கன்னட வசன இலக்கியத்தில் முக்கியமான ஒரு பெயர் அக்கமகாதேவி. அல்லமப் பிரபு, அக்கமகாதேவி, பசவண்ணர், மடிவாளர் என ஒரு பெரிய நீண்ட வரிசையே உண்டு. இவர்கள் அனைவரும் வசனகாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வனுபவங்களையும் ஆன்மிக அனுபவங்களையும் முன்வைத்து அவர்கள் மொழிந்தவற்றுக்கு வசனங்கள் என்று பெயர். பாட்டுத்தன்மை மிகுந்த வசீகரமான பேச்சுமொழியால் அமைந்தவை இவ்வசனங்கள். சிற்றெறும்பும் சிவமாகும் என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டு. இடைவிடாமல் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் சிற்றெறும்புகூட ஒருநாள் சிவனாக மாறமுடியும். நம்பிக்கையும் பற்றும் ஈடுபாடும் நெகிழ்ச்சியும் தன்னையே அர்ப்பணிக்கிற குணமும் எல்லாவற்றையும் துறந்து சரணடைகிற மனமும் வாய்க்கப்பெற்றவர்களுக்கு சிவனருள் சாத்தியம். சிவன் வெறும் இறையுருவம் மட்டுமல்ல. அவன் நல்ல தோழன். நல்ல வழிகாட்டி. நல்ல ஆசான். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிற சக்தி.
சிவனைத் தன் உற்ற தோழனாகக் கருதி வசனங்களை இயற்றியருளியவர் அக்கமகாதேவி.
சிவனின் தோழமையையே இலக்காகக் கருதி, தன் இல்லறவாழ்வையும் சமூகநிலையையும் துறந்து வீட்டைவிட்டு வெளியேறியவர். அவர்
கி.பி.1146 ஆம் ஆண்டில் சிமோகா
மாவட்டத்தில் உடுத்தடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இளமையிலேயே சென்னமல்லிகார்ஜூனன்மீது
ஈடுபாடு அவருக்கு இருந்தது. மெல்லமெல்ல மனத்தளவில் மல்லிகார்ஜூனனிடம் தன்னை
ஒப்படைத்துவிட்டார். ஆண்டாள், மீரா வழியில் அவரும் நடந்தார். பருவமடைந்த வயதில் அந்த அர்ப்பணிப்புணர்வு
அதிகமாகவே இருந்தது. ஜைனமன்னன் கௌசிகன் ஒருநாள் நகருலா வரும்போது, அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விழைகிறான். அவள் தந்தைக்கும் அதில்
விருப்பமிருந்தது. ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அக்கமகாதேவி அத்திருமணத்துக்கு
ஒப்புக்கொண்டார். எக்காலத்திலும் சிவபூசை செய்வதற்கோ, சிவபக்தர்களுடன் பழகுவதற்கோ, குருசேவை செய்வதற்கோ தடை நேரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. ஆசையில்
கௌசிகன் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாலும் நாளடைவில் அந்த நிபந்தனையை மீறத்
துணிந்தான். அக்கணத்தில் அரண்மனையைவிட்டு வெளியேறிய அக்கமகாதேவி ஸ்ரீசைலம்
திருமலையைநோக்கிச் சென்றுவிட்டார். செல்வங்கள் அனைத்தையும் துறந்ததோடு, தன் ஆடைகளையும் துறந்து, தனது நீண்ட கூந்தலாலேயே தன் உடலை மறைத்து திகம்பரியாகச் சென்றார்.
அக்கமகாதேவியின் வசனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 350 ஆகும். அவை அனைத்தும் சிவன்மீது அவர் வைத்திருந்த அன்பையும் பற்றையும்
நம்பிக்கையையும் உணர்த்துபவை. அவருடைய வசனத்துக்கு வழங்கப்பட்டிருந்த சமூக
மதிப்பைப் பற்றி சென்ன பசவண்ணர் என்பவர் ஒரு பாடலையே எழுதியுள்ளார்.
வசனஇலக்கியத்தில் உள்ள முன்னோடிகள் எழுதிய 60 வசனங்கள் தன்னாயகர் என்னும் வசனகாரர் எழுதிய 20 வசனங்களுக்கு இணையானவை. அவை பிரபுதேவர் எழுதிய 10 வசனங்களுக்கு இணையானவை. அவை அஜகண்ணரின் 5 வசனங்களுக்கு இணையானவை. அவை அனைத்தும் அக்கமகாதேவியின் ஒரு வசனத்துக்கு
இணையானது. 1998ல் அக்கமகாதேவியன்
வசனங்கள் ஆல்பிரபு என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு பெங்களூர் பசவசமிதியால்
வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக சொல்புதிது என்னும் இதழில் கடவுளும்
கவிதையும் என்னும் தலைப்பில் வசனகாரர்களை அறிமுகப்படுத்தி நான் எழுதிய கட்டுரையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வசனங்களை மொழிபெயர்த்திருந்தேன்.
தமிழ்ச்செல்வியும் மதுமிதாவும் இணைந்து பணியாற்றிய இம்மொழிபெயர்ப்பில் 149 வசனங்கள் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள் இருவருக்கும் தமிழுலகம்
கடமைப்பட்டுள்ளது. பக்கத்துக்கு ஒரு வசனமாக அழகான முறையில் திரிசக்தி பதிப்பகம்
வெளியிட்டுள்ளது.
தண்ணீரால் மேடை செய்து
நெருப்பால் சப்பரம் செய்து
ஆலங்கட்டியாலான மணைவைத்து
நெற்றியில் திருமணப்பட்டம் கட்டி
காலில்லாத மனைவிக்கு
தலையில்லாத கணவன்
வந்து சேர்ந்தான் பாராய்
என்றும் நிலையான வாழ்வுக்கு
என்னைக் கொடுத்தார்
சென்னமல்லிகார்ஜூனய்யனுக்கு
என்பது அக்கமகாதேவியின் வசனங்களில் ஒன்று. நிலையான தன்மை, நிலையற்ற தன்மை என்னும் இரண்டு புள்ளிகளிலிருந்து வாழ்க்கை இங்கே
அணுகப்படுகிறது. மல்லிகார்ஜூனன்வசம் தன்னை ஒப்படைப்பவர்களுக்கு நிலைத்த வாழ்வும்
மற்றவர்கள்வசம் தன்னை ஒப்படைப்பவர்களுக்கு நிலையற்ற வாழ்வும் கிடைக்கும் என்பது
அக்கமகாதேவியின் வாக்கு. மல்லிகார்ஜூனன் நிலையானவன். ஆதியும் அந்தமுமாக இருப்பவன்.
அவனிடம் சரண்புகுந்தவர்கள் எல்லாருமே அவனோடு நிலையானவர்களாக நீடித்திருப்பார்கள்.
அவனைத் தவிர்த்து மற்றவர்களை நாடிச் சரணடைபவர்களுடைய வாழ்வு அவ்வளவாக நீடித்திருப்பதில்லை.
மிகச்சிறிய காலமே நிலைத்திருந்து பிறகு கரைந்து காணாமல் போய்விடும். அதை நுட்பமாக
உணர்த்துகிற சொற்களை வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
திருமணச்சடங்கைப்பற்றிய குறிப்புகள் ஒவ்வொன்றிலும் அந்த நிலையற்ற தன்மையைச்
சுட்டிக் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மேடை மரச்சட்டங்களால் ஆன மேடை அல்ல. மாறாக
தண்ணீரால் கட்டியெழுப்பப்பட்ட மேடை. சப்பரமும் மரச்சட்டங்களால் ஆன சப்பரம் அல்ல.
நெருப்பால் ஆன சப்பரம். மணையும் அப்படியே. ஆலங்கட்டியாலான மணை. காலில்லாத மனைவி
என்பதும் அழகான சொல்லாக்கம். சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறவகையில் கால் ஒரு
குறியீட்டுச் சொல்லாகவே பயன்படுகிறது. சுதந்திரம் உள்ளவள் மல்லிகார்ஜூனனையே
தேர்ந்தெடுப்பாள். சுதந்திரம் அற்றவளே, மற்றவர்களை ஏற்றுக்கொண்டு நிலையற்ற வாழ்வை வாழத் தொடங்குகிறாள். தனக்குக்
கிட்டிய சுதந்திரத்தின் அடிப்படையிலேயே மல்லிகார்ஜூனனிடம் ஆட்பட்டதாக அக்கமகாதேவி
சொல்வது கவனிக்கத்தக்கது.
அக்கமகாதேவியின் சிலை
அக்கமகாதேவியின் சிலை
நிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக
இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான
செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத
காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல்
வாடிவதங்குவதுபோல.
இன்னொரு விதமான வேதனையும் இருக்கிறது. அதை இப்படிச் சொல்லலாம். ஒரு
குறிப்பிட்ட மலரைத் தேடி, ஒரு தோட்டத்துக்குச் செல்கிறோம். அங்குள்ள ஏராளமான மலர்களில் நாம் தேடிச்
சென்ற மலர்மட்டும் இல்லை. வெகுநேரம் தேடியலைந்த பிறகும் கண்டுபிடிக்க முடியாதபோது
ஏமாற்றத்தில் மனம் சலிப்படைந்துவிடுகிறது. இன்னொரு தோட்டத்துக்கு நம்பிக்கையோடு
செல்கிறோம். அங்கும் அம்மலரைக் காணமுடியவில்லை. சோர்வில் அத்தருணத்தில்
உருவாகும் வேதனைக்கு அளவே இல்லை. ஆனாலும் மல்லிகார்ஜூனனைத் தேடிப் புறப்பட்ட பிறகு
அவனைக் கண்டடையாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வது இன்னும் பல மடங்கு வேதனையை
அளிக்கும் என்பதால் அவனைத் தேடிக் கண்டடைகிற பயணம் தொடர்கிறது. தேடலில்
ஈடுபட்டிருக்கிற நெஞ்சம் தன் வேட்கை தணிவதற்காக பல பிறவிகளைக் கடந்து செல்வதைக்கூட
பொருட்படுத்துவதில்லை. அக்கமகாதேவி முன்வைக்கிற வரிகள் மனத்தை உருக்கும் விதமாக
உள்ளன.
நெருப்பில்லா சூட்டில் வெந்தேனம்மா
வடுவில்லா காயத்தில் நொந்தேனம்மா
சுகமிழந்து தவித்தேனம்மா
சென்னமல்லிகார்ஜூன தேவனை விரும்பி
வரக்கூடாத பிறவிகளில் வந்தேனம்மா
இறைவன் அடிசேர்ந்தவர்கள் பிறவிக்கடலை நீந்திக் கடந்துவிடமுடியும் என்றும்
அப்படி அடிசேராதவர்கள் அக்கடலை நீந்தமுடியாது என்றும் முன்வைக்கும் குறள்வரியோடு
அக்காவின் வரிகளையும் இணைத்துப் பார்க்கலாம்.
அஞ்ஞானிகளின் நட்பு
கல்லை உரசி
நெருப்பைப் பெறுவதுபோல
அறிந்தவர்களின் நட்பு
தயிரைக் கடைந்து
வெண்ணெய் பெறுவதுபோல
உன் சரணர்களின் நட்பு
கற்பூரமலையில்
நெருப்பு பற்றிக்கொள்வதுபோல
சென்னமல்லிகார்ஜூய்யா
என்னும் வசனம் நட்பின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. அஞ்ஞானிகள், அறிமுகமானவர்களின் நட்பைக் கடந்து சென்னமல்லிகார்ஜூனனின் சரணர்களுடைய நட்பால்
உருவாகும் நெருக்கத்தின் மதிப்பை உணர்த்துகிறது. சரணர்களுடைய நட்பே கற்பூரமலையில்
நெருப்பு பற்றிக்கொள்வதுபோல இருந்தால் சென்னமல்லிகார்ஜூனுடைய நட்பின் தன்மை
எவ்விதமானது என்பதை சொல்லாமல் உணர்த்தப்படுகிறது.
மல்லிகார்ஜூனனின் நட்பு வலிமையுற்ற கணத்திலிருந்து அக்கமகாதேவியின் வாழ்வில்
ஏற்படும் மாற்றங்கள் மிகவும் நுட்பமுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் கணம் அவள்
தன் உடலையே மல்லிகார்ஜூனன் வழங்கிய பிரசாதமெனக் கருதுகிறாள். பிறகு மூச்சு அவன்
பிரசாதமாகிறது. இப்படியே உயிர், மனம், செல்வம், உணர்வு, உணவு என ஒவ்வொன்றும்
அவன் வழங்கிய பிரசாதமாகிறது. தான் என்பது மறைந்து மல்லிகார்ஜூனனுடன் இரண்டறக்
கலந்த ஒருமை நிலை உருவாகிறது. இறுதியில் அவன் வழங்கிய பிரசாதங்ளையே
போர்த்திக்கொண்டிருக்கிற ஒருத்தியாக தன்னை நினைத்துக்கொள்கிறாள். அதுவே
இவ்வசனத்தில் உச்சம்.
அக்கமகாதேவி மல்லிகார்ஜூனனுடன் உணரக்கூடிய மானசிகமான உறவைக்
கொச்சைப்படுத்திப் பேசக்கூடியவர்களும் இருந்திருப்பார்கள். அவர்களுடைய பழிப்புரைகளை
அக்கமகாதேவியும் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்பேச்சு அவளை நிலைகுலையவைக்கவில்லை.
மாறாக, அவர்களுக்காக
வருத்தப்படுகிறாள். கண்ணால் காணமுடியாத சூரியனை ஆந்தை பழிப்பதுபோல, கண்ணால் பார்க்கமுடியாத நிலவை காகம் பழிப்பதுபோல, கண்ணால் பார்க்கமுடியாத கண்ணாடியை கண்பார்வையில்லாதவன் பழிப்பதுபோல அவர்கள்
அவளைப் பழிப்பதாக நினைத்துக்கொள்கிறாள். அதே சமயத்தில் அவர்களுடைய
பழிப்புரைகளெல்லாம் காரணம் அவர்கள் மல்லிகார்ஜூனனை உணரமுடியாததுதான் என்பது
அவளுடைய உறுதியான எண்ணமாக இருக்கிறது. ஒன்றை உணராமலேயே விமர்சிப்பதோ பழிப்பதோ எப்படி
சரியாகக்கூடும் என்பதுதான் அவள் இந்த உலகத்தைப் பார்த்து முன்வைக்கக்கூடிய கேள்வி.
மல்லிகார்ஜூனனைப்பற்றிய நினைவு இல்லாத ஒரு மனம் எப்படி இருக்கக்கூடும்
என்பதைப்பற்றிய ஒரு சித்திரத்தை அழகாகத் தீட்டிக்காட்டுகிறாள் அக்கமகாதேவி.
இற்றுப்போன மரத்தில்
பூச்சிகள் புகுந்துகொள்வதுபோல
ஆள் இல்லாத வீட்டில்
நாய் நுழைந்துகொள்வதுபோல
மன்னன் இல்லாத நாட்டை
எதிரிகள் சூழ்ந்துகொள்வதுபோல
உடலுக்குள் உங்கள் நினைவற்றுப்போனால்
பூதம் பேய் பிசாசுகள் புகுந்துகொள்ளும்
சென்னமல்லிகார்ஜூனய்யா
கச்சிதமான ஒரு சித்திரத்தை வழங்கியபிறகுகூட, அக்கமகாதேவியின் மனம் நிறைவுறவில்லை. இன்னும் அச்சித்திரத்தைக்
கூர்மைப்படுத்துகிறார்.
கண்ணுக்கு அழகு
குருக்களையும் பெரியோர்களையும் பார்ப்பது
காதுக்கு அழகு
புராதனரின் இசைகளைக் கேட்பது
பேச்சுக்கு அழகு
சத்தியத்தைச் சொல்வது
சம்பாஷணைக்கு அழகு
சிறந்த பக்தர்களுடனான பேச்சு
கைகளுக்கு அழகு
உரியவர்களுக்கு அளிப்பது
வாழ்க்கைக்கு அழகு
சிவணங்களின் சகவசாம்
இவை இல்லாத வாழ்க்கையை
எதற்கு வாய்க்கச் செய்தாயய்யா
சென்னமல்லிகார்ஜூனய்யா.
தன்னை நட்புடன் ஏற்றுக்கொண்ட மல்லிகார்ஜூனன் தன்னை இல்லறவாழ்வைநோக்கித்
தள்ளியது ஏன் என்கிற கேள்வி அக்கமகாதேவியை வாட்டியெடுக்கிறது. ஆனால் ஏன் என்று
மல்லிகார்ஜூனனை நேரிடையாகக் கேட்பதற்கு அவளுக்குத் துணிச்சலில்லை. மல்லிகார்ஜூனனே
செய்கிறான் என்னும்போது அதற்கு ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று நம்புகிறாள்.
ஏற்றுக்கொள்ளவும் முடிவில்லை. உதறவும் முடியவில்லை. ஒருவித சங்கடமான மனநிலையில்
இப்படி செய்துவிட்டாயே மல்லிகார்ஜூனனே என்று ஆற்றாமையோடு கேட்கிற வரிகள்
அருமையானவை. அந்தச் செயலைச் சுட்டிக்காட்ட வசனத்தில் பயன்படுத்தப்படும் உவமைகள்
அழகானவை.
ஆயிரம் பொன்னுக்கு
வாசனைப்பொருட்களை வாங்கி
அவற்றில் சுண்ணாம்பைக் கலந்துவிட்டதுபோல
மூன்று லட்சம் பொன்னுக்கு
ரத்தினங்களை வாங்கி
அவற்றை மடுவில் எறிந்ததுபோல
என்னைத் தீண்டிப் புனிதமாக்கிப் பின்
துயர்தரும் சம்சாரத்தில்
ஒப்படைத்துவிட்டாயே அய்யா
சென்னமல்லிகார்ஜூய்யா
என்பது அக்கமகாதேவியின் வசனம்.
சென்னல்லிகார்ஜூனனை நாம் விரும்புவது என்பது ஒரு நிலை. அதே
சென்னமல்லிகார்ஜூனன் நம்மை விரும்புவது என்பது மற்றொரு நிலை. மிகவும் அபூர்வமான
ஒரு வாய்ப்பு. தனக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததையொட்டி அக்கமகாதேவி
மிகவும் மகிழ்ச்சிவசப்பட்டவளாகவே காணப்படுகிறாள். அந்த வாய்ப்புக்காக அவள்
தனிப்பட்ட நிலையில் எதையும் செய்யவில்லை. எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.
நம்பிக்கையோடும் விருப்பத்தோடும் மனம் பாடிய பாட்டுக்கு மல்லிகார்ஜூனன்
செவிமடுத்துவிட்டான். அதுதான் அவள் ஆனந்தத்துக்குக் காரணம்.
பாலில் நீர் இருப்பதைப்போல நீ இருப்பாய்
ஆதலால் முன்பு எது பின்பு எது என்று அறியேன்
படைப்பவன் யார் சேவகன் யார் என் அறியேன்
உன்னை விரும்பிப்பாடினால்
சிற்றெறும்பு சிவன் ஆகாதோ
சொல்லய்யா, சென்னமல்லிகார்ஜூனய்யா.
ஒருபுறம் ஆனந்தமடைந்தாலும், இன்னொருபுறம் அது சென்னமல்லிகார்ஜூனன் தன்மீது காட்டிய பரிவு என்றே அவள்
நினைக்கிறாள். அவனை நினைத்து மனமுருகப் பாடினால் சிற்றெறும்பும் சிவனாக
மாறமுடியுமென்றால், மனிதர்கள் உயர்ந்து
செல்லக்கூடிய மேலான நிலைக்கு எல்லையே இல்லை.
உடல் கரையாதவரிடம்
குளியலை ஏற்றுக்கொள்ளமாட்டாய் நீ
மனம் கரையாதவரிடம்
பூவை ஏற்றுக்கொள்ளமாட்டாய்.
நல்லவர்கள் அல்லாதவரிடம்
சந்தன அட்சையை ஏற்றுக்கொள்ளமாட்டாய்
அறிவுக்கண் திறவாதவரிடம்
ஆரத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டாய்
நன்னடத்தை இல்லாதவரிடம்
நறும்புகையை ஏற்றுக்கொள்ளமாட்டாய்
நல்உயர்வு இல்லாதவரிடம்
நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாய்
திரிகரண தூய்மை இல்லாதவரிடம்
தாம்பூலத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாய்
இதயக்கமலம் மலராதவரிடம்
இருக்க விரும்பமாட்டாய் ஐயா நீ,
என்னிடம் என்ன இருக்கிறது என்று
உள்ளங்கையில் வந்தமர்ந்தாய்
சென்னமல்லிகார்ஜூனய்யா
இந்த வசனத்தைப் படிக்கும்போது, மல்லிகார்ஜூனன் தன்னை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் தனக்கே தெரியவில்லை என
அக்கமகாதேவி தெரிவிப்பதுபோல ஒரு தோற்றம் தெரிகிறது. தன்மீது மல்லிகார்ஜூனன்
மனத்தில் பிறந்துவிட்ட பரிவுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என எல்லாப் பெருமைகளையும்
அவன் இருக்கும் திசையில் சமர்ப்பிக்கும் பார்வை இந்த வரிகளின் உள்மடிப்பில்
உள்ளது.
சென்னமல்லிகார்ஜூனனை உணர்வது என்பது ஒரு கலை. அது மேலோட்டமான தொடுகை
உணர்வல்ல. மாறாக உயிராலும் அறிவாலும் உணர்வது. அதில் எல்லாரும் தேர்ச்சி பெற
முடிவதில்லை. உணரும் பேறுபெற்றவர்களை மேன்மக்கள் என்றே சொல்லவேண்டும். அது
ஒருபக்க முயற்சியால் மட்டும் விளைவதில்லை. மல்லிகார்ஜூனின் பரிவும் வேண்டும். நம்
விருப்பமும் அவன் பரிவும் இணைந்த நிலையில்மட்டுமே அந்த உணர்தல்நிலை உருவாகிறது.
சிலருக்குமட்டுமே அப்படி வாய்க்க, பலருக்கு அப்படி நேராமல் ஒருபக்க உணர்வாகவே நின்றுவிடுகிறது.
அப்படிப்பட்டவர்களின் நிலையை உணர்த்த தன் வசனத்தில் அக்கமகாதேவி அழகான ஓர்
உவமையைப் பயன்படுத்துகிறார்.
அச்சில் வார்த்த பொம்மைக்கிளிக்கு
அரண்மனையில் பேசப் பயிற்சி கொடுத்தாலும்
கற்றுக்கொள்ள உயிரில்லை
கேட்பதற்கு அறிவில்லை
ஆழமாக உணர்ந்தும் அறிந்தும் மல்லிகார்ஜூனன் நட்பைப் பெறுவதில் அக்கமகாதேவிக்கு
ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை ஆன்மசம்பாஷணை என்ற சொல்லால்
குறிப்பிடுகிறார் அக்கமகாதேவி. பசியெடுத்தால் பிச்சையெடுத்துச் சாப்பிட்டுவிடலாம்.
தாகமெடுத்தால் கண்ணில் தென்படக்கூடிய ஏரி,குளம், கிணறு என ஏதோ ஒன்றில்
நீரெடுத்து அருந்திவிடலாம். உறக்கம் வந்தால் எங்காவது கண்ணில் படும் பாழடைந்த
கோயிலொன்றில் படுத்து உறங்கவிடலாம். ஆனால் ஆன்மசம்பாஷணையை யாரடனும்
நிகழ்த்தமுடியாது. அதை மல்லிகார்ஜூனன்கூடமட்டுமே நிகழ்த்த முடியும். ஆன்மஒளி பெற
இந்த உரையாடல் அவசியமாகிறது.
ஆன்ம ஒளியையே முதன்மையான ஒன்றாகக் கருதிய பிறகு அக்கமகாதேவிக்கு வேறெதுவும்
பொருட்படுத்தத்தக்கதாகத் தெரியவில்லை. அதை அடைவதற்காக எவ்விதமான இன்னல்கள்
நேரினும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது அவள் மனம். மலைமீது ஒரு வீட்டைக்
கட்டிக்கொண்டு மிருகங்களுக்குப் பயந்தால் முடியுமா என்றும் கடலுக்கு அடியிலொரு
வீட்டைக் கட்டிக்கொண்டு நுரைஅலைகளுக்குப் பயந்தால் முடியுமா என்றும் சந்தைக்கு
நடுவில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு சத்தத்துக்குப் பயந்தால் முடியுமா என்றும்
அவள் அடுத்தடுத்துக் கேட்கக்கூடிய கேள்விகள் முக்கியமானவை. ஆன்மஒளியை நோக்கிய
பயணத்தில் எவ்விதமான இடர்வந்தாலும் அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாள்.
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமநிலையில் எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கை
வழங்குமாறு அந்த மல்லிகார்ஜூனனிடமே யாசிக்கிறாள்.
ஆன்ம உரையாடலுக்கான மையப்புள்ளி மல்லிகார்ஜூனனே என உருவாக்கிக்கொண்ட மனம் தன்f உரையாடல்வழியில் ஆழத்தைநோக்கிச் செனறபடியே உள்ளது. அந்த உரையாடலின்
பயணஅனுபவத்தை அக்கமகாதேவி முன்வைக்கும் அழகு வசீகரம் நிறைந்தது. தன் மனம்
மெல்லமெல்ல அடைகிற பரவசத்தின் உச்சத்தைச் சொற்களாலும் அவரால் முன்வைக்க
முடிந்திருக்கிறது.
நீ கேட்டால் கேள்
கேளாவிட்டால் விடு
உன்னைப் பாடாமல்
நான் இருக்கமாட்டேன்
நீ கருணை காட்டினால் காட்டு
காட்டாவிட்டால் விடு
உன்னை பூசிக்காமல்
நான் இருக்கமாட்டேன்
நீ விரும்பினால் விரும்பு
விரும்பாவிட்டால் விடு
உன்னைத் தழுவிக்கொள்ளாமல்
நான் இருக்கமாட்டேன்
நீ பார்த்தால் பார்
பார்க்காவிட்டால் விடு
உன்பைப் பார்த்து மகிழ்ந்து புகழாமல்
நான் இருக்கமாட்டேன்
நான் உன்னைப் பூசித்து
பரவசத்தில் ஆடுவேனய்யா
சென்னமல்லிகார்ஜூனய்யா
இந்தப் பரவசம்தான் அக்கமகாதேவியின் வசனங்களில் காணப்படுகிற மையம்.
நெற்கதிர்களும் பாக்குக்குலைகளும் தேங்காய்க்குலையும் தோரணமாகத் தொங்கவிடப்பட்ட
மண்டபத்தில் பிச்சையேற்பதற்காக வந்திருந்த மல்லிகார்ஜூனனைக் கைப்பிடிப்பதாகக்
கனவுகண்டதாகச் சொல்கிற வசனத்தில் இந்தப் பரவசம் உச்சம் கொள்கிறது. “கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி” என்று ஆண்டாள் வெளிப்படத்திய பரவசத்தின் சாயலையும் “அச்சுதா, அமரரேறே..” என்று நாள்முழுக்க வாயார அழைக்கிற சுவையொன்றே போதும், இந்திர உலகத்தையே ஆளுகிற பேறுகூட இதற்கு ஈடுஇணையில்லை என்று சொல்கிற தொண்டரடிப்பொடியாழ்வாரின்
பரவசத்தின் சாயலையும் அக்கமகாதேவியின் வரிகளிலும் கண்டடையமுடியும்.
(அக்கமகாதேவி வசனங்கள்- மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, மதுமிதா, திரிசக்தி பதிப்பகம்,
56/21, முதல் அவென்யு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. விலைரூ.85.)
( 06.09.2010 சொல்வனம்
இணைய இதழில் பிரசுரமான கட்டுரை )