கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ்த்தட்டைச் சார்ந்த அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்தது இந்த இயக்கம். தமக்குள் எவ்விதமான பேதமில்லை என்பதன் குறியீடாகவும் தாம் சாதியப் பார்வைகளைக் கடந்தவர்கள் என்பதன் அடையாளமாகவும் அவர்கள் லிங்கத்தை அணிந்தனர். லிங்கத்தை அணிந்தவர்கள் அனைவரும் சரணர்கள். சாதிய அடையாளம் என்பது முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அனைவரும் சிவனையே தன் முழுமுதல் இறைவனாக எண்ணிச் சரணடைந்தவர்கள். பக்தியுடன் உழைப்பு இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த தளம் உருவானது. உழைப்பில் சிவனுடைய வடிவத்தைக் கண்டவர்களுக்கு உழைப்பின் களமான வயலே ஆலயமானது. அந்த வயலில் சிவனை அவர்கள் குடியேற்றிக் கொண்டாடினார்கள்.
வயல் சார்ந்த வரப்பு, புல், செடிகள், கொடிகள், மரங்கள், பறவைகள், காய்கள், கனிகள், காற்று, சூரியன், வெளிச்சம், தண்ணீர், பகல், இரவு எல்லாவற்றிலும் சிவனே நிறைந்திருந்தான். அந்தச் சிவனை அவர்கள் ஆனந்தத்துடன் பாடித் துதித்தார்கள். களித்தார்கள். ஏக வசனத்தில் அழைத்துக் கொஞ்சும் அளவுக்கு நெருக்கமான தோழைமை கொண்டார்கள். சிவன் அவர்களுடைய சக உழைப்பாளியை ஒத்தவனானான். மிகச்சிறந்த நட்புச் சக்தியாக அவர்களுக்கு சிவவடிவம் உருப்பெற்றது. சிவனே ஆலோசனை வழங்கும் தோழனானான். குருவானான். காதலனுமானான். அவர்களுக்கு எல்லாமாகவும் இருந்து வாழ்க்கைக்கு உயர்ந்த பொருளை வழங்கியவன் சிவன். சிறிதளவும் கல்விப் பழக்கமில்லாதவர்கள் அவர்கள். அவர்களுக்கு கல்வித்துறை சார்ந்த கவிவடிவம் பழக்கமில்லை. பாடலிலக்கணம் அறியாதவர்கள். எப்படித் தொடங்கி எப்படி முடிப்பது என்றும் தெரியாதவர்கள். மொழிசார்ந்த எவ்விதப் பயிற்சியும் இல்லாதவர்கள். தளராத முயற்சியால் பொங்கியெழும் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக தாமே புனைந்த வரிகளை மீண்டும்மீண்டும் சொல்லித் துதித்தார்கள். எந்த ஆலயத்தின் வாசலிலும் கருவறையிலும் உதிக்காத அவ்வரிகள் வயல்வெளியில் வாய்வார்த்தைகளாக உச்சரிக்கப்பட்டன. சோளக்கதிர்களும் மரக்கிளைகளும் தலையசைத்து ரசித்த அந்த வரிகளை சிவனும் ரசித்திருக்கக்கூடும். கன்னட வசனக்காரர்களின் எல்லா வசனங்களும் இவ்விதமாக வயல்வெளியகளில் உருவாகி வயலை நோக்கி மொழியப்பட்டவை. வயல்வெளி என்பதையும் வெட்டவெளி என்பதையும் குறிப்பிட கன்னடத்தில் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது. அது ‘பயலு ‘ . அந்த வயல்வெளியில் அந்த வெட்டவெளியெங்கும் சரணர்களால் நிரப்பப்பட்ட பாடல்களை அல்லது வார்த்தைகளை அந்த வெளியில் வீற்றிருக்கும் சிவன் கேட்டுக்கொண்டிருந்தான். கவித்துவ எழுச்சி மிகுந்த இந்தச் சித்திரம் என் மனத்திலெழும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் தொகுப்பு வெட்டவெளி வார்த்தைகள். கன்னடத்தில் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவரான எச்.எஸ்.சிவரப்பிரகாஷ் என்பவரால் தொகுக்கப்பட்டு தமிழில் மிகச்சிறந்த கவிஞரான சுகுமாரனும் மொழிபெயர்ப்பாளராக அரும்பிக்கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வியும் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். சில கவித்துவ உச்சங்களை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு முப்பது வசனக்காரர்களின் 108 வசனங்கள் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வசனக்காரர்களில் முக்கியமானவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி, தேவர தாசிமய்யா ஆகியோருடைய வசனங்கள் அதிக எண்ணிக்கையிலும் பிறரது வசனங்கள் பிரதிநிதித்துவ எண்ணிக்கையிலும் இடம் பெற்றுள்ளன. இந்த முப்பது வசனக்காரர்களில் பதின்மூன்று பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். வசனக்காரர்களில் சிலர் நெசவாளிகள். சிலர் செருப்புத் தைக்கும் தொழிலாளிகள். சிலர் படகோட்டிகள். சிலர் மாடு மேய்ப்பவர்கள். சிலர் ராட்டை சுற்றுபவர்கள். சிலர் மாடு மேய்ப்பவர்கள். சிலர் கூத்துக் கலைஞர்கள். திருட்டுத் தொழிலில் பழகிய ஒருவரும் கூட வசனக்காரராக மதிக்கப்பட்டிருக்கிறார்.
‘நிலமொன்றே சேரிக்கும் சிவாலயத்துக்கும் நீரொன்றே பருகவும்
கழுவவும் ‘ என்று தொடங்குகிறது பசவண்ணருடைய ஒரு வசனம். மிக ஆதாரமான ஒரு
புள்ளியை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறது இவ்வசனம். ஒரே நிலத்தின்மீதுதான் சேரியும்
இருக்கிறது. சிவாலயமும் இருக்கிறது. ஆனால் வெவ்வேறு பகுதிகளில் இருக்கின்றன.
சேரிக்கும் சிவாலயத்துக்குமான இடைவெளி இணைக்கமுடியாத அளவுக்கு அகண்டுபோய்
இருந்ததுதான் பசவண்ணரை உறுத்தியிருக்கவேண்டும். ஆலயத்துக்கும் சேரிக்கும் ஒரே
ஆதாரமான நிலத்தை நாம் மதிப்பது உண்மையென்றால் அந்நிலத்தின்மீது வீற்றிருக்கும்
சேரிக்கும் ஆலயத்துக்குமான மதிப்பை நாம் ஏற்பதுவே உண்மையறிவாகவும் இருக்கும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைப்போல நிலமொக்கும் எல்லாப் பொருட்களுக்கும்
என்று சொல்லத் தோன்றுகிறது. உண்மை அறிவு என்பது தன்னையறிதல் என்றும் தன்னையறிதல்
என்பது தனக்குள் இருக்கும் ஈசனை அறிதல் என்றும் பசவண்ணர் நம்புகிறார். தான் வேறு
உலகம் வேறு என்பது மாயை. தனக்குள் உலகமும் உலகத்துக்குள் தானும் கலந்திருப்பதே
உண்மை. இதன் தொடர்ச்சியான புரிதலே சேரிக்குள் வீற்றிருப்பதும் சிவனே, ஆலயத்துக்குள் வீற்றிருப்பதும் சிவனே என்னும் தெளிவாகும்.
இந்த நிலத்தின் ஒவ்வாரு மண்துகளிலும் இடம்பெற்றிருக்கும் சிவனே எங்கெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறான். சிவனை வணங்கித் தொழுகிறவனுடைய முதல் கடமை சிவனை
முன்னிறுத்தியாவது தமக்குள் காலம்காலமாக வெவ்வேறு காரணங்களால் நிலைபெற்றுவிட்ட
சாதி அடையாளங்களைத் துறந்து இட அடையாளங்கள் மீது படிந்துபோயிருக்கிற உயர்வு
தாழ்வுகளைத் துறந்து கைகோர்த்து ஒத்த மனத்தினராக வாழ்க்கையைத் தொடங்குவதாகவே
இருக்க வேண்டும் என்பது பசவண்ணருடைய மாபெரும் கனவு. ‘நடமாடக்கோயில் நம்பற்கொன்றீயில் படமாடக் கோயில் பகவற்கதாமே ‘ என்னும் தமிழ் வரிகளுக்கு இணையாக இதைச் சொல்லலாம்.
அக்கமகாதேவியின் வசனங்கள் பெரும்பாலானவை காதல் பெருகிய ஒரு
மனத்தின் வெளிப்பாடுகளாகத் தோற்றம் தரக்கூடியவை. அக்கமகாதேவிக்கு மல்லிகார்ஜூனன்
காதலனாகவும் கடவுளாகவும் தோற்றம் தரும் சக்தியாக இருக்கிறான். ‘பட்டுப்பூச்சி தன் பசையால் வீடுகட்டி தன்இழையால் தன்னையே
சுற்றி நெருக்கிச் சாவதைப்போல மனதுக்கு வந்தவைக்கெல்லாம் ஆசைப்பட்டு பட்டு
வேகிறேன் ஐயா, என் மனத்தில் துராசைகள் களைந்து உன்னைக் காட்டுவாய்
சென்னமல்லிகார்ஜூனனே ‘ என்பது
அக்கமகாதேவியின் ஒரு வசனம். முதல் வரியிலேயே தன் மனநிலையைத் தெள்ளத்தெளிவாகச்
சொல்லிவிடுகிறாள். எச்சிலிழைகளால் தன் கூட்டைக் கட்டிக்கொள்வது ஒரு
பட்டுப்பூச்சிக்கு எந்த அளவுக்கு தவிர்க்கமுடியாத செயலோ அதே அளவுக்கு மனத்திலெழும்
ஆசை எண்ணங்களால் கனவுக் கோட்டையைக் கட்டுவதும் தவிர்க்கமுடியாத செயலாகும். அது
மட்டுமல்ல, தடுக்கமுடியாத செயலும்கூட. தன் இழைகளில் இறுக்கம் தாளமால்
தான் உயிரையே இழக்க நேரும் என்பது பட்டுப்பூச்சிக்கும் தெரிந்த விஷயமே. ஆனால்
உயிருக்கஞ்சி எந்தப் பட்டுப்பூச்சியும் கூடுகட்டாமல் இருப்பதில்லை. தன் கனவுகளே
தன்னைப் பொசுக்கிவிடும் என்று அறிந்தநிலையிலும் மனத்தால் தன் ஆசைகளைக்
கட்டுப்படுத்திக்கொள்ள இயல்வதில்லை. ஆனால் அவளுடைய நோக்கம் இவ்விதமாகக் கட்டி
எழுப்பப்பட்ட கனவுக் கோட்டைகளுக்குள் சென்று குடியிருப்பதல்ல. மல்லிகார்ஜூனனை
அறிவதொன்றே அவளை வழிநடத்தும் மாபெரும் கனவு. அந்த மாபெரும் கனவே தன்னை
ஆக்கிரமித்துவிட்டது என்ற எண்ணத்தால் கனவில் லயிக்கும் ஒவ்வொரு முறையும்
கருதுகிறாள். ஆனால் அக்கனவு மல்லிகார்ஜூனனிடம் வழிநடத்துநம் கனவல்ல என்பதைத்
தாமதமாகவே புரிந்துகொள்கிறாள். துக்கம் தாளமால் அரற்றுகிறாள். தவறாக வழிநடத்தும்
ஆசைகளை அகற்றி மல்லிகார்ஜூனனிடம் வழிநடத்தும் ஆசையை மட்டும் உதிக்குமாறு செய்கவென
மல்லிகார்ஜூனனிடமே உருக்கமாக வேண்டுகிறாள்.
சித்தராமரின் ஒரு வசனம் கனிவுடன் ஒரு கோரிக்கையை
முன்வைக்கிறது. ‘ஒரு கோழி கூவுகிறது பகலிரவு பாராமல். அதையறியார்
மனிதர் கூட்டம் . அறிந்தால் பாவபந்தமில்லை. மறந்தால் பிறப்பு இறப்புக்கு
எல்லையுமில்லை. கபில சித்த மல்லிகார்ஜூனனே ‘ என்பதுதான்
அக்கோரிக்கை. விடியலின் வருகையை உலகுக்கு அறிவிக்கும் கோழியை அனைவரும் அறிவார்கள்.
ஆனால் சித்தரமார் பகலிரவு பாராமல் சதாநேரமும் கூவிக்கொண்டிருக்கும் ஒரு கோழியின்
சித்திரத்தை நம்முன் நிறுத்துகிறார். எது அந்தக் கோழி என்னும் கேள்வியை எழுப்பஒம்
கணமே மனசாட்சி என்னும் விடையை நம் அகக்கண் கண்டடைந்துவிடுகிறது. இந்த மனசாட்சி
என்னும் கோழி விடியலை அறிவிக்கும் கோழி அல்ல. மாறாக, இரவு என்பதே
அண்டாமல் சதாகாலமும் வெளிச்சம் பரவியிருக்கும்படி நெஞ்சைப் பாதுகாத்துக்கொள்ளத்
தூண்டும் கோழி. நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாடுகளை அறிவிக்கும் கோழி. நல்ல
பாதைக்கும் முள்ளடர்ந்த பாதைக்கும் உரிய வேறுபாட்டைப் பிரித்தறிய உதவி புரியும்
கோழி. நேர்மைக்கும் வஞ்சனைக்கும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் செங்கோன்மைக்கும்
கொடுங்கோன்மைக்கும் இடையிலான வித்தியாசங்களுக்குப் பின்னணியாக உள்ள காரணங்களை
உணர்த்தியபடி இருக்கும் கோழி. கிட்டத்தட்ட ஓர் அறிவிப்பு விளக்கின் வெளிச்சம்
எப்போதும் பாதையின்மீது படிந்திருப்பதைப்போல இந்தக் குரல் எல்லாத் தருணங்களிலும்
ஒலித்தபடி இருக்கிறது., மனத்துக்கண்
மாசிலனாக வாழத் தூண்டுவது இக்குரல். மனிதர்களை அறவழியில் செல்லும் ஒருவன்மீது பாவத்தின்
கரிய நிழல் படர்வதில்லை. அறமற்ற வழிகளில் செல்கிறவன் மீதுதான் பாவத்தின் கருநிழல்
படரத் தொடங்குகிறது. பாவமே மறுபிறப்புக்குக் காரணம். இக்கணத்தில் சித்தராமரின்
கோரிக்கை மல்லிகார்ஜூனை முன்னிறுத்தி சொல்லப்பட்டிருந்தாலும் உண்மையில்
அக்கோரிக்கை மல்லிகார்ஜூனனுக்கு உரியதல்ல. சக மனிதர்களை நோக்கியே இக்கோரிக்கை
முன்வைக்கப்படுகிறது. பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர துணையாக இருக்கும்படியோ, இந்த உலகத் துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும்படியோ அவர்
வேண்டுதல்களை முன்வைக்கவில்லை. மனத்துக்கண் மாசிலனாதலே அறமென்னும் அந்த அறத்தையொட்டி
வாழ்வதே பவத்தின் நிழல் படியாமல் வாழும் வழியென்றும் அவருக்குத் தெரிந்தே
இருக்கிறது. இந்தத் தெளிவையே பகலிரவு பாராமல் ஒரு கோழி மனசாட்சியாக நின்று
கூவிக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இறைவனை முன்னிறுத்தி அறவழிப்பட்ட
வாழ்க்கையின் மீதான விருப்பத்தை சகமனிதர்களிடம் ஊட்டும் வகையில் பேசும் இத்தகு
வசனங்கள் சமூகக் கனவில் மிக முக்கியப் பங்களிப்பைச் செலுத்துகின்றன.
தேவர தாசிமய்யாவின் வசனம் ராமனாதனை முன்னிட்டு
மொழியப்பட்டவை. ‘கிழிந்த கோணிப்பையில் ஒருவர் நெல்லை நிரப்பினான்.
தீர்வைக்குப் பயந்து இரவெல்லாம் நடந்தான். நெல்லெல்லாம் சிதறிப்போய் மிஞ்சியது
கோணிப்பை, பலவீனன் புத்தி இதுபோல் பார் ராமநாதா ‘ என்பது அவருடைய வசனங்களில் ஒன்று. சித்தராமர் குறிப்பிடும்
அறமே இங்கு மீண்டும் வலியுறுத்தப்படுவதை வாசகர்கள் எளிதில் உணரமுடியும். முதல்
கோணல் முற்றும் கோணல் என்று சொல்வதுண்டு. அறமற்ற முதல் அடி தொடர்ந்து அறமற்ற
வழியிலேயே நடக்க வைக்கிறது. நெல்லை வாங்கிச் செல்ல வந்தவன் அல்லது உரிமையோடு
எடுத்துச் செல்ல வந்தவன் உரிய கொள்கலனின்றி வெறும் கையோடு சென்றிருக்க
வாய்ப்பில்லை. கிடைத்தவரைக்கும் லாபமெனறு சுருட்டிக்கொண்டு ஓட முயற்சி செய்பவன்தான்
கைக்க அகப்பட்ட கோணிப்பையில்- அது ஓட்டைகள் நிறைந்ததா அல்லது நல்ல பையா என்று
பார்க்கக்கூட நேரமில்லாமல்- வேகவேகமாக நிரப்புவான். இது அறத்துக்கெதிரான முதல்
செயல். தொடர்ந்து தீர்வையைத் தவிர்க்க குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பது இரண்டாவது
செயல். நெல் சிந்திச் சிதறுவதுகூடத் தெரியாத அளவுக்கு பதற்றம் அவனைத் தடுக்கிறது.
இறுதியில் மிஞ்சியது என்ன ? வெறும்
கோணிப்பைதான். இரவெல்லாம் துாக்கிச் சுமந்து நடந்த உழைப்பு எவ்விதமான பயனையும்
தரவில்லை. எவ்வித நிலையிலும் அறவழியிலிருந்து சற்றும் பிசகாமல் நடப்பதொன்றே
மாபெரும் வலிமையென்பதும் அவ்வலிமை இல்லாதவர்கள் பலவீனமானவர்கள் என்பதும்
தாசிமய்யாவின் எண்ணம். இந்த அறத்தைச் சார்ந்திருந்தால் மட்டுமே தான் வேறு
பிரம்மாண்டம் வேறு என்னும் நிலையைக் கடந்து தானும் பிரம்மாண்டமும் ஒன்றே என்கிற
நிலைக்கு உயர முடியும். அந்நிலை கிட்டத்தட்ட தன்னையே அறத்திடம் ஒப்படைத்தைப்போன்ற
நிலை. தானே பிரம்மாண்டமாக நிற்பது உணரப்பட்டபிறகு, தன்னைத் துறந்து
பிரம்மாண்டத்தைப் பார்க்க யாரும் முயற்சி செய்யமாட்டார்கள் என்பது தாசிமய்யாவின்
உறுதியான நம்பிக்கை. இதை நிறுவ அவர் எடுத்துக்காட்டும் உவமைகள் ஏராளம். ‘பானையை நொறுக்கி வெற்றுவெளியைப் பார்ப்பதேன், பானையிலிருப்பதே வெற்றுவெளி என்று தெரிந்தாற் போதாதா ? ‘ என்று வினவுகிறார். ‘பட்டத்தை அறுத்து நூலைப் பார்ப்பதேன், பட்டமே நூலென்று தெரிந்தால் போதாதா ? ‘ என்று யோசிக்கத் தூண்டுகிறார். இறுதியாக ‘கங்கணத்தை உடைத்து பொன்னைப் பார்ப்பதேன், கங்கணமே பொன்னென்று தெரிந்தால் போதாதா ? ‘ என்று கேட்கிறார். இக்கேள்வியின் ஆழத்தைப்
புரிந்துகொள்கிறவர்கள்தான் அறத்தின் பாதையைப் புரிந்துகொள்ள முடியும்.
அறத்தின் பாதையில் நடப்பது அந்த அளவுக்கு எளிதானதல்ல என்பது
வசனக்காரர்களுக்கும் தெரிந்த உண்மைதான். ஒரு பிரச்சனையை வெல்லும் வழி அதை முழுக்க
முழுக்க நேருக்குநேர் எதிர்கொள்வதுமட்டுமே. அச்சம் நம்மைக் கோழையாக்கிவிடும்.
பின்வாங்குவதோ இலக்கை அடையமுடியாத அளவுக்குத் தோல்வியைத் தந்துவிடும். குறுக்கு
வழிகளோ நம் உழைப்பின் மதிப்பை நாம்மையே குறைத்து மதிப்பிடவைத்து அறமற்ற வழிகளில்
இறக்கிப் பள்ளத்தில் தள்ளிவிடும். நேருக்குநேர் நின்று எதிர்கொள்வதன் தீவிரத்தை
அல்லமப்பிரபு அழகான வசனமாக்கியுள்ளார். ‘கள்ளனுக்கஞ்சி காட்டுக்குள் புகுந்தால் புலி
தின்னாமல் விடுமா ? புலிக்கஞ்சி
புற்றுக்குள் நுழைந்தால் பாம்பு கொத்தாமல் விடுமா ? ‘ என்ற உவமைகள்
ஆழ்ந்து யோசிக்கவைப்பவை. மரணத்துக்கு அஞ்சி பக்தனாவதை ஒருவித வேஷம் என்று
வெளிப்படையாகவே அல்லமப்பிரபு சுட்டிக்காட்டுகிறார். பக்தி மலர்வது ஒரு பூ
மலர்வதைப்போல மலர்கிற ஓர் ஈடுபாடு அல்லது ஆர்வமாகும். அது ஓர் இன்பநிலை. லயிப்பு.
அது அடையத்தக்க ஒரு நோக்கமல்ல. உழைத்துப் பெறத்தக்க ஒரு வெகுமதியுமல்ல. ஆனால் அந்த
நிலையில் வாழும் ஆர்வம் அரும்பும்போது அறத்தின்மீதான நாட்டமும் கைகூடி விடும்.
இருள் கரைந்து ஒளிவிளக்கின் சுடர் படரும். அத்தகையோரே இறைவனுக்கு
நெருக்கமானவர்கள். மனமும் உடலும் கரைந்துபோயிருக்கும் அவர்களுடைய அபிஷேகத்தையே
சென்னமல்லிகார்ஜூனன் ஏற்றுக்கொள்கிறான் என்பதுதான் அக்கமகாதேவியின் வாக்கு.
மற்றவர்களின் பூக்களையும் ஆரத்தியையும் உணர்வுத் தூய்மையில்லாதவர்களின்
துாபத்தையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை.
படிக்கப்படிக்க ஒவ்வொரு வசனமும் நமக்குள் ஏராளமான எண்ணங்களை
எழுப்பும்படி அமைந்திருக்கிறது. மூலத்தின் சுவையை தமிழ் மொழிபெயர்ப்பிலும் அழகாகக்
கொண்டுவந்துள்ள கவிஞர் சுகுமாரனும் தமிழ்ச்செல்வியும் பாராட்டுக்குரியவர்கள். ‘வெட்டவெளி வார்த்தைகள் ‘ என்னும்
தலைப்பின் கீழே ‘கன்னட வீரசைவ வசன கவிதைகள் ‘ என்னும் அடைமொழி முதல்பக்கத்தில் காணப்படுகிறது. சரணர்கள்
இயக்கம் வீரசைவமாக உருமாறுவது பசவண்ணருக்குப் பிற்காலத்தில்தான். அதுவரை சரணர்கள்
இயக்கம் ஒரு சமூக இயக்கம் மட்டுமே. ஒரு சமூக இயக்கத்தின் வெளிப்பாடாகத் திகழும்
வசனங்களை மத அடையாள அடைமொழியோடு சுட்டியிருப்பது பிழையாகத் தோன்றுகிறது.
எச்.எஸ்.சிவப்பிரகாஷின் முன்னுரை வசன இலக்கியம் சார்ந்து நல்ல பயனுடைய தகவல்களைத்
தரும்வகையில் அமைந்துள்ளது. அக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.சண்முகம். செறிவான வகையில் அம்மொழிபெயர்ப்பு
அமைந்திருப்பினும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது வழக்கமாக உருவாகும்
ஒருசில பிரச்சனைகளையும் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ‘களச்சூரியர்கள் ‘ என்னும்
வம்சத்தின் பெயர் ‘காலச் சூரியர்கள் ‘ என்றும் ‘பாமினி ‘ என்னும்
வம்சத்தின் பெயர் ‘பஹாமினி ‘ என்றும் ‘ஹொய்சளர்கள் ‘ என்னும்
வம்சத்தின் பெயர் ‘ஹோய்சாளர்கள் ‘ என்றும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் சிக்கல்களை
அடையாளப்படுத்தும் நோக்கத்துடன்மட்டுமே இக்குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இச்சிறுகுறைகள் தொகுப்பின் அழகை எவ்விதத்திலும் குறைப்பவையல்ல.
( வெட்டவெளி வார்த்தைகள் -சாகித்திய அகாதெமி வெளியீடு.
தொகுப்பாசிரியர்: எச்.எஸ்.சிவப்பிரகாஷ். தமிழில்: சுகுமாரன், தமிழ்ச்செல்வி. விலை ரூ50)
(23.09.2005 திண்ணை இணைய இதழில்
பிரசுரமான கட்டுரை)