Home

Sunday, 24 August 2025

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 : நிறைவும் நெகிழ்ச்சியும்

 

கன்னட இலக்கியச் செயல்பாடுகளை இணையம் வழியாக உலக அளவில் விரிவாகக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிக்கெ. கடந்த நான்கு ஆண்டுகளாக புக் பிரம்மா ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பல புத்தக வெளியீடுகளையும் எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும்  நடத்திவருகிறது. 

அர்ப்பணிப்போடு கூடிய பணிகளாலும் குறுகிய காலத்திலேயே எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக புக் பிரம்மா அமைப்பு விளங்கத் தொடங்கியது. புக் பிரம்மா நடத்திய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் யுடியூப் தளத்தில் காணொளிகளாக நாம் காணலாம். தென்னிந்திய அளவில் நான்கு மொழிகளையும் சேர்ந்த படைப்பாளிகளை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து உரையாடுவதற்கு இசைவாக ஓர் இலக்கியத்திருவிழாவை நடத்தும் திட்டம் முதன்முதலாக 2024இல் வெற்றிகரமாக நிறைவேறியது. அத்திருவிழாவுக்குக் கிடைத்த வெற்றியின் விளைவாக ஊக்கம் கொண்ட புக் பிரம்மா அமைப்பு இரண்டாவது திருவிழாவை இந்த மாதத்தில் 08.08.2025 முதல் 10.08.2025 வரை நடத்தியது.



இம்முறை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுடன் மராத்தி மொழியும் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் வேறுவேறு அரங்குகளில் ஏறத்தாழ நூறு அமர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்வுக்கும் ஐம்பது நிமிட கால அளவு ஒதுக்கப்பட்டிருந்தது. எல்லா அமர்வுகளிலும் அந்த நேர ஒழுங்கு சரியாகக் கடைபிடிக்கப்பட்டது. விழா வளாகத்திலேயே வெவ்வேறு கூடங்களில் புத்தகக்கண்காட்சியும் சிறார்களுக்கான தனி அமர்வுகளும் நடைபெற்றன. பல புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வாசகர்கள், பொதுப் பார்வையாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

பிரதான அரங்கில் முதல் நிகழ்ச்சியாக சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக் முன்னிலையில் ஒரு மாநில மொழியில் எழுதப்படும் ஒரு படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் கவனம் பெறுவதன் சாத்தியங்களையும் எல்லைகளையும் குறித்து சுவாரசியமானதொரு உரையாடல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான படைப்பாக்கங்கள் இந்திய மாநில மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டாலும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாசிரியர், முகவர் என நான்கு சக்கரங்களும் சீரான வகையில் பொருத்தப்பட்ட ஒரு வாகனமாக அமையும் முயற்சி மட்டுமே இறுதி வெற்றியைத் தொடுகிறது. நான்கில் ஒரே ஒரு சக்கரம் பலவீனமாக இருந்தாலும் அந்தப் பயணம் எதிர்பார்த்த இலக்கைச் சென்று சேர்வதில்லை. தெளிவான புரிதலை நோக்கி அந்த அமர்வை எடுத்துச் சென்றார் பானு முஷ்டாக்.

தம் தாய்மொழி ஒன்றாக இருக்க, வேறொரு மொழியில் இலக்கியம் படைப்பவர்களாக பல எழுத்தாளர்கள் வாழும் சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வருகிற இன்றைய இந்தியப் பின்னணியில் அதன் சாதகபாதகங்களையும் சாத்தியங்களின் எல்லைகளையும் குறித்து ஜெயமோகன், கார்லோஸ் தமிழவன், ஜெயந்த் காய்க்கிணி, கே.ஆர்.மீரா, மிருணாளினி ஆகியோர் தத்தம் கருத்துகளை முன்வைக்கும் வகையில் ஓர் அமர்வு நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன் அந்த அமர்வை ஒருங்கிணைத்தார். உரையாடலின் மையம் கிஞ்சித்தும் விலகிவிடாதபடி பொருத்தமான இடத்தில் பொருத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதத்தை அழகாக முன்னெடுத்துச் சென்றார் சுசித்ரா.

’புதிய நூற்றாண்டில் புதிய நாவல்கள்’ என்னும் தலைப்பில் அமைந்த அமர்வில் யுவன் சந்திரசேகர், குணாகந்தசாமி, சுனில் கிருஷ்ணன், அ.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்திய நாவல்களில் உருவாகியிருக்கும் வெவ்வேறு வகைமைகள் குறித்தும் வெவ்வேறு நிலப்பரப்புகள் சார்ந்த வாழ்க்கை விவரங்கள் குறித்தும் அனைவரும் ஆர்வமாகப் பேசினர்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் சாகித்திய அகாதமி வழங்கும் யுவபுரஸ்கார் விருதைப் பெற்ற இளம் படைப்பாளிகளான லட்சுமிஹர், அகில் தர்மஜான், பிரசாத் சூரி, திலீப்குமார் ஆகிய நால்வரோடும் ஆதித்யா கொரப்பாட்டி நிகழ்த்திய உரையாடல் ஆர்வமூட்டுவதாக இருந்தது. மலையாள எழுத்தாளரான அகில் தர்மஜானுக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாளராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் என ஆசிரியர்களும் பெற்றோர்களும்  கேள்வி கேட்டபோதெல்லாம் ‘நான் எழுத்தாளராகப் போகிறேன்’ என்ற ஒரே பதிலையே திருப்பித்திருப்பிச் சொன்னதாகவும் அதற்காக பல தருணங்களில் அவமதிப்புக்குள்ளானதாகவும் அவர் கூறினார். (அப்போது ஓர் ஆவேசத்தில் ‘நான் ஓர் எழுத்தாளன்’ என தன் கையில் பச்சை குத்திக்கொண்டதாகக் கூறிவிட்டு, பச்சையின் தடம் பதிந்த கையை உயர்த்திக் காட்டியபோது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது) ஆயினும் மனம் தளராமல் அவர் எழுத்து முயற்சியில் ஈடுபட்டார்.

மூன்று நாவல்களை வெவ்வேறு வகைமைகளில் எழுதிப் பார்த்து, சொந்தச் செலவில் வெளியிட்டு, பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் தானே சுமந்து சென்று விற்ற வேதனையை ஏதோ ஒரு நகைச்சுவைக்கதையைச் சொல்வதுபோல அவர் புன்னகைத்தபடியே விவரித்தார். நான்காவதாக அவர் எழுதிய நாவலை கேரளத்தின் புகழ்பெற்ற டிசி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்த நாவலே அவருக்கு விருதைத் தேடித் தந்ததாகவும் இன்றுவரை ஒரு லட்சம் பிரதிக்கும் மேலாக அது   விற்பனையாகிவிட்டதாகவும் சொன்னார். அவரைப்போலவே லட்சுமிஹர், திலீப்குமார், பிரசாத் சூரி ஆகியோர் பகிர்ந்துகொண்ட எழுத்துசார்ந்த அனுபவங்களும் புதுமையானதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்திருந்தன.

’தமிழ் நாட்டார் கலைகள்: வரலாறும் பண்பாடும்’ என்னும் தலைப்பையொட்டி தஞ்சைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.காமராசு, அம்பிகாபதி, ஏழுமலை ஆகியோர் பங்கேற்ற அமர்வு இசை, நடனம், கூத்து, பாடல் என ஒவ்வொரு வடிவமும் உருவாகி வளர்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள பேருதவியாக இருந்தது. அவர்கள் விவரிக்கும்போதே, அவை எளியோரின் வாழ்வோடு இணைந்திருந்த விதத்தையும் மானுடப்பண்பாட்டின் மேம்பாட்டுக்கு வழங்கிய பங்களிப்பையும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. ‘ஆடை இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்த காலம் கூட இருந்திருக்கலாம், ஆனால் ஆடல்பாடல் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை’ என்ற இரா.காமராசுவின் கூற்று அனைவரையும் ஈர்த்தது. இயல்பான உரையாடல்களைப்போல அமைந்த பல பாடல்களையும் பல கும்மி, கோலாட்டப்பாடல்களை அம்பிகாபதி கோடிட்டுக் காட்டினார்.

’தமிழ்நாட்டுச் சிற்பங்கள்: காலமும் கலையும்’ என்னும் தலைப்பை முன்வைத்து நிகழ்ந்த உரையாடலில் பேராசிரியர் பாலுசாமி, முருகன், ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் சிற்பக்கலை வளர்ந்த விதத்தை மூவரும் மாறிமாறி ஒரு புனைகதைக்குரிய சுவாரசியத்தோடு முன்வைத்த செய்திகளைக் கேட்கக்கேட்க, இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டார்களா என்ற ஏக்கம் எழுந்தது.

இலக்கியத்துக்கும் தத்துவத்துக்கும் இடையிலான உறவை விவாதிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட அமர்வோடு இரண்டாம் நாள் திருவிழா தொடங்கியது. பால் சக்கரியா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், வோல்கா, அஜிதன் ஆகிய நால்வரும் தத்தம் நோக்கில் அவ்விவாதத்தை முன்னெடுத்துச் சென்றனர். அம்மேடையில் படைப்பாளிகளின் புதிய சிந்தனைகள் வெளிப்படும் விதமாக ஒருங்கிணைப்பாளரான அனுஜா சந்திரமெளலி கூர்மையான கேள்விகளை முன்வைத்த விதம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

தென்னிந்திய எழுத்தாளுமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தனை அவருடைய தேர்ந்தெடுத்த படைப்புகள் வழியாக பார்வையாளர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதியும் வண்ணம் கிருங்கை சேதுபதி உரையாற்றினார். அவ்வரிசையில் வைக்கம் முகம்மது பஷீர், லங்கேஷ், சலம் ஆகியோரை அறிமுகப்படுத்தும் விதமாகவும் பிறர் ஆற்றிய உரைகள் நிகழ்ந்தன.

‘இளைய தலைமுறையினரின் சிறுகதைகள்: சாதனைகளும் சாத்தியங்களும்’ என்னும் தலைப்பில் நிகழ்ந்த அமர்வை எம்.கோபாலகிருஷ்ணன் முன்னின்று நடத்தினார். மயிலன் சின்னப்பன், இமையம், அகரமுதல்வன், லாவண்யா ஆகியோர் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ’மானுடவியல் நோக்கில் தமிழ்ச்சமூகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ என்னும் தலைப்பில் நிகழ்ந்த அமர்வை பக்தவத்சல பாரதி ஒருங்கிணைத்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, இதுவரை இனவரைவியல் நோக்கில் தமிழில் வெளிவந்த சிறுகதைகளை காடன் கண்டது என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்ட ரத்தினகுமார், பெரியசாமி ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஒவ்வொருவருடைய உரையும் தமிழ்ப்பண்பாட்டைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களுக்கு வெளிச்சமூட்டுவதாக அமைந்தது.

‘தமிழிலக்கியமும் தமிழ்த்திரைப்படங்களும்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற அமர்வில் தியடோர் பாஸ்கரன், செந்தில் ஜெகன்னாதன், லட்சுமிஹர் மூவரும் உரையாற்றினார். விக்டர் ஹ்யூகோவின் ’லே மிசரபள்’ என்னும் நாவல் 1950இல் கே.ராம்னாத் இயக்கத்தில் ஏழை படும் பாடு என்னும் திரைப்படமாக எடுக்கப்பட்ட காலத்தை ஒரு தொடக்கமாகக் கொண்டு வெவ்வேறு இலக்கியப்படைப்புகளை மையமாகக் கொண்டு பல திரைப்பட இயக்குநர்கள் திரைப்படங்களாக எடுத்த வரலாற்றின் தடத்தைச் சுட்டிக்காட்டினார். அதே சமயத்தில் தியடோர் பாஸ்கரன் இலக்கியமும் திரைப்படமும்  வேறுபடும் தருணத்தையும் சுட்டிக் காட்டினார். அடிப்படையில் இலக்கியம் என்பதை மொழி சார்ந்த ஊடகமாகவும் திரைப்படம் என்பதை காட்சி சார்ந்த ஊடகமாகவும் புரிந்துகொண்டால் மட்டுமே, இரண்டையும் சுவைத்து மகிழமுடியும் என்பதை பல திரைப்படக் காட்சிகளை முன்வைத்து அழகாகப் பேசினார்.

செந்தில் ஜெகன்னாதன் தன் உரையில் ஒரு நாவல் என்பது பல்வேறு பாத்திரங்கள் உலவும் பல்வேறு காட்சிகளின் தொகைகளாகவும் பல்வேறு உச்சங்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது என்றும் அதே சமயத்தில் ஒரு திரைப்படத்தின் கட்டுமானம் என்பது பல நேரங்களில் ஒரு பாத்திரத்தின் அல்லது ஒரு சூழலின் வளர்ச்சியையும் எழுச்சியையும் உச்சத்தையும் தொட்டுக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது என்றும் வேறுபடுத்திக் காட்டி,  அடிப்படையிலேயே அமைந்திருக்கிற இவ்வேறுபாடு காரணமாக, நாவல்களைவிட சிறுகதைகளே திரைப்பட ஆக்கத்துக்கு பெரிதும் பங்களிக்கமுடியும் என்று தன் எண்ணத்தைப் பதிவு செய்தார்.  ஆதவன், சா.கந்தசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன் போன்றோரின் புகழ்பெற்ற சிறுகதைகள் மிகச்சிறந்த திரைப்படங்களாக அமைந்திருக்கின்றன. என்றும் அவர் தெரிவித்தார்.

யுவபுரஸ்கார் விருதாளரான லட்சுமிஹர் ஒரு சிறுகதையில் அல்லது ஒரு நாவலில் இடம்பெறும் ஒரு காட்சியை திரையில் திறமையுடன் நிகழ்த்திக் காட்டுவதில் ஓர் இயக்குநர் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைப் பற்றிக் குறிப்பிட்டார். காட்சி சார்ந்த கற்பனை மட்டுமன்றி, இதர தொழில்நுட்ப வசதிகளை அதற்கு இசைவாகப் பயன்படுத்தும் ஞானமும் ஓர் இயக்குநருக்குத் தேவையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, ஒரு பாத்திரத்தின் மீது விழவேண்டிய வெளிச்சத்தின் கோணத்தைத் தீர்மானிப்பதில் ஏற்படும் ஒரு சிறு பிழை, பாடுபட்டு எடுக்கும் அக்காட்சியையே வீணாக்கிவிடும் என்றார். அவற்றையெல்லாம் திறம்பட கையாண்டு மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்களையும் சுட்டிக் காட்டினார்.

சமீப காலத்தில், சங்க இலக்கியத்திலிருந்து பொருத்தமான சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கீர்த்தனைப் பாடல்களாக எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பெருமாள் முருகன். அப்பாடல்களை இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் குரலில் இசைப்பாடல்களாக கேட்கும்போது இனிய அனுபவமாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டும் ராம நாடகக் கீர்த்தனையைக் கேட்பதுபோல அல்லது கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களைக் கேட்பதுபோலவே இனிய அனுபவமாக இருக்கிறது.  சங்கப்பாடலைக் கீர்த்தனையாக எழுதும் முயற்சியை முன்வைத்து டி.எம்.கிருஷ்ணாவும் பெருமாள்முருகனும் உரையாடும் அமர்வோடு மூன்றாம் நாள் திருவிழா தொடங்கியது.

புதிய தலைமுறையினருக்கு சங்க இலக்கியத்தின் மீது ஆர்வத்தையூட்டும் முயற்சியாகவே கீர்த்தனைப்பாடல்களை எழுதும் முயற்சியைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார் பெருமாள் முருகன். நல்லாதனார் இயற்றிய ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்னும் பாடல் ஒரு கீர்த்தனையாக உருவான விதத்தைப் பெருமாள் முருகனும், அந்தக் கையறுநிலைச் சூழலை உணர்த்தும் விதமாக முகாரி ராகத்தில் அப்பாடலைப் பாடிய  விதத்தை டி.எம்.கிருஷ்ணாவும் பகிர்ந்துகொண்டபோது இருவருக்கும் இம்முயற்சி சார்ந்து இருக்கும் ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து செம்மண்ணிலே பெய்த மழைபோல, தேரைச் செலுத்து தேரைச் செலுத்து பாகனே போன்ற பாடல்கள்  உருவான விதத்தை இருவரும் உரையாடியதைக் கேட்கக்கேட்க சுவாரசியமாக இருந்தது. இளைய தலைமுறையினருக்கு மட்டுமன்றி, மூத்த தலைமுறையினருக்கும் ஒரு மறுநினைவூட்டலாகவும் சங்கப்பாடல்களின் கீர்த்தனை வடிவம் அமையக்கூடும் என்றே தோன்றுகிறது.

இந்திய அளவில் பார்வையாளர்களைத் திரட்டும் விதமாக எடுக்கப்படும் தென்னிந்திய திரைப்படங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் வெற்றிகள் குறித்தும் உரையாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கை திரைப்பட ஆய்வாளரான எம்.கே.ராகவேந்திரா ஒருங்கிணைக்க, ஷாஜி சென், பிரகாஷ் பரே, தாரகேஷவர் ஆகியோர் உரையாற்றினர். மிகச்சிறிய பரப்புக்குள் நிகழ்கிற கதையமைப்பைக் கொண்ட ஒரு திரைப்படம் தேசம் தழுவிய ஒன்றாக வெற்றி பெறுவதும் தேசம் தழுவிய வெற்றியை எதிர்பார்த்து அதற்குப் பொருத்தமான கதையமைப்பையும் நடிகர்களையும் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் சரிந்து தோல்வியடைவதும் இம்மண்ணில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்றார் ஷாஜி. பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு என்பதும் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதும் முற்றிலும் ஊகிக்கமுடியாத அம்சமாகவே இன்றளவும் நீடித்துவருகிறது என்று அவர் குறிப்பிட்ட செய்தி சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

‘மொழிபெயர்ப்பு முயற்சிகள்: புதிய உலகமும் புதிய மனிதர்களும்’ என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மோகனரங்கன் ஒருங்கிணைக்க, கமலாலயன், இல.சுபத்ரா, தி.சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். தொடக்க காலத்தில் ஷெல்லி, ஆஸ்கார் ஒயில்டு, தாகூர் கவிதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்ட வி.ஆர்.எம்.செட்டியார் தொடங்கி இன்றளவும் தொடர்ந்துவரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார் மோகனரங்கன். மீட்சி, நிறப்பிரிகை போன்ற சிறுபத்திரிகைகள் ஆற்றிய பங்களிப்பையும் ஜெயமோகன், பாவண்ணன், யுவன், சுகுமாரன், வெ.ஸ்ரீராம், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிகளால் தமிழுக்குக் கிடைத்த அயல்மொழிக்கவிதைகளைப்பற்றியும் குறிப்பிட்டார்.

உதயசங்கர், சுப்பாராவ், யூமா வாசுகி போன்றோரின் தொடர்முயற்சிகளால் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வரும் எண்ணற்ற சிறார் நூல்களைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார் கமலாலயன்.  மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்த புனைகதை, நாவல் முயற்சிகளின் நன்மையைக் குறித்துப் பேசினார் இல.சுபத்திரா. சமீபத்தில் வெளிவந்த தன்வரலாற்று முயற்சிகளில் விளிம்புநிலைப் பெண்களும் திருநங்கையர்களும் எழுதிய தன்வரலாற்று நூல்களை முன்வைத்து உரை நிகழ்த்தினார் தி.சிவக்குமார். மரியா ரோஸா ஹென்ஸன் எழுதிய ஊழின் அடிமையாக, ஆமென், எனது ஆண்கள், எனக்குக் குற்றவுணர்வில்லை, ஆனால் வேதனையிருக்கிறது என சில முக்கிய தன்வரலாற்று நூல்களைக் கவனப்படுத்தினார்.

’தமிழ் இணைய இதழ்கள்: வளர்ச்சியும் வாய்ப்பும்’ என்னும் தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த அமர்வில் சுப்பிரமணி ரமேஷ், பா.ராகவன், என்.சொக்கன், ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். புத்தாயிரத்தாண்டையொட்டி உருவான இணையவசதியைப் பயன்படுத்திக்கொண்டு உருவான இணைய இதழ்கள் அடைந்திருக்கிற வளர்ச்சியை காலவரிசையில் சுட்டிக் காட்டியதோடு மட்டுமன்றி, அவற்றின் சாதனையையும் போதாமையையும் பற்றியும் பேசினார் சுப்பிரமணி ரமேஷ். அச்சிதழ்களுக்குத் தேவையான உழைப்போடும் தீவிரத்தோடும் இயங்கிவரும் இணைய இதழ்களைக் கவனப்படுத்தி உரையாற்றினார் பா.ராகவன். சிறுபத்திரிகைகள் போலவே தோன்றுவதும் மறைவதும் இணைய இதழ்களுக்கும் நேரக்கூடியவையே என்றாலும், அவை இயங்கும் காலத்தில் தம் தடங்களைப் பதித்துவிட்டே செல்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார். மெட்ராஸ் பேப்பர் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தும் அவர் இணைய ஊடகத்தின் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டை அவருடைய சொற்கள் உணர்த்தின.

என் சொக்கன் தன் உரையில் தொடக்கத்தில் மின்னஞ்சல் வழியாகவே பகிர்ந்துகொள்ளப்பட்டு வந்த ‘தினம் ஒரு கவிதை’ முதல் ‘ராயர் காப்பி கிளப்’ போன்ற நண்பர்கள் கூட்டுப்பங்களிப்பால் தினந்தோறும் புதிய பங்களிப்போடு வெளிவந்த காலத்தைத் தொட்டு இன்று தின, வார, மாத அளவில் புதுப்பிக்கப்பட்டுவரும் இதழ்களைக் குறிப்பிட்டு அவற்றின் பலத்தையும் பலவீனத்தையும் சுட்டிக் காட்டினார். இணைய இதழ்களின் தொடக்க காலம் எல்லோரையும் உற்சாகத்தோடு எழுதவைத்த காலமாக இருந்தது என்றும் அதன் விளைவாக எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாகிவிட்டனர் என்றும் எழுதப்பட்டவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்க வேண்டிய நெருக்கடிக்கு இணைய இதழ்கள் உள்ளாகியிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அவருடைய உரையிலிருந்து, இன்றைய நவீன காலம் இணைய இதழ்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய சவாலாகவே அந்த நெருக்கடியை நாமும் உணரமுடிந்தது.  

நீலி என்னும் இணைய இதழின் ஆசிரியராக விளங்கும் ரம்யா தன் உரையில் இணைய இதழ்களில் வெளிப்படும் வெவ்வேறு வகைமைகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார். யாவரும், கனலி, வாசகசாலை போன்ற இதழ்கள் புதிய எழுத்தாளர்களுக்குரிய தளமாக விளங்குவதையும் வல்லினம், அகழ் போன்ற இதழ்கள் எழுத்தாளர்களுக்குரிய தளமாகவும் விமர்சனங்களுக்கான தளமாகவும் விளங்கும் விதத்தையும் தத்துவம் மற்றும் ரசனை சார்ந்த வெவ்வேறு விதமான பார்வைகளை  வளர்த்தெடுக்கும் விதமாக வெளிவரும் நீலி, குருகு, கவிதைகள் போன்ற இதழ்கள் விளங்குவதையும் சுட்டிக் காட்டினார். அதே சமயத்தில் மணிக்கொடி, எழுத்து, யாத்ரா, சொல்புதிது ஆகிய இதழ்கள் வெளிவந்த காலத்தில் அவ்விதழ்களின் அடையாளமாக ஒருசில எழுத்தாளர்களைச் சுடிக்காட்டியதுபோல இணைய இதழ்களின் காலத்தில் சுட்டிக்காட்டும் விதமாக ஒருவரும் அமையாமல் போன விதத்தையும் குறிப்பிட்டார்.

’சங்க இலக்கியங்களைக் கற்றல்: நுட்பமும் ஆழமும்’ என்னும் தலைப்பில் அமைந்த அமர்வு பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடந்தேறியது. கோவையில் பல் மருத்துவராகப் பணிபுரியும் நித்யாவின் உரை அனைவரையும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் சங்க இலக்கியங்களைத் தக்க ஆசிரியர் வழியாகக் கற்கும் பேராவலால் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார் அவர். அதே சமயத்தில் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வில் வெளியே வந்திருந்த சித்ரா பாலசுப்ரமணியன் பெருந்தொற்றுக் காலத்தில் விருப்பமுள்ளவர்கள் தெரிந்துகொள்ளட்டும் என ஏதோ ஓர் ஆவலால் உந்தப்பட்டு இணையவழியில் சங்க இலக்கியங்களைப்பற்றி உரையாடி வந்தார். தற்செயலான ஒரு கணத்தில் ஆசிரியரும் மாணவியும் இணைந்துவிட்டனர்.

நான்காண்டு காலப் பயிற்சியில் சங்க இலக்கியப்படைப்புகளில் தான் அறிந்துகொண்ட நுட்பத்தையும் ஆழத்தையும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் அடுக்கடுக்காகச் சொன்னார் நித்யா.  ‘கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல’ ‘ஓரேர் உழவன் போலப் பொதுவிதிப்புற்றன்றால்’ ‘நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே’ போன்ற நுட்பமான அழகு பொருந்திய  பல வரிகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டி அவற்றின் ஆழத்தையும் மறைபொருளையும் அறிந்துகொண்டபோது தாம் அடைந்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் நித்யா.

பேராசிரியர் பச்சையப்பன் ‘நின்ற சொல்லர்’, ‘நீடுதோறு இனியர்’ என்னும் சொற்கள் சங்க இலக்கியப்பாடல்களில் பயின்று வந்திருக்கும் விதத்தைப்பற்றித் தெளிவுபடுத்தினார். ‘கண்டனன் மகிழ்ந, கண்டெவன் செய்கோ’ என்னும் ஒற்றை வரியில் வெளிப்படும் ஆற்றாமையையும் இயலாமையையும் விவரித்தார். அவருடைய உரை, உணர்ச்சிக்கொந்தளிப்பிலும்  செய்வதறியாத கையறுநிலையிலும் நிற்கும் ஒரு பெண்ணை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது. ஒரு கோணத்தில் இறுதியாக, சங்க இலக்கியத் தொகையையே நிகழ்த்துகலையின் காட்சித்தொகுப்புகள் என்று வரையறுக்கலாம் என பச்சையப்பன் குறிப்பிட்டார்.

2005 ஆம் ஆண்டின் புக்பிரம்மா இலக்கிய விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவுக்கு வழங்கப்பட்டது. புக் பிரம்மா சார்பில் ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திரசேகர் கம்பார்  வழங்கிப் பாராட்டினார். விருது பெற்ற மீராவுடன் ஓர் உரையாடலும் நிகழ்ந்தது.  எழுதும் ஆவலால் தாம் செய்துவந்த பணியைவிட்டு வெளியேறியதையும் இடைவிடாத முயற்சியால் எழுத்துலகில் வென்றதையும் அவர் அனைவரோடும் பகிர்ந்துகொண்டார். கனவைப் பின்தொடர்ந்து செல்ல விழையும் ஒருவரை ஒருபோதும் கனவுகள் கைவிடுவதில்லை என்று அவர் குறிப்பிட்ட சொல் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளத்தக்கதாக இருந்தது.

அரங்கத்தில் ஒருபுறம் விவாத அமர்வுகள் நடைபெற்று வந்த நேரத்திலேயே அதே வளாகத்தில் திறந்தவெளி அரங்கங்களிலும் எழுத்தாளர் சந்திப்புகளும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. எண்ணற்ற வாசகர்கள் அவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஜெயமோகன், இமையம், சல்மா, பெருமாள்முருகன் ஆகிய எழுத்தாளர்கள் உரையாற்றிய போது தமிழ் வாசகர்களோடு பிறமொழி வாசகர்களும் கூடி நின்று செவிமடுத்தனர்.

நூல்வெளியீட்டு அரங்கில் சுகுமாரனும் ஷாலினி பிரியதர்ஷினியும் இணைந்து மொழிபெயர்த்த ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத்தகாத வரலாற்று அறிக்கை’ எனும் அய்ஃபர் டுன்ஷின் நாவலும் பெருமாள்முருகனின் ’கவிதை மாமருந்து’ என்னும் கட்டுரைத்தொகுதியும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெயமோகனின்  வெள்ளையானை நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலும் வெளியிடப்பட்டன.

தமிழ்மொழி சார்ந்து நடைபெற்ற அமர்வுகளைப்போலவே வெவ்வேறு அரங்குகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகள் சார்ந்தும் மூன்று நாட்களிலும் பல அமர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பார்வையாளர்களின் செவிக்கு விருந்தாக, பிரவீன் கோட்கிண்டியின் புல்லாங்குழலிசை, கணபதி பட் குழுவினரின் இந்துஸ்தானி கச்சேரி, பி.ஜெயஸ்ரீ குழுவினரின் பாடல்கள், டி.எம்.கிருஷ்ணாவின் கர்நாடக இசைப்பாடல்கள் அமைந்தன. மூன்றாவது நாள் மாலையில் நடைபெற்ற துரியோதன வதம் என்னும் கதகளி நிகழ்ச்சியோடு இலக்கியத்திருவிழா நிறைவுற்றது.

நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த பல பழைய நண்பர்களைச் சந்திக்க மூன்று நாள் இலக்கியத்திருவிழா அரியதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. பல புதிய நண்பர்களின் அறிமுகத்துக்கும் இத்திருவிழா வழிவகுத்துவிட்டது. அனைவரோடும் நிகழ்த்திய உரையாடல்களால் மனம் நெகிழ்ந்துவிட்டது.

மூன்றாவதுநாள் நண்பகல் வேளையிலேயே தொடங்கிவிட்ட மழையின் தொடர்ச்சியாக, கதகளியைக் கண்டு களித்து அரங்கத்தைவிட்டு வெளியே வந்த தருணத்திலும் சிறுதூறலென பொழிந்தபடி இருந்தது. மண்ணும் காற்றும் குளிர்ந்திருந்ததைப்போலவே மூன்று நாட்களிலும் இடைவிடாத இலக்கிய உரையாடலில் தோய்ந்திருந்ததால் மனமும் குளிர்ந்திருந்தது.

 

(பெங்களூரில் ஆகஸ்டு 8,9,10 ஆகிய நாட்களில் நடைபெற்ற புக் பிரம்மா இலக்கியத்திருவிழா பற்றி 17.08.2025 அன்று ’இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்)