காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டு திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு முன்பாக பக்கவாதத்தால் அப்பா பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. நடப்பதற்கு மாமா மட்டும் தனியாகச் செல்வார். முடித்துவிட்டு திரும்பிவரும் சமயத்தில் அப்பாவிடம் பேசுவதற்காக வீட்டுக்கு வருவார். இரண்டு பேரும் நேரம் போவதே தெரியாமல் அரசியலிலிருந்து சினிமா வரைக்கும் பேசுவார்கள்.
நாள்முழுக்க
திருவாசகத்தைப் புரட்டியபடி தனிமையில் அமர்ந்திருக்கும் அப்பாவுக்கு அந்தப் பேச்சுதான் பெரிய மருந்து. அவருடைய உரையாடலும்
அவர் ஏற்பாடு செய்த பிசியோதெரபிஸ்ட்டின் தொடர்சிகிச்சையும் அப்பாவுடைய கால்களுக்கு ஓரளவு நடமாடும் ஆற்றலை மீட்டுக் கொடுத்தன. வலது கை
மட்டும் விழுந்துவிட்டது.
அன்று
பேசத் தொடங்கும்போதே “நடராஜா, லண்டன்லேருந்து கிரிஜா வருதாம். காலையிலதான் போன்ல
தகவல் சொல்லிச்சி” என்று உற்சாகமாகச் சொன்னார் மாமா.
அப்போது
நான் தேநீர்க் கோப்பைகளை அவர்களுக்கு முன்னால் ஒவ்வொன்றாக எடுத்துவைத்தபடி இருந்தேன். கிரிஜாவின் பெயரைக்
கேட்டதும் மனமும் உடலும் ஒருமுறை பொங்கி அடங்கியது. மாமா அதே
தகவலை மீண்டுமொருமுறை என்னிடமும் சொன்னார்.
“குடும்பத்தோடதான
வருது?”
என்று
இயல்பாகக் கேட்டுக்கொண்டே என்னுடைய கோப்பையோடு நான் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
“தெரியலை
மகாதேவா. அதப் பத்தி
கேட்டாமட்டும் வாயத் தெறக்கவே மாட்டுது” என்று ஏமாற்றத்துடன்
சொன்னார் மாமா.
நான்
பதில் சொல்லவில்லை. சூடாக தேநீர் மிடறுகளை விழுங்குவதில் மூழ்கியிருந்தேன். அதற்கிடையில் அப்பா “அதயெல்லாம் நினைச்சி
கொழப்பிக்காத அருணாசலம். ஆறு வருஷம்
கழிச்சி வர பொண்ணு தனியாவா வரும்? புருஷன் கொழந்தையோடதான்
கண்டிப்பா வரும். சர்ப்ரைஸா இருக்கட்டும்னு
நெனச்சிருக்கும். இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு எல்லாமே விளையாட்டுதான்” என்று சொன்னார்.
“என்ன
விளையாட்டோ, போ. நெனச்சாவே
சலிப்பா இருக்குது. ரெண்டு வருஷம்
படிச்சிட்டு வரேன்னு போச்சி. அதுக்கப்புறம் ரெண்டு
வருஷம் வேலை செஞ்சிட்டு வரேன்னு சொல்லிச்சி. அப்புறம் அந்த ஊருலயே ஒரு பையன புடிச்சிபோச்சி கல்யாணம் செஞ்சிக்க போறதா தகவல் வந்திச்சி. கொழந்தை இருக்குதோ என்னமோ, எதுவும்
சரியா தெரியலை. எதக் கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்றது கெடயாது. எல்லாமே அதுக்கு விளையாட்டுதான்....” கசப்பில்
அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை.
அன்றுவரை
எனக்குள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒதுங்கியிருந்த கிரிஜாவின் நினைவுகள் புரண்டுவரத் தொடங்கின. ஏதேதோ புதியபுதிய
வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டாலும் அவற்றையெல்லாம் தள்ளிவிட்டு அவள் முகம் மேலெழுந்து
வந்தது. அதைத் தூண்டிவிடுவதுபோல மாமாவும் ஒவ்வொரு நாளும் வந்து ”இன்னும் பதிமூனு
நாள்” ”இன்னும் பன்னெண்டு நாள்” என்று சொல்லிக்கொண்டே
இருந்தார். அவள் நினைவுகள்
பெருகிவருவதைத் தடுக்கமுடியவில்லை. அப்பாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல முகத்தில் புன்னகை படர நடமாடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் ஆழ்மனத்தில் விரிசல் பெரிதாகிக்கொண்டே இருந்தது.
இன்று
காலையில் குளியலறையிலிருந்து அப்பாவை அழைத்துவந்து உடைமாற்றி கூடத்துக்கு அழைத்துவந்து நாற்காலியில் அமரவைத்த நேரத்தில் அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் சென்று
கதவைத் திறந்தேன். சமையல்கார வெள்ளையம்மா
காய்கறிப் பையோடு நின்றிருந்தார். அடுத்து அழைப்புமணி ஒலித்தபோது சலவைக்காரர் சலவை செய்த ஆடைகளை அடுக்கி எடுத்து வந்திருந்தார். அவரும் போன பிறகுதான் அருணாசலம் மாமா வந்தார். ”என்ன அருணாசலம், ஏர்போர்ட்டுக்கு போகலையா” என்று
கேட்டபடி வரவேற்றார் அப்பா.
“ரெண்டு
மூனு நாடுல எறங்கி மாறிமாறி ஃப்ளைட் புடிச்சி வருதாம். ஏர்போர்ட்டுக்கு எப்ப வரும்னு
அதுக்கே தெரியாதாம். அதனால வரவேணாம்னு கிரிஜாவே சொல்லிடுச்சி. மதியானம் வருமோ, சாயங்காலம் வருமோ. சரியா தெரியலை. அதுக்கப்புறம் ஏர்போர்ட்டுக்கு
வெளிய வந்து டாக்சி புடிச்சி பாண்டிச்சேரிக்கு வர இன்னும் ஒரு மூனு நாலு மணி நேரமாவது ஆவும்ல?”
“எவ்ளோ
நேரம் வேணும்னாலும் ஆவட்டும். எதுக்கும் நீ
கவலைப்படாத அருணாசலம். இப்ப ட்ராவல்ஸ்ல நெறய வசதி வந்துட்டுது” என்றார் அப்பா. பிறகு ”நேத்து
ராத்திரி மேட்ச் பார்த்தியா?” என்று கேட்டு பேச்சை திசைதிருப்பினார். நான் ”உக்காருங்க மாமா. எல்லாருக்கும்
டீ கொண்டுவரேன்” என்றபடி சமையலறைக்குள் சென்றேன்.
வெள்ளையம்மா
டீ போட்டு தயாராகவே வைத்திருந்தார். என்னைப் பார்த்ததும் கோப்பைகளில் நிரப்பியபடி “மதியத்துக்கு கேரட்டும் பீன்சும் போட்டு சாம்பார் வச்சிட்டு, கீரைக்கூட்டு பீட்ரூட்
பொரியல் வைக்கலாம்ன்னு இருக்கேன், பரவாயில்லையா?” என்றார். ”அது
போதும் வெள்ளையம்மா, மறக்காம அப்பாவுக்கு மட்டும் ஒரு முட்டைய அவிச்சி வச்சிடு” என்றபடி கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை எடுத்துக்கொண்டு நான் கூடத்துக்குத் திரும்பினேன்.
தேநீரை
அருந்தியபடியே மேசையிலிருந்த திருவாசகத்தை எடுத்து சில கணங்கள் புரட்டினார் மாமா. ”எல்லாமே பாட்டாவே இருக்குதே. உனக்கு எல்லாப்
பாட்டுக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று சந்தேகத்தோடு கேட்டார். அப்பா “தெரியுமே, ஏன் கேக்கற? வருஷக்கணக்கா இதத்தான படிச்சிட்டிருக்கேன்” என்றபடி புன்னகையுடன் தலையசைத்தார்.
“சும்மாதாம்பா
கேட்டேன். எத்தன பாட்டு
இருக்கு இந்த திருவாசகத்துல?”
“அறுநூத்தி
அம்பத்தெட்டு பாட்டு”
“எத்தன
முறை படிச்சிருப்பே?”
“ஒரு
பத்து பன்னெண்டு முறை”
மாமாவின்
புருவங்கள் உயர்ந்தன. “திரும்பத்திரும்ப படிக்கறியே, சலிப்பா இருக்காதா”
அப்பா “ம்ஹூம்” என்றபடி தலையசைத்தார். “ஒவ்வொரு தரம் படிக்கும்போதும் நமக்கு புதுசுபுதுசா அர்த்தம் தோணும் அருணாசலம். திருவாசகத்துடைய அழகே அதுதான்.”
”அதுசரி, எத்தன வருஷமா படிக்கற, தெரியாம இருக்குமா?” என்றபடி ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டி, அவராகவே ஒரு
பாட்டைப் படிக்கத் தொடங்கினார். இரண்டு வரிகளுக்கு மேல் படிக்கமுடியவில்லை. சரியாக சீர்பிரிக்கத் தெரியாமல் தடுமாறி நிறுத்திவிட்டு அப்பாவைப் பார்த்துச் சிரித்தார். “எனக்கு சுத்தமா எதுவுமே புரியலை” என்று உதட்டைப்
பிதுக்கினார்.
“அதே
பாட்ட இப்ப நான் சொல்றேன், கேளு.
உனக்கு தானாவே புரியும்” என்றார் அப்பா. மாமா தன்னிடமிருந்த திருவாசகத்தை அப்பாவின் பக்கம் திருப்பினார். ஆனால் புத்தகத்தைப் பார்க்காமலேயே அந்தப் பாட்டை ஒவ்வொரு சொல்லாக நிறுத்திச் சொல்லி பொருளையும் விளக்கினார் அப்பா.
“இந்தப்
பாட்டுல கொள்ளைன்னு ஒரு சொல் இருக்குதே, அத நீ
நல்லா கவனிக்கணும் அருணாசலம். அதுல ஒரு
அழகு இருக்குது. கொள்ளைன்னா எல்லாருமே
திருடிட்டு போவறதுன்னு அர்த்தம் சொல்வாங்க. ஆனா திருடுங்கறது
வேற. கொள்ளைங்கறது
வேற. பொதுவா
நகைய திருடறவங்க தானியங்கள திருடறதில்ல. தானியங்கள திருடற ஆளுங்க நகைமேல கை வைக்கமாட்டாங்க. அதுக்கு ஒரு எல்லை இருக்குது. ஆனா கொள்ளைங்கறது
எல்லையே இல்லாத திருட்டு. எதையுமே மிச்சம்
வைக்காம இருக்கிற எல்லாத்தயும் ஒரே சுருட்டா சுருட்டி எடுத்துட்டு போறது. அந்த மாதிரி
நெஞ்சில இருக்கிற எல்லாத்தயும் வாரி சுருட்டிட்டு போகற சக்தி பெண்களுடைய பார்வைக்கு இருக்குது. அப்படி எந்தப்
பார்வையிலும் மாட்டிக்காம இருக்கற வழிய காட்டு ஈஸ்வரான்னு பிரார்த்தனை பண்றதுதான்
இந்தப் பாட்டு.....”
அப்பா
சொல்லச்சொல்ல வியப்பில் சிலைமாதிரி உறைந்து கேட்டுக்கொண்டிருந்தார் மாமா. ”அடேயப்பா, நீ பெரிய
ஆள்தான். பெரிய பண்டிதர்மாதிரி அர்த்தம்லாம் சொல்றியே.
நாளையிலேருந்து தெனமும் நான் இங்க வரும்போதெல்லாம் எனக்கு ஒரு பாட்டுக்கு அர்த்தம் சொல்லு. படிக்க முடியலைன்னாலும்
காதாலயாவது கேட்டுக்கறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
”கிரிஜாவ
விசாரிச்சேன்னு சொல்லு, மறந்துடாத”
“இங்க வராம போயிடுமா என்ன? அப்ப நீயே நேரிடையா சொல்லு”
மாமா
எழுந்து சென்றதும் சட்டென கூடமெங்கும் ஒரு வெறுமை சூழ்ந்தது. நான் வேகமாக
எழுந்து குளியலறைக்குள் சென்று தாளிட்டேன்.
ஆறு வருஷங்களாக கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு மறக்கத் தொடங்கியிருந்த கிரிஜாவின் முகம் மீண்டும் மீண்டும் மனத்திலெழுந்து தடுமாறவைப்பதை எப்படி தடுப்பது என்றே புரியவில்லை. முழுவேகத்துடன் ஷவரைத் திறந்துவிட்டு குளிர்ந்த நீர்ப்பெருக்கின் கீழ் நின்றேன்.
திருவாசகத்தைப்
புரட்டிய மாமாவின் விரல்கள் தானாக எப்படி அந்தப் பாட்டில் தொட்டு நின்றன என்பது பெரிய புதிராக இருந்தது. அந்தப் பாட்டுக்கு
பல ஆண்டுகள் முன்னால் மணிவாசகர் சொன்ன அதே பொருளை அப்பா எப்படி சொன்னார் என்பதும் புதிராகவே இருந்தது.
அப்போது
கிரிஜா க்ளூனியில் படித்துவந்தாள். நான் பேட்ரிக்கில் படித்துவந்தேன். இருவருடைய அப்பாக்களும் நண்பர்கள் என்பதால் எங்களுக்கிடையிலும் நட்பு இருந்தது. பத்தாவது முடித்த
பிறகு விடுமுறையில் அவள் பாட்டு வகுப்பில் சேர்ந்தாள். நானும் சேர்ந்தேன். அதற்குப் பிறகு நான் மிருதங்கம் கற்றுக்கொண்டேன். அவளும் அதே இடத்தில் வீணை கற்றுக்கொள்வதற்காக வந்து உட்கார்ந்தாள். வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் திருவாசக வகுப்பு நடப்பதை அறிந்த அப்பா ஒருநாள் என்னை அழைத்துச்சென்று சேர்த்துவிட்டார். இருநாட்களுக்குப் பிறகு கிரிஜாவும் அங்கு வந்து இணைந்துகொண்டாள். அவள் செய்ததையெல்லாம் நான் செய்தேன். நான் செய்ததையெல்லாம்
அவளும் செய்தாள்.
மேல்நிலைப்பள்ளிப்
படிப்பை முடித்ததும் நான் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவேண்டும் என அப்பா ஆசைப்பட்டார். ஐந்து வயதில் அம்மாவை இழந்து அவருடைய ஆதரவிலேயே வளர்ந்த என்னால் அவரைப் பிரிந்து செல்ல விருப்பமில்லை. நான் பாண்டிச்சேரியில்தான் படிப்பேன் என அப்பாவிடம் உறுதியாகத் தெரிவித்துவிட்டு அரசு கல்லூரியில் சேர்ந்தேன். சென்னையில் இடம் கிடைத்தும் கூட அதை உதறிவிட்டு கிரிஜாவும் நான் படித்த கல்லூரியிலேயே படிப்பதற்கு வந்தாள். அதுவும் நான்
சேர்ந்த அதே கணிப்பொறி அறிவியல் துறைக்கே வந்து சேர்ந்தாள்.
ஒருநாள்
ஏதோ நோட்ஸ் வாங்குவதற்காக வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது “நீ சென்னையிலயே
படிச்சிருக்கலாமே, ஏன் இந்த காலேஜ்ல வந்து சேர்ந்த?” என்று கேட்டேன்.
அவள்
திரும்பி என்னை உற்றுப் பார்த்தபடி “நீ ஏன் போகலை?” என்று நிதானமான குரலில் கேட்டாள்.
“அது.....
எப்பவும் நான் எங்க அப்பா கூடவே இருக்கணும்னு நெனச்சேன்....... அதனால போகலை..”
என்னால்
சொற்களை கோர்வையாக பேசமுடியவில்லை. முதன்முறையாக அவள் கண்கள் என்னைத் தடுமாறவைப்பதை உணர்ந்தேன்.
“நான்
உன் கூடவே இருக்கணும்னு நெனச்சேன்”
அவள்
கண்கள் பெரிய குளங்களைப்போல இருந்தன. இல்லை இல்லை. பெரிய
கடல். பெரிய பள்ளத்தாக்கு. பனிமூடிய பெரிய மலைக்குன்று.
மறுநாள்
கல்லூரியில் என்னைப் பார்த்ததும் அவள் சிரித்தாள். அவள் கண்கள் இயல்பாகவே இருந்தன. கூர்மை சற்று
மங்கியிருப்பதைப் பார்த்து வியப்பாக இருந்தது. ”என்ன?” என்றாள் கிரிஜா. “இல்ல, உன் கண்ணு
இப்ப மாறியிருக்குது. நேத்து பார்த்த கண்ணு மாதிரி இல்ல” என்றேன். “போடா
லூசு. தெனம் மாத்தி
வச்சிக்கறதுக்கு கண்ணு என்ன ஸ்டிக்கர் பொட்டுனு நெனச்சிட்டியா?” என்று கலகலவெனச் சிரித்தாள் கிரிஜா.
அந்தச்
சிரிப்பும் சிரிப்பின் காரணமாக சுருங்கிய கண்களும் விளிம்புகளில் தேங்கிநின்ற கண்ணீர்த்துளிகளும் ஒவ்வொன்றாக என்னை நோக்கி நினைவில் மிதந்துவரத் தொடங்கின. அந்த நினைவிலேயே
மூழ்கியிருந்ததால் கதவு தட்டப்படும் சத்தத்தை தாமதமாகவே உணர்ந்தேன். சட்டென குழாயை நிறுத்திவிட்டு “யாரு” என்றேன். ”நான்தான்
தம்பி வெள்ளையம்மா. உப்புமா சூடு ஆறுதுப்பா. அப்பா கூப்புடச்
சொன்னாரு” என்று பதில்
வந்தது. அக்கணமே உடலைத்
துவட்டிக்கொண்டு வெளியே வந்தேன். ’தோடுடைய செவியன் விடையேறி’ என்று முணுமுணுத்தபடியே
அறைக்குச் சென்று ஆடை மாற்றிக்கொண்டு புகைப்படத்தில் அம்மாவின் கண்களைப் பார்த்தபடி திருநீற்றைத் தொட்டுப் பூசிக்கொண்டு வெளியே வந்தேன். அப்பா மேசைக்கருகில்
காத்திருந்தார்.
“சாப்பாட்டுக்கு
முன்னால போடற மாத்திரையை போட்டாச்சா?”
“போட்டாச்சி போட்டாச்சி. மொதல்ல நீ உக்காந்து சாப்புடு”
அப்பா
இடதுகையால் கரண்டியால் உப்புமாவை எடுத்து வாயில் வைத்தார்.
“அருணாசலம்
போவும்போது சொல்லிட்டு போனானே கேட்டியா?” என்று திடீரென பேச்சைத் தொடங்கினார் அப்பா. எனக்கு ஒருகணம்
எதுவும் புரியவில்லை. “என்ன சொன்னாருப்பா?” என்று தயக்கத்துடன் கேட்டேன். அவர் மறுபடியும்
கிரிஜாவின் பேச்சை எடுத்துவிடுவாரோ என்று பதற்றமாக இருந்தது.
“தெனமும்
ஒரு பாட்டு சொல்லு. படிக்கமுடியலைன்னாலும் காதாலயாவது கேட்டுக்கறேன்னு சொல்லிட்டு போனானே, அத கவனிச்சியான்னு
கேட்டேன்...”
அப்பா
சொல்லி முடித்த பிறகுதான் பதற்றம் குறைந்தது.
“நீங்க
பாடிப்பாடி அவரயும் உருக வச்சிட்டீங்க. இனிமே அவரும் உங்க கூட வந்து உக்காந்துடப் போறாரு” என்றபடி அவர்
முகத்தைப் பார்த்தேன். “ஒங்களுக்கு ஒரு நல்ல தொண கெடச்ச மாதிரி இருக்கும்”
“இன்னைக்கு
என்னமோ உருகிட்டாரு. அந்த வேகத்துலதான் வரேன்னு சொல்றாரு. ஆனா வரமாட்டாரு, நீயே பாத்துகிட்டிரு.”
“ஏன்பா
அப்பிடி சொல்றீங்க?”
“அதுக்கெல்லாம்
ஒரு தனியான மன அமைப்பு வேணும்பா. அது அவருகிட்ட
இல்ல” என்றபடி அப்பா
உதட்டைப் பிதுக்கினார்.
“வந்தாலும்
வருவாருப்பா. சொல்ல முடியாது. அப்படித்தான் எனக்கு
தோணுது”
“பார்க்கலாம். வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். நீ சொல்றமாதிரி ஒரு நல்ல தொண கெடைக்கும்” என்று சொல்லிவிட்டு உப்புமாவை வாயிலிட்டு அசைபோட்டார். விழுங்கிய பிறகு “உங்கம்மா அந்த
காலத்துல இப்படி ஆயிரம் தரம் நாளையிலேருந்து, நாளையிலேருந்துன்னு சொல்லியிருக்காங்க. ஆனா அந்த நாளைங்கறது வரவே வரலை” என்று சொல்லிவிட்டு
அமைதியானார்.
நீண்ட
நேரம் அவர் பேசவே இல்லை. சத்தமில்லாமல் உணவை
மட்டும் அசைபோட்டபடி இருந்தார். அப்படியே அவரை
விடக்கூடாது என எண்ணி “அம்மா பாடினா
யாரு குரல் மாதிரி இருக்கும்?” என்று திசைமாற்றினேன். வேண்டுமென்றே “சுசிலா மாதிரி இருக்குமா?” “எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி இருக்குமா?” “ஜானகியம்மா மாதிரி இருக்குமா?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றேன். அப்பாவின் முகத்தில்
சட்டென்று ஒரு புன்னகை பூத்தது. எல்லாவற்றுக்கும் “ம்ஹூம்” என்று சொன்னபடி தலையசைத்துக்கொண்டே வந்தவர் தானாகவே “ஜிக்கி பாட்டு
கேட்டிருக்கியா நீ? துள்ளாத
மனமும் துள்ளும். அந்தக் குரல்
மாதிரி இருக்கும்” என்றார்.
தட்டுகளை
எடுத்துச் சென்று சமையல்கட்டில் கழுவிவைத்தேன். ”வெள்ளையம்மா, போவும்போது மறக்காம கதவ சாத்திகிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு
அப்பாவுக்கு மாத்திரை கொடுத்தேன்.
“படிக்கறதுன்னா
படிச்சிகிட்டு இருங்க. டிவி வேணும்னாலும்
பாருங்க. நான் ஆபீஸ்க்கு
கெளம்பறேன். பதினொன்னரைக்கு வந்து ஜூஸ் போட்டு தரேன், சரியா?”
அப்பா
தலையசைத்ததும் நான் புறப்பட்டேன். ஆபீஸ் என்று சொன்னாலும் பத்துக்கு பத்து அளவுகொண்ட சின்னக் கடை அது. அரவிந்தர்
தெருவுக்கு அடுத்த தெருவில் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் இருந்தது. பொதுமக்களுக்கு ஆன் லைன் வழியாகப் பெறக்கூடிய எல்லா சேவைகளையும் செய்து தருவதற்குச்
சொல்லிக்கொடுத்து ஒருவனை வேலைக்கு வைத்திருந்தேன். ஜெராக்ஸ் மிஷின், பிரின்ட்டர், கணிப்பொறி, ஸ்கேனர் எல்லாவற்றையும் தனியாகவே இயக்கும்
திறமையும் அவனுக்கு இருந்தது. இன்னொரு மூலையில் ஒரு சின்ன கண்ணாடி
அறையில் நான் கணினி நிரல் தொடர்பான வேலைகளை நான் பார்த்துவந்தேன். உலகெங்கும் எனக்கு வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். எல்லாமே
இணையவழி வேலை.
தெருவில்
இறங்கி நடக்கத் தொடங்கியதுமே கோயில் கோபுரம் தெரிந்தது. சங்கரன் காலையிலேயே
வந்து கடையைத் திறந்திருந்தான். நான் கடைக்குள் நுழைந்ததும் வணக்கம் சொன்னான். நானும் வணக்கம்
என்று சொல்லிக்கொண்டே என் அறைக்குள் சென்றேன். கணிப்பொறியை ஆன்
செய்து வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்த்தேன்.
சற்றுமுன்னால்
வந்திருந்த மின்னஞ்சல் எல்லாவற்றுக்கும் மேலே இருந்தது. கிரிஜாவின் அஞ்சல். என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை. ஒருகணம் ஒளியில் மின்னும் அந்த முகவரியையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவளிடமிருந்து வந்திருக்கும் மடல். சட்டென்று க்ளிக்
செய்து பிரித்தேன். ’உன்னுடன் பேச வேண்டும்’ என ஒரே
வரிதான் எழுதப்பட்டு கீழே ஜா என்ற எழுத்துடன் முடிந்திருந்தது. ஜா ஒரு இறகுபோல நெஞ்சில் அசைந்து அசைந்து இறங்கிக்கொண்டிருந்தது. காலை அழுத்தமாக தரையில் ஊன்றி உருள்நாற்காலியைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு ஸ் என்று பெருமூச்சு வாங்கியபடி எழுந்து வெளியே வந்தேன்.
“என்னங்க சார்?”
என்று சங்கரன் என்னைப் பார்த்தான்.
“ஒன்னுமில்ல சங்கரா.
கோயில் வரைக்கும் போயிட்டு வரேன்”
கடையை ஒட்டியபடி ஆறேழு பசுக்கள்
வரிசையாக அடிமேல் அடிவைத்து கடந்து சென்றன. அவை செல்வதற்காக சில நொடிகள் வாசலிலேயே ஒதுங்கி நின்றேன். கடைக்கு எதிர்ப்பக்கத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் முகப்பில் ’ஓம் நமசிவாய நம’ என எழுத்துகள் போலவே வடிவமைக்கப்பட்டிருந்த
நியான் விளக்குப் பலகைக்கு மேல் இரண்டு புறாக்கள் ஒன்றையொன்று பார்த்தபடி சுற்றிச்சுற்றி
பறப்பதும் திரும்பிவந்து அமர்வதுமாக விளையாடும் காட்சி பார்வையில் பட்டது. ஒரு வட்டச்சுற்றின் முடிவில் ஒரு
புறா மட்டும் திரும்பி வந்து அமர்ந்து கழுத்தை வளைத்துவளைத்து மற்றொரு புறாவை எதிர்பார்த்துக்
காத்திருந்தது. அதுவோ கோபுரத்தின் ஏழடுக்குகளையும் தொட்டுத்தொட்டு
பறந்துவிட்டு சட்டென வான்வெளியில் பறந்து மறைந்தது. “சரியான கில்லாடிப்புறா”
என்று நினைத்தபடி நடந்தேன்.
கோயில்
வளாகத்தில் ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு தூணும் கிரிஜாவை நினைவுபடுத்தியது. சைவத்திருமுறைகளை பாடமாக நடத்திய மணிவாசகர் ஐயா அமர்ந்திருந்த தூணை நோக்கி என் கால்கள் தன்னிச்சையாக நடந்தன. அங்கே நின்றுகொண்டு
நானும் கிரிஜாவும் அமர்ந்திருந்த கல்தரையைப் பார்த்தேன். இப்போதும் அவள் உட்கார்ந்திருப்பதுபோலவே தோன்றியது. பெருமூச்சுடன் அங்கிருந்து
ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று நின்றேன். இறுதியாக ஒரு
தூணோரமாக வந்து உட்கார்ந்தேன். ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தபிறகு நாங்கள் அமர்ந்து உரையாடிக்கொள்ளும் இடம் அது.
நயனக்கொள்ளைக்கு
அப்பா சொன்ன அதே விளக்கத்தை வேறொரு வடிவத்தில் மணிவாசகர் அன்று எங்களுக்குச் சொல்லியிருந்தார். அந்தச் சொல்லாலும் விளக்கத்தாலும் கிரிஜா சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டாள்.
“கொள்ளையடிச்சிட்டு
போகறதுக்கு கண்ணுல என்ன புதையலா இருக்குது? இல்ல,
சுரங்கம் ஏதாவது இருக்குதா?”
அவள்
நெஞ்சில் இருப்பதென்ன என்பது எனக்கு அக்கணத்தில் புரிந்ததுபோலவும் இருந்தது. புரியாததுபோலவும் இருந்தது.
”அதான்
ஐயாவே சொன்னாரே, அப்படியே அடியோடு
வாரி எடுத்துட்டு போகறமாதிரின்னு, அது புதையலா இருந்தா என்ன, சுரங்கமா இருந்தா
என்ன? ரெண்டும் ஒன்னுதான்”
“மக்கு. மக்கு. நான் ஐயா
சொன்னத திருப்பிச் சொல்லுன்னா கேட்டேன். உனக்கு என்ன
தோணுதுன்னு சொல்லுடா”
நான்
அப்போதுதான் அவள் கண்களைப் பார்த்தேன். அழகிய பெரிய கண்கள். வளைந்த ஓடக்கரையின்
மதிலென இமைகள். ஈரம் மின்னும்
கருவட்டம். நடுவில் பால்நிறத்தில்
சுடர்விடும் ஓர் ஒளிப்புள்ளி. அடர்ந்த
ஒரு குன்றின்மீது ஏற்றிவைக்கப்பட்ட தீபமென எரியும் புள்ளி.
“ஏன்டா
பேசாம இருக்க? என்ன தோணுதுன்னு
சொல்லுடா”
அவள்
கண்களின் இமைகள் ஒருகணம் சற்றே மூடி மீண்டும் விரிந்தன. புயல்காற்றில் சுழலும்
மரக்கிளையென மனம் சுழன்றது.
எனக்கு
முதலில் பேச்சே வரவில்லை. பிறகு கட்டுப்பாடில்லாமல்
பேசத் தொடங்கிவிட்டேன்.
“புதையல்
மாதிரியும் இருக்குது. சுரங்கம் மாதிரியும்
இருக்குது”
“கொள்ளையடிச்சிட்டு போற அளவுக்கு ஏதாவது இருக்குதா?”
“இந்தச்
சுரங்கம் வழியா போனா, ஒரு இதயம்
இருக்குது. அத கொள்ளையடிக்கலாம்”
“அப்புறம்?”
“இதயத்துக்குள்ள
ஒரு மனசு இருக்குது. மனசுக்குள்ள பூட்டி
வச்சிருக்கிற ஆசை இருக்குது. ஆசைக்குள்ள ஒரு
கனவு இருக்குது. ஐயையோ.... கிணறுக்குள்ள
கிணறுமாதிரி போயிட்டே இருக்குதே. நான் எத
சொல்ல?”
“சொல்லு
அப்புறம்...?
அவள்
கண்கள் இன்னும் விரிந்து என்னை ஆழமாகப் பார்த்தன. என் மனமும்
உடலும் குழைந்து உருகுவதுபோல இருந்தன.
“உன்
கண்ணு ரொம்ப பெரிசா இருக்குது. உனக்கு கிரிஜான்னு
பேரு வச்சிருக்கக்கூடாது. விசாலாட்சின்னு பேர் வச்சிருக்கணும். அவ்வளவு விசாலமா இருக்குது. விசாலாட்சி” சொல்லும்போதே
தானாகவே என் கைகள் விரிந்தன.
அவள்
அப்போதும் அமைதியடையவில்லை. கிளர்ச்சியூட்டும் புன்னகையுடன் “அப்புறம்?” என்றாள்.
“இல்லை
இல்லை. அம்புஜாட்சி”
“ஓ... இது நல்லா இருக்குதே, அப்புறம்?”
“பங்கஜாட்சி”
“ஆகா, அப்புறம் சொல்ல எதுவாவது இருக்குதா?”
“மீனாட்சி”
“சரி
சரி”
“காமாட்சி”
“இன்னும்
ஏதாவது?”
“இந்திராட்சி, நீலாயதாட்சி”
“அப்புறம்?”
“இந்த
விசாலமான கண்ணுக்குள்ள எனக்கு ஒரு இடம் இருக்குமா?”
அந்த
வாக்கியம் ஏதோ ஒரு வேகத்தில் அன்று வெளிப்பட்டுவிட்டது. கிரிஜா புன்னகைத்தபடியே என் தொடையில் ஓங்கி அறைந்துவிட்டு “மக்குக்கு இப்பதான் மூள வேலை செய்ய ஆரம்பிச்சிருக்குது” என்றாள். தொடர்ந்து ”வாடா, நேரமாயிட்டுது” என்று எழுந்துவிட்டாள்.
”என்ன
சார் இங்க நிக்கறீங்க? யாராவது வரணுமா?” என்றபடி அந்தப் பக்கமாகச் சென்ற கோவில் சேவகர் நின்று விசாரித்தபோதுதான் பழைய கனவுகள் கலைந்தன. அங்கிருந்த அனைவருமே என்னையும் என் கடையையும் அறிந்தவர்கள். “இல்ல, இல்ல. சும்மாதான் ஏதோ
யோசனையில நின்னேன். வரேன்” என்றபடி
அங்கிருந்து நகர்ந்து பிராகாரத்தைச் சுற்றத் தொடங்கினேன்.
இரண்டு சுற்றுகளை முடித்து
மூன்றாவது சுற்றைத் தொடங்கும்போது கிரிஜாவின் நினைவு இழுத்துக்கொண்டு போனது. இதே பிராகாரத்தை அவளோடு சேர்ந்து எத்தனை முறை
சுற்றியிருப்பேன் என்று நினைத்ததைத் தொடர்ந்து அந்த நினைவுகள் வந்துவிட்டன.
எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இருவருமே முதல் வகுப்பில் தேறினோம். அவள் எண்பத்தாறு
விழுக்காடு. எனக்கு எண்பத்தைந்து விழுக்காடு. இருவருக்கும் டிசிஎஸ் நிறுவனம் வேலை வாய்ப்பை உறுதியளித்திருந்தது. ஆனால் வேலையைவிட எங்களுக்கு உயர்படிப்பு மீது ஆர்வமிருந்தது. அதுவும் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெறவேண்டும் என்னும் பெரிய கனவுடன் இருந்தோம். அதனால் கிடைத்த
வேலைகளை உதறிவிட்டு கேட் நுழைவுத்தேர்வுக்கும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கும் இரவுபகல் பாராமல் இடைவிடாது
படித்து தயாரிப்புகளில் ஈடுபட்டோம். எங்கள் தொடர்முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.
கேம்ப்ரிட்ஜிலிருந்து மின்னஞ்சலில்
தேர்வின் வெற்றிச்செய்தி
கிடைத்த அதே நாள் இரவில் அப்பா உடல்நலம் குன்றியது. இரவு உணவுக்குப்
பிறகு வழக்கம்போல ஒருமணி நேரம் திருவாசகம் படித்துவிட்டு உறங்கச் சென்ற அப்பா நள்ளிரவில் படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்துவிட்டார். ஒரு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். மூளைக்கு ரத்தம் செல்லும் வழியில் ஏதோ பிரச்சினை என்று கண்டுபிடித்து மருத்துவம் பார்த்தார்கள். ஒரு மாத மருத்துவத்துக்குப் பிறகு ஒரு கையும் காலும் செயல்படாத நிலையில் அப்பா வீட்டுக்கு வந்தார். தொடர்ந்த சிகிச்சையால்
காலின் செயல்பாடு மட்டும் மீண்டது.
லண்டன்
கனவை நானே அன்று கலைத்துக்கொண்டேன். அம்மாவின் மறைவுக்குப் பிறகு தனக்கென எந்தவொரு வாழ்க்கையைப்பற்றியும் எண்ணாமல் என்னைக் காப்பாற்றிய அப்பாவுக்கு துணையாக நிற்பதைத் தவிர வேறு எதையும் என்னால் நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.
கிரிஜா
என் நிலையைப் புரிந்துகொண்டாள். தனியாகவே லண்டனுக்குப் புறப்பட்டாள். ”ஒன்னுத்துக்கும் கவலப்படாதடா. ரெண்டே ரெண்டு வருஷம் பொறுத்துக்கோ. திரும்பி வந்ததும் அப்பாவ நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம், என்ன?” என்று சொன்னாள். நான் அவள்
சொன்னதையெல்லாம் கேட்டபடி அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைக்குத் திரும்பி அறைக்குச்
சென்று மீண்டும் கணிப்பொறியைத் திறந்தேன். கிரிஜாவின் மடலை அடுத்து பிரான்சைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்த
மடலைப் பிரித்தேன். திருத்துவதற்காக ஒரு நிரல்வரிசையை இணைத்து
அனுப்பியிருந்தார். ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நிரல்வரிசையைத் திருத்துவதைவிட, புதிதாக ஒன்றை எழுதுவதே எளிதான வழி. ஆனால் அதை எந்த வாடிக்கையாளரும்
ஏற்றுக்கொள்வதில்லை. தன்னிச்சையாக எதையாவது எழுதி அனுப்புவதே
அவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
அந்த நிரல்வரிசையை மேலோட்டமாகப்
பார்த்தபோது, அதைச் செப்பனிடுவது மிகமிக
எளிது என்றே தோன்றியது. ஆனால் வேலையில் இறங்கிய பிறகுதான் ஆழம்
புரிந்தது. எந்தக் கோணத்திலிருந்து அலசினாலும் பிழையின் தடத்தை
அறியமுடியவில்லை. இடையிடையே கிரிஜாவின் நினைவுகள் என்னை வேறுவேறு
திசைகளில் இழுத்தபடி இருந்தன. அவற்றை உதறிவிட்டு வேலையோடு ஒன்றுவது
அவ்வளவு எளிதாக இல்லை. இரண்டுமணி நேரத்துக்கும் மேல் செலவழித்தும்
கூட சிக்கலின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இன்று அதற்குத்
தீர்வு காண்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று தோன்றியது. வாசலில் நிழலாடுவதைப் பார்த்துவிட்டு
திரும்பினேன். சஙகரன் நின்றிருந்தான். ”என்ன சங்கரா?” என்றேன். “மணி பதினொன்னரை
ஆயிட்டுது சார்” என்று நினைவூட்டினான். ”ஓ’ என்றபடி வேகமாக எழுந்தேன். “சரி, கடையை பார்த்துக்கோ சங்கரா. போய் அப்பாவுக்கு ஜூஸ் கொடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு
அறையிலிருந்து வெளியே வந்தேன்.
ஐந்து நிமிட நடையில் வீட்டை
அடைந்துவிட்டேன். கதவோரமாக
அன்றைய அஞ்சலில் வந்திருந்த ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. உறையைப் பிரித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியன் எழுதிய
கிளிஞ்சல் கோபுரம். அப்பா அந்தப் புத்தகத்தைப்பற்றி ஒரு மாதமாக
சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்குக் கிடைத்த முதல் மாத சம்பளத்தில்
வாங்கிப் படித்த புத்தகம் என்று சொல்லிவிட்டு, அதை மறுபடியும்
படிக்க ஆசையாக இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்காக நூலகத்தில்
அந்தப் புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. பதிப்பகத்துக்கே நேரிடையாகப் பேசி பணம் அனுப்பிவைத்தேன்.
புத்தகத்தைப் புரட்டியபடியே
கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றேன். கூடத்தில் சுவரோரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி மேசை மீது புத்தகத்தை
வைத்து ராகம் போட்டு படித்துக்கொண்டிருந்தார். ’இடறைக் களையும்
எந்தாய் போற்றி ஈசா போற்றி இறைவா போற்றி’ என்ற வரிகளைக் கேட்டதுமே,
அவர் திருவாசகம் படிக்கிறார் என்பது புரிந்தது. இயக்கம் இல்லாத வலது கை தொங்க,
வரிகளின் கீழே இடது கைவிரல் மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. பக்கம் புரண்டுவிடாதபடி ஒரு சின்ன மரக்கட்டையை வைத்திருந்தார்.
என் வருகையை உணர்ந்ததும் படிப்பதை
நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரிடம் புத்தகத்தை உயர்த்திக் காட்டினேன். அதைப் பார்த்ததும்
அவர் கண்கள் மலர்ந்தன ”அய், இவ்ளோ சீக்கிரமா
அனுப்பி வச்சிட்டாங்களா?” என்றார். நான்
அவருக்கு முன்னால் அப்புத்தகத்தை வைத்தேன். திருவாசகத்தின் மீதிருந்த
விரலை எடுத்து அப்பா கிளிஞ்சல் கோபுரத்தைப் புரட்டினார்.
“அம்மா பிரசவத்துக்காக திண்டிவனத்துல
அவுங்கம்மா வீட்டுக்கு போயிருந்தாங்க. அப்பல்லாம் ஞாயித்துக்கெழம லீவு கெடச்சதுமே
அங்க போயிடுவேன். ஒருதரம் இந்த புத்தகத்தை வாங்கிட்டு போயி அன்புள்ள
அபிராமிக்குன்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துட்டு வந்தேன்……”
அப்பாவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. பெருமூச்சு விட்டார். அமைதியில் மூழ்கிவிட்டார் என்று தோன்றியது. வேண்டுமென்றே
பேச்சை திசைதிருப்புவதற்காக “புத்தகத்த படிச்சிட்டு புடிச்சிருக்குதுன்னு
சொன்னாங்களா, புடிக்கலைன்னு சொன்னாங்களா?” என்று கேட்டேன். “இல்ல இல்ல” என்று
அப்பா வேகமாக தலையசைத்தார். அப்போது தன்னிச்சையாக அவர் முகத்தில்
புன்னகை வந்து படிந்தது. “படிச்சிட்டு ரொம்ப புடிச்சிருக்குதுன்னுதான்
சொன்னாங்க. ஆனா அந்தப் புத்தகத்த அவளால பத்திரமா எடுத்து வச்சிக்க
தெரியல. அங்கயே எப்படியோ காணாம போயிடுச்சி” என்று சொல்லிவிட்டு த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டிவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.
“சரி, ஒன் பாத் ரூம், டூ பாத் ரூம் ஏதாவது போகணுமா?”
“ம்” என்றபடி அவர் ஒரு விரலை உயர்த்தினார். நான் மெதுவாக அவர்
முதுகுக்குப் பின்னால் நின்று இரு தோள்களுக்குக் உறுதியாகப் பிடித்துத் தூக்கி நிற்கவைத்தேன்.
கட்டிலோடு சாய்த்துவைக்கப் பட்டிருந்த கைத்தடியை எடுத்துக்கொண்டதும்
அவரால் உறுதியாக நிற்கமுடிந்தது., ஒவ்வொரு அடியாக அவரை கழிப்பறை
வரைக்கும் அழைத்துச் சென்றேன்.
சமையலறைக்குத்
திரும்பி பழக்கூடையிலிருந்து நாலைந்து ஆரஞ்சுப் பழங்களை எடுத்தேன். வேகமாக உரித்து
சுளைகளை எடுத்து மிக்சியில் சில நொடிகள் சுழலவிட்டேன். சாறு தயாரானதும் ஒரு தம்ளரில் வடிகட்டி எடுத்துக்கொண்டு கூடத்துக்குத் திரும்பினேன். அப்பா அப்போதுதான் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தார். பழச்சாறை மெதுவாக அருந்தினார்.
“பாட்டு
ஏதாவது கேக்கறீங்களா?” என்று கேட்டபடி பக்கத்திலிருந்த டிவி ரிமோட்டை எடுத்தேன். “சரி, யுடியூப்ல
சந்திரபாபு பாட்டு வை” நான்
அதைத் தேடியெடுத்து ஓடவிட்டேன். ’நான் ஒரு முட்டாளுங்க’ என்று பாடல் தொடங்கியது. “அதே இருக்கட்டும்” என்று அப்பா சொன்னதால் ரிமோட்டை அவருக்குப் பக்கத்திலேயே வைத்துவிட்டு எழுந்தேன். “ஒன்னரைக்கெல்லாம் வந்துடறேன்பா” என்று சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டு கடைக்குப் புறப்பட்டேன்.
அறையில்
கணிப்பொறியைத் திறந்ததும் கிரிஜாவின் ஒற்றைவரி மின்னஞ்சலை மீண்டும் ஒருமுறை
படித்தேன். அந்த
வரி அவள் கண்களைப்போல விரிந்திருந்தன. அப்புறம் அப்புறம் என்று என்னைச் சீண்டிய கண்கள்.
ஒரு காலத்தில் கடிதத்தை பக்கம் பக்கமாக எழுதிய கிரிஜாவா இது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. அவள் கேம்ப்ரிட்ஜில்
சேர்ந்ததும் எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான வரிகளைக் கொண்டவை. ஆங்கிலத்தில் மிகமிக
அழகான வாக்கியங்களை உருவாக்கும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. அப்போதெல்லாம் தினமும்
காலையில் ஒரு அஞ்சல்,
மாலையில்
ஒரு அஞ்சல் என வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில்
அபூர்வமாக நள்ளிரவிலும் வரும்.
அந்த
ஓராண்டில் மட்டும் எழுநூறு எண்ணூறு அஞ்சல்கள் வந்திருக்கும். எல்லாவற்றையும் நான் ஒரு தனித்தொகுப்பாக்கி சேமித்துவைத்திருந்தேன். தன்னிச்சையாக என் விரல்கள் நான்கைந்து ஆண்டுகளாக திறக்காமலேயே வைத்திருந்த அத்தொகுப்பைத் தேடியெடுத்துத் திறந்தன.
’மை
டியர் மகா’ என்று
தொடங்கும் முதல் வரியைப் படித்ததுமே, அதுவரை அவள் மீது கொண்டிருந்த கசப்பெல்லாம் சட்டென விலகத் தொடங்கியது. ஒவ்வொரு மடலாகப் படிக்கப் படிக்க அவள் மீது மீண்டும் அன்பு பொங்கியது. மடலெழுதி அன்பைத்
தெரிவிப்பது ஒருவகையென்றால், மடலில் கொட்டவேண்டிய அன்பையெல்லாம் மனத்திலேயே தேக்கிவைத்து மறைத்துக்கொள்வதும் கூட இன்னொரு வகையாக ஏன் இருக்கக்கூடாது என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அக்கணமே அதுவரை மனம் சுமந்திருந்த கசப்பும் வெறுப்பும் உதிர்ந்தன. என் பொருட்டு
அவள் மனம் எவ்விதத்திலும் சங்கடப்பட்டு விடாதபடி நடந்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன்.
கண்ணாடிக்
கதவருகில் நிழலாடியதைப் பார்த்துத் திரும்பினேன். சங்கரன் நின்றிருந்தான். “அதுக்குள்ள ஒன்னரையாய்ட்டுதா? நேரம் போனதே தெரியலை” என்றபடி எழுந்தேன். “ஏன் சார், காலையிலேருந்து ஒரே டென்ஷனா
இருக்கிங்க? நெறய வேலையா?” என்று அக்கறையோடு கேட்டான் சங்கரன். “இல்லையே, எப்பவும் இருக்கிற
அளவுதான் சங்கரன். புதுசா
எதுவுமில்ல” என்று அவன் தோளைத் தட்டியபடி “வரட்டுமா?” எனறு
கேட்டுக்கொண்டே கடையிலிருந்து வெளியேறி வீட்டை நோக்கி நடந்தேன்.
கூடத்தில் டிவியில் பாட்டுச்சத்தம்
கேட்டது. ஆனால் அப்பா சாய்வுநாற்காலியில் உறங்கிக்கொண்டிருந்தார்.
நான் டிவியை அணைத்துவிட்டு அப்பாவை எழுப்பினேன். “ஓ.... வந்துட்டியா? நல்லா தூங்கிட்டேன்
போல” என்றபடி கண்விழித்தார் அப்பா.
“சந்திரபாபுவைப் பார்த்ததும்
எங்க ஆபீஸ்ல வேலை செஞ்ச ஒருத்தரு ஞாபகம் வந்துட்டுது. அச்சுஅசலா
சந்திரபாபு மாதிரியே சேஷ்ட செய்வாரு. ஒடம்ப வளச்சி டேன்ஸ்லாம்
ஆடுவாரு. மேதின விழாவுல அவரு மேடையில ஏறினார்னா, அட் எ டைம் அரைமணி நேரம் தொடர்ச்சியா விதவிதமா ப்ரோக்ராம் செஞ்சி எண்டர்டைன்
செய்வாரு. இப்ப எங்க இருக்காரோ தெரியலை. அவர நெனச்சிகிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்”
என்று உதட்டைப் பிதுக்கினார்.
“அருணாசலம் மாமாகிட்ட கேட்டா
சொல்லப் போறாரு. அவருக்கு டச் இருக்குமில்ல?”
“ஆமாமாம். அவன் வந்தா கேக்கணும்”
“சரி பாத்ரூம் போறீங்களா?”
அவர் ம் என்றபடி தலையசைத்தார். நான் அவரை மெதுவாக தூக்கி நிற்கவைத்து ஊன்றுகோலை
எடுத்துக் கொடுத்து பிடிக்கவைத்தேன். அவர் அதன் துணையுடன் கழிப்பறை
வரைக்கும் நடந்துவந்தார். அவர் உள்ளே சென்றதும் நான் சமையலறைக்குள்
சென்று சாப்பாட்டுப் பாத்திரங்களையெல்லாம் எடுத்துவந்து உணவு மேசையில் வைத்தேன்.
அப்பா மெதுவாக நடந்துவந்து
நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு
தட்டில் சோறு வைத்து குழம்பு ஊற்றி பிசைந்துவைத்தேன். அவர் கரண்டியால்
எடுத்து சாப்பிடத் தொடங்கினார். “வடிவேல் நகைச்சுவை வைக்கறேன்.
பார்த்துகிட்டே சாப்பிடறீங்களாப்பா?” என்றபடி அவருக்காக
டிவியை ஆன் செய்தேன். மெய்மறக்கவைக்கும் காட்சிகளைப் பார்த்தபடியே சாப்பிட்டத்தில் நேரம் போனதே தெரியவில்லை.
தட்டுகளையெல்லாம்
எடுத்து கழுவிவைத்துவிட்டு உணவுமேசையைச் சுத்தம் செய்தேன். பிறகு அங்கிருந்து
அப்பாவை எழுப்பி அழைத்துச் சென்று அவருடைய நாற்காலியில் அமரவைத்தேன். ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை உரித்து அவர் கையில் வைத்த சமயத்தில் வாசலில் ஏதோ ஒரு கார் நிற்கும் சத்தம் கேட்டது. “அருணாசலமாதான் இருக்கும். கிரிஜாவ அழச்சிட்டு
வரேன்னு காலையில சொன்னானே, ஞாபகம் இல்லியா? போய் பாரு” என்றார் அப்பா.
என்னவென்றே புரியாத ஒருவித
பதற்றத்தோடும் குழப்பத்தோடும் வேகமாக கதவருகில் சென்றேன். காரின் கதவு
திறந்த நிலையில் கிரிஜா வாசலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அதே தோற்றம். அதே முகம். ஆறு வருஷங்களில் அவள் கொஞ்சமும் மாறவில்லை. திடீரென அவளுடைய
அகன்ற கண்களின் நினைவு வந்தது. அப்போதுதான் அவள்
கண்ணாடியைக் கழற்றாமலேயே அமர்ந்திருப்பதைக் கவனித்தேன்.
“அப்பா, கிரிஜாதான்” என்று கூடத்தின் பக்கம் திரும்பி சொல்லிவிட்டு ”உள்ள வா கிரிஜா. ஏன் வண்டியிலயே
உட்கார்ந்திருக்க? என்னமோ எல்லாத்தயும் புதுசா பாக்கறமாதிரி பாக்கற? எறங்கி வா” என்று கேட்டுக்கொண்டே வேகமாக காருக்கு அருகில் சென்றேன்.
கண்ணாடியைக்
கழற்றாமலேயே ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்து புன்னகைத்தாள் கிரிஜா. அவளுடைய தொண்டைக்குழி ஏறியிறங்கித் தவிப்பதைப் பார்க்க முடிந்தது.
”என்ன
மகா? நல்லா
இருக்கியா?”
“நல்லா
இருக்கேன் கிரிஜா? ஏன் அப்படி
பார்க்கறே?”
எந்தப்
பதிலும் சொல்லாமல் இடது காலை தரையில் ஊன்றியபடி “மொதல்ல என்ன
கீழ எறக்கு. அதுக்கப்புறம் எல்லாத்தயும்
விலாவரியா சொல்றேன்” என்று கையை
நீட்டினாள்.
அடங்கி ஒலித்த அவளுடைய குரலைக்
கேட்டு ஒருவித அதிர்ச்சியுடன் ”எறக்கணுமா,
என்ன சொல்ற நீ?” என்றபடி நெருங்கிச்
சென்று அவள் கையைப் பற்றினேன். அந்தப் பிடியின் ஆதாரத்தோடு அவள்
தன் வலது காலையும் காரிலிருந்து மெதுவாக எடுத்துவைத்து கீழே இறங்கி நின்றாள். ஒருகணம் நிலத்தில் ஊன்றி நின்று மூச்சு வாங்கிவிட்டு “இனிமே நானே நடப்பேன், வா”
என்று கையை விலக்கிக்கொண்டு நடந்தாள். ”என்னாச்சி கிரிஜா?” என்று பதற்றமுடன் நான் கேட்ட கேள்விக்கு ”த்ச். மொதல்ல உள்ள
போவலாம், வா.
சொல்றேன்” என்று பதில்
சொல்லிக்கொண்டே நடந்தாள். அப்போதுதான் அவள்
நடையில் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அப்பாவின் நடைபோல வளைந்து தயங்கி நடக்கும் நடை. திகைத்து ஒரு கணம் தயங்கி பின்வாங்கி நின்றுவிட்டேன். கிரிஜா
என்று அழைப்பதற்குள் அவள் வாசலைக் கடந்து வீட்டுக்குள் சென்றுவிட்டிருந்தாள். நான் பின்னாலேயே சென்றேன்.
”வாம்மா, கிரிஜா? நல்லா இருக்கியா? உன்ன பாத்து பல வருஷம் ஓடிப் போச்சேம்மா. எங்க அருணாசலம்? அவன் வரல? ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒன்ன பத்திய பொலம்பல்தான். காலையில கூட நீ குடும்பத்தோடு வரப்போறியா தனியா வரப்போறியான்னு தெரியாம பொலம்பிட்டிருந்தான்.......”
அப்பா
சொல்வதையெல்லாம் ரசித்துக் கேட்டபடி அவருக்கெதிரில் நாற்காலியில் உட்கார்ந்தாள் கிரிஜா. ”இன்னும் வீட்டுக்கு போகலை மாமா. நேரா இங்கதான்
வரேன்”
“ஐயையோ. ஏம்மா
அப்படி? மொதல்ல அவனத்தான
நீ பார்த்திருக்கணும். அவன் எவ்ளோ ஆசையா இருந்தான் தெரியுமா?”
”மொதல்ல உங்கள பார்த்துட்டு
போகணும்னு எனக்கு ஒரு ஆசை. சொல்லுங்க மாமா? எப்படி இருக்கீங்க? மகா உங்கள நல்லா பார்த்துக்கறானா?” என்று கேட்டபடியே கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்தாள்.
”அவன்....” என்று ஏதோ பதில் சொல்லத் தொடங்கிய அப்பா அவள் முகத்தைப் பார்த்ததுமே “என்னம்மா இது?” என்று அப்பா
திகைத்து பேச்சுவராமல் நிறுத்திவிட்டார். அதுவரை வேறொரு பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்து அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நான் அக்கணமே வேகமாக எழுந்து சென்று அவள் முகத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியில் எனக்குப் பேச்சே வரவில்லை.
கிரிஜாவின்
ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்தது. மற்றொரு கண்
சிற்பத்தின் கண்ணைப்போல அசைவின்றி காணப்பட்டது. அப்படியே நிலைகுலைந்து அப்பாவுக்கு அருகில் உட்கார்ந்துவிட்டேன்.
”என்ன
கிரிஜா இது? ஏம்மா
இப்படி ஆச்சி?” என்று அப்பா மெதுவாக பேச்சைத் தொடங்கினார்.
கிரிஜா
எதுவும் பேசாமல் ஒருகணம் பெருமூச்சு விட்டாள். “த்ச். நடக்க கூடாததெல்லாம்
நடந்துபோச்சி மாமா. இங்கேருந்து போன
மொதல் ஒரு வருஷம்தான் நல்லபடியா போச்சு. அதுக்கப்புறம் நரகம்தான்”
அவளே
பேசட்டும் என்று நான் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“யுனிவர்சிட்டி
கேம்பஸ்லயே ஒரு கார் ஆக்சிடென்ட். உடம்புல வலதுபக்கம் முழுக்க அடி. ஆறு
மாசம் பெட்ல இருந்தேன். ஒரு கை, ஒரு கால், ஒரு கண்
எல்லாம் போச்சி. என் க்ளாஸ்மேட்
ஒருத்தன்தான் என்ன பாத்துகிட்டான். அஞ்சி வருஷமா அவன்தான் எனக்கு கேர்டேக்கர். இந்த செயற்கை கைகால் எல்லாமே அவனுடைய ஏற்பாடுதான். டிக்கட் வாங்கி கொடுத்து இந்தியாவுக்கு போய் எல்லாரயும் பார்த்துட்டு வான்னு சொல்லி அனுப்பினதுகூட அவன்தான்.”
“இவ்ளோ
கஷ்டங்களயும் தாங்கிகிட்டு நீ எதுக்கும்மா அங்கயே இருந்த கிரிஜா? பேசாம நீ
இங்க வந்திருந்தா கஷ்டமோ நஷ்டமோ எல்லாரும் ஒன்னோட ஒன்னா இருந்திருக்கலாமே......”
அப்பாவால்
தொடர்ந்து பேசமுடியவில்லை. துக்கத்தில் அவருக்கு தொண்டையை அடைத்தது.
நான்
மெதுவாக அவளுக்கு முன்னால் சென்று அவள் கையை எடுத்து என் கைக்குள் வைத்து ஆறுதலுடன் அழுத்தமாகப் பற்றினேன். எதைஎதையோ சொல்ல
நினைத்தாலும் சரியான வகையில் சொற்கள் திரண்டுவராமல் தடுமாறித் தவித்தேன். “டிகிரி வாங்கிட்டு அங்கயே பெரிய கம்பெனியில வேலை வாங்கி செட்டிலாயிட்ட போலன்னு நெனச்சிட்டிருந்தேன்..... திடீர்னு மெயில் எதுவும் வராததால..... ஒரே எரிச்சல்..... கோவம்....... என்ன நெனச்சி எனக்கே ரொம்ப வெக்கமா இருக்குது..... சாரி கிரிஜா.....”
கிரிஜாவின்
ஒற்றைக்கண் விரிந்து என்னை ஆழமாகப் பார்த்தது. தொலைத்துவிட்ட ஒன்றைத்
தேடுவதுபோன்ற பரபரப்பை அந்தப் பார்வையில் உணர்ந்தேன்.
அவள்
சட்டென திரும்பி மேசை மீதிருந்த திருவாசகம் புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். “இன்னும் திருவாசகம் படிக்கறியா நீ?” என்ற கேள்வியுடன்
சட்டென பேச்சின் திசையைத் திருப்பினாள். நான் மெதுவாக “அது அப்பா
படிக்கிற புத்தகம்” என்றேன்.
அவள்
ஒருகணம் யோசித்து “திருவாசகம் வகுப்புல
நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சமே, உனக்கு ஞாபகம்
இருக்குதா?” என்று கேட்டாள்.
“ம்”
“அப்ப
படிச்ச பாட்டெல்லாம் ஞாபகம் இருக்குதா?”
”அங்கங்க
ஒன்னு ரெண்டு தெரியும்”
“எனக்கு
ஒன்னு ரெண்டு வார்த்தைதான் ஞாபகமிருக்குதே தவிர, பாட்டெல்லாம் மறந்து
போயிட்டுது”
கிரிஜாவின்
பேச்சில் மெல்ல மெல்ல உற்சாகம் படிவதை நான் அப்போதுதான் கவனித்தேன்.
”நம்ம
மணிவாசகர் ஐயா நடத்திய போற்றித் திருவகவல் பகுதி அப்பப்ப ஞாபகத்துல வந்துபோகும். ஆஸ்பத்திர்யில இருந்த சமயத்துல அடிக்கடி நெனச்சிகிட்டேன். ஒவ்வொரு வரியா சொல்லி ஏன் போற்றணும் எதுக்கு போற்றணும்னு கதைகதையா சொல்லிக் குடுத்தாரு, இல்ல? ஏதோ கொள்ளைன்னு
ஒரு பாட்டுல ஒரு வார்த்தை வருமே, உனக்கு ஞாபகம்
இருக்குதா?”
கிரிஜாவின்
கேள்வி தன்னிச்சையாக கேட்கப்பட்ட ஒன்றா அல்லது பதில் தெரிந்துகொண்டே கேட்கப்பட்ட கேள்வியா என்பதை என்னால் பிரித்தறிய முடியவில்லை. ஆயினும் “ம்ஹூம்” என்று
உதட்டைப் பிதுக்கி தன்னிச்சையாக பதில் சொன்னேன்.
அவள்
உடனே அப்பாவின் பக்கம் திரும்பி “உங்களுக்கு அந்தப்
பாட்டு ஞாபகம் இருக்குதா மாமா?” என்று கேட்டாள்.
அப்பா
ஒருகணம் அமைதியாக இருந்தார். மறுகணம் பெருமூச்சுடன் “இருக்குதும்மா. மொத்த அகவலுமே எனக்கு மனப்பாடம்” என்றார். ”ஓ, லவ்லி” என்று சிரித்தாள்
கிரிஜா.
“நீ
சொல்ற மாதிரி அது வெறும் கொள்ளை இல்ல. நயனக்கொள்ளை”
“நீங்க
சொல்றதுதான் சரி, நயனக்கொள்ளை. நயனக்கொள்ளை. இப்ப ஞாபகம் வந்துட்டுது” என்று தனக்குள்ளாகவே இரண்டுமூன்று தரம் சொல்லிக்கொண்டாள். பிறகு ”அந்தப் பாட்ட
எனக்காக ஒருதரம் பாடிக் காட்டறீங்களா மாமா?” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டாள்.
“சரிம்மா” என்று தலையசைத்த அப்பா பாட்டின் வரிகளை ஞாபகத்துக்குக் கொண்டுவருபவர்போல ஒன்றிரண்டு கணங்கள் கண்களை மூடியிருந்துவிட்டு சன்னமான குரலில் ’ஒருங்கிய சாயல்
நெருங்கி உள் மதர்த்து’ என்று தொடங்கினார். அந்த வரிகளை தனக்குள் வாங்கி, அவற்றில் ஆழ்ந்து
திளைப்பவள்போல மெய்மறந்த நிலையில் கிரிஜாவின் முகம் அப்பாவின் மீது பதிந்திருந்தது. பிறகு தன்னிச்சையாகத் திரும்பி என் மீது நிலைத்தது.
(கனலி
– இணைய இதழ் – 01.01.2023)