Home

Sunday, 16 May 2021

துரையனார் அடிகள் : மனசாட்சியின் பாதை - கட்டுரை

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்ற ஆங்கில அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியது. 1906இல் ஆப்பிரிக்காவில் ஆசியர்களின் இருப்பை உயிர்நிலைகளை ஆழமாக அரித்துக் கொல்லும் புற்றுநோய்க்குச் சமமான ஒன்றாக ஒப்பிட்டு தம் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டினார் ஜெனரல் ஸ்மட்ஸ். அவர் கொண்டுவர நினைத்த அவசரச் சட்டத்தின் நகல் ட்ரான்ஸ்வால் அரசாங்க கெஜட்டில் பிரசுரமானது. தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியரின் வாழ்க்கையை அது கேள்விக்குறியாக்கியது. அந்த நகல் சட்டசபையால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகாதபடி அரசின் முயற்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சத்தியாகிரக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார் காந்தியடிகள்.

அரசரை நேரிடையாகச் சந்தித்து இந்தியர்களின் துயரத்தைத் தெரிவிப்பதற்காக காந்தியடிகள் இங்கிலாந்துக்கு சென்று திரும்பினார். தென்னாப்பிரிக்காவுக்கு கப்பலில் திரும்பும் வழியில் அரசர் அலுவலகத்திலிருந்து ஆசியச்சட்டத்துக்கு அரசர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குறிப்புடன் காந்தியடிகளுக்கு ஒரு தந்தி வந்தது. அக்கணத்தில் அது மகிழ்ச்சியை அளித்தாலும் அது கரைக்குத் திரும்பிய நேரத்தில் கரைந்துபோனது. சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத அரசர், டிரான்ஸ்வால் பகுதியை சுயேச்சையாக இயங்கும் தகுதியுள்ள ஒரு பகுதியாக மறைமுகமாக அறிவித்துவிட்டார். அதன் மூலம் தன் பகுதிக்கான சட்டதிட்டங்களை அரசரின் கவனத்துக்குக் கொண்டுவராமலேயே நிறைவேற்றிக்கொள்ளும் அதிகாரம் கொண்டவர்களாக மாறினர் டிரான்ஸ்வால் அதிபர்கள்.

அரசரின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஆசியப் பதிவுச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கறுப்புச்சட்டத்தை  காந்தியடிகள் எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை முடிந்து அவர் விடுதலைபெறும் தருணத்தில் இந்தியர் அனைவரும் தாமாக முன்வந்து பதிவுசெய்து உரிமைச்சீட்டு பெற்றுக்கொண்டால் இந்தியர்களுக்குப் பிடிக்காத ஆசியச்சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஒரு சமரசத்திட்டத்தை முன்வைத்தார் ஸ்மட்ஸ். சத்தியாகிரகத்தின் வலிமையை உலகத்துக்கு உணர்த்த இதை ஒரு நல்ல தருணமாகக் கருதினார் காந்தியடிகள். ஏற்றுக்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் விதியை மீறுபவரை உலகமே உற்றுப் பார்க்கும்.  யார் மீது தவறு என்பதை உலகோர் அப்போது அறிவார்கள் என்று கருதினார்.

அதைத் தொடர்ந்து அனைவரும் தாமாகவே முன்வந்து பதிவு செய்து உரிமைச்சீட்டைப் பெற்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக தன் ஒப்பந்தச்சொல்லை மீறி கறுப்புச்சட்டத்தை நிறைவேற்றினார் ஜெனரல். அந்த மீறலையும் வஞ்சனையையும் உலகுக்கு அறிவிப்பதற்காக 16.08.1908 அன்று ஹமீதியா மசூதியைச் சேர்ந்த மைதானத்தில் அனைவரும் கூடினர். அந்தப் பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். அவருக்கு அருகிலேயே நெருப்பு எரியும் கொப்பரை வைக்கப்பட்டிருந்தது. அன்றைய கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர் பங்கேற்றனர். அவர்களுடைய பதிவட்டைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தீயில் வீசப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பதினேழு வயது இளைஞரொருவரும் காந்தியடிகளின் உரையால் ஊக்கமுற்று தன் பதிவுச்சீட்டை நெருப்பிலிட்டு பொசுக்கினார்.

அந்த இளைஞர் எளிய வணிகர். பெரிய சந்தையில் மொத்த விலைக்கு சரக்குகளை வாங்கிவந்து சில்லறை வணிகர்களிடம் குறைந்த இலாபத்துடன் விற்பவர். தமிழார்வம் கொண்டவர். அப்பாசாமி நாயகர் என்பவரிடம் முறையாக தமிழ்ப்பயிற்சியும். இரகுநாத முதலியார் என்பவர் வழியாக அரசியல் பயிற்சியும் பெற்றவர்.  பதிவுச்சீட்டை எரித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற அவர் இரவு முழுதும் உறங்கவில்லை. காந்தியடிகளின் குரலே தம் நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதை உணர்ந்தார். உரிமைச்சீட்டு இல்லாதவர்கள் என அதிகாரிகள் தேடி வந்து கைது செய்வதற்கு முன்னால் உரிமைச்சீட்டை எரித்துவிட்டேன் என ஒவ்வொருவரும் தாமாகவே சென்று கைதாவது கண்ணியமான செயலாகும் என்று உரைத்த காந்தியடிகளின் சொல் அவரை முன்னோக்கிச் செலுத்தும் விசையாக மாறியது.

அடுத்த நாள் காலையில் அந்த இளைஞர் நீதிமன்றத்துக்குச் சென்று கைதானார். உரிமைச்சீட்டை எரித்த உண்மையை நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிபதி அந்த இளைஞருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை வழங்கினார். நீதிமன்றத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் இருந்த டீப்க்ளூஃப் சிறைச்சாலைக்கு கையில் விலங்கிட்டு பிணைக்கப்பட்ட நிலையில் நடக்கவைத்து அழைத்துச் செல்லப்பட்டார் அந்த இளைஞர். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு சத்தியாகிரகிக்கே உரிய நிமிர்வுடன் ஏற்றுக்கொண்டு நடந்துசென்றார் அவர். அந்த இளைஞரின் பெயர் துரைசாமி.

துரைசாமி சிறைப்பட்ட சில நாட்களிலேயே காந்தியடிகளும் பிற முன்னணித் தொண்டர்களும் தண்டனை பெற்று அதே சிறைக்கு வந்து சேர்ந்தார்கள். காந்தியடிகளுடன் உரையாடவும் பழகவும் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் துரைசாமி.  ஒருநாள் உணவு இடைவேளையில் அனைவருக்கும் சோளக்கஞ்சியும் ரொட்டியும் கொடுக்கப்பட்டது. அனைவரும் அவற்றை உண்ணத் தொடங்கிய நேரத்தில் ஏதோ ஒரு செய்தியைக் குறித்து உரையாடும்பொருட்டு சிறை அதிகாரியின் அறைக்கு அவசரமாகச் சென்றார் காந்தியடிகள். திரும்பி வந்த சமயத்தில் அவருடைய அறையில் கஞ்சி மட்டுமே இருந்தது. ரொட்டியைக் காணவில்லை. நடந்த செய்தியை யாரிடமும் சொல்லாமல் காந்தியடிகள் அமைதியாக கஞ்சியை மட்டும் அருந்திவிட்டு பசியைத் தணித்துக்கொண்டார். அடுத்தநாள் மாலையில் சத்தியாகிரகிகளிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோது நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, இத்தகையை செயலை யாருமே செய்யக் கூடாது என்றும் இந்தியரைப்பற்றி இழிவாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை சிறையதிகாரிக்கு நாமே வழங்கிவிடக் கூடாது என்றும் நயம்பட உரைத்தார். அவர் உணவை எடுத்த குற்றவாளியும் அக்கூட்டத்தில் இருந்தார். காந்தியடிகளின் உரையைக் கேட்டு மனம் வருந்தி எழுந்து நின்று அனைவருடைய முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டார். சத்தியம், நேர்மை சார்ந்து காந்தியடிகள் சிந்திக்கும் விதம் இளைஞரான துரைசாமியை பெரிதும் கவர்ந்தது. எஞ்சிய தம் வாழ்நாள் முழுதும் அக்கொள்கைகளை தாமும் கடைபிடிக்கவேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டார்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு சிறிது காலமே ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தார் துரைசாமி. 1912இல் தாயாரை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையில் சில ஆண்டுகள் தங்கி தமிழ்மொழியை இன்னும் ஆழமாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிவரலாம் என முடிவு செய்து கப்பலேறினார். ஏறத்தாழ ஒன்றரை மாத பயணத்துக்குப் பிறகு அம்மாவும் மகனும் கொழும்பு வழியாக தூத்துக்குடிக்கு வந்து பிறகு புகைவண்டி பிடித்து சென்னைக்கு வந்தனர். அவருக்கு மறைமலையடிகளிடம் தமிழ் கற்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவர் சென்னைக்கு வந்த நேரத்தில் அடிகள் ஊரில் இல்லை. காசிக்குச் சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் அவரும் தன் தாயாரை அழைத்துக்கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் உள்ள கோவில்களுக்குப் பயணம் செய்து திரும்பினார்.

திரும்பி வந்ததும் மறைமலையடிகளைச் சந்தித்து இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தொடங்கினார். அவருடைய தமிழார்வத்தின் காரணமாக அவர் துரையனார் என்றே அழைக்கப்பட்டார். ஆசிரியருக்குப் பிடித்த மாணவராகவே அவர் விளங்கினார். ஆயினும் ஒருசில ஆண்டுகளிலேயே இருவருக்கிடையில் மனக்கசப்பு உருவானது. அதற்குப் பிறகு துரைசாமிக்கு அந்தத் தொடர்பை நீட்டிக்க விருப்பமில்லை. அந்த இடத்திலிருந்து விலகி ஏதோ வேகத்தில் கும்பகோணத்துக்குச் சென்றார். நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி, சுவாமிமலையில் ஓர் இயந்திரச்சாலையை வாங்கி நடத்தத் தொடங்கினார். நண்பர்கள் அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தனர்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி சபர்மதியில் ஆசிரமம் அமைத்து தேசமெங்கும் பயணம் செய்யத் தொடங்கிய நேரம் அது. துரையனாருக்கு உடனடியாக சபர்மதிக்குச் சென்று காந்தியடிகளுடன் இணைந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் உந்தியது. ஆயினும் வயது முதிர்ந்த தாயாரையும் இளம் மனைவியையும் விட்டுப் பிரிய முடியாமல் இருந்த இடத்திலிருந்தே தம்மால் முடிந்த அளவில் தொண்டாற்றுவது என முடிவெடுத்தார். உடனடியாக சுவாமிமலையில் காந்தி வாசகசாலை என்று ஒரு படிப்பகத்தைத் தொடங்கி, அங்கே செய்தித்தாட்களையும் இதழ்களையும் வாங்கி எந்த வித்தியாசமுமின்றி ஊரார் அனைவரும் வந்து படிக்க வழிவகுத்தார். தொடக்கத்தில் ஊரிலிருந்த எல்லாத் தெருக்களிலிருந்தும் அனைவரும் வாசக சாலையைத் தேடி வந்து உற்சாகமாகப் படித்தனர். ஆனால் மெல்ல மெல்ல சாதிவேறுபாட்டை பெரிதுபடுத்திப் பேசி வாசகசாலைக்கு வருவோர் மனத்தை சிலர் கலைக்க முயற்சி செய்தனர். ஆனால் தக்க சமயத்தில் தலையிட்டு, வாசகசாலையைக் காப்பாற்றி அது தொடர்ந்து நிகழும்படி செய்தார். வேறொரு நண்பர் உதவியால் கும்பகோணத்திலும் அதே பெயரில் இன்னொரு வாசகசாலையை உருவாக்கினார். வாசக நண்பர்கள் பெருகத் தொடங்கியதும், அவர்கள் அரசியலைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் கூட்டங்கள் நடத்தினார்.  துரையனாரும் சுவாமிமலையைச் சேர்ந்த காங்கிரஸ்காரரான ஆராவமுது ஐயங்காரும் மக்களிடையில் உரையாற்றினர்.

இந்திய சுயராஜ்ஜியம் எப்படி செயல்படவேண்டும் என இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாகவே தெளிவானதொரு செயல்திட்டத்தை வகுத்துவைத்திருந்தார் காந்தியடிகள். கிராம முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்த அவருடைய திட்டத்தில் மதுவிலக்கும் தீண்டாமையும் முதலிடம் வகித்தன. காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாடெங்கும் மதுவிலக்கு இயக்கம் நடத்தவேண்டும் என தீர்மானித்தது காங்கிரஸ். அதையொட்டி துரையனார் தொண்டர்களுடன் இணைந்து சுவாமிமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கள்ளுக்கடைகள் முன்னிலையில் மறியல் நடத்தினார். நண்பர்கள் உதவியுடன் மக்கள் சேருமிடங்களுக்குச் சென்று மது அருந்துவதால் உண்டாகும் தீமைகளை எடுத்துரைப்பதையும் அச்சடித்த துண்டறிக்கைகளை வழங்குவதையும் செய்துவந்தார்.

அவருடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்துவந்த காவல்துறையினர் ஒருநாள் துரையனாருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாரண்டு நோட்டீஸ்களைக் கொடுத்து மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்திக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பேயே துரையனாரோடு சென்ற நண்பர்கள் மன்னிப்பு கேட்டு விடுதலை பெற்று வீட்டுக்குச் சென்றுவிட்டனர். “நான் மன்னிப்பு கேட்பது என்பது காங்கிரஸ் கட்சியே மன்னிப்பு கேட்பதுபோலாகும். எனக்கு எந்த மன்னிப்பும் வேண்டாம். நீங்கள் என்மீது வழக்குத் தொடரலாம்என்று மன உறுதியுடன் சொன்னார் துரையனார். அவர் மீது மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. மது அருந்திக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கடையைக் கொளுத்திவிடுவதாக கடைக்காரரை மிரட்டியதாகவும் பொய்யாகக் குற்றம் சுமத்தினர். அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே நல்ல வேளையாக பழைய ஆட்சித்தலைவர் மாறுதல் பெற்றுச் சென்றுவிட புதிய ஆட்சித்தலைவர் வந்தார். முதல் விசாரணையிலேயே அவர் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

எளிமையான வகையில் கதராடைகளை அணிவதையும் அயல்நாட்டுத்துணிகளை விலக்குவதையும் வலியுறுத்திய காந்தியடிகள், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நூல்நூற்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். குறைந்தபட்சமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு சிட்டம் நூல் நூற்கவேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. துரையனாருக்கும் இக்கொள்கையில் உடன்பாடு இருந்தது. அவரும் காலமெல்லாம் கதராடை அணிந்தவரே. ஆனால் கை ராட்டையில் நூல் நூற்கும் விஷயத்தில் மட்டும் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. உற்பத்தித்திறனை அதிகரிக்கும் பொருட்டு கைராட்டைக்குப் பதிலாக இயந்திரத்தால் விசையுடன் இயங்கும் ராட்டையைப் பயன்படுத்தலாம் என அவர் காந்தியடிகளுக்கு கடிதம் வழியாக எழுதித் தெரிவித்தார். தன் எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஓர் இராட்டையை உருவாக்கவும் செய்தார் துரையனார். ஆனால் காந்தியடிகள் அதை ஏற்கவில்லை. கதர் என்பது தமக்குரிய ஆடைத்தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அப்பால் தேசத்தின் கெளரவத்தை வெளிப்படுத்தும் உருவகமாக நிற்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் உற்பத்தி என்பது மக்களால் மக்கள் தேவைக்கு செய்யப்படுவதே தவிர, இலாபநோக்கத்துடன் இணைந்த அதிக உற்பத்தியை இலக்காகக் கொள்வதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

1922இல் சுவாமிமலைக்கு வருகை தந்த ..சி. அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து தன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொண்டார் துரையனார். அவருடைய சொற்பொழிவைக் கேட்கும் ஆவலில் கோவில் வளாகத்தில் அவசரமாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. துரையனாரே அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி கோவிலின் நுழைவாயிலில் நாடார்களும் பரியாரிகளும் வண்ணார்களும் கோவிலுக்குள் நுழையக்கூடாதுஎன எழுதிவைக்கப்பட்டிருந்த அறிவிப்பை வேதனையுடன் சுட்டிக்காட்டி கண்டித்துப் பேசினார். ..சி.யும் தம் உரையில் அந்த அறிவிப்பை வன்மையாகக் கண்டித்தார். சாதி வேற்றுமையைப் பாராட்டும் இடத்தில் தெய்வம் இருக்காது எனவும் தெய்வத்தின் முன்னிலையில் அனைவரையும் ஒன்றெனக் கருதி பழக வேண்டும் எனவும் தொண்டர்களிடையில் உரையாற்றினார். அன்று அவருடைய உரை ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நீண்டது.

தீண்டாமை ஒழிப்பை தொடக்கத்திலிருந்தே வலியுறுத்திவந்தவர் காந்தியடிகள். காங்கிரஸ் இயக்கமும் அதே கருத்தையே கொண்டிருந்தது. ஆயினும் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மைச் சுற்றி முன்னணிப்பொறுப்புகளில் இருந்த பலரும் தீண்டாமை தொடர்பாக மாற்றுக்கருத்து உடையவர்களாக இருப்பதைப் பார்த்து மனம் வருந்தினார் துரையனார். அவர்களைப்போல கண்டும் காணாததுபோல செல்ல மனமின்றி தீண்டாமைக் கொடுமையைப் பார்த்த இடத்திலேயே கண்டித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் துரையனார். தீண்டாமையை அவர் வெறுத்தார். சாதி வேறுபாடுகளைக் களைந்து ஒவ்வொருவரும் உடன்பிறந்தவரைப்போல பழகவேண்டும் என்பதே துரையனாரின் எண்ணமாக இருந்தது.

நீண்ட காலம் அவரால் சுவாமிமலையில் தங்கியிருக்கமுடியவில்லை. இயந்திரச்சாலை தொழிலில் தன்னைச் சுற்றியிருந்தவர்களே தன்னை வஞ்சித்துவிட்டதை அவரால் தாங்கிக்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்று கும்பகோணத்தில் குடியேறினார். அங்கே தமக்கென தனியாக ஒரு இயந்திரச்சாலையை அமைத்து தொழிலைத் தொடங்கினார்.

1928இல் சைமன் குழு இந்தியாவுக்கு வந்தது. அக்குழுவுக்கு இந்தியர்கள் ஒத்துழைக்கலாகாது என காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது. அதற்கிணங்க 03.02.1928 அன்று கும்பகோணம் பந்தடித்திடலில் ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தினார் துரையனார்.  அந்தத் திடலுக்கு எதிரில் ஒரு திரையரங்கம் இருந்தது. அந்த அரங்கத்துக்குச் சொந்தக்காரர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்று ஒருநாள் திரையரங்கை மூடுவதாக வாக்களித்திருந்தனர். ஆனால் தம் வாக்குறுதியை மீறி அவர்கள் திரையரங்கத்தை திறந்ததைக் கண்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமாகக் கூடிச் சென்று கண்டனக்குரல் எழுப்பினர். அதைப் பார்த்த துரையனார் இரு தரப்பினரிடமும் பேசி பிரச்சினையை முடித்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அக்கணம் எதிர்பாராத விதமாக அங்கு வந்து குவிந்த காவல் படையினர் துரையனாரே எல்லாவற்றுக்கும் காரணம் என முடிவுகட்டி, அவரைத் தாக்கினர். அடித்தது மட்டுமல்லாமல் அவரைக் கைது செய்து அங்கேயே நள்ளிரவு வரைக்கும் நிற்கவைத்தனர். அதற்குப் பிறகே அவரை விடுவித்தனர்.

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்துக்கான தண்டி யாத்திரையை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதையொட்டி விவாதிப்பதற்கான கூட்டமொன்று இராஜாஜியின் தலைமையில் சீர்காழியில் 12.03.1930 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட துரையனார் கும்பகோணம் தொண்டர்களுடன் சேர்ந்துவந்து சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். கும்பகோணத்துக்குத் திரும்பிய பிறகே கட்சிப்பொறுப்பில் இருந்த சிலர் சத்தியாகிரகத்தில் ஈடுபட விரும்பவில்லை என்பதையும் சிலர் மட்டுமே ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். நகரச்செயலராக இருந்தபோதும் கூட உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆதரிப்பது தொடர்பாக எழுதப்பட்ட அறிக்கையில் துரையனார் பெயர் அச்சிடப்படக் கூடாது என்று மூத்த கட்சிக்காரர்கள் நிபந்தனை விதித்ததையும் அவர் ஏற்றுக்கொண்டார். எந்நிலையிலும் மனம் சோர்வுற்றுவிடாமல், விருப்பம் உள்ளவர்களை மட்டும் இணைத்து அவர்களுடன் சத்தியாகிரக யாத்திரையில் கலந்துகொண்டார் துரையனார்.

பிள்ளைப்பேறுக்காக தாய்வீட்டுக்குச் சென்றிருந்த துரையனாரின் மனைவிக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது.  இரவோடு இரவாக பயணம் செய்து மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு திரும்பிவந்து சத்தியாகிரகத்தில் இணைந்துகொண்டார் அவர். வேதாரண்யத்தில்  வேதரத்தினம் பிள்ளை, அவினாசிலிங்கம் செட்டியார், ஹரிஹரசர்மா, மட்டப்பாறை வெங்கடராம ஐயர், மன்னார்குடி மகாலிங்கம் பிள்ளை போன்றோருடன்  துரையனாரும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். காந்தியடிகளுக்கும் இர்வினுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் அவர்கள் அனைவரும் அந்தச் சிறைச்சாலையிலேயே கழித்தனர்.

சிறைவாசம் முடிந்து ஊருக்குத் திரும்பிய பிறகு நடைபெற்ற தேர்தலில் கும்பகோணம் நகராட்சி காங்கிரஸ் கிளையின் செயலாளராக துரையனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஇர்வின் ஒப்பந்தப்படி கள்ளுக்கடைகள் முன்பும் அயல்நாட்டு ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னிலையிலும் மறியல் செய்யும் உரிமையை தொண்டர்கள் பெற்றனர். ஏறத்தாழ நூற்றைம்பது தொண்டர்களைத் திரட்டிய துரையனார் காவேரி ஆறு புதுப்பாலத்தின் தென்கரையில் வாடகைக்கு எடுத்த ஒரு மண்டபத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். காலையிலும் மாலையிலும் தொண்டர்கள் மண்டபத்திலிருந்து தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாகச் சென்று கள்ளுக்கடைகள் முன்னிலையிலும் அயல்நாட்டுச் சாமான்களை விற்பனை செய்யும் கடைகள் முன்னிலையிலும் நின்று ஒவ்வொரு நாளும் மறியல் செய்தனர்.

வட்டமேசை மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக 1932இல் இங்கிலாந்துக்குச் சென்ற காந்தியடிகள் தோல்வியுடன் திரும்பி வந்தார். காங்கிரஸை சட்டத்துக்கு முரணான இயக்கமென அறிவித்த ஆங்கில அரசு காந்தியடிகளையும் மற்ற தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இந்தியாவெங்கும் சட்டமறுப்பு இயக்கம் நடத்தவேண்டும் என  அறிவித்தது. கும்பகோணம் காங்கிரஸ் கிளையும் அந்த இயக்கத்தில் இணைந்தது. எவ்வகையிலும் அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என்றும் அரசு வேலைகளில் யாரும் சேரக்கூடாது என்றும் சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் உடனடியாக பதவிகளைத் துறந்து வெளியேறி காங்கிரஸ் இயக்கத்தின் பின்னால் திரளவேண்டுமென்றும் பலவிதமான கோரிக்கைகளைக் கொண்ட துண்டறிக்கையை எழுதி அச்சிடச் செய்து பொதுமக்களிடையில் விநியோகித்த குற்றத்துக்காக துரையனாரை 02.02.1932 அன்று காவல்துறை கைதுசெய்தது. இரண்டரை ஆண்டுக்காலம் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்காலத்தை அவர் திருச்சி சிறையிலும் மதுரை சிறையிலும் கழித்தார்.

துரையனார் சிறையிலிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மகப்பேற்றின் போது உருவான சில சிக்கல்களால் அவருடைய இளைய துணைவியார் துளவம்மாள் இயற்கையெய்தினார். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதல பெற்று ஊருக்குச் செல்லலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இயக்கத்துக்கு இழுக்கு சேர்க்கும் என்பதால் துரையனார் மன்னிப்புக்கடிதம் அளிக்க மறுத்துவிட்டார். தண்டனைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த பிறகே அவர் விடுதலை பெற்று வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் சென்ற நேரத்தில் வீடு பூட்டிக் கிடந்தது.  தாயாரையும் குழந்தைகளையும் துணைவியாரையும் காணாமல் அவர் மனம் நடுங்கியது. அனைவரும் மனைவியின் பிறந்த வீட்டில் தங்கியிருப்பதாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் தகவல் சொன்னார். உடனே வண்டி பிடித்து அந்த ஊருக்குச் சென்றார். அனைவரையும் கண்ட பிறகே அவர் மனம் அமைதியுற்றது. சில நாட்களுக்குப் பிறகு அனைவரையும் அழைத்துக்கொண்டு கும்பகோணத்துக்குத் திரும்பினார்.

இயக்கச் செயல்பாடுகளின் காரணமாகவும் சிறைவாசத்தின் காரணமாகவும் துரையனாரால் தன் தொழிலை சரிவர கவனிக்க இயலாமல் போனது. இயந்திரச்சாலை பணியாளர்கள் பொறுப்பிலேயே இருந்தது. அவர்கள் அனைவரும் கூடி துரையனாரை வஞ்சித்தனர். இயந்திரச்சாலையின் பெயரால் பல இடங்களில் கடன் வாங்கிவிட்டு, அந்தச் சுமையை துரையனாரின் மேல் ஏற்றிவைத்துவிட்டு அனைவரும் விலகிவிட்டனர். பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளான துரையனார் இயந்திரச்சாலையை வந்த விலைக்கு விற்று பணமாக்கி கடன்களை அடைத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன்பாக அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதும் துணையாக இருந்த அவருடைய அன்னையார் அடுத்த ஓராண்டிலேயே உடல்நலம் குன்றி மறைந்துபோனார்.

15.02.1934 அன்று தமிழகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் கும்பகோணத்துக்கு வந்தார். மோதிலால் தெருவில் உள்ள சதாசிவ ஐயருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். அவர் அன்று இரு கூட்டங்களில் கலந்துகொண்டார். இரண்டு இடங்களிலும் தாழ்த்தப்பட்டோர் ஆலயநுழைவையொட்டியும் தீண்டாமையை கைவிடும்படியும் காந்தியடிகள் சுருக்கமாகப் பேசினார்.

1938இல் கும்பகோணம் நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற துரையனார் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பாக நகராட்சித்தலைவர் முன்னிலையிலும் ஆட்சியர் முன்னிலையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்வது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. மற்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கும் தருணத்தில் அவர்கள் வாசித்த வாசகங்களை உற்றுக் கேட்ட துரையனார் அதிர்ச்சிக்குள்ளானார். அது உண்மையில் இராஜ விசுவாசப் பிரமாணம். இங்கிலாந்தில் இருக்கும் அரசருக்கு விசுவாசமாக பணியாற்றுவதாக அளிக்கும் வாக்குறுதி. அதை வாசிக்க துரையனாருக்கு உடன்பாடில்லை. தன்னால் அந்த உறுதிமொழியை வாசிக்க முடியாது என்று தலைவரிடம் தெரிவித்தார். எப்போதும் தான் மனசாட்சியையும் தெய்வசாட்சியையுமே முக்கியமாக நினைப்பவன் என்பதால், அவற்றை முன்வைத்து தன் உறுதிமொழியை வாசித்தார்.  ஏறத்தாழ ஒன்பதாண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றிய துரையனார் நகரத்துக்குத் தேவையான பல நன்மைகளைச் செய்தார்.

வகுப்புவாரிச்சட்டம் மாகாண அளவில் நிறைவேறியிருந்தாலும், மாகாணத்தில் பல நகராட்சிகள் அதை அமுல்படுத்தாமலேயே இருந்தனர். அச்சட்டத்தைப்பற்றி அறிந்துகொண்ட துரையனார், சென்னையிலிருந்து அச்சட்டத்தின் நகலைப் பெற்று கட்சிக்கூட்டத்தைக் கூட்டினார். வகுப்புவாரிச் சட்டத்தின் நன்மைகளைப்பற்றி எல்லா உறுப்பினர்களுக்கும் தெளிவுற எடுத்துரைத்தார். நகராட்சிக் கூட்டத்தில் ஆலோசனைக்குப் பட்டியலிடப்பபடும்அஜெண்டாவில் புதிய சட்டத்தைப்பற்றிய விவாதத்தையும் இணைத்தார். எனினும் தலைவராக இருந்தவர் அந்த விவாதத்துக்கே இடமில்லாத வகையில் நேரத்தை இழுத்து செலவாக்கிவிட்டு, அடுத்த கூட்டத்துக்கு அத்தீர்மானத்தை ஒத்திவைத்தார். அந்த ஒரு அஜெண்டாவை மட்டுமன்றி, பேருக்கு வேறு ஏதோவொரு சின்னஞ்சிறு அஜெண்டாக்களையும் இணைத்து வேறொரு நாளைக்கு ஒத்திவைத்தார். இப்படியே பல நாட்கள் பல முறைகள் நடைபெற்றன.

ஆயினும் தம் முயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்காத துரையனார் மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அவர்களுக்குத் தெளிவூட்டினார். இறுதியாக ஒருநாள் அந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. உடனடியாக, ஆளில்லாமல் இருக்கும் பதவிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, எல்லா இடங்களுக்கும் வகுப்புவாரி சட்டத்தின்படி புதிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர்

நாற்பதாண்டுகளுக்கும் மேல் நிறைவாற்றப்படாமல் கிடப்பில் இருந்த கும்பகோணம் தண்ணீர்சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் துரையனார் எடுத்த முயற்சிகளை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும்.  அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி கிடைத்து நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் நகராட்சித்தலைவரும் முதன்முதலாக அத்திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கு தொடர்ச்சியாகப் பாடுபட்டவருமான சிவசாமி உடையாரின் பெயர் சூட்டப்பட்டது. பேருந்து நிலையம், மருத்துவமனை, வாசகசாலை போன்றவை உருவாகவும் துரையனார் உள்ளார்ந்த விருப்பத்துடன் பாடுபட்டார்.

ஒருமுறை புருஷோத்தம சாஸ்திரி என்பவர் கும்பகோணம் நகரத்தின் கமிஷனராக இருந்தபோது, தெருக்களில் இட்டலி, பலகாரம்  இட்டலி, பலகாரம் முதலிய சிற்றுண்டிகளை விற்பனை செய்வதை தடைசெய்யவேண்டும் என்றொரு ஆலோசனையை நகராட்சிக்கு அனுப்பிவைத்தார். நகராட்சிக் கூட்டத்தில் பல உறுப்பினர்கள் அந்த ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தனர். துரையனார் அந்த ஆலோசனையை எதிர்த்து தெருவோர விற்பனை, அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வாழ்வாதாரமான தொழில் என்றும் வாங்குவோர், விற்போர் இருவரும் பயனடையும் நல்ல திட்டமே என்றும் பெரிய கடைகளையும் வணிகர்களையும் நோக்கி மக்களைச் செலுத்தாமல் இரு தரப்பினரும் பயன்பெறும் நல்ல வாழ்க்கைமுறையை அவசரப்பட்டு பலியிட்டுவிடக்கூடாது என்றும் பலவாறாக வாதிட்டு ஆதரவு திரட்டினார். இறுதியாக, அத்தீர்மானம் தள்ளுபடியானது.

நாடு சுதந்திரமடைந்ததும், சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்து சிறைசென்ற தியாகத்துக்காகவும் தன்னலம் கருதாத அவருடைய தொண்டுள்ளத்தைப் பாராட்டும் விதமாகவும் துரையனாருக்கு மன்னார்குடி வட்டத்தில் இடைப்பிழையூரில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டது. ஆறு பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தின் தலைவரான அவர்ருக்கு  அந்நிலத்துக்கான தேவை இருந்தபோதும், அதை தனக்கென வைத்துக்கொள்ளாமல் அதே ஊரைச் சேர்ந்த ஐந்து ஏழைக் குடும்பத்தினருக்கு இலவசமாகவே பிரித்துக் கொடுத்துவிட்டார்.

உண்மையே தெய்வம் என்றார் காந்தியடிகள். அந்தத் தெய்வத்தின் துணை ஒரு திசைகாட்டியாக இருந்து தன்னை வழிநடத்துகிறது என இளமைமுதல் ஆழமாக நம்பியவர் துரையனார். வாழ்நாள் முழுக்க தன் மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்ப்பவராகவே வாழ்ந்தார் அவர். வாழ்வில் நேர்மையையும் அகிம்சையையும் இறுதிவரைக்கும் கடைபிடித்த மாமனிதர் அவர்.

(சர்வோதயம் பேசுகிறது – மே 2021 இதழில் வெளிவந்த கட்டுரை )