எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர் பெரிய மேஸ்திரி. இன்னொருவர் சின்ன மேஸ்திரி.
வயது குறைந்த இளைஞர்கள்
அவர்களிடம் முதலில் சித்தாள்களாக வேலைக்குச் சேர்வார்கள். சிற்சில ஆண்டுகளிலேயே அவர்கள் படிப்படியாக
வேலைகளைக் கற்றுத் தேர்ச்சியடைவார்கள். அதற்குப்
பிறகு எங்காவது ஒரு புதிய கட்டட வேலையைத் தொடங்கும்போது, அந்த இடத்துக்கு அவர்களையே
மேஸ்திரியாக அனுப்பி வைத்துவிடுவார் பெரியப்பா. எல்லா சமயங்களிலும் அவர்கள் பெரியப்பாக்களோடு
இருப்பதால், அவர்களை நாங்கள் சித்தப்பா என்று அழைப்போம்.
எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே
ஒரு ஆயா இருந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருநாள் இருவரையும் அந்த ஆயா பெரியப்பாவிடம்
அழைத்துவந்து “இந்த ரெண்டு புள்ளைங்களையும் நீதான் எப்படியாவது நல்ல நெலைமைக்கு ஆளாக்கி உடணும்” என்று கேட்டுக்கொண்டார்.
பெரியப்பா இருவரையும் சித்தாட்களாகச் சேர்த்துக்கொண்டார்.
மூத்தவரான சுப்பிரமணி சித்தப்பாவுக்கு
மட்டுமே கட்டட வேலையில் ஆர்வம் இருந்தது. வேகவேகமாக
எல்லாவற்றையும் கவனித்து கற்றுக்கொண்டார். வேலைகளில் ஈடுபாடு காட்டி உழைத்தார். இளையவரான
செல்வராஜி சித்தப்பாவுக்கு மண்ணையும் சிமெண்ட்டையும் குழைத்துக்கொண்டு உடம்பெல்லாம்
புழுதி படிய வேலை செய்வது பிடிக்கவில்லை. அதனால் நாலே நாளில் சித்தாள் வேலையிலிருந்து
விலகிவிட்டார். ஆனாலும் சித்தப்பா என்னும் அடைமொழி அப்படியே நீடித்தது.
சித்தப்பா தன் சொந்த முயற்சியில்
கடைத்தெருவில் உள்ள ஒரு சோடாக்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். தொடக்கத்தில் பாட்டில்
கழுவும் வேலையை மட்டுமே செய்துவந்தார். பிறகு படிப்படியாக, பாட்டில்களில் சுத்தமான
நீர் நிரப்புவது, சோடா மெஷினில் வைத்துப் பூட்டி கணக்கு பார்த்து சுற்றி எடுப்பது,
பாட்டில்களை பெரிய பைகளில் நிரப்பி மிதிவண்டியில் கட்டிவைத்து எடுத்துச் சென்று வாடிக்கைக்கடைகளுக்கும்
சினிமா கொட்டகைக்கும் விநியோகிப்பது என எல்லா வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
நாலைந்து ஆண்டுகளில் சொந்தமாக
கடை திறக்கும் அளவுக்கு அவருக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. ஆனால் போதுமான பணவசதி இல்லை.
வேறு வழியில்லாமல் அந்தக் கடையிலேயே அவர் வேலையில் தொடர்ந்தார். பெரிய சித்தப்பா மேஸ்திரியாக
உயர்ந்து தனியாக கட்டடம் எடுத்து வேலை செய்யத் தொடங்கினார். உறுதியான வருமானத்துக்கு
வழி பிறந்ததும் பெரிய சித்தப்பா திருமணம் செய்துகொண்டு தனியாக வேறு வீடு பார்த்துக்கொண்டு
சென்றுவிட்டார். சில மாத இடைவெளியில் சின்ன சித்தப்பாவுக்கும் ஒரு பெண்ணைத் தேடி முடிவு
செய்து திருமணம் செய்துவைத்தார் ஆயா.
சித்தப்பா இரவில் கடையை
அடைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப வெகுநேரமாகிவிடும். பேச்சுத்துணைக்காக சித்தி சில நேரங்களில் எங்கள்
வீட்டுக்கு வந்து அம்மாவோடு பேசிக்கொண்டிருப்பார். எல்லோரும் அவரை கருத்தம்மா என்று
அழைத்தார்கள். அம்மாவும் அப்படித்தான் அழைத்தார். எனக்கும் தம்பிதங்கைகளுக்கும் அந்தச்
சித்தி முத்துமுத்தான கதைகளைச் சொல்வார். எல்லாமே
புத்தகங்களில் இல்லாத கதைகள். சொந்த அனுபவங்களோடு கொஞ்சம் கற்பனையைச் சேர்த்து கதைகளாக
சொல்வார்.
நாங்கள் படிக்கும் புத்தகங்களைப்
பார்த்ததும் சித்தியுடைய கண்களில் மிரட்சி படிந்துவிடும். எச்சரிக்கை உணர்வோடு ஒரு
புத்தகத்தை எடுத்து, பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு நகர்த்திவைத்துவிடுவார்.
”இம்மாம்பெரிய புத்தகத்தை எப்படித்தான் படிச்சி மண்டைக்குள்ள ஏத்திக்கிறியோ?” என்று
புன்னகைத்தபடி கேட்டுவிட்டு உதட்டைப் பிதுக்குவார்.
“நீங்க எந்த க்ளாஸ் வரைக்கும்
படிச்சீங்க சித்தி?” என்று ஒருநாள் பேச்சுவாக்கில் கேட்டேன்.
“நானா? மழைக்குக் கூட நான்
பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கி நின்ன ஆளில்லை. அடுப்பங்கரை, கழனிவேலை, காட்டுவேலை. அவ்ளோதான்
நம்ம படிப்பு”
“ஏன்?”
“எங்க ஊட்டுல நாங்க மொத்தம்
ஆறு பொண்ணுங்க. நான்தான் கடைசிப் பொண்ணு. எங்க அப்பா அம்மா எங்களை யாரையுமே படிக்கவைக்கலை.
அவுங்களுக்கெல்லாம் பொம்பள புள்ளைங்க படிச்சி என்ன செய்யப் போவுதுங்கங்கற எண்ணம். அதனால
அப்படியே வுட்டுட்டாங்க. யாருக்கும் ஒரு கையெழுத்து கூட போடத் தெரியாது.”
படிக்கவும் எழுதவும் வேலை
இல்லாத நேரங்களில் நான் சித்தியுடைய வீட்டுக்குச் சென்று அவரோடு திண்ணையில் உட்கார்ந்து
பேசிக்கொண்டிருப்பேன். சிங்கம் கதை, குரங்கு கதை, முதலை கதை என ஏராளமான கதைகளை அடுத்தடுத்து
சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரே ஒரு கணம் கூட அவர் குரலில் சலிப்பு வெளிப்பட்டதில்லை.
சித்திக்கு ஏராளமான விடுகதைகளும்
தெரியும். ’அள்ளமுடியும் கிள்ளமுடியாது, அது என்ன?’, ’பச்சைப்பெட்டிக்குள்ளே வெள்ளை
முத்துகள், அது என்ன?’ என்று அடுக்கடுக்காக கேட்டு திணறவைப்பார். அவர் ஒரு விடுகதைப்புதையல்.
ஒருநாள் சொன்ன விடுகதையை அடுத்த நாள் கேட்கமாட்டார். ஒவ்வொரு முறையும் அவர் சொல்லும்
விடுகதைகள் புதிதாக இருக்கும். அத்தனை விடுகதைகளையும் அவர் எப்படி நினைவிலேயே வைத்திருக்கிறார்
என்பது ஆச்சரியமாக இருக்கும்.
விடுகதைகளில் மட்டுமின்றி,
பழமொழி சொல்வதிலும் உதாரணக்கதைகள் சொல்வதிலும் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது. ’ஒய்யாரக்கொண்டையாம்
தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ ’குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு
அழுவுதான்’ போன்ற பழமொழிகளை பேச்சுக்குப் பொருத்தமாக மிகவும் சர்வசாதாரணமாகச் சொல்வார்.
“பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லைன்னு
சொல்றீங்க? இத்தனை கதைங்களை எப்படி தெரிஞ்சிகிட்டீங்க சித்தி?” என்று ஒருமுறை கேட்டேன்.
உடனே சித்தி, “அதுவா, அது ஒரு பெரிய கதை” என நாக்கு சப்புக்கொட்டியபடி இழுத்தார்.
“என்ன கதை சித்தி?”
‘ஒருநாள் காலையில ஆடு மேய்க்கறதுக்கு
தோப்புக்கு போயிருந்தேன். எல்லா ஆடுங்களுக்கும் ஒதிய மரத்துலேருந்து கொழுந்து தழையை
பறிச்சி போட்டுட்டு ஐயனார் கோவில் பக்கமா போனேன்.
வேப்பமரத்தடியில நல்லா நெழலா இருந்தது. சரி, கொஞ்ச நேரம் கால நீட்டி உக்காரலாம்ன்னு
உக்காந்தேன். காத்தோட்டமா இருந்ததால சித்த நாழியில தூக்கம் வந்துட்டுது. அப்படியே அசந்து
தூங்கிட்டேன். அப்ப ஒரு கனவு. கண்ணு முன்னால ஐயனார் குதிரையில டொக்குடொக்குனு வேகமா
வராரு. என்னை பார்த்ததும் எதுக்கு வழிய மறிச்சிகிட்டு இங்க நிக்கிற, ஓடிப் போயிடுன்னு
சொன்னாரு. எனக்கு ஒன்னு வேணும், அத கொடுத்தீங்கன்னா நான் வழியை விட்டு ஒதுங்கி போயிடறேன்னு
சொன்னேன். என்ன வேணும், கேளு சீக்கிரம், எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்குதுன்னு சொன்னாரு
ஐயனாரு.”
“நெஜமாவே ஐயனாரா?”
“ஆமாம். எங்க குலதெய்வம்
ஐயனாரேதான். படிக்காததால எனக்கு அறிவில்லாம போயிடுச்சி. ஊருல எல்லாருமே முட்டாள் முட்டாள்னு
கிண்டல் செய்றாங்க. படிச்சவங்க மாதிரி பேசறதுக்கும் பழகறதுக்கும் எனக்கு கொஞ்சம் அறிவு
குடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். ஐயனார் என்னையே கொஞ்ச நேரம் உத்துப் பார்த்துகினே
யோசிச்சாரு. அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை, பக்கத்துல வான்னு கூப்புட்டு தலையை
தொட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு போயிட்டாரு. அன்னையிலேர்ந்து எதைப் பேச ஆரம்பிச்சாலும்,
அதுக்குப் பொருத்தமா உலகத்துல இருக்கிற உதாரணக்கதைகளும் சட்டுனு தானா ஞாபகம் வந்துரும்.
பேசாத நேரத்துல எதுவுமே ஞாபகத்துல இருக்காது. தானா மறைஞ்சிரும்”
சித்தி சொன்னதை நம்புவதா
வேண்டாமா என்கிற குழப்பத்தோடு பேச்சு வராமல் அவர் முகத்தையே பார்த்தேன். நான் பேச்சு
வராமல் தவிப்பதைப் பார்த்துவிட்டு சித்திக்கு சிரிப்பு வந்துவிட்டது. ”என்னடா முழிக்கிற?
நான் சொன்னதை நம்பிட்டியா?” என்று மறுபடியும் சிரித்தார்.
“எல்லாமே அந்தக் காலத்துல
எங்க தாத்தா சொன்ன கதைங்க, ஆயா சொன்ன கதைங்க, கழனிவேலைக்கு போற எடத்துல சொன்ன கதைங்கதான்
தம்பி. நானா எதுவும் கண்டுபுடிக்கலை. அப்பப்ப ஞாபகம் வரும். அதைத்தான் சொல்றேன்” என்றார்.
சித்தி எறும்பு மாதிரி
சுறுசுறுப்பானவர். எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார். சோடா கடையைத்
திறப்பதற்கு காலையிலேயே சித்தப்பா புறப்பட்டுச் சென்ற பிறகு சித்தி எங்கள் தெருவிலிருந்து
களையெடுப்பதற்கோ, நாற்று நடுவதற்கோ செல்லும் பெண்களுடன் சேர்ந்து சென்றுவிடுவார். விவசாய
வேலைகள் இல்லாத சமயங்களில் ரைஸ் மில்லில் நெல் அவிக்கும் வேலைக்கோ அல்லது தவிடு புடைக்கும்
வேலைக்கோ செல்வார்.
சிற்சில சமயங்களில் தோப்புக்காரர்
வீட்டிலிருந்து புளி உரித்துக் கொடுக்கும் வேலைக்கு ஆள்வேண்டும் என்று தகவல் வரும்.
அந்தக் கூட்டத்தோடும் சித்தி செல்வார். ஒரு பெரிய கூடத்தில் ஆளுக்கொரு பக்கம் ஒரு கூடை
புளியுடன் உட்கார்ந்து அரிவாள்மனை உதவியோடு கொட்டையை பிதுக்கிப்பிதுக்கி வெளியே தள்ளிவிட்டு
புளியை மட்டும் எடுத்துவைப்பதுதான் வேலை.
விடுமுறை நாளாக இருந்தால்
அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு செல்வார். அரிவாள்மனையின் கூர்மையான
விளிம்பில் பழத்தை வைத்து ஒரு கோடு கிழிப்பதுபோல மெல்ல இழுத்ததும் திறந்துகொள்ளும்
இடைவெளி வழியாக கொட்டையைப் பிதுக்கிக் கீழே தள்ளுவதுதான் வேலை.
ஒவ்வொருவருடைய விரல்களும்
இயங்கும் வேகத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு பழத்தை உண்மையிலேயே
விரல்களுக்கிடையில் பிடித்து, கொட்டையைப் பிதுக்கி எடுப்பது ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக
இல்லை. நான் ஒரு பழத்திலிருக்கும் கொட்டைகளை நீக்குவதற்குள் பிறர் நான்கு பழங்களை உரித்துவிட்டிருந்தார்கள்.
ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக என் விரல்கள் அதற்குப் பழகிவிட்டன. நாலைந்து நாட்களிலேயே அவர்களுடைய
வேகத்துக்கு இணையாக நானும் கொட்டைகளை நீக்குவதற்குக் கற்றுக்கொண்டேன்.
எப்போது புளி உரிக்கப்
போனாலும் எனக்கு சித்திக்கு அருகிலேயே உட்கார்வதுதான் பிடிக்கும். அவர் சொல்லும் கதைகளை
ஒரு வார்த்தையைக் கூட விடாமல் கேட்கவேண்டும் என்று நினைப்பேன்.
ஒருமுறை காலாண்டுத்தேர்வு
விடுமுறை சமயத்தில் தோப்புக்காரர் வீட்டில் புளி உரித்துக்கொண்டிருந்தோம். வழக்கம்போல
கதைகளும் பாட்டுகளுமாக உரையாடல் ஓடிக்கொண்டே இருந்தது. சித்தி யாரோ ஒருவருடைய கதையை விவரித்துச் சொல்லும்போது,
அவருடைய நடத்தையை விமர்சிப்பதுபோல பேச்சோடு
பேச்சாக ‘காணாத கழுதை கஞ்சியைக் கண்டிச்சாம் ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சிதாம், அந்த
மாதிரி ஆளு அவரு’ என்று சொன்னார்.
அந்தப் பழமொழி எல்லோருக்கும்
பிடித்துவிட்டது. வட்டமாக உட்கார்ந்திருந்த அனைவருமே ஒருமுறை அந்தப் பழமொழியை வாய்விட்டுச்
சொல்லிப் பார்த்து புன்னகைத்தார்கள்.
“நல்லா இருக்குதுடி நீ
சொல்ற பழமொழி. இதுவரைக்கும் நான் இந்தப் பக்கம் கேட்டதே இல்லைடி. நீ இட்டுக்கட்டி சொல்லும்போதே
இன்னொரு தரம் சொல்லச்சொல்லி கேக்கணும்ங்கற மாதிரி இருக்குது. அந்த மாதிரியே இன்னொரு
பழமொழி சொல்லேன், கேப்போம்” என்று தூண்டினார் ஒரு ஆயா. உடனே மற்றவர்களும் “இன்னொன்னு,
இன்னொன்னு’ என்று குரல் கொடுத்தனர்.
”சரி சரி” என்று தலையசைத்தபடி
யோசனையில் மூழ்கிய சித்தி தொண்டையைச் செருமியபடி ‘வித்தாரக்கள்ளி விறகொடிக்க போனாளாம்
கத்தாழை முள்ளு கொத்தோட தச்சுதாம்’ என்று சொன்னார். உடனே ஆயா “இது எங்களுக்குத் தெரிஞ்சதுதான.
யாராவது மேனாமினுக்கிங்கள பார்த்தா நாங்களே சொல்வோம். வேற புதுசா சொல்லுடி” என்றார்.
“புதுசாவா?” என்றபடி மீண்டும்
யோசனையில் மூழ்கிய பிறகு ’குப்பைமேனி பூப்பூத்து கொண்டைக்கு ஆகாது குடத்துத்தண்ணிய
ஊத்தினாலும் குட்டை ரொம்பாது’ என்றார். உடனே ஆயாவும் மற்றவர்களும் “ம். இது நல்லா இருக்குது”
என்று பாராட்டி ரசித்தார்கள். அதைத் தொடர்ந்து யாரோ ஒரு அக்கா “எனக்குக் கூட ஒன்னு
தெரியும்” என்று சொல்லிவிட்டு எல்லோருடைய முகத்தையும் பார்த்து ‘குடல் கூழுக்கு அழுவுதாம்
கொண்டை பூவுக்கு அழுவுதாம்’ என்று சொன்னார். உடனே மற்றொரு அக்கா ”அப்பன் சோத்துக்கு
அலையறானாம். புள்ளை அன்னதானம் செய்யறானாம்” என்றார். அப்படியே ஒருவர் மாற்றி ஒருவர்
சொல்லிச்சொல்லி சிரித்தார்கள்.
அதைத் தொடர்ந்து பேச்சு
இரண்டு மாதங்களை அடுத்து வரவிருந்த தீபாவளிப் பண்டிகையின் பக்கம் சென்றது. என்ன நிறத்தில் புடவையை எடுப்பது, என்ன விலையில்
எடுப்பது என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லத் தொடங்கினர். அதுவரை விதவிதமான
பழமொழிகளைச் சொல்லி அந்தக் கூடத்தையே கலகலப்பாக்கிய சித்தி அந்த உரையாடலில் பங்கேற்காமல்
அமைதியாக இருந்தார். எல்லோருக்குமே அது விசித்திரமாக இருந்தது.
ஒரு பெரியம்மா “என்னடி
கருத்தம்மா, நீ எதுக்குமே வாயை தெறக்காம இருக்க? இவ்ளோ நேரம் ஐப்பசி மாசத்து மழைமாதிரி
சடசடனு பேசிட்டே இருந்த? திடீர்னு ஏன்டி வாயை இறுக்கமா மூடிகிட்ட? தீவாளிக்கு நீ என்ன
மாதிரி எடுக்கப் போற, சொல்லக்கூடாதா?” என்று தூண்டினார்.
சித்தியின் முகத்தில் படர்ந்த
சிரிப்பு மங்கியிருந்தது. நாக்கு தட்டி த்ச் என்றபடி ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு
“எடுக்கிற ஆளுங்க பேச வேண்டிதுதான்க்கா. எடுக்க வழியில்லாத என்னமாதிரி ஆளு எதைப் பேசறது?
வாயால பந்தல் போடமுடியுமா?” என்றார்.
பெரியம்மாவுக்கு அந்த உரையாடலை
நிறுத்தும் எண்ணமில்லை. “அது என்னடி அப்பிடி சொல்லிட்ட?” என்று கேட்டார்.
சித்தி அரிவாள்மனையிலிருந்து
நழுவிவிழும் கொட்டைகளைப் பார்த்தபடியே “ஆடி காத்துல அம்மியே பறக்கும்போது மேயற கழுதையை
யாருக்கா நெனைக்க போறாங்க?” என்றார்.
அதைக் கேட்டதும் அந்தப்
பெரியம்மா “நீ எதுக்குடி இப்படி என்னமோ வாழ்ந்து கெட்ட கெழவி மாதிரி அலுப்புசலிப்பா
பேசற? கட்டன பொண்டாட்டிக்கு ஒரு பொடவை கூடவா
வாங்கி கொடுக்கமாட்டான் ஒன் ஊட்டுக்காரன்? ஒருவேளை அவன் அப்படி நினைச்சாலும் நான் அவனை
விட்டுடுவனா? சட்டைத்துணிய புடிச்சி இழுத்து
நான் கேக்கற கேள்வியில ஒன்னுக்கு ரெண்டு பொடவையா வாங்கியாந்து குடுக்கப்போறான் பாரு”
என்றார்.
சித்தியின் முகம் அதைக்
கேட்டு பூரித்துவிட்டது. பெரியம்மாவின் அழுத்தமான குரலைக் கேட்டு எல்லோருடைய முகமும்
ஒரு கணம் மலர்ந்தது. “நீ பெரிய ஆளுடி. நீ செஞ்சாலும் செய்யக்கூடிய ஆளுதான். ஒன் வாய்க்கு
பயந்தே வாங்கிக் குடுத்துடுவான் அவன்” என்று வெற்றிலையைக் குதப்பியபடியே சொன்னார் ஒரு
ஆயா.
”அது சரி” என்றபடி சித்தியைப்
பார்த்த பெரியம்மா ”என்னமோ ஆடிக் காத்துன்னு ஒரு பழமொழி சொன்னியே, அத இன்னொரு தரம்
சொல்லு, கேப்போம்” என்று கேட்டார். சித்தி ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொன்னார்.
“நல்லா பொருத்தமா இருக்குதுடி
அந்தக் கதை. ஒருபக்கம் புதுசுபுதுசா பழமொழி சொல்ற? இன்னொருபக்கம் தடாலடியா கதைங்க சொல்ற?
எங்கடி கத்துகிட்ட அதை?”
“ஐய, எல்லாமே இந்த மாதிரி
நாலு பேரு கூடற எடத்துல பேசறத கேட்டதுதான். நான் என்னமோ தனியா வாத்தியார் வச்சி கத்துகினு
வந்த மாதிரி கேக்கறியே”
ஒரு கணம் மெளனம் படர்ந்திருந்தது.
“இதுக்கே இப்படி சொல்றியே.
இந்த மாதிரி கதைங்க சித்திரை, வைகாசி, ஆனின்னு ஒவ்வொரு மாசத்துக்கும் இருக்குது தெரியுமா?”
என்று சித்தியே மீண்டும் தொடங்கினார்.
”என்ன,
ஒவ்வொரு மாசத்துக்கும் ஒரு கதையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பெரியம்மா.
“ஆமாம்க்கா”
“அப்படின்னா, நீ சித்திரையிலேர்ந்து
ஆரம்பிச்சி சொல்லுடி. நாங்களும் கேட்டுக்கறம்”
கொட்டை உரிப்பதை நிறுத்திவிட்டு
சித்தியின் முகத்தை ஆவலுடன் பார்த்தார் பெரியம்மா. அதைப் பார்த்ததும் மற்றவர்களும்
அரிவாள்மனையிலிருந்து கையை விலக்கிக்கொண்டு சித்தியின் முகத்தைப் பார்த்தனர்.
சித்தி சிறிது நேரம் யோசித்துவிட்டு
“சித்திரை வெயில்ல ஊர்ந்து போனால் மதம் கொண்ட பாம்பும் செத்துப் போயிடும்” என்றார்.
பெரியம்மா அதைக் கேட்டு தனக்குள்ளாகவே ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டார். புருவத்தை
உயர்த்தி “ம்” என்றார். ”வெயில்ல போனா நமக்கே நாக்கு தள்ளும்போது பாம்புக்கு தள்ளாதா
என்ன?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்பவரைப் போல சொல்லிக்கொண்டார். தொடர்ந்து “அப்புறம்
வைகாசிக்கு என்ன சொல்லப் போற?” என்று கேட்டார்.
”வைகாசி மாசத்துல வயசுக்கு
வந்தாளாம் வயக்காட்ட வித்து சாங்கியம் செஞ்சானாம்”
“ஐ, இந்தக் கதையும் நல்லாதான்டி
இருக்குது. சரி, ஆனி மாசத்துக்கு?”
“ஆனியில அடிகோலாதே கூனியில
குடிபோகாதே”
“நீ சொல்றது அப்படியே நெத்தியில
அடிச்ச மாதிரி இருக்குதுடி கருத்தம்மா. அது சரி, போனா என்ன ஆவும்? அதுக்கு எதுவும்
கதை இல்லையா?”
”எனக்கு எப்படிக்கா தெரியும்?
போய் பார்த்தவங்கள கேட்டாதான் தெரியும்”
“சரி, அத விடு, ஆடி மாசத்துக்கு
என்ன, அதச் சொல்லு”
“அதைத்தான இப்ப சொன்னேன்.”
“ஓ, அந்தக் கழுதை கதையா?
சரி. சரி. ஆவணிக்கு சொல்லு”
“ஆவணி மாசத்துல தாவணி போட்டாளாம்
மார்கழி மாசத்துல மாலை மாத்திக்குனாளாம்”
“மார்கழியில யாருடி கல்யாணம்
பண்ணிக்குவா?”
“அவசரக்குடுக்கைங்களுக்கெல்லாம்
நாளாவது, கெழமையாவது. அவுங்கள பரிகாசம் பண்றதுக்காக அந்த மாதிரி சொல்வாங்க”
“ஓ. அப்படியா? சரி, சரி.
புரட்டாசிக்கு?”
“புரட்டாசியில பொன்னுருகக்
காயும் வெயில் மண்ணுருகப் பெய்யும் மழை”
“ஐப்பசி?”
“ஐப்பசியில நெல் விதைச்சா,
அவலுக்கும் ஆகாது”
“அது சரி, எல்லாம் மழையில
கரைஞ்சி போனா, விளைச்சலுக்கு எங்க போவறது? பொருத்தமாதான்டி இருக்குது. இதே மாதிரி கார்த்திகை மாசத்துக்கு ஏதாவது இருக்குதா?”
“இருக்குது. இருக்குது.
கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை கர்ணனுக்குப் பிறகு கொடையும் இல்லை”
“மார்கழிக்கு என்ன சொல்லப்
போற?”
“மார்கழி மழை மண்ணுக்கும்
உதவாது, மார்கழி வெற்றிலையை மாடுகூட தின்னாது”
“அந்த அளவுக்கா சப்புனு
இருக்கும்? தை மாசத்துக்கு?”
“தை பனி தரையைத் துளைக்கும்
மாசி பனி மச்சை துளைக்கும்”
“மாசிக்கு தனியா எதுவும்
கதை இல்லையா?
“இருக்குதுக்கா. மாசி நிலவும்
மதிக்காதவன் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும் ஒருநாளும் நிலைக்காது”
“என்னடி இது? தலையில அடிச்சி
சொல்றமாதிரி இருக்குது. கடைசியா என்னடி? பங்குனிதான் மிச்சம். அதுக்கு ஏதாவது இருக்குதா?”
“பங்குனிங்கறதுக்காக பருப்பதும்
இல்லை சித்திரைங்கறதுக்காக சிறுப்பதும் இல்லை”
“அடியே கருத்தம்மா, சொந்த
அறிவ வச்சி, ஒவ்வொரு மாசத்துக்கும் நீ இவ்ளோ அழகா கருத்தா சொல்றியே. நீயெல்லாம் படிச்சிருந்தேன்னு
வை, இந்த ஜில்லாவுக்கே கலெக்டராயிருப்ப”
“இதான் கலெக்டர் வேலையா?”
என்று சித்தி அரிவாள்மனையைச் சுட்டிக்காட்டிக் கேட்டார். உடனே “அப்படிலாம் நெனைக்காதடி
கருத்தம்மா” என்று ஆறுதலாகச் சொன்னார் பெரியம்மா. தொடர்ந்து “ஒரு நேரம் வரும். பார்த்துகினே
இரு. சக்கரம் உன்ன எங்கயோ தூக்கிகிட்டு போகப் போவுது” என்றார். ”தூக்கிகிட்டாவது போகட்டும்,
உருட்டிகிட்டாவது போகட்டும். கீழ தள்ளி உடாம இருந்தா போதும்” என்று சிரித்தார் சித்தி.
அந்த மாத இறுதியில் ஒருநாள்
கலகலப்பாக பேச்சும் கதையுமாக சிரித்துக்கொண்டே புளி உரித்துக்கொண்டிருந்த சமயத்தில்,
“இங்கதான புளி ஆயறாங்க?” என்று வாசலில் யாரோ
விசாரிக்கும் குரல் கேட்டது. யாரென்று தெரிந்துகொள்ள திரும்பிப் பார்த்தேன். ஓட்டிவந்த
மிதிவண்டியை சுவரோரமாகச் சாய்த்து நிறுத்திவிட்டு அவரே தடதடவென்று உள்ளே வந்துவிட்டார்.
முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. எனக்கு அவர் முகம் ஞாபகம் வந்துவிட்டது. செல்வராஜி
சித்தப்பா வேலை செய்துவந்த சோடாக்கடைக்குப் பக்கத்தில் இருக்கும் துணிக்கடையில் வேலை
பார்க்கும் அண்ணன்.
சித்தியைப் பார்த்து “சோடா
கடையில மிஷின் வெடிச்சிடுச்சி. செல்வராஜி அண்ணனுக்கு நல்ல அடி. மூஞ்சி, கழுத்து, மார்பு, தோள்பட்டையெல்லாம் காயம்.
எல்லா எடத்துலயும் கண்ணாடித்துண்டுங்க ஆழமா குத்தியிருக்கு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு
போயிருக்காங்க” என்று பதற்றத்தோடு துண்டுதுண்டாகச் சொன்னார் அந்த அண்ணன்.
“எந்த ஆஸ்பத்திரிடா?” என்று
பக்கத்தில் இருந்த ஆயா கேட்டார்.
“இங்கதான். நம்மூரு தர்மாஸ்பத்திரிக்கு”
அந்தக் கணமே அரிவாள்மனையைத்
தள்ளிவிட்டு வேகமாக எழுந்தார் சித்தி. ”ஐயையோ, என் ராசாவுக்கு என்னாச்சின்னு தெரியலையே”
என்று கூக்குரலெடுத்து அழுதபடியே எழுந்து தகவல் சொன்னவருக்குப் பின்னால் ஓடினார். நாங்களும்
வேலையை நிறுத்திவிட்டு தோப்புக்காரரின் மனைவியைப் பார்த்து செய்தியைச் சொல்லிவிட்டு
ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.
ஆஸ்பத்திரி வாசலில் பெரிய
கூட்டம் நின்றிருந்தது. கடைமுதலாளியும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அழுதுகொண்டிருந்த
சித்திக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆஸ்பத்திரி படுக்கையில்
சித்தப்பாவை இரண்டு வாரம் வைத்திருந்தார்கள். குரல்வளைக்குப் பக்கத்தில் ஊடுருவியிருந்த
ஒரு கண்ணாடித் துண்டு சற்றே ஆழமாக இறங்கி கிழித்திருந்தது. அந்த இடத்தில் மட்டும் தையல்
போட்டிருந்தார்கள். மற்ற இடங்களில் தைத்திருந்த கண்ணாடித்துண்டுகளை அகற்றி புண்ணுக்கு
மருந்து தடவியிருந்தனர். வீட்டுக்கு வந்த பிறகும் இரு வாரங்கள் சித்தப்பா படுக்கையிலேயே
இருந்தார். வீட்டுக்கு வந்த பிறகு மேலும் இரு வாரங்கள் ஓய்வெடுத்தார்.
காயங்கள் குணமடைந்ததும்
வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்ட சித்தப்பாவை ”உயிருக்கு ஆபத்தான இந்த வேலையே இனிமேல
உனக்கு வேணாம். விட்டுடு” என்று சொல்லி சித்தி தடுத்துவிட்டார்.
“வேலைக்குப் போவ வேணாம்ன்னா
ஊட்டுச் செலவுக்கு யாரு பணம் குடுப்பாங்க?”
“எல்லாம் நான் பார்த்துக்கறேன்.
நீ வீட்டோட இரு. அது போதும்”
“என்ன செய்வ நீ?”
“செஞ்ச பிறகு உனக்கே தெரியும்.
பார்த்துக்கோ”
அப்போது நானும் சித்தியும்
திண்ணையில் உட்கார்ந்து உலர்ந்த வேர்க்கடலையை தரையில் தட்டித்தட்டி தோலை உரித்து வீசிவிட்டு,
கடலைகளை மட்டும் ஒரு கூடையில் போட்டுக்கொண்டிருந்தோம். வண்டிக்காரர் வீட்டில் எண்ணெய்க்காக
உலரவைத்த ஒரு மூட்டை வேர்க்கடலையை கொடுத்திருந்தார்கள். ”வா, வந்து உக்காந்து நீயும்
உரிச்சி போடு சாயங்காலத்துக்குள்ள உரிச்சி குடுத்தா காசி கெடைக்கும்” என்று சித்தப்பாவைப்
பார்த்துச் சொன்னார் சித்தி.
சித்தப்பா சித்தியின் சொற்களை
முதலில் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. வாசலுக்கும் தோட்டத்துக்கும் இடையில் மாறிமாறி நடந்துகொண்டே இருந்தார். தனக்குத்தானே
பேசிக்கொள்வதுபோல மெல்லிய குரலில் முணுமுணுத்துக்கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பிறகு
திரும்பி வந்து கூடைக்கு அருகில் உட்கார்ந்து நிலக்கடலை உரித்துக்கொடுக்கத் தொடங்கினார்.
அன்று சாயங்காலம் நான்தான்
கடலையையும் தோலையும் தனித்தனியாக கூடைகளில் நிரப்பி வண்டிக்காரர் வீட்டில் கொடுத்துவிட்டு
பணம் வாங்கி வந்தேன். சித்தி அந்தப் பணத்தில் பாதித் தொகையை எனக்கு பிரித்துக் கொடுத்தார்.
”ஐயோ, சித்தி, எனக்கு எதுக்கு இவ்ளோ பணம்? வேணாம்” என்று நான்
அதை வாங்க மறுத்தேன். சித்தி சிரித்துக்கொண்டே அந்தப் பணத்தை என் மேல்சட்டை பையில்
வைத்தபடி “வச்சிக்கடா. படிக்கிற புள்ள. நாளைபின்ன புஸ்தகம் நோட்டு வாங்கறதுக்கு ஒதவும்”
என்றார்.
நான் தலையசைத்தபடி மெதுவாகத்
திரும்பினேன். அப்போது “எனக்காக, ஒரு தரம் கடைத்தெரு வரைக்கும் போய் கொஞ்சம் சாமானுங்க
வாங்கிவந்து குடுத்துட்டுப் போறியா?” என்று கேட்டார் சித்தி. தன் கையில் எஞ்சியிருந்த
பணத்தையும் இறவாணத்தில் செருகியிருந்த ஒரு கைப்பையையும் என்னிடம் கொடுத்தார்.
“என்ன சித்தி வேணும்?”
“ஒரு கிலோ வெல்லம். ஒரு
தேங்காய். அது மட்டும் போதும்”
அவர் சொன்ன எதுவுமே வழக்கமாக
வாங்கும் பொருட்கள் அல்ல என்பதால் அந்தப் பெயர்களைக் கேட்டு சற்றே குழப்பத்தோடு சித்தியின்
முகத்தைப் பார்த்தேன்.
“தேங்காயா, தேங்கா பத்தையா
சித்தி? புரியலையே” என்றேன். “பத்தை இல்லைடா. முழு தேங்காய்தான் வேணும். நல்ல முத்தின
தேங்காயா வேணும்ன்னு கேட்டு வாங்கு. சூரைக்கு வச்சிருக்கிர தேங்காவ எடுத்து குடுத்துடப்
போறான். கவனமா பார்த்து வாங்கு” என்றார் சித்தி.
“தேங்கா, வெல்லம்லாம் எதுக்கு
சித்தி, படைக்கப் போறியா?” என்று ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கேட்டேன்.
”வாங்கிட்டு வா. அப்புறமா
சொல்றேன்” என்று சிரித்தார் சித்தி. சித்தப்பாவும் அவருக்குப் பக்கத்தில் குழப்பத்தோடு
நின்றிருந்தார்.
நான் கடைக்குச் சென்று
தேங்காயும் வெல்லமும் வாங்கி வந்தேன். வெல்லத்தை பொட்டலம் கட்டிக் கொடுக்கும்போது கடைக்காரர்
ஒரு சின்ன துண்டு வெல்லத்தை மூட்டையிலிருந்து தனியாகப் பிட்டு எடுத்து என்னிடம் கொடுத்தார்.
நான் வீட்டுக்கு வந்து சேரும் வரைக்கும் அதை கொஞ்சம்கொஞ்சமாக நாக்கில் வைத்து சுவைத்தபடி
வந்தேன்.
சித்தி தேங்காயை எடுத்து
காதோரமாக வைத்து ஆட்டிப் பார்த்தார். திருப்தியான முகக்குறிப்போடு சித்தப்பாவிடம் கொடுத்து
“இந்தா ரெண்டா உடை” என்று சொன்னார். தொடர்ந்து “தேங்கா தண்ணிய தரையில விட்டுடாத. தம்ளர்ல
புடிச்சி தம்பிக்கு குடு” என்றார்.
“எதுக்கு கருத்தம்மா இதெல்லாம்?”
“நான் செய்யறத பார்த்து
நீங்களே கண்டுபுடிங்க பார்க்கலாம்”
சித்தப்பா குழப்பமாக சித்தியின்
பக்கம் ஒருகணம் பார்த்தார். பிறகு ஒரே வெட்டில் சித்தப்பா தேங்காயை இரண்டு துண்டாக்கினார்.
இனிப்பான தண்ணீரை அருந்த இதமாக இருந்தது.
முறத்துக்கு நடுவில் அரிவாள்மனையை
வைத்துவிட்டு வெல்லத்தை ஒரு பக்கத்திலிருந்து சின்னச்சின்ன துண்டுகளாகச் சீவி நிறைத்திருந்தார். ஏற்கனவே அடுப்பில் ஏற்றிய வாணலில் நிறைந்திருந்த
நீர் கொதிக்கத் தொடங்கிய சமயத்தில், அந்த வெல்லத் துருவல்களை அதில் கொட்டினார். நன்றாக
கரையும் வகையில் கரண்டியால் கலக்கத் தொடங்கினார்.
தண்ணீர் கருஞ்சிவப்பு நிறத்தில்
மாற்றமடைந்தது. கரைசலை ஒரு கையால் கிளறிக்கொண்டே
முறத்தையும் அரிவாள்மனையையும் சித்தப்பாவின் பக்கம் எடுத்துவைத்தார் சித்தி.
எதுவும் புரியாமல் “என்ன?” என்று கேட்டார் சித்தப்பா. “தேங்காயை நல்லா துருவுங்க……”
என்றார் சித்தி.
என்ன நிகழ்கிறது என்பது
புரியாமல் ஒருவித குறுகுறுப்போடு சித்தியையும் அடுப்பையும் மாற்றிமாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வெந்நீரில் வெல்லம் முற்றிலும்
கரைந்துவிட்ட நிலையில் சித்தி வாணலியில் நிறைந்திருந்த கரைசலை தனியாக ஒரு பாத்திரத்தில்
வடிகட்டிப் பிரித்தெடுத்தார். வாணலியிலேயே ஒட்டிக்கொண்ட கசடுகளையும் சின்னஞ்சிறு துண்டுகளையும்
தனியாக ஒரு தட்டில் கவிழ்த்துவிட்டு வாணலியை மீண்டும் கழுவி சுத்தப்படுத்திவிட்டு அடுப்பில்
வைத்தார். வெல்லக்கரைசலை அதில் ஊற்றி மீண்டும்
கொதிக்கவைத்தார்.
வெல்லத்தின் மணம் எழுந்ததுமே
எனக்குப் புரிந்துவிட்டது. “சித்தி, இது கமர்கட்தான? உண்மையைச் சொல்லுங்க….” என்றேன்.
நான் கண்டுபிடித்துவிட்டேன்
என்பதை சித்தியால் நம்பவே முடியவில்லை. மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார். சித்தப்பாவுக்கும்
அப்போதுதான் நான் சொன்னது என்னவெனப் புரிந்தது. ”எனக்கு அப்பவே தெரியுமே” என்று அசட்டுச்
சிரிப்பொன்றைச் சிரித்து எதையோ பேசிச் சமாளித்தார்.
முறத்திலிருந்த தேங்காய்த்துருவலை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வெல்லக் கரைசலுக்குள்
தூவி கலக்கிக்கொண்டே இருந்தார் சித்தி. பிறகு ஒரு திட்டத்துக்கு வந்ததும், அடுப்பில்
வைத்த விறகுக்கட்டைகளை வெளியே இழுத்து அணைத்தார்.
அடுப்புக்குள் எஞ்சியிருந்த
எருமுட்டைத்துண்டுகள் மட்டுமே எரிந்தபடி இருந்தன. அச்சூட்டில் வெல்லக்கரைசலிலிருந்து
சின்னச்சின்ன குமிழ்கள் வெடித்து அடங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. வெல்லத்தின்
மணம் மறைந்து உண்மையான கமர்கட் மணம் எங்கெங்கும்
பரவியது.
“தெருவுல போறவள கூட உன்
ஊட்டு அடுப்பங்கரை வாசனை வாவான்னு இழுக்குதே. அந்த அளவுக்கு நூதனமா என்னடி செய்யற கருத்தம்மா? கோயிலுக்கு படைக்க போறியா? உண்டை கொழுக்கட்டையா?
எதுவா இருந்தாலும் எனக்கு ரெண்டு எடுத்து வைக்க மறக்காதடி”
ஸ்டேஷன் பக்கத்திலிருந்து
கூடையோடு நடந்துவந்த செல்லாம்பா ஆயா வீட்டு வாசலில் நின்றுகொண்டு கேட்ட குரல் அடுப்பங்கரை
வரைக்கும் கேட்டது.
சித்தி ஒருகணம் வெளியே
சென்று முந்தானையால் முகத்தைத் துடைத்தபடியே “உண்டையுமில்லை. கொழுக்கட்டையுமில்லை.
கமர்கட்டு ஆயா” என்றார்.
“அது எதுக்குடி?”
“விக்கலாம்னுதான் செஞ்சேன்
ஆயா. ஒரு பத்து ரூபா மொதல் வச்சா, ஒரு அஞ்சி ரூபா கெடைச்சாலே போதும். ஒருநாள் பொழுது
ஓடிடும்”
ஆயா ஒரு கணம் திகைத்து சித்தியைப் பார்த்தார். திண்ணையில் நின்றிருந்த சித்தப்பாவையும் பார்த்தார். பிறகு “அம்மாடி, அஞ்சி ரூபா என்னடி? ஒன் மனசுக்கு அந்த மாரியாத்தா அம்பது ரூபாயா கொடுப்பாடி. போய் வேலையைப் பாரு, போ” என்று சொல்லிவிட்டு கூடையோடு நடந்துபோனார்.
அடுப்பிலிருந்த வாணலை எடுத்து
கீழே இறக்கிவைத்தார். வீட்டிலிருந்து தட்டுகளைக் கழுவி எடுத்துக்கொண்டு வந்தார்.
வாணலிலிருந்து இனிப்புக்கலவையை
ஒரு கரண்டியில் அள்ளி அருகில் வைத்துக்கொண்டு அதிலிருந்து விரல்களால் தொட்டெடுத்து
கோலிகுண்டு அளவில் உள்ளங்கைகளுக்கிடையில் வைத்து உருட்டி உருட்டி தட்டில் வைத்தார்.
அதன் நிறத்தைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியது.
சித்தி உருட்டுவதைப் பார்த்தபோது
எனக்கும் உருட்டவேண்டும் என்கிற ஆசை வந்தது.
“சித்தி, நானும் உருட்டட்டுமா?”
என்று ஆசையோடு கேட்டேன்.
“சூடு தாங்குவியா?”
“தாங்குவேன் சித்தி”
“போய் கையை நல்லா தேச்சி
கழுவிகினு வந்து உருட்டு. சூடு தாங்கமுடியலைன்னா வச்சிடணும். புரியுதா?”
நான் அப்போதே குதித்தோடிச்
சென்று கைகழுவிக்கொண்டு வந்து வாணலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். சித்தியைப் போலவே நானும் கலவையை அளவாக எடுத்து உருட்டினேன். என்னால்
தாங்கிக்கொள்கிற அளவுக்குள்தான் சூடு இருந்தது. “என்னடா, சுடுதா? சுடுதா?” என்று கேட்டபடி
சித்தி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “இல்லை சித்தி, இல்லை சித்தி” என்று சொல்லிக்கொண்டே
நான் உருட்டிமுடித்து தட்டில் வைத்துவிட்டேன்.
சித்தி உருட்டிய உருண்டைக்குப்
பக்கத்திலேயே நான் உருட்டிய உருண்டை இருந்தது. “நீ பெரிய தெறமைசாலிடா ராசா. கண்ணால
பார்க்கும்போதே கை தன்னால வேலை செய்யிது” என்று சிரித்தார். ”எனக்கும் கொஞ்சம் எடம்
உடுங்கடா” என்றபடி சித்தப்பாவும் கையைக் கழுவிக்கொண்டு வந்து உருண்டை பிடிக்க உட்கார்ந்தார்.
சிறிது நேரத்திலேயே கலவையின்
சூடு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டே வந்தது. சித்தி வாணலியை எடுத்து மீண்டும் அடுப்பில்
வைத்து அனல்மூட்டி சூடேற்றி இறக்கினார்.
ஒரு மணி நேரத்தில் கமர்கட்டுகள்
தயாராகிவிட்டன.
தட்டு நிறைய கமர்கட்டுகளைப்
பார்த்ததும் சித்தப்பா சுறுசுறுப்படைந்துவிட்டார். வீட்டில் இருந்த பழைய செய்தித்தாட்களைத்
திரட்டியெடுத்து ஐம்பது கமர்கட்டுகளைக் கொண்ட சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டிவைத்தார்.
எல்லாப் பொட்டலங்களையும்
எடுத்து ஒரு பைக்குள் வைத்தபோது ”எங்க எடுத்துகினு போற?” என்று கேட்டார் சித்தி.
“இது என்ன கருத்தம்மா கேள்வி?
எங்கனா எடுத்தும் போயி வித்தான முதல் போட்ட காச எடுக்கமுடியும்?” என்றார் சித்தப்பா. சித்தி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
திண்ணையில் ஒரு மாசமாக
யாரும் தொடாமலேயே தூசடைந்து நின்றிருந்த சைக்கிளை எடுத்து கீழே இறக்கினார் சித்தாப்பா.
இறவாணத்தில் செருகியிருந்த பழைய துணியை எடுத்து தூசு போக துடைத்தார். தோட்டத்துப் பக்கம்
சென்று கைகால்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வந்தார். “சரி, போய் வரட்டுமா?” என்று சித்தியிடம் கேட்டபடி
கமர்கட்டு பையை சைக்கிளில் மாட்டிக்கொண்டு புறப்பட்டார் சித்தப்பா.
“சரி. கவனமா பாத்து போய்வா”
பொழுது சாய்ந்து இருட்டிய
பிறகுதான் சித்தப்பா திரும்பி வந்தார். பையிலிருந்த பணத்தை எடுத்து சித்தியிடம் கொடுத்தார்.
எண்ணிப் பார்த்துவிட்டு ”இவ்ளோ பணமா?” என்று மிரட்சியோடு கேட்டார் சித்தி. “எல்லாம்
கமர்கட் வித்த பணம்தான் கருத்தம்மா. சாப்ட்டு பார்த்துட்டு எல்லாருமே நல்லா இருக்குது
நல்லா இருக்குதுன்னு சொன்னாங்க” என்று மகிழ்ச்சியோடு சொன்னார் சித்தப்பா.
“எல்லாத்தயும் எப்படி வித்த?”
“இதுக்கு முன்னால சோடா
போட்ட கடைங்களுக்கு நேரா போனேன். இப்படி ஒரு தின்பண்டம் புதுசா செஞ்சிருக்கோம் வேணுமான்னு
கேட்டேன். ஒவ்வொருத்தரங்களும் சாப்ட்டு பார்த்துட்டு எனக்கு அம்பது குடு நூறு குடுன்னு
கேட்டு வாங்கிகிட்டாங்க. கமர்கட்டுல அவ்ளோ ருசி. தக்கா தெருவுல ஒரு உடையார் கடை இருக்குது.
அவரு மட்டுமே நாளைக்கு எரநூறு வேணும்ன்னு கேட்டிருக்காரு. நம்மால முடியுமா?”
“மனசு வச்சா ஏன் முடியாது?
எல்லாம் முடியும்”
“அப்ப என்னென்ன வேணும்
சொல்லு, இப்பவே கடைக்கு போய் வாங்கிட்டு வந்துடறேன்”
“ரெண்டே ரெண்டு சாமானுங்கதான்.
நல்ல சுத்தமான வெல்லம். முத்தின பக்குவத்துல தேங்காய். அவ்ளோதான்” என்றபடி சித்தப்பாவிடம்
பணத்தைக் கொடுத்தார் சித்தி. சித்தப்பா மீண்டும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு கடைத்தெரு
பக்கமாகச் சென்றார்.
கமர்கட் தேவை நாளுக்குநாள்
பெருகிக்கொண்டே சென்றது. பல நேரங்களில் காலையில் மூட்டுகிற அடுப்பு பகல் முழுக்க எரிந்துகொண்டே
இருந்தது. கடைத்தெரு பக்கமாக இருந்த கடைகள் மட்டுமன்றி, அக்கம்பக்கத்து கிராமங்களில்
கடை வைத்திருப்பவர்களும் கமர்கட் கேட்டார்கள். பள்ளிக்கூட வாசல்களிலும் ரெஜிஸ்டர் ஆபீஸ்
வாசலிலும் கமர்கட் விற்பனை கொடிகட்டிப் பறந்தது.
சினிமா கொட்டகையில் கடை வைத்திருப்பவர் கூட தினமும் நூறு, இருநூறு என்று வாங்கிக்கொண்டு
சென்றார்.
நெல் அவிப்பது, தவிடு புடைப்பது,
களையெடுப்பது, நாற்று நடுவது, நெல் அறுப்பது, வேர்க்கடலை பிடுங்குவது, கடலை பிரிப்பது,
புளி உரிப்பது என எந்த வெளிவேலைக்கும் செல்ல முடியாதபடி சித்திக்கு நாள்முழுக்க கமர்கட்
செய்யும் வேலையே சரியாக இருந்தது. அந்த வீட்டுக்கே கமர்கட்காரம்மா வீடு என்று அடையாளப்பெயர்
வந்துவிட்டது.
ஏதோ ஒரு விடுமுறை நாள்.
அன்று சித்திக்குத் துணையாக நானும் கமர்கட் உருட்டிக்கொண்டிருந்தேன். அப்போது வாசலில் நின்றுகொண்டு “யாருங்க ஊட்டுல?”
என யாரோ விசாரிப்பது கேட்டது. புதிய குரலாக இருக்கவே நான் அவசரமாக வெளியே சென்று பார்த்தேன்.
பள்ளிக்கூட ஆசிரியர்களைப்போன்ற
தோற்றத்தில் இரண்டு பேர் நின்றிருந்தனர். அவர்கள் தோள்களில் பைகள் தொங்கின. தேர்வெழுதச்
செல்பவர்கள் வைத்திருக்கும் அட்டையைப்போல ஒரு அட்டை இருவருடைய கைகளிலும் இருந்தது.
”காலரா ஊசி போடறவங்க தெருத்தெருவா வராங்க” என்று எப்போதோ எங்கள் வகுப்பு நண்பர்கள்
பேசிக்கொண்டது அக்கணத்தில் நினைவுக்கு வந்ததால் சற்றே அச்சம் கொண்டேன்.
“தம்பி தம்பி” என்று அவர்கள்
குரல் கொடுத்து அழைக்கத் தொடங்கிய சமயத்தில் அப்படியே பின்வாங்கி கதவுக்குப் பக்கத்தில்
சென்று ”சித்தி, வெளியே வாங்க, யாரோ வந்திருக்காங்க” என்று துணைக்கு அழைத்தேன்.
”யாருடா?” என்று கேட்டுக்கொண்டே
கையைத் தட்டி மாவுத்தூசு போக உதறியபடி வெளியே வந்து நின்றார் சித்தி.
”மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடக்குதும்மா. அதுக்குத்தான் வந்திருக்கோம். தம்பி யாரு? உங்க புள்ளையா? ரொம்ப பயப்படுது”
என்று கேட்டார் வந்தவர்.
சித்தி சிரித்துக்கொண்டே
“எங்க அக்கா புள்ள. எதுத்த ஊடு” என்றார்.
”அப்படியா, சரி சரி” என்று
சொல்லிக்கொண்டே தலையைத் திருப்பி எங்கள் வீட்டைப் பார்த்தார். “எத்தன பேரும்மா உங்க
வீட்டுல?” என்று கேட்டார்.
“மூனு பேருங்க. நானு. எங்க
ஊட்டுக்காரரு. அவுங்கம்மா”
“பேரும் வயசும் சொல்லுங்கம்மா.
முதல்ல உங்க ஊட்டுக்காரரு பேரு சொல்லுங்கம்மா”
சித்தி வந்திருந்த இருவரையும்
மாறிமாறிப் பார்த்தார். பிறகு கூச்சத்தோடு என் பக்கமாகத் திரும்பி ”தம்பி, சித்தப்பா
பேர சொல்லு” என்று என்னைத் தூண்டினார். நான் உடனே வேகமாக “செல்வராஜி” என்றார். அவர்
தன் அட்டையில் குறித்துக்கொண்டார்.
“வயசு, வேலையை பத்தி சொல்லுங்கம்மா”
“முப்பது வயசு. தொழிலாளி”
“தொழிலாளின்னு பொதுவா சொன்னா
எப்பிடிம்மா? என்ன தொழில்னு குறிப்பா சொல்லுங்கம்மா”
“குறிப்பா சொல்றமாதிரிங்களா
எங்க தொழில் இருக்குது? சோடா கடையில பத்து வருஷமா வேலை செஞ்சாரு. இப்ப கமர்கட்டு விக்கறாரு”
“அவுங்க அம்மா பேரு, வயசு?”
“தனபாக்கியம். அறுபது வயசு”
“உங்க பேரு, வயசு?”
சித்தி வாய் திறந்து சொல்வதற்குள்
”நான் சொல்றேன், நான் சொல்றேன்” என்று முந்திக்கொண்டேன். “அவன் சொல்றானாம், கேட்டுக்குங்க”
என்று சித்தியும் என் பக்கம் கையைக் காட்டினார்.
நான் உடனே பெருமையுடன்
“கருத்தம்மா, கமர்கட்டு வியாபாரம்” என்றேன். “கருத்தம்மாவா?” என்று அடங்கிய குரலில்
சந்தேகத்தோடு கேட்டபடி குழப்பத்துடன் சித்தியின் பக்கம் திரும்பிப் பார்த்தார் அவர்.
சித்தி சிரித்துக்கொண்டே “எல்லாருமே அந்தப் பேரு வச்சி கூப்புடறதால தம்பியும் அந்தப்
பேரு சொல்லுது. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்று திருத்தினார்.
ஒருகணம் திகைத்து நின்றுவிட்டேன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. சித்தியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அமிர்தவல்லி. இருபத்தஞ்சி
வயசு”
“படிச்சிருக்கீங்களா?”
“ம்ஹூம்”
“கையெழுத்து போடுவீங்களா?”
“ம்ஹூம்”
“ரேகை வைப்பீங்களா?”
“ம்”
ஒருவர் தன் பையிலிருந்து
நீல மை தடவிய பஞ்சுப்பெட்டியை எடுத்துத் திறந்து நீட்டினார். சித்தி அந்தப் பஞ்சின்
மீது கட்டைவிரலை வைத்து உருட்டியெடுத்து, அந்த ரேகை அடையாளத்தை அவர்கள் நிரப்பிவைத்திருந்த
படிவத்தில் சுட்டிக்காட்டிய இடத்தில் வைத்தார்.
அவர்கள் புறப்பட்டுச் சென்றதும்
நானும் சித்தியும் வீட்டுக்குள் திரும்பி வெல்லக்கலவையின் முன்னால் உட்கார்ந்தோம்.
கலவையின் சூடு அடங்கியிருந்தது. வாணலியை அடுப்பின் மீது தூக்கிவைத்து சூடேறும்படி செய்தார்
சித்தி.
சித்தி அறிவித்த புதுமையான
பெயர் என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை மீண்டும் கேட்கும் விருப்பத்தில்
”சித்தி, உங்க பேரை என்னன்னு சொன்னீங்க?” என்று கேட்டேன்.
“அமிர்தவல்லிடா. அமிர்தவல்லி.
அமிர்தம்னு கூட சொல்வாங்க”
“இப்படி ஒரு பேரு இருக்கறதே
இங்க யாருக்குமே தெரியலையே சித்தி. எல்லாருமே கருத்தம்மான்னுதான உங்களை கூப்புடறாங்க.
சித்தப்பா கூட உங்கள கருத்தம்மா கருத்தம்மான்னுதான கூப்புடறாரு. இந்தப் பேரச் சொல்லி ஏன் யாருமே கூப்புடமாட்டேங்கறாங்க?”
“த்ச். அதுக்கு நான் என்னடா
செய்யமுடியும்?”
“சரி, யாரு உங்களுக்கு
இந்தப் பேரை வச்சாங்க?”
”யாரு வைச்சாங்கன்னு கேட்டா என்னன்னு சொல்றது? எல்லாருக்கும்
வைக்கிறமாதிரி எங்க அப்பாதான் வச்சாரு?”
“அழகான பேரு சித்தி”
“ஆமாமாம். அவரு பெரிய ரசனைக்கார
மனுஷன். அந்தக் காலத்துல கூத்துல அர்ஜுனன் வேஷம் கட்டி ஆடுவாரு. ஆரவல்லி கூத்துல அவருதான்
அர்ஜுனன். அந்தப் பேரு மேல அவருக்கு ஒரு மயக்கம். அதனால எங்க ஊட்டுல எல்லாருக்கும்
அந்த மாதிரியே பேரு வச்சிட்டாரு. எங்க முதல் அக்கா பேரு ஆரவல்லி. ரெண்டாவது அக்கா சூரவல்லி.
மூனாவது அக்கா சிங்காரவல்லி. நாலாவது அக்கா சுந்தரவல்லி. அஞ்சாவது அக்கா மாணிக்கவல்லி.
நான் அமிர்தவல்லி”
எல்லாப் பெயர்களையும் ஒரு
முறை மனசுக்குள் சொல்லிப் பார்த்தேன். சொல்லும்போதே என்னை அறியாமல் மனத்தில் ஒரு உற்சாகம்
படர்வதை உணர்ந்தேன். “எல்லாப் பேருமே நாடகத்துல
வர்ர பேருங்க மாதிரி ரொம்பரொம்ப நல்லா இருக்குது சித்தி” என்று சந்தோஷத்தோடு சொன்னேன்.
நான் சொன்னதை காதுகொடுத்துக்
கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை சித்தி. வாணலியில் குமிழியிட்டு கொப்பளிக்கும் கமர்கட்
கரைசலின் மீது கவனத்தைப் பதித்தபடி அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கமாக மேலும் நெருங்கி
மீண்டுமொரு முறை அதே வார்த்தைகளைச் சொன்னேன். அப்போதும் அவர் அமைதியாகவே இருந்தார்.
அடுப்பிலிருந்து விறகை வெளியே இழுத்து தணலை அடக்கிவிட்டு வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி
தரையில் வைத்தார். “பேரு நல்லா இருந்து என்னடா புண்ணியம்? தலையெழுத்து நல்லா இல்லையே”
என்று ஒருகணம் என்னைப் பார்த்து சொல்லிவிட்டு பெருமூச்சுடன் கமர்கட் கலவையைத் தொட்டெடுத்தார்.