தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தில் நான் தணியாத ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்த நவநீதம் டீச்சர், கண்ணன் ஐயா, கிருஷ்ணன் ஐயா ஆகியோர். பாட்டு, கதை, பாடம் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சொல்லும் விதத்தாலேயே கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல பாடல்வரிகளும் கதைக்கூறுகளும் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும். எல்லா ஆசிரியர்களும் பாடம் படிப்பதை ஒரு விளையாட்டுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மாற்றிவிடும் திறமை கொண்டவர்கள்.
கோவிந்தையர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எங்கள்
ஊர்க்கடைசியில் இருந்த அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சொக்கலிங்கம்
ஐயா. உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பார். பளிச்சென பேண்ட்டும் சட்டையும் போட்டுக்கொண்டு
வருவார். பார்க்கும்போது ஏதோ விருந்துக்கு வந்தவர்போல இருக்கும். ஆனால் பாடம் நடத்தத்
தொடங்கியதும் எல்லா மாணவர்களைப்போலவே அவரும் ஒரு மாணவராக மாறிவிடுவார்.
வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளுக்கு இடையிலிருக்கும் வேறுபாடுகளை
அவர்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஒற்றெழுத்தின் தேவை ஏற்படும் இடங்களைக்
கண்டுபிடிக்கும் நுணுக்கத்தையும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். ஒற்றெழுத்தைச் சேர்ப்பது
அல்லது தவிர்ப்பது தொடர்பான பயிற்சியில் தேர்ச்சியடைவதற்காக ஒவ்வொரு நாளும் பத்து இருபது
சொற்களைச் சொல்லி எழுதவைத்தார்.
அவர் எந்தப் பாடத்தையும் பாடமாகவே நடத்தமாட்டார். முதலில் ஒரு
கதையைப்போலவோ அல்லது அவருடைய ஊரில் பார்த்த ஏதோ ஒரு அனுபவத்தைப்போலவோ அல்லது ஏதோ ஒரு
நாடகத்தில் இடம்பெற்ற காட்சியைப்போலவோ சொல்லி எங்களுக்கு ஆர்வத்தை உருவாக்குவார். ஒரு
வகுப்பு முழுதும் அந்தக் கதை நீளும். அன்று முழுதும் அந்தக் கதை நினைவில் மிதந்தபடியே
இருக்கும். அடுத்தநாள் காலையில் ஒவ்வொருவாக
எழுந்து நின்று பாடத்தைப் படிக்கவைக்கும்போதுதான், அந்தப் பாடத்துக்கும் முதல்நாள்
அவர் சொன்ன கதைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.
ஒருநாள் வகுப்பு தொடங்கியதும் “உங்க ஊருல ஒரு பெரிய ஏரி இருக்குதே,
அதை எத்தனை பேருடா பார்த்திருக்கீங்க, பார்த்தவன்லாம் கையைத் தூக்குங்க” என்று சொன்னார்.
எல்லோருமே உற்சாகமான குரலில் “பார்த்திருக்கோம் ஐயா” என்றபடி கையை உயர்த்தினோம். வகுப்பில்
அமர்ந்திருந்த எல்லா மாணவர்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு “பரவாயில்லையே,
எல்லாருமே பார்த்திருக்கீங்க. கெட்டிக்கார பசங்க. சரி சரி, கையை கீழ எறக்குங்க” என்றார்.
எல்லோரும் அக்கணமே கையை கீழே இறக்கினோம்.
“சரி, இந்த ஏரிக்கு எந்த ஆத்திலேர்ந்து தண்ணீர் வருது, தெரியுமா?”
என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார்.
சிலர் மட்டுமே கையை உயர்த்தினோம். ஐயா அனைவரையும் ஒருமுறை சுற்றிப்
பார்த்துவிட்டு “நீ சொல்லு” என்று என் பக்கமாக விரலை நீட்டினார். உடனே நான் எழுந்து
நின்று “தென்பெண்ணை ஆறு” என்றேன்.
“சரியான
பதில்” என்று புன்னகைத்தபடி கைத்தட்டி பாராட்டுதல்களைத் தெரிவித்தார். “அது எப்படி
உனக்குத் தெரியும்? அந்த ஆத்தை நீ பார்த்திருக்கியா?” என்று கேட்டார். உற்சாகமான குரலில்
“ஆமாம் ஐயா, பார்த்திருக்கேன் ஐயா” என்று தலையசைத்தேன்.
“எப்ப பார்த்த?”
“பொங்கல் முடிஞ்சதும் ஆத்துத்திருவிழா அன்னைக்கு எங்க தெருவிலேர்ந்து
எல்லாரும் வண்டி கட்டிகிட்டு அந்த ஆத்துக்குப் போவாங்க. அவுங்களோடு நானும் போவேன். அப்ப பார்த்திருக்கேன்.”
“ஆறு எப்படி இருக்கும், சொல்லு”
திருவிழா சமயத்தில் பார்த்த ஆற்றின் தோற்றத்தை நினைவுக்குக்
கொண்டுவந்து ஒவ்வொரு வரியாகச் சொன்னேன். அவர் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியோடு புன்னகைத்தபடி
அமரும்படி சைகை காட்டினார்.
“அடுத்து, அருவியை எத்தனை பேரு பார்த்திருக்கீங்க, சொல்லுங்க?”
அவருடைய கேள்வியே எனக்கு முதலில் புரியவில்லை. அருவி என்னும்
சொல்லையே அன்றுதான் நான் முதன்முதலாகக் கேட்டேன். குளம், குட்டை, ஏரி, ஆறு மாதிரி அதுவும்
ஒரு நீர்நிலையாகத்தான் இருக்கவேண்டும் என எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் எழுந்துநின்று
சொல்ல துணிவில்லாமல் அமைதியாக ஐயா முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அருவி அருவி என
ஒவ்வொருவரும் உதடுகளை அசைத்து தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டார்களே தவிர, ஒருவருக்கும்
தெளிவான பதில் தெரியவில்லை.
“என்னடா, தெரியலையா, சரி, நானே சொல்றேன்” என்று சொல்லத் தொடங்கினார்.
“இந்த ஊருல, நம்மச் சுத்தி பார்க்கிற இடம் முழுக்க நிலப்பகுதியா
இருக்கறதால எல்லா இடத்துலயும் இதுபோலவே இருக்கும்னு நாம நினைச்சிட்டிருக்கோம். ஆனா
உண்மை அது கிடையாது. காடு, மலை, பள்ளத்தாக்கு, பாலைவனம்னு உலகம் பலவிதமா மாறிமாறி இருக்கும்.
அந்த வழியாவும் ஆறுகள் போகும். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அப்ப ஒரு மலையில ஓடக்கூடிய
ஆறு உயரமான இடத்துலேர்ந்து பூமியில விழுந்து தரையில ஓட ஆரம்பிக்கும். அதுக்குப் பேருதான்
அருவி.”
சொக்கலிங்கம் ஐயா தொடர்ந்து சொல்லச்சொல்ல எனக்குள் அருவியைப்பற்றிய
சித்திரம் பேருரு கொள்ளத் தொடங்கியது. மலையிலிருந்து உருண்டு விழும் ஆறு என்னும் காட்சியை
நினைக்கநினைக்க மனம் பரவசத்தில் திளைத்தது.
நீண்ட விவரணைக்குப் பிறகு “நான் அருவியைப் பார்த்திருக்கேன்.
அருவியில குளிச்சிருக்கேன்” என்று புன்னகைக்கும் முகத்துடன் சொன்னார் ஐயா.
“உண்மையாவா ஐயா?” என்று நான் கேட்டபடி மனம் துள்ள அவர் முகத்தைப்
பார்த்தேன்.
“ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. ஊருக்குப் பக்கத்துலயே மேற்குத்தொடர்ச்சி
மலையை ஒட்டி குற்றாலம்னு ஒரு அருவி இருக்குது. ஒரு அருவி இல்லை, மலையினுடைய வெவ்வேறு
பக்கத்துல வெவ்வேறு பேருல விழுந்து ஓடுது.
பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி,
ஐந்தருவி, புலியருவி, பாலருவின்னு ஏகப்பட்ட அருவிகள். ஒவ்வொன்னும் வெவ்வேறு உயரத்துல
மலையுச்சியிலேர்ந்து விழுது. அப்படியே பால்குடத்தைக் கவிழ்த்தமாதிரி இருக்கும். மழை
நேரத்துல ஒரு ஆறுமாச காலம் அந்த அருவியில தொடர்ச்சியா தண்ணி விழும். உங்களமாதிரி சின்ன
பிள்ளையா இருந்த சமயத்துல ஒவ்வொரு வாரமும் எங்க அப்பா அந்த அருவிக்கு அழைச்சிட்டு போய்
குளிக்கவைப்பாரு. ஒரே கொண்டாட்டமா இருக்கும்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார்
ஐயா.
அவர் சொன்ன சொற்களைக் கேட்கக்கேட்க அப்படியே ஒரு பறவையைப்போல
பறந்துபோய் அந்த அருவிக்கு அருகில் நிற்கவேண்டும்போல இருந்தது. “நம்ம ஊருல ஒரு மலையும் இல்லை. காடும் இல்லை. அருவியும்
இல்லை. ரொம்ப மோசம்” என்று சட்டென ஊர் மீது
சலிப்பான ஓர் எண்ணம் பிறந்தது.
“அருவின்னு சொன்னா, வெறும் தண்ணின்னு மட்டும் நினைச்சிக்கக்கூடாது.
அக்கம்பக்கத்துல செடிகொடிமரங்கள் எல்லாமே இருக்கும். காடு இருக்கும். பாறைகள் இருக்கும்.
விதவிதமான பறவைகள் இருக்கும். காய்கனிகள் இருக்கும். விலங்குகள் இருக்கும். குரங்குகள்
விளையாடும். இன்னொரு விதமான உலகம் அது. எப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைச்சா, வாழ்நாள்ல
ஒருமுறையாவது எல்லாரும் குற்றாலத்துக்குப் போய் அருவியைப் பார்த்துட்டு வரணும். அப்பதான்
அதனுடைய அருமை உங்களுக்குப் புரியும்”
குற்றாலத்தைப் பார்க்கும் கனவை அன்று சொக்கலிங்கம் ஐயா எல்லோருடைய
நெஞ்சிலும் விதையாகத் தூவிவிட்டார். அது ஆழத்தில் சென்று பதிவது தெரியாமல் பதிந்துவிட்டது.
“இவ்வளவு கதையையும் ஏன் உங்களுக்குச் சொன்னேன் தெரியுமா?”
“ஏன் ஐயா?”
“அந்தக் குற்றால அருவியைப் பத்தி உங்களுக்கு ஒரு பாட்டு இருக்குது.
அதைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் சொன்னேன். இப்ப பாட்ட படிக்கிறேன், கேளுங்க”
சொல்லிக்கொண்டே புத்தகத்தைப் பிரித்தார் ஐயா. வழக்கம்போல எதையோ
ஒரு கதையைப்போல சொல்லத் தொடங்கி, கடைசியில் சரியாக பாடத்தில் வந்து நின்றுவிட்டார்.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்ச்ம்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே
ஏற்ற இறக்கங்களோடும் அபிநயங்களோடும் அவர் சொன்ன விதத்திலேயே
எங்களுக்கு அந்தப் பாட்டு புரிந்துவிட்டது. ஒவ்வொரு வரியாகப் பிரித்துப் பிரித்து தனியாகச்
சொல்லி விளக்கியதும் முழுப்பாட்டும் புரிந்துவிட்டது. மனப்பாடமும் ஆகிவிட்டது.
“இதை எழுதுனது திரிகூட ராசப்ப கவிராயர்னு ஒரு கவிஞர். குற்றாலக்குறவஞ்சின்னு
பெரிய காவியம். அதுல ஒரு பாட்டு இது. குற்றால மலையைப்பத்தியும் அருவியைப்பத்தியும்
அந்த மலையில குறி சொல்லி பிழைக்கிற ஒரு பாட்டி சொல்றமாதிரி அமைஞ்சிருக்குது. அந்தக்
காவியத்தைப் பாராட்டி அந்தக் காலத்துல மதுரையில அரசரா இருந்த சொக்கநாத நாயக்கர்ங்கறவரு
கவிராயருக்குப் பெரிய பெரிய பரிசுலாம் கொடுத்து
அனுப்பிவச்சாருன்னு சொல்வாங்க”
அன்று இரவு வீட்டுக்குத் திரும்பியதும் ஆறேழுமுறை நிறுத்தி நிதானமாக
அந்தப் பாட்டைப் படித்தேன். இயல்பாகவே முழுப்பாடலும் மனத்தில் பதிந்துவிட்டது. வகுப்பில்
அந்தப் பாடலை அபிநயத்தோடு சொல்லிப் பார்ப்பது ஒரு விளையாட்டாகவே மாறிவிட்டது. ஆளுக்கொரு வரியைச் சொல்லி அந்த வரிக்குத் தகுந்த
மாதிரி நடிப்பதுகூட ஒரு விளையாட்டாக மாறிவிட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி விழாவில்
அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆடிப் பாடி குதித்து ஒரு நாடகமாகவே நடித்து பரிசு பெற்றான்
ஒரு மாணவன். குற்றாலத்தைப் பார்க்கும் ஆவல் எனக்குள் மேன்மேலும் ஆழமாக வேரூன்றியது.
அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கப்படிக்க, தமிழ்நாட்டின் நிலவியலும்
வெவ்வேறு மாவட்டங்களின் பெயர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான நகரங்களின்
பெயர்களும் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மூன்று கடல்களின் பெயர்களும் ஆறுகளின் பெயர்களும்
மெல்ல மெல்ல மனத்தில் பதிவாகின. ஓய்வுநேரங்களில்
தேசப்படத்தை விரித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு நகரத்தையும் ஆறு ஓடும் திசையையும் கண்டுபிடிப்பது
மனத்துக்குகந்த விளையாட்டாக மாறியது.
பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் பள்ளி சார்பாக
ஒரு சுற்றுலாப்பயணத்தைத் திட்டமிட்டு, பெயர்கொடுத்து பணமும் கொடுத்த மாணவர்களை மட்டும்
சாத்தனூர் அணைக்கட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். பதினொன்றாம் வகுப்பில்
இருந்தபோது அதேபோன்ற ஒரு பயணம் வீடூர் அணைக்கட்டைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பத்து பதினைந்து ஊர்களுக்கு ஆண்டுமுழுக்கத் தேவையான தண்ணீரைத்
தேக்கிச் சேமித்துவைத்திருக்கும் கட்டுமானம் என்பது கற்பனைக்கு எட்டாத ஒரு வசீகரமாக
இருந்தது. அதைப் பார்க்கும் ஆர்வம் பொங்கிக்கொண்டே இருந்தது. ஆனால் அப்போது பயணத்துக்குரிய
கட்டணத்தைச் செலுத்தும் வசதி இல்லை. அதனால் பயணத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்ன விவரங்களை
வைத்து, ஓர் அணைக்கட்டு எப்படி இருக்கும் என்பதை நானே கற்பனையில் கட்டியெழுப்பிப் பார்த்துக்கொண்டேன்.
எதிர்காலத்தில் எல்லா இடங்களையும் ஒன்றுவிடாமல் பார்ப்பேன் என மனத்துக்குள் சொல்லி
ஆறுதல் தேடிக்கொண்டேன்.
பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப்படிப்பும் முடிந்து புதுச்சேரியில்
தொலைபேசித்துறையில் ஊழியராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. சம்பளமாக ஒரு தொகை
கையில் கிடைக்கத் தொடங்கியதும் குற்றால அருவியைப் பார்க்கும் கனவு மீண்டும் என்னை ஆட்டிப்
படைக்கத் தொடங்கியது.
ஒருமுறை எங்கள் ஊர் திரையரங்கில் புதிய படம் எதுவும் கிடைக்கவில்லை
என்பதற்காக, வல்லவனுக்கு வல்லவன் என்னும் பழைய திரைப்படத்தைக் கொண்டுவந்து வெளியிட்டிருந்தார்கள்.
கூட்டமே இல்லாத அந்தப் படத்துக்கு முதல்நாள் இரவே சென்றிருந்தேன். ’ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்’ என்னும் பாடலை முழுக்கமுழுக்க பால்போல் பாய்ந்தோடும் அருவிக்கரையோரம்
படமாக்கியிருந்தார்கள். அந்த அருவிக்காட்சி என்னை இன்பத்தில் மூழ்கவைத்தது. நான் கற்பனை
செய்துவைத்திருந்ததைவிட பத்து மடங்கு வசீகரத்தை அளிப்பதாக இருந்தது அந்த அருவி. திரையைக்
கடந்துவந்து அருவியின் குளிர்நீர் என் மீது
தெறித்துவிடுவதுபோல ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். ஒருகணம் கூட விழிகளைத் திரையைவிட்டு
அகற்றாமல் பரவசத்தோடு அக்காட்சியில் நான் திளைத்திருந்தேன்.
முதன்முதலாக
ஓர் அருவி எப்படி இருக்கும் என்பதை எனக்கு அக்காட்சி உணர்த்திவிட்டது. அருவி அருவி
என மனம் குதித்துக்கொண்டே இருந்தது. அந்தப் பாடல் காட்சி எந்த அருவிக்கரையில் எடுக்கப்பட்டதோ
தெரியாது, ஆயினும் குற்றால அருவிக்கரையில் எடுக்கப்பட்டதாக நானே கற்பித்துக்கொண்டேன்.
குற்றாலம் குற்றாலம் என மனம் கூவிக்கொண்டே இருந்தது. ஆறாம் வகுப்பில் எங்கள் சொக்கலிங்கம்
ஐயா சொன்ன சொற்களை மீண்டும் நினைத்துக்கொண்டேன். புதிய திரைப்படம் வந்துவிட்டதால் நான்கு
நாட்களுக்குப் பிறகு அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அருவிக்காட்சிக்காகவே
நான் அந்த நான்கு நாட்களும் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இரவுக்காட்சியாகப் பார்த்தேன்.
அந்த
அருவிக்காட்சி எப்படியாவது குற்றாலத்தை வெகுவிரைவில் பார்த்துவிடவேண்டும் என்னும் எண்ணத்தை
விதைத்தது.
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையாகச் சேமித்துவைத்து, நாலைந்து
நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு குற்றாலத்துக்குச் செல்லவேண்டுமெனத் தோன்றியது. திட்டமிட்டபடி மாதம் இருபத்தைந்து ரூபாயை தனியாக
எடுத்துவைத்து சேமிக்கவும் தொடங்கிவிட்டேன். எறும்பு தன் புற்றுக்குள் தன் எதிர்காலத்
தேவைக்கு உணவைச் சேமித்துவைத்துக்கொள்வதைப்போல துணிமணிகளை வைத்துக்கொள்வதற்காக இருந்த
பெட்டிக்குள் ஆடைகளுக்கு அடியில் மறைவாக ஒரு சுருக்குப்பைக்குள் பணத்தை வைத்து பாதுகாத்தேன்.
சிக்கனமாக இருந்து சேமிப்பதற்காக கூடுமானவரைக்கும்
பேருந்துப்பயணத்தைத் தவிர்த்து நடந்துசெல்ல முடிந்த இடங்களுக்கெல்லாம் நடந்து சென்றேன்.
நான்கு மாதங்களில் நூறு ரூபாய் சேர்ந்தது. இன்னும் ஒரு நூறு
ரூபாய் சேர்த்துவிட்டால் குற்றாலத்துக்குப் புறப்பட்டுவிடலாம் என்ற கற்பனையில் மூழ்கியிருந்தபோது,
எதிர்பாராத விதமாக எங்கள் அப்பா உடல்நலம் குன்றியதால் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதாயிற்று.
வேறு வழியில்லாமல் குற்றாலப்பயணத்துக்காகச் சேமித்துவைத்திருந்த பணத்தை எடுத்து மருத்துவத்துக்குச்
செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. குற்றாலம் பற்றி நினைக்கக்கூட நேரமில்லை. எப்படியோ
கடன் இல்லாமல் சமாளித்தோமே, அதுவே பெரிய விஷயம் என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.
எனக்கும் எப்போதாவது ஒரு வாய்ப்பு வரும், அப்போது குற்றாலத்துக்குச் செல்லலாம் என என்னைத் தேற்றிக்கொண்டேன். எனினும் நான் புதுச்சேரியில்
பணிபுரிந்த காலம் வரைக்கும் அந்த வாய்ப்பு வரவே இல்லை.
என் வாழ்வின் திருப்புமுனையாக, கர்நாடகத்தில் தொலைபேசித்துறையில்
இளநிலை பொறியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டு காலப் பயிற்சிக்குப்
பிறகு பெல்லாரி கோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கர்நாடக மாவட்டத் தலைநகரங்களை பிற
பெருநகரங்களோடு கேபிள் வழியாக இணைக்கும் மாபெரும் தேசியத்திட்டத்தில் நான் பணிபுரிந்தேன்.
பெல்லாரியில் தொடங்கி ஹூப்ளி வரைக்கும் கேபிள் புதைக்கவேண்டும். நான் ஹொஸபேட்டெ என்னும்
நகரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். பெல்லாரியில் தொடங்கி ஹொஸபேட்டெ வழியாக கொப்பல்
வரைக்குமான பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. நடுவில் இருந்த ஹொஸபேட்டெயைத் தங்குமிடமாகக்
கொண்டு நான் செயல்பட்டேன்.
ஹொஸபேட்டெக்கு அருகில்தான் துங்கபத்திரை அணைக்கட்டு இருந்தது.
முப்பத்திரண்டு வாசல்களைக் கொண்ட மிக நீண்ட அணைக்கட்டு. வேலைக்குச் சேர்ந்த முதல்நாள்
மாலையிலேயே அந்த அணைக்கட்டைப் பார்க்கச் சென்றேன். உயர்ந்த தடுப்புச் சுவர்களுக்கு
மறுபுறம் கடலென குமுறி ஓசையெழுப்பி கரைகளை மோதிக்கொண்டிருக்கும் அலைகளோடு துங்கபத்திரை
சுழன்றாடிய காட்சி நினைவில் அப்படியே பதிந்துவிட்டது. இருட்டும்வரைக்கும் கண்ணுக்கு
எட்டிய தொலைவுவரைக்கும் தெரிந்த தண்ணீர்ப்பரப்பைப் பார்த்தபடி இருந்தேன். இரண்டாண்டு
காலம் அந்த ஊரில் தங்கி நான் தொடங்கிய வேலையை முடித்தேன்.
அந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் துங்கபத்திரையைப் பார்ப்பதற்காகவே
என் அதிகாலை நடைப்பயிற்சியை அல்லது மாலை நடைப்பயிற்சியை அதை நோக்கியதாக வைத்துக்கொண்டேன். சாத்தனூர் அணைக்கட்டைக்கூட பார்த்திராத எனக்கு அந்தத்
துங்கபத்திரை அணைக்கட்டுக்காட்சி மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அங்கிருந்த சமயத்தில்தான்
நான் திருமணம் செய்துகொண்டேன். துங்கபத்திரையை நோக்கிய நடைப்பயிற்சியில் தினந்தோறும்
என் மனைவியும் என்னோடு சேர்ந்து நடந்தார்.
பெல்லாரி – ஹூப்ளி இணைப்புத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததும்
வேறுவேறு நகரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற
ஒரு திட்டத்துக்காக ஷிமோகாவுக்குச் செல்லவேண்டிய வேலை வந்தது. ஷிமோகாவையும் சாகரையும்
இணைப்பதுதான் திட்டம். ஷிமோகாவில் எங்கள் துறைக்குரிய குடியிருப்புப்பகுதியிலேயே எனக்கு
வீடு கிடைத்ததால் வாடகைக்கு வீடு தேடவேண்டிய அவசியம் எழவில்லை. உடனே குடும்பத்தை அந்தப் புதிய வீட்டுக்கு மாற்றிக்கொண்டோம்.
எங்களுக்கு மகன் பிறந்திருந்தான்.
சாகரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் ஜோக் அருவி இருந்தது.
என்னோடு பணிபுரிந்த நண்பரொருவர்தான் எனக்கு அந்த அருவியைப்பற்றி எடுத்துரைத்து முதலில்
அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு பகல்பொழுதையும் இரவுப்பொழுதையும் அந்த அருவிக்கு
அருகிலேயே நாங்கள் கழித்தோம். நாங்கள் நின்றிருந்த இடத்துக்கும் அருவி விழுந்த இடத்துக்கும்
இடையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. ஆயினும் அருவியின் சாரல் முகத்தில் தெறித்தது.
பன்னீர்த்துளிகள் போல அச்சாரல் துளிகள் முகத்தில் படும்போது மெய்சிலிர்த்தது.
அருவி
எனச் சொன்னபோதும் அது நான்கு பிரிவுகளாக மலையிலிருந்து விழுந்துகொண்டிருந்தது. ராஜா,
ராணி, ரோவர், ராக்கெட் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருந்தது. ஷராவதி ஆற்றின் போக்கில்தான்
அந்த அருவிக்கூட்டம் காட்சியளித்தது. இந்தியாவில் உயரமான அருவிகளில் அதுவும் ஒன்று.
ஏறத்தாழ ஆயிரம் அடி உயரம். பார்த்துக்கொண்டே இருந்த அனுபவத்தில் பசி கூட மறந்துவிட்டது.
ஆழ்நெஞ்சில் குற்றாலத்தை நினைத்தபடி, நான் அந்தப் பேரருவியைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
அடுத்துவந்த விடுமுறை நாளில் என் மனைவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு
மீண்டும் அருவியைப் பார்க்கச் சென்றேன். ஓராண்டு காலம் நான் ஷிமோகாவில் இருந்தேன்.
அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பத்து முறையாவது ஜோக் அருவியைப் பார்த்திருப்போம். ஜோக் அருவிக்குச் செல்வது எங்களுக்கு உல்லாசப்பயணம்போல
அமைந்துவிட்டது.
ஷிமோகாவிலிருந்து எனக்குப் பெங்களூருக்கு மாற்றல் கிடைத்தது.
மகன் வளர்ந்ததும் கல்வி வாய்ப்புக்கு பெங்களூர் நகரம் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி,
நான் அந்த மாற்றலை ஏற்றுக்கொண்டேன். ஷிமோகாவில்
நான் தொடங்கிய அலுவலகப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு குடும்பத்தோடு பெங்களூருக்கு
வந்துவிட்டேன்.
காவிரியைப் பாயும் மைசூருக்கு அருகில் இருக்கிறோம் என்ற எண்ணமே,
அந்த ஆற்றைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியபடி இருந்தது. சில நாட்களிலேயே
அந்த எண்ணத்தைச் செயல்படுதிக்கொள்ளும் வாய்ப்பு கூடிவந்தது. ஒரு விடுமுறை நாளில் காலை
நேரத்தில் வாடகைக்காரில் மைசூரை நோக்கிச் சென்றோம். சிவசமுத்திர நீர்வீழ்ச்சியின் முன்னால்தான்
முதலில் நாங்கள் போய் நின்றோம்.
அருகில் சென்று பார்க்க அனுமதி இல்லை. வெகுதொலைவில் அதைக் கண்டு
ரசிப்பதற்கான மேடை இருந்தது. அங்கு நின்று ககனசுகி, பரசுகி என இருபெரும் பிரிவுகளாகப்
பொங்கி விழும் அந்த அருவியைப் பார்த்தோம். ஏறத்தாழ முன்னூறு அடி உயரத்திலிருந்து அந்த
அருவி விழுந்து பாய்ந்தோடியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலேயே முதல்
நீர்மின்சார நிலையம் அந்த இடத்தில்தான் தொடங்கப்பட்டது என்று அங்கிருந்த பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிவசமுத்திரம் மின்சார நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மின்சாரத்தின் உதவியோடுதான்
கோலார் தங்கவயலில் சுரங்கவேலை தொடங்கப்பட்டது என்றும் பெங்களூரில் வெள்ளைக்கார அதிகாரிகள்
வசித்த பகுதிகளுக்குத் தேவையான மின்சாரமும் அங்கிருந்துதான் வழங்கப்பட்டது என்றும்
எழுதப்பட்டிருந்தது.
சிவசமுத்திரம் அருவியின் அழகில் மனம் பறிகொடுத்து நின்ற தருணத்தில்
ஒருகணம் குற்றாலம் அருவியின் எண்ணம் எழுந்து என் ஏக்கத்தை அதிகரிக்கவைத்தது. இவ்வளவு
வாய்ப்புகளை வழங்கும் இயற்கை அந்த வாய்ப்பையும் என்றாவது ஒருநாள் தானாக வழங்கும் என
நினைத்து அமைதிகொண்டேன்.
சிவசமுத்திரத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கப்பட்டினம் சங்கமத்தையும்
கோவிலையும் பார்த்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்குச் சென்றோம். தடுத்து நிறுத்தப்பட்ட
காவிரியின் நீர்ப்பரப்பு வெயில் பட்டு வெள்ளித்தகடுபோல பளபளத்தபடி இருந்தது. கண்ணுக்கு
எட்டிய தொலைவு வரைக்கும் தண்ணீரே தெரிந்தது. முதலில் கண்ணம்பாடி அணைக்கட்டு என்ற பெயரில்
அழைக்கப்பட்டாலும் அந்தக் கட்டுமானத்துக்காக பெருமளவில் தம் சொந்தப்பணத்தைச் செலவிட்ட
மைசூர் அரசரான கிருஷ்ணராஜ உடையாரைக் கெளரவிக்கும் வகையில் அவர் பெயரையே அந்த அணைக்கட்டுக்குச்
சூட்டிவிட்டனர். துங்கபத்திரை அணைக்கட்டு போலவே இதுவும் நீளமான அணைக்கட்டு. பல கதவுகளைக்
கொண்டது. அணையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பிருந்தாவனம்
என்னும் பூந்தோட்டம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
பெருநகர இணைப்புகளுக்கு கண்ணாடி இழை கேபிள் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தும் நடைமுறை அப்போது இந்தியாவெங்கும் அறிமுகமானது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான
வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வசதிக்காக அந்தத் தொழில்நுட்பத்தை எங்கள் துறை உடனடியாக
ஏற்றுக்கொண்டது. அதன் விளைவாக, முதல்கட்டமாக கேபிள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு
இந்தியாவெங்கும் உள்ள எங்கள் பயிற்சி நிலையங்கள் வழியாகப் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தச்
சிறப்புப்பயிற்சிக்காக எங்கள் அலுவலகம் என்னை ஜபல்பூரில் உள்ள பயிற்சிநிலையத்துக்கு
அனுப்பியது. நானும் இரண்டுமூன்று ரயில்களில் மாறிமாறிப் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தேன்.
பயிற்சி இல்லாத ஞாயிறு அன்று அங்கு கிடைத்த நண்பர்களோடு சேர்ந்துகொண்டு
ஜபல்பூருக்கு அருகில் இருந்த பேடாகாட் என்னும் இடத்துக்குச் சென்றோம். சலவைக்கற்கள்
நிறைந்த மாபெரும் மலையைப் பிளந்துகொண்டு பாய்ந்துவந்த நர்மதை நதியைப் பார்க்கப் பார்க்கப்
பரவசமாக இருந்தது. வெள்ளைவெளேரென சுடர்விட்ட மலையை அண்ணாந்து பார்த்தபடி அந்த நதியோட்டத்தில்
நாங்கள் சென்ற படகுப்பயணத்தை மறக்கவே முடியாது. அது ஒரு பேரனுபவம். அதையடுத்து நாங்கள்
கண்ட துவாந்தார் அருவியின் தோற்றம் மயங்கவைப்பதாக இருந்தது. அந்த உயரம். அந்த ஓசை.
அந்தச் சாரல். ஒவ்வொன்றும் பரவசம்.
பணிநிமித்தமாக நான் மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாகவே பல ஆறுகளையும்
பல அருவிகளையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவிலிலிருந்து
சிறிது தொலைவில் இருந்த காந்தஹார் அருவி, சதீஸ்கரின் சித்திரக்கூட அருவி, குடகு பகுதியில்
அமைந்திருக்கும் சுன்சுன்கட்டெ அருவி, கோகாக் பகுதியில் அமைந்திருக்கும் கடப்பிரபா ஆற்றையொட்டிப் பொங்கிப் பாயும் அருவி,
மடிக்கேரிக்கு அருகில் தொட்டஹெப்பெ, சிக்கஹெப்பெ என இரு பெயர்களில் சகோதரிகளைப்போல
பொங்கி இறங்கி வழியும் அருவிகள் என நான் பார்த்த அருவிகளின் காட்சிகள் மனத்தில் விரிந்தபடி
இருக்கின்றன. ஒவ்வொரு அருவியின் முன்னால் நிற்கும்தோறும் சொக்கலிங்கம் ஐயா சொல்லிக்கொடுத்த
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் பாடல் நினைவுக்கு வந்துவிடும். குற்றாலத்தின்
சாயலை அந்த அருவிகளில் நானாகவே கற்பனை செய்துகொண்டு, சில கணங்கள் அதில் திளைத்திருப்பேன்.
இதற்கிடையில் இருபதாண்டு காலம் உருண்டோடிவிட்டது. நான் எழுதிய
சிறுகதைகள் தமிழ்ச்சூழலில் கவனம் பெறத் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு சிறுகதைத்தொகுதியோ
அல்லது நாவலோ வெளிவந்து பதிய வாசகர்கள் கிடைக்கத் தொடங்கினர். பல மூத்த எழுத்தாளர்களின்
அறிமுகமும் நட்பும் அமைந்தன. அப்படி எனக்குக் கிடைத்த நண்பர்களில் மூத்த கவிஞரான கலாப்ரியா
முக்கியமானவர். 2000 ஆண்டு இறுதியில் அவர்
ஒரு கடிதம் எழுதியிருந்தார். குற்றாலத்தில்
ஒரு பட்டறை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்தச் சந்திப்பில் கவிதை, சிறுகதை, நாவல் என
எல்லா வகைமை சார்ந்த படைப்புகள் குறித்தும் உரையாடலாம் என்றும் அக்கடிதத்தில் அவர்
குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளக்கவிஞர்களை அழைத்துவந்து மலையாளக்கவிதைகளை
அறிமுகப்படுத்தும் விதமாக ஓர் அமர்வை ஒருங்கிணைக்கிறார் என்றும் அதேபோல நான் கன்னடக்கவிதைகளை
அறிமுகப்படுத்தும் விதமாக ஓர் அமர்வை நான் ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
என் நீண்டகாலக் குற்றாலக்கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை
காலம் கலாப்ரியா வழியாக எனக்கு வழங்கியிருப்பதாக நினைத்து மகிழ்ந்தேன். உடனே நான் அந்த
அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஒருபுறம் எனக்கு அறிமுகமான இரு கன்னடக்கவிஞர்களைச் சந்தித்து
பங்கேற்பதற்கு ஒப்புதல் பெறும் வேலையைச் செய்தபடி அமர்வில் வாசிப்பதற்காக அவர்களுடைய
சில கவிதைகளையும் வேகவேகமாக மொழிபெயர்த்து முடித்தேன்.
2000 ஆம் ஆண்டில் டிசம்பர் இறுதி மூன்று நாட்களில் குற்றாலத்தில்
அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. எங்கள் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பட்டறையில்
சில புத்தகங்களும் வெளியிடப்பட்டன. அந்நிகழ்ச்சிக்கு நான் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.
நிகழ்ச்சிகளுக்கு இடையிடையில் கிடைத்த ஓய்வுப்பொழுதுகளில் அவர்களை அழைத்துக்கொண்டு
அருவிகளைப் பார்ப்பதில் செலவழித்தேன். நாங்கள் தங்கியிருந்த திவான் பங்களாவுக்கு அருகிலேயே
குற்றாலநாதர் கோவிலும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து மகிழ்வதற்கு வசதியாக அருவியும் இருந்தது.
அந்த அருவியின் முன்னால் நின்று அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பதே
ஆனந்தமான அனுபவமாக இருந்தது. கண்கூச வைக்கும் உயரத்தில் அந்த அருவியின் மேல்விளிம்பு
இருந்தது. அந்தப் பேரோசையைக் கேட்கக்கேட்க ஏதோ இசைநிகழ்ச்சியைக் கேட்டதுபோல மனம் துள்ளியது.
அக்கணத்தில் சொக்கலிங்கம் ஐயா முன்னால் அமர்ந்து அவரிடம் ‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு
கொஞ்சும்’ பாடத்தைக் கேட்ட சிறுவனாக என்னை உணர்ந்தேன். அருவிக்கனவை மானசிகமாக எனக்குள்
விதைத்த அவரை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.
அந்த அருவியைச் சுற்றி ஏழெட்டு இடங்களில் இன்னும் சில அருவிகள்
இருப்பதாக கலாப்ரியா சொன்னார். பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி,
புலியருவி, பழைய குற்றாலம் அருவி என அதன் பெயர்களை அடுக்கினார். எல்லாமே எங்கள் சொக்கலிங்கம்
ஐயா வழியாகக் கேட்ட பெயர்கள். அவை அனைத்தையும் நான் மனத்துக்குள் குறித்துக்கொண்டேன்.
ஆனால் அமர்வுகளுக்கு இடையில் எங்களுக்குக் கிடைத்த ஓய்வுப்பொழுதில் எல்லா அருவிகளையும்
பார்க்கமுடியவில்லை. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றை மட்டுமே பார்த்துவிட்டுத்
திரும்பிவிட்டோம்.
அத்தருணத்தில் பார்க்காமல் விட்ட அருவிகளையெல்லாம் அடுத்து
2001இல் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த பட்டறைக்குச் சென்றபோது பார்த்தோம். அதற்காகவே
பட்டறை முடிந்ததும் கூடுதலாக ஒரு நாள் தங்கினோம். மலைப்பாதையில் நடந்து உச்சியைத் தொட்டதும்
ஒரு திருப்பத்தில் வானுயரத் தோற்றத்தில் சட்டென தெரிந்த தேனருவியின் தரிசனம் மிகப்பெரிய
அனுபவம். அதன் முன்னிலையில் பேச்சே எழவில்லை. பொங்கியிறங்கும் தேனருவியின் முன்னால்
தண்ணீரில் இறங்கி விழியை விலக்க மனமின்றி அண்ணாந்து பார்த்தபடியே நின்றேன். ஒருபுறம்
என் மனைவியும் மறுபுறம் என் மகனும் நிற்க, அன்று நான் கண்ட தேனருவிக்காட்சி ஒரு சிற்பத்தைப்போல
என் மனத்தில் இன்றும் இடம்பெற்றிருக்கிறது.
அந்த நாள் என் வாழ்வில் மிகமுக்கியமான நாள். ஆறாம் வகுப்பு மாணவனாக
இருந்தபோது சொக்கலிங்கம் ஐயா வழியாக என் மனத்தில் உருவான குற்றாலக்கனவு முப்பதாண்டுகளுக்குப்
பிறகு நிறைவேறிய நாள்.
(யாவரும்
– இணைய இதழ் ஆகஸ்டு 2025)