என் பெயர் செல்லதுரை. பிறந்த தேதி 22.4.64. தந்தையார் பெயர் ராஜாங்கம். தாயார் பெயர் செல்லத்தாயி. தற்சமயம் இருவருமே உயிருடன் இல்லை. நான்கு வருஷத்துக்கு முன்பு தந்தையும் அடுத்து ஆறுமாத வித்தியாசத்திலேயே என் தாயாரும் என்னையும் எனக்குக்கீழ் இன்னும் இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகளையும் தவிக்கவிட்டு இறந்துவிட்டார்கள். பிரச்சினையே இந்த இடத்தில்தான் ஆரம்பம். இப்படிச் சொல்வதால் இதற்கு முன்பு பிரச்சினைகளே இல்லை என்கிற அர்த்தம் கிடையாது. உடம்போடு ஓடுகிற ரத்தம்மாதிரி எங்கள் குடும்பத்தோடு ஒட்டியது பிரச்சினை. சதாகாலமும் அது பிடுங்கித் தின்னத்தான் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் எடுத்துக்கொண்டு தங்களுக்குத் தெரியப்படுத்தவும் நியாயம் கேட்கவும் இவ்வளவு நீளமாய் மடல் எழுத முனைகிற அவசியம் கிடையாது. நான் எழுத வருவது வேறு ஒரு பிரச்சினை. என் தந்தையார் மறைவுக்குப் பின் எனக்குண்டான வாழ்க்கைப் பிரச்சினை.
என் தந்தையார், ராஜாங்கம் இந்த ஊர்
நகராட்சியில் முப்பது வருஷங்களாய்த் தெருக்கூட்டுபவராய் வேலை பார்த்து வந்தார்.
தெருக்கூட்டுநர் என்பது வெறும் உத்தியோகப் பெயர்தான் என்றாலும் தெருவைச் சுத்தம்
செய்தல், குப்பை வாருதல், தெரு ஓரங்களில் இருக்கும் மலஜலக்கழிவுகளை அள்ளுதல், சுண்ணாம்புத் தூள் தெளித்தல் இன்னபிற எழுத்துக்கு வராத உத்தியோகங்களையும் செய்தார்.
இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் யாதெனில் இந்த ஊரில் நகராட்சி
அதிகாரிகளாகவும் வார்ட் கௌன்சிலர்களாகவும் இந்த முப்பது வருஷங்களாக உத்தியோகம்
பார்த்த எல்லாப் பெரிய மனிதர்கள் வீட்டுக் கக்கூஸ்களுக்கும் சாக்கடைகளுக்கும்
சம்பளம் வாங்காத தோட்டியாக விஸ்வாசத்துடன் உழைத்தார் என்பது தான். இதை இவ்வளவு
ஆதங்கத்துடனும் தனிப்படவும் சொல்லவேண்டியதன் காரணம் என் மனக்குமறல் மட்டுமில்லை.
அதிகாரத்தின் மூலம் என் தந்தையாரின் உழைப்பை உபயோகப்படுத்திக்கொண்ட இத்தனை பெரிய
மனிதர்களில் ஒருவராவது கொஞ்சம்மிகக்கொஞ்ச அளவுக்கேனும் & முயற்சி எடுத்துக்கொண்டிருந்தாலாவது என் பிரச்சினை ரொம்ப சுலபமாய் முடிந்து போய்
இருக்கும் என்று தெரிவிக்கத்தான். ஆனால் இவர்களோ இதோ அதோ என்று சின்னப்பிள்ளைகளுக்கு
ஆட்டம் காட்டுகிற மாதிரி காட்டிய ஆட்டங்களும் அலட்சியங்களும் போலிப்
பச்சாதாபங்களும் என்னை மேலும்மேலும் குமுறத்தான் செய்ததே தவிர ஒரு பைசாவுக்குப்
பிரயோஜனம் இல்லை. அவர்கள் மட்டத்திலேயே ஆகக்கூடிய காரியம்தான். ஆனாலும் நாலு
வருஷமாய் இழுத்தடிக்கிறார்கள். இந்த இழுத்தடிப்பில் பலமிழந்து, அமைதி இழந்து, தூக்கமிழந்து, பொறுமையிழந்து, நம்பிக்கை இழந்து
கடைசி முயற்சியாக இந்தக் கடிதத்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
என் தந்தையார் தெருக் கூட்டுபவராய் இருந்தபோதிலும்கூட என்னைப் படிக்கவைப்பதில்
விருப்பம் கொண்டிருந்தார். நானும் உற்சாகமாய்ப் படித்தேன். பள்ளிக்கூடத்தில்
படிக்கும்போது நான் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய செய்தியை ஒவ்வொரு தரமும்
சொல்லும்போதெல்லாம் கண்களில் நீர் வழியும் அப்பாவுக்கு. மனசுக்குள் ஏதோ ஓர் ஊற்று
பொங்குகிற மாதிரி இருக்கும் எனக்கு. அப்பாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வேன்.
‘நம்ம ஜாதில எவனும் படிக்க
மாட்டறான்டா செல்லதொர. நம்ம வம்சத்துலயே பள்ளிக்கூடம் போவற மொத ஆளு நீதான்டா.
நல்லா படிச்சி பெரிய மனுசனாவனும்டா தெரிமா?’ என்று முதுகைத் தடவிக் கொடுத்தபடி சொல்வார். ஆனால் அவரால்கூட பள்ளிப்
படிப்புக்கு மேலே படிக்கவைக்க முடியவில்லை. வருகிற சொற்ப வருமானத்தில் குடும்பம்
நடத்துவதே பிக்கல் பிடுங்கலாக இருந்தது. அப்பாவைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லை.
விடுமுறை நாள்களில் எல்லாம் கட்டிடங்களில் சித்தாள் வேலை செய்தேன். கழனிகளில் கூலி
வேலைக்கு போனேன். சாயங்கால நேரங்களில் லாட்ஜில் வேலை செய்தேன். இப்படிக் கிடைத்த
பணத்தில்தான் தட்டுத் தடுமாறி பி.ஏ. படித்து முடித்தேன். தேர்வில் வெற்றி பெற்று
ஒரு சாக்லெட்டை நீட்டியபோது அப்பாவுக்குச் சந்தோஷத்தில் கைகால் புரியவில்லை.
அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். அந்த நிமிஷமே நான் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல்
தனது அலுவலகத்தில் வேலைசெய்கிற அதிகாரிகளில் இருந்து கௌன்சிலர்கள் வரைக்கும்
எல்லார்க்கும் என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தி ‘என் மொவன் பி.ஏ. பாஸ் பண்ணிட்டான் சார்’ என் பெருமையாய்ச் சொல்லிக் கொண்டார். ஆனாலும் இந்தப் பெருமையோடு அப்பா
அதிககாலம் உயிருடன் இல்லை. பட்டம் வாங்கிய நாலு மாசத்துக்குள் கண்ணை மூடிவிட்டார்.
அப்பாவின் மறைவுக்குப் பிறகு நகராட்சியின் அதிகாரியைப் பார்த்து என் குடும்ப
நிலையை விளக்கிச் சொன்னேன். அவரும் மிகவும் இரக்கப்பட்டவர்போலப் பேசினார். முப்பது
வருஷம் உத்தியோகம் செய்த ஒருவர் மகன் என்கிறதாலும், ஆதரவற்ற குடும்பத்துக்கு உதவி என்கிற மாதிரியும் வீதிகளில் இடம் இல்லாவிட்டால்
கூட தனி மனித இரக்கம் என்கிற சூழலுடனாவது எனக்கொரு வேலையை அலுவலகத்தில் தருமாறு
மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். உடனே அவர் விதிகளிலேயே அதற்கு இடம் இருக்கிறது
என்று என்னை ஆறதல்படுத்தி அலுவலகத்துக்கு வந்து ஒரு விண்ணப்பம் எழுதித் தந்து
போகச் சொன்னார். அந்த விண்ணப்பத்தை முன் முன் வைத்துத் தான் அடுத்தமாதம்
நடக்கவிருக்கும் மாதாந்திரக் கூட்டத்தில் விவாதிப்பதாகவும் கவுன்சிலர்களின்
ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றிவிடுவது சுலபம் என்றும் சொன்னார். புதிய ஆள்எடுப்புத்
தடுப்புச்சட்டம் இருப்பதால் நேரிடையாய் ஆளை வேலைக்கமர்த்தும் அதிகாரம் தனக்கு
இல்லையென்றம் இத்தீர்மானத்தைச் சென்னையில் இருக்கும் அலுவலகத்துக்கு அனுப்பி
ஒப்புதல் பெற்று வேலைபோட்டுத் தரமுடியும் என்றும் சொன்னார். அவர் சொன்ன தோரணையும்
மென்மையான வார்த்தைகளும் எனக்குள் மிகவும் நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது. நானும்
உடனடியாய் நடவடிக்கைகளில் இறங்கினேன். அப்பாவின் மறைவுச்சான்றிதழைப் பெற்று அதன்
நகலை எனது வேலை கோரும் விண்ணப்பத்தோடு இணைத்து அலுவலகத்தில் சேர்ப்பித்தேன்.
இவ்விண்ணப்பம் சேர்ப்பித்த தேதி 10.04.84. இவ்விண்ணப்பம் கொடுத்த அன்று மாலையே எல்லாக் கவுன்சிலர்களையும் தனிப்படப்
பார்த்து விண்ணப்பம் தந்திருக்கிற விஷயத்தைச் சொல்லி, தீர்மானம் நிறைவேற தன்னாலான உதவிசெய்யும்படி கேட்டுக்கொண்டேன். எல்லாரும்
ஒப்புக்கொண்ட பிறகு வீட்டுக்குத் திரும்பி அன்றைய இரவு எனக்குள் பொங்கிய பிள்ளைச்
சந்தோஷமும் அமைதியும் அற்புதமானவை. இந்தச் சமூகத்தில் எதார்த்தச்சக்கரப் பல்லின்
கூர்மை பற்றிக் கொஞ்சம்கூட ஞானமற்ற ஒரு சிறுவனின் சந்தோஷம்தான் எவ்வளவு
அப்பழுக்கற்றது. அன்று இரவு நான் அந்தச் சந்தோஷத்தைப் பூரணமாய் அனுபவித்தேன்.
சாப்பாடு கூட இறங்காத, சந்தோஷம். ஓடி ஆடி
வேலை செய்கிற மாதிரி கனவு. என்னைப்போலவே என் தம்பிகளையும் என் தங்கைகளையும்
படிக்கவைக்கிற கனவு. அவர்களும் பட்டதாரிகளாகி வருகிற கனவு. ஆனாலும் கனவுகளைப்
புசித்து மட்டுமே உயிர் வாழ்ந்துவிட முடியுமா என்ன?
நகராட்சி வேலை என்பது கனவாக இருந்தாலும் எதார்த்தத்தில் வருமானத்துக்கு வேறு
வேலை தேட வேண்டியதாய் இருந்தது. முன்பு ஒரு சில மணி நேரங்களுக்கு வேலை
பார்த்துவந்த லாட்ஜிலேயே முழு நேரப்பணியாளனாய்ச் சேர்ந்தேன். பெயர்தான் மானேஜர்
பதவி. ஆனால் சம்பளம் என்னேமா மாதம் முந்நூறு ரூபாய்தான். இதற்கே காலையில்
ஏழுமணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் வேலைசெய்யவேண்டும். கொஞ்ச நாள்கள்தானே, சமாளித்துக் கொள்ளலாம் என்று சேர்ந்தேன்.
எதிர்பார்த்தபடியே என் விண்ணப்பம் மாதாந்திரக் கூட்டத்தில் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேறி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டது.
மேலிடத்துக்குப் போன நாளில் இருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் என்
நம்பிக்கை வளர்ந்து கொண்டே போனது. ஆனாலும் இரண்டு மாதங்களாய் எந்தப் பதிலும்
இல்லை. எனக்கு வருத்தம் பொங்கியது. ஒருநாள் என் துக்கத்தை அடக்கமாட்டாதவனாய்
அதிகாரியைச் சந்திக்கப் போனேன். அதிகாரி மீண்டும் எனக்குச் சமாதானம் சொல்லி பதில்
வராததன் காரணம் தனக்கும் புரியவில்லை என்றும் எதற்கும் இன்னொரு விண்ணப்பம்
தரும்படியும் அதைத் தீர்மானமாய் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முயற்சிசெய்வதாகவும்
சொன்னார். அரை நம்பிக்கையோடு நானும் இன்னொரு விண்ணப்பம் எழுதி மீண்டும் என்
தந்தையாரின் சர்வீஸ் சான்றிதழ், சிறப்புச் சான்றிதழ் நகல்களோடு இணைத்து அலுவலகத்தில் தந்துவிட்டு வந்தேன்.
இந்த நேரத்தில்தான் என் தாயாரும் எங்களை விட்டுப் பிரிந்தார். தாயுமற்ற, தந்தையுமற்ற அனாதைகளாக நின்றோம் நாங்கள். எனக்கு என் சகோதர சகோதரிகளைப்
பார்க்கப்பார்க்க அழுகை பொங்கியது. சின்னஞ்சிறிசுகளாய் இருக்கிற இவர்களை எப்படிக்
கரைசேர்ப்பது என்று துக்கம் குழைந்தது. சிறியவர்களோ அண்ணன் இருக்கிறான்
காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு மலர்ச்சியாய் இருந்தார்கள்.
முதல் கட்டமாய் என் பெரிய தங்கையைப் பள்ளியில் இருந்து நிறுத்த
வேண்டியதாயிற்று. அவளுக்கு வயது எட்டு தான். ஆனாலும் குடும்பப்பொறுப்பை அவள்
கையில்தான் தரவேண்டியிருந்தது. சோறாக்க, தண்ணீர்பிடிக்க, வீட்டைப் பெருக்க, துணி துவைக்க, மற்றப் பிள்ளைகளைக்
கவனித்துக்கொள்ள இவளைத்தான் நம்பவேண்டி இருந்தது. ‘பள்ளிக்கூடம் போவவேணாம். ஊட்டு வேல பாத்துக்கம்மா’ என்று சொன்னதும் அவளும் அண்ணன் செய்தால் சரியாய்த்தான் இருக்கும் என்று
சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாள்.
மீண்டும் மாதங்கள் உருண்டன. சென்னைக்கு அனுப்பி இருந்த விண்ணப்பத்துக்கு எந்த
விடையும் இல்லை. கல்லைத் தூக்கிக் கடலில் போட்டமாதிரி இருந்தது. வருத்தம் பொங்க
மீண்டும் உள்ளூர் அதிகாரியைப் பார்த்தேன். அவர் இந்த விஷயம் மிகவும் அதிர்ச்சி
தருவதாகவும் இந்த ஆள் எடுப்புத் தடைச்சட்டம் வந்து உயிரை வாங்குகிறது என்றும்
சென்னை அதிகாரியோடு அலுவலக விவகார ரீதியாக கொஞ்சம் மோதல் என்றும் அதனாலேயே இந்த
வேலை விஷயம் உட்பட எதற்காகவும் அந்த ஆளை அணுகுவதைத் தவிர்த்திருக்கிறார் என்றும் சொல்லி மீண்டும் ஒரு விண்ணப்பத்தை
எழுதித் தயாராய் வைத்துக்கொள்ளும் படியும் வருகிற வெள்ளிக்கிழமை சென்னை
அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அதிகாரி இந்த ஊருக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வருவதாகவும்
அவரைப் பயணியர் விடுதியில் பார்த்து விளக்கமாக நேரிடையாய்ச் சொல்லிக்
கொடுக்கும்படியும் தானும் துணையாக இருப்பதாயும் சொன்னார். எனக்கு மீண்டும்
நம்பிக்கை வந்தது. அவர் சொன்ன படி எல்லாவற்றையும் தயார் செய்துகொண்டு லாட்ஜ்
உரிமையாளரிடம் ஒருநாள் விடுப்புப் பெற்று பயணியர் விடுதியில் காலையில் இருந்து
தவமிருந்தேன். பிற்பகல் மூன்றுமணி சுமாருக்கு சென்னை அதிகாரி வந்து சேர்ந்தார்.
எங்கள் அதிகாரியும் கூட இருக்கக் கண்ட பிறகுதான் எனக்கு மூச்சு வந்தது. மற்ற
விஷயங்களில் மும்முரமாய் சிரத்தை எடுத்துப் பேசிய சென்னை அதிகாரி ஏறத்தாழ ஒன்றரை
மணி நேரத்துக்குப் பிறகு மிகுந்த கருணையுடன் என்னைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.
விஷயத்தைச் சொல்லி விண்ணப்பத்தைத் தந்தேன். எங்கள் அதிகாரியும் பரிந்துரை செய்தார்.
கொஞ்சமும் அக்கறையற்ற குரலில் சென்னை அதிகாரி எடுத்த எடுப்பிலேயே மாநிலம்
முழுக்கவிருந்தும் இது போன்ற விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் வருவதாகவும் பார்த்துச்
செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். எனக்கு மனசே உடைந்து
போனது. இந்த அதிகாரி வந்துபோன ஆறுமாதத்துக்குப் பிறகு கூட எதுவும் நடக்கவில்லை.
நான் மறுபடியும் எங்கள் கவுன்சிலர்களை அணுகினேன். அவர்கள் எப்படியும் மாதத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ
சென்னைக்குப்போய் வருகிறவர்கள். அலுவலகத்துப்போய் வேலை விஷயமாய் ஒரு பார்வை
பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவர்களும் மனமுவந்து பார்ப்பதாக
ஒப்புக் கொண்டார்கள். சொல்லிவிட்டுப்போனார்கள் சென்னையில் என்ன செய்தார்களோ ஏது செய்தார்களோ
தெரியவில்லை. ஊருக்குத் திரும்பியதும் ஏற்பாடு செய்துவிட்டு வந்ததாகவும் அவசியம்
நடக்கும் என்றும் சொன்னார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் துரதிர்ஷ்டவசமாக நகராட்சி அதிகாரி மாற்றலில்
போனார். நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எனக்கு வழி செய்யாமல் தான் போவது
குறித்து வருத்தம்கொள்வதாகவும் வரும் புதிய அதிகாரியிடம் இது குறித்து அணுகிக் கேட்டுக் கொள்ளுமாறும் சொன்னார் அதிகாரி. என் துக்கத்தில் இந்த அளவு
பங்கெடுத்துக் கொண்டு அவர் பேசியது எனக்கு ஆறுதலாய் இருந்தது. இதையே நம்பிக்கொண்டு
இருக்கவேண்டாம் என்றும் வங்கிக்கோ பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கோ ஆள் எடுக்கும்போது
விண்ணப்பித்து தேர்வு எழுதும்படியும் அறிவுரை சொன்னார் அதிகாரி. நானும்
தலையசைத்தேன்.
லாட்ஜில் ஐம்பது ரூபாய் சம்பளத்தை உயர்த்தினார் என் முதலாளி. நான் இந்த ஐம்பது
ரூபாயை போஸ்டல் ஆர்டர் செலவு, ஸ்டாம்ப் செலவு, போட்டிப்புத்தகங்களுக்களுக்கான
செலவு, மாதாந்திர பொதுஅறிவுப்
புத்தகச்செலவு என்பன போன்ற செலவுகளுக்கு ஒதுக்கி மீதத் தொகையை வைத்து குடும்பத்தை
ஓட்டினேன். அரசு வேலைக்கான விளம்பரம் என்பதே அரிதாக இருந்தது. வந்த ஒரு சில
விளம்பரங்களும் மிகமிகப் பெரிய உத்தியோகங்களுக்கு மிகமிகப் பெரிய
படிப்புக்காரர்களுக்கானதாக இருந்தன. என் போன்ற சாதாரண பட்டதாரிகளுக்கானதாக இல்லை.
தனியார் கம்பெனிகளின் விளம்பரத்துக்கு விண்ணப்பித்தால் இந்த லாட்ஜ்போலவே
முந்நூறுக்கும் நானூறுக்கும் வேலை செய்யக் கூப்பிட்டார்கள். முன்னூறு ரூபாய்க்கு
ஊர்விட்டு ஊர் போய் வேலை செய்வதைக் காட்டிலும் இந்த ஊரிலேயே இந்த ஓட்டை லாட்ஜிலேயே
கொத்தடிமையாய் இருப்பது வசதியாய் இருந்தது. இதற்கு மூன்று மாதம் கழித்து வங்கி
எழுத்தருக்கான விளம்பரம் ஒன்று வந்தது. உடனே விண்ணப்பம் செய்தேன்.
நகராட்சியின் புதுப் பொறுப்பேற்றிருக்கும் புதிய அதிகாரியை மிகவும்
நம்பிக்கையுடன் சந்தித்தேன். ஆனால் அந்த அதிகாரி எரிச்சலாகவும்
விட்டேற்றித்தனமாகவுமே எனக்கு விடையளித்தார். நான் சொல்வதைக் கேட்கிற அளவுக்குக்
கூட பொறுமை இல்லாதவராய் இருந்தார். எல்லையற்ற சகிப்புத்தன்மையுடன் நான்
ஆரம்பத்தில் இருந்து என் விண்ணப்பப்புராணத்தை எடுத்துச் சொன்னேன். நான்
சொல்லிமுடிக்கும் முன்பே அந்த அதிகாரி ‘அதெல்லாம் ஆவாதுய்யா, அந்த மாதிரி ஒரு ரூல்ஸும் இப்ப கெடையாது. எப்பவோ அந்த ரூல எடுத்தாச்சி, அரசாங்க உத்யோகம் இன்னா ஒங்க ஊட்டு சொத்தா தலைமுறை தலைமுறையா
அனுபவிக்கறதுக்கு. போ. போ, போய் வேற வேலயப் பாரு’ என்று கத்தரிக்கிற மாதிரி பேசினார். பயத்தில் எனக்கு நெஞ்சே நின்று விடும்போல
இருந்தது. எனக்கு ஒரே பற்றுக்கோலும் கை நழுவிப் போகிறதே என்னும்போது சொல்லமுடியாத
துயரம் சமுத்திரம்போலப் பொங்கியது. மீண்டும் நிதானத்தையும் தைரியத்தையும்
வரவழைத்துக்கொண்டு ஆதியோடந்தமாய் அப்பாவின் சர்வீஸில் இருந்து விண்ணப்பங்கள்
சென்றதுவரை சொன்னேன். கூடவே அவ்விண்ணப்பங்கள் சென்ற தேதிகளையும் சொன்னேன். அவர்
கொஞ்சநேரம் விட்டத்தையும் மேசைக் காலண்டரையும் முறைத்துப் பார்த்துவிட்டு அடுத்த
வாரம் வந்து பார்க்கும்படி சொன்னார். ஏதோ இந்தவரைக்கும் இறங்கிவந்து பேசுகிறாரே
என்று ஓரளவு தைரியத்தோடு வீடு திரும்பினேன். அன்று எக்கச்சக்கமாய் காலத்
தாமதப்படுத்தி வந்தேன் என்று முதலாளி ஏசினார். அந்த வசைச் சொற்களும் சொன்ன தோரணையும்
எழுத்தில் எழுதும் தரமன்று. ஆனாலும் இவர் தரும் மானம்கெட்ட சம்பளத்தை நம்பித்தானே
வீட்டில் நான்கு வயிறுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே கடமையுணர்ச்சிதான்
எல்லாவற்றையும் சகிக்கச் செய்தது.
அடுத்த வாரம் முதலாளியிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு அதிகாரியைப்
பார்க்கப் போனேன். அதிகாரி அன்றும் எரிபுரி என்றதான் இருந்தார். அவர் சுபாவமே
அப்படித்தான்போல. என்னைப் பார்த்ததுமே என் வந்தனத்தைக்கூட பொருட்படுத்தாமல் ‘இன்னாயா அன்னிக்கு என்னமோ ஆயிரம் கதய சொன்ன. இங்க இன்னாடான்னா ஒன் பைலே
இல்லியே’ என்றார். தலையில் இடி
இறங்கியதுபோல இருந்தது எனக்கு. அழுகையே வந்தவிட்டது. மீண்டும் பணிவுடன் நான்
இரண்டு வருஷங்களாய் இந்த வழக்கு நடக்கிறது என்றும் கண்டிப்பாய் இங்குதான் இருக்க
வேண்டும் என்றும் சொன்னேன். உடனே அந்த அதிகாரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு
வந்தது. ‘அப்பா நா
திருடிட்டன்கறியா. நா திருடனா? சொல்லு, சொல்லு’ என்று உறுமினார். எனக்கு மிகவும் பயமாய்ப் போய்விட்டது. அவரைச் சமாதானப்
படுத்துவது படாதபாடாய் இருந்தது. கூடவே தொலைந்து போன பைலை நினைத்தும் நெஞ்சு
நடுங்கியது. அறையை விட்டு வெளியே வந்த எல்லாக் குமாஸ்தாக்களிடமும் பைலைப்பற்றிச்
சொல்லி ‘பாத்தீங்களா
பாத்தீங்களா’ என்று கேட்டேன்.
எல்லாரும் பைல்கள் எல்லாம் அதிகாரியின் அறையில்தான் வைக்கப்படும் என்றும் தம்
மேசைகளுக்கு தேவை ஏற்படும்போது மாத்திரம் வந்துவிட்டுப் போகும் என்றும் சொன்னார்கள்.
இந்த அதிகாரியே அடையாளம் தெரியாமல் பைலைக் கிழித்துவிட்டு இப்படி நாடகம்
ஆடகின்றாரோ என்ற எண்ணம் சட்டென்று வந்தாலும் எப்படி நேரிடையாய் வெளிப்படுத்துவது
என்பதில் அச்சம் இருந்தது. மெல்ல உள்ளே சென்று ‘இப்ப என்ன செய்யலாம் சார். ‘‘நீங்களே ஒரு வழி சொல்லுங்க சார். இந்த உதவிய கடசிவரைக்கும் மறக்க மாட்டன்’ என்று கண்களில் நீர் தேங்கக் கெஞ்சினேன். அவரும் இரக்கப்பட்டவர்போல ‘வேணும்னா இன்னொரு அப்ளிகேஷன் எழுதிக் குடுத்துட்டுப் போ.
மேல அனுப்பிப் பாப்பம்’ என்றார். புனர் ஜென்மம் எடுத்ததுபோல் இருந்தது எனக்கு. அந்த வார்த்தைகளையே
நூற்றுக்கு நூறு சதம் வேதவாக்காக நம்பி மீண்டும் விண்ணப்பம், சான்றிதழ் நகல்கள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வந்தேன்.
லாட்ஜில் நாளுக்கு நாள் வேலைகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. பல சமயங்களில்
அங்கேயே தூங்கிக் கொள்ளவேண்டிஇருந்தது. இதனாலெல்லாம் பொருளாதார ரீதியாய் கூடுதல்
பலன் ஏதாச்சும் இருந்தாலும் சகித்துக்கொள்ளலாம். எதுவுமே இல்லாமல் சகித்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
எனது இயலாமையும் வேறு வழியற்ற தன்மையும் என் முதலாளியின் சுரண்டலுக்குச் சுலபமாகப்
பணியவைத்தன.
அடுத்த வருடத்தில் வங்கித் தேர்வுக்காக இரண்டு முறைகளும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுக்காக ஒரு முறையும் சென்னை செல்லவேண்டி இருந்தது. தேர்வுகள்
முடிந்த கையோடு ஒவ்வொரு முறையும் சென்னையில் சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்தில்
விசாரிக்கச் சென்றேன். முதல் முறை அங்கே மேலாளராக இருந்தவர் உள்ளே நுழையவே
விடவில்லை. அதட்டி மிரட்டி எப்படியாவது என்னை வெளியே தள்ளவே முயற்சி செய்தார்.
எப்படியே கடைசிவரைக்கும் விடாமல் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று மேல்
அதிகாரியின் அறைக்குள் நுழைந்து வந்தனம் சொன்னேன். மேல் அதிகாரி நான் சொல்வதைக்
கேட்கும் பொறுமை சிறிதுமற்று உதவியாளர் பக்கம் கையைக் காட்டிவிட்டுக்
குனிந்துகொண்டார். ரொம்பவும் பெருந்தன்மையுடன் கூப்பிட்டு கூடவே அழைத்தபடி வெளியே
வந்த உதவியாளர் திடுமென முகம்மாறித் திட்ட ஆரம்பித்தார். படிந்தவனா படிப்பறிவு
அற்றவனா என்று என்னைச் சந்தேகப்படுவதாய்ச் சொன்னார். நான் ஒரு வார்த்தையைத்
திணறித்திணறி எடுத்துப் பேசுவதற்குள் அந்த ஆள் ஆயிரம் சுடுசொற்கள் சொல்லிவிட்டு
போயி குமாஸ்தாகிட்ட கேளுய்யா எதுக்கு இங்க வந்து உயிர வாங்கற?’
என்று ஒருமையிலேயே சொல்லிவிட்டு மீண்டும் குளிர்சாதனம் செய்யப்பட்ட மேல்
அதிகாரியின் அறைக்குள் புகுந்து கொண்டார். அவர் போன மறுநிமிஷம் மேலாளர் வந்து தன்
பங்குக்குத் திட்டித் தீர்த்து ‘ஒன்னால எனக்குக் கெட்ட பேரு’ என்று மந்திரம்மாதிரி நூறுதரம் ஜபித்தார். நான் எனது பைல் எந்தக்
குமாஸ்தாவிடம் இருக்கும் என்று திக்குத் தெரியாமல் தடுமாறினேன்.
அந்த நீண்ட அறையில் எங்கே பார்த்தாலும் மேசை நாற்காலிகளோடு குமாஸ்தாக்களே
இருந்தார்கள். எனக்குத் தலை சுற்றுலாய் இருந்தது. வலதுபக்கக் கோடியில் சிரித்த
முகத்துடன் இருந்த ஒருவரை அணுகி மெல்லமெல்ல விஷயத்தைச் சொல்லி அந்த குமாஸ்தா யார் என்று கேட்டேன். அவர்
எல்லாவற்றையும் மெதுவாகக் கதை கேட்கிறமாதிரி கேட்ட பின்பு தான் இல்லை என்றும்
தனக்குத் தெரியாது என்று அடக்கமாகவும் பொறுமையாகவும் சொல்லிவிட்டு
குனிந்துகொண்டார். ஏறத்தாழ நான்கைந்து குமாஸ்தாக்களும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.
நானும் விடா முயற்சியாய் விசாரித்துவிசாரித்து சம்பந்தப்பட்ட குமாஸ்தாவைக்
கடைசியில் கண்டுபிடித்தேன். மீண்டும் என் புராணத்தையெல்லாம் அவரிடம் சொல்லி அவர்
பதிலுக்குக் காத்திருந்தேன். அவர் மிக அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்டிருந்துவிட்டு இன்னும் ஓர் அரைமணி நேரம் காத்திருந்தால் பைலின்
இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று சொன்னார். எனக்குக் காரியம் பெரிசாய்
இருந்தது. காலையில் இருந்து சாப்பிடாத வயிறு குபுகுபு என்ற எரிந்தாலும்
தலையசைத்துச் சம்மதம் சொன்னேன். ஏறத்தாழ சிலைமாதிரி அவர் முன்னாலேயே நின்றேன்.
குமாஸ்தா அங்கேயே டீ வரவழைத்து சிகரெட் பிடித்துவிட்டு, யார் யாருக்கோ இரண்டு
இன்லென்ட் லெட்டர்கள் எழுதி ஒட்டி நிமிர்ந்து அப்போதுதான் என்னைப் பார்ப்பது
போலவும், நான் நிற்பதே தெரியாது
போலவும் முகத்தைக் குழந்தைபோல வைத்துக்கொண்டு கேட்டான். நான் புன்சிரிப்போடு
தலையசைத்தேன். அவர் தன் கைகளில் இருந்த ஒட்டப்பட்ட லெட்டர்களை ஆட்சேபனை
இல்லையென்றால் வாசலில் இருந்த தபால்பெட்டியில் போட்டுவர முடியுமா என்று கேட்டார்.
நான் அப்படிச் செய்கிற பாக்கியம் கிட்டவே இந்த மானுட ஜென்மம் எடுத்தேன் என்கிறமாதிரி
மிக சந்தோஷமான முகபாவத்தோடு லெட்டர்களையெல்லாம் வாங்கிக் கொண்டு போய் அஞ்சல் செய்துவிட்டு
வந்தேன். வந்தபிறகு அந்தக் குமாஸ்தா என் பெயர், என் தந்தையார் பெயர், என் ஊர் பெயர் எல்லாம் கேட்டார். சொன்னேன். குமாஸ்தா தனது தலைக்குப் பின்னால்
அடுக்கு அலமாரியில் தூசி படிந்துகிடந்த எண்ணற்ற பைல்களுக்கிடையே கையை விட்டத்
துழாவித்துழாவித் தேடினார். ஐந்து நிமிடத் தேடுதலுக்குப் பிறகு பைல் கிடைத்தது.
சிரிப்புடன் அவர் பைலை உதறி மேசைமேல் போடும்போது தூசிமண்டலம் எழுந்து இருமலை
வரவழைத்தது. அப்படி இருமுவதும் தும்முவதும் அவமான விஷயமாய் எண்ணப்பட்டுவிடுமோ
என்கிற பயத்தில் எவ்வளவோ கட்டுப்பாட்டோடு இருந்தும் இரண்டு தரம் தும்மினேன் -
குமாஸ்தா தன் இருக்கைக்கு வந்து பைலைப் புரட்டி அதற்குள் இருந்த என்
விண்ணப்பங்களைக் காட்டி இதுதானே என்று வெற்றிப் புன்னகையுடன் கேட்டார். நான்
புதையலைக் கண்ட மகிழ்ச்சியுடன் ‘இதுதான் இதுதான்’ என்று கூவினேன். ‘ஏதாவது ஆர்டர் ஆயிருக்குதா?’ என்று சநதோஷத்துடன் கேட்டேன். நான் ஏதோ
கேட்கக்கூடாததைக் கேட்டதுபோல குமாஸ்தா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார். ‘இன்னம் உள்ளயே போவலப்பா’ என்று அமைதியாய்ச் சொன்னார். ‘சார், அனுப்பி ரெண்டு
வருஷத்துக்குக் கிட்டத்தட்ட ஆவுது சார்’ என்று பதறினேன். எந்தச் சலனமும் இல்லாமல் குமாஸ்தா ‘நான் இன்னா செய்யறதுப்பா? இது ஆர்டினரி பைல். இப்ப அர்ஜண்ட் மாத்திரம்தான் உள்ள போவுது. இதுக்கு இன்னும்
கொஞ்சம் நாளாவும்’ என்றார். ‘இன்னுமா? என்று அதிர்ச்சியோடு
கேட்டேன். அவர் ‘ஆமாம்பா.’ தோ பார் அந்த வரிசைல இருக்கறதெல்லாம் இதுக்கு மிந்தி வந்திச்சி. மொத்தமாத்தா
அனுப்பணும்’ என்றார். எனக்குத் தலைச்சுற்றலாய் இருந்தது. வெளிப்படுத்தமுடியாத உணர்வுகளோடு
கைவணங்கி ‘கூடிய சீக்கிரம்
பாத்து முடியுங்க’ என்று சொல்லிவிட்டுத்
திரும்பினேன்.
இது முதல்தரம் நடந்தது. அடுத்து சென்ற இரண்டு தரங்களில் கூட அந்த பைல் அதே
இடத்தில் ஆணி வைத்து அடித்து தொங்கவிட்டமாதிரி தூசு தும்புக்கு நடுவில் கிடந்தது. ‘ஆவட்டும் பாக்கலாம்’ என்று குமாஸ்தா சொன்னதையே திரும்பத்திரும்பச் சொன்னார்.
மூணாவது வருஷத்தில் நான் எழுதிய வங்கித் தேர்வுகளுக்கு முடிவு வந்திருந்தன.
எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்குக் கூப்பிட்டிருந்தார்கள். நம்பிக்கையோடு சென்று வந்தேன்.
நேர்முகத்தேர்வு வரைக்கும் வந்த தைரியத்தில் நகராட்சி வேலை பற்றி கொஞ்சம் அக்கறை
குறைந்து அசமந்தமாய் இருந்தேன். அதற்கெல்லாம் தண்டனை மாதிரி ஆறுமாசம் கழித்து நான்
நேர்முகத் தேர்வில் தகுதியடையவில்லை என்கிற செய்தி மஞ்சள் அட்டையில் வந்தது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று மனச்சகப்பாய் இருந்தது. சாப்பாடு
இறங்கவில்லை. தூக்கம் வரவில்லை. ஒரே துக்கமாய் இருந்தது. அடுத்து ஒரு
விளம்பரத்துக்காக தினமும் செய்தித்தாளைப் புரட்டுவதே மீண்டும் வேலையானது.
ஒருமுறை என் கஷ்டங்களை எல்லாம் உணர்ந்தவர் மாதிரி லாட்ஜ் முதலாளி அன்புடன்
அழைத்து ‘இந்த ஸ்டேட்
கெவர்மென்ட் வேலைங்கள்ளாம் தனியாப் போனா நடக்காதுய்யா தொர. எம்.எல்.ஏ. மூலம்
முயற்சி பண்ணு’ என்றார். எனக்கும் அதுதான் சரியான வழி என்று தோன்றியது. எங்கள் ஊர்க்குப்
பக்கத்து ஊர்தான் எம்.எல்.ஏ.க்கு. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டு
வராந்தாவில் காத்திருந்தும் பார்க்கமுடியாமல் திரும்பினேன். இதுபோல் மூன்றுதரம் போய்
ஏமாந்து திரும்பிய பிறகுதான் நான்காவது தரம் பார்க்க முடிந்தது. பார்த்து
விஷயத்தைச் சொன்னதும் ‘கண்டிப்பா செய்றேன் தம்பி. ஒங்களப்போல இளைஞர்களுக்குத்தான் அவசியம் செய்யணும். பர்ட்டிக்குலர்ஸ் குடுங்க’ என்று நம்பிக்கையுடன் கேட்டார். நானும் எல்லாம் கொடுத்துவிட்டுத்
திரும்பினேன்.
இதற்குப்பிறகு ஒரு வருஷம் நடையாய் நடந்த கதை தான். நகராட்சி அலுவலகத்துக்கு, எம்.எல்.ஏ. வீட்டுக்கு, கவுன்சிலர்கள் வீட்டுக்கு, சென்னை அலுவலகத்துக்கு என்று நடந்துநடந்து அலுத்துவிட்டது. இந்த
அனுபவங்களையெல்லாம் எழுத ஆரம்பித்தால் இந்தக் கடிதம் நீண்டுவிடலாம். ஒரே வரியில்
சுருக்கமாய்ச் சொல்லப்போனால் இந்த எல்லா இடங்களிலும் நான் ஒரு நாயைப் போல
நடத்தப்பட்டேன். குறைந்தபட்ச அளவில் மனிதன் என்கிற மரியாதைகூட துளியும் எங்கும்
கிடைக்கவில்லை. வேலையே புருஷ லட்சணம். அது இல்லாத மனிதனுக்கு மரியாதை எதற்கு
என்று நினைத்தார்கள்போலும். இந்த நடைகளும் அலைச்சல்களும் என்னை விரக்தி
மனநிலைக்குத் தள்ளிவிட்டது.
இந்த நிமிஷம், இந்த மடலை எழுதிக்
கொண்டிருக்கும் போது கூட விரக்தியாய்த்தான் இருக்கிறது. நிஜமாய்ச் சொல்லப்போனால்
இதனை எழுதுவதில் எனக்குச் சம்மதமே இல்லை. உங்கள் வளர்ப்பு, உங்கள் படிப்பு, உங்கள் சூழல், உங்கள் உத்தியோகம், உங்கள் ஆளுமை எல்லாமே இந்த எனது சூழ்நிலைகளை அர்த்தம்கெட்டதாகக் கூட நினைக்க
வைக்கும். அதற்கே நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இங்கே இருக்கிற என் பிள்ளைப்
பருவ சிநேகிதன் தினமும் எழுது எழுது என்று துளைத்தெடுக்கின்றான். நானும் பணமில்லை, அது இல்லை, இது இல்லை என்று
தட்டிக் கழிக்கத்தான் பார்த்தேன். ஆனாலும் பிடிவாதமான என் சிநேகிதன் காலையில்
பத்து ரூபாய்க்கு அஞ்சல் தலைகள், உறை, தாள்கள் எல்லாம்
தந்துவிட்டு எழுதப் பணித்துப் போய்விட்டான். மீண்டும் அவனிடம் ‘இந்தக் கடிதம் அவசியம் எழுதப்படத்தான் வேண்டுமா’ என்று கேட்டேன். அவனோ, ‘கவலப்படாத தொர. இதுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். முன்ன பார்ட்டி பாலிடிக்ஸ்.
ஆயிரத்தெட்டு சிக்கல். இப்ப ஜனாதிபதி ஆட்சிதான. நேரிடையா எல்லாமே கவர்னர் கீழ.
எல்லா வேலயும் சட்டுபுட்டுன்னு ஆவும். சும்மா எழுது. எல்லாம் ஒரு நம்பிக்கை தா’ என்று சொல்லி முதுகைத் தட்டிவிட்டுப் போய்விட்டான். இப்படிச் சொல்கிற ஒரு
நண்பனாவது எனக்கு இந்த உலகத்தில் இருக்கிறானே என்று மன அமைதியாய் இருக்கிறது. இது
போன்ற நட்பும் அனுசரணையுமான பேச்சும்தான் இத்தனை இம்சைகளுக்கிடையேயும் என்னை உயிர்
வாழவைக்கிறது. இல்லாவிட்டால் இந்நேரத்துக்கு நான் செத்த இடத்தில் புல்
முளைத்திருக்கும். சரி, போகட்டும்.
இவ்வளவுக்கப்புறமும் தங்களிடம் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம்
என் தந்தையின் சர்வீஸைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆதரவு அடிப்படையில் எனக்கு ஒரு
வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றுதான். எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் இது
பெரிய உபகாரமாய் இருக்கும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு நகல்கள்:
1. என் தந்தையார் திரு. ராஜாங்கம் அவர்களின் சர்வீஸ் சான்றிதழ்
2. என் தந்தையார் திரு. ராஜாங்கம் அவர்களின் இறப்புச் சான்றிதழ்
3. என் இளங்கலைப்படிப்பின் மூன்றாண்டு மதிப்பெண் சான்றிதழ்கள்.
4. இளங்கலைப் பட்டச் சான்றிதழ்
5. பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தின் முதல் பக்க
நகல்.
6. சாதிச் சான்றிதழ்
7. நகராட்சியில் தரப்பட்ட விண்ணப்பத்தின் நகல்கள் 10.4.84,
21.10,82 4.6.85 தேதிகளின்படி
(நண்பர் வட்டம், 1989)