சாலையிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி கடையை நோக்கி வந்த சிறுமி முயல் உருவத்தில் நின்றிருந்த மகாதேவனைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒவ்வொரு படியையும் கடக்கும் போது அவள் சொல்லிக்கொண்டு வந்த “ஜேக் அண்ட் ஜில் வெண்ட் அப் ட் த ஹில்” பாட்டு சட்டென்று நின்றது, அதே கணத்தில் அவள் முன்னால் முயலைப்போல தாவி “வெல்கம் டு மங்களா டெக்ஸ்டைல்ஸ்” என்று மகாதேவன் சொன்னதும் அச்சத்துடன் ஒரு அடி பின்வாங்கி, பின்னால் வந்துகொண்டிருந்த தன் அப்பாவின் கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். மெல்ல மெல்ல ஆச்சரியமும் புன்னகையும் அவள் முகத்தில் படிந்தன. “அப்பா, இந்த முயல்குட்டி பேசுதுப்பா” என்று தன் அப்பாவின் காலோடு ஒட்டிக்கொண்டாள்.
வெள்ளைவெளேரென நீட்டிக்கொண்டிருந்த காதுகளையும் குவிந்திருக்கும் வாயையும் தொப்பையையும் பார்த்துவிட்டு நம்பமுடியாதவளாக அந்த இடத்திலேயே நின்றாள் அச்சிறுமி. ”நெஜமா முயலாப்பா இது?” என்று கேட்டாள். அவர் புன்னகையோடு இல்லை என்று தலையசைத்ததும் மெதுவாக ஒரு அடி முன்வைத்து மகாதேவனின் வயிற்றை அழுத்தினாள். மகாதேவன் நெளிந்தபோது மறுபக்கம் வந்து விரலால் குத்திப் பார்த்தாள். நெளிந்து நெளிந்து மகாதேவன் முயல்போலவே சத்தமிடத் தொடங்கியதும் அவளுக்கு உற்சாகம் பொங்கத் தொடங்கிவிட்டது. “குட்மார்னிங் மை டியர் சைல்ட்” என்று சொன்னபோது
அவளும் குதித்துக்கொண்டே ”குட்மார்னிங்” சொன்னாள்.
அவர் ஸ் என்று உதட்டில் விரல்வைத்து சிறுமியை அடக்கி தன்னோடு கடைக்குள் அழைத்துச் சென்றார். மகாதேவனை திரும்பித்
திரும்பி பார்த்தவாறு கைகளை அசைத்தபடி சென்றாள் அவள். மகாதேவன் மீண்டும்
சாலையில் நடப்பவர்களின் கவனத்தை இழுக்கும் விதமாக தாவித்தாவிக் குதித்தும் தொப்பையைக் குலுக்கியும் விதவிதமாக நடந்துகாட்டத் தொடங்கினான்.
நான்கு நுழைவாயிலைக் கொண்ட கடையின் வாசலில் நிழலே இல்லை. கழுத்துக்கடியில் வியர்வை வழிந்தது. உடம்பில் வியர்வை இல்லாத இடமே இல்லை. பொம்மைத்தலையில் பார்ப்பதற்கும் மூச்சுவிடுவதற்குமென வடிவமைக்கப்பட்டிருந்த ஓட்டைகள் தவிர, காற்று செல்லவோ
வெளியேறவோ வழியே இல்லை. அந்த ஓட்டை
வழியாக மகாதேவனால் அனைவரையும் பார்க்கமுடியும். ஆனால் மகாதேவனை யாருமே பார்க்க முடியாது.
மற்ற வாசல்களில் தொப்பை செட்டியாராகவும் கோமாளியாகவும் நெட்டை டாக்டராகவும் நின்றிருந்தவர்கள் மூன்று பேருமே மகாதேவனின் கூட்டாளிகள். தங்கராசு. கோவிந்தன். ராபர்ட். கடை ஒன்பதரைக்குத் திறக்கும். ஒன்பது மணிக்கு
கூட்டிப் பெருக்கும் வள்ளிக்காக கணக்குப்பிள்ளை வந்து கடையைத் திறக்கும்போது அவர்களும் வந்துவிடுவார்கள். ஒன்பதரைக்கு ஆண் சிப்பந்திகள் வரும்போது அவர்கள் கோலத்தை மாற்றிக்கொண்டு வாசலுக்கு வந்துவிடுவார்கள். பெண் சிப்பந்திகள் பத்துமணிக்கு வருவார்கள். இரண்டு மாடிகள் உட்பட மூன்று பகுதிகளாக இருந்த கடையில் ஒன்பது பெண் சிப்பந்திகளும் ஒன்பது ஆண் சிப்பந்திகளும் வேலை செய்தார்கள்.
மூன்று ஆட்டோக்கள் வந்து கடைவாசலில் நின்றன. ஒரு பெருங்கூட்டமே
இறங்கி படியேறி வந்தது. வழக்கம்போல அவர்கள்
முன்னால் ஆடிக் குதித்து சிரித்தார்கள் அவர்கள். ஒரு சிறுவன் மகாதேவனின் கையைப் பற்றிக் குலுக்கினான். அவன் அச்சிறுவனின் கன்னத்தைத் தொட்டு தடவினான். அவனும் ஆனந்தத்தில்
மகாதேவனைப்போலவே குதிக்கத் தொடங்கினான். . அந்தக் கூட்டத்தில் ஒருசிலர் மாடிப் பகுதிகளை நோக்கிச் செல்ல, இரு பெண்கள்
கீழ்த்தளத்தில் சென்று நின்றார்கள்.
அபிராமி வரவேண்டிய நேரம். இன்னும் வந்து
சேரவில்லை என்று நினைத்தபோது மகாதேவனுக்கு மனம் குழம்பியது. வாசலின் ஒரு விளிம்பிலிருந்து மற்றொரு விளிம்புக்குச் செல்வதுபோல குதித்துக் குதித்து நடந்து சென்று திரும்பி கடைக்குள் தொங்கிய கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். பத்து மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. ஒரு நிமிடம்
குழப்பமாக இருந்தது. அடுத்த நிமிடத்திலிருந்து
தவிக்கத் தொடங்கினான். பிறகு விடுப்பெடுத்திருக்கக்கூடுமோ என்று சந்தேகம் வந்தது. கடைக்குள் அவள்
இல்லை என்னும் ஏமாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒருகணம் உடைந்து அழுதுவிடுவோமோ என்று தோன்றியது.
ஒரு விளிம்பிலிருந்து இன்னொரு விளிம்பை நோக்கி இடைவெளி இல்லாமல் குதித்துக் குதித்துச் செல்வதன் வழியாக தன் பதற்றத்தை குறைத்துக்கொள்ள முயற்சி செய்தான். ஒரு கட்டத்தில் அம்முயற்சிக்கு எதிர்பார்த்த அளவில் பயன் கிட்டாததால் குழப்பமே எஞ்சியது. சோர்வுடன்
திரும்பி சாலையின் பக்கமாகப் பார்த்த கணத்தில் அபிராமி வேகமாக கடையை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தான். அதற்குப் பிறகுதான் மனத்தில் நிம்மதி படர்ந்தது.
கடைச் சிப்பந்திகளுக்குரிய சீருடையான பச்சைப்பாவாடையும் வெள்ளைத் தாவணியும் கட்டியிருந்தாள் அவள். தாவணியின் மேல்
கழுத்துச்சங்கிலியின் டாலர் மின்னியது. காதோர முடிக்கற்றைகள்
கன்னத்தின் வேர்வையில் படிந்து ஒட்டியிருந்தன. அவள் கழுத்திலும் நெற்றியிலும் வேர்வைத்துளிகள் மின்னிக்கொண்டிருந்தன. காதுகளில் பொன்வளையங்கள் அசைந்தன.
மகாதேவன் குட்மார்னிங் சொன்னதை அவள் கவனிக்கவே இல்லை. வேகமாக கூடத்துக்குள்
நுழைந்து தன் பிரிவில் நின்றுகொண்டாள். கைப்பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு மூச்சு வாங்கியபோது மணி பத்தடித்து ஓய்ந்தது.
ஆரவாரத்தோடு ஒரு கூட்டம் படியேறி வந்துகொண்டிருந்தது. அவளை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு மகாதேவன் வாடிக்கையாளர்களின் பக்கம் ஆடிக்கொண்டே நடந்தான். “வெல்கம் டு மங்களா டெக்ஸ்டைல்ஸ்” என்று வெடித்த குரலில் எழும் ஓசையைக் கேட்டு ஒருகணம் அதிர்ந்து பிறகு நாணத்துடன் ஒதுங்கி நடந்தார்கள் அவர்கள். இரண்டு சிறுவர்கள்
மட்டும் அவனைப் பிடிக்க தாவி வந்தார்கள். அவன் அவர்களுடைய இடுப்பைப்பற்றி சட்டென தலைக்குமேல் தூக்கி ஒரு சுற்றுசுற்றிவிட்டு இறக்கிவிட்டான். அவர்கள் அந்த அனுபவத்தின் பரவசத்தோடு டாட்டா காட்டிக்கொண்டே உள்ளே சென்றனர்.
அவர்கள் அபிராமியின் முன்னால் சென்று எதையோ கேட்க, அவள் அடுக்கிலிருந்து
துணி உருளைகளை எடுத்துப் பிரித்துக் காட்டத் தொடங்கினாள். அப்போது கனிந்திருந்த அவள் முகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. படியேறிய போது
அவள் முகத்தில் படிந்திருந்த பதற்றம் சுவடே இல்லாமல் மறைந்துபோயிருந்தது. காலம் காலமாக கனிந்த முகத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையைக் கேட்டறிவதற்காகவே அந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதுபோல இருந்தது அவள் முகம். அந்த முகத்தின்
கனிவையும் பொலிவையும் பார்ப்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாக இந்தக் கடையில் வேலை செய்துகொண்டிருந்தான் மகாதேவன். எல்லாமே ஒருவழிதான். அவன் மட்டுமே அவளைப் பார்க்கிறான். அவன் மட்டுமே அவளை நினைக்கிறான். அவன் மட்டுமே ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறான். அவளுக்கு எதுவுமே தெரியாது. தொப்பைக்கூத்தாடி உருவங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தன் முகத்தை அவளிடம் காட்ட அவனுக்குத் தைரியம் இல்லை.
கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பில் தோற்று படிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்தான் அவன். ஏரியில் தூண்டில்
போட்டு மீன் பிடிப்பதும் இக்கரையிலிருந்து அக்கரை வரைக்கும் போட்டி வைத்து நீச்சலடிப்பதும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஐந்தாறு வருஷங்கள் நிம்மதியாகக் கடந்துசென்றன. தம்பிகளும் தங்கைகளும் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியபோது அம்மா கவலையில் மூழ்கினாள். ஒருமுறை பாண்டிச்சேரியிலிருந்து அத்தையும் மாமாவும் ஊருக்கு வந்திருந்தபோது “இந்தப் பையன இப்பிடியே உட்டா உருப்படாம போயிடுவானோன்னு பயமா இருக்குது. இவன ஊருக்கு அழச்சிம் போயி ஏதாச்சிம் ஒரு வழி காட்டுங்க” என்று அழுது
கெஞ்சினாள். அடுத்த நாளே மாமா அவனை பாண்டிச்சேரிக்கு அழைத்துவந்து தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வழியாக மங்களா டெக்ஸ்டைல்ஸில் சேர்த்துவிட்டார்.
அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை கூத்தாடி வேலை என்று அவருக்கும் தெரியாது. யாருக்குமே தெரியாது. அம்மாவின் கண்ணீரை நினைத்து அவன் அதை மறைத்துவிட்டான். அவன் படித்த எட்டாங்கிளாஸ் படிப்புக்கு இதைவிட மதிப்பான வேலையை அவன் எதிர்பார்க்க முடியாது என்பதை அவனும் நாட்கள் செல்லச் செல்ல புரிந்துகொண்டான். என்றாவது ஒருநாள் இதே கடையில் தனக்கும் ஒரு சிப்பந்தியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிட்டும் என்னும் நம்பிக்கையை எப்படியோ மனத்தில் ஆழமாக அவனே வளர்த்துக்கொண்டான். சமயம் பார்த்து ஒருநாள் தன் விருப்பத்தை கணக்குப்பிள்ளையிடம் சொன்னான். அவரும் காலம்
கனிந்துவரும்போது செய்வதாக வாக்களித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அந்த வாய்புக்காகவே காத்திருக்கிறான் அவன்.
பத்துமணிக்கே உச்சிப்பகல்போல வெயில் கொளுத்தியது. வெப்பமும் வியர்வையும்
உடலை களைப்பில் ஆழ்த்தியது. நிற்க முடியாமல் நுழைவாயில் சுவரைப் பிடித்துக்கொண்டான். பாதையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களையும் நடமாடும் மனிதர்களையும் பார்த்தான். பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலை அது. பேருந்து
நிலையத்தில் இறங்கி இந்த வழியாகத்தான் தினமும் அபிராமி வருவாள். மாலை ஏழுமணிக்குப்
பிறகு வேலை முடிந்ததும் இந்த வழியாகவே சென்றுவிடுவாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பது தெரியவில்லை. ஏழு மணிக்கு பெண் சிப்பந்திகள் புறப்பட்டுச் செல்ல, எட்டு மணிக்கு
ஆண் சிப்பந்திகள் கிளம்பிச் சென்றதும் எட்டரை மணிக்கு வேஷத்தைக் கலைத்துவிட்டு ஒன்பது மணிக்குத்தான் அவன் புறப்படுவான்.
அந்தக் கடைக்குள் தீபாவளி, பொங்கல் போன்ற
விசேஷ நாட்களில் மட்டுமன்றி, எல்லா நாட்களிலுமே கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
எல்லாவிதமான
ஆடைகளும் அந்தக் கடையில் கிடைப்பதுதான் அதற்குக் காரணம். காஞ்சிபுரம் பட்டுப்புடவையிலிருந்து
பெங்களூர் ரெடிமேட் ஆடைகள் வரைக்கும் வாங்கலாம்.
அபிராமி கடைக்குள் நின்றிருக்கிறாள் என்னும் எண்ணமே அவனுக்குப் போதுமாக இருந்தது. மனம் நிம்மதியாக
உணரத் தொடங்கிவிடும். அவள் இல்லையென்றால்தான் தவியாய்த் தவிக்கும்.
அபிராமி முன்னால் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நிற்பது ஒருவிதத்தில் அவனுக்கு நல்லதாகவே தோன்றும். நொடிக்கொரு முறை
அவன் அவள் பக்கமாகத் திரும்பி அவளைப் பார்ப்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு சிலையைப் பார்ப்பதுபோல, ஒரு ஓவியத்தைப் பார்ப்பதுபோல நினைத்துக்கொள்வான். அவள் புன்னகையைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கால்பதித்துவிட்டு திரும்பியதுபோல இருக்கும். நாள்முழுதும் ஏக்கம். கனவு. கற்பனை. அந்தப்
பரவசத்திலேயே திளைத்திருப்பான்.
அபிராமி கடைக்குள் இருக்கும்போது ஏறுவெயில் கூட பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு விஷயமாகிவிடும். அவளைப் பார்த்துக்கொண்டே அவன் ஏதாவது ஒரு சினிமாப்பாட்டை மனசுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவான். மானசிகமாக அபிராமியோடு சேர்ந்து பாடுவதாக அவனே கற்பனையை வளர்த்துக்கொள்வான். எப்படியோ அவள் முகத்தை அவன் நடிகை ஸ்ரீதேவியின் முகத்துக்கு இணையானதாக நினைத்துக்கொண்டிருந்தான். நிறம் மட்டுமே இருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்பது அவன் எண்ணம். அதுவும் ராஜா
தியேட்டரில் ரிலீசான ப்ரியா படத்தைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தில் அவனுக்கு ஒரு உறுதி வந்துவிட்டது. ’அக்கரைச்சீமை
அழகினிலே மனம் ஆடக் கண்டேனே’ பாட்டை ஒரு நாளைக்கு பத்து முறையாவது பாடிவிடுவான். அந்தத் தாளம். அந்த ஏற்ற
இறக்கம். எல்லாவற்றையும் அவன் மனப்பாடமாக
வைத்திருந்தான். ’பார்க்கப்பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்’ போன்ற வாக்கியங்களை எந்தத் தொடர்பும் இல்லாமலேயே தனக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வான்.
அடிக்கடி அவன் அசைபோடும் இன்னொரு பாட்டு சின்னக்கண்ணன் அழைக்கிறான். ’நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா’ என்னும் வரியை அவனே அபிராமியை நோக்கிக் குறும்பாக கேட்பதாக நினைத்துக்கொள்வான். அதற்குப் பதிலாக எந்த வார்த்தையையும் சொல்லாமல் அவள் புன்னகைக்கும்போது உன் புன்னகை சொல்லாத அதிசயமா என்று தானே ஒரு பதிலைச் சொல்லி நிறைவடைவதாக கற்பனையை வளர்த்துக்கொள்வான். எட்டாவது படிக்கும்போது ஒரே ஒரு செய்யுளைக்கூட மனப்பாடமாகச் சொல்லத் தெரியாத தன் மனத்தில் இத்தனை பாடல்களும் வரிகளும் எப்படி வந்து சேர்ந்தன என்பது அவனுக்கே புரியாத ரகசியமாக இருந்தது.
அவர்களுடைய உணவு இடைவேளை நேரமும் சிப்பந்திகளின் உணவு இடைவேளை நேரமும் வேறுவேறு. ஒவ்வொரு தளத்திலிருந்தும்
இரண்டு ஆண்சிப்பந்திகளும் இரண்டு பெண் சிப்பந்திகளும் மட்டுமே முதலில் சாப்பிடச் செல்வார்கள். ஒன்றரைக்குத் தொடங்கி ஒன்றே முக்கால் வரை. மற்றவர்களுக்கு
ஒன்றே முக்கால் முதல் இரண்டு வரை. வாசலில்
நிற்பவர்களும் இதேபோல இரு பிரிவாகப் பிரிந்து செல்லவேண்டும். சிப்பந்திகள் சாப்பிட மேல்தளத்தில் ஒரு அறைக்குச் செல்வார்கள். மகாதேவனும் மற்றவர்களும் அந்த அறைக்குள் செல்லமுடியாது. அதற்கும் மேல் உள்ள மொட்டைமாடிக்குச் செல்லவேண்டும். அபூர்வமாக சிற்சில சமயங்களில் அவள் சாப்பிட்டுவிட்டு படியிறங்கும் சமயத்தில் மகாதேவன் படிக்குக் கீழே நின்றிருக்கும்படி நேர்ந்ததுண்டு. ஒவ்வொரு படியாக அவள் இறங்கிவரும் அசைவை அத்தருணங்களில் ஆசையோடு கவனித்தபடி ஒதுங்கி நின்றுவிடுவான்.
மொட்டை மாடியில் தண்ணீர் டேங்க் நிழலுக்கடியில் உட்கார்ந்து சாப்பாட்டுப் பையைப் பிரித்தார்கள். டேங்க் விளிம்பை ஒட்டி சிதறியிருந்த பருக்கைகளை நோக்கி எறும்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்துவிட்டு ”இப்பிடி கொஞ்சம் தள்ளி வா” என்றபடி
கையை ஊன்றி பின்னால் நகர்ந்தான் கோவிந்தன். பிறகு சாப்பாட்டுப்
பொட்டலத்தைப் பிரித்தபடி “என்ன மகாதேவா, ஒன் மனசு
என்ன நூறு அடி ஆழமா, ஆயிரம் அடி
ஆழமா?” என்று கேட்டான்.
“என்ன சொல்ற கோவிந்தா, புரியலையே.”
“எல்லாத்தயும் பாத்துட்டுதான் இருந்தன் தம்பி. என்கிட்டயே கத
உடாத.”
“என்ன பாத்த?”
“அந்தப் பொண்ணு படியில எறங்கி வரும்போது நீ ஒதுங்கி நின்னத பாத்தேன்.”
“பொண்ணா, எந்த பொண்ண சொல்ற
கோவிந்தா?”
“டேய் டேய், ரொம்ப நடிக்காதடா.”
“யார சொல்ற கோவிந்தா, எனக்கு
புரியலையே.”
“நாம இப்ப மொட்டமாடிக்கு வரும்போது மெத்த படிக்கட்டுல
ஒதுங்கி நீ யாருக்கு வழிவிட்ட?”
அவன் யோசிப்பதுபோல ஒருகணம் ஆட்காட்டி விரலால் தாடையைத் தட்டிக்கொண்டான். பிறகு “ஓ, அதுவா?” என்றான்.
“அதேதான். அதேதான் தம்பி.
அந்த பொண்ணு என்னமோ மெத்த படிலேருந்து டைரக்டா
ஒன் மனசுக்குள்ள அடிவச்சி எறங்கி போகறமாதிரி இருந்திச்சி, அதான் கேட்டேன்.”
“ஐயையோ, நீ நெனைக்கற
மாதிரி எதுவும் கெடயாது கோவிந்தா”
“இந்தமாதிரி ஒன்னும் கெடயாது ஒன்னும் கெடயாதுனு சொல்றவன்தான் கச்சிதமா ப்ராக்கெட் போட்டு கதய முடிச்சிருவானுங்க. நான் என் அனுபவத்துல எத்தன பேர பாத்திருக்கேன் தெரியுமா?”
“அதான் அந்த மாதிரிலாம் எதுவுமில்லன்னு சொல்றனே. நான் சொல்றத
நம்பு. பொண்ணாச்சேனு நான்தான்
சும்மா ஒதுங்கி நின்னேன். மேலகீல பட்டுடுச்சின்னா
வீணா வம்புதான?”
“அவ்ளோ ஜாக்கிரதயா எதுக்கு நிக்கணும். எனக்கு டவுட்டே
அந்த எடத்துலதான். நீ நின்ன தோரண வம்புக்காக பயந்து நின்னமாதிரி தெரியல. வாவான்னு கைநீட்டி
அழைக்கறமாதிரி இருந்திச்சி.”
“நீயா எதயும் நெனச்சிக்காத கோவிந்தா.”
“நானா எதுக்குப்பா கற்பன பண்ணனும்? உன் கண்ணுல
அந்த வெளிச்சம் தெரிஞ்சித நா பாத்தேன்.”
“அந்த மாதிரிலாம் எந்த எண்ணமும் எனக்கு கெடயாது கோவிந்தா.”
”இங்க பாரு, இதோ இந்த பருக்கையை பாத்து எறும்பு போவறமாதிரி பொண்ணுங்க பின்னால மனசு போகறது இயற்கைதான். கடவுள் அப்பிடித்தான் படைச்சிருக்கான். ஆனா எல்லாமே நல்லா போயிட்டிருக்கற வரைக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல. நடுவுல யாராவது காலத் தூக்கி நசுக்கனாங்கன்னு வை, பருக்கைக்கு
ஒன்னும் நஷ்டம் இல்ல. எறும்புக்குதான் பரலோகம். அத
மறந்துடாத.”
”நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல”
“சரிசரி, நான் அதுக்கு
மேல ஒன்ன ஒன்னும் கேக்கல. என் அனுபவத்துல
நான் பாத்த ஒன்னு ரெண்டு விஷயத்த ஒங்கிட்ட சொல்றன். கேட்டுக்கோ.”
அவனுக்கு மனம் நடுங்கியது. கோவிந்தனையே பார்த்தபடி இருந்தான்.
“சிண்டிகேட் பேங்க் பக்கத்துல கிரிஜா ஸ்டோர்ஸ்னு ஒரு துணிக்கட இருக்கு. நீயும் பாத்திருப்ப. அதுல எங்க தெரு பொண்ணு ஒன்னு சேல்ஸ்ல இருந்திச்சி. அந்த கடையிலயே நல்லா வாட்டசாட்டமா ஒரு வயசுப்பையனும் வேல செஞ்சிட்டு இருந்தான். ரெண்டு பேருக்கும்
ஏதோ ஒரு விருப்பம். ஒன்னா சுத்த
ஆரம்பிச்சிட்டாங்க....”
“விருப்பப்பட்டாங்க, சேந்தாங்க, இதுல என்ன
வில்லங்கம் இருக்குது”
“சொல்றத முழுசா கேளு. சம்பாதிக்கறதயெல்லாம் அந்த பொண்ணுக்காகவே செலவு செஞ்சான் அவன். துணிமணி என்ன, நகைங்க என்ன, அது கேட்டதயெல்லாம் வாங்கி குடுத்தான். ஒருநாள் இல்ல, ரெண்டு நாள்
இல்ல, ஒரு வருஷம்
ரெண்டு பேரும் ஒன்னா சுத்தனாங்க. இந்த கடத்தெருவுக்கே தெரியும்.”
“ஏன் கல்யாணம் நடக்கலயா?”
“நடந்திச்சி. நடந்திச்சி. அந்த பொண்ணுக்கு மட்டும் நடந்திச்சி. நாங்க சொல்ற மாப்பிள்ளய கல்யாணம் செஞ்சிக்கலைன்னா, தூக்கு போட்டுகினு செத்துடுவம்னு பெத்தவங்க பயமுறுத்தறாங்க மன்னிச்சிக்கோனு இவன்கிட்ட சொல்லிட்டு அந்த பொண்ணு போய் கல்யாணம் பண்ணிகினு செட்டிலாய்ட்டுது”
”த்ச்த்ச். மனசாட்சி உள்ளவங்க
இப்படி செய்யலாமா?”
“கொல பண்றதுன்னு முடிவெடுத்த பிறகு மனசாட்சியாவுது, கினசாட்சியாவுது? உயிர கொல பண்றதுமட்டும்தான் கொலயா, மனச கொல
பண்றதும் ஒருவகையில கொலைதான.”
“அந்த பையன்?”
“கொஞ்ச காலம் கிறுக்குமாதிரி இங்கயே அலஞ்சிகிட்டு கெடந்தான். அப்பறம் எங்க
போனான்னே தெரியல.”
சிறிது நேரம் மெளனம். மறுபடியும் கோவிந்தனே
மறுபடியும் தொடங்கினான்.
“எங்க வீட்டுக்கு பக்கத்துல பேபி ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ்னு ஒரு கட உண்டு. அங்கயும் இப்பிடி
ஒரு விஷயம் நடந்தது. ஏழெட்டு மாசம்
ஒன்னா சுத்திட்டு, கல்யாணப் பேச்ச எடுக்கும்போது அந்த பொண்ணு கை கழுவிட்டா. எனக்கும் கீழ
நாலு பொண்ணு இருக்குது. சாதி உட்டு
வேற சாதியில நான் கல்யாணம் செஞ்சிகிட்டேனு தெரிஞ்சா, அவுங்க நிலைமை
ரொம்ப மோசமாய்டும். வீணா அவுங்க வாழ்க்கய கெடுத்த பாவம் வேணாம்னு சொல்லிட்டு போயிட்டுது.”
அவன் அபிராமியைப்பற்றி ஒருகணம் நினைத்தான். அவள் முகத்தில் அப்படிப்பட்ட கள்ளத்தின் சுவடே தெரியவில்லை. அப்பழுக்கில்லாத வெள்ளைமுகம். மனம் வெள்ளையாக இல்லாமல், கண்களில் அப்படி
ஒரு பிரகாசத்தைப் பார்க்கவே முடியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
“நான் உன்ன பயமுறுத்தறதுக்காக சொல்றேனு நெனச்சிக்காத மகாதேவா. நம்ம கூட
இருக்கற ஆளு நீ. நமக்கு
வேண்டப்பட்ட ஆளு. நீ
ஒரு குழியில உழறத நான் பாத்துட்டு சும்மா இருக்கமுடியாது. அதனால என் மனசுல பட்டத சொன்னன்.”
“பள்ளம் எது மோடு எதுனு பாத்து நடக்கற ஆள்தான் நானு. நீ நினைக்கறமாதிரி
எந்த தப்புக்கும் எடம் குடுக்கமாட்டன்.”
“எடம் குடுத்தா மடத்தயே புடுங்கிக்குவாங்கன்னு சொல்றதெல்லாம் வாழ்க்கையில
அடிபட்டு தெளிஞ்சவன் சொன்ன வார்த்த மகாதேவா. இந்த மாதிரி பொண்ணுங்களுக்குலாம்
மாமா பையன், அத்தை பையன்னு
எவனாவது ஒருத்தன் இருப்பான். அவன கல்யாணம்
பண்ணிகிட்டு நிம்மதியா குடுத்தனம் செய்ய போயிடுவாங்க. அப்பறம் நாமதான் அவஸ்தைப்படணும்.”
இருவரும் சாப்பிட்டு முடித்து கீழே இறங்கினார்கள். அறைக்குள் உருமாற்றிக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றார்கள்.
முகமூடி ஓட்டைகள் வழியாக அவன் அபிராமியை ஒருகணம் பார்த்தான். ஒவ்வொருமுறையும் மறுவிளிம்பு வரை நடந்து சென்று திரும்பும்போது முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அந்தக் கண்களில் யாராவது குடியிருக்கிறார்களா? அவள் எண்ணங்களில் யாராவது கரைந்திருக்கிறார்களா? அந்தப் புன்னகையில் யாரேனும் இருக்கிறார்களா? மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்து தேடினான். அவள் முகத்தின்
பிரகாசத்தைப் பார்க்கப்பார்க்க அவளிடம் எவ்விதமான கள்ளமும் இல்லையென்பதை அவனால் உறுதி செய்துகொள்ள முடிந்தது.
ஒருவேளை இருந்துவிட்டால் என்ன செய்வது என்றொரு கேள்வி எழுந்தபோது அந்தக் கேள்வியின் பாரத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அப்படி ஒரு கேள்வி உருவானதுமே, சட்டென அந்த உருவமும் உருவாகிவிட்டது. கண்முன்னால் அது நிற்பதுபோலத் தெரிந்தது. அக்கணமே அவன்
மனம் பதறியது. அவனை எப்படி
எதிர்கொள்வது என்பது
புரியவில்லை. குழப்பத்தில் மனம் தவித்தது. தனக்கு இடமில்லை
எனத் தெளிவாகத் தெரிந்த ஒரு இடத்தில் காத்துக்கொண்டிருப்பது அர்த்தமே இல்லாத செயல். இந்தத் துணிக்கடை
வேலை இல்லையென்றால், நான் வெறும் மாடு மேய்க்கிறவன். எனக்கு எதற்கு இந்தப் பொல்லாத ஆசை. அவள் முன்னால்
சென்று நேருக்கு நேர் ஒருநாளும் பார்த்ததுமில்லை. பேசியதுமில்லை. அவளைப்பற்றிய கனவுகளுக்கு ஏன்
மனத்தில் இடம்கொடுக்கவேண்டும் என்று தோன்றியது.
ஒரு காரிலிருந்து இறங்கிய பெரிய குடும்பமொன்று படியேறி வந்தார்கள். அவர்களோடு வந்த ஒரு சிறுமி அவனைத் தொலைவிலிருந்தே பார்த்துவிட்டு ”ஐ, முயல்
மாமா” என்று ஓடி
வந்தாள். “க்ளேட் டு மீட் யு ரேபிட் அங்கிள்” என்று அவனோடு
கைகுலுக்க தன் பிஞ்சுக்கையை நீட்டினாள். அவனுடைய குழம்பிய மனநிலைக்கு அந்தச் சொற்கள் பெரும் ஆறுதலாக இருந்தன. சிறுமியின் கையைப்
பற்றி குலுக்கினான். குவிந்திருந்த ரப்பர் கையைத் தொட்டு “ஐ,
மெத்துமெத்துனு இருக்குது” என்று சிரித்தாள். அவன் தன் கையை நீட்டி அதன் கன்னத்தைத் தொட்டு வருடினான். லேசான மனத்துடன்
ஒருமுறை திரும்பி அபிராமியின் திசையில் பார்த்தான். மின்விசிறிக் காற்றில் சுருண்டு பறக்கும் காதோர முடிக்கற்றையையும் காது வளையங்களையும் பார்த்தான். பார்க்கப்பார்க்க இன்று முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதுபோலத் தோன்றியது.
அவன் சாலையில் நகரும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இருநூறு முன்னூறுக்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்ட கூட்டமொன்று சாலையை அடைத்துக்கொண்டுவிட்டது. ஒரே கணம்தான். எப்படி எந்தத்
திசையிலிருந்து வந்தார்கள் என்பதே புரியவில்லை. கூட்டம் அப்படியே சாலையை அடைத்துக்கொண்டிருக்க நான்கு நான்கு பேராக ஒரு குழு ஒவ்வொரு கடைக்கும் சென்றது. கலைந்த அடர்த்தியான
தலைமுடியும் மீசையும் கிருதாவுமாக இருந்த நான்கு பேர்கள் அவனைத் தாண்டி கடைக்குள் சென்றபோது ஏதோ விபரீதம் என்று அவன் மனம் எச்சரிக்கையுற்றது.
“நம்ம காரைக்கால் ராமசாமி ஆட்சிய கலைச்சிட்டு ஜனாதிபதி ஆட்சிய அறிவிச்சிட்டாங்க. இது ஜனநாயகமே இல்லை. உடனே கடையடைச்சி
நம்ம எதிர்ப்ப காட்டணும். தயவுசெஞ்சி இதுக்காக
எல்லோரும் ஒத்துழைப்பு குடுங்க.”
முதலாளியைப் பார்த்துச் சொல்லிவிட்டு அந்தக் குழு படியிறங்கிச் சென்று அடுத்த கடைக்குள் சென்றது. அவன் திரும்பி
அபிராமியைப் பார்த்தான். அவள் முகத்தில் பீதி தெரிந்தது. முதலாளி உடனே
தொலைபேசியை எடுத்து யாரிடமோ சில நிமிடங்கள் பேசினார். அவர் முகம்
வாட்டம் கொண்டது. எழுந்து அங்கிருந்த
வாடிக்கையாளர்களிடம் “சொல்லிட்டு போனத கேட்டிங்க இல்ல, போய்ட்டு இன்னொரு
நாள் வாங்க. ப்ளீஸ். சிரமத்துக்கு
மன்னிச்சிக்குங்க” என்று கைகுவித்து வணங்கியபடி சொன்னார். பிறகு பக்கத்திலிருந்த
சேவகனிடம் “மேல ரெண்டு
ஃப்ளோர்லயும் சொல்லிட்டு வா, எல்லாரயும்
கீழ அனுப்பு. ஓடு”
என்று சொல்லி அனுப்பினார். அடுத்து அங்கிருந்த சிப்பந்திகளைப் பார்த்து “மடிச்சி வச்சிட்டு
கெளம்புங்கப்பா. நாள ஒரு நாள் கழியட்டும். அப்பறமா நெலம எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு கடய தெறந்துக்கலாம்” என்றார்.
மகாதேவன் அவசரமாக அபிராமியைப் பார்த்தான். அவள்
முகத்தில் கலவரம் தெரிந்தது.
ஒரு காவலாளி வாசலுக்கு வந்து விஷயத்தை அறிவித்துவிட்டுச் சென்றார். நான்கு பேரும்
வேகமாக கீழ்த்தளத்தில் இருந்த உடைமாற்றும் அறைக்குச் சென்று ரப்பர் உடைகளைக் கழற்றிவிட்டு சொந்த உடைகளை மாற்றிக்கொண்டு வந்தார்கள்.
கோவிந்தன் “நான் ராபர்ட்
கூட சைக்கிள்ல கெளம்பறன் மகாதேவா. எங்க ஊடு அவன் போற வழியிலதான் இருக்குது. நீ பாத்து
போ, சரியா?” என்று விடைபெற்றான். தங்கராசு தன் சைக்கிளில் வேறு திசையில் கிளம்பினான்.
மகாதேவனுக்கு அபிராமியை நினைத்து கவலையாக இருந்தது. கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்தான். சிப்பந்திகள் அனைவரும்
வெளியே வந்துவிட, கடையின் ஷட்டரை
இழுத்து மூடிப் பூட்டிவிட்டு சாவியைக் கொடுத்தார் காவலர். கணக்குப்பிள்ளை அதை வாங்கி
முதலாளியிடம் கொடுத்தார். “எல்லாரும் பாத்து போங்கப்பா” என்று பொதுவாகச்
சொல்லிவிட்டு காரில் ஏறிக் கிளம்பிவிட்டார் முதலாளி.
சில சிப்பந்திகள் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். சிலர் மெதுவாக ஊர்ந்து வந்த ஆட்டோக்களை நிறுத்தி பேரம் பேசி இரண்டு மூன்று பேராக கூட்டுசேர்ந்து புறப்பட்டார்கள். “ஜாக்கிரதயா பாத்து போடி” என்று சொல்லிவிட்டு
அபிராமியின் தோழிகள் புறப்பட்டார்கள். கடைசியில்
அந்த இடத்தில் அவள் மட்டுமே நின்றிருந்தாள்.
அபிராமி ஒரு ஆட்டோவை நிறுத்தி “வில்லினூரு வரீங்களா?” என்று கேட்டு முடிப்பதற்குள் புர்ரென்று புறப்பட்டுச் சென்றுவிட்டது. அடுத்தடுத்து அவள் நிறுத்திய நாலைந்து ஆட்டோக்காரர்கள் அனைவருமே வில்லியனூர் பேரைக் கேட்டதுமே தலையைசத்தபடி நகர்ந்துவிட்டார்கள். ஒருவர் மட்டுமே “இந்த நேரத்துல
அவ்ளோ தூரம் வரமுடியாதுமா” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இன்னொருவர் “நூறு
ரூபா குடுத்தா கூட எந்த வண்டியும் வராதுமா” என்று சொன்னார்.
அவள் முகத்தில் பதற்றம் பெருகுவதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. அவளை அமைதிப்படுத்தவேண்டுமே
என்னும் எண்ணத்துடன் தயக்கத்துடன் அவளுக்கு அருகில் சென்றேன்.
“நீங்க வில்லினூரா?”
அவள் ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் சாலையில் ஆட்டோ ஏதேனும் வருகிறதா என்று பார்க்கத் தொடங்கினாள்.
“நீங்க வில்லினூரா?”
அவன் மறுபடியும் அவளிடம் பொறுமையாகக் கேட்டான். அவள் எரிச்சல்
படர்ந்த முகத்துடன் “அதெல்லாம் ஒங்களுக்கு எதுக்கு?” என்று வெடித்தாள். அவள் குரலில் தொனித்த சீற்றத்தைக் கண்டு அவன் ஒருகணம் அஞ்சிவிட்டான்.
பிறகு தயக்கத்துடன் “நானும் டெக்ஸ்டைல்ஸ் கடையில வேல செய்றவன்தாங்க” என்றான்.
அவள் ஒருகணம் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“எந்த ஃப்ளோர்? நான் பாத்ததே
இல்லயே.”
“ஃப்ளோர் இல்லைங்க. இங்க வாசல்ல
வேஷம் போட்டுகிட்டு நிப்பமே. என்டர்டைய்னர்ஸ்.”
“ஓ. நான்
பாத்ததில்ல. இங்கயா இருக்கிங்க?”
“ஆமாங்க. இங்கதான்.”
“எவ்ளோ நாளா?”
“ரெண்டு வருஷமா இருக்கேன். ஒங்கள நல்லா
தெரியும்.”
அவள் எதுவும் பேசவில்லை.
”வழக்கமா ஒம்பதேமுக்கால் ஒம்பது அம்பதுக்குலாம் வந்துடுவீங்க நீங்க. இன்னைக்கு காலையில சரியா பத்துமணிக்குதான் வந்தீங்க.”
அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“இன்னைக்கு மதியம் சாப்ட்டுட்டு மெத்தையிலேர்ந்து எறங்கி வரும்போது உங்களுக்கு வழிய விட்டுட்டு ஓரமா ஒதுங்கி நின்னது நான்தான்...”
அவளுக்கு சிறுகச்சிறுக அவன் மீது நம்பிக்கை வந்தது. அவனைப் பார்த்தபடியே
பெருமூச்சுவிட்டாள். அவள் பேசாமல் இருந்த சில கணங்களைப் பயன்படுத்திக்கொண்டு “வாங்க , கீழதான் வண்டிய நிறுத்தியிருக்கேன்” என்றபடி தரைத்தளத்துக்குச் சென்றான். அவனுக்குப் பின்னால்
அவளும் சென்றாள்.
அவன் தன்னுடைய அறையைத் திறந்து சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து பூட்டினான்.
அப்போதுதான் அறைக்குள் தெரிந்த விதவிதமான ரப்பர் உடைகளை அவள் பார்த்து ஆச்சரியப்பட்டாள். “இது உடுப்பு மாத்தற எடமா? இந்த இடத்த
நான் பாத்ததே இல்ல”
அவன் சிரித்தான். அவள் மறுபடியும் ”நாள்முழுக்க இந்த ரப்பர் ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு எப்பிடி இருக்கமுடியும்? கஷ்டமா இருக்காதா?” என்று கேட்டாள்.
“ஒங்க வேலையும்தான் கஷ்டம். நாள் முழுக்க
நின்னுட்டே இருக்கிங்க.”
அவன் தூணோரமாக நின்றிருந்த தன் சைக்கிளைத் திறந்தான்.
“உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?”
“ஐயோ, தெரியாது.” அவள் பதற்றத்துடன் சொன்னாள். “என்ன பஸ் ஸ்டேன்ட்ல விடுங்க. போதும்”
அவன் கீழ்த்தளத்திலிருந்து சாலையை நோக்கி வண்டியை ஏற்றினான். சாலையை அடைந்ததும்
வண்டியில் ஏறி காலை ஊன்றிக்கொண்டு “உக்காருங்க” என்றான். அவள் ஒருகணம்
தயக்கத்துக்குப் பிறகு ஏறி பின்னிருக்கையில் உட்கார்ந்தாள்.
“உங்க வீடு எந்தப் பக்கம்?”
“லாஸ்பேட்டை”
“ஐயோ, அப்பிடின்னா
என்ன விட்டுட்டு மறுபடியும் திரும்பி வரணுமா? என்னால ஒங்களுக்கு
ரொம்ப கஷ்டம்.”
”பரவாயில்ல, வாங்க.”
அவன் சைக்கிளை மிதித்தான். சிக்னலில் ஆட்களே இல்லாததால் விரைவாக இடதுபக்கம் திரும்பிவிட்டான்.
பஸ் ஸ்டேண்டைச் சுற்றி கூட்டம் ஏராளமாக நின்றிருந்தது. ஒரு பஸ் கூட வெளியே வரவில்லை. பார்க்கும்போதே ஏதோ பிரச்சினைபோலத்
தோன்றியது.
“நாம ஸ்டேண்டுக்குள்ள போவ வேணாம். ஏதோ பிரச்சினைன்னு
நெனைக்கறேன். நான் உங்கள வில்லினூருக்கே கொண்டுவந்து விட்டுட்டு வரேன். வாங்க.”
“ஐயோ, ரொம்ப
தூரமாச்சே”
“பரவாயில்ல. வில்லினூருல எங்க
இருக்குது உங்க வீடு?”
“சங்கராபரணி ஆத்துக்கு பக்கத்துல..”
“பாலத்துக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா?”
“இந்தப் பக்கம்தான்”
“நாம மெய்ன் ரோட் பக்கமா போவவேணாம். யாராச்சிம் வழிமறிச்சா
கஷ்டம். ஊருக்குள்ளயும் தோப்புக்குள்ளயும் புகுந்து குறுக்குவழியா
போயிடலாம்.”
‘சரி, உங்களுக்குத்
தெரியுமா?”
“எனக்கும் இந்த வழி புதுசுதான். கண்டுபுடிச்சி போயிடலாம். நான் இந்த
ஊருக்கே புதுசு. ரெண்டு வருஷமா
நானே ஊர சுத்தி சுத்தி ஒவ்வொரு எடமா தெரிஞ்சிக்கறேன்.”
சைக்கிள் மெயின் ரோடிலிருந்து விலகி புதிய சாலையில் சென்றது. மாட்டுவண்டிகள் செல்லும் பாதை. வண்டிச்சக்கரங்கள் பதிந்து அழுந்திய பள்ளம் நீளமான கோடுகள் போல காணப்பட்டது. பாதையோரம் நெடுகவும் பூவரச மரங்கள் காணப்பட்டன. ஒரு பக்கத்தில் நீளமாக கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. கரையோரத்தில் ஆடுகள் துள்ளி அலைந்தன. அதையொட்டி நெல்வயல்கள்
காணப்பட்டன. பச்சை அலைகள் காற்றின் வேகத்தில் நெளிந்துநெளிந்து சென்றன. மறுபக்கம் முழுவதும்
தென்னந்தோப்பு. எங்கும் வீடுகளே இல்லை. அங்கங்கே மோட்டார்
ரூம்கள் மட்டும் காணப்பட்டன. வெயில் குறைந்து அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது.
“நான் கூட இந்த பக்கமா வந்ததே இல்ல. ரொம்ப அழகா
இருக்குது. இன்னும் வில்லினூரு
எவ்ளோ தூரம்?”
“பக்கம்னுதான் நெனைக்கறேன். போய்ட்டே இருப்போம். இந்த ரோடு
எங்க முடியுதோ அங்க கேட்டுக்கலாம்”
அவனால் அமைதியாக வண்டியை மிதிக்கமுடியவில்லை. மனம் தத்தளித்தபடி இருந்தது. தனக்குப் பிடித்த
அபிராமியை தன் வாகனத்தில் பின்னால் உட்காரவைத்து அழைத்துச் செல்லமுடியும் என்பதை ஒருநாளும் அவன் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அவளிடம் ஏதாவது பேசிக்கொண்டே வரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
“போன மாசம் ஒரு நாள் ஒரு புள்ளதாச்சி அம்மா கடைக்கு முன்னால பிச்ச கேட்டு வந்து நின்னதே, ஞாபகம் இருக்குதா
உங்களுக்கு. முதலாளி பணம் போட்டாரு. நீங்க சட்டுனு
உங்க டிபன்பாக்ஸ தெறந்து உங்க சாப்பாட்டயே நீங்க அவுங்களுக்கு குடுத்திட்டிங்க. நான் பாத்தேன். ஒங்களுக்கு ரொம்ப
இரக்கப்பட்ட மனசு.”
“ஐயோ, அது
எப்பிடி உங்களுக்குத் தெரியும்?”
“நான்தான் இந்த முயலுக்குள்ள இருந்துகிட்டு எல்லாத்தயும் பாக்கறனே.”
“சரியான ஆள்தான் நீங்க. எல்லாத்தயும் நீங்க
பாப்பீங்க. ஆனா உங்கள
யாரும் பாக்கமுடியாது.”
”ஒருநாளு கடைக்கு வந்தவங்களுடைய கொழந்த போட்டிருந்த மோதிரம் திடீர்னு காணாம போயிடுச்சி. யாரு கண்ணுலயும் அது படலை. வேற எங்கனாச்சிம்
போய் தேடி பாருங்கம்மானு எல்லாருமே சொல்லி அந்த அம்மாவ அனுப்பப் பாத்தாங்க. ஆனா நீங்கதான்
அவுங்ககிட்ட எங்க நின்னிங்க, என்ன எடுத்திங்க, எங்கெங்க நடந்தீங்கன்னு எல்லாத்தயும் கேட்டுட்டு ஒரு சிஐடி மாதிரி கார்பெட் சந்துலேர்ந்து கண்டுபிடிச்சி எடுத்துக் குடுத்தீங்க.”
அதைக் கேட்டு அவள் புன்னகைத்தாள். “ஒருநாளா, ரெண்டு நாளா, ரெண்டு வருஷமா உங்கள பாத்துட்டிருக்கேன் நான். உங்க நடமாட்டம்
ஒவ்வொன்னயும் நான் பார்ப்பேன்.”
“சரியான ஆள்தான் நீங்க”
“தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும். உங்களுடைய சுறுசுறுப்பயும் வேகத்தயும் பார்க்கப்பார்க்க எனக்கும் சுறுசுறுப்பும் வேகமும் பொறக்கும்.....”
“ஒருநாள்கூட நீங்க என்கிட்ட பேசனதே இல்லயே?”
“ஃப்ளோர்ல இருக்கறவங்க யாருமே எங்கள மனுஷனாவே மதிக்கறதில்ல. நாங்க போட்டிருக்கிற வேஷத்த மாதிரியே கரடி, முயல், யானை, ஒட்டகம் போல மிருகம்னு நெனச்சிக்கறாங்க.”
அரைவட்ட வடிவில் ஏராளமான நாரைக்கூட்டம் மேற்கு நோக்கி பறந்து சென்றது. ஒரு காட்டுவாகை
மரத்தின் எல்லாக் கிளைகளிலும் கொக்குகள் அமர்ந்திருந்தன. ஒற்றையடிப்பாதையில் கலப்பைகளைச் சுமந்தபடி உழவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் காளைகள் நடந்து வந்தன. அவற்றின் கழுத்தில்
கட்டப்பட்டிருந்த மணிகளின் ஓசை அலையலையாய் எழுந்து வந்தது. வானத்தின் ஒளி
குறைந்துவந்தது. வெம்மை தணிந்து காற்றில் ஒருவிதக் குளிர்ச்சி பரவத் தொடங்கியது.
“ரோடு சுத்திசுத்தி எங்கயோ போயிட்டே இருக்குதே. வழி தப்பிட்டமோ”
“இருக்காது. எல்லா வழிங்களும்
ஒரே மாதிரியா இருக்கறதால நமக்கு கண்ணு மயங்குது.”
முன்னால் இடுப்பில் ஒரு கூடையோடு ஒரு ஆயா நடந்துகொண்டிருந்தாள். அவளுக்கருகில் சைக்கிளை நிறுத்திய மகாதேவன் “ஆயா,
இந்த ரோடு வில்லினூருக்கு போவுமா?” என்று கேட்டான்.
“இதே ரோடுதான். போய்ட்டே இரு. பெரம்பை வரும். அங்க பீச்சாங்கை
பக்கமா திரும்பி போ. அது
அல்லிகுளத்துக்கு போய் சேரும். அங்கேர்ந்து வில்லினூரு
போயிடலாம்”
“எங்க ஆயா, கழனிக்கு
போய்ட்டு வரீங்களா?
“இல்லப்பா. மல்லாட்ட அவிச்சி
எடுத்தும் போயிருந்தன். வித்துட்டு வரன்.”
சைக்கிளை மீண்டும் மிதிக்கத் தொடங்கினான். வானத்தின் நிறம் ஒவ்வொரு கணமும் மாறியபடியே இருந்தது. வெண்மை படர்ந்திருந்த
இடம் சில கணங்களிலேயே நீலமானது. பிறகு மஞ்சள் படிந்தது. மஞ்சள் பொன்னாக
சில கணங்கள் சுடர்விட்டு மாறி செந்தாமரையின் நிறத்தைக் கொண்டது. வானத்தின் நிறம்
மாறும் மாயம் மயக்கத்தைக் கொடுத்தது. சத்தம் என்பதே
எங்குமில்லாததால் நிறைந்திருக்கும் அமைதி, அந்த மயக்கத்தை
மென்மேலும் அதிகமாக்கியது. எங்கோ தோப்பில் ஒரு குயில் கூவிய குரல் கேட்டது. அக்குரலும் தன்
நெஞ்சில் ஒலிப்பதுபோல அபிராமி அபிராமி என ஒலிக்கிறதோ என்று தோன்றியது.
”அதோ, பெரம்பை
போர்ட் தெரியுது, பாருங்க”
அபிராமி சுட்டிக் காட்டினாள். அங்கேயே வில்லியனூர் செல்லும் வழி என்று அம்புக்குறியிட்ட பலகையை வைத்திருந்தனர். மகாதேவன்
சைக்கிளை அந்தப் பக்கமாகத் திருப்பினான்.
“ஒங்க அம்மா அப்பாலாம் என்ன செய்றாங்க?”
“எல்லாரும் விவசாயம்தான். ஆடுமாடுங்க நெறய இருக்குது. நான்தான் எங்க
ஊட்டுல சரியா படிக்கல. எட்டாம் கிளாஸோட
நின்னுட்டன். தம்பிங்க தங்கச்சிங்கள்ளாம் நல்லா படிக்கறாங்க. எல்லாரும் விழுப்புரம் காலேஜ்ல என்னென்னமோ படிக்கறாங்க.”
ஒரு பக்கம் வாழைத்தோப்புகள். மறுபக்கம் தென்னந்தோப்புகள். பச்சைப்பசேலென எல்லாம் தியானத்தில் மூழ்கி காற்றில் திளைத்திருந்தன. சாலையின் விளிம்பில் தும்பைச்செடிகளும் நெருஞ்சிச் செடிகளும் அடர்ந்திருந்தன. மஞ்சளும் வெண்மையும் கலந்து நெய்த துணிப்பரப்பென அச்செடிகள் விரிந்திருந்தன. அவற்றின் விளிம்பிலாடிய கோழிகள் கூவிக்கொண்டே மதிலையொட்டி ஓடின. பூவுருண்டைகள் போல
சின்னச்சின்ன குஞ்சுகள் கோழிகளின் பின்னால் ஓடின. காகங்கள் மதில்மேலிருந்து
கரைந்தன.
அல்லிக்குளத்தை சைக்கிள் கடக்கும்போது “ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்தறீங்களா?” என்று கேட்டாள் அபிராமி. மகாதேவன் வண்டியை
நிறுத்தினான். அபிராமி இறங்கியபடி “கொஞ்ச நேரம் குளத்துங்கிட்ட போவலாமா?” என்று கேட்டாள்.
வண்டியை ஓரமாக மரத்தடியில் நிறுத்திவிட்டு பூட்டினான் மகாதேவன். “வாங்க” என்றபடி அவளோடு
நடந்தான்.
ஒரு பெரிய ஆலமரத்தை ஒட்டி அல்லிக்குளம் அமைந்திருந்தது. வட்டத் தட்டுகளென அங்கங்கே பச்சை இலைகள் மிதந்தன. நீலம், சிவப்பு, வெண்மை என பல நிறங்களில் அல்லிப்பூக்கள் மலர்ந்திருந்தன. ”ஐயோ, எவ்வளவு
அழகு” என்று இரு
கைகளையும் வணங்குவதுபோல குவித்து நெஞ்சில் பதித்தபடி சிரித்தாள் அபிராமி. மேல்வரிசைப் பற்களில்
இடதுபக்கமாகத் தெரிந்த தெத்துப்பல் அவள் முகத்துக்கு அழகாக இருந்தது.
”சந்திரன பாக்காமயே பூத்திருக்கு?”
“பாக்கலைனு யாரு சொன்னா? அதுங் கண்ணுக்குத்
தெரிஞ்சா போதாதா?
அவள் பார்வை ஒருகணம் அவன் மீது பட்டு விலகியது.
“ஒரு எரநூறு பூ இருக்குமா?”
“அதுக்கும் மேல இருக்கும்.”
“முன்னூறு. நானூறு”
அவன் புன்னகைத்தபடியே இருந்தான். மெதுவாக ஆலமரத்தின்
அடிவேரைப் பற்றியபடி இறங்கி குளத்தில் இறங்கி கைக்கு எட்டிய ஒரு தண்டை இழுத்து ஒரு பூவைப் பறித்தான். மெல்ல கரைக்கு
வந்து அவளிடம் நீட்டினான். அவள் புன்னகை ததும்பும் முகத்துடன் வாங்கி மார்போடு அணைத்தபடி அதன் இதழ்களால் தன் கன்னத்தை வருடி அந்த அனுபவத்தில் தோய்ந்தாள். நாணத்தில் அவள் விழிகள் மயங்கியதைப்போல காணப்பட்டன.
ஒரு சொல்லும் பேசாமல் அவள் குளத்திலிருந்து திரும்பி சைக்கிளுக்கு அருகில் சென்றாள். அவனும் பின்னாலேயே
வந்து பூட்டைத் திறந்து சைக்கிளை எடுத்தான். அவன் சாலைக்கு
தள்ளிவந்து ஏறி அமர்ந்ததும் அவள் பின்னால் உட்கார்ந்துகொண்டாள். அவள் மனம் விம்மியது.
சாலையில் நடமாட்டமே இல்லை. அவர்களுடைய சைக்கிள்
மட்டும் சென்றுகொண்டிருந்தது.
“இன்னும் கொஞ்ச தூரம்தான். இனிமே எனக்கே
வழி தெரியும்.”
சைக்கிள் தொடர்ந்து சென்றது. அவள் வழி
சொல்லவேண்டிய அவசியமே எழவில்லை.
சாலை நீண்டுகொண்டே இருந்தது. வீடுகள் இருபுறமும்
வந்துகொண்டே இருந்தன.
அந்தியின் செம்மை படர்ந்த சங்கராபரணி கண்ணுக்குத் தெரிந்தது. இரு கரைகளையும்
தழுவிக்கொண்டு பூரிப்பில் மிதப்பதுபோல ஓடிக்கொண்டிருந்தது ஆறு. கரைநெடுக
பச்சைமரங்கள் நின்றிருந்தன.
“போதும், போதும். இங்கதான்.....”
மகாதேவன் சைக்கிளை நிறுத்தினான். அபிராமி இறங்கி பின்பக்க ஆடைகளின் சுருக்கத்தை சீரமைத்தபடி தாவணியை ஒழுங்குபடுத்திக்கொண்டாள். அவள் பார்வை அவனைத் தொட்டு நின்றது. அவளையறியாமல் ஒரு
பெருமூச்சு எழுந்து அடங்கியது. சற்றே விரிந்த
உதடுகளில் ஒரு புன்னகை சுடர்விட்டது. நாவை நீட்டி ஒருகணம் உதடுகளை ஈரப்படுத்தி மீண்டும் மூச்சு வாங்கினாள். காற்றில் அலையும் காதோர முடிக்கற்றைகளை விரல்களால் சரிசெய்தபடி வரட்டுமா என்பதுபோல தலையசைத்தாள். அவள் கண்களில் எழுந்த ஒளியைப் பார்த்தபடியே நின்ற மகாதேவனும் சரி என்பதுபோல தலையசைத்தான்.
அந்த இடத்திலிருந்து அவள் மெல்ல நடக்கத் தொடங்கினாள். நாலடிக்கு ஒருமுறை பின்னலைத் தொட்டு எடுப்பதுபோலவும் போடுவதுபோலவும் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். அவள் இறுதியாக
ஒருகணம் திரும்பி அவனைப் பார்த்தபடி வாய்க்குள் நாக்கைச்
சுழற்றியவாறு புன்னகைத்துவிட்டு மறைந்தாள். அவள் மறையும்
வரை பார்த்திருந்துவிட்டு சைக்கிளைத் திருப்பிக்கொண்டு சாலைக்கு வந்தான் மகாதேவன்.