Home

Tuesday, 4 May 2021

நினைவில் நிறைந்த மனிதர்கள் - கட்டுரை

  

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் கல்கி. தம் வாழ்வின் தொடக்க காலத்திலிருந்தே காந்தியக்கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் அவர். கதரணிந்தவர். திருச்செங்கோட்டில் இருந்த இராஜாஜியின் ஆசிரமத்தில் தொண்டாற்றியவர். மதுவிலக்குக் கொள்கையை தமிழகமெங்கும் பரப்பும் நோக்கத்துடன் இராஜாஜி தொடங்கிய விமோசனம் பத்திரிகைக்கு  ஆசிரியராக இருந்தவர். திரு.வி. நடத்தி வந்த .தேசபக்தன் இதழில் சிறிது காலம் பணிபுரிந்தவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு மூன்றுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டவர்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்பு நண்பர்கள் உதவியோடு அவர் கல்கி என்னும் இதழைத் தொடங்கி வாசகர்களின் கவனத்தைப் பெற்றார். எழுத்தில் மட்டுமன்றி அவர் இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய பல்துறை தொடர்பின் காரணமாக, அரசியல், அறிவியல், இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை என எல்லாத் துறைகளிலும் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.  நட்புவட்டத்துக்கு அப்பாலும் பலரை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்திருந்த பத்திரிகைத்துறைக்கு அது தேவையாக இருந்தது.  

தெரிந்தவர்களைப்பற்றியும் தெரியாதவர்களைப்பற்றியும் தம் பத்திரிகையில் கல்கி எழுதிய அனுபவக்குறிப்புகளும் அஞ்சலிக்குறிப்புகளும் ஏராளமானவை. கல்கி உயிரோடு வாழ்ந்திருந்த காலத்திலேயே யார் இந்த மனிதர்கள்? என்னும் தலைப்பில் அவையனைத்தும் நூல்வடிவம் பெற்றன. பிறகு அப்புத்தகத்துக்கு மறுபதிப்பு அமையவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கல்கியின் நூற்றாண்டின் நினைவாக வானதி பதிப்பகம் அத்தொகுதிக்கு புதியதொரு பதிப்பைக் கொண்டுவந்தது. இப்புதிய பதிப்பில் பழைய கட்டுரைகளோடு, அதே சாயலை உடைய மேலும் முப்பது கட்டுரைகள் திரட்டி இணைக்கப்பட்டிருக்கின்றன.

கல்கியின் கட்டுரைகள் சிற்சில சமயங்களில் ஒரு சிறுகதையைப் படிப்பதுபோன்ற உணர்வை அளிக்கின்றன. அவருடைய மொழியாற்றலால் ஒரு புனைகதையின் சாயல் கட்டுரைமீது தன்னிச்சையாக படிந்துவிடுகிறது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பற்றிய கட்டுரை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. 1941இல் சென்னையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரியைப்பற்றிய தகவலோடு தொடங்குகிறது அக்கட்டுரை. அந்தக் கச்சேரிக்குச் சென்றிருக்கிறார் கல்கி. மேடையில் கச்சேரி தொடங்கிவிடுகிறது. அப்போதுதான் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஒருவரைக் கவனிக்கிறார்.  அவர் முகத்தில் பரவியிருக்கும் பரவசத்தைப் பார்த்ததும் அவருக்குள் ஓர் ஆச்சரிய உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இசையில் மூழ்கியிருந்தார் அவர். உடனே தனக்கு அருகிலிருந்தவரிடம் அந்த முன்வரிசைக்காரர் யாரென விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். அவர்தான் அண்ணாமலை செட்டியார்.

ஆங்கிலேயர் அளித்த பட்டத்தை முன்னொட்டாக வைத்திருப்பதாலேயே அவர் யார் என அறிந்துகொண்ட கணத்திலிருந்தே கல்கியின் நெஞ்சுக்குள் ஒரு விலக்கம் உருவாகிவிடுகிறது. ஆனால் அவர் இசையை ஆழ்ந்து ரசித்த விதத்தை நினைத்துநினைத்து அந்த விலக்கம் மறைந்து மதிப்பு உருவாகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கும் அறிமுகம் நிகழ்கிறது. அந்த முதல் சந்திப்பிலேயே சிதம்பரத்தில் நடக்கவிருக்கும் தமிழிசை விழாவுக்கு வருமாறு கல்கிக்கு அழைப்பு விடுக்கிறார் செட்டியார். அந்தச் சிறுநேர அறிமுகம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல ஆழ்ந்த நட்பாக மலர்கிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு செட்டியார் தமிழிசைச் சங்கத்தின் சார்பாக சென்னையில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் திருநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்கிறார். அப்போது இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இராஜாஜி கவர்னராக வங்காளத்தில் பொறுப்பேற்றிருக்கிறார். விழாவைப்பற்றிய செய்தியை அவர் செய்தித்தாள் வழியாகத் தெரிந்துகொள்கிறார். நேரில் செல்ல முடியாத சூழலில்  அவ்விழாவில் ஒரு பாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தாம் ஒரு தாம்பூராவை அன்பளிப்பாக அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்து செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

வங்காளத்திலிருந்து இராஜாஜி கடிதம் எழுதியதே செட்டியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் விரும்பியபடியே போட்டி நடத்தப்பட்டு தாம்பூரா பரிசளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் போட்டியும் பரிசும் தொடரும் வகையில் ஒரு நிரந்தர வைப்பு நிதியையும் இராஜாஜியின் சார்பில் ஏற்பாடு செய்துவிடுகிறார் செட்டியார். அந்தத் தகவலையெல்லாம் ஒரு கடிதமாக எழுதுகிறார். அக்கடிதத்தின் இறுதியில் தில்லியில் கவர்னர் ஜெனரல் மாளிகைக்கு நேரிடையாக வந்து அங்கிருக்கும் இராஜாஜியைச் சந்திக்க விரும்புவதாகவும் அந்தப் பயணத்துக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் சரியான தேதியைக் குறிப்பிட முடியவில்லை என்றும் எழுதிச் சேர்க்கிறார். கையெழுத்தில் எழுதிக் கொடுத்ததை தட்டச்சு செய்து கொண்டுவருமாறு உதவியாளரிடம் சொல்லிவிட்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்தவர் எதிர்பாராத மாரடைப்பின் காரணமாக அக்கணமே மாண்டுவிடுகிறார். இறுதிச் சடங்கு முடிவடைந்த பிறகு செட்டியார் கையெழுத்திடாத அக்கடிதத்தோடு எல்லா விவரங்களையும் எழுதி இராஜாஜிக்கு அனுப்பிவைக்கிறார் செட்டியாரின் மகன். இரு கடிதங்களையும் அடுத்தடுத்து இரசுரித்துவிட்டு தன் அஞ்சலிக்கட்டுரையை முடிக்கிறார் கல்கி.

அழகப்பா செட்டியார் பற்றிய கட்டுரையும் புனைகதைக்கு நிகரானது. ஒருமுறை அழகப்பா செட்டியார் பம்பாய்க்குச் சென்று ரிட்ஸ் ஓட்டலுக்குள் சென்று அறை வேண்டுமெனச் சொல்கிறார். அந்த விடுதி மேலாளர் அவர் தோற்றத்தைப் பார்த்துவிட்டு எல்லா அறைகளும் நிறைந்துவிட்டன என்று பொய் சொல்கிறார்.  உடனேஇந்த விடுதியில் எத்தனை அறைகள் உள்ளன?” என்று கேட்கிறார் செட்டியார். “நீங்கள் என்ன ஓட்டலையே விலைக்கு வாங்கவா போகிறீர்கள்? போய் வேலையைப் பாருங்கள்என்று ஏளனமாகப் பதில் சொல்கிறார். செட்டியாரோ அமைதியான குரலில்ஆமாம், வாங்கத்தான் போகிறேன். சொல்லுங்கள், என்ன விலை?” என்று கேட்கிறார். அவர் ஏதோ லட்சக்கணக்கில் ஒரு தொகையைச் சொல்ல, உடனேஇந்தா பிடிஎன முன்பணமாக ஒரு காசோலையைக் கொடுக்கிறார் செட்டியார். அந்த மேலாளர் திகைத்து உறைந்துவிடுகிறார். அடுத்து சில நாட்களில் உண்மையாகவே அந்த விடுதியை விலைகொடுத்து வாங்கிவிடுகிறார் செட்டியார். எல்லாமே கணநேரத்தில் எடுக்கப்படும் முடிவுதான். ஆனால் ஒரு முடிவை எடுத்த பிறகு அவரிடம் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்த நிலைபாட்டில் அவர் எப்போதும் உறுதியாக இருக்கிறார்.

இப்படியே அவர் பொறியியல் கல்லூரியையும் மின்சார ரசாயன ஆராய்ச்சிக்கூடத்தையும் தொடங்கிய கதைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு அதன் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு நேருவை அழைத்துவந்த தருணத்தையும் நினைவுகூர்கிறார். நேருவை கையைப் பற்றி செட்டியார் அழைத்துவரும் தோற்றமுள்ள புகைப்படத்துக்குப் பின்னால் உள்ள வரலாற்றை ஒரு நாலுபக்கக் கட்டுரையில் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் கல்கி.

முத்துரங்க முதலியாருடைய வாழ்க்கையும் ஒரு புனைகதைக்குரிய திருப்பத்தைக் கொண்டிருப்பதை கல்கி உணர்த்துகிறார். இருபதுகளில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வத்துடன் இணைந்துகொண்ட தலைமுறையைச் சேர்ந்தவர் முத்துரங்க முதலியார். அவர் தன் தியாகத்தாலும் தொண்டுகளாலும் படிப்படியாக தமிழகம் கவனிக்கும் தலைவராக வாழ்ந்தார். 1932இல் ஒருநாள் சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த சைனா பஜாருக்குச் சென்றிருந்த சமயத்தில் காவலர்கள் அவருடைய தலை உடையும்படி அடித்து நொறுக்கிவிட்டனர். அப்போது அவர் பிழைத்ததே அரிது. ஆயினும் அவர் தன் தியாக மனப்பான்மையைத் துறந்ததில்லை.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னிச்சையாகவே கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். அவரை அமராவதி சிறைக்கு அனுப்பியது அரசு. அங்கிருந்த காவலர்களின் கொடுமைக்கு இரையாகி மீண்டும் உடல்நலம் கெட்டது. சிறைக்குள் அவர் மரணம் நிகழ்ந்துவிடக் கூடாதென அவரை விடுதலை செய்து அனுப்பிவிட்டது அரசு. அதற்குப் பிறகு சில ஆண்டுகளே அவர் உயிர்வாழ்ந்தார்.

முதலியாருக்கு குடும்பம் இல்லை. சகோதரரும்  அவர் வழியில் சில உறவினர்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த உறவுவட்டத்தில் முக்கியமானவர் பக்தவத்சலம். ஒருமுறை அவர் பர்மாவுக்குச் செல்லவேண்டியிருந்தது. அதற்காக சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் கப்பலேறவேண்டிய சமயத்தில் பயணம் ரத்தாகிவிட்டதால் சென்னைக்குத் திரும்பவேண்டி வந்தது. சுதந்திரத்தைக் காணாமலேயே முதலியாரின் உயிர் பிரிந்த தருணம் அது. பர்மா பயணம் ரத்தானதன் விளைவாக முதலியாரின் உயிர்பிரியும் தருணத்தில் அவருக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பு பக்தவத்சலத்துக்குக் கிடைத்தது.

வீணை சண்முகவடிவு அம்மாவைபற்றிய கட்டுரையின் வழியாக ஒரு வாழ்க்கை வரலாற்றையே கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் கல்கி. இசைக்கலையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மதுரை சண்முகவடிவு. அவருடைய தாயார் ஸ்ரீமதி அக்கம்மாள் வயலின் இசைப்பதில் வல்லவர். தம் மகள் நல்ல பாடகராக வரவேண்டும் என விரும்பி சண்முகவடிவை கரூர் ஸ்ரீ வெங்கடராம பாகவதரிடம் பயிற்சி பெற அனுப்பினார் அவர். கச்சேரியில் சோபிக்கக் கூடிய அளவுக்கு சண்முகவடிவின் குரல் எடுப்பாக இல்லையென்று கருதி, இசைக்கருவிகளில் சிறந்ததான வீணையில் பயிற்சி கொடுத்தார் பாகவதர். வெகுவிரைவில் நல்ல தேர்ச்சி பெற்ற சண்முகவடிவு தமிழகம் போற்றும் இசைக்கலைஞராக உயர்ந்தார்.

இசைக்கலைஞராக முடியவில்லை என்னும் ஏக்கம் சண்முகவடிவின் ஏக்கம் அவருடைய ஆழ்மனத்திலேயே உறங்கிக் கிடந்தது. சண்முகவடிவுக்கு ஒரு மகள் பிறந்தபோது, தனக்குக் கிட்டாத பேறு தன் மகளுக்காவது கிட்டவேண்டும் என உடனடியாக வாய்ப்பாட்டுக்கலையில் அவரைத் தேர்ச்சி பெறவைத்தார். இணையற்ற இனிமை கொண்ட அக்குரலுக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஒருமுறை தம் வீணை இசையைப் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட வந்த கல்கத்தா கம்பெனியாரிடம் பேசி சுப்புலட்சுமியை தனியாக பாடவைத்து மற்றொரு இசைத்தட்டையும் வெளியிடவைத்தார். இசை ஆர்வலர்களிடம் அந்த இசைத்தட்டு நல்ல பேரையும் புழையும் பெற்றுத் தந்தது.. குறுகிய காலத்திலேயே உலகமே போற்றும் பாடகரானார் சுப்புலட்சுமி.

சுப்புலட்சுமியின் புகழ் நன்கு நிலைபெற்றுவிட்டது என்பதைக் கண்ட பிறகு சண்முகவடிவு கொஞ்சம் கொஞ்சமாக தன் வீணைக்கச்சேரிகளை நிறுத்திக்கொண்டார். தம் மகளின் புகழை தன் புகழாகவே நினைத்து மகிழ்ந்தார். அவருடைய இறுதிக்காலத்தில் மதுரையிலேயே சங்கீத சமாஜத்தின் ஆதரவில் சுப்புலட்சுமியின் இசைக்கச்சேரி நடைபெற்றது. அறுபத்தைந்து வயதில் உடல்நலம்  குன்றியிருந்த சண்முகவடிவு அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்திருந்தார். சபையினர் அவரை மேடையேற்றி மாலையிட்டு வாழ்த்தினர். சண்முக வடிவு அம்மாள் தமக்குப் போட்ட மாலையை எடுத்து தன் மகளுக்கு அணிவித்துவிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த இசைநிகழ்ச்சிக்கு பார்வையாளராகச் சென்றிருந்த கல்கி அதைப்பற்றி எழுதுவதற்கு முன்பாக இந்த வரலாற்றுத்தொடர்ச்சியை சுட்டிக்காட்டி வாசிப்பவர்கள் நெஞ்சில் நெகிழ்ச்சியை உருவாக்குகிறார்.

தமிழ்நாட்டு ஆளுமைகளைப்பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, விபுலானந்தர், அன்னதான சாமி, சரஸ்வதிபாய், சுவாமி ராமானந்தர், லேடி லீலாவதி ராமனாதன், பாஷ்யம் ஐயங்கார், விஜயராகவன், கதிரேசன் செட்டியார், ரசிகமணி டி.கே.சி.,மறைமலையடிகள், டாக்டர் குருசாமி முதலியார், இலங்கை இராஜலிங்கம், தொழிலதிபர் சேஷசாயி போன்ற பல்வேறுவிதமான ஆளுமைகளின் அடுக்கு கல்கியின் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டுக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு என்றே சொல்லவேண்டும். 

ஒருவருடைய நெஞ்சிலும் நினைவிலும் இத்தனை மனிதர்களா என வியக்கவைக்கின்றன கல்கியின் கட்டுரைகள்.  சிறுசிறு காட்சிகள் வழியாக தமிழகத்தின் அன்றைய சூழலையும் விடுதலை வேட்கையையும் தியாகமனப்பான்மையையும் பதிவு செய்திருக்கும் இந்தத் தொகுதி, கல்கியின் படைப்புகளைப்போலவே வேகமாகவும் ஆர்வத்தோடும் வாசிக்கத் தூண்டும் மொழியில் அமைந்துள்ளது.

 

(30.04.2021 அன்று அம்ருதா – இணைய இதழில் வெளிவந்த கட்டுரை )