Home

Tuesday 3 January 2023

அழகிரிசாமி வந்திருக்கிறார்

  

நவீன தமிழ்ச்சிறுகதையாசிரியர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி ஆகியோரின் அடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் எழுத்தாளராக மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு இசையிலும் கம்பராமாயணத்திலும் எல்லையற்ற ஆர்வம் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோருடன் அவர் இறுதிவரைக்கும் தொடர்பில் இருந்தார். பாரதியார், தியாகராஜர், கவிமணி தேசியவினாயகம் பிள்ளை போன்றோர் எழுதிய சில பாடல்களை ஸ்வரப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தைப் பதிப்பித்தார். கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். மேடையில் நடிக்கத்தக்க அளவில் கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்களை எழுதியிருக்கிறார். கார்க்கி நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். டி.கே.சிதம்பரம் முதலியாரின் வழியில் சிறந்த ரசனைக்கட்டுரைகளையும் எழுதினார். 1942இல் எழுதத் தொடங்கிய அவர் 1970இல் மறைவது வரைக்கும் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக அழகிரிசாமியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் தொடங்கியது. அதையொட்டி பல இடங்களில் கவனிப்பாரற்று சிதறிக் கிடந்த பல கட்டுரைகளை வேலாயுத முத்துக்குமார் தேடித் தொகுத்திருக்கிறார். அதை சிறுவாணி வாசகர் மையம் அழகிய வடிவில் நூலாக்கியிருக்கிறது. புத்தகத்தை ஒரே அமர்வில் படித்துமுடித்ததும் அழகிரிசாமி மீண்டும் வந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது.

அழகிரிசாமி  05.06.1970 அன்று மறைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து. அவருடைய மறைவையொட்டி,  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப்பற்றிய பல்வேறு நினைவுகளை  கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தீப.நடராஜன், ஆ.மாதவன், தி.ஜ.ர., வித்வான் ல.சண்முகசுந்தரம் கி.ராஜேந்திரன், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தேடியெடுத்திருக்கிறார் வேலாயுதமுத்துக்குமார். அக்கட்டுரைகளோடு கல்கி, நகுலன், பி.எஸ்.ராமையா போன்றோர் எழுதிய சில கட்டுரைகளையும் கி.ராஜநாராயணன், வித்துவான் ல.சண்முகசுந்தரம், ஆ.மாதவன் ஆகிய மூவருக்கும் அழகிரிசாமி எழுதிய கடிதங்களையும் கண்டுபிடித்து ஒரு சிறிய தொகைநூலாக உருவாக்கியுள்ளார்.  இக்கட்டுரைகள் வழியாக வாசகர்கள் அழகிரிசாமியைப்பற்றிய ஒரு தோராயமான சித்திரத்தை பெறமுடிகிறது. அதுவே இத்தொகுதியின் வெற்றி.

கி.ராஜநாராயணன்  தன் கட்டுரையில் இளம்வயதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறார். கி.ரா.வும் செல்லையா என்கிற அழகிரிசாமியும் இளவயதுக் கூட்டாளிகள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள். தன் இளம்பருவத்திலேயே கனிவான பார்வையும் கருணையும் செல்லையாவின் நெஞ்சில் குடியேறியிருந்தன என்பதை அறிந்துகொள்ள அந்த நினைவுப்பதிவு உதவி செய்கிறது. அவர் வளர வளர அவருடைய கனிவும் வளர்ந்துகொண்டே சென்றதை அவருடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

கி.ரா. வீட்டில் ஒரு பெரிய நாய் இருந்தது. அந்த நாய் திடீரென புத்தி பேதலித்து வருவோர் போவோரையெல்லாம் கடிக்கத் தொடங்கிவிட்டது. புகார்கள் அதிகரித்ததும் கி.ரா.வின் தகப்பனார் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அன்று மாலை அந்த நாய்க்கு வேலைக்காரர்கள் நல்ல விருந்துச்சாப்பாடு போட்டார்கள். அதுதான் தன் கடைசி விருந்து என அறியாமல் அந்த நாய் விருப்பத்தோடு சாப்பிட்டது. விருந்து முடிந்ததும், அந்த நாயின் கழுத்தில் ஓர் உறுதியான கயிற்றைக் கட்டி அழைத்து வந்தனர். பெரியவர் அதைத் தொட்டுக் கொடுத்ததும் அவர்கள் அந்த நாயோடு வீட்டைவிட்டு வெளியேறினார்கள். சிறுவர்கள் ஆர்வத்தின் காரணமாக அதைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கி.ரா.வும் அழகிரிசாமியும் பின்னாலேயே சென்றார்கள். ஆனால் கி.ரா.விடம் இருந்த உற்சாகம் அழகிரிசாமியிடம் இல்லை.

வழிநெடுக கிடைத்த கற்களையெல்லாம் சேகரித்து தம் பைகளில் நிரப்பிக்கொண்டே நடந்தார்கள் சிறுவர்கள். ஊருக்கு வெளியே நாயை அழைத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு அந்த நாயை அடித்துக் கொல்வதுதான் அவர்கள் திட்டம். அதைப் புரிந்துகொண்ட அழகிரிசாமி அவர்களிடமிருந்து விலகி வழியிலேயே ஓரிடத்தில் சோர்வோடு அமர்ந்துவிட்டார். உற்சாகமாக நாய்க்குப் பின்னால் சென்ற சிறுவர்கள் அந்த நாயைச் சூழ்ந்து கல்லாலேயே அடித்துக் கொன்றனர். நாய் செத்துவிட்டது என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு வந்த வழியே வீட்டுக்குத் திரும்பினார்கள். வழியில் சிலைபோல அமர்ந்திருந்த அழகிரிசாமியின் தோற்றம் உற்சாகத்தோடு ஓடி வந்த கி.ரா.வின் நெஞ்சைக் கரைத்துவிட்டது.  அவர் நெஞ்சிலிருந்தும் அப்போது அழுகை பீறிட்டெழுந்தது. ஒருவருடைய கருணை பிறரையும் கருணையுள்ளவர்களாக மாற்றிவிட்டது.

ஆ.மாதவன் தன் கட்டுரையில் வயதில் சிறியவரானாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனநிலை நிறைந்தவராகவும் இலக்கியத்தைப்பற்றி மட்டுமே எப்போதும் சிந்திப்பவராகவும் அழகிரிசாமி வாழ்ந்த விதத்தைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை தான் தயாரிக்கும் ஒரு மலருக்கு புதுமைப்பித்தனின் இறுதிக்காலம் பற்றி எஸ்.சிதம்பரம் என்பவர் எழுதி சக்தி இதழில் வெளியான பழைய கட்டுரையொன்று தேவைப்பட்டிருக்கிறது. தன் தேவையை உடனே அழகிரிசாமிக்குத் தெரியபடுத்துகிறார். உடனே அக்கட்டுரை வெளிவந்த சக்தி இதழைக் கண்டுபிடித்து அக்கட்டுரையை எழுதி பிரதியெடுத்து அவருக்கு அனுப்பிவைக்கிறார் அழகிரிசாமி. மேலும் மாதவனின் வேண்டுகோளுக்கு இணங்க பிறமொழிகளில் வெளிவந்த சில சின்னஞ்சிறு கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து அனுப்பிவைத்திருக்கிறார். அடுத்தவர்களுக்காக செய்யும் இத்தகு உதவிகளால் அவருக்குக் கிஞ்சித்தும்  பயனில்லை என்றபோதும் நட்புக்காக மகிழ்ச்சியோடு அவ்வுதவியைச் செய்யும் மனம் கொண்டவராக அழகிரிசாமி வாழ்ந்தார் என்பதை மாதவனின் குறிப்புகள் உணர்த்துகின்றன.

லானா சானா என்று அனைவராலும் அழைக்கப்படும் வித்வான் ல.ச.சண்முகசுந்தரம் அழகிரிசாமியுடன் நெருங்கிப் பழகியவர். அழகிரிசாமியின் வாழ்க்கை பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அவர் பதிவு செய்திருக்கும் நினைவுகள் வழியாக உணரமுடிகிறது. பதினாறு, பதினேழு வயதிலேயே சிறுகதைகளும் விருத்தம், வெண்பா போன்ற மரபுப்பாடல்கள் எழுதவும் அழகிரிசாமி பயிற்சி பெற்றிருந்தார். தொடக்கத்தில் ஆரம்பப்பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராகவும் பிறகு சப்ரிஜிஸ்தர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன் இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சில சிறுகதைகள் அவருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியளித்தன. அதன் விளைவாக அதே பத்திரிகைக்கு அவர் உதவியாசிரியராக வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்து சக்தி இதழுக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து தமிழ்நேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மலேசியாவுக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்குத் திரும்பி வந்து காந்தி நூல் வெளியீட்டுக்கழகத்திலும் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்த போதும் மன உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்தார். கிஞ்சித்தும் மனம் சோர்வுறாது இலக்கியம் படைத்தார்.

அழகிரிசாமியின் அகாலமரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கித் தவித்தபோது, அதற்கொரு பதில் சொல்வதுபோல நினைவுக்கு வந்த நாலடியார் பாடலொன்றை லானா சானா பதிவு செய்திருக்கும் விதம் பொருத்தமாக இருக்கிறது.

பல்லான்ற கேளிவிப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வும் அறிதிரேல் கல்லார்கண்

சேதனம்  என்னுமச் சேறகத்தின்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று

அன்பும் அறிவும் நிறைந்த சாரமுள்ள உயிர்களை ருசித்து அனுபவிக்கும் கூற்றுவன் அவை எதுவுமில்லாத சக்கைகளை ஒதுக்கிவிடுகிறான் என்னும் நாலடியாரின் சொல், அழகிரிசாமியைப் பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.

அழகிரிசாமி பத்திரிகைகளுக்காகவோ, புத்தகங்களுக்காகவோ, வருமானத்துக்காகவோ எழுத விரும்பியவரல்ல. தன் மனநிறைவுக்காகவும் இலக்கிய ரசனைக்காகவும் எழுதவே என்றென்றும் விரும்பினார். ஒருமுறை அவர் ஒரு பத்திரிகையில் ஒரு தொடர்கதையை எழுதினார். வழக்கமாக அத்தகு தொடர்கதைகளை எழுதுகிறவர்கள் தமக்கு வகுக்கப்பட்டிருக்கும் வாரக்கணக்குக்குள் அடங்கும்படி திட்டமிட்டு எழுதி முடித்துவிடுவார்கள். ஆனால் மன இயக்கத்துக்கு இசைவாக எழுதிச் செல்லும் பண்புடைய அழகிரிசாமிக்கு அது ஒத்து வரவில்லை. குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரால் கதையை அடக்கமுடியவில்லை. மேலும் வளர்ந்து செல்வதை பத்திரிகை விரும்பாத ஒரு கட்டம் வரும்போது மனத்தில் மிச்சமிருக்கும் மொத்த கதையையும் ஒரு சுருக்கம்போல ஒரே அத்தியாயத்தில் எழுதி முடித்துவிடுகிறார். பிற்பாடு சுருக்கிவிட்ட அப்பகுதியை மனம்போல விரித்தெழுதி முழுமை செய்துகொள்ளலாம் என அவர் திட்டமிட்டிருந்தபோதும் கடைசி வரைக்கும் அந்தச் செப்பமிடும் வேலையை அவரால் செய்யமுடியாமலேயே போய்விட்டது. வெவ்வேறு அல்லல்கள் அவரை வெவ்வேறு திசைநோக்கி இழுத்த இழுப்பில் படைப்பூக்கத்தின் திசையில் அவரால் செல்ல இயலாமல் போய்விட்டது. கல்கி ராஜேந்திரனின் சொற்கள் வழியாக அழகிரிசாமியின் மனம் அடைந்த தவிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

1952இல் வெளிவந்த அழகிரிசாமியின் முதல் சிறுகதைத்தொகுதிக்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். அம்முன்னுரையில் கதை எழுதுவதன் வெவ்வேறு கோணங்களைப்பற்றி விரித்துரைப்பதுபோலத் தொடங்கி அவர் அழகிரிசாமியின் கதையுலகத்தை வந்தடைந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிட்டு அவருடைய இலக்கிய இடத்தை வரையறுக்கும் விதத்தில் நகுலன் எழுதியிருக்கும் கட்டுரை, க.நா.சு.வின் இலக்கியவட்டக் கருத்தரங்கில் எதற்காக எழுதுகிறேன் என்னும் தலைப்பில் ஆற்றிய தன் உரையை அழகிரிசாமியே எழுத்து வடிவத்துக்கு மாற்றி எழுத்து இதழில் வெளியிட்ட கட்டுரை என சில அரிய கட்டுரைகளையெல்லாம் வேலாயுத முத்துக்குமார் தேடியெடுத்து இத்தொகுதியுடன் சேர்த்திருக்கிறார்.

இத்தொகுதியில் பெரும்பான்மையாக அழகிரிசாமியின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன.  அஞ்சலிக்கட்டுரைகள் மட்டுமன்றி, அழகிரிசாமியின் படைப்புலகத்தை முன்வைத்து அவருடைய சமகாலத்திலும் அவருடைய மறைவுக்குப் பிறகான கடந்த அரைநூற்றாண்டுக்காலத்திலும் பல்வேறு கட்டுரைகள் வந்திருக்கக்கூடும். வேலாயுத முத்துக்குமார் அத்தகு கட்டுரைகளையும் தேடித் தொகுக்கவேண்டும். எதிர்காலத் தலைமுறையினருக்கு அது நிச்சயம் நல்லதொரு ஆவணமாக விளங்கும்.

 

(கு.அழகிரிச்சாமி – நிலைபெற்ற நினைவுகள். தொகுப்பாசிரியர் வேலாயுத முத்துக்குமார். சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை – 641038. விலை. ரூ.140)

( புக் டே – இணையதளம் 26.12.2022 )ச்