வளவ.துரையன் என்கிற அ.சுப்பிரமணியன் வளவனூர் என்னும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். மரபிலக்கியத்தில் தோய்ந்தவர். கம்பராமாயணத்தையும் திருப்பாவையையும் முன்வைத்து எண்ணற்ற மேடைகளில் உரையாற்றியவர். மரபுக்கவிதைகளை எழுதுவதில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவர் மனம் நவீன இலக்கியத்தை நோக்கித் திரும்பி, புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமைகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்றார். இரண்டாவது மதகு அவருடைய இரண்டாவது நாவல்.
தங்குதடையில்லாத இயல்பான மொழியில் நல்ல வாசிப்புத்தன்மையுடன் வாழ்க்கையை மதிப்பிடும் கோணத்தில் வளவ.துரையனின் நாவல் அமைந்திருக்கிறது. விளையாட்டு மைதானத்தில் உருண்டோடி வரும் பந்து எதிர்பாராத கணத்தில் ஒரு பள்ளத்தில் விழுந்து நின்றுவிடுவதுபோல எண்ணற்ற சம்பவங்கள் வழியாகவும் ஏராளமான பாத்திரங்கள் வழியாகவும் கடந்துவரும் நாவல் கடைசியில் ஒரு கேள்வியில் முட்டிமோதி நின்றுவிடுகிறது. நாவலின் சாரம் மட்டுமல்ல, வாழ்க்கையின் சாரமும் அந்தக் கேள்வியில் அடங்கியிருப்பதை ஒரு வாசகன் எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இந்த வாழ்க்கையில் இறுதியாக எஞ்சும் உண்மைகள் காமமும் வஞ்சமும் மட்டும்தானா என்பதுதான் அக்கேள்வி.
தலைப்பில் இடம்பெறும் மதகு அழகானதொரு படிமம். ஏரியில் நிரம்பியிருக்கும் தண்ணீரை சீரான வேகத்தில் கால்வாய்களில் வெளியேற்றி தாகத்துடன் காத்திருக்கும் வயல்வெளிகளில் பாய்ந்து பரவ வழிவகுத்துக் கொடுக்கும் அமைப்புதான் மதகு. ஒரு மதகு இல்லையென்றால் ஏரியின் நிலைமை என்ன ஆகும்? நிறைந்து தளும்பும் நீரே அதை உடைக்கும். அதன் சுற்றுப்புறத்தை அழிக்கும். காமமும் வஞ்சமும் இயற்கையானவை. அவற்றுன் ஆற்றல் வெடிகுண்டுக்கு நிகரானது. அவற்றை சீரான வகையில் உருமாற்றி வெளியேற்றி இயல்பான நிலைக்குத் திரும்பிவரும் பக்குவம் தெரியவேண்டும். பக்குவமில்லாதவர்களே அவற்றுக்குப் பலியாகிறார்கள். தலைப்பில் இடம்பெறும் மதகுக்கான முக்கியத்துவம் கதைக்குள் வலிமையாக இடம்பெறாமல் போனதுதான் ஒரு சிறிய குறை.
சில மாதங்களுக்கு முன்பாக இருவேறு மரண வீடுகளுக்குச் சென்றுவர நேர்ந்தது. அந்த இரு அனுபவங்களும் இருவிதமானவை. ஒன்று, நான் வசிக்கும் பெங்களூரில் புறநகரில் உள்ள ஓர் அடுக்ககத்தில் நிகழ்ந்த மரணம். ஏறத்தாழ எழுபது வீடுகள் உள்ள ஐந்து மாடி அடுக்ககம் அது. நண்பரின் வீட்டுக்குள் மரணமடைந்தவரின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அஞ்சலி செலுத்தச் சென்றோம். அந்த மரண வீட்டில் நண்பரும் அவர் மனைவியும் மனைவியின் தாய்தந்தையரும் மட்டுமே இருந்தனர். எங்களையும் சேர்த்து மொத்தமாக ஆறு பேர். அந்த அடுக்கத்தில் வசிக்கும் மற்றவர்கள் யாரும் நாகரிகம் கருதிக்கூட எட்டிப் பார்க்கவில்லை. இரண்டாவது மாடியிலிருந்து நாங்கள் நான்கு பேர்மட்டுமே ஆளுக்கொரு பக்கம் பிடித்து நண்பருடைய உடலைக் கீழே இறக்கி வாகனத்தில் ஏற்றினோம். நான்கு பேர் மட்டுமே கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தை என்னால் நம்பவே முடியவில்லை.
இரண்டாவது மரணம், எங்கள் கிராமத்தில் நிகழ்ந்த மரணம். தெருவில் வசித்தவர்கள் மட்டுமல்லாது, கிராமத்தில் உள்ள எல்லாத் தெருக்களிலிருந்தும் அவரை அறிந்தவர் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தேன். அதிகாலை வரத்தொடங்கிய கூட்டம், மாலையில் உடலை எடுத்துச் செல்லும் வரையில் வந்துகொண்டே இருந்தது. மரணம் நகரத்தில் தனிமனிதன் துயரமாகவும் கிராமத்தில் ஓரளவேனும் பொதுத்துயரமாகவும் தோன்றும் புதிரை அன்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தப் புதிருக்கான விடை, வளவ.துரையனின் நாவலை வாசிக்கும் போக்கில் ஓரிடத்தில் எனக்குக் கிடைத்தது.
நாவலில் அக்கிரகாரத்தைச் சேர்ந்த நரிக்கால் ஐயர் என்பவர் இறந்துவிடுகிறார். பேர் சொல்லும் அளவுக்கு அவர் நல்ல மனிதரல்லர். மோசடிக்காரரும் கூட. ஆனால் அவர் மறைவுக்கு எல்லாத் தெருக்களைச் சேர்ந்தவர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். தெரிந்தவரோ, தெரியாதவரோ, நல்லவரோ கெட்டவரோ, மரணமடைந்துவிட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரவேண்டும் என்னும் எண்ணம் அக்கிராமத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ”ஒரு வீட்டில் கல்யாணம் நடக்கிறது என்றால், அந்தக் கல்யாணத்துக்கு எல்லோருமே போகவேண்டும் என்கிற அவசியமில்லை. யாருக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே சென்றால் போதும். ஆனால் ஒரு வீட்டில் யாரோ மரணமடைந்துவிட்டார்கள் என்றால், தகவல் தெரிந்தவர்கள் எல்லோருமே சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்புவதுதான் முறை” என்று மரண வீட்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள உரையாடலே எனக்குள் இருந்த புதிரை விடுவித்த வரிகள்.
நாவல் ஐம்பதுகளில் தொடங்கி அறுபதுகளில் நிறைவெய்துகிறது. மூன்று சரடுகள் முன்னும்பின்னுமாக பின்னிக்கொண்டு நாவல் முன்னகர்கிறது. தந்திரத்தாலும் வாய்சவடால்களாலும் அக்கம்பக்கத்துக் கிராமங்களில் உள்ள நிலங்களை வாங்கி சொத்து சேர்க்கும் மண்ணாசை பிடித்த நரிக்கால் ஐயரும் அவருடைய கொடிவழியினரும் ஒரு முக்கியமான சரடு. சகோதரசகோதரிகளுடன் பிறந்தவர் என்றபோதும் உறவின் அருமையை ஒருசிறிதும் உணராத சாமிநாத ஐயரும் அவருடைய கொடிவழியினரும் இரண்டாவது முக்கியச்சரடு. ரெட்டியார் வீட்டில் பண்ணையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த சின்னானின் திடீர் மறைவுக்குப் பிறகு தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பாஞ்சாலியும் அவள் கொடிவழியினருமான மூன்றாவது சரடு. ஒவ்வொரு கொடிவழியினரும் ஒவ்வொரு விதமான சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு மீளமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுடைய தவிப்புகளும் மீட்சிகளுமே நாவலின் களம்.
இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறவர்கள் அனைவரும் சாதி நிலைகளில் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களே. ஆயினும் சாதி எந்த இடத்திலும் அவர்களின் வாழ்வில் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இல்லை. தன் பண்ணையில் வேலை செய்யும் சின்னானின் திருமணத்துக்கு தன் வீட்டு வில்வண்டியை அனுப்பிவைக்கிறார் குப்புசாமி ரெட்டியார். நிலமில்லாத ஏழை என்று அவனுக்குப் பெண்கொடுக்கத் தயங்கியபோது, அவன் நல்ல உழைப்பாளி, வாழ்க்கையில் முன்னேறும் முனைப்பு கொண்டவன் என்று அவனுக்காகப் பரிந்து நம்பிக்கைச் சொற்களைச் சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கிறார் ரெட்டியார். நரிக்கால் ஐயர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் செயலற்றுப் போய் படுக்கையில் விழுந்த பிறகு, அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முருகன் செண்பகம் தம்பதியினரை அக்கிரகாரத்தில் தன் வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் குடியமர்த்துகிறான் ஐயரின் மகன். எந்த இடத்திலும் சாதி ஒரு தடையாக இல்லை. கிராம வாழ்க்கையில் அது ஒரு பொற்காலம். துரதிருஷ்டவசமாக, சாதிச்சிக்கலற்ற மனிதர்கள் தாமாகவே சென்று வெவ்வேறு சிக்கல்களில் அகப்பட்டு உழலத் தொடங்குகிறார்கள்.
நரிக்கால் ஐயர் மண்ணாசையிலும் பெண்ணாசையிலும் தம் வாழ்க்கையையே தொலைக்கிறார். செண்பகத்தின் இளமை அவரைப் பாடாய்ப்படுத்துகிறது. தன் வயலில் களையெடுக்க வந்த செண்பகத்தை மோட்டார் அறைக்குள் கிட்டிய தனிமையைப் பயன்படுத்தி வீழ்த்தி இன்பம் நுகர்கிறார். அவரால் வீழ்த்தப்பட்ட பல பெண்களின் வரிசையில் அவளும் ஒருத்தி. அழுது புலம்பினாலும் வசை பாடினாலும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமைதி காக்கும் அவள் நெஞ்சில் அவரைப் பழிவாங்கும் வேகம் பாம்பென படமெடுத்து ஆடிக்கொண்டே இருக்கிறது. தக்க தருணம் வாய்த்ததும் கிஞ்சித்தும் குற்ற உணர்ச்சியின்றி தன் கணக்கைத் தீர்த்துக்கொள்கிறது. தனியறையில் உடல் செயலிழந்த நிலையில் கிடக்கும் நரிக்கால் ஐயரின் கன்னத்தில் மாறிமாறி அவள் அறையும் வேகமும் குண்டூசியால் குத்தி வதைக்கும் உக்கிரமும் மறக்கமுடியாத காட்சிகள்.
காவேரியும் கற்பகமும் சகோதரிகள். மண்ணாங்கட்டியும் சின்னசாமியும் சகோதரர்கள். இரு சகோதரிகளும் இரு சகோதரர்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண்பார்க்க வந்த சமயத்திலேயே அண்ணனை மறுத்து தம்பியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் காவேரி. தன் விருப்பத்தை மிகவும் இயல்பாகவே அவள் தன் தாயாரிடம் வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவள் தாய் அதை உடனடியாக அடக்கிவிடுகிறாள். தாயின் வேண்டுகோளுக்காக அடங்கிவிட்ட காமம் உள்ளூர கனன்றபடியே இருக்கிறது. என்றோ ஒருநாள் எதிர்பாராமல் கிட்டிய தனிமையைப் பயன்படுத்தி, விருப்பமில்லாத கொழுந்தனைக் கட்டாயப்படுத்தி தன் ஏக்கத்தைத் தணித்துக்கொள்கிறாள் காவேரி. துரதிருஷ்டவசமாக அதைப் பார்க்க நேர்ந்த அவளுடைய கணவன் தற்கொலை செய்துகொள்கிறான். தன் காமத்துக்காக அவள் கொடுத்த விலை பெரிது.
இவர்களுக்கிடையில் வேறு சில மனிதர்களும் இருக்கிறார்கள். கல்வியால் மட்டுமே முன்னேற இயலும் என்பதால் வாழ்க்கை அடுக்குகளில் கடைசி அடுக்கில் வசிப்பவர்களை கண்ணும் கருத்துமாகப் படிக்கும்படி ஆலோசனை சொல்பவர்களும் இருக்கிறார்கள். கல்விக்காக தன் சொந்த நிலத்தை விற்று பள்ளியை நிறுவும் இலட்சியக்கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள். தமக்குச் சொந்தமான இடத்தை தம் சகோதரன் பிள்ளைக்கும் மடத்துக்கும் எழுதிவிட்டுச் செல்பவர்களும் இருக்கிறார்கள். எதையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மறுப்பவர்களும் இருக்கிறார்கள். இத்தனை பேர்களுக்கு இடையில் வாழ நேர்ந்தபோதும் கூட, இவர்களைப் பார்த்து எதையும் கற்றுக்கொள்ளாமல் காமத்தையும் வஞ்சத்தையும் மனிதர்கள் ஏன் சுமந்தலைய வேண்டும் என்பது மாபெரும் புதிர்.
இந்த நாவலின் தொடக்கத்திலும் இறுதியிலும் தற்செயலாக ஒரு குதிரைவண்டிப் பயணம் சித்தரிக்கப்படுகிறது. வெள்ளைச்சேலை கட்டிய மீனாட்சிதான் இரு பயணங்களிலும் இடம்பெறுபவள். முதல் பயணம் தன் பெண்ணுக்காக தன் சகோதரனிடம் வரன் கேட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம். இரண்டாவது பயணம் சகோதரனின் அடுத்த வீட்டில் வசிக்கும் நரிக்கால் ஐயரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த பயணம். நடக்காது என நினைத்த திருமணம் சகோதரனின் மனமாற்றத்தால் அப்போது நிறைவேறிவிட்டது. ஒரு கட்டத்தில் நடக்கவே நடக்காது என நினைக்கிற செயல் இன்னொரு கட்டத்தில் எப்படியோ நடந்துவிடுகிறது. அதுவும் ஒரு புதிரே. வாழ்க்கையே புதிர்களின் களம். வளவ.துரையனுக்கு வாழ்த்துகள்.
( பாரதி புத்தகாலயம் வெளியீடாக வந்துள்ள வளவ துரையனின் புதிய படைப்பான ‘இரண்டாவது மதகு’ நாவலுக்கு எழுதிய முன்னுரை )