Home

Sunday 25 December 2022

வணக்கம் சொல்லும் குரங்கு - புதிய பாடல்தொகுதியின் முன்னுரை

  

கடந்த இரு ஆண்டுகளாக அவ்வப்போது என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த பாடல்கள் அடங்கிய தொகுப்பே இந்நூல்.

என் பாடல்கள் உருவாகும் கணங்களைப்பற்றி ஏற்கனவே என் தொகுதிகளில் குறிப்பிட்டிருக்கிறேன். தினமும் ஒருசில மணி நேரங்களாவது, சிறுவர்களும் சிறுமிகளும் ஆடிக் குதிக்கும் இடங்களுக்கு அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த வாய்ப்பை ஒரு நற்பேறாகவே கருதும் மனநிலை வந்துவிட்டது.

வணக்கம் சொல்லும் குரங்கு - சில பாடல்கள்

 நான்கு பாடல்கள்

 

எருமை

 

எங்கள் வீட்டு எருமை

இரும்பு வண்ண எருமை

செடியும் கொடியும் கண்டால்

இழுத்துத் தின்னும் எருமை

வண்ணநிலவன் : காலத்தைத் தெய்வமாக்கும் கலைஞன்

 

வண்ணநிலவனின் கதைகளைப்பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய  முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு வந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்து தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக்கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப்படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

பயணநூல்களும் பரவசமும்

 

பொதுவாக, ஒரு புதிய நகரத்தைப் பார்ப்பதற்காக பயணம் செய்கிறவர்கள் வழக்கமாக அந்த நகரத்தில் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த வரலாற்றுச் சின்னங்களையும் கோவில்களையும் ஆறுகளையும் கடலையும் கோவில்களையும் கடைத்தெருக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் தகவல்களால் நிறைந்திருக்கும். அவையனைத்திலும் ஒருவித ஆவணத்தன்மை இருக்கும். ஆனால் பயணம் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்வதோ, சரிபார்த்துக்கொள்ளும் வழிமுறையோ அல்ல. அது ஓர் அனுபவம். ஒரு புதிய இடத்தைப் பார்க்கும்போது, அந்த இடம் சார்ந்த மனிதர்களையும் நாம் நிச்சயமாகப் பார்ப்போம். அந்த இடத்தையும் அம்மனிதர்களையும் பார்க்கும்போது நமக்குள் ஏராளமான எண்ணங்கள் எழக்கூடும். எண்ணற்ற கேள்விகள் உருவாகக்கூடும். அவற்றின் ஒட்டுமொத்த பதிவே அனுபவம். அனுபவமில்லாத பயணக்கட்டுரைகள் வெறும் தகவல் களஞ்சியமாகவே எஞ்சும்.

Sunday 18 December 2022

மனம் என்னும் விசித்திர ஊஞ்சல்

 

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சலை என்றொரு நாவல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை எழுதியவர் கண்மணி குணசேகரன். அஞ்சலை என்னும் இளம்பெண்ணை அவளுடைய அக்காள் கணவனே இரண்டாம்தாரமாக மணந்துகொள்ள விரும்புகிறான். ஆனால் அஞ்சலையின் தாயாருக்கு அதில் உடன்பாடில்லை. அவளைப் பழிவாங்கும் எண்ணத்தோடு புதிய இடத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையை பெண் பார்க்க அழைத்து வருகிறான் மருமகன். திருமணத்துக்குத் தேதி குறித்துவிடுகிறார்கள். மணமேடையில் அமரும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகன், பெண் பார்க்க வரும்போது மாப்பிள்ளை என தனக்குச் சுட்டிக் காட்டப்பட்ட ஆளல்ல என்பதை அவள் உணர்கிறாள். அண்ணன் கட்டழகன். ஏற்கனவே திருமணமானவன். அவனைக் காட்டி நம்பவைத்து நோஞ்சானான தம்பிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அந்த இல்வாழ்க்கையில் அவள் எப்படி சிக்கிச் சீரழிந்தாள் என்பதுதான் நாவலின் களம். இன்றளவும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நாவல்வரிசையில் அஞ்சலையும் ஒன்றாக இருக்கிறது.

கண்கள் - சிறுகதை

 சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது.   தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த ரகுராயரின் மனத்தில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது.   அமைதியிழக்கிற ஒவ்வொரு தருணத்திலும் அல்லசாணி பெத்தண்ணாவின் வரிகள் மனக்கண்ணின் முன் அலைபாயும்.   பாவங்கள் பொல்லாதவை.   பாவம் புரிவதும் ஒவ்வொரு துளியாக நஞ்சை அருந்துவதும் ஒன்று.   ஏகப்பட்ட கவிதை வரிகள்  மாறிமாறி மிதக்கும்.   விஜயநகரப் பேரரச வம்சத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இனியில்லை என்ற முடிவோடு ஹம்பியை விட்டு வெளியேறிய  அன்றே  தானொரு கவிஞன் மட்டுமே என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.   அல்லசாணி பெத்தண்ணாவைப்போல அரசவைக் கவிஞன் அல்ல.   நாடோடிக்கவிஞன்.   மக்கள் நடுவே வாழ்ந்து அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விழையும் மனிதன்.

Sunday 11 December 2022

அஞ்சலி : விழி.பா.இதயவேந்தன் : வதைபடும் வாழ்வை முன்வைத்த கலைஞன்

 

எண்பதுகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளிவந்துகொண்டிருந்த மன ஓசை இதழில் நான் சிறுகதைகளை எழுதி வந்தேன். அப்போது கர்நாடகத்தில் பெல்லாரி, ஹொஸ்பெட், கொப்பல் ஆகிய ஊர்களுக்கிடையில் தொலைபேசி கேபிள் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். நானும் மற்ற பொறியாளர்களும் இந்த ஊர்களுக்கு இடைப்பட்ட கிராமங்களில் கூடாரமிட்டு தங்கியிருந்தோம். வார இறுதியில் விடுப்பு நாளில் மட்டும் நகரத்தில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்து செல்வோம். எங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களையெல்லாம் ஒரு பெரிய பையில் போட்டு வைத்திருப்பார்கள். அவரவருக்குரிய கடிதங்களை எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவோம். கடிதத்தை எடுக்கும்போதே, முகவரிப்பகுதியில் காணப்படும் கையெழுத்தை வைத்தே அதை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவேன். ஒருகணம் அந்தக் கையெழுத்துக்குரியவரின் முகம் நினைவில் ஒளிர்ந்து நகரும்.

அஞ்சலி: பா.செயப்பிரகாசம் – நிபந்தனையில்லாத அபூர்வ மனிதர்

  

1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளியானது. சிறுகதையே என் வெளிப்பாட்டுக்கான வடிவம் என்பதைக் கண்டுணர்ந்த பிறகு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதினேன். ஒருபோதும் பிரசுர சாத்தியத்தைப்பற்றிய யோசனையே எனக்குள் எழுந்ததில்லை.  அப்போதெல்லாம் கதையின் முதல் வடிவத்தை வேகமாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன். தொடங்கிய வேகத்தில் சீராக எழுதிச்சென்று ஒரே அமர்வில் முடிப்பதுதான் என் பழக்கம். அடுத்தடுத்து வரும் நாட்களில் அந்தப் பிரதியை மீண்டும் மீண்டும் படித்து தேவையான திருத்தங்களைச் செய்வேன். அதற்குப் பிறகே அந்தச் சிறுகதையை வெள்ளைத்தாட்களில் திருத்தமான கையெழுத்தில் படியெடுப்பேன்.