Home

Wednesday, 12 May 2021

காமராஜர் : மண்ணில் பொழிந்த மாமழை

 

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல புரட்சி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒருசில இடங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அதனால் புரட்சி இயக்கங்களை ஒடுக்கும் வழிவகைகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆங்கில அரசு சிட்னி ரெளலட் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் புதியதொரு சட்டத்தை 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கருதும் எவரையும் அரசு எவ்விதமான வழக்கு விசாரணையுமின்றி கைது செய்து இரண்டாண்டுகள் வரைக்கும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 06.04.1919 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தார். ஜின்னா தனக்கு வழங்கப்பட்டிருந்த பேரரசின் சட்டமன்ற சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். தாகூர் தனக்கு ஆங்கில அரசு வழங்கியிருந்த விருதைத் துறந்தார். ரெளலட் சத்தியாகிரகம் என்ற பெயரோடு இத்தகு போராட்டங்கள் நாடெங்கும் வலிமையடைந்து வரும் வேளையில் 13.04.1919 அன்று பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன்வாலா பாக் என்னும் இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டயர் என்னும் ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். ஏறத்தாழ 380 பேர் மரணமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர்.

காந்தியடிகளின் அறிவிப்பை ஒட்டி ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றன.  அப்போது கல்வியைத் தொடரமுடியாத பதினாறு வயதுச் சிறுவனாக சொந்த ஊரான விருதுப்பட்டியிலும் மளிகைக்கடை நடத்தி வந்த தாய்மாமன் வீடான திருவனந்தபுரத்திலும் மாறிமாறி தங்கிக்கொண்டிருந்த இளைஞரொருவர் காந்தியடிகளின் சொற்களால் ஈர்க்கப்பட்டார். ஜார்ஜ் ஜோசப், சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களின் உரைகளைக் கேட்டு தம் அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டவர் அவர். அவர் மனம் தேச விடுதலை இயக்கத்தை நாடியது. தன் வயதையொத்த நண்பர்களுடன் இணைந்து ரயில்களிலும் பொது இடங்களிலும் உண்டியல் ஏந்தி பணம் திரட்டி விடுதலை விழிப்புணர்வை உருவாக்கும் கூட்டங்களை நடத்தினார். தம் மதிப்புக்குரிய ஜார்ஜ் ஜோசப், சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களை அழைத்து தம் ஊரில் கூட்டங்களை நடத்தினார். தானே வீதிகளில் தண்டோரா போட்டு செய்தியை அறிவித்து அக்கூட்டங்களுக்கு ஆள் சேர்த்தார்.  காங்கிரஸில் தொண்டனாக இணைந்து கதர்த்துணிகளை விற்றார். ஒருமுறை காவலர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதால் அவர் முதுகில் ஏற்பட்ட தழும்பு கடைசிவரை மறையவில்லை. அந்த இளைஞர் காமராஜர்.

21.09.1921 அன்று காந்தியடிகள் மதுரைக்கு வந்தார். அன்று இரவு பொதுமக்களிடையே உரையாற்றும்போது இராட்டையில் நூல் நூற்கவேண்டியதன் அவசியத்தையும் இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையின் அவசியத்தையும் தீண்டாமை ஒழிப்பையும் வலியுறுத்திப் பேசினார். தேச விடுதலைக்கு இம்மூன்று செயல்பாடுகளும் மிகமுக்கியமானவை என்றும் ஒவ்வொரு இந்தியனும் இக்கடமைகளை ஆற்றவேண்டும் என்றும் அழுத்தம்திருத்தமாகப் பேசினார். மறுநாள் 22.09.1921 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மக்களிடையே எளிய விவசாயியைப்போல இடையில் ஒரு வேட்டியை மட்டும் அணிந்துகொண்டு புதிய கோலத்தில் உரையாற்றினார். அந்நிய ஆடைகளைத் துறக்கும்படியும் கதராடைகளை அணியும்படியும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளின் எளிமையான கோலமும் ஆழமாக மனத்தில் பதியும்வண்ணம் பேசிய அவருடைய சொற்களும், அக்கூட்டத்தில் ஒருவராக கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் காமராஜரின் நெஞ்சில் அழுத்தமாக வேரூன்றின. காந்தியடிகளைப் பின்பற்றுவதும் அவர் காட்டிய வழியில் தேச விடுதலைக்காகப் பாடுபடுவதும் தம் தலையாய கடமைகளென அன்றே காமராஜர் முடிவு செய்தார்.

1919இல் இந்திய அரசுச் சட்டம் இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் அடிப்படையில் சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதன் இரட்டையாட்சித் தன்மையால் இந்திய தேசிய காங்கிரஸ் அத்திட்டத்தை ஏற்கவும் தேர்தல்களில் பங்கேற்கவும் மறுத்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1928இல் தன்னாட்சி அதிகாரத்தின் நிறைகுறைகளை ஆராய்வதற்காக சைமன் என்பவர் தலைமையில் ஒரு பாராளுமன்றக்குழு லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவில் ஓர் இந்தியர் கூட இடம்பெறாததைச் சுட்டிக்காட்டி அக்குழுவின் வருகையை காங்கிரஸ் புறக்கணித்தது. அக்குழு செல்லுமிடங்களிலெல்லாம்சைமனே திரும்பிப் போஎன காங்கிரஸ் தொண்டர்கள் கூடி முழக்கமிட்டனர். லாகூரில் நடைபெற்ற மறியலில் லாலா லஜபதி ராய் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த சைமன் குழுவின் வருகையை ஒட்டி மதுரையில் முக்கியமான எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. ஜார்ஜ் ஜோசப் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் முன்னணியில் நின்று முழங்கினார் காமராஜர்.

12.03.1930 அன்று காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை அறிவித்து சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரையைத் தொடங்கினார். 30.04.1930 அன்று திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரையை இராஜாஜி தொடங்கினார். அப்போராட்டத்தில் காமராஜரும் கலந்துகொண்டார். வேதாரண்யத்தில் காவல்துறை அனைவரையும் கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவருக்கு இரண்டாண்டு காலம் கடும்காவல் தண்டனை கிடைத்தது.  தீர்ப்பைக் கேட்பதற்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார் ஆறாத் துயரில் மூழ்கினார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு காமராஜர் அலிப்புரம் சிறைக்குச் சென்றார். அவருக்கு அதுவே முதல் சிறைவாசம். அவர் சிறையிலிருந்த காலத்தில் ஒருமுறை பாட்டியின் உடல்நிலை கவலைக்கிடமான வகையில் இருப்பதாகவும் பரோலில் வந்து செல்லுமாறும் செய்தி கிடைத்தது. ஆயினும் காமராஜர் அதற்கு உடன்படவில்லை. 1931இல் காந்தி இர்வின் ஒப்பந்தத்துக்கு  இணங்க உப்புசத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட எல்லா அரசியல் கைதிகளையும் அரசு விடுதலை செய்தது. காமராஜரும் விடுதலை பெற்று விருதுநகருக்குத் திரும்பினார்.

ஒருமுறை விருதுநகர் அஞ்சல் நிலையத்தில் அரசு அலுவலகர்களை அச்சுறுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதை ஒட்டியவர்கள் விவரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பழியை ஊரிலிருந்த ஒரு பகுதியினர் காமராஜர் மீதும் அவருடைய நண்பர் மீதும் சுமத்தினார்கள். அதனால் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. இந்தத் தண்டனைக்காலத்தில் திருச்சி சிறையிலும் வேலூர் சிறையிலும் மாறிமாறிக் கழித்தார் காமராஜர். வேலூர் சிறையில் இருந்தபோது  பகத்சிங் வழக்குடன் தொடர்புடைய ஜெய்தேவ் கபூர், கமல்நாத் திவாரி ஆகிய இரு இளைஞர்களையும் சந்தித்து உரையாடினார். தற்செயலாக அவர்களைச் சந்தித்து உரையாடிய காமராஜர் அவர்களுடன் நட்புடன் பழகிவந்தார். அதை சந்தேகக் கண்கொண்டு பார்த்த அதிகாரிகள் காமராஜரை அன்றுமுதல் கடுமையான வகையில் கண்காணிக்கத் தொடங்கினர்.

வங்காளத்தில் அடக்குமுறைக்குப் பேர்போன ஆளுநரான ஜான் ஆன்டர்சன் அப்போது உதகமண்டலத்துக்கு வருவதாகத் திட்டமிட்டிருந்தார். அவரைக் கொல்வதற்காக காமராஜரும் வங்காளக் கைதிகளும் சேர்ந்து திட்டமிட்டு சதி செய்வதாக ஒரு பொய்வழக்கை காமராஜர் மீது தொடுத்தது காவல்துறை. ஏற்கனவே சென்னை சதி வழக்குடன் தொடர்புடைய கே.அருணாசலம் என்பவருக்கு இரு துப்பாக்கிகளை காமரஜரே வாங்கிக் கொடுத்ததாக அறிக்கை தயாரித்து அனுப்பினார்கள். ஆனால் காவல் துறையினர் இட்டுக் கட்டிய வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாததால் தோல்வியுற்றது. காமராஜர் விடுதலை பெற்றார்.

ஏதாவது ஒரு வழக்கில் எப்படியாவது காமராஜரை சிக்க வைத்து சிறையில் அடைத்துவிடவேண்டும் என்று நினைத்து தக்க சமயத்துக்காகக் காத்திருந்தது விருதுநகர் காவல் துறை, 1933இல் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதாக ஒரு வழக்கை  பொய்யாக இட்டுக்கட்டியது. காமராஜரையும் அவருடைய நெருங்கிய நண்பரான கே.எஸ்.முத்துசாமி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.  அப்ரூவராக மாறி சாட்சி சொல்வதற்காகவே மேலும் இருவர் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். பொய்வழக்கைப் புனைவதில் வல்லவரான காவல் துறை அதிகாரி ஒருவரின் ஆலோசனையின்படி எல்லா நடவடிக்கைகளும் நடைபெற்றன. ஆனாலும் அதே காவல் துறையைச் சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் பொய்சாட்சி சொல்ல மறுத்ததால் வழக்கு தோல்வியடைந்தது. ஏறத்தாழ எட்டு மாத காலத்துக்குப் பிறகு காமராஜரும் கே.எஸ்.முத்துசாமியும் விடுதலையடைந்தனர்.

இந்தியாவின் வைசிராயாக இருந்த வெலிங்க்டன் தமிழ்நாட்டில் இரண்டுவார காலம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவ்வருகையை ஒட்டி பாதுகாப்புக் காரணத்துக்காக காமராஜரையும் அவருடைய நண்பர்களையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. வைசிராய் தமிழ்நாட்டைவிட்டுப் புறப்பட்ட பிறகே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அரிஜன நல நிதிக்காக நன்கொடை திரட்டும் நோக்கத்துடன் தமிழகத்துக்கு வந்திருந்த காந்தியடிகள் 25.01.1934 அன்று ராஜபாளையத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் காமராஜரும் கலந்துகொண்டார். அன்றைய உரையில் அவர் தீண்டாமை ஒழிப்பை முதன்மைப்படுத்திப் பேசினார். ஒவ்வொரு மனிதரும் தம் உள்ளத்திலிருந்து முழுமையாக தீண்டாமையுணர்வை அகற்றுவதே இந்தக் காலகட்டத்தின் இன்றியமையாத தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். மக்கள் அனைவரையும் சமமாகப் பார்த்துப் பழகுவது ஒன்றே நாம் சகோதர உணர்வை அடைவதற்குச் சரியான வழி என்று சொன்ன காந்தியடிகளின் சொற்களை காலம் தமக்கிட்ட கட்டளையாக எடுத்துக்கொண்டார் காமராஜர். நிகழ்ச்சி முடிவடையும் வேளையில் கடுமையாக மழை பொழியத் தொடங்கியது. காந்தியடிகள் வந்திருந்த வாகனத்தில் மேற்கூரை காற்றில் கிழிந்துவிட்டது. அடுத்த நிகழ்ச்சி விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் தாம் எடுத்துவந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, காந்தியடிகளின் வாகனத்தின் கூரையைச் சரிபார்ப்பதற்காக, அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக விருதுநகருக்குப் புறப்பட்டுச் சென்றார் காமராஜர். மழை நிற்கும் வரை காத்திருந்ததால் சில மணி நேரங்கள் தாமதமாக காந்தியடிகளும் விருதுநகருக்கு வந்து சேர்ந்தார்.

28.12.1935இல் காங்கிரஸ் தொடங்கப்பட்டு ஐம்பதாண்டுகள் நிறைவதை ஒட்டி நாடெங்கும் பொன்விழா கொண்டாடப்பட்டது. ஐம்பதாண்டு கால காங்கிரஸ் வளர்ச்சிகளைகாங்கிரஸ் மகாசபை சரித்திரம்என்னும் பெயரில் பட்டாபி சீத்தாரமையா ஒரு பெரிய தொகைநூலை எழுதி வெளியிட்டார். விருதுநகரில் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பொன்விழாவை சிறப்புடன் நடத்தத் தேவையான  எல்லா ஏற்பாடுகளையும் காமராஜர் கவனித்துக்கொண்டார். சுதந்திரத்தின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடைபெற்றன.

1936இல் காரைக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக எஸ். சத்தியமூர்த்தியும் செயலாளராக காமராஜரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 1937இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. சத்தியமூர்த்தியும் காமராஜரும் சூறாவளியாக மாகாணமெங்கும் சுற்றியலைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவ்வெற்றியைச் சாத்தியப்படுத்தினர். காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். ஏராளமான தொண்டர்களுடன் புறப்பட்ட அந்த வெற்றி ஊர்வலம் விருதுநகர் தெப்பக்குளத்தைக் கடக்கும் சமயத்தில் காமராஜர் அமர்ந்திருந்த சாரட்டு வண்டியின் மீது திராவகம் நிரம்பிய பல்புகள் சரமாரியாக வீசப்பட்டன. நல்ல வேளையாக அவை வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் விழுந்து வெடித்துச் சிதறின. கடிவாளக் கட்டுப்பாட்டை மீறி எங்கெங்கோ ஓடிய வண்டி ஒருவழியாக நின்றுவிட, காமராஜர்  காயமின்றி தப்பித்தார்.

1938இல் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வார்டுகளில் இருபத்திரண்டு பேர் வெற்றி பெற்றனர். இரண்டாவது முறையாக காமராஜர் வெற்றி பெற்றார். அனைவரும் கூடி காமராஜரையே நகராட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லும் நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும் தன்னால் அப்பொறுப்பை ஏற்கமுடியாதென மறுத்துவிட்டார் காமராஜர்.

08.07.1942இல் பம்பாய் நகரில் கோவாலியா தெப்பக்குளம் மைதானத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை கூடியது. தமிழகத்திலிருந்து சத்தியமூர்த்தி, காமராஜ் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் சென்று அக்கூட்டத்தில் பங்கேற்றனர். மெளலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையேற்று நடத்திய அக்கூட்டத்தில் காந்தியடிகள் விருப்பப்படி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார். அதை வல்லபாய் படேல் வழிமொழிய தீர்மானம் நிறைவேறியது. அன்றைய அரங்கில் காந்தியடிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உணர்ச்சிமயமான குரலில் சுதந்திரப்போராட்ட உரையை நிகழ்த்தினார். அவருடைய உரைக்குப் பிறகு தீர்மானங்கள் ஒன்றையடுத்து ஒன்றாக படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேறின. பிரிட்டன் தன் ஆட்சிப்பொறுப்பிலிருந்து தானே ஒதுங்க இணங்காவிடில், காந்தியடிகளின் தலைமையில் அகிம்சை வழியில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பங்கெடுக்கும் பெரிய போராட்டம் உருவாகும் என்பதே அத்தீர்மானங்களின் சாரம்.

மறுநாள் காலையில் எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு நாட்டின் வெவ்வேறு இடங்களிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். தீர்மான நகல்களுடன் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் பம்பாயிலிருந்து அன்று இரவு ரயிலில் புறப்பட்டனர். ஆந்திர எல்லை நெருங்கியதும் சஞ்சீவி ரெட்டி கைது செய்யப்பட்டார். சென்னைக்குச் சென்றால் கைதாவது நிச்சயம் என்பதைப் புரிந்துகொண்ட காமராஜர் எப்படியாவது தீர்மான நகல்களை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அரக்கோணம் சந்திப்பிலேயே விவசாயியின் தோற்றத்தில் வெளியேறி ராணிப்பேட்டைக்குச் சென்று கல்யாணராம ஐயரின் வீட்டில் அடைக்கலமானார். இருவரும் வேறொரு நண்பரின் தோட்டத்து வீட்டுக்குச் சென்று தங்கி தீர்மான நகல்களை எழுதி முடித்தனர். மறுநாள் மாலை காரிலும் ரயிலிலும் பயணம் செய்து  தஞ்சை, நெல்லை, விழுப்புரம், மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று கிளைநிர்வாகிகளிடம் நகல்களைச் சேர்த்தனர். அந்தத் தீர்மானம் காங்கிரஸின் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொரு நகரசபையிலும் நிறைவேற்றப்படவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ராணிப்பேட்டைக்குத் திரும்பிய கல்யாணராம ஐயர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விருதுநகருக்குச் சென்ற காமராஜரும் கைதானார். மூன்றாண்டுக் காலத்தை வேலூர் சிறைச்சாலையில் கழித்த காமராஜர் 1945இல் விடுதலையடைந்தார்.

1942இலிருந்து கட்சிப்பணியிலிருந்து விலகியிருந்த இராஜாஜி மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றுவதை தேசியத் தலைமை விரும்பி ஏற்றுக்கொண்டாலும் மாகாண அளவில் பெரும்பாலானவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. இதனால் இராஜாஜி அணி, காமராஜர் அணி என இரு பிரிவாக பிரிந்து செயல்படும் சூழல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. 1946இல் சென்னையில் உள்ள இந்தி பிரச்சார சபா ஆண்டுவிழாவுக்கு தலைமை தாங்கி நடத்துவதற்காக காந்தியடிகள் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்தார். அவருடைய பயணத்திட்ட விவரங்கள் இராஜாஜி அணியினருக்குத் தெரிந்திருந்தும் கூட தமிழ் மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருடன் அதை யாரும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தக் குழப்பமும் தடுமாற்றமும் காந்தியடிகளின் சுற்றுப்பயணம் முழுவதிலும் வெளிப்பட்டது.

வார்தா ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்னர் 10.02.1946இல் ஹரிஜன் இதழில் காந்தியடிகள் தன் தமிழ்நாட்டுப் பயணத்தைப்பற்றி எழுதும்போது இராஜாஜியைப் புகழ்ந்தும் அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் பிறரை உள்ளே அனுமதிக்க விரும்பாத சிறிய முட்டுக்கட்டைக்குழு இயங்கி வருவது வருத்தமளிக்கிறது என்றும் எழுதியிருந்தார். தமிழ்மாகாண காங்கிரஸின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் தன்னைப்பற்றி காந்தியடிகள் எழுதியிருந்த குறிப்பைக் கண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தார் காமராஜர். காந்தியடிகளின் குறிப்பில் காணப்படும் பிழையைச் சுட்டிக்காட்டி பலரும் அவருக்குக் கடிதம் எழுதினர். பி.வரதராஜுலு நாயுடு தமிழ்நாட்டின் உண்மை நிலவரங்களை காந்தியடிகளுக்குத் தெரிவித்ததும் அவர் இனி உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பதில் எழுதி அமைதிக்கு வழிவகுத்தார். ஆயினும் அப்போது நடைபெற்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியிலிருந்து காமராஜர் விலகியே இருந்தார்.

14.08.1947 அன்று நள்ளிரவு 11 மணிக்கு அரசியல் நிர்ணய அவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற மத்திய அரங்கில் கூடினார்கள். சுசேதா கிருபளாணி வந்தே மாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாபு இராஜேந்திர பிரசாத் சரியாக 12 மணிக்கு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அரசியல் நிர்ணய அவை உறுப்பினர்களான ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், அபுல்கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு என அனைவரும் ஒருவரையடுத்து ஒருவராக பொறுப்பை ஒப்புக்கொண்டு உறுதிமொழி ஏற்றனர். அவ்வரிசையில் காமராஜர்பெருமை மிக்க நம் பாரத நாடு உலக நாடுகளுக்கிடையில் தனக்குரிய மதிப்பைப் பெறவும் மனிதகுலத்தின் நலத்துக்கும் அமைதிக்கும் இந்தியா தன் பங்களிப்பை உளமார அளிக்கவும் இந்திய மக்களின் சேவைக்காகவும் என்னைப் பணிவுடன் அர்ப்பணித்துக்கொள்கிறேன்  என்று பெருமிதத்துடன் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்னும் நிலையில் அவர் ஆற்றிய எழுச்சியுரை மிகமிக முக்கியமானது. எந்த நிகழ்ச்சியிலும் விரிவாகவும் விளக்கமாகவும் உணர்ச்சிப்பெருக்கோடு பேசாத காமராஜர் அன்றைய நிகழ்ச்சியில் உற்சாகம் ததும்ப உளம்திறந்து பேசினார். அந்த உரையில் காந்தியடிகளின் தன்னலமற்ற உழைப்பைப்பற்றியும் அர்ப்பணிப்புணர்வைப்பற்றியும் உணர்ச்சிமயமான குரலில் நீண்ட நேரம் எடுத்துரைத்தார். ’காந்தியடிகள் எதற்காக சுதந்திரம் கேட்டார் என்பதை நாம் ஒருகணம் ஆழ்ந்து யோசிக்கவேண்டும். அப்போது அனைவரும் நலவாழ்வு வாழவேண்டும் என்கிற நோக்கத்துக்காகவே அண்ணலின் குரல் எழுந்தது என்பதை நாம் உணரமுடியும் இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ வழியில்லை. உணவு, உடை, உறையுள் எதுவுமே பலருக்கு இல்லை. படிப்பு இல்லை. பணமும் இல்லை. மக்களின் இத்தகு அவலநிலையைத்தான் நாம் உடனடியாக மாற்றவேண்டும். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றவர்களைப்போல உயர்ந்தாக வேண்டும். நாம் அனைவரும் சாதிமத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து காந்தியடிகள் கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும். இந்த இலட்சியத்தை நிறைவேற்றி சமத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்கவே காந்தியடிகள் இந்தச் சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்என்றார் காமராஜர். அப்போது தமிழ் மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவரைத் தொடர்ந்து குமாரசாமிராஜாவும் இராஜாஜியும் முதல்வராகச் செயல்பட்டனர். 13.04.1954 அன்று காமராஜர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களைப்பற்றிய விவாதத்தில் சட்டத்தையும் விதிமுறைகளையும் சுட்டிக்காட்டி ஒதுக்கிவைக்க முனையும் அதிகாரிகளின் அணுகுமுறையை காமராஜரால் ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அவருடைய ஆட்சிக்காலம் முழுதும் அவர்களின் கருத்துகளை ஒதுக்கி, புதிய வழிமுறையில் சாதித்தவை ஏராளம்.

ஒருமுறை சென்னையில் ரிசர்வ் வங்கிக் கட்டடத்துக்கு எதிரில் ஒரு சுரங்கப்பாதை கட்டவேண்டியிருந்தது. மின்சார ரயில் வண்டிகளும் மக்களும் தடையின்றி அந்த இடத்தைக் கடந்துசெல்ல  அது உதவியாக இருக்கும் என்பது தமிழக அரசின் எண்ணமாக இருந்தது.  சுரங்கப்பாதை அமைப்பதற்கு செலவாகும் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பது திட்டம். செயல்திட்டத்தைப்பற்றி கலந்துரையாடுவதற்காக அதிகாரிகளும் அமைச்சர்களும் கூடியிருந்த சபையில் காமரஜரும் பங்கெடுத்துக்கொண்டார். மத்திய அரசின் சார்பில் கலந்துகொண்ட அதிகாரி செலவுத்தொகையை ஒரு காரணமாகக் காட்டி, அந்தத் திட்டத்தை மறுப்பதிலேயே குறியாக இருந்தார். அவர் வாதங்களையெல்லாம் வெகுநேரம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த காமராஜர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துஇந்தக் கூட்டம் கட்டமுடியாது என முடிவெடுப்பதற்காக கூட்டப்பட்டதல்ல. எப்படி கட்டி முடிப்பது என்பதை முடிவெடுப்பதற்கான கூட்டம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விவரங்களை மட்டும் பேசுவோம்என்று உரத்த குரலில் சுட்டிக்காட்டி நெறிப்படுத்தினார். பிறகு அந்த உரையாடல் சரியான திசையில் சென்று ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அந்தச் சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டது. சமூகத்தின் தேவைகளை உணர்வதும் அதை சரியான முறையில் திட்டமிட்டு முடிப்பதும் ஒரு சிறந்த நிர்வாகியின் தலைமைப்பண்புகள். அரசு நிர்வாகம் என்பது ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் நடப்பதல்ல, தேவைப்பட்டால் புதிய பாதைகளை உருவாக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும். அவ்வகையில் முன்னுதாரணமே இல்லாத சிறந்த நிர்வாகியாகவே தன் ஆட்சிக்காலம் முழுதும் செயல்பட்டார்.

மதுரையில் வைகை நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும் ராமனாதபுரம் பாலைவனமாக வறண்டு கிடந்தது.. அதுவும் முதுகுளத்தூர் வட்டத்தில் பொதுமக்கள் தண்ணீர்ப்பிரச்சினையால் தவித்திருந்தனர். மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பம் கொடுத்து சலித்துவிட்ட பொதுமக்கள் ஒருமுறை காமராஜரை சந்தித்து தம் குறையைச் சொல்லி அழுதனர். காமராஜர் உடனே அதிகாரிகளை அழைத்து ஓர் அவசரக்கூட்டம் நடத்தினார். மதுரைக்கும் முதுகுளத்தூருக்கும் இடையே உள்ள தொலைவு அறுபது கிலோமீட்டருக்கும் அதிகம். கால்வாயை வெட்ட ஏற்படும் செலவும் அதிமாகும். பயன்படும் நீரின் அளவைவிட, நீண்ட கால்வாய் வழியே செல்லும்போது வீணாகும் தண்ணீரின் அளவு அதிகமாகவே இருக்கும் என்றெல்லாம் காரணங்களை அடுக்கி அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் அதிகாரிகள். அந்த நிலப்பகுதியைப்பற்றிய விவரங்களை நன்கு அறிந்தவர் என்பதால் காமராஜர் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார். ”மதுரைக்கும் முதுகுளத்தூருக்கும் நடுவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.  நீண்ட ஒரே கால்வாய்க்குப் பதிலாக அந்தக் கண்மாய்களை இணைக்கும் திட்டமாக இதை நாம் நிறைவேற்றலாம். முதுகுளத்தூருக்கும்  வழியிலுள்ள மற்ற கிராமங்களுக்கும் அது பயன்படும்என்று மாற்றுவழிமுறையை முன்வைத்தார். வேறு வழியின்றி அதிகாரிகள் அதற்கு உடன்பட்டனர். முதுகுளத்தூர் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகளை உடன்பட வைக்கும் அளவுக்கு நகரங்களைப்பற்றியும் கிராமங்களைப்பற்றியும் காமராஜரிடம் அனுபவ அறிவு நிறைந்திருந்தது.

வளரும் தலைமுறை கல்வியறிவில் சிறந்து விளங்கவேண்டும் என்னும் நோக்கத்தில் தமிழகமெங்கும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. உணவுப்பிரச்சினையைக் காரணமாகக் காட்டி பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பத் தயங்குவார்களோ என்னும் அச்சத்தால் 1956-57 முதல் மதிய உணவுத்திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். மதிய உணவுத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதால் மாணவமாணவிகளின் இடைநிற்றல் குறைந்து பதினான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்தார்கள். தமிழ்நாட்டுக் கிராமத் தெருக்களில் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டன. நீர்ப்பாசனத்துக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதால் விவசாயம் தழைத்தது. கிண்டி, அம்பத்தூர், பாடி, சிவகாசி, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பத்தொன்பது இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. கீழ்பவானித்திட்டம், மணிமுத்தாறு, ஆரணியாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆழியாறு போன்ற பல அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அதனால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன வசதி கிடைத்தது.

1962 ஆம் ஆண்டு. ஒருமுறை காமராஜர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கும்பகோணம் கல்லூரிக்குச் சென்றிருந்தார். கல்லூரியிலும் பல்வேறு அலுவலகங்களிலும் பணிபுரிபவர்களுக்கு மதிய உணவுப் பெட்டிகளை அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு, காத்திருந்து வெற்றுப்பெட்டிகளை திரும்ப வாங்கிச் சென்று அவரவர் வீடுகளில் ஒப்படைக்கும் பணியைச் செய்வதற்கென்றே கூடைக்காரர்கள் அக்காலத்தில் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் நடுவயதைக் கடந்த முதியவர்கள். ஆதரவில்லாதவர்கள். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரங்கிலிருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் சூழ்ந்து வர காமராஜர் வெளியே வந்தார். அது உணவு இடைவேளை நேரம் என்பதால் கூடைக்காரர்களும் அந்த வாசலில் நின்றிருந்தார்கள். கூடை வைத்திருந்த ஒரு மூதாட்டி காமராஜரிடம் பேசுவதற்காக நெருங்கிவந்தார். பிறகு துயரம் தோய்ந்த குரலில் கண்கலங்க கூடை சுமந்து பிழைக்கும் தன் கதையைச் சொன்னார். தன்னைப்போல ஆதரவில்லாத பலர் அந்த நகரத்தில் கூடை சுமந்து பிழைப்பதாகவும் கைகளும் கால்களும் செயல்படாமல் போனால் பிழைப்பதற்கு வேறு வழியில்லை என்றும் சொல்லி கண்ணீர்விட்டார். ஏதோ பண உதவி கேட்டு வந்திருக்கிறார் என நினைத்து அருகில் நின்றிருந்த ஒருவர் தன் பையிலிருந்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்க மறுத்த மூதாட்டி காமராஜரைப் பார்த்து கலங்கிய குரலுடன் தம்மைப் போன்றவர்களுக்கு நிரந்தரமாக உதவும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆறுதலாகப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்ட காமராஜர் தம்முடன் பயணம் செய்த அதிகாரிகளிடம் அந்த மூதாட்டியைப்போல ஆதரவில்லாதவர்கள் தோராயமாக எத்தனை பேர் இருக்கக்கூடும் என்கிற தகவலைத் திரட்டி உடனடியாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பத்து நாட்களில் அவர் கேட்ட தகவலைச் சேகரித்து அவரிடம் கொடுத்தனர் அதிகாரிகள். அன்று மாலை தமிழக அரசின் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித்தொகையாக ஒவ்வொருவருக்கும் இருபது ரூபாய் அளிக்கப்படும் என காமராஜர் அறிவித்தார்.

ஆசிரியர்கள் கூட அந்தக் காலத்தில் அரசு ஊழியர்களாக கருதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு முதுமைக்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தது. நீண்ட காலமாக கிடப்பிலிருந்த அவர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து காமராஜர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வழிவகுத்தார். பிறகு படிப்படியாக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் விரிவாக்கப்பட்டது.

1963இல் நேரு காங்கிரஸ் தலைவர்கள் கட்சி நிர்மாணப்பணிகளில் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். அவர் ஐதராபாத் நகருக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்த காமராஜர் நேருவின் கோரிக்கையை ஏற்று தானே முதல் ஆளாக கட்சிப்பணிக்காக பதவியை உதறிவிட்டு வருவதாக அறிவித்தார். இலட்சிய நோக்கத்துடன் தேச சேவையாற்றி காந்தியடிகள் காலத்தில் இருந்ததைப்போலவே கட்சித்தூய்மையைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். 02.10.1963 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரைப் பின்பற்றி ஒரிசா, காஷ்மீர், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய  மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் சில மத்திய அமைச்சர்களும் பதவி விலகினர். அதற்கு அடுத்த ஆண்டிலேயே அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சித் தலைவரென்ற தகுதியோடு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். அவருடைய இறுதிமூச்சு வரை கட்சி ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் மட்டுமே அவர் அரும்பாடுபட்டார்.

02.10.1975 அன்று காமராஜர் இயற்கையெய்தினார். அவர் மறைவதற்கு மூன்று நாட்கள் முன்பு தன் உதவியாளரை அழைத்து மாவட்டக் கமிட்டிகளிடமிருந்து மாநில அமைப்புக்கு வந்து சேர்ந்த தொகையைக் கணக்கிடச் சொன்னார். ஏறத்தாழ பத்து லட்ச ரூபாய் இருந்தது. பல அமைப்புகளிடமிருந்து பாக்கித்தொகை வரவேண்டியிருந்தது. அதனால் கணக்கை முடிக்காமல் வைத்திருந்தார் உதவியாளர். ஆனால் அது வரும்வரைக்கும் பெரிய தொகையை வைத்திருப்பது அழகல்ல என எடுத்துரைத்து உடனே தொகையை எடுத்துச் சென்று சென்று வங்கியில் கட்டிவிட்டு வருமாறு அனுப்பிவைத்தார். பணம் கட்டிய ரசீதையும் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டி சரிபார்த்த பிறகே அவர் மனம் நிம்மதியடைந்தது. பொதுப்பணத்துக்கு கணக்கெழுதி வைத்துக் காப்பாற்றிய நேர்மை மிக்க மனிதர் அவர்.

தன் தேவைகளை முடிந்தமட்டும் குறைத்துக்கொண்டு தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தூய்மைக்குப் பெயர்போனவராக பொதுவாழ்க்கையை நடத்தியவர் காமராஜர். மாதச்செலவுக்கு கூடுதலாக முப்பது ரூபாய் அனுப்பச் சொன்ன தன் அம்மாவுக்கு, வழக்கமாக அனுப்பும் நூற்றியிருபது ரூபாய்க்குள்ளேயே சமாளித்துக்கொள்ளுமாறு பதில் கடிதம் எழுதிய மகன் அவர். இறுதி வரைக்கும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர். பொதுவாழ்வே தன் வழி என தீர்மானித்த கணத்திலிருந்து நேர்மை, தூய்மை, வாய்மை ஆகிய மூன்று நிலைபாடுகளிலிருந்தும் சிறிதும் விலகாமல் வாழ்ந்த மாமனிதர் அவர். அவருடைய கனவுகள் எப்போதும் கட்சியின் முன்னேற்றம் சார்ந்ததாகவும் ஏழை எளிய மக்களின் நலவாழ்வு சார்ந்ததாகவும் மட்டுமே இருந்தன. தன் இறுதிமூச்சு வரை அக்கனவுகளை நோக்கி அவர் நடந்துகொண்டே இருந்தார்.