Home

Sunday, 24 August 2025

சங்கொலிப்பாதையில் பறக்கும் பறவை

  

1982ஆம் ஆண்டில் நான் கர்நாடகத்தில் பணிபுரியத் தொடங்கினேன். அப்போது எனக்குத் தேவையான புத்தகங்களையெல்லாம் அஞ்சல் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும் பெற்றுப் படித்துவந்தேன். ஒருமுறை அன்னம் பதிப்பகம் வழியாக வந்து சேர்ந்த புத்தகக்கட்டில் ’தீபாவளிப்பகல்’ என்னும் சின்னஞ்சிறு கவிதைத்தொகுதி இருந்தது. அதன் ஆசிரியர் இரா.மீனாட்சி. எனக்கு அந்தச் சொற்சேர்க்கை மிகவும் பிடித்திருந்தது. 

அந்த வசீகரத்தால் உடனடியாக அந்தத் தொகுதியைப் படித்துவிட்டேன்.  அத்தொகுப்பில் ஏதோ ஒரு கவிதையின் பகுதியாக இடம்பெற்றிருந்த ’துருப்பிடித்த சன்னலுக்குத் தெரியுமா சீலையின் தவிப்பு?’ என்னும் வரி என் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. எருதின் வேதனை காக்கைக்குத் தெரியுமா என்னும் பழமொழியின் சாயலை அவ்வரிகளில் கண்டுணர்ந்ததும் ஒரு காரணம். இன்றும் இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் மீனாட்சியின் கவிதைவரியும் இணைந்தே நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அந்த வரி எனக்குள் ஆழமாக இறங்கிவிட்டது.

தீபாவளிப்பகல் வெளிவரும் முன்பேயே அவருடைய நெருஞ்சி, சுடுபூக்கள் என   இரு தொகுதிகள் வெளிவந்துவிட்டன. ஆயினும் அவற்றை நான் படித்திருக்கவில்லை. மூன்றாவதாக வந்த தீபாவளிப்பகலைத்தான் முதன்முதலாகப் படித்தேன். அதனால் இன்றும் கவிஞர் இரா.மீனாட்சி என்றால் தீபாவளிப்பகல் என்னும் பெயரே என் நினைவில் முன்னால் வந்து நிற்கிறது.

அன்றுமுதல் இன்றுவரை ஏறத்தாழ நாற்பதாண்டு காலமாக, நான் அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லாமல் எண்ணங்களுக்கும் ஒரு சித்திரத்தன்மையை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆற்றல் உள்ளவர் மீனாட்சி.  பல சமயங்களில் மனசாட்சியின் குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. சில சமயங்களில் செல்லக் குழந்தைகளுக்குக் கதைகூறும் ஒரு மூதன்னையின் அன்பார்ந்த குரலாக அமைந்திருக்கின்றன.

காலச்சாயல்கள், மூங்கில் கண்ணாடி தொகுதிகளைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக அவர் எழுதிய கவிதைகள் ’மயில்கண்’ என்னும் தலைப்பில் இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. கவிதை வாசிப்பு என்பது கவிதையில் அடுக்கப்பட்டிருக்கும் சொற்களை மட்டும் வாசிப்பதல்ல. மரத்தை அண்ணாந்து பார்க்கும்போது மரக்கிளைகளின் ஊடே மின்னித் தெரியும் நீல வானத்தையும் மேகத்தையும் வெளிச்சத்தையும் சேர்த்துப் பார்ப்பதுபோல,  சொற்களுக்கிடையில் அமைந்திருக்கும் மெளனத்தையும் காட்சிகளையும் வாசித்து அறியவேண்டிய கலை. அத்தகு கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுபத்தேழு கவிதைகளைக் கொண்ட இத்தொகுதி நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் விருந்தாக அமையும். 

 

நம் அழகிய நந்தவனத்திற்குள்

வந்திறங்கியது

அயல்நாட்டு அழகிய நாரை.

அல்லிக்குளத்தின் கரை

அருகிலிருந்த

கருங்கொன்றைக்

கிளைப் பரப்பில்

அந்தரங்க மொழியாக

நம் ஊர்க்காகம்

கரைந்து கரைந்து

உரைத்தது என்ன

வரவேற்புரையா?

எச்சரிக்கையா?

 

ஒவ்வொரு குளமும் பறவைகள் கொண்டாடிக் களிக்கும் இடம் என்பதில் சந்தேகமே இல்லை. பெயரே அறியாத பல பறவைகள் குளக்கரையில் உலவிவிட்டுச் செல்கின்றன.  தண்ணீரைக் கண்டதும் ஒரு கணம் இறங்கி சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு அல்லது கரையோரமாக அன்னநடை நடந்துவிட்டு வலசை போகும் பல பறவைகளும் உண்டு. ஓர் இன்னிசைக்கச்சேரியைப்போல ஒலிக்கும் பறவைகளின் குரலுக்கு மயங்காதவர்கள் இருக்கமுடியாது. பறவைகளின் ஒலியைக் கூர்ந்து கவனிக்கும் ஒருவருக்கு திடீரென அது வரவேற்கும் குரலா அல்லது எச்சரிக்கை செய்யும் குரலா என ஓர் ஐயம் எழுகிறது. இவன் வேண்டப்பட்டவன், இவன் வேண்டப்படாதவன், இவன் நம்பத் தகுந்தவன், இவன் நம்பத்தகாதவன் என மானுடர் கொண்டிருக்கும் எண்ணத்தைப்போல பறவைக்குலமும் எண்ணம் கொண்டிருக்குமோ என்ற எண்ணம்தான் அந்த ஐயத்துக்கு விதை. நம்மிடம் அதற்கு விடை இல்லை. அந்த விடையை அறிந்து சொல்லும் ஆற்றம் எந்த மனிதனுக்கும் இல்லை. இனி, எந்தக் குளக்கரையில் எந்தப் பறவையின் குரலைக் கேட்டாலும், கவிஞர் மீனாட்சி எழுப்பிய கேள்வி இல்லாமல் நம்மால் அதைக் கேட்கவே முடியாது.

’கல்லும் சொல்லும் காலம்’ என்னும் கவிதை, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இருவேறு காட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கேள்வியை முன்வைக்கிறது. ஒரு காட்சி 1954ஆம் ஆண்டுக்குரியது. மோர் ஊற்றிப் பிசைந்த பழைய சோற்றை உண்டுவிட்டு விளையாடச் செல்கிறாள் ஒரு சிறுமி. குளக்கரையில் கூழாங்கற்களைத் தேடியெடுத்துச் சேகரிக்கிறாள். இன்னொரு சிறுமி வடுமாங்காயை எடுத்துவருகிறாள். இருவரும் சேர்ந்து மாங்காயைக் கடித்தபடி அம்மானை ஆடி பொழுதுபோக்குகிறார்கள். இன்னொரு காட்சி 2024ஆம் ஆண்டுக்குரியது. குளம் அப்படியே இருக்கிறது. குளக்கரைக் கூழாங்கற்களும் அப்படியே உள்ளன. மாங்காயும் உள்ளது. ஆடுவதற்கு சிறுமிகள் இல்லை. வடுமாங்காய் தின்னவும் சிறுமிகள் இல்லை. அம்மானைக் கற்களுக்குப் பதிலாக, இப்போது சிறுமிகள் கையில் இணையவசதி கொண்ட உயர்ரக கைப்பேசிகள் வந்துவிட்டன. குனிந்த தலை நிமிராமல் விரலாலேயே தட்டித்தட்டி விளையாடிப் பொழுதுபோக்குகிறார்கள் சிறுமிகள். எழுபதாண்டுகால இடைவெளி எல்லா அணுகுமுறைகளையும் கலைத்து மாற்றிவிட்டது. சில வசதிகளும்  சில வாய்ப்புகளும் சில தொந்தரவுகளையும் உபரியாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டன. அவற்றைப் பார்த்து நாம் மெளனம் காக்கமுடியுமே தவிர, எவ்விதத்திலும் எதிர்வினை ஆற்றமுடியாது.

’எங்களது பூமி’ மனத்தை உருக்கவைக்கும் ஒரு சித்தரிப்பு. நேற்றுவரை எங்களுக்கும் ஒரு பூமி இருந்தது என்ற குறிப்போடு தொடங்குகிறது அக்கவிதை. அப்பா தன் சேமிப்பில் வாங்கிய சிறு துண்டுநிலம்.  அந்நிலத்தில் கடன் வாங்கி ஒரு கிணற்றைத் தோண்டினார். தென்னை நட்டு ஒரு தோப்பாக வளர்ந்து நிற்கும் என கனவு கண்டார். அவர் கனவு நிறைவேறவில்லை. தென்னை வளரவில்லை. கிணறு வற்றிப் போனது. தோப்புக்கனவு கரைந்துபோனது. கடனை அடைக்கமுடியாமல் அப்பா வேதனையில் மறைந்துபோனார். பயிர் செய்யமுடியாமல் நிலம் பாழானது.  படிக்க வந்த மகன் பின்னாலேயே பட்டணத்துக்குக் குடியேறியது குடும்பம். பராமரிப்பு இல்லாத நிலத்தை அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் அபகரித்துக்கொண்டார்கள். நேற்றுவரை எங்களுக்கும் ஒரு பூமி இருந்தது என்னும் பெருமை மட்டுமே பழைய வரலாற்றுச்செய்தியைப்போல அனைவருக்கும் எஞ்சியிருக்கிறது. மெளனத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற பல சித்திரங்கள் மயில்கண் தொகுப்பில் பல கவிதைகளில் நிறைந்திருக்கின்றன.

’என்றும் நெய்தல்’ கவிதையில், கடற்கரையோரக் கிராமமொன்றில் வசிக்கும்   ஒரு குடும்பத்தின் காட்சி செறிவான சித்திரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் கட்டுமரத்திலிருந்து இறங்கி மீன்களோடு வருகிறார். குடும்பப் பெண்களில் ஒருவர் அடுப்பெரிக்கிறார். ஒருவர் குழம்புக்கு மஞ்சளரைக்கிறார். வலையின் கிழிசலைச் சரிசெய்யும் அப்பாவுக்கு ஒத்தாசை செய்தபடி ஒரு சிறுமி வாய்ப்பாடு ஒப்பிக்கிறாள். பிற சிறுமிகள் வீட்டின்  வெவ்வேறு பகுதிகளில் விளையாடி மகிழ்கிறார்கள். நிலா எழும் வேளையில் உணவு தயாராகிறது. கடலோர மணலில் கூடி அமர்ந்து அனைவரும் உணவுண்ணுகிறார்கள். ஒரு வேளை உணவுக்குப் பின்னால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மனமுவந்து பங்காற்றும் தன்மையை மிகையோ குறையோ இன்றி இயல்பாக முன்வைத்திருப்பதாலேயே இக்கவிதை, கவனிக்கத்தக்க கவிதையாகிறது. மயில்கண் தொகுதி முழுதும் இத்தகு கவிதைகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கவிதையும் தோகையின் ஒரு கண்ணைப்போலவே உள்ளது.

இரா.மீனாட்சியின் முதல் கவிதைத்தொகுதி நெருஞ்சி என்னும் தலைப்பில் முதன்முதலாக 1970இல் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. அத்தொகுதியில் நான் இன்றும் விரும்பக்கூடிய ஒரு கவிதை உள்ளது.

 

சங்கொலிப்பாதையில்

நான் ஒரு அற்பப்புழு

ஆகாயக்கைகள் என்னைத் தொட்டன

நீவிய கையின் மந்திரமோ

எனக்கும் சிறகுகள் முளைத்தன

அலகால் அரிசியைக் கொத்தி

பாலையும் குடித்தேன்

பம் பம் பம்பம்…

சங்கொலிப்பாதையில்

சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்

 

ஒரு புழு, பறவையாக உருமாறிப் பறந்துபோகும் மாயக்கணத்தைச் சித்தரிக்கும் கவிதை. கவிதையின் இறுதியில் வேகத்தைச் சுட்டும் அசைச்சொல்லை அடுக்கி உருவாக்கிய  பம் பம் பம்பம் என்னும் சொல் என்னைப் புன்முறுவல் பூக்கவைத்தது. சட்டென அந்தச் சொல் என் நெஞ்சில் இடம் பிடித்துக்கொண்டது. ஊர்ந்துகொண்டிருந்த ஒன்று சட்டென எழுந்து கண்முன்னாலேயே பறந்துபோனதைப் பார்த்ததுபோல இருந்தது. ஓர் அற்புதத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

நாம் உணர்ந்தும் உணராமலும் இப்படி உருமாறும் கணங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்தபடியே உள்ளன. ஆயினும் பலர் அம்மாற்றத்தை உணர்வதில்லை. அதை இயற்கை என எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகிறார்கள். ஒருசிலர் மட்டுமே அம்மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்கிறார்கள். அம்மாற்றம் உருவாக்கி அளித்த பாதையில் செல்வதை பெரும்பேறாகக் கருதி மகிழ்கிறார்கள்.

வாகன ஓசையை உதடுகளால் எழுப்பியபடி, விரித்த கைகளையே வாகனமாக நினைத்தபடி ஓட்டமாக ஓடிக் களிக்கிற சிறுபிள்ளை விளையாட்டின் இன்பத்துக்கு இணையான இன்னொரு இன்பம் இந்த உலகத்தில் இல்லை. பம் பம் பம்பம் என ஓசை எழுப்புகிறவர்கள் மட்டுமே அந்த உல்லாசத்தை உணரும் பாக்கியவான்கள். 

கவிதை எழுதும் அனுபவமும் ஒருவகையில் இத்தகு பறத்தல் அனுபவத்துக்கு இணையானதுதான். கவிஞர்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் புழுவைப் பறவையாக்கிப் பறக்கவைக்கும்  முயற்சிக்கு இணையானது என்பதில் ஐயமே இல்லை.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக, தொடர்ந்து கவிதைகளின் உலகில் வலம்வந்துகொண்டிருக்கும் இரா.மீனாட்சியின் பயணமும் உல்லாசமாகப் பறதுகொண்டிருக்கும் ஒரு பறவையின் பயணத்துக்கு நிகரானது. சங்கொலிப் பாதையில் பறக்கும் மீனாட்சிப்பறவையின் பயணம் தொடரட்டும். அவருடைய  ஆழ்நெஞ்சிலிருந்து எழும் பம் பம் பம்பம் முழக்கம் அவரை உச்சிவானத்தை நோக்கி வழிநடத்திச் செல்லட்டும்.  வாழ்த்துகள்.

 

( ‘மயில்கண்’ என்னும் தலைப்பில் நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் வழியாக வெளிவந்திருக்கும் கவிஞர் இரா.மீனாட்சியின் புதிய கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை )