Home

Sunday, 31 August 2025

சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள்

 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி ஆர்வம் பிறக்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விரிவாகவே பதில் சொன்னேன்.

ஒரு குடும்பத்தில் பெற்றோரில் யாரேனும் ஒருவர் தொடர்ச்சியாக வாசிப்பவராக இருந்து, அவர் தான் வாசித்ததை முன்வைத்து அக்குடும்பத்தின் பிற  உறுப்பினர்களோடு வெளிப்படையாக அமர்ந்து உரையாடும் சுதந்திரமான சூழல் அமையுமெனில், அக்குடும்பத்தில் வளரும் சிறார்களுக்கு இயல்பாகவே வாசிப்பின் மீது ஆர்வம் உருவாக வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டேன். அது முதல் வாய்ப்பு.

ஒருவேளை அப்பெற்றோர் வாசிப்பின் மீது ஆர்வமற்றவர்களாக அமைந்துவிடும் நேரத்தில் சிறார்களுடைய பள்ளிச்சூழலில் வாசிப்பைப்பற்றி உரையாடக்கூடிய ஆசிரியரோ நண்பர்களோ அமையவேண்டும். அது இரண்டாவது வாய்ப்பு. அவர்களுடைய ஆசிரியரோ, பிறரோ அருகிலிருக்கும் நூலகத்துக்கு அவர்களை ஆற்றுப்படுத்தும் சூழல் அமையவேண்டும். அது மூன்றாவது வாய்ப்பு.

வாசிப்பின் அருமைபெருமைகளைப்பற்றி எங்காவது, யாராவது ஒருவர் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிற சூழல் தற்செயலாக அச்சிறார்களுக்கு அமையவேண்டும். அது நான்காவது வாய்ப்பு. வகுப்புக்குள்ளேயும் வகுப்புக்கு வெளியேயும் நிகழும் அரட்டை உரையாடல்களில் திரைப்படம், சுற்றுலா, இயற்கை, விருந்தினர் வருகை, நட்பு சார்ந்து பேசுகிறவர்களுக்கு நடுவில் தன்னிச்சையாக ஒரு புத்தகத்தின் சுவையான அம்சங்களை முன்வைத்து பிறருக்கும் சுவாரசியமளிக்கும் வகையில் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரே ஒரு நண்பனாவது இருக்கவேண்டும். அது ஐந்தாவது வாய்ப்பு.

இந்த ஐந்து வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பாவது சரியாக அமையப்பெற்ற சிறுவனை அல்லது சிறுமியை வாசிப்பு என்னும் காந்தம் தன்னை நோக்கித் தானாகவே ஈர்த்துவிடும். இனிப்புப் பலகாரங்களுக்கு இருக்கும் தனித்தனி ருசியைப்போல  வாசிப்பிலும் ஒரு ருசி இருக்கிறது. அந்த ருசிக்கு மனம் பழகிவிட்டால், அதற்குப் பிறகு இன்னும் இன்னும் என மனம் தானாகத் தேடி வண்ணத்துப்பூச்சியைப்போலப் பறக்கத் தொடங்கிவிடும்.

நான் சொன்னதைக் கேட்கக்கேட்க அந்த நண்பரின் முகம் மலர்ந்தது. ஆயினும் அவர் “ஒரே ஒரு சந்தேகம் சார்” என்று மீண்டுமொரு கேள்வியோடு என்னைப் பார்த்தார். “இந்த ஐந்து வாய்ப்புகளுக்கும் வழியில்லாத ஒருவன் வாசிப்பை நோக்கி வரமுடியாதா?” என்பதுதான் அவருடைய கேள்வி. ”ஐயா, நான் சொன்னவையெல்லாம் என் அனுபவத்தின் பின்னணியில் நான் வகுத்துவைத்திருக்கும் விதிகள். என்னுடைய விதிகளுக்கு மேல் இன்னொரு விதி இருக்கிறது. அது இயற்கை வகுத்துவைத்திருக்கும் விதி.  அது ஆறாவது விதி. அந்த விதி சாதகமானதாக இருந்தால், அது ஒருவரை எப்படி வேண்டுமானாலும் எந்தக் கட்டத்திலும் மாற்றிவிடும்” என்று சொன்னேன். அவருக்கு என் பதில் ஏற்புடையதாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

சமீபத்தில் பள்ளிச்சிறுவர்களே எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் ’பேசும் கிளிகள்’ என்னும் சின்னஞ்சிறு கதைத்தொகுதியைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுதியில் இருபத்துநான்கு பேர் எழுதிய இருபத்தெட்டு கதைகள் அடங்கியுள்ளன. அந்த இளம் எழுத்தாளர்கள் சுதர்ஸன், சித்தார்த், பிருத்திகா, ஹர்ஷிதா, முகம்மது அனஸ், ஹரித்தா, சஞ்சனா, ஷர்மிளா, செந்தமிழ்ச்செல்வி, துவாரகா, யோகலட்சுமி, நாகலட்சுமி, சிவஜோதி, கெளதமன், கற்பகலட்சுமி, நித்திஷ், சந்தோஷ், சிவபூரணி, நித்யா, சண்முகப்பிரியா, பவிஷ்யா, முகம்மது ஹாரூண், அஸ்வினி, தவவர்ஷினி ஆகியோர். அனைவரும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை வெவ்வேறு வகுப்புகளில் படிப்பவர்கள்.  சில கதைகள் அரைப்பக்க அளவிலேயே முடிந்துவிடுகின்றன. சில கதைகள் மட்டுமே ஒரு முழுப்பக்க அளவுக்குச் செல்கின்றன. ஒன்றிரண்டு கதைகள் மட்டுமே இரண்டு பக்கம் வரை நீண்டிருக்கின்றன.  வெ.கற்பகலட்சுமி, பி.சந்தோஷ் என இருவர் தொகுத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள். அப்பள்ளியில் இயங்கிவரும் காவேரி வாசிப்பு இயக்கம் இந்த இளம் எழுத்தாளர்களைக் கண்டறிந்து ஊக்கமளித்து எழுதுகிறவர்களாகப் பண்படுத்தி இருக்கிறது.

புத்தகத்தின் முன்னுரைக்குறிப்பைப் படித்தபோதுதான், வாசிப்பின் மீது ஒருவருக்கு ஆர்வம் உருவாக அடிப்படையாக அமையக்கூடிய ஐந்து வாய்ப்புகளை நினைத்துக்கொண்டேன். இந்த இளம் எழுத்தாளர்கள் அப்படிப்பட்ட வாய்ப்புகளால் உருவானவர்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அக்கணத்தில் என் விதிகள் மீது எனக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்தது.

இருபத்துநான்கு கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை ஆறாம் வகுப்பு மாணவரான சித்தார்த் எழுதியிருக்கும் குறுங்கதை.

இரவெல்லாம் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த

நிலவும் நட்சத்திரமும் பகலில் தூங்கப்போய்விட்டன

பகலில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த சூரியன்

இரவில் தூங்கப் போய்விட்டது

ஆமாம், இவை எங்கே தூங்கும்?

ஒரு விவரணையைத்தான் அந்த மாணவர் கதையாக விவரித்து எழுதியிருக்கிறார். ஆனால் அந்த விவரணையை ஒரு கேள்வியோடு கொண்டுவந்து முடித்திருக்கிறார். அவரை அறியாமலேயே அந்த வரி கவித்துவம் பொருந்தியதாக அமைந்துவிட்டது. தூங்கப்போய்விட்டன என்பது அனைவரும் சொல்லக்கூடிய ஒரு தகவல். அவ்வளவுதான். ஆனால் ஒரு நுட்பமான வாசகன் அத்தகவல் வழியாக ஒரு கேள்வியை எழுப்புகிறான். இந்த உலகத்தில் மனிதர்கள் தூங்குவதற்கு இடமிருக்கிறது,  விலங்குகள் தூங்குவதற்கும் இடமிருக்கிறது. சூரியனும் நிலவும் நட்சத்திரமும் எங்கே சென்று தூங்கும் என்ற கேள்விக்கு விடை கிடையாது. ஒரு வாசகன் அத்தகு கேள்வியைத் தனக்குள் எழுப்பிக்கொண்ட கணத்திலேயே அவன் எழுத்தாளனாக மலர்ந்துவிடுகிறான்.

சித்தார்த் இத்தொகுதியில் ’வெயில் துளிகள்’ என மற்றொரு கதையையும் எழுதியிருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலைப்பற்றிய ஒரு நடைச்சித்திரமாக அது மலர்ந்திருக்கிறது. வெயில் கொளுத்தும் தருணத்தில் சுவாதி என்னும் சிறுமி  தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு தெருவை வேடிக்கை பார்க்கிறாள். அவள் பார்வை வழியாக ஒவ்வொரு காட்சியும் காமிரா காட்சியைப்போல நகர்ந்து செல்கிறது.

அனைவரும் வேகவேகமாகச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு தெருநாய் ஓடி வருகிறது. வெயில் வெப்பம் தாளாத அந்த நாய் நிற்பதற்கு நிழல் தேடி அலைகிறது. ஒதுங்கி அமர அதற்கு எங்கும் இடம் கிடைக்கவில்லை. அதன் தடுமாற்றத்தையும் தவிப்பையும் மாடியிலிருந்து பார்த்த சிறுமி வேகமாக படியிறங்கி கீழே வருகிறாள். அந்த நாயைத் தூக்கிச் சென்று தன் வீட்டு மாடிப்படிக்குக் கீழே உள்ள சின்னஞ்சிறிய அறையில் விடுகிறாள். அலைந்து அலைந்து களைத்திருந்த அந்த நாய் நிழல் கிடைத்த நிம்மதியில் மறுகணமே கண்மூடி உறங்கத் தொடங்கிவிடுகிறது. அந்தக் காட்சியைத்தான் சித்தார்த் ஒரு கதையாக எழுதியுள்ளார். நாய்க்கும் ஓர் இடம் வேண்டும் என்று நினைக்கிற கலைஞனை இவ்வரிகளில் நம்மால் பார்க்கமுடியும்.

வெயிலை முன்வைத்து ’போ போ’ என்னும் தலைப்பில் இன்னொரு கதையும் இத்தொகுதியில் உள்ளது. வெயில் கொளுத்துகிறது. சிறுமியால் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் வெயிலே போ போ என்று அலறி விரட்டுகிறாள். அடுத்து மழைக்காலம் வருகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு அதையும் தாங்கமுடியவில்லை. உடனே மழையே போ போ என்று அலறி விரட்டத் தொடங்குகிறாள். அதைத் தொடர்ந்து குளிர்காலம் வருகிறது. தொடக்கத்தில் அந்தக் குளிர் இதமாக இருந்தாலும் போகப்போக வாட்டியெடுக்கிறது. உடனே அச்சிறுமி குளிரே போ போ என்று அலறி குளிரையும் விரட்டுகிறாள். வெயில், மழை, குளிர் எல்லாமே போய்விடுகின்றன.

உடனே அச்சிறுமிக்கு அச்சம் வந்துவிடுகிறது. எல்லாமே பூமியைவிட்டுப் போய்விட்டால்  எப்படி வாழ்வது என்ற கேள்வி எழுகிறது. அக்கணமே சிறுமியின் மனம் மாறிவிடுகிறது. உடனே வெயிலே வா வா, மழையே வா வா, குளிரே வா வா என எல்லாவற்றையும் வருமாறு அழைப்பு விடுக்கிறாள். தத்துவச்சாயல் கொண்ட குழந்தைமையைக் கொண்டிருப்பதாலேயே இச்சித்தரிப்பு கவித்துவத்தோடு அமைந்திருக்கிறது. 

இக்கதையை எழுதிய ஹர்ஷிதாதான் ’பேசும் கிளிகள்’ என்னும் தலைப்புக்கதையையும் எழுதியிருக்கிறார். ஒருநாள் ஒரு வேடன் ஓர் ஆலமரத்தில் இரு கிளிகள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே அவற்றை வலைவீசிப் பிடித்துவிடுகிறான். இரு கிளிகளும் தம்மை விட்டுவிடும்படி அவனிடம் கெஞ்சுகின்றன. அவன் மறுக்கிறான். கிளிகளை விற்றால் தனக்குப் பணம் கிடைக்கும் என்று அவன் இரக்கமே இல்லாமல் சொல்கிறான். அகப்பட்டுக்கொண்ட கிளிகள் துயரத்துடன் யோசனையில் மூழ்குகின்றன.

அக்கிளிகளின் மனத்தில் ஒரு திட்டம் உதிக்கிறது. உடனே வேடனை அழைத்து ”நாங்கள் மட்டும் பேசவில்லை. இக்காட்டில் எங்களைப்போலவே இரு பேசும் புலிகள் கூட உள்ளன” என்று தெரிவிக்கின்றன. கிளிகளைப்போலவே புலிகளையும் பிடித்துச் சென்றால் இன்னும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்ற பேராசையில் கிளிகளிடமே அக்குகைக்குச் செல்லும் வழியைக் காட்டுமாறு கேட்கின்றான் வேடன். அவை புலிகள் வாழும் குகையைக் காட்டுவதாகச் சொல்கின்றன. குகைக்கு அருகில் சென்றதும் தம்மை விடுதலை செய்தால்தான் பறந்து சென்று புலிகள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டுவந்து தெரிவிக்கமுடியும்  என்று கூறுகின்றன. பேராசைக்கார வேடன் கிளிகளின் சொற்களை நம்பி கிளிகளை விடுவிக்கின்றான். குகை நெருங்கியதும் இதோ இந்தக் குகைக்குள்தான் புலிகள் உள்ளன என்று சொல்லிவிட்டு பறந்தோடிவிடுகின்றன. புலிகளைப் பிடிப்பதற்காக குகைக்குள் ஆசையோடு சென்ற வேடன் சில கணங்களிலேயே சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு அஞ்சி குகையைவிட்டு வெளியே ஓடிவந்து விடுகிறான்.  ஒரு கோணத்தில், இக்கதை முதலையை ஏமாற்றித் தப்பிக்கும் குரங்கின் தந்திரக்கதையின் சாயலைக் கொண்டிருந்தாலும் படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்கிறது.

இத்தொகுதியில் ஹர்ஷிதா என்னும் சிறுமி ஒரு சின்ன நிகழ்ச்சியை மையப்பொருளாகக் கொண்டு ‘ஐந்து ரூபாய்’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஒரு விடுமுறை நாளில் ஒரு அம்மா தன் மகளிடம் நூறு ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பி சில பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பிவைக்கிறாள். மேலும் நொறுக்குத்தீனி வாங்கித்தின்னும் செலவுக்காக கூடுதலாக ஒரு ஐந்து ரூபாயையும் கொடுத்து அனுப்புகிறாள். கடைக்குச் சென்ற சிறுமி அம்மா கொடுத்த பட்டியல்படி எல்லாப் பொருட்களையும் வாங்கிவிடுகிறாள். தனக்குப் பிடித்த நொறுக்குத்தீனி வாங்குவதற்குச் செல்லும்போதுதான் அம்மா கொடுத்த ஐந்து ரூபாய் எங்கோ விழுந்துபோய்விட்டது என்பதை அவள் உணர்கிறாள். ஏமாற்றத்தோடு திரும்பும் வழியில் தேடிக்கொண்டே வருகிறாள்.

அப்போது வாகன நெரிசல் மிக்க ஒரு சாலையைக் கடக்கமுடியாமல் ஒரு மூதாட்டி தடுமாறி நிற்பதைப் பார்க்கிறாள் சிறுமி. அவள் மீது இரக்கம் கொண்டு அவளுடைய கைகளைப் பிடித்துச் சென்று பாதுகாப்பாக சாலைக்கு மறுபுறம் விடுகிறாள். நன்றியின் வெளிப்பாடாக அந்த மூதாட்டி நொறுக்குத்தீனி கொண்ட ஒரு பாக்கெட்டை அச்சிறுமிக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள்.  திரும்பும் வழியில் அவளுக்கு பையிலிருந்து விழுந்த ஐந்து ரூபாயும் கிடைத்துவிடுகிறது. தான் விரும்பிய நொறுக்குத்தீனியை மூதாட்டி கொடுத்துவிட்ட பிறகு, இந்த ஐந்து ரூபாயை என்ன செய்வது என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் ஒரு தாத்தா ”ரொம்ப பசிக்குது” என்று சிறுமியை நெருங்கிவருகிறார். உடனே கொஞ்சம்கூட யோசிக்காமல் சிறுமி தன்னிடமிருந்த ஐந்து ரூபாயை அந்தத் தாத்தாவிடம் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். சீரான வேகத்தில் ஒரு நேர்க்கோட்டில் இக்கதையை அமைத்திருக்கும் ஹர்ஷிதா பாராட்டுக்குரியவர்.

இரக்க உணர்வை அடிப்படையாகக் கொண்டு ஷர்மிளா என்னும் எழுதியிருக்கும் ‘ஒட்டகச்சிவிங்கி’யும் சிறப்பாக எழுதப்பட்ட கதைச்சித்திரம். அக்கதை ஒரு குருவிக்குஞ்சைப்பற்றிய கதை. தாய்க்குருவி இரை தேட கூட்டைவிட்டு வெளியே சென்றிருக்கும் சமயத்தில் கூட்டிலிருந்து அக்குருவிக்குஞ்சு ஆசையாக எட்டிப் பார்க்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக குருவிக்குஞ்சு தவறி தரையில் விழுந்துவிடுகிறது. கடுமையான வலி. எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அழுதபடி தவித்து நிற்கிறது. அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒட்டகச்சிவிங்கி அந்தக் குருவிக்குஞ்சிடம் நடந்ததை விசாரித்துத் தெரிந்துகொள்கிறது. உடனே தன் வாயால் குருவியின் சிறகைப் பிடித்துத் தூக்கி அதன் கூட்டில் வைத்துவிட்டுச் செல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. மாணவமாணவிகளின் படைப்பாற்றலை ஒருமுகப்படுத்தி மேம்படுத்த முயற்சி செய்யும் காவேரி வாசிப்பு இயக்கத்தின் முயற்சி பாராட்டுக்குரியது. அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களிடம் கலையுணர்வை உருவாக்கப் பாடுபடும் ஆசிரியரும் கவிஞருமான ரா.தாமோதரன் பாராட்டுக்குரியவர்.

 

(பேசும் கிளிகள். தொகுப்பு: வெ.கற்பகலட்சுமி, பி.சந்தோஷ். காவேரி வாசிப்பு இயக்கம், குமாரசாமி நினைவு நூலகம், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம், விலை.ரூ.15)

 

(புக் டே – இணைய இதழ் 29.08.2025)