Home

Thursday, 28 June 2018

வைராக்கியம் - சிறுகதை




நெற்றியில் வழிந்த வேர்வையை வழித்தபடியே அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். வெப்பத்தில் தோல் எரிந்தது. அடுப்பிலிருந்து அனல் வீசுவதுபோல காற்று உடலைச் சுட்டது.  உள்பக்கமாக கதவை நெருங்கி வரும் காலடியோசையைக் கேட்டபடி மூச்சை வாங்கினேன். கதவைத் திறந்துகொண்டேவாடி வா, பன்னெண்டு மணிக்குலாம் வரன்னு சொன்னாளே, இன்னம் காணமேன்னு இப்பதான் நெனச்சேன், வா வா, உள்ள வாஎன்று சிரித்தாள் பூங்கோதை அத்தை. அவள் காதுத் தோட்டில் வெயில் பட்டு மின்னியது.

காலணிகளை அகற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். அத்தை உள்ளே திரும்பிஅக்கா, உன்னத்தான் பாக்க வந்திருக்காஎன்றாள்.  வெயிலிலிருந்து உள்ளே நுழைந்ததால் ஒருகணம் எனக்கு சுத்தமாக முகம் தெரியவில்லை. ஆனாலும் கைகுவித்துவணக்கம்என்றேன். “நம்ம வேப்பமரத்து ஊடு பெரியம்மா பேத்தி. பெங்களூருல இருக்குதுஎன்று சொன்னாள் அத்தை. “உக்காந்து பேசும்மாஎன்று நாற்காலியை என் பக்கமாகத் தள்ளினாள்.
சில கணங்களுக்குப் பிறகுதான் அந்த அம்மாவைப் பார்க்கமுடிந்தது. நூல்சேலை கட்டியிருந்தார். ஒல்லியான உடல். நரைத்த தலைமுடியை கொண்டையாகக் கட்டியிருந்தார். வெளுத்த அடர்த்தியான புருவங்கள். உறுதியும் நளினமும் கொண்ட கண்கள்.
பாத்ததில்லயே தவிர ஒன்னப்பத்திய விஷயம்லாம் பாப்பாவுக்கு கொஞ்சநஞ்சம் தெரியும். ஒன்ன பாக்கணும்னு ரொம்ப காலமா அதுக்கு ஆச. அடிக்கடி கேட்டுகினே இருக்கும். நீ வந்தா தெரியப்படுத்தணும்னு ரொம்ப காலமா சொல்லி வச்சிருந்தா. நல்ல காலம். சேதராப்பட்டாரு ஊட்டு கல்யாணத்துக்கு ராத்திரி வண்டிலதான் வந்தா. காலயில் பாத்தபோது வந்து பேசிட்டு போடின்னு நான்தான் சொல்லிட்டு வந்தன்.….” சுவரோரமாக இருந்த நாற்காலியை அந்த அம்மாவுக்கு அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள் அத்தை.
இவ ஒருத்தி,…. வேல இல்லாதவ….. என் கத என்ன பெரிய புராணத்து கதயாடி? அத ஒரு விஷயம்னு கேக்கறதுக்கு ஆள வேற வரச்சொல்லிட்டியா?........” அந்த அம்மா கசப்பாகச் சொன்னாலும் புன்னகையின் கோடுகள் அவர் உதடுகளில் அப்படியே படிந்திருந்தன. “கொஞ்சம்கொஞ்சமா நீயே சொல்லிவச்சப்பறம் நான் தனியா  சொல்ல வேற என்னடி இருக்குது?  அத்தையின் பக்கம் திரும்பி புருவங்களை உயர்த்திக் கேட்டார் அம்மா. அப்படியே முகம் திருப்பி சுவரில் மாட்டப்பட்டிருந்த காளியின் படம்போட்ட காலண்டரின் திசையில் பார்வையைப் பதித்தார்.  அதற்குப் பக்கத்தில் கண்ணனுக்கு அமுதூட்டும் யசோதையின் படம் தொங்கியது. “அம்மாவா இருக்கறதுக்கு ஒரொரு சமயத்துல காளியாவும் மாற வேண்டியிருக்குது ஒலகத்துலபார்வையைத் திருப்பியபடியே அம்மா சொன்னாள்.
சின்ன வயசில ஒங்களபத்தி பத்திரிகையில எழுதனதயெல்லாம் படிச்சிருக்கேன். அதெல்லாம் விவரம் புரியாத காலம். விடுதலைக்கு போராடும் பெண். வெளிச்சம் கிடைக்குமா? எதிர்காலம் கேள்விக்குறியான்னு கொட்டகொட்ட எழுத்துல எழுதி செய்திலம் போடுவாங்க…..
என் மனத்திலிருந்ததை கேள்வியாகச் சொல்ல சரியாக வரவில்லை. தடுமாறியபடி இழுத்துஇழுத்துச் சொன்னேன். அம்மா யாரையும் பார்க்காமல் சிறிது நேரம் பக்கவாட்டுச் சுவர்மீது ஆழமாக பார்வையைப் பதித்திருந்தார். “நீ பட்ட கஷ்டநஷ்டம் நம்ம நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்சா போதுமாக்கா…? பாப்பாமாதிரி இந்த காலத்து புள்ளைங்களுக்கும் தெரிஞ்சாதானே நல்லது. பொம்பள ஜென்மம்னா கிள்ளுக்கீரன்னு இருக்கற நெனப்ப வேற எப்படிதான் புடுங்கிப்போடமுடியும் சொல்லு…” அத்தை வார்த்தைகளை நயமாகத் தேர்ந்தெடுத்துப் பேசினாள். அம்மாவின் முகத்தில் நெகிழ்ச்சி தேங்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது.  காதோரமாக ஒரு விரல் நீளத்துக்கு பட்டையாக ஒரு தையல் வடு இருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.
நம்ம ஆயாவுக்கு இருந்த வைராக்கியத்துல நூத்துல ஒரு பங்கு கூட இல்லாதவடி நான். அவுங்க முன்னால நான்லாம் கால்தூசிடி……” மேசைமீது கலைந்திருந்த செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் ஓரமாக அடுக்கிவைத்தபடியே சொன்னார்.
அப்படி ஒரு வெத இருந்ததாலதான் இந்த வம்சக்கொடி இன்னிக்கும் இரும்புகணக்கா கெட்டியா இருக்குது. காத்தடிச்சா உதுந்து மொட்டயாவறதுக்கு இது என ஆலஞ்சருவா, அரசஞ்சருவா? ….” கைவளையலை தன்னிச்சையாக ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தாள் அத்தை.
பெரிய ஆளுடி அவுங்க.  அவுங்களுக்கு பதினாறு பதினெட்டு வயசு நடக்கும்போதே ஆம்படையாங்காரன் செத்துட்டான். நாலு புள்ளைங்களோட நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. ஆம்படையானுக்கு அண்ணன்தம்பிங்க நாலு பேரும் கூடி சொத்துல ஒரு சல்லிக்காசுகூட கெடயாதுன்னு அவள ஊரவிட்டே தெருத்திட்டாங்க. சுடுகாட்டுக்கு பக்கத்துலயே குடிச கட்டிகினு, களயெடுத்து, கதிரறுத்து, காட்டுவேல செஞ்சி புள்ளைங்களுக்கு கூழு ஊத்தனாங்க.  என்ன வைராக்கியம், என்ன தைரியம் தெரிமா. காதும் காதும் வச்சாப்புல பிரெஞ்சுக்கார தொரய ஒருநாளு நேருல பாத்து சொல்லி அழுது கால்ல உழுந்துட்டாங்க.  நீ பிராது குடு தாயி, நான் பாத்துக்கறேன்னு சொன்னாரு அந்த தொர. எப்படிஎப்படி எழுதணுமோ அப்படிஅப்படி எழுத அவரே ஆளு வச்சி குடுத்தாரு. ஆயா கைநாட்டு வச்சிட்டு வந்துட்டாங்க. மூணு வருஷம் கேஸ் நடந்திச்சி. அப்பன்காரனுக்கு சேரவேண்டிய பாகத்த புள்ளைங்களுக்கு கண்டிப்பா குடுக்கணும்னு தீர்ப்பு சொன்னாங்க. வாய்ல மண்ணள்ளி போட்டுரலாம்னு நெனச்சவனுங்க கடசியில மண்ணத்தான் தின்னாங்க. புள்ளைங்களுக்கு சொத்த கைமாத்தி உட்டுட்டுதான்டி அந்த ஆயா உயிரு போச்சி….
அப்படிலாம் பாடுபட்டு வாங்கன சொத்த நம்ம அப்பன் பெரியப்பனுங்க பட்டாசு கொளுத்தறமாதிரி கொளுத்தி கரியாக்கிட்டாங்களேக்கா….
அவ்வளவுக்கும் குடிதாண்டி காரணம். மாட்டுத்தரவுக்கு மதகடிப்பட்டு சந்தைக்கி போறன்போறன்னு போயி கள்ளு குடிக்க கத்துகிட்டாங்க. வெறும் கள்ளுக்கும் மீன்கறிக்கும் யார்யாருகிட்டயோ கையெழுத்து போட்டு குடுத்து நாலாபக்கமும் கடன வாங்கிட்டாங்க. சொத்து அழிய பாதி காரணம் நம்ம அப்பாதான். கடன் குடுத்தவன்லாம் சுத்தி வளச்சிட்டானுங்க. எல்லாத்தயும் எழுதி வாங்கிகினு வெளிய தள்ளிட்டானுங்க. அம்மா குடுத்து வச்ச மகராசி. அப்பவே மாரடப்பு வந்து சொர்க்கத்துக்கு போயிட்டா. நாலு பொம்பள புள்ளங்க. மூணு பசங்க. முள்ளுவெட்டி, சூளயில கல்லறுத்து எதெதெயோ செஞ்சி எங்க அப்பன்காரன நாங்கதான் காப்பாத்தனம். பத்து வருஷம் அந்த ஆளுக்கு ஒழச்சிஒழச்சி இந்த உயிரே தேஞ்சி போச்சி…..”
அத்தை சமையலறைக்குள் சென்று தட்டில் மூன்று கண்ணாடித்தம்ளர்களில் உளிர்பானத்தை நிரப்பிக்கொண்டு வந்து ஆளுக்கொன்றைத் தந்தாள். குளிர்ச்சியான பானத்தின் மிடறுகள் தொண்டைக்குழியில் இறங்கும்போது வெப்பத்துக்கு இதமாக இருந்த்து. உங்க கல்யாணம்…?” என்று தயக்கத்தோடு கேட்டேன்.
ஆத்தமாட்டாத ஆளு அறுக்கமாட்டாதவங்கிட்ட கைய புடிச்சி குடுத்தமாதிரி எவனோ ஒருத்தன் தலையில் கட்டிட்டு போயிட்டாரு அவரு. அதுக்கு பேரு கல்யாணமா? பேசாம எங்களலாம் பாழும் கெணத்துல தள்ளியிருந்தா நல்லா இருந்திருக்கும். எல்லாரு வாழ்க்கயிலயும் மண்ண அள்ளி போட்டுட்டு நிம்மதியா மண்ணுங்கீழ போயி சேந்துட்டாரு…..  குளிர்பானத்தை அம்மா மெதுவாக உறிஞ்சிப் பருகினார் அம்மா. அவர் நெற்றிமேட்டில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாக அரும்பியிருந்தன.  மின்விசிறியின் ஓட்டத்தை மீறி ஒரு புழுக்கம் அறைக்குள் அடர்ந்திருந்தது. .
குடிப்பழக்கத்தால் அழிந்துபோன குடும்பங்கள் இந்தியாவுல கோடிக்கணக்குல இருக்கும்போல…….” ஆறுதலாக இருக்கும்வகையில் பொதுவாகச் சொன்னேன். ஆனால் அம்மா அதைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது.
தண்ணிக்கு போர் போடற கூட்டத்துலதான் என் ஊட்டுக்காரனுக்கு வேல. அஞ்சி பத்துனு தெனம் கைநெறய சம்பாதிப்பான்.  ஆனா எல்லாத்தயும் கள்ளுக்கடயிலயே அழிச்சிட்டு வந்து நிப்பான். ஒரு மாகாணி அரிசி வாங்க கூட ஊட்டுல காசி இருக்காது.  சோத்த கொண்டா சோத்த கொண்டானு ஊட்டுக்கு வந்ததுமே சண்டய ஆரம்பிச்சிருவான். வண்டவண்டயா அவன் பேசறத காதுகுடுத்துகூட கேக்கமுடியாது…….” அம்மாவின்  முகம் இறுகுவதைக் கவனித்தேன். கழுத்து நரம்புகள் புடைத்தடங்கின.
ஒரு நாளா, ரெண்டு நாளா? வாழ்க்க முழுக்க இதே கததான்.  நண்டும் சிண்டுமா நாலு புள்ளைங்க பொறந்துட்டுது.. அப்பவும்கூட அவனுக்கு புத்தியே வரலை. குடிச்சி கும்மாளம் போடறுதுக்குதான் அவன் சம்பாதிப்பானாம். குடும்பத்த நடத்தறதுக்கு நானே சம்பாதிச்சிக்கணுமாம். அந்த கட்டையில போறவனுக்கு அபப்டி ஒரு எண்ணம்…..”
அம்மாவின் பார்வை தன்னிச்சையாக காளியின் படத்தை நோக்கிப் படிந்தது. என்னையறியாமல் என் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.
மனுஷனா அவன்? மிருகம். மிருகத்துலயும் கேடுகெட்ட மிருகம். நாலு புள்ளைங்களாய்ட்டுது. அதுவும் எல்லாமே பொட்ட புள்ளைங்க. இதுங்களயெல்லாம் கரயேத்தி உடவேணாமா, குடிக்கறது முக்கியமா, குடும்பம் முக்கியமான்னு யோசிக்க கூடாதானு கிளிப்புள்ளைக்கு எடுத்து சொல்றமாதிரி ஒருநாளு எடுத்து சொன்னேன். அதுக்கு அந்த சங்கமாங்கி என்ன செஞ்சான் தெரிமா?
அதிர்ச்சியோடும் எதிர்பார்ப்போடும் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்தேன். என் உடைகள் வியர்வையில் உடலோடு ஒட்டிக்கொண்டன.
எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு நீ என்னடி பெரிய மேதாவியானு ஒரே சத்தம். சோறு வச்ச தட்டாலயே என் தலயில் அடிச்சான். மயிர புடிச்சி தரதரனு இழுத்து வந்து வாசல்ல தள்ளிட்டு, குனிய வச்சி காலாலயே மிதிமிதின்னு சேறுமிதிக்கறமாதிரி மிதிச்சான் பாவி. எனக்கு மூச்சே நின்னு போச்சி…..”  ஒரு  கணம் மெளனம். அம்மா முந்தானையால் முகத்தை ஒருகணம் அழுந்தித் துடைத்துக்கொண்டார்.
எதுத்த ஊட்டுலதான் மாமனாரு மாமியாருலாம் இருந்தாங்க. அவுங்களாம்கூட ஓடியாந்து தடுத்தாங்க. அப்ப கூட உடல பாவி. திமிறித்திமிறி வந்து அடிச்சான். ஆள இழுத்து சீ போடா நாயேனு தள்ளிட்டாரு என் மாமனாரு.  இவ எனக்கு பொண்டாட்டியா, ஒனக்கு பொண்டாட்டியானு அவரயே எதுத்து கேள்வி கேட்டான். அவருக்கு கோபம் தலைக்கு மேல ஏறிடுச்சி. என்ன பேசறம் ஏது பேசறம்னு தெரியாத அளவுக்காடா ஒனக்கு போத கேக்குது நாயேனு அவரும் கைய ஓங்கிட்டாரு.….”
அம்மாவின் முகத்தில் வேதனை நிரம்புவதையும் குரல் இடறுவதையும் உணரமுடிந்த்து. “ஒவ்வொரு நாளும் இதே ரோதண. எங்கயாவது காட்டுக்கு போனமா, களவெட்டி நாலு காசி சம்பாதிச்சி நிம்மதியா கஞ்சி குடிச்சிட்டு கட்டய சாய்ச்சமானு கெடக்கறதுக்கு உடமாட்டான்  பாவி. தெனம் புதுசு புதுசா எதயாச்சிம் கண்டுபுடிச்சி சண்ட வாங்குவான். அவன் பேசறது எதயும் காது குடுத்து கேக்கவே முடியாது. நாத்தம் புடிச்ச வாயி. ஒவ்வொரு வார்த்தயும் நரகல்தான். எதயாவது சொல்லி என் வாய புடுங்கணும். அந்த வார்த்தய கொண்டு சண்டய ஆரம்பிக்கணும். அதுக்காகத்தான் அவ்வளவு சத்தம். அடிதடி. திட்டு. தெனம் செத்துசெத்து பொழச்சேன்.அவர் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது.  குனிந்து கழுத்தில் அரும்பிய வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டார். பிறகு முந்தானையின் நுனியை ஒரு விரலில் சுற்றிச்சுற்றி விடுவித்தார்.
ஒனக்கு கல்யாணமாய்டிச்சா?பேச்சின் போக்கை மாற்றி அம்மா கேட்ட கேள்வி ஆச்சரியமாக இருந்த்து. “கல்யாணமும் நடந்து, டைவர்ஸும் நடந்திடுச்சிம்மா  புன்சிரிப்போடு நான் சொன்னதை அம்மாவால் நம்ப முடியவில்லை. திகைபோடு அத்தையின் பக்கம் பார்த்தார். “ஆமாமாம். அது ஒரு பெரிய கதஎன்றாள் அத்தை. மீண்டும் அம்மா என்னைப் பார்த்தார். “ரெண்டு பேருக்குமே எந்த விஷயத்துலயும் ஒத்துப் போவலைம்மா. அவன் ரசனை வேற விதம். என் ரசனை வேற விதம். காலம் பூரா சங்கடப்பட்டுகினே எதுக்கு ஒத்துமயா இருக்கணும்னு பேசி வச்சி பிரிஞ்சிட்டம் என்றேன். பெருமூச்சு வாங்கியபடி என்னைப் பார்த்த அம்மா சட்டென எழுந்துவந்து என் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவர் முகத்தில் பிரகாசம் மீண்டும் படிந்தது. நான் வாழ்ந்ததுலாம் அதப் பத்தி எதுமே தெரியாத காலம்அம்மா மின்விசிறியின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரிக்கவைத்தார்.
அடி ஒத திட்டுங்கள கூட தாங்கிக்கலாம்மா. இதயெல்லாத்தயும்விட அவன் ஒரு இம்சய குடுப்பான் பாரு. அத்த்தான் தாங்கவே முடியாது. குடிச்சி முடிச்சி ராத்திரில தொர எந்த நேரத்துல உள்ள வருவான்னு அந்த மாரியாத்தாளுக்கே தெரியாது. ஒரு நாளு விழுப்புரம் ரயிலு கூவற நேரத்துலயே வந்துருவான். இன்னொரு நாளு ஆல சங்கு ஊதற  நேரத்துல வருவான்.  இல்லன்னா ரெண்டாம் ஆட்டம் சினிமா முடியற நேரத்துல வருவான்.  எதுக்கும் கணக்கு வழக்கு கெடயாது. எந்த நேரம் எப்ப வந்தாலும் சரி, அக்கம்பக்கம் ஆளுங்க நடமாட்டம் இருந்தாலும் சரி, புள்ளைங்க தூங்குனாலும் சரி, முழிச்சிருந்தாலும் சரி எத பத்தியும் அவனுக்கு அக்கற கெடயாது. வந்ததுமே ஒரே துடியா துடிப்பான். அவன் நெனச்ச நேரத்துல ஒடனே சேரணும். வா வான்னு மயிர புடிச்சி இழுப்பான். அந்த குடிசைக்கு கதவு கூட கெடயாது. காத்துவாட்டத்துக்கு மறவா சாக்கு தச்சி தொங்கும். எந்த நடமாட்டத்த பத்தியும் யோசிக்க மாட்டான். வாடி வாடினு இழுப்பான். வரலைன்னா அதுக்கு ஒரு அடி. வேற எவனாச்சிம் வேணுமாடினு இன்னொரு இடி.. படுத்து ஏந்திருக்கர வரிக்கும் அடிதான்……” அம்மா நிறுத்தி வேகமாக பெருமூச்சு விட்டார். “ கடவுளே, இருவது இருவத்திஅஞ்சி வருஷம் வெளயாட்டா ஓடி போச்சி. ஆனா அன்னைக்கு பட்ட இம்சய இப்ப நெனச்சாலும் எனக்கு ஒடம்பு நடுங்குது அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. 
ஒரு நாளு ராத்திரி நாலு புள்ளைங்களும் முழிச்சியிருக்குதுங்க. கஞ்சி காச்சி வச்சிட்டு பொட்டுக்கடல சட்டினி அரச்சிகினிருந்தன். அப்ப வந்து படுங்கறான் பாவி. பெரியவளுக்கு   எட்டு ஒம்போது வயசிருக்கும். மத்ததுலாம் எளசுங்க. மான ஈனம் இல்லாத பொறப்பாயா நீ? புள்ளைங்க முன்னால இப்பிடி நடந்துகிறியே, இது நாயமான்னு கேட்டு அழுதேன். காது குடுத்து கேக்கக்கூட அவனுக்கு நெதானம் இல்ல. முதுவுலயே ஓங்கி ஒரு ஒத ஒதச்சான். அடுப்புக்கு பக்கத்துலயே உழுந்துட்டேன். மிருகம் கூட அப்படி நடக்காது.  அப்படி நடந்துகினான் அன்னிக்கி. என் புள்ளைங்கள கண்ண தெறந்து பாக்கறதுக்கே முடியலை. அவமானத்துல கண்ண மூடிகினு பல்லியாட்டம் தரையோட தரையா கெடந்தேன். அந்த நிமிஷம் என் மூச்சு அப்படியே நின்னுடக் கூடாதான்னு ஒரு துக்கம் என் நெஞ்ச அழுத்திச்சி. எழுந்து உக்காரக் கூட தெம்பில்ல. மனசுமில்ல. சாக்கடையில கெடக்கறமாதிரி அங்கயே கெடந்தேன்….
குண்டான்ல இருந்ததயெல்லாம் முழுங்கிட்டு மல்லாந்துட்டான் அவன். புள்ளைங்க தின்னது பாதி தின்னாதது பாதின்னு படுத்துகிச்சிங்க. அசிங்கத்துல உழுந்திட்ட மாதிரி ஒடம்புல அருவருப்பு. ராத்திரிலாம் அங்கயே கெடந்தேன். வெடிஞ்ச பிறகு கூட என் குமுறல் அடங்கலை. நெஞ்சு ஒடம்புலாம் கொதியா கொதிக்குது. என் பேர சொல்லிகினே கிட்ட வந்தான். நேருக்குநேர் பாத்துட்டு என்ன நெனச்சானோ தெரியலை. வேட்டிய மடிச்சி கட்டிகினு போயிட்டான். தெருப்பக்கமே நடக்க முடியலை. மானம் மரியாத எல்லாம் போயிடுச்சி. இனிமேல வாழ்க்கையில சாவு ஒன்னுதான் பாக்கி.  பக்கத்துல அதுவும் குழிக்குள்ள இருக்குது. அப்படியே உருண்டு அந்த குழிக்குள்ள உழவேண்டிதுதான்னு நெனச்சன். வேற எந்த சிந்தனையும் இல்ல.  உடம்புலயும் மனசுலயும் ஒரே பாரம். பகல் முழுக்க அப்படியே கெடந்தேன். பசங்க அதும் தாத்தா ஊட்டுக்கு போயி எதயோ சாட்டுதுங்க. மாமனாரே வந்து நீ இப்பிடி கெடந்தா இதுங்கள யாரு தாயி பாக்கறது? ஏந்து ஆவற வேலய பாக்கக் கூடாதான்னு சொல்லிட்டு போயிட்டாரு.....
நேரம் ஆவ ஆவ மனசு கேக்கலை. எழுந்து பல்ல தேச்சிகினு களயெடுக்கறதுக்கு போயிட்டேன். எல்லாரும் என்னென்னமோ துருவிதுருவி கேட்டாளுங்க. எனக்கு யாரிகிட்டயும் பேச புடிக்கலை. சாயங்காலமா கூலி வாங்கிட்டு வந்துட்டேன். சாயபு கடயில அரிசி வாங்கியாந்து கழுவி வச்சேன். திடீர்னு காத்து மழயும் புடிச்சிகிச்சி. புள்ளைங்களும் பசிமயக்கத்துல கஞ்சி குடிச்சதுமே படுத்துட்டாங்க......
கூரமேல கீத்துங்கள தடுத்து அண்டக்குடுத்த கல் சரிஞ்சி உள்ளார உழுந்திச்சி. நல்ல காலம். புள்ளைங்க மேல உழலை. உய்யுனு ஒரே காத்து சத்தம். அங்கங்க ஒழுவுது. ஒழுவாத எடமா பாத்துபாத்து புள்ளைங்கள தூக்கி கெடத்திட்டு நானும் படுத்துகினன். நடு ராத்திரி இருக்கும். ஆல சங்கு ஊதிச்சா இல்லையானு தெரியலை. நல்லா கண்ண இழுத்தும் போயிட்டதால கவனிக்கலை. ஏதோ உறுமல் சத்தம் கேட்டு திடீர்னு முழிச்சி பாத்தன். சட்டியில இருக்கற கஞ்சிய அவந்தான் சளப்சளப்புனு குடிச்சிட்டிருந்தான். நான் எழுந்திருப்பன்னு நெனச்சான் போல. அவன் பக்கம் திரும்பிக்கூட பாக்கலை. அப்படியே கட்டயாட்டம் கெடந்தேன்.  தின்னு முடிச்சிட்டு வெளிய போனான். அப்பறமா உள்ள வந்தான். காத்துமழ சீரா பேஞ்சிகினே இருந்திச்சி.  என்னாடி மொறச்சிமொறச்சி பாக்கறன்னு கிட்ட வந்து எட்டி ஒதச்சி என்ன வம்புக்கு இழுத்தான். நான் எதுவுமே பேசல. திடீர்னு புள்ளைங்க ஞாபகம் வந்து பக்கத்துல திரும்பி பாத்தன். பாவம். ஒன்னொன்னும் பூனக்குட்டிங்களாட்டம் சுருண்டுங்கெடந்ததுங்க…… என்னடி பேசப்பேச வாய தெறக்கமாட்டற, அவ்வளோ ஆங்காரமா சிறுக்கினு அப்படியே மேல உழுந்தான்.....
அம்மாவுக்கு மூச்சுத் திணறியது. சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அத்தையைப் பார்த்து “அத எடுத்துக் குடுஎன்று கையை நீட்டினார். அத்தை வேகமாக படுக்கையறைக்குள் சென்று திரும்பினார். அவர் கையில் இழுப்பான் இருந்தது. வாய்க்குள் பொருத்தி விசையை அழுத்தி மருந்தை உட்செலுத்திக் கொண்டார் அம்மா. நான் சட்டென்று எழுந்து அவரருகில் சென்றேன். சில கணங்களுக்குப் பிறகு அம்மா “உக்காரு. பயப்படாத. விலாவுல அவன் அன்னிக்கு அடிச்ச அடிலாம் இன்னிக்கு ஆஸ்துமாவா அவஸ்தை குடுக்குதுஎன்றார். நான் மெதுவாகப் பின்வாங்கி அமர்ந்தேன்.
மழ நிக்கவே இல்ல. வெறி தணிஞ்சதும் அவன் வேற பக்கமா போயி படுத்துகிட்டான். அந்த மழ சத்தத்தயே வெகுநேரம் கேட்டுகினு படுத்துருந்தேன்.  கொஞ்ச நேரம் இந்த உலகத்துலயே நான் இல்ல.  சட்டுனு பித்து புடிச்சாப்புல ஒரு வேகம் நரம்புங்கள ஒரு முறுக்கு முறுக்கிச்சி. எழுந்து உக்காந்து குடிசைக்குள்ள பாத்தன். கோழிக்குஞ்சுங்களாட்டம் புள்ளைங்க ஒரு பக்கம். கெடாவாட்டம் இவன் இன்னொரு பக்கம். திடீர்னு ஒரு யோசன. அபப்டியே துள்ளி எழுந்து பொடவய சரியா கட்டனேன். தலமுடிய கொண்டயா சுருட்டி கட்டிகினு பகக்த்துல இருந்த கல்ல பாத்தேன். கூர மேலேருந்து உழுந்த கல்லு. அத தூக்கி ஓங்கி ஒரே போடா அவன் தலயில போட்டன். ஆன்னு ஒரு சத்தம். மழயில அது பெரிசா கேக்கல. ஏதோ சொல்ல வந்து அபப்டியே அடங்கிட்டான். கண்ணுங்க அப்படியே நட்டுகிச்சி. பஸ்ல அடிபட்டு உழுந்த நாய்மாதிரி…….
எனக்குள் அந்தக் காட்சி ஒரு படத்தைப்போல விரிந்தது. உடல்முழுதும் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிப்பதை உணரமுடிந்தது.  “நீங்க செஞ்சதுல தப்பே இல்லம்மாஎன்று கூவவேண்டும் போல பொங்கியது. ஆனால் குரல் எழவில்லை. தலைக்கடியில் தேங்கிய ரத்தம். புளியைக் கரைத்து ஊற்றியதுபோல. உறைந்த கண்கள். என் மனம் அதை ரகசியமாக ரசிக்கத் தொடங்கியது.
அந்த நேரம் என் மனசுல நிம்மதிய தவிர வேற எதுவுமே இல்லை. கால்ல ஒட்டியிருந்தத கழுவி தொடச்சமாதிரி.  அப்படியே புள்ளைங்க பக்கத்துலயே படுத்து தூங்கிட்டேன். அடுத்த நாள் காலயில எழுந்ததுமே வெறச்சி கெடந்தவன பாத்ததும்தான் எனக்கு சுய உணர்வே வந்திச்சி. ஐயையோனு நான் போட்ட சத்தத்த கேட்டு நாலு தெரு ஜனங்களும் உள்ள வந்திருச்சிங்க. காத்துமழையில கூரமேல போட்டிருந்த கல்லு உருண்டு உழுந்துட்டுது போல. ஒரு சத்தமும் கேக்கலையே இந்த பாவிக்கு. ஐயோ பேச்சு மூச்சி இல்லாம கெடக்கறாரேன்னு ஓங்கி ஒப்பாரி வச்சேன். வண்டி வச்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கிம் போனாங்க. உயிரு போயி ரொம்ப நேரமாய்ட்டுதுன்னு அனுப்பி வச்சிட்டாங்க. மாமியாகாரிக்கு வேற என்னமோ வேகம். நான்தான் கல்ல போட்டு சாவடிச்சிட்டேன்னு அழுது ஒப்பாரி வைக்கறாங்க. என் மாமனாரு அதட்டி கிதட்டி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்கலை. என்ன கொலகாரியா காட்டணும்ன்னு அவுங்களுக்கு ஒரு வைராக்கியம். நூறு எரநூறு செலவு செஞ்சி என்ன ஜெயிலுக்கு போவ வச்சிட்டாங்க. அவுங்க சொந்தக்காரப் பையன் ஒருத்தன் ஸ்டேஷன்ல இருந்தான். அவன வச்சி சுளுவா காரியத்த முடிச்சிட்டாங்க…..
முழுசா ஒரு வருஷம் உள்ள இருந்தேன். அப்பறமா மாமனாருதான் யார்யாரயோ புடிச்சி ஜாமீன்ல எடுத்தாரு. ஏழெட்டு வருஷம்  விசாரணை விசாரணைனு இழுத்தும் போச்சி.  இவ்வளவு காலத்துக்கும் எனக்கும் கொழந்தைங்களுக்கும் அவருதான் ஆதரவா இருந்தாரு.  அவருதான் காத்து மழயில சரிஞ்ச உழுந்த கல்லுதான் அதுன்னு சாட்சி சொன்னாரு. அந்த மழைக்கு எல்லாருடைய ஊடுங்கள்ளயும் கல்லுங்க சரிஞ்சிதுங்கன்னு ஒரே சாதனயா சாதிச்சாரு. இந்த வழக்கால மாமனாரு மாமியாரு சம்பந்தமே முரிஞ்சிபோச்சி.  பொலம்பிபொலம்பியே அந்த அம்மாவும் உயிர உட்டுட்டாங்க......
புள்ளைங்க படிக்கணும். படிப்பு இருந்தா ஒலகத்துல எப்படியும் பொழச்சிக்குவாங்க. அது ஒன்னுதான் ராவும் பகலுமா என் மனசுல ஓடிச்சி. இதுங்களுக்காக நான் செய்யாத வேல கெடயாது. ஓடாத எடம் கெடயாது. அப்பலாம் மாமனாருதான் தொணயா இருந்தாரு.. ஒழுகரையில ஒரு பிளாஸ்டிக் கம்பெனில வாட்ச்மேன் வேல பாத்தாரு. பத்தாங்கிளாஸ்ல பெரியவ பிச்சேரியிலயே அதிகமா மார்க் வாங்கனா. பேப்பர்ல போட்டாவுலாம் வந்திச்சி. அப்பதான் கம்பெனியில யாரோ சொன்னாங்கன்னு ஒரு விமானக்கம்பெனி நடத்துன பரீச்சயெல்லாம் எழுத வச்சாரு. அதுலயும் ஜெயிச்சிட்டா அவ. மேல்படிப்புக்கு சிங்கப்பூருக்கு போனா. படிப்பு சாப்பாடு தங்கற எடம்லாம் அவுங்களே குடுத்தாங்க. கோர்ட்டுக்கும் ஊட்டுக்குமா அலஞ்ச நேரத்துல அவ அங்கெயே படிச்சி பட்டம் வாங்கி வேலயிலயும் சேந்துட்டா.  மூணு தங்கச்சிங்களயும் அங்கயே வரவச்சி தங்கவச்சி படிக்கறதுக்கு உண்டான ஏற்பாடுலாம் அவளே செஞ்சா. இங்க சந்தேகத்துக்கு இடமில்லாத வகயில குற்றம் நிரூபிக்கப்படலைன்னு மாமனாரு சாட்சியயே ஆதாரமா கொண்டு கோர்ட்டுல விடுதல குடுத்துட்டாங்க.  அடுத்த வருஷத்துலயே எனக்கும் ஒரு ஏற்பாடு செஞ்சா பெரியவ. புள்ளைங்களோடயே போயி இரு தாயினு சிங்கப்பூருக்கு அனுப்பி வச்சிட்டாரு மாமனாரு.....
கரடுமொரடான பாதைன்னு வாயால சொல்வாங்க. ஆனா அதுல நடந்து வந்தவங்களுக்குத்தான் கஷ்டம் தெரியும். நாலு ஜென்மத்துல படவேண்டிய கஷ்டங்கள அக்கா ஒரே ஜென்மத்துலயே பட்டுட்டாங்க. அவுங்களாலதான் இன்னிக்கு புள்ளைங்க வாழ்க்கையில ஒரு வெளிச்சம் பொறந்திருக்குது ஆதரவோடு அம்மாவைப் பார்த்தபடி சொன்னாள் அத்தை. தெருவில் திடீரென ஆரவாரக்குரல் கேட்டது. தேர்தலுக்கு வாக்குக் கேட்டபடி கட்சிக்காரர்கள் ஊர்வலமாக செல்லும் காட்சி  ஜன்னலில் தெரிந்தது. வேட்பாளர் மக்கள் திரளைப் பார்த்து வணங்கியபடி சென்றார். “எல்லாம் ஜெயிக்கரவரிக்கும்தான்  ஜன்னல் பக்கத்திலிருந்து பார்வையைத் திருப்பியபடி சொன்னாள் அத்தை .
அம்மா வெகுநேரம் பேசாமல் இருந்தார். விடுதலயாயி புள்ளைங்கள்ளாம் நல்லபடியா படிச்சி முன்னேறுறாங்கன்னு பாத்த்தும் எந்த அளவுக்கு மனசுல நிம்மதி உருவாயிச்சோ, அதே அளவுக்கு மாமனாரை நெனச்சி வருத்தமும் உருவாயிச்சி. என் பார்வையில என் ஊட்டுக்காரன் ஒரு மொரடன்.  குடிகாரன். அடங்காப்பிடாரி. திமிரு புடிச்சவன். ஆயிரம்தான் இருந்தாலும் அவருக்கு அவன் பெத்தெடுத்த புள்ளயாச்சே. கொள்ளி வைக்க வேண்டிய புள்ளகாரனுக்கு நாம கொள்ளி வைக்கறமேன்னு அவர் மனசு நொந்திருக்காதா? அந்த சாவபத்தி அவரு ஒரு வார்த்த கூட எங்கிட்ட கேட்டதே இல்லையேன்னு அப்பதான் நெனச்சிகிட்டேன்....
அம்மாவால் தொடர்ந்து பேச முடியவில்லை. அவர் மனம் சட்டென்று இடம்மாறி கடந்த காலத்துக்குள் நுழைந்துவிட்டதைப்போல இருந்தது. சுவரோரமாக எறும்புகள் அரிசிமணியொன்றை உருட்டிச் சென்றன. “ பல நாளு அத நெனச்சி நெனச்சி தூக்கமே இல்லாம தவிச்சிருக்கேன். மனச தெறந்து ஒருநாளு அவருகிட்ட எல்லா உண்மயயும் சொல்லிடணுமின்னு தோணும். அப்பறம் அது அப்படியே அடங்கிடும்.  ஆனால் எவ்வளவு காலம்தான் அத அப்படி அடக்கிவைக்க முடியும்? சிங்கப்பூரு கெளம்பற அன்னிக்கு எல்லாத்தயும் மடமடனு சொல்லிட்டு அவர் கால்ல உழுந்துட்டேன். அவரு கண்ணுலாம் கலங்கிடுசி. சாவ வேண்டிய மிருகம்தாம்மா அவன். இவ்வளவு நாள் இந்த உலகத்துல அந்த மிருகம் வாழ்ந்ததே அதிகம். அவன் செஞ்ச பாவத்துக்கு இந்த நாலு உயிருங்களும் ஏன் பலியாவணும்? இதுங்களுக்காகவாவது நீ இருக்கணும் தாயே. போம்மா, போ. போயி அந்த ஊருல புள்ளகுட்டிங்களோட நிம்மதியா இரு. நான் சொன்னதே  இந்த உலகத்துக்கு உண்மயா இருக்கட்டும்னு சொல்லிட்டு கெளம்பி போயிட்டாரு. அப்படிலாம் சொல்றதுக்கு ரொம்ப பெரிய மனசு வேணும். அந்த வார்த்த அடிக்கடி என் முன்னால் வந்து நின்னு திகைக்க வச்சிடும். தெய்வவாக்குன்னு சொன்னா அதுதான். எங்கள காபந்து பண்ற தெய்வம் அவுரு. அந்த மொகத்த நெனைக்காத நாளே இல்ல. கோயில்ல போயி நின்னாகூட எனக்கு அவரு முகம்தான் தெரியும். அவரயும் அங்க அழச்சிம்போயி வச்சிக்கணும்னுதான் புள்ளைங்களுக்கு ரொம்ப ஆச. ஆனா அவருக்கு அதுல விருப்பமில்லை. நான் இந்த ஊரு செடி தாயி. இங்கயே பட்டுப்போயி இந்த மண்ணுலயே உழணும்னு சொல்லிட்டாரு......
ஆறேழு வருஷத்துக்கு மின்னால பெரியவளுக்கு கல்யாணம் நடந்திச்சி. அந்த ஊரு பையன். அதுக்கு அடுத்த வருஷம் அவளுக்கு ஒரு ஆம்பள புள்ள பொறந்திச்சி. குடும்பத்தோட வந்து அவர் கால்ல உழுந்து ஆசீர்வாதம் வாங்கனா. கையில புள்ளய வாங்கி வச்சிகினு ரொம்ப நேரம் அவனயே பாத்தாரு. கண்ணுலாம் கலங்கிபோச்சி.  நீயாச்சிம் பொம்பளய மதிக்கறவனா நடந்து இந்த வம்சத்த காப்பாத்துடான்னு சொல்லி தினுரு வச்சி உட்டாரு. அந்த வருஷமே நிமோனியா ஜொரத்துல படுத்தவரு, அப்படியே செத்துட்டாரு. அதுக்கப்பறம் வருஷாவருஷம் அவர் செத்த நாள்ள இங்க வந்து படைக்கறது ஒரு பழக்கம். இது எத்தனியாவது படையல்டி?நெகிழ்ச்சியான குரலில் கேட்டபடி அத்தையின் பக்கம் திரும்பினார். நாலாவது படையல்க்காஎன்றாள் அத்தை. “ஒலகத்துல மனுஷங்க தொணயும் தெய்வத்தொணயும் ஒன்னா அமயறதுலாம் பெரிய வரம்னுதான்னு சொல்லணும். அப்பதான் நம்ம வண்டிங்க ஓடும்
புருஷன் தொணதான் மனுஷத்தொணயா இருக்கணும்ன்னு கட்டாயமெதுவும் இல்லயே என அத்தையைக் கேட்கலாம் என எழுந்த வார்த்தைகளை எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.