Home

Sunday, 20 May 2018

காலத்தின் முகங்கள் - கட்டுரை




     என் மனைவியின் தங்கை குடும்பம் வேலூரில் இருந்தது. அவர்களுக்கும் அங்கிருந்த ஒரு சித்த மருத்துவருக்கும் நல்ல பழக்கம். அவரைப்பற்றி ஒவ்வொருமுறையும் தொலைபேசியில் அவர்கள் சொன்ன தகவல்கள் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தைத் து¡ண்டியது. தொடர்ச்சியான பல அலுவலகப் பயணங்களாலும் வேலைச்சுமைகளாலும் வேலு¡ருக்குத் திட்டமிட்டிருந்த பயணம் தள்ளித்தள்ளிப் போனது. வருகிறேன் என்று சொன்ன தேதிக்கு மாறாக மூன்று மாதம் கழித்துத்தான் செல்லமுடிந்தது. நான் சென்ற நேரத்தில் மருத்துவர் ஊரில் இல்லை. அருகிலிருந்த ஏதோ ஒரு கிராமத்தில் நோயாளிகளைக் காண்பதற்காகச் சென்றிருப்பதாகவும் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில் வந்துவிடுவாரென்றும்  தொலைபேசியில் சொன்னார்கள். 

     என் ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. நாடித் துடிப்புகளின் வழியாக நோய்க்கூறுகளை அறிவது என்பது மாபெரும் கலை. அக்கலையோடு இணைத்துப் பார்க்கிறவகையில் இரண்டு கதைப்பாத்திரங்கள் எப்போதும் என் மனத்தில் மிதந்தபடி இருக்கும். தி.ஜானகிராமனுடைய 'அன்பே ஆரமுதே' புதினத்தில் இடம்பெறுகிற அனந்தசாமி ஒரு பாத்திரம். தாராசங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிகேதனம்' என்னும் புதினத்தில் இடம்பெறுகிற மருத்துவர் இன்னொரு பாத்திரம்.  நேருக்கு நேராக அப்படி ஒரு மருத்துவரைப் பார்க்கும் தருணத்துக்காகக் காத்திருந்தேன்.
     பொழுதுபோக்குக்காக மேசைமீது இருந்த செய்தித்தாட்களைப் புரட்டினேன். சிப்பாய்ப் புரட்சி நடைபெற்று இருநு¡று ஆண்டுகள் நிறைவெய்திருப்பதையொட்டி வேலு¡ர் நகரெங்கும் சின்னச்சின்னதாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல நிகழ்ச்சிகளைப்பற்றிய குறிப்புகள் வெளியாகியிருந்தன. ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருந்தபோது பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்பட்ட திப்பு மகாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இதற்கு முன்பு வேலூர் கோட்டைக்குச் சென்ற ஒவ்வொரு முறையும் தொலைவிலிருந்தேதான் இந்த மகாலைப் பார்க்கமுடியும். அங்குதான் திப்பு சுல்தானுடைய சந்ததியினரை ஆங்கில அரசு சிறைப்படுத்தி வைத்திருந்தார்களாம். கிட்டத்தட்ட ஆயிரம் பேர்கள். இவர்களைப் பாதுகாக்க ஏராளமான காவலர்களை அமர்த்தியிருந்தார்களாம். இந்தியக் காவலர்களோடு ஆங்கிலக் காவலர்களும் அதிகாரிகளும் இருபத்திநாலு மணிநேரமும் கைதிகளின் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்களாம். ஒவ்வொரு முறையும் அக்காட்சிகளைக் கற்பனை செய்துகொள்வேன். உள்ளே சென்று பார்க்க ஆவலெழும். ஆனால் அனுமதி கிடைத்ததில்லை. கோட்டைக்குள்ளேயே தடை செய்யப்பட்ட ஒரு பகுதியாக அந்த மகால் விளங்கும்.  பார்க்கமுடியாத சங்கடம் அச்சிறைக்கூடம் எப்படி இருக்கக்கூடும் என்கிற ஊகங்களை அதிகரித்தபடி இருக்கும். இவ்வளவு காலம் திறக்கப்படாத அப்பகுதியை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல் உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தேன். ஒருவேளை இந்தக் கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும் மறுபடியும் அடைக்கப்பட்டுவிடலாம் என்றொரு சந்தேகம் எழுந்தது.
     புகைப்படங்களைப் பார்த்த முதல் கணத்தில் அந்தமான் சிறையின் தோற்றம்தான் என் நினைவிலெழுந்தது. திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்ட அச்சிறை ஆங்கில அடக்குமுறையையும் அதிகாரவெறியையும் அம்பலப்படுத்துகிற படிமம். ஒருபுறம் அச்சம். இன்னொருபுறம் அதிகார வெறி. இரண்டுக்கும் இடையே ஊசலாடியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று தோன்றும். கிட்டத்தட்ட ஐம்பது சதுர அடிகள் மட்டுமே கொண்டது ஒவ்வொரு அறையும். கடப்பாறையைப்போன்ற கம்பிகளைக்கொண்ட இரும்புக்கதவுகள். சுவரின் அகலம் ஒன்றரை அடி. யானையே முட்டி மோதினாலும் உடைக்க முடியாத சுவர். ஆகாயத்தையும் அதிகாரிகளையும் தவிர வேறு எதையும் ஏறெடுத்தும் பார்க்கமுடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட அறைகள். வேலூர்ச்சிறையின் அறைகளும் ஏறத்தாழ அந்த சாயலில் வடிவமைக்கப்பட்டதாகவே காட்சி தந்தது.  ஆனால் ஒவ்வொன்றும் நூறு சதுர அடிப் பரப்புள்ளதாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.  ஒவ்வொரு அறையிலும் ஆறேழு பேர்களாவது தங்கியிருக்கலாம். அப்படி அடைத்திருந்தால் தான் ஆயிரம் பேர்களை அடைப்பது சாத்தியமாகியிருக்கும். மருத்துவர் சந்திப்பு தள்ளிப்போவதுகூட இந்த மகாலைப் பார்ப்பதற்காக தானாகவே ஒருவகையில் உருவான வாய்ப்பு என நினைத்துக்கொண்டேன்.
     மாலை வேளையில் குடும்பத்தோடு கோட்டைக்குச் சென்றோம். மகாலுக்குப் போகும் திசையில் வேறொரு அரங்கில்  வேலு¡ர்ப் புரட்சியின் இருநூறாவது ஆண்டு நினைவுநாளையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நாடகமும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. வாசலில் நின்றிருந்த நண்பர்கள் எங்களைப் பார்த்ததும் ஓடிவந்து வரவேற்றார்கள். எல்லாரும் பழைய நெருக்கமான நண்பர்கள். அந்தத் தருணத்தில் அந்த அழைப்பைத் தவிர்ப்பது சரியான செயலாகாது என்று தோன்றியது. சிறிதுநேரமாவது பார்த்தபிறகு வெளியேறிச் செல்லலாம் என்று பேசிக்கொண்டு உள்ளே சென்றோம். 
     முதல் இந்திய சுதந்திரப்புரட்சி என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிற 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் நடந்த சிப்பாய்ப்புரட்சிக்கு ஐம்பதாண்டுகள் முன்பாகவே வேலு¡ர்க்கோட்டையில் சிப்பாய்ப்புரட்சி நடைபெற்றிருந்தாலும் போதுமான கவனம் பெறாமல் ஏதோ ஒரு புறக்கணிப்புக்கு ஆளாகிவிட்டது. சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த அந்த மோதலை ஒரு நாடகமாக மேடையில் நண்பர்கள் நடித்துக் காட்டினார்கள். சிறைக்கூடங்களில் திப்புவின் சொந்தக்காரர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவலர்கள் இரவும் பகலும் கடுமையாகக் காவல் காக்கிறார்கள். இந்தியக் காவலர்களோடு ஆங்கிலக் காவலர்களும் சேர்ந்திருக்கிறார்கள். அப்போதுதான் மேலதிகாரியின் தீர்மானங்கள் அறிவிக்கப்படுகின்றன. மதச்சின்னங்கள் கூடாது, தலைமுடியின் அமைப்பில் வேறுவேறு மாற்றங்கள் கூடாது. சீருடை அணியவேண்டும். பன்றிக்கொழுப்பு தடவிய தோட்டாக்களைப் பயன்படுத்தவேண்டும். இப்படி ஏராளமான நிபந்தனைகள். இவற்றை ஏற்றுக்கொள்ள இந்தியச் சிப்பாய்கள் மறுக்கிறார்கள். மோதல் வெடிக்கிறது. அதே சிறைக்குள் பணிபுரியும்  ஆங்கிலக் காவலர்கள் மூலமாக இந்தியக் காவலர்களை அடக்கத் திட்டமிடுகிறது அரசு. முதல்நாள்வரை ஒன்றாகப் பணிபுரிந்த காவலர்கள் அந்த ஆணைக்குப் பிறகு இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதும் சூழல் உருவாகிவிடுகிறது. சிறையில் இருந்த திப்புவின் சொந்தக்காரர்கள் இந்தியக் காவலர்களுக்கு உதவுகிறார்கள். மோதல் கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தைப்போலவே நிகழ்கிறது. பல ஆங்கிலக் காவலர்கள் கொல்லப்படுகிறார்கள். சிலர் தப்பியோடிவிடுகிறார்கள்.
     கோட்டைச்சிறை முழுக்க இந்தியக் காவலர்கள்வசம் வந்துவிடுகிறது. கோட்டைமீது பறந்த ஆங்கிலக்கொடி இறக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் அது சுதந்திரக்கோட்டையாகத் திகழ்கிறது. மேற்கொண்டு அப்போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்குள் ஏற்கனவே தப்பியோடிய ஆங்கிலக் காவலர்கள் அருகிலிருந்த நகரையடைந்து அங்கிருந்த அதிகாரிகளின் உதவியைப் பெற்று வலிமை வாய்ந்த துருப்புகளோடு கோட்டைக்குத் திரும்பி வருகிறார்கள். சிறை கைப்பற்றப்பட்ட செய்தி வேகவேகமாகப் பரவியதும் அக்கம்பக்கத்திலிருந்த பல நகர்களிலிருந்து ஏராளமான ஆங்கிலப்படைகள்  வருகின்றன. சிறையைப் பாதுகாத்த இந்தியக் காவலர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் ஒரு யுத்தம் நடைபெறுகிறது. ஏறத்தாழ அறுநு¡ற்றுக்கும் மேற்பட்ட இந்தியக் காவலர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல்கள் கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக்குள் வீசியெறியப்படுகின்றன.  கோட்டையை மறுபடியும் ஆங்கிலயேர்கள் கைப்பற்றுகிறார்கள். உயிருடன் இருந்த இந்தியக் காவலர்களில் பணிய மறுத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை. பணிந்தவர்களுக்கு மீண்டும் வேலை. சிறைகளின்மீதான பிடி மறுபடியும் இறுகுகிறது. திப்புவின் சொந்தங்கள் ஏக்கத்தோடு வானத்தை வெறிக்கின்றன. அதிகாரத்துக்குப் பணியமறுத்து சுதந்திரக்காற்றை சில மணிநேரங்களாவது சுவாசித்த சிறைக்கதவுகள் மீண்டும் அடிமைப்பூட்டுகளால் பூட்டப்படுகின்றன.
     இருநூறு ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைப் படம்பிடித்த நாடகம் நெஞ்சைக் கனக்கவைக்கிறது. கண்ணுக்குத் தெரியாத பலருடைய இத்தகைய தியாகங்களின் விளைவாகத்தான் இந்த மண்மீது நாம் சுதந்திரமாக இன்று நிற்கிறோம் என்ற எண்ணம் எழுந்தபோது மானசிகமாக அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். நாடகத்தைத் தொடர்ந்து ஒருசில உரைகள். பாடல்கள். உடனடியாக எழுந்து வெளியே வர இயலவில்லை. வெளியே வந்தபோது இருள் கவிந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது. திப்பு மகால் பார்வைநேரம் முடிந்து சாத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. அதைப் பார்க்கமுடியாத ஏமாற்றம் ஒரு மனக்குறையாக தங்கிவிட்டது. மெளனமாக அக்கம்பக்கம் பார்த்து சாலையைக் கடந்தோம்.
     ஒரு தேநீர் அருந்திவிட்டுச் செல்லலாம் என்ற திட்டத்தை என் மனைவியின் தங்கை முன்வைத்ததும் அருகில் இருந்த ஒரு விடுதியைநோக்கி நடந்தோம். பள்ளிச் சீருடை அணிந்த சிறுமியொருத்தி வேகமாக எங்களை நெருங்கி "முல்லைப்பூ வாங்கிக்கிங்க சார், முழம் மூணு ரூபாதான்" என்றாள். ஒரு பிளாஸ்டிக் உறையில் பூப்பந்துகளை வைத்துக்கொண்டு நின்றாள் அவள். அதற்குள் இன்னொரு சிறுமியும் எங்களை நெருங்கி "நாலு முழமா வாங்கனா பத்து ரூபாய்க்குத் தரேன் சார்" என்றாள். அப்போதுதான் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து சிறுமிகள் பள்ளிச் சீருடையோடு சின்னக்கூடை அல்லது பிளாஸ்டிக் பைகளில் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள். நாலு முழம் வாங்கி அமுதாவும் அவள் தங்கையும் வைத்துக்கொண்டார்கள்.
     விடுதிக்குள் சென்று காலியான மேசையைச் சுற்றி அமர்ந்து தேநீருக்குச் சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. மருத்துவர் ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் மறுநாள் காலை பத்துமணிக்குச் சந்திக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நன்றி சொல்லி மறுசெய்தி அனுப்பிவிட்டு பேச்சைத் தொடர்ந்தோம்.
     சட்டென்று சாலையில் ஒருவித பரபரப்பு சூழ்வதை என்னால் பார்க்கமுடிந்தது. மற்றவர்களுடைய கவனத்தை அந்தத் திசையில் திருப்புவதற்குமுன்னால் தடதடவென்று மோட்டார்சைக்கிளில் வந்திறங்கிய இரண்டு காவலர்கள் "புடி புடி" என்று பூ விற்கும் சிறுமிகளை விரட்டினார்கள். தட்டுகளை நழுவவிட்டு ஓட்டமாக ஓடித் தப்பித்தார்கள் சில சிறுமிகள். பூப்பைகளோடு வேறொரு திசையில் ஓடினார்கள் வேறு சில சிறுமிகள். ஆளுக்கொரு சிறுமியை தலைப்பின்னலைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டார்கள் காவலர்கள். ஒரு சிறுமி ஓடிவந்து எங்கள் மேசைக்கு அருகே உட்கார்ந்துகொண்டாள். அவள் கையில் பூப்பை இல்லாததைக் கவனித்தேன். எந்தப் பதற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் ஒரு தேநீர் வேண்டுமெனச் சொன்னாள் அவள்.
     அகப்பட்டுக்கொண்ட சிறுமிகளின் கன்னத்தில் வேகமாக அறைந்தார் ஒருவர்.  கையிலிருந்த லத்தித்தடியால் முட்டிக்காலுக்குக் கீழே விண்ணென்று அடித்தார் மற்றவர்.
     "ஒருதரம் சொன்னா உங்களுக்கெல்லாம் உறைக்காதாடி, சோத்த துன்றிங்களா, வேற எதயாச்சிம் துன்றிங்களா? டிராபிக்ல நிக்கறதுக்கு இப்பவே கத்துக்கறிங்களாடி? ஒங்களுக்கெல்லாம் இழுத்தும்போயி உள்ள வச்சி நாலு சாத்து சாத்தனா தெரியும்டி போலீஸ்காரன் கத.   சும்மா வாயால சொல்லிட்டு போறான்னுதான நெனைக்கறிங்க. வைக்கறிங்கடி, வைக்கறேன். என்னைக்காவது ஒருநாளு ஒங்களுக்கு பொங்கல் வைக்கறேன்."
     இந்த முறை அடிகள் முதுகில் விழுந்தன.  "இல்லிங்க ஐயா, இல்லிங்க ஐயா" என்ற வார்த்தைகளைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியாதவர்களாக இருந்தார்கள் சிறுமிகள். அழுகையிலும் அவமானத்திலும் அவர்கள் குன்றிப்போயிருந்தார்கள்.
     ஒரு காவலரின் பார்வை கடைக்குள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த சிறுமியின்மீது பட்டுவிட்டது. வேகவேகமாக ஏதோ திருடனைப் பிடிக்கப் பாய்வதைப்போல பரபரப்போடு பாய்ந்து உள்ளே வந்தார். அந்தச் சிறுமி அவரை ஏறெடுத்தும்கூட பார்க்கவில்லை. வேறு ஏதோ திசையில் கவனம் பதித்தவளாக தொடர்ந்து தேநீரைச் சுவைத்துக்கொண்டிருந்தாள். அவர் அவளுடைய மேசையையே இரண்டு முறை சுற்றிச்சுற்றி வந்தார். பிறகு மெளனமாக தலையசைத்தபடி வெளியேறினார்.
     "இன்னொரு தரம் இந்த ஏரியாவில ஒன்னப் பாத்தேன், தோல உரிச்சி தொங்கப் போட்டுடுவேன், ஓடிப்போ."
     அழுத சிறுமிகளை விடுவித்துவிட்டு போக்குவரத்தை சீராக்கிவிட்ட நிம்மதியோடு காவலர்களின் வண்டி அடுத்த எல்லைக்குப் பறந்தது.
     தேநீர் அருந்திய சிறுமி கல்லாவில் பணத்தைக் கட்டிவிட்டு வேகமாக வெளியே சென்று அழுதுகொண்டிருந்த மற்ற சிறுமிகளை ஆதரவாக அணைத்துத் தோளில் தட்டியபடி ஏதோ பேசிக்கொண்டே வேறொரு திசையில் நடந்தாள். அவ்விருவரும் அவளை ஏதோ வெறுப்பாகத் திட்டியதுபோல இருந்தது. விலக்கிவிலக்கி நடப்பதும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை அவள் அமைதிப்படுத்துவதும் தெரிந்தது.
எங்கள் தேநீருக்கான பணத்தைக் கொடுக்கவரும் போது கல்லாவில் உட்கார்ந்திருந்தவரிடம் "என்ன சார் திடீர்னு?" என்று கேட்டேன்.
     "அவனுங்க கெடக்கறானுங்க சார் பேமானிங்க. போலீசா சார் அவனுங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால இதே கடைத்தெருவுல நல்ல டிராபிக்ல நகைங்களை கொள்ளையடிச்சிட்டு ஒரு ஆளயும் சுட்டி சாவடிச்சிட்டு ஓடிப் போனானுங்க சார் ரெண்டு பேரு. இன்னிய தேதி வரைக்கும் அவனுங்க இவங்களால புடிக்கமுடியலை. பாவம், பூ வித்து வயித்த கழுவிக்கிற பசங்ககிட்ட வந்து வீராப்ப காட்டறானுங்க. அம்மாக்காரிங்கள்ளாம் அவிசாரிதான, யாரு தட்டிக் கேக்கப்போறாங்கன்னு எளக்காரம் சார் இவனுங்களுக்கு. அம்மாவுடைய வாழ்க்கைதான் இப்படியாயிடுச்சே, நாமளாவது நாலுபேரப் போல படிச்சி முன்னுக்கு வந்து வேறவிதமா வாழணும்னு நெனைக்கற பசங்கள இவனுங்களே நாசமாக்கிடுவானுங்க சார். இவனுங்கள்ளாம் இந்த ஊருக்கே பெரிய சாபம் சார்." ஆற்றாமையோடு எல்லாவற்றையும் கொட்டினார் அவர்.
     சிறிது நேரத்துக்குமுன்னால் பார்த்த வரலாற்று நாடகக் காட்சியை மீண்டும் மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். தம் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் எதிர்த்து நின்ற அந்தநாள் கோட்டைக் காவலர்களுக்கும் தம் அதிகாரத்துக்காகவும் நலத்துக்காகவும் அருவருப்பூட்டும் வகையில் நடந்துகொள்கிற இந்த நாள் கோட்டைக் காவலர்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம் சட்டென்று உறைத்தது. அது மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம். காலத்தின் முகம் மாறும்போது இப்படி பல வித்தியாசங்களும் உருவாகும் என்று தோன்றியது.