முறைத்தான்.  அச்சத்தோடு பின்வாங்கி நடுங்கியபடி அவனையே பார்த்தாள் வள்ளி.  பீதியில் கூடை நழுவிவிடுமோ என்று நடுக்கமாக இருந்தது.  தொடர்ந்து தன்னைநோக்கி வராமல், திரும்பி நடப்பதைப் பார்த்தபிறகுதான்  நிம்மதியாக உணர்ந்தாள். கடவுளே என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.  திரும்பிப் பார்க்காமலேயே அவன் நெடுந்தொலைவு சென்று விட்டிருந்தான்.  அவனைப் பிடிப்பதற்காக நடையை எட்டிப் போட்டாள். 
                ஐயனார்  மேட்டைக் கடந்த வேளையில் வேறொரு  திசையிலிருந்து வந்து சேர்ந்த பாதையில் கூடைச்சுமைகளோடு ஏராளமான ஆண்களும் பெண்களும் நடந்து வருவது தெரிந்தது.  தக்காளி, வெண்டைக்காய். மிளகாய் கத்திரிக்காய் எல்லாமே காய்கறி வகைகள்.  அறிமுகமானவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

-3-
              
         புங்கமரங்களும் புளிய மரங்களும் நாவல்மரங்களுமாக அடர்ந்திருந்தது சந்தைத்தோப்பு. நிழல் விழுந்திருந்த இடங்களிலெல்லாம் வரிசைவரிசையாக ஏராளமான கடைகள் உருவாகியிருந்தன.  காலை வெயில் நேராக முகத்தில் இறங்கியது. வெயிலுக்கு மறைப்பாக கம்புநட்டு சாக்குப்படுதாவைத் தொங்கவிட்டிருந்தார்கள். நாலு பக்கங்களிலும் பரக்கப்பரக்க நடக்கிற பதினேழு பாளையத்துக்காரர்களும் சேர்ந்து சந்தைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினார்கள். ஒவ்வொரு கடையின் முன்னாலும் நின்று விலைகேட்டு விசாரித்து, வாங்கியவற்றை சின்னச்சின்ன துணிமூட்டைகளாக கட்டிக்கொண்டு நடந்தார்கள்.  ஒருவர்மீது ஒருவர் இடித்தபடி கூட்டம் நகர்ந்தது. தோப்பிலேயே கம்பீரமாக உயர்ந்திருந்த ஆலமரத்தடியில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டையை மூட்டி வித்தை காட்டிக்கொண்டிருந்தான் வித்தைக்காரன்.  இன்னொரு மூலையில் மேளம் தட்டியபடி கழைக்கூத்து நிகழ்ந்தது. வேடிக்கை பார்க்கிற மும்முரத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சின்னப்பிள்ளைகளைப்போல உற்சாகத்துடன் நடந்தார்கள். பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த வளையல்கடையின் முன்னாலும் புடவைக்கடையின் முன்னாலும் கூட்டம் அலைமோதியது.  புத்தம்புதிய புடவையை சரசரவென பிரித்து உதறி அதன் நிறத்தைப்பற்றியும் பூக்களைப்பற்றியும் பாட்டு கட்டி சொல்லி எல்லாரிடமும் வாங்குகிற ஆசையை ஊட்டினான் வியாபாரி. அதைத் தொட்டுத்தொட்டு தமக்குள் சிரித்துப் பேசிக்கொண்டார்கள் பெண்கள்.
                எங்கிருந்தோ ஓடிவந்த நாயொன்று பொம்மைகளை கடைபரப்பிவிட்டு உட்கார்ந்திருந்த வள்ளிக்கு அருகே வந்து நின்றது.  சந்தேகத்தோடு பார்ப்பதுபோல வள்ளியை முறைத்துப் பார்த்தது. "தூ.. போ அந்தாண்ட..." என்று கையை நீட்டி விரட்டினான் மாரி. நாய் உடனே தன் பார்வையை வள்ளியின் திசையிலிருந்து மாரியின் பக்கமாகத் திருப்பியது.  மாரி மறுபடியும் அடிப்பதுபோல கையை ஓங்கிஓங்கிக் காட்டி இன்னும் வேகமாக "தூ.. போ அந்தாண்ட..." என்று அதட்டினான்.  உடனே அந்த நாய் சற்றும் தயங்காமல் அவனைப் பார்த்து லொள் லொள் என்று குரைத்தது.  "நாய்க்கு இருக்கற கொழுப்ப பாத்தியாடி..." என்றபடி மாரி ஒரு சின்ன மரக்கட்டியை எடுத்து அதன்மீது வீசினான். அடிபட்ட நாய் சீற்றத்தோடு தலைநிமிர்ந்து லொள்லொள் என்று வெறிமின்னும் கண்களுடன் இன்னும் சத்தமாகக் குரைக்கத் தொடங்கியது.  அதே சமயத்தில் எல்லாத் திசைகளிலிருந்தும் அதற்கு ஆதரவான குரல்கள் லொள்லொள்ளென்று பெருகின.  சந்தையே லொள்லொள் சத்தத்தால் நிறைந்தது. வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் யாரும் எதிர்பாராதபடி பல நாய்கள் அந்த இடத்தைநோக்கி ஓடிவந்தன. போகிறவர்கள் அனைவரும் ஒருகணம் பொம்மைக்கடையின் பக்கமாக திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார்கள். வெகுசீக்கிரத்தில் நாய்களின் பட்டாளம் அக்கடைக்கு அருகே கூடிவிட்டது. வள்ளியும் மாரியும் ஆளாளுக்கு ஒரு பக்கம் கையை வீசிவீசி போபோ என்று நாயை விரட்டினார்கள். எதிர்பாராத விதமாக அங்கு வந்த உள்ளூர்க்காரர் ஒருவர் எல்லா நாய்களையும் அதட்டி விரட்டியடித்தார். "என்ன ஆளுய்யா நீ? அதுங்ககூடவா போட்டி போடறது? உக்காந்து யேபாரத்த பாருய்யா.." என்று சொல்லிவிட்டு போனார். மாரிக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. முணுமுணுத்துக்கொண்டே உட்கார்ந்தான். கழுத்தில் வடிந்த வியர்வையை புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்ட பிறகு நிம்மதியாக மூச்சு வாங்கினாள் வள்ளி.
                "எப்படிடா பொம்மைங்க..?" என்றபடி ஒரு பெரியவர் கடைக்கருகே வந்தார். தலைவழுக்கையை மறைக்க துண்டால் தலைப்பாகை கட்டியிருந்தார். அவரோடு ஒரு சிறுமியும் வந்திருந்தது.  பெரியவரின் பிடியிலிருந்து தன் விரல்களை விடுவித்துக்கொண்டு குனிந்து ஆசைஆசையாக பொம்மையை வேடிக்கை பார்த்தது. அச்சிறுமியையே வைத்தகண் எடுக்காமல் பார்த்தாள் வள்ளி.
                "நீங்க குடுக்கறத குடுத்துட்டு எடுத்துக்க சாமி.." என்றான் மாரி.
                "ஒன் மனசுல ஒரு வெலை இருக்குமில்ல, அத சொல்லுடா. "
                "ஒங்களுக்குத் தெரியாததா சாமி? எத்தன சந்தயல வாங்கியிருப்பிங்க? யாரு சாமி, பேத்தியா?"
                "ஆமாம். இந்த ஊரு சந்த இதுங்களுக்கெல்லாம் ஒரு அதிசயம். வா வான்னு நேத்துலேருந்தே நச்சரிப்பு. அது கெடக்கட்டும், நீ சொல்லு. அந்த ரெண்டு கிருஷ்ணர் பொம்மயயும் எடு."
                அடுத்த நொடியே மாரி அந்த இரண்டு பொம்மைகளையும் எடுத்து வைக்கோல்புரிக்குள் வைத்துச் சுற்றத் தொடங்கினான்.
                "என்ன வேணும்ன்னு சொல்லிட்டு சுத்துடா."
                "ஒங்களுக்கு தெரியாத வெலைங்களா சாமி? காலையில ஏதாச்சிம் ஒரு படி குடுத்து மவராசனா போணி பண்ணுங்க."
                "பெரிய படியா, சின்ன படியாடா?"
                "சின்ன படிதான் சாமி."
                "வர்ணமெல்லாம் கரையாம இருக்குமில்ல?"
                "அதெல்லாம் ஒன்னும் ஆவாது சாமி.  மண்ணு மக்கனாலும் வர்ணம் மக்காதுங்க சாமி"
அவருக்குப் பின்னால் கூடைச்சுமையோடு நின்றிருந்தவனைப் பார்த்து நெல்லை அளந்துகொடுக்கச் சொன்னார். அவன் கூடையை இறக்கி சின்ன படியால் நெல்லை அளந்து வள்ளி விரித்த துணியில் கொட்டினான்.  "ஏதாச்சிம் ரெண்டு காய்ங்க இருந்தா போடச்சொல்லுங்க சாமி" என்று தலையைச் சொரிந்தாள் வள்ளி. "ரெண்டு மாங்காவும் போடுடா அவளுக்கு" என்று கட்டளை எழுந்தது. 
                "இப்ப பண்ணியிருக்கயே, இதவிட இன்னும் அர அடி ஒசரமா இருக்கறமாரி இதே கிருஷ்ணரு பொம்மைங்க ஒரு பத்து பதினஞ்சி வேணும். செஞ்சி தருவியாடா?"    
                "செஞ்சிரலாம் சாமி. எப்ப வேணும் சொல்லுங்க?"
                "இப்ப என்ன சித்திரயா? வைகாசி கடைசியில குடுத்தாகூட போதும். ஆனிமாசத்துல வீட்டுல ஒரு விசேஷம். விருந்தாளியா வரவங்களுக்கெல்லாம் குடுக்கலாம்னு ஒரு திட்டம்."
                "வைகாசி அமாவாசைக்கு அப்பறமா வர சந்தைக்கு கொண்டாந்தா போதுங்களா சாமி?"
                "அது போதும்."
                "ஆள் மாங்காய் எடுத்துக்கொடுப்பதைப் பார்த்த சிறுமி, சட்டென இரண்டு நாரத்தங்காய்களை எடுத்து "நானும் குடுக்கட்டுமா தாத்தா?" என்று கேட்டுவிட்டு தெத்துப்பல் தெரிய சிரித்தது. பெரியவர் ஆசையோடு அதன் தலையைத் தடவியபடி "தாராளமா குடு குட்டி. அதுக்கு என்ன கேக்கணுமா?"  என்று கண்களாலேயே சம்மதம் வழங்கினார்.     நாரத்தங்காய்களை வள்ளியின் துணியில் குனிந்து போட்டுவிட்டு சிரித்தது சிறுமி. எல்லாப் பற்களும் தெரிய வள்ளியும் சிரித்தாள். தலையைச் சாய்த்து காதுக்குப் பின்பக்கமாக சொரிந்துகொண்டே அக்குழந்தையை ஆசையாகப் பார்த்தாள்.
                திடீரென ஆறேழு பேர் மொத்தமாகக் கூடிவந்து சுற்றி நின்று வியாபாரம் செய்தார்கள். அரைமணிநேரத்துக்குப் பிறகு, எல்லாம் அடங்கியது. அந்த நேரத்தில் இரண்டு பேரும் மௌனமாக, பாதையை அடைத்தபடி செல்கிறவர்களை வேடிக்கை பார்த்தார்கள். வியாபாரம் இல்லாத சமயத்தில் கூடாரத்தைவிட்டு வெளியேறி தோப்பின் மூலைக்குச் சென்று திரும்பினான் மாரி. அருகில் கையை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்த போது சுருட்டு நெடி வீசியது. வள்ளி பின்னால் நகர்ந்து நெல், கம்பு, கேழ்வரகு, தினை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து முடிச்சுபோட்டு ஒதுக்கினாள். "இன்னும் பத்து நாளக்கி சோத்துக்கவல கெடையாது, இல்லயா?" என்று மாரி கேட்டான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் பொம்மைகளைப் பார்த்தாள். அடங்கிய குரலில் அவளைப் பார்த்து "சுருட்டு நாத்தம் பட்டதுமே ஒடம்பு தேஞ்சிருமா ஒனக்கு?" என்று முறைத்தாள். அவள் எந்தப் பதிலையும் சொல்லாமல் நெல்லை அளந்தபடி இருந்தாள். "பெரிய மகாராணியா நீ? பன்னீரு ஜவ்வாதுலயே மெதந்துங் கெடந்தவளா நீ? சுருட்டு நாத்தம் உள்ள போனதுமே ஓக்களிக்குதா? ஊருக்காரங்க போடற அழுக்குத் துணிங்களுக்கு நடுவுல சோறு வாங்கித்துன்னு வளந்த நாய்தானடி நீ? பழசயெல்லாம் மறந்துட்டியா இன்னிக்கு?" என்று இடைவிடாமல் குத்திக்குத்திப் பேசினான். எதற்கும் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள் அவள்.
                மதியம்வரை அவன் வாய் ஓயவில்லை.  அதற்குப் பிறகு, கொண்டு வந்திருந்த சோற்றுச்சட்டியை எடுத்து வயிறு ரொம்ப சாப்பிட்டுவிட்டு பின்பக்கமாக நின்றிருந்த வேங்கைமரத்தடியில் காலைநீட்டிப் படுத்தான். எஞ்சியிருந்த சோற்றை தண்ணீர்விட்டு கரைத்து குடித்துவிட்டு  பொம்மைகள்மீது வெயில் படாதபடி இடம்மாற்றி அடுக்கினாள் வள்ளி.    சகாதேவன் பேட்டைக்காரர்கள் சிலர் வந்து ஆறேழு பொம்மைகள் வாங்கிச் சென்றார்கள். அதற்குப் பிறகு வெகுநேரத்துக்கு யாருமே கடைப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
                நாலைந்து வாலிபர்கள் கடைக்கு எதிர்ப்பக்கமாக வந்து நின்றார்கள். கும்பலில் சற்றே துடுக்கான வாலிபன் சுருள்சுருளான தன் தலைமுடியை கோதியபடி வள்ளியையே உற்றுப் பார்த்தான். வள்ளிக்கு உடல் உதறியது. அப்பகுதியில் கடைவிரித்திருக்கிற காய்கறிக்கடைகளையும் வாழைத்தார்களோடு பக்கத்தில் நின்றிருந்த வண்டியையும் மாறிமாறி வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் வள்ளி.
                தலைக்குமேல் காக்கைகள் கரைந்துகொண்டிருந்தன. வீசும் காற்றுக்கு உதிர்ந்துவிழும் இலைகள் படகுபோல அசைந்தசைந்து கீழே இறங்கின. நன்கு பருத்த இரண்டு எருமைகளை ஓட்டிக்கொண்டு போனார் ஒருவர். தானியப்பைபோல உப்பிய அவற்றின் மடிகள் அப்படியும் இப்படியும் அசைந்தன. அங்கங்கே உதிர்ந்துகிடக்கும் சாணத்தைத் தேடித்தேடி எடுத்து இரண்டு சிறுவர்கள் கூடைக்குள் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். 
                "எல்லாம் புதுச்சரக்குதான?" கடையின் முன்னால் வந்து நின்றது வாலிபக்கும்பல். ஒருவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தான். இன்னொருவன் கம்பத்தைப் பிடித்துக்கொண்டிருந்தான். மேலும் மூன்றுபேர் அவனைச்சுற்றி நின்றிருந்தார்கள். சுருள்முடிகார வாலிபன்மட்டும் பக்கத்தலேயே நின்றுகொண்டு கூச்சமே இல்லாமல் அவளையே முறைத்துக் கொண்டிருந்தான். என்ன பொம்மக்காரம்மா?  கேட்டா பதில் சொல்லமாட்டியா? எல்லாம் புதுச்சரக்குத்தான?" என்று மறுபடியும் கேட்டான் ஒருவன்.  அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மெதுவான குரலில்  "ம்" என்றாள் வள்ளி. அதற்குள் சுருள்முடிக்காரன் மெதுவாக குனிந்து ஒரு பெண் பொம்மையை எடுத்து உச்சியிலிருந்து பாதம்வரை தன் கையால் தொட்டுப் பார்ப்பதுபோல தடவினான்.  அதன் தலையை வருடிக்கொடுப்பதுபோல விரல்களால் நீவினான். தன் முகத்தருகே அந்தப் பொம்மையை எடுத்துச் சென்று முகர்ந்து பார்ப்பதுபோல வெகுநேரம் பிடித்திருந்தான். பிறகு இப்படியும் அப்படியுமாக மாற்றிமாற்றிப் பிடித்து வெவ்வேறு கோணங்களில் பார்த்துவிட்டு "ஆண்டவன் உருவாக்கன அழகெல்லாம் அப்படியே கொட்டி வச்சிருக்குது. கை பக்குவம் நல்லா தெரியுது.." பொம்மையின் தோளைத் தன் கன்னத்தோடு ஒட்டி உரசும்படி பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான்.
                "கண்ணு, மூக்கு வாய்லாம் அப்படியே அச்சு அசலா இருக்குது மாப்பள."
                "என்ன எடுப்பு? என்ன பளபளப்பு?"
                "ஒவ்வொன்னுக்கும் என்ன அளவு உண்டோ அது கொஞ்சம்கூட கொறையாம இருக்குதுடா மாப்பள. இன்னிக்கெல்லாம் பாத்துனே இருக்கலாம்போல."
                "பாத்திட்டிருந்தா பசியே தெரியாதுடா."
                ஒருவன் வள்ளியின் பக்கமாக விளையாட்டுத்தனமாக பொம்மையைத் திருப்பினான். இன்னொருவன் சட்டென கண்சிமிட்டினான். மற்றொரு வாலிபன் குனிந்து பொம்மையின் வயிற்றில் முத்தம் கொடுத்தான். அதே நேரத்தில் மரத்தடியிலிருந்து எழுந்துவந்து உட்கார்ந்தான் மாரி. வள்ளியின் பக்கமாக திரும்பி "என்ன..?" என்றான். அவள் பொம்மையை கையில் எடுத்து வைத்திருக்கும் வாலிபர்களைச் சுட்டிக்காட்டினாள்.  "என்ன சாமி வேணும்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான் மாரி.
                "இது என்ன நாட்டியக்காரி பொம்மயா?" என்றபடி ஒரு பொம்மையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கேட்டான் ஒருவன். தலைநிறைய முடி. காதுகளில் கடுக்கன் போட்டிருந்தான். வைரக்கல்லின் ஒளிப்புள்ளி மாலை வெயிலில் மின்னியது. கன்னங்கள் ஒட்டியிருந்தன. கண்கள் உருண்டையாக நாவல்பழம்போல இருந்தன.
                அவன் நாட்டியக்காரி பொம்மையை அப்படியும்இப்படியுமாக திருப்பித்திருப்பிப் பார்த்தான். அதன்மீது படிந்திருக்கும் தூசியை ஊதுவதுபோல பொம்மையின் மார்புக்கெதிராக உதடுகளைக் குவித்தபடி ஓரக்கண்களால் வள்ளியைத் திரும்பிப் பார்த்தான்.
                "எதாச்சிம் குடுக்கறத குடுத்துட்டு எடுத்தும்போ சாமி.."
                அவர்கள் கிளம்பிச் சென்றால் போதும் என்றிருந்தது மாரிக்கு. "என்ன வேணும்னு சொல்லு. குடுத்துட்டு எடுத்துக்கறோம். அப்படியே பொம்மக்காரிக்கும் சேத்து ஒரு வெல சொல்லிடு.."  மாரியைப் பார்த்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் சுருள்முடிக்காரன். 
                மாரி எழுந்து இடுப்புத்துணியை சரிப்படுத்தியபடி கடைக்கு வந்தான். "சொந்த ஊருல எதவேணா பேசிரலாம்னு நெனச்சி பேசாத சாமி. அப்பறம் நானும் பேசிட்டா மரியாதயா இருக்குமா?" முகத்தில்  கடுகடுப்பை வெளிப்படுத்தியபடி மெதுவான குரலில் சொன்னான். 
                "என்னடா மரியாத கிரியாதன்னு பேசற?" சுருள்முடிக்காரன் அதட்டினான்.
                "ஏபாரம் ஏபாரத்தோட போவட்டும் சாமி. எதுக்கு வீண்பேச்சு?"
                "பேச்சு வச்சிக்கற அளவுக்கு பெரிய ஆளா நீ? நீ என்ன பெரிய கணக்குப்புள்ளயா? தலயாரியா?" கூட்டத்தில் ஒருவன் தாவி முன்னால் சென்று மாரியின் நெஞ்சில் கையை வைத்து கீழே தள்ளினான். தடுமாறி விழுந்ததில் மாரிக்கு தோளில் சரியான அடி விழுந்தது.  ஒட்டிய புழுதியை உதறிக்கொண்டே எழுந்த மாரி, "வாங்கணும்னு நெனக்கறத வாங்கிட்டு பேசாம போ சாமி. எதுக்கு வீணா வம்பு வளக்கற?" என்றான். "டேய், ஒழுங்கா மரியாதயா பேசு. எங்கள பாத்தா என்ன வம்புவளக்கற ஆளுமாரி தெரியுதா? எங்கள யாருன்னு நெனச்சிகிட்ட? ஒரே அடியில ஒலகத்த உட்டே போயிடுவ" என்றபடி மறுபடியும் மாரியின் நெஞ்சில் கையை வைத்து கீழே தள்ளினான் அவன்.  விழுந்த இடத்திலிருந்தே திரும்பிப்பார்த்து "இதெல்லாம் வேணாம் சாமி. பொழப்ப பாக்க உடு சாமி. நாலு பொம்மங்க வித்துட்டு போனாதான் நாங்க சோறு தின்னமுடியும். எங்ககூட எதுக்கு சாமி தகராறு?" என்று கசப்பாகச் சொன்னான் மாரி.  உடனே "வார்த்தைக்கு வார்த்த பதிலாடா சொல்ற நாயே, மொதல்ல ஒன் வாய கிழிக்கணும்" என்றபடி வேகமாக நெருங்கி காலால் மாரியின் முகத்தில் உதைத்தான் ஒருவன்.  உதடு கிழிந்து ரத்தம் வந்தது.  தட்டுத்தடுமாறி மேலே எழுந்த மாரி வேகமாக தாவி இரண்டே எட்டில் தன்னை அடித்தவனை இறுக்கிப் பிடித்தான். அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாக உலுக்கிவிட்டு கன்னத்தில் குத்தினான்.  அடி தாளமாட்டாமல் துடித்தபடி அலறினான் அவன். அதற்குள் இன்னொருவன் "எங்க மேலயே கைவச்சிட்டியா நீ? இன்னிக்கு பொணமாத்தான்டா ஊருக்குத் திரும்பப்போற" என்றபடி மாரியைத் தடுத்து நிறுத்தினான்.  கைகளைப்பற்றி பின்பக்கமாக முறுக்கி ஒடிப்பதற்கு முயற்சி செய்தான். முறுக்கமுறுக்க தன் உடலில் ஒருவிதமான மூர்க்கம் பொங்கியெழுவதை உணர்ந்தான் மாரி. அருகில் பற்களைக் கடித்தபடி தன்னையே வெறிததும்பும் பார்க்கும் முகத்தையே ஒருகணம் பார்த்தான். மறுகணமே தன் தலையால் ஓங்கி ஒரு பாறையைப்போல அவன் முகத்தின்மீது மோதினான். அதற்குள் சுருள்முடிக்காரன் வள்ளியின் பக்கம் சென்று கையைப்பற்றி இழுத்தான். தோளிலிருந்து சரிந்து விழும் புடவையை இழுத்துப் பிடித்தபடி அலறினாள் அவள். வள்ளிக்கு அருகில் சென்றவனை நின்ற இடத்திலிருந்தே காலால் ஓங்கி உதைத்தான் மாரி. நான்கு பேர்களால் சூழப்பட்டிருக்கிறோம் என்கிற சுய உணர்வே இல்லாமல் வெறியோடு ஒவ்வொருவரையும் கோவைக்கொடியை இழுத்துவீசுவதுபோல வீசினான். உடல்முழுதும் ஆங்காரம்மட்டுமே நிரம்பி வழிந்தது. நெற்றியின் நரம்புகள் துடிக்க கைகளை ஓங்கிக்கொண்டு பாய்ந்துசெல்ல இருந்தவனை முதுகுப்பக்கமாக காலேயே ஓங்கி உதைத்து கீழே தள்ளினான் ஒருவன். தடுமாறி விழுந்ததும் அவன் முதுகின்மீது மற்ற மூவரும் விழுந்து தாக்கத் தொடங்கினார்கள்.  அவன் உடனே ஆத்திரத்தோடு கத்தினான். கிரீச்சிட்ட குரலில்  "ஒரு ஆம்பளைக்கு பொறந்தவனுங்களா இருந்தா, ஒரொருத்தவனா வந்து மோதுங்கடா கோழப் பசங்களா" என்று கத்தினான்.
                சந்தைக்கூட்டம் முழுதும் ஒரே கணத்தில் அங்கே கூடிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்களே தவிர நெருங்கிச் சென்று விலக்க யாரும் முன்வரவில்லை. தமக்குள்ளேயே மாறிமாறிப் பேசிக்கொண்டார்கள். "கட்டயில போறவனுங்களுக்கு இதே பொழப்பா  போச்சிடி. ஒவ்வொரு சந்தயிலயும் யார்கிட்டயாவது மோதிக்கலன்னா, இந்த பொழப்பத்தவனுங்களுக்கு தூக்கம் வராது. ஊருக்கெல்லாம் வர பேதியும் காலராவும் இந்த பொறுக்கிங்களுக்கு வரமாட்டுது பாருடி.." என்று முணுமுணுத்துக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டாள் ஒரு கிழவி.  "கெழவி, கொஞ்ச நேரம் சும்மா இரு.." என்று அடக்கினார்கள் அங்கிருந்த மற்ற பெண்கள். "யாராவது போயி வெலக்கி உடுங்கப்பா. வெளியூருகாரன் இங்க வந்து செத்தான்னு ஆயிடப்போவுது" என்று கூட்டத்தை பார்த்து  சொன்னார் ஒரு தாடிக்காரர்.
                அதற்குள் "யாரப் பாத்துடா கோழன்னு சொன்ன?" என்றபடி மாரியின் வாயிலேயே சுருள்முடிக்காரன் குத்தினான். அவன் உதடுகள் கிழிந்து ரத்தம் பெருகியது.
                அதற்குள் ஒருவன் வள்ளியின் அருகே தாவியோடினான். "ஒன் பொம்மக்காரி இன்னிக்கு எல்லாருக்கும் பொம்மக்காரியா ஆவப்போறா பாத்துக்கோடோய்.." அவர்களுடைய வார்த்தைகள் அவனை மேலும்மேலும் வெறிகொள்ளவைத்தன.  
                மாரி அவளைப் பிடிக்கத் தாவினான். "வள்ளி வள்ளி, ஓடு" கட்டறுத்துக் கொண்ட காளைபோல தாவிச் சென்று அவள்மீது கைவைத்தவனை நெட்டித் தள்ளினான். அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவில் போய் விழுந்தான். அதற்குள் இன்னொருவன் மாரியின்மீது பாய்ந்து கீழே தள்ளினான். இடைவெளியே இல்லாமல் மிருகத்தனமாக  அடித்தான். ஒவ்வொரு அடியும் முதுகிலும் நெஞ்சிலும் மடேர் மடேர் என்று சத்தமுடன் விழுந்தது. வலி தாளாமல் அலறியபடி கீழே விழுந்து துடித்தான் மாரி. அவன் துடிப்பதைப் பார்த்துப்பார்த்து வாலிபக்கூட்டம் சிரித்தது. ஒவ்வொருவனாக நெருங்கி அவன் முதுகில் எட்டி உதைத்தார்கள். ஒவ்வொரு உதைக்கும் ஒவென்று அவன் ஓலமிட்டான். அவன் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து முறுக்கி மார்பிலேயே ஓங்கி குத்துவிட்டான் ஒருவன். தடுமாறி புரண்டு விழுந்தவனின் தலை வேங்கைமரத்தின் வேரில் மோதி உடைந்து ரத்தம் பெருகியது. மெதுவாக வேரைப் பற்றியெழுந்த மாரி, பொருள்விளங்காத குரலில் வள்ளியைப் பார்த்து "ஓடு. ஓடு" என்றபடி ஓடத் தொடங்கினான். வள்ளியும் அவனோடு சேர்ந்து ஓடினாள்.  வாலிபர்களும் சத்தத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள். சந்தையே வேடிக்கை பார்த்தது.

-4-

                கால்கள் துவண்டுபோகும்வரை ஓடிஓடிக் களைத்து சத்தமாக மூச்சு வாங்கியபடி ஒரு நாவல்மரத்தடியே இரண்டு பேரும் நின்றார்கள்.  ஐயோ என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு தள்ளாடி உட்கார்ந்தாள் வள்ளி. இருமல் வந்தது. இருமும் சத்தம் தாம் ஒளிந்திருக்கும் திசையை காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அச்சத்தோடு இருமலைக்கூட அடக்கிக் கொண்டாள்.  ரத்தமும் வேர்வையும் புழுதியும் கலந்த கலவையோடு மாரியைப் பார்க்க பாவமாக இருந்தது. கால்வீக்கத்தைப் பார்த்தபோது அநேகமாக முறிந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. "நாம எங்கனா ஒரு பொதருக்குள்ள மறஞ்சிக்கலாம்" என்றான் அவன். பேச முடியாதபடி மூச்சு வாங்கியது. "இங்க வேணாம். முடிஞ்ச வரிக்கும் நம்ம ஊருப்பக்கமா போயிடுவோம். அப்பறமா பொதரோ பள்ளமோ பாத்து மறஞ்சிக்கலாம்.." என்றாள். வேர்வையில் தெப்பமாக நனைந்திருக்கும் வள்ளியை ஒரு கணம் பார்த்தான் மாரி. தள்ளுமுள்ளலில் அவள் புடவை கிழிந்து பின்பக்கமாக வால்போலத் தொங்கிக்கொண்டிருந்தது.
                "இன்னும் வரானுங்களா?"
                "தெரியலை.  ஆனா வருவானுங்கன்னுதான் தோணுது.."
                அருகில் எங்காவது குளமாவது குட்டையாவது இருக்கிறதா என்று கண்களைத் திருப்பிப் பார்த்தாள் வள்ளி. மரத்தோடு சாய்ந்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு இடதுபக்கமாக சென்றாள்.  பொழுது சாய்ந்த வேளைக்கே உரிய குளிர்ச்சியான காற்று வீசியது. வண்டுகள் இருட்டும்முன்பே இரைச்சலைத் தொடங்கிவிட்டன. இரண்டு முயல்கள் திடீரென  ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலையைநோக்கி ஓடின. வழியில் படர்ந்திருந்த கொடிகளை விலக்கியபடியே நடந்தபோது  ஒரு பள்ளம் இருப்பது தெரிந்தது. பள்ளத்தில் பாதிக்கும்மேல் தண்ணீர் நிரம்பியிருந்தது. மரத்திலிருந்து ஒடிந்துவிழுந்த ஒன்றிரண்டு கிளைகள் பள்ளத்தில் விழுந்திருந்தன. அழுகி மக்கிய இலையின் மணம் வீச்சத்தோடு இருந்தது. முந்தானையை எடுத்து நனைக்கப்போகும்போது அவள் உருவம் தண்ணீரில் தெரிந்தது. பரட்டைத்தலையும் புழுதிக்கோலமுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.  மார்பின் எழுச்சியையும் வளைவுகளையும் சிறிது நேரம் இமைக்காமல் பார்த்தாள். சட்டென நினைவுகளைக் கலைத்துவிட்டு துணியை நன்றாக தளரத்தளர நனைத்துக்கொண்டு ஓடிவந்தாள்.
                வலி தாளாமல் அம்மா என்றான் மாரி.  அவனை வாயைத் திறக்கச் செய்து துணியைப் பிழிந்து நீர்த்துளிகள் விழும்படி செய்தாள். தாகம் தணிந்ததும் அவன் இன்னும் வேகமாக அம்மா என்று முணகினான். தோளை நன்றாக இழுத்து மரத்தோடு சாய்த்துக்கொண்டு கால்களை நீட்டினான். அவன் பருகி முடித்ததும் மிச்சத்தை முறுக்கிப் பிழிந்து மிடறுகளை விழுங்கினாள். பிறகு, ஈர முந்தானையை முகத்தின்மீதும் கழுத்தின்மீதும் ஒற்றி எடுத்தாள். 
                "எல்லா எழவும் ஒன்னாலதான்டி நாயே.."
                அவன் அவளைப் பார்த்து காறித் துப்பினான். அவள் மௌனமாக அவனையே பார்த்தாள்.  "கண்டவன் முன்னாலயும் பிதுக்கிகிட்டு நின்னா இதான்டி கதி முண்ட.." காலாலேயே எட்டி அவள் நெஞ்சில் உதைத்தான். மல்லாந்து விழப்போனவள் அருகில் இருந்த காட்டுக்கொடிகளைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
                "அவனுங்க வந்தாலும் வந்துருவானுங்க, நாம போவலாம்" என்று எழுந்தாள் வள்ளி. மாரி ம் என்ற முனகலோடு எழுந்து நின்றான்.  அடியெடுத்து வைப்பதில் அவனுக்கு சிரமமிருந்தது.  "ஒரேவடியா மேலத்தான் போவணும்டி முண்ட. ஒரு அடி கூட வைக்கமுடியலயடி.." என்றான்.  அவள் எதுவும் பேசாமல் அவனுடைய காலையே பார்த்தாள். சட்டென தாழ்வாக நீண்டிருந்த ஒரு கிளையைத் தாழ்த்தி உடைத்து, அவன் ஊன்றிக்கொண்டு நடப்பதற்கு வசதியாக மொட்டையாக்கித் தந்தாள். "பொருளுக்கு பொருளும் போச்சி, காலுக்கு காலும் போச்சிடி ஒன்னால.." அவள் ஒன்றும் சொல்லவில்லை.
                வள்ளியின் தோளில் கையை வைத்தபடி அவன் ஒவ்வொரு அடியாக நடந்தான். சிறிது தூரம் நடந்தபிறகு திடமாக நடக்கத் தொடங்கினான். ஏற்ற இறக்கங்களில்மட்டுமே சிரமப்பட்டான். வாய் ஓயாமல் திட்டிக்கொண்டே வந்தான். நடுநடுவே காறித் துப்பினான்.
பக்கத்தில் புதர் அசைவதைப் பார்த்து மனம் பதறியது. ஒருகணம் அந்த வாலிபர்களாக இருக்கக்கூடுமோ என்ற அச்சம் உள்ளூர படர்ந்திருப்பதை அறிந்து அருவருப்பாகவும் அச்சமாகவும் இருந்தது. மெதுவாக தலையை நீட்டி விழிகளை உருட்டிஉருட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்த முயல்களைப் பார்த்ததும் பயம் அகன்றது. மாரிக்கு சுருட்டு பிடிக்கவேண்டும்போல இருந்தது.  சந்தையில் நடந்த சண்டையில் இடுப்பில் செருகியிருந்த சுருட்டுக்கட்டு எங்கோ விழுந்துபோயிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கோபமும் வெறுப்புமாக ரெண்டு இழுப்பு இழுக்கலாம்ன்னா சுருட்டுக்குக்கூட வழியில்லாம பூடிச்சேடி நாயே என்றபடி கையிலிருந்த கட்டையாலேயே ஓங்கி தரையில் அடித்தான்.
                பொழுது முற்றிலுமாக சரிந்த வேளையில் நரிப்பாறையை அடைந்தார்கள்.  தலைக்குமேல் பறவைகள் கூட்டம்கூட்டமாக பறந்து சென்றன. கேந்திப்பூக்கள் அடர்ந்திருந்த ஒரு புதருக்குப் பக்கத்தில் சோம்பலாக படுத்திருந்த காட்டுநாயொன்று தலைநிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் சுருண்டுகொண்டது.  வள்ளி ஆற்றைநோக்கி நடக்கத் தொடங்கினாள்.
                "ஆத்துப் பக்கமா இப்ப போனா அவனுங்க கையில மாட்டி பொணமாயிடுவோம்டி நாயே. பேசாம அந்த பொதருங்க பக்கமா மறஞ்சிக்கலாம்.  இருட்டனப்பறமா கௌம்பனா ஊடு போய் சேர சரியாயிருக்கும்" மாரியின் எச்சரிக்கை சரியான யோசனையாகவே வள்ளிக்கும் தோன்றியது. நரிப்பாறையிலிருந்து விலகி நாணலும் கோரைப்புல்லும் வளர்ந்து கொழித்திருந்த புதர்கள் பக்கமாகச் சென்றார்கள். ஒரு ஆள் உயரத்துக்கு இருந்த நாணல்புதர் ஒளிந்துகொள்ள சரியான இடமாகத் தோன்றியது. கையில் இருந்த கட்டையை கீழே எறிந்துவிட்டு தரையில் சாய்ந்தான் மாரி. நாக்கை வெளியே நீட்டிநீட்டி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு ஆசுவாசம் கொள்ள முயற்சி செய்தான். நொடிக்கொரு முறை வறண்ட நாவிலிருந்து எச்சிலைத் திரட்டி விழுங்கினான்.
                "நாடோடிக் கழுதைங்க நம்மமேலயே கைய வச்சிட்டு ஓடிடலாம்னு பாக்குதுங்க.   வெட்டி துண்டு போடாம இன்னிக்கு ஊடு திரும்பக்கூடாதுடா மாப்பள"
                "கோலியனூர்காரன்னா யாருன்னு புரிஞ்சிக்கறமாரி அவனுக்கு குடுக்கணும் மச்சான்.."
                "சாவறவரிக்கும் மறக்காதபடி மூஞ்சியில்யே நாலு கொத்து கொத்தி உடனும் மாப்ள"
                "எங்கனா கெணத்துல உழுந்து உயிர கியிர உட்டுடுச்சிங்களோ என்னமோ, ஆளுங்க வந்த சுவடே இல்லயே.."
                "இன்னிக்கு நாம குடுக்கற ஒதையில இனிமேல நம்ம சந்தைப்பக்கமே அதுங்க எட்டிக்கூட பாக்ககூடாது.."
                "ஊரு பக்கமாவே எங்கனாச்சிம் ஓடியிருக்கும்டா அதுங்க.  வேலயில்லாம நாமதான் இங்க தேடிட்டி கெடக்கறோம் .."
                நரிப்பாறைக்கு மறுபக்கமாக எழுந்த பேச்சொலிகள் மெல்லிய குரலில் கேட்டன. இரண்டுபேருமே அதைக் கேட்டார்கள். புதரோடு அசைவே இல்லாமல் ஒட்டிக்கொண்டான் மாரி. "அவுங்களா?" என்று சந்தேகத்தோடு வள்ளியைப் பார்த்து சைகையால் கேட்டான். அவள் ஆமாம் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தபடி குரல் வந்த திசையிலேயே கவனத்தைக் குவித்திருந்தாள். அவர்கள் அப்படியே போனால்தான் பிழைக்கமுடியும் என்பதும் பார்வையில் பட்டுவிட்டால் மரணம் உறுதி என்பதும் வள்ளிக்குத் தெளிவாகத் தெரிந்தது. பின்வாங்குவதற்கோ, ஓடி ஒளியவோ வேறு இடமே இல்லை.
                "தாகம் தாங்கமுடியலைடி, எங்கயாவது தண்ணி கெடைக்குதா பாருடி முண்ட"   
                "அவனுங்க இருக்கறானுங்களா, பூட்டானுங்களா தெரியலயே?"
                "தாகத்துல என் உயிரே போவுதுடி நாயே, தாங்க முடியலைடி" பற்களை நறநறவென கடித்தபடி கையில் இருந்த தடியாலேயே அவளைக் குத்தினான்.
                "அவனுங்களுக்கு பதிலா நானே ஒன்ன சாவடிச்சிடுவேன்"
                நரிப்பாறைக்கு அப்பால் அவர்கள் குரல்கள் ஒலித்தபடி இருந்தன. மாரியின் தண்ணீர் தாகம் எல்லைமீறியது. ஈரம் காய்ந்துபோன வள்ளியின் முந்தானைத்துணியை அவசரமாக இழுத்து சப்பினான்.  வேர்வையும் அழுக்கும் கரைந்து சேறுபடிந்ததுபோல நாக்கு குழைந்தது. ஆத்திரத்தில் முந்தானைத்துணியை உதறினான். "தண்ணி ஓணும்டி தேவடியா, தண்ணி ஓணும்" முனகிக்கொண்டே அவள் தாடையில் குத்தினான். அவன் முகம் துவண்டு சரிந்தது. கண்கள் செருகியதைப்போல அரைப்பார்வையில் திறந்திருந்தன. கழுத்து நரம்புகள் வேகவேகமாக ஏறித் தாழ்ந்தன.
                புதருக்கு அப்பால் குரல்கள் தேய்ந்து அமைதி திரும்பியதை உணர்ந்தாள் வள்ளி. பாம்புபோல நாக்கை நீட்டிநீட்டி ஈரத்துக்கு அலைபாய்கிற மாரியின் கோலத்தை அவளால் வெகுநேரத்துக்குப் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை.  ஒரு அளவுக்குமேல் பொறுமை காக்க முடியாமல் சத்தமெழாதபடி எழுந்து நின்றாள். கண்களை நான்கு பக்கங்களிலும் சுழற்றி எங்காவது பள்ளமோ ஓடையோ தெரிகிறதா என்று பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தொலைவில் எதுவும் இல்லை.
                புதரிலிருந்து குறிப்பிட்ட திசையை மனத்தில் நினைத்துக்கொண்டு சிறிதுதொலைவு நடந்தாள். தொலைவில் ஒதியமரங்களுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் தெரிந்தது. சிறிதேனும் அதில் தண்ணீர் தேங்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு அந்தப் புள்ளியைநோக்கி வேகமாக நடந்தாள். அவள் நம்பிக்கை வீண்போகவில்லை. ஓரப்பகுதியில் அடர்ந்திருந்த உலர்ந்த சருகுகளுக்கு நடுவே தண்ணீர் தெரிந்தது. அவள் வேகவேகமாக அந்த இடத்துக்குச் சென்று முந்தானையைத் தளர்த்தி துணியை நனைத்தாள். நிம்மதியோடு திரும்பிய கணத்தில் சுருள்முடிக்கார வாலிபன் அவளெதிரில் நின்றான். அவள் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. அச்சத்தில் முந்தானையின் பிடி நழுவ,  வெற்று மார்புகள் குலுங்கி அடங்கின. அவசரமாக ஈரத்துணியை எடுத்து மேலே போட்டதை அவன் வேகமாக நெருங்கி கைகளால் தடுத்தான். உதட்டின்மீது விரலைவைத்து வேறொரு பக்கம் காட்டி ஆள்கள் இருப்பதாக சைகை செய்தான். பக்கவாட்டில் ஓடித் தப்பிவிடலாம் என்று விலகிய கணத்தில் அவன் கைகள் இரும்புப்பிடியாக அவளுடைய இடுப்பைப் பற்றி வளைத்தது.
                "ஊருக்கு ஒன் புருஷன உயிரோட திரும்பணும்ன்னா ஒரு சின்ன சத்தம் கூட காட்டாம பேசாம என்கூட வா .."
                அவளை அப்படியே வளைத்துத் தூக்கிக்கொண்டு நாணல்புதருக்குள் சென்றான் அவன். அவளை நிலத்தில் படுக்கவைத்தபோது கற்சிற்பம்போல அசையாமல் கிடந்தாள். இருளும் வெளிச்சமும் கலந்த மங்கலான பொழுதில்  ஒரு நொடி அவளையே உற்றுப் பார்த்தான். வெறி ததும்பிய அவன் கண்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவனுடைய கால்களும் கைகளும் அவளை இறுக்கிக்கொண்டன. "செதுக்கி வச்சமாரி இருக்குடி.. செதுக்கி வச்ச மாரி இருக்குடி.." என்றபடி அவளை மார்போடு இழுத்து அணைத்தான். கடைசியில் அவள் கன்னத்தை ஒரு கன்றுக்குட்டிபோல நக்கிவிட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான். அச்சத்தில் உறைந்துபோய் அவன் இயங்குவதை அணுஅணுவாக உணர்ந்தபடி செயலற்றுக் கிடந்தாள் அவள்.
                அவளை அப்படியே தரைமீது விட்டுவிட்டு சரசரவென புதரின் மறுபக்கமாக ஓடினான் அவன். மகிழமரங்களுக்கு மறுபக்கமாக தேடிக் கொண்டிருந்த கூட்டாளிகளிடம் "நாய்ங்கள காணம்டா, பயந்தாங்கொள்ளிங்க எந்த பக்கம் போச்சிங்களோ, வாங்கடா போலாம்" என்று அழைத்துச் செல்லும் குரல் கேட்டது. வெகுநேரத்துக்குப் பிறகு சுயநினைவுக்குத்  திரும்பிய வள்ளி வேகமாக எழுந்து உடலில் ஒட்டியிருந்த தூசியையும் புழுதியையும் உதறியபடி தண்ணீர்ப்பள்ளத்துக்கு அருகே சென்றாள். முந்தானையை நனைத்துக்கொண்டு திரும்பி நடந்தாள்.
                கிட்டத்தட்ட அரைப்பிணம்போல உணர்வின்றிக் கிடந்தான் மாரி. அவன் தலையை நிமிர்த்தி மடியில் வைத்துக்கொண்டு வாய்க்குள் நீர்த்துளிகள் விழும்படி செய்தாள். ஏழெட்டு தரம் குடித்ததும் அவன் முகத்தில் சற்றே தௌiவு வந்தது. காலை மடித்து ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். வலியில் பின்னந்தலையில் யாரோ அடித்ததுபோல இருந்தது. பிறகு கைத்தடியின் உதவியோடு எழுந்து நின்றான். இரு கால்களையும் நீட்டி உதற முயற்சி செய்து, அதுவும் வலியின் காரணமாக முடியாமல் போனது. புதரைவிட்டு வெளியே வரவும் இரவு கவிழவும் சரியாக இருந்தது. தன் தோளில் அவனைச் சாய்த்துக்கொண்டு மெதுவாக ஆற்றங்கரையைநோக்கி நடந்தாள் வள்ளி. 
                வீட்டுக்கு வந்தபிறகு, காலை வெளிச்சத்தில் சோதித்தபோது அவன் தோள்பட்டையிலும் தொடையிலும் அடிகள் பலமாக விழுந்திருப்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. தன் அம்மாவை நினைத்தபடி கட்டைவிரலால் நன்றாக அழுத்தி உருவிக்கொண்டே வந்து எங்கேனும் எலும்பு முறிந்திருக்கக்கூடுமோ என்று தேடினாள். அடிபட்ட வேகத்தில் வீக்கம் கண்டிருக்கிறதே தவிர, முறிவு எதுவும் இல்லை என்பதில் ஓரளவு அவளுக்கு ஆறுதலாக இருந்தது. உடனே, காட்டுக்குள் ஓடி ஒரு பன்னீர் மரத்துக்குப் பக்கத்தில் வளர்ந்திருந்த ஆதண்டம் தழையை மடிநிறைய பறித்துவந்தாள். அம்மியில் வைத்து நன்றாக மைபோல அரைத்து முறிவு இருக்கிற இடத்தில் அப்பினாள். உலரத் தொடங்குவதற்கு முன்னால் அந்த இடத்தை ஒரு நல்ல துணியால் கட்டினாள். தன்னிச்சையாக மடக்கிவிடாதபடி சின்ன மூங்கில் பட்டைகளைத் துண்டுகளாக நறுக்கிவந்து கால்மீது முன்பக்கமும் பின்பக்கமுமாக வைத்துக் கட்டினாள். உப்புக்கருவாட்டுத் துண்டோடு சுடச்சுட கஞ்சி வைத்து குடிக்கவைத்தாள். வயிற்றுக்குள் கஞ்சி நிரம்பி வேர்வை ஆறாகப் பெருகிய பிறகு மாரியும் சற்றே அமைதியாக இருந்தான்.  உடம்பு வலிக்கு வேறொரு மூலிகையை அரைத்து சாறாக்கி குடிக்கவைத்தாள்.
                அரைப்பிணமாக கிடந்தவனால், அடுத்த நாளே ஓரளவு தெம்போடு பேசமுடிந்தது. மாலையில் இன்னொரு முறை ஆதண்டம் தழையை அரைத்து பத்து போட்டாள். காலை மாலை என இரண்டு வேளைகளிலும்   இடைவிடாமல் மருந்து கொடுத்த பிறகு, கைகால்களை அவனால் எளிதாக அசைக்கமுடிந்தது. ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு, உறுப்புகள் இலகுவாயின. சோர்வுக்கும் வலிக்கும் மட்டும் அடிக்கடி மூலிகைச் சாற்றைக் குடிக்கவைத்தாள் வள்ளி.
                மெல்லமெல்ல மாரியின் அசைவுகளில் பழைய தெம்பு கூடிவந்தது. அங்குமிங்கும் எந்த கைத்தடியின் துணையும் இல்லாமலும் வள்ளியின் துணையும் இல்லாமலும் தனியாகவே நடக்கத் தொடங்கினான். வெகு நாட்களாக கண்ணாலேயே பார்க்காமல் இருந்த சுருட்டுக்கட்டை வாங்கி ஒரு சுருட்டை ஆனந்தமாக புகைத்தபிறகுதான் அவனுக்கு உயிரே திரும்பியதுபோல இருந்தது. அடுத்த நாளே கள்ளுக்கடைக்குச் சென்று குடித்துவிட்டுத் திரும்பினான்.
இரவுச் சாப்பாட்டுக்கு முன்பாக ஒரு நாள் முழு போதையோடு அவன் வீட்டுக்குத் திரும்பினான்.  வள்ளியைப் பார்த்து, "இங்க வாடி.." என்றான். அவள் கைவேலையை விட்டு ஓடோடிச் சென்று "ம்.." என்றாள். அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றாள். "எதுக்குடி என்ன பாத்து பயப்படற? நான் என்ன பேயா, இல்ல பூதமா?" அவள் அதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே  நின்றிருந்தாள். "ஊமக் கோட்டானாடி நீ? வாயத் தெறந்து பதில் சொன்னா முத்து உதுந்திருமா?" கிட்டத்தட்ட அவன் கத்தினான்.
                வள்ளி எதுவும் பேசவில்லை. பிறகு, "ஆமா, அன்னைக்கு சந்தையில சண்ட போட்டானுவளே, எதுக்காக போட்டானுங்க தெரிமா?" என்று அவளை கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான். அவள் அந்தக் கேள்வியை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லாமல் அவனையே உற்றுப் பார்த்தபடி நின்றாள்.  "எளவட்டப்பசங்களுக்கு ஒன் மேல கண்ணுடி. வளச்சிடலாம்னு பாத்தானுங்க.  அதான்." அவளுடைய கண்களைப் பார்த்தபடி மெதுவாச் சொன்னான். திடீரென  அவன் குரல் உச்சத்துக்கு எழுந்தது. "நல்லா கேட்டுக்கடி நாயே, என்ன உட்டுட்டு எவன்கூடவாவது போவலாம் கீவலாம்ன்னு கனவுல கூட நெனச்சிடாத, ரெண்டு காலயும் வெட்டி நொண்டியாக்கிட்டுத்தான் மறுவேல பாப்பன்.  ஏழு வருஷமா ஒன்ன எல்லா எடங்களுக்கும் இழுத்து அலஞ்சி சோறு போடறதெல்லாம் கண்டவன்கிட்ட கூட்டிக் குடுத்துட்டு வேடிக்க பாக்கறதுக்கா?"
                அவள் உடல் நடுங்கியது. பதில் எதுவும் சொல்லாமல் அவன் கண்களையே அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். "ஆமா, அன்னைக்கு சாய்ங்காலமா தண்ணி எடுத்தாரப் போனியே, அன்னிக்கு என்னடி நடந்திச்சி?" அவள் மறுபடியும் ஒன்றும் சொல்லாமலேயே அவனைப் பார்த்தவாறிருந்தாள். "சொல்லுடி நாயே, என்ன நடந்திச்சி?" அவன் உரத்த குரலில் சத்தம் போட்டான். 
                பதில் சொல்லாமல் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து, வெறித்தனமாக் அவள் கன்னத்தில் வேகமாக மாறிமாறி அறைந்தான். பிடி விலகி கீழே விழுந்ததும் முதுகில் உதைத்தான். வேகத்தில் அவள் முகம் தரையில் மோதிவிட உதடு கிழிந்து ரத்தம் வந்தது.  "ஊமயாட்டம் நின்னுட்டா உட்டுடுவன்னு நெனச்சிகினியா, வெட்டி கூறு போட்டுடுவன், என்ன நடந்திச்சின்னு ஒழுங்கா சொல்லிடு" என்றபடி அவள் கன்னத்திலேயே அறைந்தான். "வாயத் தெறந்து பதில் சொல்லுடி முண்ட." திரும்பித்திரும்பிச் சொன்னபடி உதைத்தான்.  அவன் உதைகளையெல்லாம் முதுகிலும் இடுப்பிலும் வாங்கிக்கொண்டு குடிசையின் மூலையில் கூளத்தைப்போல சுருண்டு விழுந்தாள்.  ஆத்திரம் தணியாதவனாக அவள்மீது காறித் துப்பிவிட்டு திரும்பினான். அவன் வாய்மட்டும் "நாய்.. நாய்.." என்று முனகியபடி இருந்தது.
                ஒன்றிரண்டு மணிநேரத்துக்கு பிறகு, மெதுவாக எழுந்து அடுப்பு மூட்டி கஞ்சி வைத்தாள் வள்ளி. சூடாக சட்டி நிறைய கஞ்சியை ஊற்றி அவன் முன்னால் வைத்தாள். அவன் அதையும் உதைத்து தள்ளிவிடுவானோ என்ற அச்சம் உள்ளூர நடுங்கவைத்தபடி இருந்தது. ஆச்சரியப்படும்வகையில் எதுவுமே பேசாமல் சட்டியை இழுத்து கஞ்சியை ஊதிஊதிக் குடித்தான். சிறிதுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு பிறகு கால்நீட்டிப் படுத்து உறங்கிவிட்டான்.

-5-

                இடைவிடாத ஆந்தைகளின் சத்தம் மாரியின் கேள்வியை நினைவூட்டியபடி இருக்க, குடிசை வாசலில் வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் வள்ளி. உலர்த்தப்பட்ட துணிகளைப்போல வெண்மேகங்கள் திட்டுத்திட்டாக காணப்பட்டன. அம்மாவின் நினைவு மனத்தில் மிதந்துவந்தது.  துறையில் துணிகளைக் காயவைத்தபிறகு அம்மா காவலுக்கு உட்காரவைத்துவிட்டுச் சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன.  மதிய நேரத்தில் எல்லாப் பிள்ளைகளையும் மரத்தடியில் உட்காரச் சொல்லி கூழ் கரைத்து ஊற்றுகிற கோலம் மிதந்து அப்படியே நிரந்தரமாக நின்றது.
                பசித்தது. வேர்வையும் அழுக்கும் படர்ந்த உடல்முழுதும் நசநசப்பது போலவும் இருந்தது. குளிக்காமல் சாப்பிடமுடியாது என்பதால் கொடியில் கிடந்த துணியை எடுத்துக்கொண்டு குளத்துக்குச் சென்றாள். குளத்தைப் பார்த்ததும் வழக்கமாக அவள் மனத்தில் பொங்கியெழும் உற்சாகம் அன்று திரண்டு உருவாகாதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இடுப்புச் சேலையை அவிழ்த்து  மார்போடு தூக்கிக் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கினாள். மனம் முழுதும் ஒருவித சலிப்பும் அதிருப்தியும் இருந்தன. யாரையோ அழைப்பதுபோல ஆந்தைகள் விடாது அலறிய சத்தம் எரிச்சலை வரவழைத்தது.
                வள்ளி குளத்தில் இறங்கி உட்கார்ந்தாள். சட்டென வழுக்கிக்கொண்டே சென்று அவள் குளத்துக்குள் மறைந்துபோனது போலிருந்தது.  தண்ணீரின் குளிர்ச்சியால் வழக்கமாக உடம்பும் மனமும் உணர்கிற பரவசத்தையும் சிலிர்ப்பையும் அன்று அவளால் உணரமுடியவில்லை. பின்பக்கம் கைகளை ஊன்றிக்கொண்டு கரையோரம் உயர்ந்திருந்த கருத்த பனைமரங்களைப் பார்த்தாள். மீன்கள் உரசிச் சென்றன. தண்ணீருக்குள்ளேயே கால்களைத் தூக்கி தள்ளினாள். வேகத்தில் ஏதோ அடியிலிருந்த கொடி விரல்களில் சுற்றுவதை உணர்ந்து பதற்றத்தோடு உதறினாள். ஒரு நொடியில் தடுமாறி சரிய தண்ணீர் அவளது மூக்குக்குள் நுழைந்தது.
                வழக்கமான உற்சாகம் இல்லாததால் நீந்திக் குளிக்க மனம் வரவில்லை. ஈரப்புடவையின் முடிச்சை குளத்துக்குள்ளேயே அவிழ்த்துவிட்டு அக்குளிலும் மார்பின் குறுக்கேயும் அழுக்குப் போக அழுத்தித் தேய்த்தாள். முகத்தைத் தேய்த்தபோது, நாக்கால் நக்கிவிட்டுச் சென்ற சுருள்முடிக்காரனின் ஞாபகம் பளீரென எழுந்து திகைக்கவைத்தது. அந்த முகம். அந்தக் கண்கள். அந்த முத்தம். எப்போதோ நிகழ்ந்த ஒன்று அவள் நினைவில் மீண்டும்மீண்டும் நிகழ்வதைப்போல இருந்தது. முறைத்துப் பார்த்த அவன் கண்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்தன.  அன்று காட்டுக்குள் கண்ணாடிச் சில்லுபோல உறுதியாக உற்றுப் பார்த்த கருங்குரங்கின் அதே கண்கள். ஒவ்வொன்றும் துல்லியமாக தன் நினைவுகளில் பதிந்திருப்பதை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாகவும் நடுக்கமாகவும் இருந்தது.  "சொல்லுடி நாயே, என்ன நடந்திச்சி?" என்ற மாரியின் இடைவிடாத கேள்வியும் அடியும் நினைவுக்கு வந்தன. அப்படியே மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அடிபட்டபோது வலிக்காத அடி அக்கணத்தில் வலித்தது. நெஞ்சு உச்சகட்ட வேகத்தில் துடித்தது. மூக்கும் உதடுகளும் நடுங்கின. தண்ணீருக்குள்ளேயே உட்கார்ந்து அழுதாள்.
                அழுது ஓய்ந்தபோது மறுபடியும் சுருள்முடிக்காரன் நினைவு மிதந்தெழுந்தது. மிகப்பெரிய அடியாக அது அவள் மனத்தை அறைந்தது. அவள் உடலையே கிழித்து இணைத்த  அனுபவம் அழுத்தமாக நெஞ்சில் உறைந்திருந்தது. அப்படியெல்லாம் ஆகாது என்று உள்ளூர மறுத்தபடி அதை விலக்கிவிட முயற்சி செய்தாள். மனத்துக்குள்ளேயே எதைஎதையோ நினைத்து தொகுத்தும் கலைத்தும் சோர்வடைந்தாள். ஏதோ ஒன்று உறுதியாக நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்ப்பதுபோல மீண்டும்மீண்டும் தவிப்புடன் தண்ணீரை வாரிவாரி முகத்தில் அடித்துக்கொண்டாள்.
                நேரம் கடக்கக்கடக்க அந்த எதிர்பார்ப்பு அச்சமூட்டுகிற அளவு விரிவடைந்து அவளைத் தாக்கி பதற்றமுறவைத்தது. எப்படியாவது இதன் விளைவுகளிலிருந்து தப்பித்துவிடவேண்டும் என்ற வேகம் அவளைக் குழப்பியது. துணியை இழுத்து மார்புக்கு குறுக்கில் முடிச்சிட்டபடி அவள் எழுந்து குளத்தின் மையத்தைநோக்கி மெதுவாக நடந்தாள். தன்னை இயக்கும் சக்தி குழப்பமா தெளிவா என்று புரியாமலேயே ஆறேழு அடி நகர்ந்தவளின் கழுத்தைச் சுற்றி தண்ணீர் மோதிய கணத்தில் அவள் கால்கள் தானாகவே நின்றன.  மீண்டும்மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பதுபோன்ற எண்ணம் மனத்தில் பொங்கியது.  அவள் வேதனைகளையெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்துவிடுவதைப்போல இருந்தது. அந்த ஆறுதலை அவள் மனம் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வதை ஆச்சரியமாக உணர்ந்தாள். நின்று இருள்சூழ்ந்த குளத்தையும் பனைமரங்களையும் அசைவில்லாமல் வெகுநேரத்துக்கு பார்த்தபடி இருந்தாள். மறுகணமே திரும்பி எதுவுமே நடக்காததைப்போல கரையைநோக்கி நடந்தாள்.