Home

Sunday 22 January 2023

சமூகத்தின் பார்வையும் இலக்கியத்தின் பார்வையும்

  

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை, ஒருவராலும்  வரையறுத்துச் சொல்லமுடியாத அம்சமாக காமம் விளங்குகிறது. ஒரே நேரத்தில் எள்முனையளவு சிறிதாகவும் மலையளவு பெரிதாகவும் தோன்றி மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது காமம்.  சூறாவளியென சுழற்றியடிக்கும் அதன் விசையிலிருந்து ஒருசிலர் எப்படியோ தப்பித்துவிடுகிறார்கள். இன்னும் ஒருசிலர் அந்த விசையில் சிக்கி, அது இழுத்துச் செல்லும் திசையிலெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு கரையோரமாக ஒதுங்கி வாழ்நாளைக் கழிக்கிறார்கள்.

காமம் உருவாக்கும் விசையை முன்வைத்து, காமத்தை வரையறுத்துச் சொல்லும் திருக்குறளின் வரிகள் மிகமுக்கியமானவை.  ’காமக்கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு’ என்கிறார் திருவள்ளுவர். காமத்தைக் கோடாரிக்கு நிகரான ஒன்றாகச் சித்தரிக்கிறார் அவர். கோடாரிக்கு தன் முன்னால் கிடப்பது மரமா, சிற்பமா, கொடியா, செடியா என்பது ஒரு பொருட்டே இல்லை. பிளந்து வீசுவதையே தன் நெறியெனக் கொண்ட ஆயுதம் கோடாரி. காமத்தின் விசைக்கு ஆட்பட்டவர்களும் ஒருவகையில் அத்தகையோரே. எல்லாக் கதவுகளையும் அது உடைத்து வீழ்த்திவிடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. நாணமென்னும் தாழ்ப்பாளால் அடைபட்டிருக்கும் கதவுகள் எல்லாம் ஓங்கிய கோடாரிக்கு முன்னால் ஒரு பொருட்டே அல்ல. அந்த விசையில் சுக்குநூறாகச் சிதைத்த பிறகே கோடாரி அமைதிகொள்ளும்.

காலமெல்லாம் மனிதகுலத்தை காமம் இப்படித்தான் பாடாய்ப் படுத்திக்கொண்டு வருகிறது. பதினான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் அருணகிரிநாதரின் வாழ்க்கை, ஒரே நேரத்தில் காமத்தால் விளைந்த சீரழிவுக்கும் பக்தியின் வலிமையால் காமத்திலிருந்து விடுதலை பெற்று உயர்ந்த நிலைக்குச் சென்றதற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அருணகிரிநாதர் பிறந்த கொஞ்ச காலத்திலேயே தன் தந்தையாரை இழந்துவிடுகிறார். தாயினும் அதிகமான பாசத்தோடு அவரை வளர்க்கிறார் அவருடைய மூத்த சகோதரி. தக்க பருவத்தில் அவருக்குத் திருமணமும் செய்துவைக்கிறார். ஆனால் தீயோர் சேர்க்கையால் உலகமே தூற்றும் வாழ்க்கையை வாழ முற்படுகிறார் அருணகிரிநாதர். பாசம் சகோதரியின் கண்களை மறைக்கிறது. சகோதரனைக் கட்டுப்படுத்த அவரால் இயலவில்லை. காமத்தின் பாதையில் நடைபோட்ட அருணகிரிநாதர் எந்நேரமும் சிற்றின்பத்திலேயே மூழ்கியிருக்கிறார்.

எதிர்பாராதவிதமாக அவரை நோய் தாக்கியபோது அதுவரை அவருக்கு இன்பத்தை அளித்த பெண்கள் அனைவரும் அவரைக் கண்டு ஒதுங்கத் தொடங்குகின்றனர். எந்நேரமும் காமத்தில் ஈடுபட்டுத் திளைத்திருந்த அவரால்  காமமின்றி இருக்கமுடியவில்லை. அடைபட்ட கதவுகளுக்கிடையில் மனைவியை நெருக்குகிறார். சீழ்பிடித்த அவருடைய உடற்கோலத்தைக் கண்டு அருவருத்த அவருடைய மனைவி அவரை ஒதுக்குகிறார். கணவன் மனைவி மோதலைத் தவிர்ப்பதற்காக,  அருணகிரிநாதரின் சகோதரி, தன் சகோதரனிடம் தன் காமத்தேவைக்கு தன்னையே பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். அச்சொற்களைக் கேட்ட கணத்தில் தன் மீது இடி இறங்கியதுபோல உணர்கிறார் அருணகிரிநாதர். தன் நிலையை நினைத்து அவமானத்தில் கூனிக் குறுகுகிறார். அக்கணமே உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்து வீட்டைவிட்டு கால்போன போக்கில் கிளம்பிச் செல்கிறார். ஒரு மலையின் உச்சிக்குச் சென்று கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது முருகக்கடவுள் காப்பாற்றி ஆறெழுத்து மந்திரத்தை உபதேசிக்கிறார். அதற்குப் பிறகு பக்திமார்க்கத்தில் அவருடைய கவனம் திசைதிரும்புகிறது.

அருணகிரிநாதரைப்போல, இந்த உலகத்தில் முறையற்ற காமத்திலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு கால்போன போக்கில் காலமெல்லாம் ஒருசிலர் சென்றுகொண்டே இருக்கிறார்கள். பக்தியின் வழியில் செல்பவர்கள் சிலர். சேவையின் வழியில் செல்பவர்கள் சிலர். எங்கோ ஒரு மூலையில் மனம் திருந்தி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்பவர்கள் சிலர். சூத்ர ஸ்ரீநிவாஸ் என்னும் கன்னட நாவலாசிரியர் எழுதியிருக்கும் யாத்திரை என்னும் நாவல் குற்ற உணர்ச்சியால் வீட்டைவிட்டு வெளியேறி வேறொரு விதமான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த இளைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கிறது

தாய்க்கு நிகரான அண்ணியென்றும் பாராமல், காமத்தின் வேகத்தில் அவரோடு உறவுகொள்ளும் பரத் என்னும் இளைஞன், எல்லோருக்கும் முன்னிலையில் சிக்கிக் கொண்டதும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான். அவனைத் தண்டிக்க எல்லா உரிமைகளுமுள்ள அண்ணனும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அமைதி காக்கிறார்கள். அந்த மெளனமே அவனுக்குப் பெரிய தண்டனையாத் தோன்றுகிறது. ஒருகணமும் அந்த வீட்டில் இருக்கலாகாது என முடிவெடுத்து உடனடியாக வெளியேறுகிறான். இலக்கில்லாத அந்த யாத்திரை ஏதேதோ திசைகளில் அவனை அழைத்துச் செல்கிறது.  பெங்களூரு ரயில்நிலையத்தில் சரியான பெட்டியைக் கண்டுபிடிக்கும் பதற்றத்தோடு நடந்துகொண்டிருக்கும்போது பற்றியிருந்த கைத்தடி நழுவிவிட கீழே விழுந்த ஒருவருக்கு உதவி செய்கிறான். காலில்லாத அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ரயில் பெட்டியில் ஏறவும் துணைபுரிகிறான். அந்த உதவிக்குக் கைம்மாறாக அவர் அவனை தன்னோடு சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். தன் சகோதரனைப்போல அவனை நினைத்து தன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்கிறார்.

பெரிய தோப்பும் குளமும் ஆலமரமும் கொண்ட ஒரு பெரிய இடத்துக்குச் சொந்தக்காரர் அவர்.  இயற்கையழகு மிக்க அந்த இடம் அவனிடம் உள்ள எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களிடம் பேசிப்பேசி தகவல்களைத் திரட்டிவைத்துக்கொண்டு பழமையும் அழகும் மிக்க அந்த வீட்டைப்பற்றி ஒரு புத்தகத்தை எழுதிமுடிக்கிறான். அந்த இடத்திலும் அவனுடைய காமத்துக்கு இசைவான சூழல் அமைந்துவிடுகிறது. காலிழந்தவரின் மனைவி பாவனா அவனிடம் தன்னையே இழக்கிறாள்.

பாவனாவின் காமம் ஒரு பெரிய புதிர். அவள் வாழ்வில் ஒரே நேரத்தில் இரு இழப்புகள் ஏற்படுகின்றன. அவளுடைய கணவன் தோட்டத்தில் குதிரைசவாரி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராமல் எங்கோ தென்னைமரத்திலிருந்து விழுந்த ஓலையின் சத்தத்தைக் கேட்டு மிரண்ட குதிரை அவரை கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. அந்த விபத்தில் அவர் தன் காலையே இழந்துவிடுகிறார். மேல்படிப்புக்காக பம்பாய்க்குச் சென்ற அவர்களுடைய மகன் படிப்பை முடித்ததும் தன்னோடு படித்த இஸ்லாம் பெண்ணை மதம் மாறி திருமணம் செய்துகொண்டதாக கடிதம் எழுதித் தெரிவித்துவிட்டு சென்னையையே மறந்துவிடுகிறான். மாற்றுமதக்காரனாக மாறிய சூழலில் பெற்றோரின் முன்னால் வருவதற்கு நாணமுற்று பம்பாயிலேயே தங்கிவிடுகிறான் அவன். மகனையும் இழந்து கணவனுடனான வாழ்க்கையையும் இழந்து தனிமையிலும் வெறுமையிலும் தவிக்கும் அவள் பற்றிக்கொண்டு படர கிடைத்த கொழுகொம்பாக அமைந்துவிடுகிறான் வீட்டுக்கு வந்த இளைஞன்.

மாபெரும் துயரங்கள் காதல் வாழ்க்கையின் பாதையை மாற்றுமா என்றொரு கேள்வி எழலாம். சமூகமரபு வேண்டுமென்றால் அக்கேள்விக்கு  இல்லை என்று பதில் சொல்லலாம். ஆனால் எழுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு என்பதே அக்கேள்விக்கு இலக்கியம் அளிக்கும் பதில்.

அன்னா கரினினா நாவலில் இடம்பெறும் ஒரு காட்சியை இப்போது நினைத்துக்கொள்கிறேன். விரான்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் இடையில் மலர்ந்திருக்கும் காதல் அன்னாவுடைய கணவன் கரினினாவுக்குத் தெரிந்துவிடுகிறது. தன்னுடைய பெருந்தன்மையால் அதை மன்னிக்கவும் மறக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தப் பெருந்தன்மையாலும் தான் ஒரு சிறுவனுக்குத் தாய் என்கிற எண்ணத்தாலும் அன்னாவு தன் காதலை மறக்கத் தயாராக இருக்கிறாள். காதலனை மறந்த ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுகிறாள்.

எல்லாம் சரியாகி மீண்டும் ஒரு புள்ளியிலிருந்து வாழ்க்கை நல்லவிதமாகத் தொடங்கிவிட்டது என்று தெரியும் நேரத்தில் எதிர்பாராத விதமாக விரான்ஸ்கி குதிரையிலிருந்து விழுந்து காலை உடைத்துக்கொள்கிறான். அந்த விபத்து அவளை நிலைகுலைய வைத்து விடுகிறது. அந்த விபத்துச் செய்தியைக் கேட்டு வருத்தம் கொள்கிறாள் அன்னா. அப்போது அவன்பால் அவளிடம் காதல் எதுவும் இல்லை. விபத்தில் சிக்கிவிட்ட ஒரு நண்பரைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்கும் ஒரு மரபைப் பேணுவதற்காக ஒருமுறை சென்று விரான்ஸ்கியைச் சந்தித்துவிட்டு வருவதற்கு கணவனிடம் அனுமதி கேட்கிறாள். கணவனும் அனுமதி கொடுக்கிறான். ஆனால் விரான்ஸ்கியைச் சந்தித்த பிறகு அவளுடைய மனநிலை மாறிவிடுகிறது. முற்றிலுமாக மனத்திலிருந்து விலகிவிட்டது என நினைத்த காதல் ஒரு மாபெரும் ஆலமரமாக அவள் நெஞ்சில் எழுந்து கிளைவிரித்து நிற்கிறது. இனி தன் வாழ்வு அவனோடு மட்டுமே என முடிவெடுத்து அங்கேயே தங்கிவிடுகிறாள். விரான்ஸ்கியின் காதலை எதன் பொருட்டும் தன்னால் இழக்கமுடியாது என்பதை அக்கணத்தில் அவள் உணர்ந்து மனம் மாறிவிடுகிறாள். மாபெரும் துயரமொன்று அவள் பாதையை மாற்றிவிடுகிறது.

பாவனாவும் அன்னாவைப்போலவே முடிவெடுக்கிறாள். ஒரே ஒரு வேறுபாடு, பாவனா எடுக்கும் முடிவுக்குப் பின்னால் அவள் கணவன் வழங்கும் மறைமுகமான ஆதரவு இருக்கிறது. பாவனாவுடனான பரத்தின் உறவு வெளிப்படையானதாகவே இருக்கிறது. அதனால் ஒருவரிடமும் குற்ற உணர்வு இல்லை. இத்தகு சாதகமான சூழல் அளிக்கும் பாதுகாப்பின் காரணமாகவே அவனிடம் ஒரு விடுதலையுணர்வு வெளிப்படுகிறது. அந்தத் தோட்டத்தின் பழமையையும் அழகையும் உலகறியச் செய்யும் வகையில் தகவல்களைத் திரட்டி புத்தகம் எழுதத் தொடங்குகிறான் அவன். தோட்டத்தில் தேனீக்களை வளர்க்கும் தொழிலில் வெற்றியைத் தேடித் தருகிறான்.

பிறழ் உறவு என்பதை சமூகம் ஒழுக்கவியல் பார்வையின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. ஆனால் இலக்கியத்திடம் அப்படிப்பட்ட எந்த அளவுகோலும் இல்லை. பிறழ் உறவு உள்ளவர்கள் என்பதெல்லாம் சரி, இருக்கட்டும், அதைக் கடந்து அவர்கள் என்னவாக எஞ்சுகிறார்கள் என்பதைத்தான் இலக்கியம் கணக்கிலெடுத்துக்கொள்கிறது. பிறழ் உறவில் தொடங்கி, பிறழ் உறவிலேயே திளைத்து முடிந்து போகிறவர்களை இலக்கியம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் பிறழ் உறவுக்கு அப்பால் அவன் ஏதோ ஒரு பணியில் தன்னை இழக்கிறவனாக இருந்தால், அவனைப் பொருட்படுத்துகிறது. அவனைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அவனுக்கு இடம் தருகிறது. பரத் என்கிற ஸ்வாமி என்கிற ’யாத்திரை’யின் கதாநாயகனுக்கு இலக்கியம் அப்படிப்பட்ட இடத்தைத்தான் வழங்குகிறது.

ஒரு முன்னுரையில் நாவலின் கதையைப்பற்றிய அறிமுகத்தைவிட நாவல் எழுப்புகிற கேள்வியைப்பற்றிய அறிமுகம், அந்த நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு உதவும் என்னும் நம்பிக்கை உடையவன் நான்.  யாத்திரை எழுப்பும் கேள்விக்கான பதில்களை எல்லா வாசகர்களும் அருணகிரிநாதரோடு நிறுத்திக்கொள்ளாமல் தாம் அறிந்த பிறருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளோடும் இணைத்து மதிப்பிட்டுத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். அவர்களுடைய வாசிப்பு அனுபவம் பெருக அம்முயற்சி உதவி செய்யும்.

கன்னட நாவலாசிரியர் சூத்ர ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழுக்கு அவருடைய படைப்பை அறிமுகப்படுத்தும் மொழிபெயர்ப்பாளர்கள் மலர்விழிக்கும் மதுமிதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(மதுமிதாவும் மலர்விழியும் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சூத்ர ஸ்ரீநிவாஸ் அவர்களின் ’யாத்திரை ’என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரை)