Home

Sunday, 25 December 2022

வணக்கம் சொல்லும் குரங்கு - புதிய பாடல்தொகுதியின் முன்னுரை

  

கடந்த இரு ஆண்டுகளாக அவ்வப்போது என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த பாடல்கள் அடங்கிய தொகுப்பே இந்நூல்.

என் பாடல்கள் உருவாகும் கணங்களைப்பற்றி ஏற்கனவே என் தொகுதிகளில் குறிப்பிட்டிருக்கிறேன். தினமும் ஒருசில மணி நேரங்களாவது, சிறுவர்களும் சிறுமிகளும் ஆடிக் குதிக்கும் இடங்களுக்கு அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த வாய்ப்பை ஒரு நற்பேறாகவே கருதும் மனநிலை வந்துவிட்டது.


சிறுவர்களின் வேகத்தையும் துள்ளலையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இருக்கும் சிறுவன் விழித்தெழுந்துவிடுகிறான். அவனும் அவர்களுடன் விளையாடிக் களிக்கச் சென்றுவிடுகிறான். அவர்களுடைய சொற்கள் எப்போதும் நெஞ்சில் ததும்பிக்கொண்டே இருக்கின்றன. நான் கண்ட பல காட்சிகளை பல தருணங்களில் அப்படியே பாடல்களாக எழுதியிருக்கிறேன். சில தருணங்களில் மாற்றியும் எழுதியிருக்கிறேன். எழுதி்யபோதும் சரி, எழுதாமல் இருந்தபோதும் சரி, அவர்களுடைய விளையாட்டுகளை வேடிக்கை பார்ப்பதைமட்டும் ஒருபோதும் நான் நிறுத்தியதில்லை. அந்தக் காட்சிகள் ஒருவகையில் என்னை ஊக்கமுடன் வைத்திருக்கும் மருந்து என்றே சொல்லலாம்.

குழந்தைகளை வேடிக்கை பார்க்க நின்றுவிடும் தருணங்களிலெல்லாம் எங்கள் தொடக்கப்பள்ளியில் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்த கண்ணன் ஐயாவின் நினைவு வந்துவிடும். அவர் அக்காலத்தில் இப்படித்தான் எங்களை விளையாட விட்டுவிட்டு புன்னகைத்தபடி வேடிக்கை பார்ப்பார். பல நேரங்களில் அவரைச் சுற்றி நாங்கள் நின்றிருக்க அவர் எங்களுக்குப் கதைகளையோ பாடல்களையோ சொல்வார். பல நேரங்களில் பாடல்களை தாளக்கட்டோடு பாடுவதற்கும் கற்றுத் தருவார். ஒருசில சமயங்களில் ஏதேனும் ஒரு கதையை விளக்கிச் சொல்லிவிட்டு எங்களை கதைப்பாத்திரங்களாக மாற்றி நடிக்க வைப்பார். அப்படி பல கதைகளை எங்களை நடிக்கவைத்திருக்கிறார்.

ஒருநாள் ஒரு தாய் எலியும் அதன் குஞ்சும் மட்டும் இடம்பெற்ற ஒரு கதையை எங்களுக்குச் சொன்னார் கண்ணன் ஐயா. அந்தக் கதையின் சுவாரசியத்தாலேயே அக்கதை இன்னும் என் மனத்தில் பதிந்துள்ளது. தாய் எலியும் எலிக்குஞ்சும் தன் வளையில் பாதுகாப்பாக இருக்கின்றன. எலிக்குஞ்சுக்குத் தேவையான எல்லாவற்றையும் தாய் எலி கொண்டுவந்து சேர்க்கிறது. ஆயினும் எலிக்குஞ்சுக்கு வளையைவிட்டு வெளியே செல்லவேண்டும் என்னும் ஆவல் உருவாகிறது.  ஒவ்வொரு நாளும் அந்த ஆவலை தாய் எலியிடம் எடுத்துரைக்கிறது. ஆனால் தாய் எலி அதற்கு அனுமதி கொடுப்பதில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி தடுக்கிறது.

ஒவ்வொரு நாளும் தன் திட்டம் தோல்வியில் முடிவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எலிக்குஞ்சு ஒருநாள் தாயிடம் அந்த வளை மிகவும் புழுக்கமாக இருப்பதாகவும் மூச்சு முட்டுவதாகவும் வெளிக்காற்றை சுவாசித்தால்தான் ஓரளவாவது தெம்பு வருமென்றும் சொல்லிப் புலம்புகிறது. அதைக் காணப் பொறுக்காத தாய் எலி வேறு வழி தெரியாமல் தன் குஞ்சு எலிக்கு வெளியே செல்ல சம்மதம் கொடுக்கிறது. உடனே உற்சாகத்துடன் எலிக்குஞ்சு வளையைவிட்டு வெளியேறி தரைக்கு வந்து சுற்றுகிறது.

உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவிடுகிறது. அங்கேயே சிறிது நேரம் வட்டமடித்த காக்கை பிறகு ஏமாற்றத்துடன் வேறு இடத்தை நோக்கி பறந்துவிடுகிறது. நீண்ட நேரம் கழித்து மெதுவாக குழியைவிட்டு வெளியே வந்த எலிக்குஞ்சு அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு நிம்மதியாக மூச்சு வாங்குகிறது. அம்மா சொன்ன சொல்லைக் கேட்காமல் வெளியே வந்தது எவ்வளவு பெரிய பிழை என்று உணர்ந்துகொள்கிறது. உடனே தன் சொந்த வளைக்குச் செல்லும் வழியைத் தேடிக் கண்டுபிடித்து வேகமாகச் சென்று தாய் எலியின் வயிற்றோடு ஒட்டிக்கொள்கிறது.

இதுதான் அந்தக் கதை. அதை ஏற்ற இறக்கத்துடன் விவரித்த பிறகு ”யாராவது மூன்று பேர் வந்து இந்தக் கதையை நடித்துக் காட்டுங்கள்” என்று சொன்னார் ஐயா. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிலைகளைப்போல அமைதியாக அமர்ந்திருந்தோம். உடனே அவரே மூன்று பேரை பெயர்சொல்லி தமக்கு அருகில் வருமாறு அழைத்தார். அவர்களில் நானும் ஒருவன். ஒருவனுக்கு காக்கை பாத்திரம்.  இன்னொருவனுக்கு தாய் எலி பாத்திரம். உயரம் குறைந்த எனக்கு எலிக்குஞ்சு பாத்திரம். கதையின் அனுபவம் மனத்தில் நன்கு பதிந்திருந்ததால் அனைவருமே சிறப்பாகச் செய்து கைத்தட்டல் வாங்கினோம்.

ஏராளமான கதைகளைச் சொல்லி, எங்களைக் கதைகளின் பக்கம் செலுத்தியவர் எங்கள் கண்ணன் ஐயா. கதை படிப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம்மிடம் இருக்கும் புத்தகங்களைக் கொடுத்து படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார். என் வாசிப்புப்பழக்கத்துக்கு அவர் ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. அவரை நான் ஒருபோதும் மறக்கமுடியாது. அவருக்கு இத்தொகுதியைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுப்பில் உள்ள சில பாடல்கள் பொம்மி, சிறுவர்மணி இதழ்களில் வெளிவந்தவை. அவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். என் மனைவி அமுதாவின் அன்பும் ஆதரவும் என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் முதுகெலும்பாக இருப்பவை. அவருக்கு என் அன்பு எப்போதும் உண்டு. இத்தொகுதியை நல்ல ஓவியங்களுடன் அழகான முறையில் வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி.