Home

Sunday, 18 December 2022

கண்கள் - சிறுகதை

 சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது.   தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த ரகுராயரின் மனத்தில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது.   அமைதியிழக்கிற ஒவ்வொரு தருணத்திலும் அல்லசாணி பெத்தண்ணாவின் வரிகள் மனக்கண்ணின் முன் அலைபாயும்.   பாவங்கள் பொல்லாதவை.   பாவம் புரிவதும் ஒவ்வொரு துளியாக நஞ்சை அருந்துவதும் ஒன்று.   ஏகப்பட்ட கவிதை வரிகள்  மாறிமாறி மிதக்கும்.   விஜயநகரப் பேரரச வம்சத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இனியில்லை என்ற முடிவோடு ஹம்பியை விட்டு வெளியேறிய  அன்றே  தானொரு கவிஞன் மட்டுமே என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.   அல்லசாணி பெத்தண்ணாவைப்போல அரசவைக் கவிஞன் அல்ல.   நாடோடிக்கவிஞன்.   மக்கள் நடுவே வாழ்ந்து அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விழையும் மனிதன்.

நினைவுகளில் மூழ்கியபடி அவர் சற்றே தூக்கத்தில் ஆழ்ந்தபோது திடீரென நெருப்பின் புகைமணம் எழுந்தது.   பொடிப்பொடியாக ஏதோ வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டது.   ரகுராயர் தன் இதயம் வெகுவேகமாகத் துடிப்பதை உணர்ந்தார்.   சில நொடிகளுக்குள் உடல் தெப்பமாக வேர்வையில் நனைந்துவிட்டது.   இந்த ஜென்மத்தில் நிம்மதியான உறக்கம் தனக்கு இல்லையோ என்னமோ என்று கசப்பான சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தார்.   அடுக்கடுக்கான பல சிந்தனைகள்.   பொருளற்றுத் தோன்றிய ஒவ்வொரு விஷயத்துக்கும்  ஒரு விசேஷ அர்த்தத்தைக் கற்பித்தபடி பேயாகக் குதித்தது மனம்.   என்ன புகை?   எந்த அரண்மனையையும்  கூடகோபுரங்களையும் யார் கொளுத்துகிறார்கள்?   புகையின் மணம் வரவர அடர்த்தியாகிக் கொண்டே இருந்தது.   புகையின் வெப்பம் அவர்மீது படிந்தது.   வெப்பம் மிகுந்த ஒரு கணத்தில் உடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது.   ஐயோ ஐயோ என்று அலறியபடி படுக்கையிலிருந்து நழுவிவிழ இருந்த நிலையில் விழித்தெழுந்தார்.

முகத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்தபடி சாளரத்தின் பக்கம் குழப்பத்துடன் பார்த்தார்.   வானம் இருண்டியிருந்தது.   காற்றுடன் கலந்துவந்த புகைமணம் அவரை மேலும் குழப்பத்துக்காளாக்கியது.   மறுகணமே அந்த மணம் எரிந்துபோன ஹம்பி நகரின் சித்திரத்தை அவருக்குள் விரித்தது. கலைக்கூடங்கள்,  சிற்பங்கள்,  மாளிகைகள்,  நடன மண்டபங்கள்,  நூற்றுக்கால் மண்டபம்,  கடைத்தெருக்கள்,  அரண்மனை அறைகள்,  சிலைகள் எனப் பற்பல சித்திரங்கள் தொடர்ச்சியாக நகர்ந்தன.   அந்த இரவில் கிளம்பியவர்தான்.   பல மாதங்களாகி விட்டன.   இனி ஒட்டிக்கொள்ளவே முடியாது என்கிற அளவுக்கு எல்லா உறவுகளையும் துறந்துவிட்டார்.   யாரோடும் எந்தத் தொடர்புமில்லை.   ஆனால் அந்தப் பதற்றம்மட்டும் தணியாமல் அவரோடு ஒட்டிக்கொண்டது.

திறந்தே இருந்த கதவின் அருகில் ஓடிவந்து நின்றான் சேவகன்.   என்ன ஐயா, ஏதேனும் பயந்துவிட்டீர்களா?”   என்று பணிவுடன் கேட்டான்.    ரகுராயர் அவன் பக்கம் திரும்பிஎங்கிருந்தோ புகைமணம் வருகிறதல்லவா?” என்று கேட்டார்.   ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்பதைப் போல சேவகன் உடனேஆமாம் ஐயா, புகைமணம்தான்என்று பதிலளித்தான்.

என்ன புகை?” அவனுடன் வாசலைநோக்கி நடந்தார் ரகுராயர்.

ஆமாம் ஐயா, அறுவடை முடிந்த கரும்புவயலைக் கொளுத்துகிறார்கள்.   அடுத்த வாரம் மழை வந்துவிடும்.   ஏரோட்டும் முன்பு நெருப்பு வைத்துவிட்டால் உதிர்ந்த சோலைகளும் சக்கைகளும் கரியாகி நல்ல உரமாகிவிடும்.”

வெளியே வந்து பார்த்தார்.   சுருள்சுருளாகக் கருத்த புகை மேலெழ தொலைவில் வயல்வெளி எரிந்து கொண்டிருந்தது.   மஞ்சள் சுடர்கள். ஆடிக்கொண்டும் தாளமிட்டுக்கொண்டும் ஏதோ ஒரு பெரிய மிருகம் எதையோ அள்ளிஅள்ளித் தின்பதைப்போல இருந்தது.   ரகுராயரின் அப்பாவுக்குக் கிருஷ்யதேவராயரைப் போல விஜயநகரப் பேரரசைக் கட்டியாளவேண்டும் என்கிற எண்ணம் உள்ளூரச் சுடர்விட்டபடி இருந்தது.    துரதிருஷ்டவசமாக அவர் தொட்ட இடங்களிலெல்லாம் தோல்விகளையே கண்டார்.   தெற்குக்கோடியில் பாண்டிய நாட்டை அடிக்கடி தாக்கித் தொல்லை கொடுத்தபடியிருந்த திருவாங்கூர் படையினரை அறவே ஒழக்க படைத்தளபதி வித்தலரையும் சின்னத் திம்முவையும் அனுப்பினார்.    அந்த நடவடிக்கை அவர் எதிர்பார்த்த எந்தப் பலனையும் அளிக்கவில்லை.   வித்தலர் வெறும் கையோடு வீடு திரும்ப நேரிட்டது.   பிறகு அகமத் நகருக்கும் கோல்கொண்டாவுக்கும் எதிராகப் பீஜப்பூர் அரசன் படையெடுத்துச் சென்றபோது தாமாக வலிய முன்சென்று பீஜப்பூருக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தார்.    விஜயநகரின் மீதான கோபம் எல்லாத் திசைகளிலும் வளர இதுவே முக்கியக் காரணமாயிற்று. கூடவே இருந்து காட்டிக்கொடுத்தார்கள் தளபதிகள்.   மூர்க்கமான பீரங்கிப்படைத் தாக்குதலைத் தாங்கமுடியாமல் பின் வாங்கியது அப்பாவின் படை. அப்பாவும் கொல்லப்பட்டார்.   கொதிப்பேறிப் பாய்ந்த எதிரிப்படை ஹம்பியைக் கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.

தொடர்ந்து யோசிக்கமுடியாமல் மனம் களைத்தது.   சோர்வோடு வானத்தை அண்ணாந்து பார்த்தார்.   விடிவதற்கு இன்னும் பல நாழிகைகள் இருப்பதைப் புரிந்துகொண்டார்.    நட்சத்திரங்கள் கண்விழித்தபடி எதை உற்றுநோக்கிக் கண்காணிக்கின்றன என்று தெரியவில்லை.    இந்த உலகத்தில் கணந்தோறும் நிகழும் பாவங்களையும் பலவிதமான பரிகாரங்களையும் அவைமட்டுமே அறியக்கூடும் என்றும் அவற்றின் கண்களில் எல்லாமே படம்படமாகப் படிந்து கிடக்கலாம் என்றும் தோன்றியது.   அப்பா உட்பட ஒவ்வொரு மனிதருக்கும் ஹரிஹரராகவும் புக்கராகவும் இருக்கவே ஆசை பிறக்கிறது.   தன்னுடைய சாம்ராஜ்ஜியக் கொடியை திசைகளின் ஒவ்வொரு மூலையிலும் நாட்டிப் பறக்கவிடவே விரும்புகிறார்கள்.   அடுத்தவனும் அதே ஆசையில் மிதந்தபடி இருப்பான். அவனும் படையுடன் கொடியைத் தூக்கிக்கொண்டு அலையக்கூடும் என்கிற எண்ணம் எவருக்கும் இருப்பதில்லை.     கிருஷ்ணதேவராயத் தாத்தாவுக்கும் அப்படி ஓர் எண்ணம் முதலில் ஏற்பட்டதில்லை.

முத்தரையர்பாளையம் எந்தத்திசையில் இருக்கிறது சேவகரே?” அருகில் நின்றிருந்த சேவகரிடம் வினவினார் ரகுராயர்.

இதோ இந்தத் திசையில் ஐயா. இன்னும் ஐந்தாறு கல் தொலைவில் இருக்கிறது.”

 கிழக்கைநோக்கிக் கையைக் காட்டினான் சேவகன்.    ரகுராயர் இருள் அடர்ந்த அத்திசையில் ஒன்றிரண்டு கணங்கள் பார்வையைப் பதித்திருந்தார்.

அங்கே ஆயிகுளம் என்றொரு குளம் இருக்கிறதாமே, தெரியுமா சேவகரே?”

ஆயி குளத்தைத் தெரியாதவர்கள் யார் இருக்கமுடியும் ஐயா.   என் மனைவிக்கு அதுதான் சொந்த ஊர்.   அந்தக் குளத்துத் தண்ணீரைப்பற்றி ஒருநாளாவது   பேசவில்லை என்றால் அவளுக்கு அன்று தூக்கமே வராது-. அந்த ஊருக்கே தண்ணீர் கொடுக்கிற குளம் அது.   அந்த ஊர்க்குழந்தைகள் அம்மாமார்களிடம் பால் குடித்திருக்கிறார்களோ இல்லையோ,  நிச்சயமாக ஆயிகுளத்துத் தண்ணீரை க்  குடித்திருப்பார்கள்  என்று சொல்வதுண்டு.  அந்த அளவுக்குப் பேர்போன குளம்.”   சேவகன் அடுக்கிக்கொண்டே போனான்.

அப்படியா?-” ரகுராயருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதைப்பார்க்கவா  வெகுதொலைவிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள்?” சேவகன் பணிவுடன்  கேட்டான்.

இல்லை, அதுவும் ஒரு காரணம்.”   சேவகனைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தார் ரகுராயர்.   அவர் கண்கள் மறுபடியும் புகையுடன் கொழுந்துவிட்டெரியும் கரும்பு வயல்களைப் பார்த்தன.

அறைக்குத் திரும்பினார்.   இனி தூங்கமுடியாது என்று தோன்றியது.   பலாப்பழ மணம் இப்பொழுது வெகு ஆறுதலாக இருந்தது.    தனக்குப் பிடித்த யாரோ ஒருவர் அருகில் இருப்பதைப் போல உணரமுடிந்தது.   தனக்குப் பிடித்தவர் தாத்தாவைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார்.   இத்தனைக்கும் தாத்தாவை வடிக்கப்பட்ட சிற்பங்களிலும் சித்திரங்களிலும் மட்டுமே பார்த்தவர் அவர்.  ஆனால் அவர் எழுதிவைத்திருந்த ஓலைச்சுவடிகளை அரண்மனைச் சுவடிக்கிடங்கிலும் பூசை அறையின் மாடங்களிலும் தேடித்தேடிப் படித்தவர்.

கிருஷ்ணதேவராயரைப்போல ஒரு வீரனை உருவாக்கும் ஆசையில்தான் அப்பா தூரத்துச் சொந்தத்திலிருந்து குழந்தையாக இருந்தபோதே தத்தெடுத்துப் பாடுபட்டு வளர்த்தார். குதிரையேற்றம், யானையேற்றம், வாட்போர், மற்போர் என எல்லாவற்றிலும் வீரப்பயிற்சியை அளித்தார்.   ரகுராயருக்கும் சிறுவயதில் அப்படி ஓர் ஆசை இருந்தது.   ஆனால் ஏதோ ஒரு நாளில் அவர் கண்கள்  அச்சுவடிகளில் படிந்தன.   அன்றுமுதல் அவர் மனத்தில் மாறுதல்கள் படியத் தொடங்கின.   அகம்பாவமும் அது செய்யத்தூண்டும் பாவமும் திரும்பவந்து தாக்கக்கூடிய அம்புகள் என்கிற எண்ணம் அப்போதுதான் அவர் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்தது.   ஆனால் அந்த எண்ணத்தால் உருவானது அச்சமா தெளிவா என்கிற குழப்பத்துக்குச் சரியான பதில் இல்லை.

ஒருமுறை தலைநகரை அடுத்திருந்த சிற்றரசனுடன் ஏதோ பிரச்சனை மூண்டது.   சரிசெய்துவிட்டுத் திரும்புமாறு படையுடன் அனுப்பிவைத்தார் அப்பா.    படை புறப்பட்டுச் சென்று ஊரைச் சுற்றிவளைத்துவிட்டது.   அந்தக் கணத்திலும் அவர் மனம் குழப்பத்தில் அமிழ்ந்திருந்தது.   கட்டளையிடவேண்டிய இளவரசர் தடுமாற்றத்தில் தத்தளிப்பதைக் கண்டு நிலைகுலைந்தது படை.   ஒரே கணம் தான்.   தாத்தாவின் சுவடிக்குறிப்புகள் கண்முன்னால் எழுந்தன.   தயக்கத்துடன் பொறுப்பைத் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டுக் குதிரையைத் தலைநகரைநோக்கித் திருப்பினார் ரகுராயர். வ்வ்அவர்மீது அப்பா வைத்திருந்த நம்பிக்கை அரும்பிலேயே கருகியது.

படுக்கையில் இருந்து எழுந்து மூலையில் வைத்திருந்த மூட்டைக்குள்ளிருந்து சுவடிக்கட்டுகளை எடுத்தார் ரகுராயர்.   தீபத்தின் திரியைத் தூண்டி வெளிச்சத்தைக் கூட்டினார்.   ஒவ்வொரு சுவடியாகப் புரட்டினார்.   கூப்பிய கைகளுடன் தொழுதுநின்ற அந்தத் தாசிப்பெண் ஆயியின் கண்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் என் மனத்தில் சுடர்விட்டபடி பதிந்திருக்கின்றனஎன்று தொடங்கும் குறிப்பையுடைய சுவடியில் அவர் கண்கள் தாமாக நிலைகுத்தின.   இந்தச் சுவடிகளை கண்டெடுத்தது முதலாக அவர் ஆயிரம் முறையாவது படித்திருந்தார்.   சுவடியைப் பார்க்காமலேயே எழுதப்பட்டிருந்த வரிகளை மனப்பாடமாகச் சொல்லிவிட முடியும் என்கிற அளவுக்கு அந்த வரிகள் பாடமாகிவிட்டிருந்தன.

கூப்பிய கைகளுடன் தொழுதுநின்ற அந்தத் தாசிப்பெண் ஆயியின் கண்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் என் மனத்தில் கூடர்விட்டபடி பதிந்திருக்கின்றன.   ஆச்சரியம்.   அவளை ஏன் என் மனம் மறக்கவில்லை?   அதற்கு முன்பும் சரி, அதற்குப் பிறகும் சரி,   சந்தித்த ஏராளமான மனிதர்களின் முகங்களும் கண்களும் அகன்றுபோய்விட்டன.   இந்த முகம் மட்டும் அழயாமல் ஒரு சித்திரத்தைப்போல திடமாக நிற்கிறது.   இரவுவேளை. என் மனத்துக்குகந்த நரசிங்கரை வழிபடாமலேயே மாலை முழுக்கப் பயணத்தில் மூழ்கியிருந்ததில் மனம் சோர்ந்திருந்தது.   என்றைக்கும் நேராத நேரப்பிசகு அன்று நேர்ந்துவிட்டது. அந்த இருண்ட  வேளையில்தான் தொலைவிலிருந்து வீசிய சாம்பிராணிப் புகைமணம் மனசை மயக்கியது.   அலங்கார விளக்குகள் மின்னும் கோபுர வரிசைகள் நெஞ்சைக் கொள்ளைகொண்டன,.   உள்ளத்தில் நரசிங்கரின் உருவம் எழுவதை உணர்ந்தேன்.   அது ஏதோ ஓர் ஆலயப்பகுதி என்கிற எண்ணத்தில் சற்றும் யோசிக்காமல் குதிரையிலிருந்து இறங்கித் தரையில் விழுந்து வணங்கினேன்.   நித்தியக் கடமையைச் செய்த முழுத் திருப்தியுடன் எழுந்தேன்.   படைவீரர்களும் விழுந்து வணங்கினார்கள்.   படையை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்த இரண்டு வழிப்போக்கர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   அவர்கள் பார்வையில் மிரட்சியையும் மீறி ஏதோ ஒரு கிண்டல் பொதிந்திருப்பதைக் கவனிக்கமுடிந்தது.    அருகில் அழைத்து விசாரித்தேன். முதலில் அவர்கள் எதைச் சொல்லவும் தயங்கினார்கள்.   பிறகு அதிகாரத் தொனியுடன் கேட்டபிறகுதான் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.    அது கோயில் அல்ல, ஆயி என்னும் ஒரு தாசியின் மண்டபம் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் என் ரத்தம் கொதித்தது. நிர்வாணப்படுத்தப்பட்டதைப்போல அவமானமாக இருந்தது. இடித்துத் தள்ளுங்கள் அந்த மண்டபத்தை என்று பின்னால் நின்றிருந்த படைவீரர்களிடம் கட்டளையிட்டேன்.   உடனே சீறிப்பாய்ந்தார்கள் வீரர்கள். மண்டபச் சுவர்கள் இடிபட்டு சரியும் ஓசையை ஆனந்தத்துடன் கேட்டேன் நான்.    அது எரியூட்டப்பட்டபோது எழுந்த மணம் நெஞ்சில் நிறைந்தபிறகுதான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.

அப்போதுதான் ஓடோடி வந்து நின்றாள் அந்தத் தாசிப்பெண்.   வயதில் மிக இளையவள்.   ஆனால் அங்கலட்சணங்களில் செதுக்கிவைத்த சிலையைப்போல இருந்தாள்.   தொழுத கையோடு அவள் அரசே என்று என் முன் பணிந்தபோதுதான் என் வேகம் சற்றே தணிந்தது.   என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபோது மேலும் கொஞ்சம் தணிந்தது.   இரவு முழுக்க எரிந்தது அந்த மண்டபம். விடியும் வேளையில் அந்தத் தாசி மறுபடியும் என்னைப் பார்ப்பதற்காக நாங்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தாள்.   அவள் அமைதி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   கரிந்த மேடாகக் காட்சியளித்த அந்த மண்டபத்தை ஒருகணம் திரும்பிப் பார்த்தாள்.   பிறகு என்னிடம்அரசரிடம் ஒரே ஒரு சலுகையை நான் எதிர்பார்க்கலாமா?” என்று கேட்டாள்.   என்ன சொல்?” என்றேன் நான்.   இந்த மண்டபம் எரிந்ததாகவே இருக்கட்டும். எனக்கு இந்த மாடமாளிகை வேண்டாம்.   கூடகோபுரங்கள் வேண்டாம்.   எங்காவது ஒரு கோயில் கூடத்தில் ஒதுங்கிக் கொள்வேன்.  ஆனால் இம்மண்டபம் இருந்த இடத்தில் ஒரு பொதுக்குளம் வெட்டிக்கொள்ள அனுமதி தரவேண்டும்என்று கேட்டாள்.   அவள் கோரிக்கையை அனுமதிப்பதில் எனக்கொரு தடையுமில்லை.   என் சம்மதத்தைக் கேட்டு அவள் மிகவும் மகிழ்ந்தாள்.   தன் நன்றியைக் காட்டும் விதமாக மறுபடியும் காலில் விழுந்து வணங்கிவிட்டுச் சென்றாள்.

அவள் முகாமைவிட்டு அகன்ற கணத்தில் என் மனத்தை யாரோ குத்திக் கிழித்ததைப்போல இருந்தது.   இனம்புரியாத குற்ற உணர்வு பெருக்கெடுத்தது. கொண்டவீட்டுரெட்டிகளை அடக்கிய ஹரிஹரரும் கோகர்ணத்தை வெற்றிகொண்ட நரஸநாயக்கரும் செய்யாத ஒரு வேலையை நான் செய்துவிட்டேன்.   ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசாமல் நின்ற ஆயியின் கண்கள் மீண்டும்மீண்டும் மனசிலெழுந்து வதைக்கத் தொடங்கின.     அவள்முகம் எவ்விதமான உணர்வையும் வெளிக் காட்டவில்லை.   ஆனால் மனத்துக்குள் எப்படியெலலாம் குமைந்தாளோ?   வயிறெரிய என்னென்ன நினைத்தாளோ? சபித்திருப்பாளோ என்னமோ?   ஒரு சாபத்தின் நிழல் என் வம்சத்தின் மீது படிய நானே காரணமாக இருந்துவிட்டதை நினைத்தபோது உருவான வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல.   இன்று இந்த மண்டபம் எரிந்து சரிந்ததைப் போல நாளை என் நாடும் நகரமும் எரிந்து போகுமோ.   இறைவா. நரசிங்கப்பெருமாளே.   என்னைக் கைவிட்டுவிடாதே.”

சுவடிகளை மூடிவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீபத்தில் பக்கம் பார்வையைத் திருப்பினார் ரகுராயர்.   தீபச்சுடருக்கு ஒரு பெண்ணின் உருவம் தெரிவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்.   எதையோ யாசிக்கும் கண்கள்.   தொழும் கைகள். உடனே ரகுராயர்  துணுக்குற்று எழுந்து நின்றார்.   சட்டென காட்சி மறைந்ததை உணர்ந்தார்.   தான் பார்த்ததை அவரால் நம்பவும் முடியவில்லை.   நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.   நெற்றியைத் தேய்த்தபடி அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.   பலாப்பழ மணம் மூக்கைத் துளைத்தபடி இருந்தது.

சத்திரத்தைவிட்டு வெளியே வந்தார் ரகுராயர்.   நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றார்.   தொலைவில் எரிந்துகொண்டிருக்கும் கரும்பு வயல்களை நோக்கி நடந்தார்.   நெருங்கநெருங்க புகையின் அடர்த்தியான மணம் மூச்சைத் திணறவைப்பதைப்போல இருந்தது.    எரியும் வயல்வெளிகள் வெவ்வேறு விதமாக வெவ்வேறு கோணங்களில் காட்சியளித்தன.   ஒரு புள்ளியில் ஒரு கோபுரம் எரிவதைப்போலத் தெரிந்தது. 

மற்றொரு புள்ளியில் ஆயிரக் கணக்கான மாடங்களைக் கொண்ட அரண்மனையைப்போலக் காணப்பட்டது.   ஹம்பி நகரும் இப்படித்தான் எரிந்தது.   ஆயிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான விலையை அந்தச் சாம்ராஜ்ஜியம் கொடுத்துவிட்டது  என்று யாரிடமாவது சொல்ல விரும்பினார். அருகில் யாரும் இல்லை.   ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி வெகுநேரம் அங்கேயே நின்றிருந்தார்.

சத்திரத்தை நெருங்கியபோது விடியத்தொடங்கியிருந்தது.   வாசலில் நின்றிருந்த சேவகன்  குளிப்பதற்குத் தண்ணீர் நிரப்பியாகிவிட்டதுஎன்று தெரிவித்தான். நன்றி சொல்லிவிட்டு அறைக்குச் சென்ற ரகுராயர் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு பின்கட்டிலிருந்த கிணற்றைநோக்கிச் சென்றார். குளிர்ச்சியான நீர் தலையில் விழுந்து உடலில் பரவியதும் உடற்களைப்பும் மனக்களைப்பும் சற்றே நீங்கியதைப்போல இருந்தது.

புத்துணர்ச்சியுடன் அறைக்குத் திரும்பியவர் சில கணங்கள்   நரசிங்கரை மனத்துக்குள் நினைத்து மந்திரங்களைச் சொன்னார்.   பெத்தண்ணாவின் பாடல்கள் இரண்டைப் பாடினார். அவர் மனம் ஒருவித நிம்மதியை உணர்ந்தது. பிறகு சட்டெனத் தாத்தாவைப் பற்றிய நினைவுகளுக்குத் தாவத் தொடங்கியது. பழகிவிட்ட பலாப்பழ மணம் நெஞ்சில் நிறைந்திருந்தது.

தன் ஒரே உடைமையான சின்னத் துணிமூட்டையுடன் அறையிலிருந்து வெளியே வந்தார் ரகுராயர். சேவகனிடம் சில நாணயங்களைக் கொடுத்தார்.

முத்தரையர்பாளையத்துக்குத்தானே ஐயாபணிவுடன் கேட்டான் சேவகன்.

ஆமாம்.

ஒருசில நொடிகள் தாமதியுங்கள் ஐயா.   நேற்று ஊரிலிருந்து என் மைத்துனன் வந்திருந்தான்.   இன்று அவன் திரும்பிப் போகிறான்.   நீங்கள் அவனுடனேயே மாட்டு வண்டியிலேயே சென்றுவிடலாம்.   களைப்பும் தெரியாது.   பேச்சுக்கும் நல்ல துணையாக இருப்பான்.”

எதற்கு அவருக்கு வீண்தொல்லை?”

அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா.   அவன் உங்களை ஆயிகுளத்துக்கு அருகிலேயே விடுவான்.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சலங்கை பூட்டிய வண்டி வாசலுக்கு வந்து நின்றது. சிரித்தபடியே வண்டியை விட்டு  இறங்கிய சேவகனுடைய மைத்துனன் ரகுராயரைப் பார்த்து வணங்கினான்.

கேவசா, கவனமாக அழைத்துச்செல்.

சொல்லிக்கொண்டே ரகுராயரின் துணிமூட்டையை வண்டிக்குள் வைத்தான் சேவகன்.   தொடர்ந்து ரகுராயரும் வண்டிக்குள் ஏறினார்.   சேவகன் வணங்கி நகர்ந்துக் கொள்ள வண்டி புறப்பட்டது.   தற்செயலாக ரகுராயரின் கண்கள் இரவில் எரிந்துகொண்டிருந்த வயல்களின் பக்கம் பார்த்தன. காலை வெளிச்சத்தில் கரிபடிந்த மொட்டை மேடாகக் காட்சியளித்தன வயல்கள். ஒருகணத்துக்கு மேல் அதைப் பார்க்கமுடியாமல் பார்வையைத் திருப்பினார்.

வழியெல்லாம் ஏகப்பட்ட தோப்புகள்.    வயல்கள்.   கூட்டம் கூட்டமாகப் பறந்துசெல்லும் பறவைகள்.   பேச்சின் களிப்புடன் அவர் மனம் எல்லாக் காட்சிகளையும் உள்வாங்கியபடி இருந்தது.   பறவைகளின் சித்திரம் அவர் மனத்தை ஆனந்தத்தால் நிரப்பியது.   தன் வாழ்வும் இனி ஒரு பறவையைப் போன்றதாகவே இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்.    எதையும் சிதைக்கத் தெரியாத பறவை. எதையும் சுமக்கவும் தெரியாத பறவை.

ஆயிகுளம் நெருங்கியதும் வண்டியிலிருந்து இறங்கினார் ரகுராயர்.   அழகான தோப்புக்கு நடுவே இருந்தது அக்குளம்.    காலை வெளிச்சத்தில் வெள்ளித்தகடைப்போல மின்னிக் கொண்டிருந்தது தண்ணீர்ப்பரப்பு.   தாத்தாவின் சுவடிக்குறிப்புகள் மறுபடியும் நினைவில் எழுந்தன.   சுவடியில் படித்துத் தெரிந்து கொண்ட குளத்தை நேரில் பார்ப்பதை நம்பாதவராக வெகுநேரம் கரையோரமாக நின்றிருந்தார்.   இனம்புரியாத நிம்மதியுணர்வால் மனம் நிறைவதை உணர்ந்தார். திடீரென ஒருகணத்தில் தன்னையே உற்றுப்பார்க்கும் ஒரு கண்ணைப்போலத் தெரிந்தது அக்குளம்.   எதையோ சொல்லத் துடித்து உறைந்த தோற்றம்.    எதையோ காண்பதற்காகக் காலம்காலமாகக் காத்திருப்பது போலவும் தோன்றியது.   குளத்தைவிட்டு அகல மனமில்லாதவராக கரையிலேயே உட்கார்ந்தார் ரகுராயர்.

(உலகத்தமிழ் - 2003)