Home

Monday 11 June 2018

பாடல் என்னும் கொண்டாட்டம்



குழந்தைகளுக்கு பாடல்கள் ஏன் பிடிக்கின்றன என்கிற கேள்வியிலிருந்து தொடங்கலாம். ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளும் முன்பாக, ஒரு மொழியைப் புரிந்துகொள்ளும் முன்பாக குழந்தையின் செவியையும் மனத்தையும் நிறைப்பவை அதன் தாய் பாடும் தாலாட்டுப்பாடல்கள். அதன் இசை குழந்தையை மயக்குகிறது. உறங்கவைக்கிறது. பாதுகாப்பாக உணரவைக்கிறது. வளரும் பருவத்தில் லயமும் சந்தமும் மிகுந்த சின்னச்சின்ன சொற்களால் உருவாகும் ஓசை குழந்தையின் நெஞ்சை ஈர்க்கிறது. சந்தத்தன்மையும் இசையும் கொண்ட சொற்கள் நிரம்பியிருப்பதாலேயே, குழந்தைகளுக்குப் பாடல்கள் பிடிக்கின்றன.

குழந்தைகள் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் தருணத்தில் அல்லது இரு குழந்தைகள் தமக்குள் மகிழ்ச்சியாக உரையாடிக்கொள்ளும் தருணத்தில் அவர்கள் அறியாமல் ஒருமுறை கவனித்துப் பாருங்கள். அவர்கள் சொற்களை அடுக்கும் வேகமும் இணைசொற்களை கண்டுபிடிக்கும் வேகமும் நம்பமுடியாத அளவுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அவர்கள் விரும்புவது சொல்லின் பொருளை அல்ல. சொல்லின் அடுக்கை, சொல்லின் சந்தத்தை, சொல்லின் தாளத்தை அவர்கள் மனம் விரும்புகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் உள்ளம் ஒரு பெரிய நகைப்பெட்டிபோல அல்லது மலர்க்கூடைபோல சொற்களால் நிரம்பி வழிந்தபடி இருக்கின்றன. அவர்கள் சொற்களோடு வாழ விரும்புகிறார்கள். அந்த வாழ்க்கை ஒருவகையான ஆனந்தநிலை. பித்துநிலை. கொண்டாட்ட நிலை.
பாட்டி பாட்டி
பாக்கு வெத்தல பாட்டி
கோணக்கால நீட்டி
கும்மியடி பாட்டி
என்று ஒரு குழந்தை பாடும் பாடலிலோ
அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு
எங்க மாமா நேரு
என்று பாடும் பாடலிலோ பொருளெனச் சொல்ல எதுவும் இல்லை. அதில் வெளிப்படுவது முழுக்கமுழுக்க கொண்டாட்ட உணர்வு மட்டுமே. ஒரு குழந்தையின் உள்ளம் கொண்டாட்ட உணர்வுகளால் தளும்பிக்கொண்டே இருப்பதால்தான், அது விழித்திருக்கும் தருணங்களிலெல்லாம் விளையாடிக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகிறது. நடக்கிறது. கதவின் பின்னால் சென்று மறைந்துகொள்கிறது. கட்டிலுக்குக் கீழே புகுந்து வெளியே வருகிறது. காகம் கத்தினாலும் குருவி கத்தினாலும் விரலை நீட்டி அழைக்கிறது. தன்னையும் அதுபோலவே பாவித்து, அதுபோலவே ஒலியெழுப்பி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு கோழியை, ஒரு ஆட்டுக்குட்டியை, ஒரு கன்றுக்குட்டியை அல்லது தனக்குப் பிடித்த ஒரு அக்காவை அல்லது அண்ணனைப் பார்த்ததும் குழந்தையின் உடம்பிலும் கைகளிலும் கால்களிலும் உருவாகும் பரபரப்பை நாம் அனைவருமே பார்த்திருப்போம் அல்லவா? அந்தப் பரபரப்பு உணர்த்துவது என்ன? அதன் நெஞ்சில் உள்ள கொண்டாட்டத்தை அல்லவா? சொற்களால் உணர்த்தமுடியாத கொண்டாட்டத்தை உடல் அசைவுகளாலும் ஓசைகளாலும் கண்பார்வையாலும் உணர்த்திவிடுகின்றன. மொழி பழகியபிறகு, அந்தக் கொண்டாட்டத்தை அதன் சொற்கள் உணர்த்துகின்றன.
பாரதியார் குழந்தைப்பாடல்கள் எழுதியதற்கு முன்பாக தாய்மார்களே தத்தம் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பாடல்களைக் கட்டிச் சொல்லித் தந்தார்கள். ஒப்பாரிப்பாடல்களைப்போல, தாலாட்டுப்பாடல்களைப்போல, குழந்தைப்பாடல்களுக்கும் தாய்க்குலமே வேர்.
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டு வா
என்னும் பாடலையோ அல்லது
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
என்னும் பாடலையோ தாய்க்குலத்தைத் தவிர வேறு யாரால் பாடிவிட முடியும்? பாட்டுக்கான வரிகளை இணைக்க புலமையோ, பேரறிவோ, மேதைமையோ தேவையில்லை. குழந்தையோடு குழந்தையாக இருக்கத் தெரிந்தாலேயே போதும். ஒரு கவிஞன் ஒரு தாயாக தன்னை உணர்ந்துகொண்டு குழந்தையுடன் ஆடியும் பாடியும் பேசியும் சிரித்தும் விளையாடத் தொடங்கினாலேயே போதும். அவனுடைய பாடல்கள் குழதைக்குரிய பாடல்களாக அமைந்துவிடும்.  படித்த புலவர்களும் கவிராயர்களும் குழந்தைக்காக என்று தனியாக எழுதத் தொடங்கியபோது, தாயின் மனத்தைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல்  நல்வழிக்கருத்துகளையும் சீர்திருத்தக்கருத்துகளையும் இளமையிலேயே புகட்ட நினைத்து பாடல்களாக மாற்றிவைத்தார்கள். அவை அனைத்தும் கால ஓட்டத்தில் கரைந்துபோயின.
சிறுவர் பாடலில் கருத்து இருக்கவே கூடாது என்பதல்ல என் எண்ணம். அது இலைமறையாக காய்மறையாக இருக்கலாம். அது ஒருபோதும் கவிஞரின் பிரதான நோக்கமாக இருக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறைப் போட்டு
ஈயைத் தூர ஓட்டு
என்னும் பாடலைப் பாடும்போது, அதன் சந்தத்தோடு இணைந்திருக்கும் மகிழ்ச்சியும் விளையாட்டும் ஒரு குழந்தையை ரசிக்கவைத்துவிடுவதை  உணரலாம். அகரவரிசை எழுத்துகளை மனத்தில் பதியவைக்கும் ஒரு நோக்கம் பாட்டிலே இருந்தாலும் அது பிரதான வரிசையில் இல்லை. பின்வரிசையில் சாமர்த்தியமாக சற்றே கசிய விடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. கவிஞர் தன் கவித்துவத்தால் அந்த வெற்றியைச் சாதித்திருக்கிறார்.  
கவிமணி, அழ.வள்ளியப்பா, பாரதிதாசன். தமிழொளி, துரை.மாணிக்கம் என்னும் பெருஞ்சித்திரனார், .இலெ.தங்கப்பா போன்ற கவிஞர்களுடைய பாடல்களைப் படிக்கும்போது, குழந்தையோடு குழந்தையாக மாறிவிடும் தன்மை அக்கவிஞர்களிடம் இருப்பதை உணரலாம். குழந்தையின் மனமும் குழந்தையின் விழிகளும் உள்ளிருந்து இயக்கும் விசைகளாக அவர்கள் பாடல்களில் அமைந்திருக்கின்றன. அதனாலேயே அவர்களுடைய பாடல் வரிகளில் கொண்டாட்ட உணர்வு ஊற்றெனப் பீறிடுகிறது.  அவர்கள் வரிகளுடன் கருத்துகளை இணைத்துச் செல்லும் பாடல்களை எழுதியிருந்தபோதும், அவை பிரதானமான கொண்டாட்ட உணர்வை அழுத்தாதபடி தன் கவித்துவத்தால் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
குழந்தைப்பாடல்களில் மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கிவரும் கவிஞர் தங்கப்பா. குழந்தையின் விழிகளோடு ஒரு காட்சியைப் பார்த்து குழந்தைபோலவே ஆனந்தத்தை அனுபவித்து எழுதும் பாடல்களாக தங்கப்பாவின் பாடல்கள் உள்ளன.
திமுக்குத் தக்கா திமுக்குத் தக்கா
திமுக்குத் தக்காளி
சின்னப் பாட்டி தோட்டத்திலே
சிவப்புத் தக்காளி

சமைக்கும் முன்னே தொண்டைக்குள்ளே
ஏப்பம் வந்தாச்சு
சக்கை பிழிந்து போட்ட இடத்தில்
விதை முளைச்சாச்சு
ஒரு குழந்தை புன்னகையோடும் பரவசத்தோடும் குதித்துக்குதித்து  பாடியபடி இருக்கும் காட்சியை, இந்தப் பாடல் வரிகளிடையே இருப்பதை உணரலாம். இதுவே தங்கப்பாவின் ஆளுமை. கவித்துவம். விளையாட்டுப் பாடல்களில் இது
.தடதட என மழை விழுகுது
தகரக் கூரை மேலே
சடசட என அது வழியுது
தழைத்த செடிகள் மேலே
படபட என இலை துடிக்குது
பட்ட மழையினாலே
மடமட என நீர் பெருகுது
மரஞ்செடிகளின் கீழே
இதுவும் தங்கப்பாவின் பாடல். சந்தமும் தாளமும் நெகிழ்ச்சியும் கூடிய வரிகள். மழையை ரசித்துப் பார்த்து நடனமிட்டபடி ஒரு குழந்தை  பாடும் காட்சி கண்முன்னால் விரிவதைப்போல ஒரு தோற்றம். ஒரு குழந்தையின் குரலில் தங்கப்பாவால் பாட முடிந்திருக்கிறது. இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் அவர் கணக்கில் உள்ளன. சோளக்கொல்லை பொம்மை, மழலை விருந்து என்னும் இரண்டு தொகுதிகளும் தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய செல்வம். குழந்தைப்பாடல் இலக்கணத்துக்கான சாட்சியாக இவை உள்ளன. அப்பாடல்களைப் படித்துமுடிக்கும் ஒவ்வொரு முறையும், பாடல்களை அவர் குழந்தைகளுக்காக பாடவில்லை, அவரே குழந்தையாக பாடிப் பாடி அனுபவிக்கிறார் என்றே தோன்றுகிறது.