ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக நிறுத்தப்பட்டு பூமியைத் துளைத்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். ”அங்க ஒரு அடிபம்ப் வைக்கப்போறாங்கடா” என்று சொன்னான் நெடுஞ்செழியன்.
அந்தச் செங்குத்தான குழாயுடன்
இன்னொரு குறுக்குக்கழி சிலுவை மாதிரி கட்டப்பட்டிருந்தது. ஆட்கள் அந்தக் குறுக்குக்கழியின் மீது இரண்டுபேர்
ஏறி நின்றுகொண்டிருக்க, கீழே நின்றிருந்தவர்கள் அதைத் தள்ளியபடி மையக்குழாயைச் சுற்றிச்சுற்றி
நடந்தனர். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. நான் அந்தத் திசைலேயே தொடர்ந்து கவனிப்பதைப்
பார்த்ததும் நெடுஞ்செழியன் “பைப் போட்ட பிறகு பாரு, அடிக்க அடிக்க தண்ணி அருவிமாதிரி
கொட்டும்” என்றான்.
பந்து விளையாட்டை வேகமாக
முடித்துக்கொண்டு நாங்கள் அந்த இடத்தை நெருங்கினோம்.
துளையிட்டு எடுக்கப்பட்ட சேறும் மண்ணும் பக்கத்திலேயே குவிக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே
நீளமான புத்தம்புதிய ஆறேழு இரும்புக்குழாய்கள் படுத்தவாக்கில் வைக்கப்பட்டிருந்தன.
”எல்லாக் குழாய்ங்களயும்
பூமிக்குள்ள எறக்கிடுவாங்களா?” என்று எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நெடுஞ்செழியனிடம்
கேட்டேன்.
“துளை போடற வேலை முடிய
முடிய, ஒவ்வொரு குழாயா. பூமிக்குள்ள எறக்கிகிட்டே
போவாங்க. ஆழத்துல தண்ணீர் கிடைக்கிற வரைக்கும் போயிட்டே இருப்பாங்கடா” என்று சொன்னான்
நெடுஞ்செழியன்.
“ஒரு குழாயோடு இன்னொரு
குழாயை எப்படி சேர்ப்பாங்க?” எனக்கு சந்தேகமாக இருந்தது.
“அதோ கப்ளிங்க் வச்சிருக்காங்க
பாரு. அதை வச்சி முடுக்கி ஒன்னா சேர்த்துடுவாங்க” என்று உற்சாகத்தோடு சுட்டிக்காட்டினான்
அவன்.
“இதெல்லாம் ஒனக்கு எப்படி
தெரியும்?”
“எங்க வீட்டுல இதே போலத்தான்
அடி பம்ப் போட்டாங்க. நான் அப்ப பாத்திருக்கேன்” என்று பெருமையோடு சொன்னான்.
ஆட்கள் பேசிக்கொண்டே குறுக்குக்கழியைத்
தள்ளுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அப்போது மிதிவண்டியில் வந்த ஒருவர் வண்டிய
மரத்தடியில் நிறுத்திவிட்டு நெருங்கி வந்தார். ஆட்களிடம் “என்னப்பா, எவ்வளவு ஆழம் போயிருக்குது?” என்று கேட்டபடி
அருகில் சென்று எட்டிப் பார்த்தார்.
”இப்பதான் ரெண்டாவது பைப்
முடிச்சி மூனாவது பைப் வேலை ஆரம்பிச்சிருக்கோம்ண்ணே” என்று வேலை செய்பவர் சொன்னார்.,
“நாளைக்கு முடிஞ்சிடுமா?”
“இதுவரைக்கும் கல்லு ஒன்னும்
கிடைக்கலைண்ணே. எல்லாம் களிமண்ணாத்தான் இருக்குது. இப்படியே நாளைக்கும் இருந்தா, சாயங்காலத்துக்குள்ள பைப் போட்டு கனெக்ஷன்
குடுத்துடலாம்ண்ணே”
“சரி சரி” என்றபடி அவர்
பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்த சேற்றின் அருகில் சென்றார். குனிந்து ஒரு கணம் சேற்றைத்
தொட்டெடுத்து விரல்களுக்கிடையில் வைத்துத் தேய்த்துப் பார்த்தார். பிறகு கையை திருப்தியுடன்
உதறிவிட்டுத் திரும்பினார். மரத்தடியில் கூட்டமாக நின்றிருந்த எங்களை அவர் அப்போதுதான்
பார்த்தார்.
“கூட்டமா நின்னு என்னடா
பாக்கறீங்க பசங்களா?” என்று கேள்வி எழுப்பியபடி எங்கள் பக்கமாக வந்தார்.
நாங்கள் சிரித்துக்கொண்டே
குழைந்து நிறம்மாறி குவிந்திருக்கும் மணற்குழம்பைக் காட்டினோம்.
“ஓரமா நின்னு பாருங்க.
சேத்துல வழுக்கி விழுந்துடாதீங்க”
ஒவ்வொருவராக அருகில் அழைத்து,
பெயர் விவரத்தையும் படிப்பு விவரத்தையும் பள்ளிக்கூட விவரத்தையும் கேட்டார் அவர். வழக்கமாக
வீட்டுக்கு வரும் மாமாக்கள் விசாரிப்பதுபோல அவர் விசாரித்த விதம் பிடித்திருந்தது.
நாங்களும் உற்சாகமாகப் பதில் சொன்னோம்.
“எல்லாருமே ஹைஸ்கூல்ல படிக்கிற
ஆளுங்கதான? என் பையனும் அங்கதான் படிக்கறான். அவனைத் தெரியுமா உங்களுக்கு?”
“அவனும் நானும் ஒரே க்ளாஸ்தான்.
எனக்கு ரொம்ப முக்கியமான ஃப்ரெண்ட்” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு நான் பதில் சொன்னேன்.
“அப்படியா, நல்லது நல்லது.
டெஸ்ட்டுல எல்லாம் நல்ல மார்க் எடுக்கறியா?”
“ம்”
“என்ன ரேங்க்?”
“ஒன்னு, ரெண்டு, மூனுக்குள்ள
எடுப்பேன்”
“அப்படித்தான் இருக்கணும்.
போட்டி போட்டு படிக்கணும். யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது. புரியுதா?”
“ம்”
அவர் ஒரு கணம் நிறுத்தி
என்னைப் பார்த்து அழுத்தம் திருத்தமான குரலில் “என் மகனாவே இருந்தாலும் சரி, விட்டுக்
கொடுக்கவே கூடாது. போட்டி போட்டு ஜெயிக்கணும்”
நான் அதற்கும் “ம்” என்றபடி
தலையசைத்தேன். அந்த எதிர்வினையைப் பார்த்து திருப்தி கொண்டவராக எனக்குப் பக்கத்தில்
நின்றிருந்த ,மனோகரனைப் பார்த்தார். என்னிடம் கேட்ட கேள்விகளையே அவனிடமும் கேட்டார்.
அதற்குப் பிறகு அங்கே நின்றிருந்த ஒவ்வொருவரிடமும் அதே கேள்விகளைக் கேட்டு பதில் சொல்ல
வைத்தார். அவர்கள் சொன்ன ஒவ்வொரு பதிலையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டார்.
”நல்ல ரேங்க்ல பாஸ் பண்ணினா
எதிர்காலம் நல்லா இருக்கும். எதிர்காலத்துல கைத்தொழிலை நம்பி பிரயோஜனம் இல்லை. எப்படியாவது
அரசாங்க வேலையைச் சம்பாதிக்கணும். புரியுதா?”
நாங்கள் தலையசைத்தோம்.
“அரசாங்க வேலையைல சிறந்த
வேலை எது? ஒவ்வொருத்தனா சொல்லுங்க பாப்போம்”
”ஆசிரியர்” என்று கையை
உயர்த்தினான் கஜேந்திரன்.
“டாக்டர்தான் உயர்ந்த வேலை.
உயிரைக் காப்பாத்தறவங்க” என்றான் சுப்பிரமணி
“எஞ்சனீயர். அவுங்கதான்
நாட்டுக்குத் தேவையான அணைக்கட்டு, பாலங்கள் எல்லாம் கட்டிக் கொடுக்கிறாங்க” என்றான்
பரசுராமன்.
“போலீஸ் இன்ஸ்பெக்டர்.
திருடர்கள் பயம் இல்லாம ஊரைக் காப்பாத்தறவங்க அவுங்கதான்” என்றான் மனோகரன்.
“சி.ஐ.டி.ஆபீசர்” என்றான்
நெடுஞ்செழியன்.
“விஞ்ஞானி. இந்த உலகத்துக்குப்
புதுசுபுதுசா அவுங்கதான் கண்டுபிடிச்சி கொடுக்கறாங்க” என்று நான் தயக்கத்தோடு சொன்னேன்.
எல்லாவற்றையும் பொறுமையோடு
கேட்ட பிறகு “நான் ஒன்னு சொல்றேன். கேக்கறீங்களா?” என்று ஆரம்பித்தார் போர்செட்காரர்.
”நீங்க சொல்ற எல்லா வேலைங்களும் நாட்டுக்குத் தேவையான முக்கியமான வேலைகள்தான். ஆனா
ஒரு மாவட்டத்துல இவுங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா கட்டி ஆள்றது யாரு தெரியுமா? கலெக்டர்.
அந்த வேலைக்குத்தான் மதிப்பு அதிகம். கெளரவமும் அதிகம். அதுதான் பெரிய வேலை” என்றார்.
எங்களுக்கு எதுவும் பேசத்
தோன்றவில்லை. ஆச்சரியத்தில் சொல் எழவில்லை.
“நீங்க எல்லாரும் படிச்சி
முடிச்சதும் கலெக்டர் பரீட்சை எழுதி பாசாவணும். புரியுதா?”
உண்மையில் அவருடைய கூற்றின்
முழுப்பொருளும் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு பெரிய வேலையைப்பற்றி சொல்கிறார்
என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்தது. அந்த நேரத்துக்கு “சரி சரி” என்று தலையசைத்தோம்.
”வெரிகுட். அப்படித்தான்
இருக்கணும். நம்மால முடியும்னு நம்பணும். இந்த இடத்துல போர் போட்டா தண்ணி கிடைக்கும்னு
நம்பி வேலையை செய்யறோமில்லையா, அந்த மாதிரிதான் எல்லாத்துலயும் ஒரு நம்பிக்கை இருக்கணும்.
எந்த அளவுக்கு ஆழமா தோண்டிகிட்டே போறமோ, அந்த அளவுக்கு தண்ணி ஊத்து சொரந்துகிட்டே இருக்கும்”
என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
“அது சரி, எந்தத் தெரு
நீங்க?”
“பஞ்சாயத்து போர்டு தெரு.
இங்க விளையாடறதுக்காக வந்தோம்”
“அப்படியா? போரிங் லிஸ்ட்ல
உங்க தெரு பேரும் இருக்குது. பார்த்த ஞாபகம் இருக்குது. பஞ்சாயத்துபோர்டுகாரங்க ஒர்க்
ஆர்டர் குடுத்ததும் வேலையை ஆரம்பிச்சிடுவம்”
அவருடைய பார்வை வேலை செய்பவர்கள்
பக்கம் திரும்பியது. “இன்னைய வேலையை இத்தோடு
நிறுத்திக்கலாம்பா. கைகால கழுவிகிட்டு கெளம்புங்க. காலையில சீக்கிரமாவே வந்து சேருங்க”
என்று சொல்லிக்கொண்டே ஹாக்கர் பக்கமாக நடந்துசென்றார் அவர்.
பூமியில் குழாய் துளையிடுவதைப்
பார்த்ததிலும் போர்செட்காரரிடம் உரையாடிக்கொண்டிருந்ததிலும் நேரம் போனதே தெரியவில்லை.
வீட்டுக்குத் திரும்பும்போது பொழுது சாய்ந்துவிட்டது.
வாசல் திண்ணையில் மண்ணெண்ணெய்
விளக்குகளுடைய சிம்னிகளைத் துடைத்துக்கொண்டிருந்தார் அம்மா. வழக்கமாக நான் செய்யும்
வேலை அது. அதைப் பார்த்த பிறகுதான் என் தாமதம் எனக்கு உறைத்தது. திண்ணையில் தம்பி ஏதோ
மரப்பாச்சிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் தங்கச்சி பாப்பா அழும் சத்தம் கேட்டது.
“பொழுதெல்லாம் விளையாடிகினே
இருந்தா, வீட்டுல் இருக்கற வேலையை யாருடா செய்யறது?”
அம்மாவின் கேள்விக்கு நான்
எந்தப் பதிலும் சொல்லவில்லை. அமைதியாக அவருக்கு
எதிர்ப்புறத்தில் அமர்ந்து துடைக்காமல் இருந்த இன்னொரு சிம்னியை எடுத்தேன்.
“உடு உடு. அதையெல்லாம்
நான் பார்த்துக்கறேன். மொதல்ல கெணத்தங்கரைக்கு போய் நாலஞ்சி தவலை தண்ணி எடுத்துவா.
விளக்கு வச்சிட்டா அந்த ஆயா தண்ணி எடுக்க உடாது”
நான் உடனே உள்ளே சென்று
பித்தளைத்தவலையை எடுத்துக்கொண்டு கிணற்றங்கரைக்கு அவசரமாகச் சென்றேன். நல்ல வேளையாக
அந்த நேரத்தில் கிணற்றங்கரையில் யாரும் இல்லை. அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
இராட்டினத்தோடு இணைக்கப்பட்டிருந்த
சின்னக் குடத்தை கிணற்றுக்குள் இறக்கி வேகவேகமாக தண்ணீர் இழுத்து நான் எடுத்துச் சென்ற
தவலைக்குள் ஊற்றினேன். ராட்டினத்தில் கயிறு இழுபடும்போது எழுந்த கிறீச் கிறீச் சத்தத்தைக்
கேட்டு ஆயா வந்துவிடுவாரோ என்னமோ என நெஞ்சு திக்திக் என்று அடித்துக்கொண்டது. இரண்டு
குடங்கள் தண்ணீர் ஊற்றிய பிறகுதான் தவலை நிறைந்தது. அதை எடுத்து வந்து வீட்டுத் தோட்டத்தில்
இருந்த தொட்டிக்குள் ஊற்றினேன்.
மூன்று நடை வரைக்கும் ஒரு
பிரச்சினையும் இல்லை. நான்காவது நடைக்கு கிணற்றை நெருங்கியபோது முருங்கைமரத்துக்குப் பக்கத்தில் ஆயா நின்றிருப்பதைப்
பார்த்தேன். அக்கணமே திகைத்து மூச்சடைக்க நின்றுவிட்டேன். கால்கள் அசையவில்லை. அவரைக்
கவனிக்காதவன் போல ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தபடி கிணற்றை நோக்கி மெதுவாக நடக்கத்
தொடங்கினேன். அப்போது “டேய், இங்க வாடா” என்று அதட்டிய ஆயாவின் குரல் என்னைத் தடுத்து
நிறுத்தியது. நான் குடத்தோடு அவர் முன்னால் சென்று நின்றேன்.
”இப்ப மணி என்னாவுது தெரியுமா?”
“தெரியாது ஆயா”
“ஆறு மணி சங்கு ஊதிச்சே,
அதுவாவது தெரியுமா?”
“தெரியாது ஆயா. நான் ஸ்டேஷன்
பக்கம் விளையாட போயிட்டேன். இப்பதான் வந்தேன்”
“எத்தனை குடம் வேணும்ன்னாலும்
பொழுது சாயறதுக்குள்ள வந்து எடுத்துட்டு போ. பொழுது சாஞ்ச பிறகு தண்ணி எடுக்க வராதேன்னு
ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கேனே, அதாவது தெரியுமா?”
பதில் சொல்லாமல் நான் ஆயாவின்
முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தேன். என்னை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து
பேசிக்கொண்டே இருந்தார். நரைத்த தலைமுடியைச் சுருட்டி கொண்டை போட்டிருந்தார். கன்னத்திலும்
கழுத்திலும் தோல் சுருங்கியிருந்தது.
”இந்த ஒரு குடம் மட்டும்
எடுத்துக்கறேன் ஆயா. இனிமேல வரலை” என்று கெஞ்சும் குரலில் ஆயாவிடம் சொன்னேன். ஒருகணம்
என்னை உற்றுப் பார்த்த ஆயா, மறுகணம் ”இன்னொரு தரம், பொழுது சாயற நேரத்துல தண்ணி எடுக்க
வந்தா, ஒன் குடத்தை புடுங்கி வச்சிகினு வெறுங்கையோடு அனுப்பிடுவேன், ஞாபகத்துல இருக்கட்டும்”
என்று கறாரான குரலில் சொல்லிவிட்டு வாசல் பக்கம் சென்று உட்கார்ந்துகொண்டார். நான்
வேகமாக கிணற்று மேடைக்குத் திரும்பி தவலையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வீட்டுக்குச்
சென்றேன்.
ஆயா வீட்டையொட்டி இருக்கும்
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முன்பாக, பொதுமருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுக்கிணற்றைத்தான் எல்லோரும் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். அங்கு தண்ணீர் எடுத்துவர நேரம் காலமெல்லாம் தேவையில்லை.
எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். தண்ணீர் எடுத்துக்கொண்டு வரலாம்.
ஒதிய மரங்களும் புங்க மரங்களும்
சூழ்ந்த அந்தக் கிணற்றைப் பார்ப்பதற்கு ஒரு சோலையைப் பார்ப்பதுபோல இருக்கும். மரத்தின்
இலைகள் கிணற்றுக்குள் விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக பாசி படியத் தொடங்கிவிட்டது. பாதுகாப்புக்காக
கிணற்றை மூடுவதற்காக அடிக்கப்பட்டிருந்த கம்பி
வலையின் மீது உட்கார்ந்து செல்லும் காக்கை, குருவிகளின் எச்சமனைத்தும் கிணற்றிலேயே
விழுந்தது. அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. பிறகு மருத்துவமனைக்கு வருபவர்களும்
அக்கிணற்றுக்குள் குப்பைகளைப் போடத் தொடங்கிவிட்டனர். சில நாட்களுக்குள்ளேயே அந்தக் கிணற்றின் தண்ணீர்
பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிட்டது. அதற்குப் பிறகுதான் நாங்கள் தண்ணீருக்கு வேறு
இடம் தேடத் தொடங்கினோம்.
எங்கள் வீட்டுக்கு எதிர்வரிசையில்
நாலைந்து வீடுகள் தள்ளி சோடாக்கடையும் வீடும் ஒருங்கிணைந்த நாராயணசாமி தாத்தா வீட்டில்
ஒரு அடி பம்ப் இருந்தது. இன்னும் சில வீடுகள் தள்ளி சைக்கிள் கடைக்காரர் வீட்டிலும்
ஒரு அடி பம்ப் இருந்தது. பொதுக்கிணற்றைக் கைவிட்ட பிறகு, சிறிதுகாலம் அந்த பம்ப்கள்
எங்களைப்போன்ற குடும்பங்களின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்தன.
ஆனால் ஒவ்வொரு முறையும்
பெண்களும் பெரியவர்களும் குழந்தைகளும் நடமாடும் கூடத்தையும் அறைகளையும் கடந்து வீட்டுக்குப்
பின்பக்கம் உள்ள பம்ப்பை அடைவது அவ்வளவு எளிதாக இல்லை. எப்போதாவது குடம் தளும்பி தரையில்
ஒன்றிரண்டு துளிகள் தண்ணீர் சிந்திவிடும். அதைத் தவிர்க்கமுடிந்ததில்லை. உடனே யாராவது ஒருவர் ”பார்த்து எடுத்தும் போவ தெரியாதா?
தரையை ஈரமாக்கிகிட்டே போனா, தொடைக்கறதுக்கு நாங்க என்ன ஆளா வச்சிருக்கம்?” என்று முணுமுணுக்கத்
தொடங்கினார்கள். அந்தக் குரல் நிற்கவைத்து கன்னத்தில் அடிப்பதுபோல இருந்தது. அதற்கு
அஞ்சியே அங்கு செல்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அதற்குப் பிறகுதான்
ஆயா வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கத் தொடங்கினேன்.
தவலையை இறக்கிவைத்துவிட்டு
கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டு கொடியில் தொங்கிய துண்டை இழுத்துத் துடைத்தபடியே திண்ணையில்
உட்கார்ந்தேன். அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்த அம்மா “ஏன்டா அதுக்குள்ள உக்காந்துட்ட?
இன்னும் ரெண்டு தவலை எடுத்தாரக்கூடாதா?” என்று கேட்டார்.
“பொழுது சாஞ்ச நேரம் பொழுது
சாஞ்ச நேரம்னு அந்த ஆயா தொணதொணன்னு சத்தம் போடுதும்மா. நாளைக்கு காலையில சீக்கிரமாவே
போய் எடுத்தாரேம்மா. இப்ப வேணாம்”
ஒரு கணம் அம்மா எந்தப்
பதிலும் சொல்லவில்லை. பிறகு “இந்தத் துன்பத்துக்கு ஒரு முடிவுகாலம் என்னைக்கு வருமோ
தெரியலை. எல்லாத் தெருவுலயும் அடிக்கிற பம்ப் இருக்குது. நம்ம தெருவுக்குத்தான் இன்னும்
விடிவுகாலம் வரலை” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே மீண்டும் அடுப்பங்கரைக்குள் சென்றார்.
தற்செயலாக அப்போது போர்செட்காரர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன.
“நம்ம தெருவுலயும் சீக்கிரமா பம்ப் வந்துடும்மா” என்றேன். அதைக் கேட்டதும் அம்மா என்
பக்கமாகத் திரும்பினார்.
”அது எப்படி உனக்குத் தெரியும்?”
ரயில்வே குடியிருப்புக்கு
அருகில் போர் போடும் வேலை நடைபெறுவதையும் போர்செட்காரர் என்னிடம் சொன்னதையும் நான்
அம்மாவிடம் பெருமையாகச் சொன்னேன்.
“எப்படியாவது வந்தா சரிதான்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அந்த ஆயா பேச்சை கேட்டுக்கறது?” என்று சொல்லிவிட்டு
அம்மா நடந்தார்.
போர்செட்காரர் சொன்னதுபோலவே
ஒரு மாத இடைவெளியில் எங்கள் தெருவில் அடி பம்ப் நிறுவும் வேலை தொடங்கிவிட்டது. தெரு
தொடங்கும் இடத்தில் பிள்ளையார் கோவிலை ஒட்டி ஒரு பைப் என்றும் தெரு முடியும் இடத்தில்
இன்னொரு பைப் என்றும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பிள்ளையார் கோவிலை ஒட்டிய
வேலையை முதலில் தொடங்கினார்கள். அந்த இடம்தான் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது.
இரவானாலும் சரி, பகலானாலும் சரி, தேவைப்படும் நேரத்தில் தவலையை எடுத்துச் சென்று தண்ணீர்
பிடித்துக்கொண்டு வரலாம் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.
அதற்கு முதல்நாள்தான் பள்ளியில்
அரையாண்டுத்தேர்வு முடிவடைந்து ஒரு வாரம் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுப்புக்காலத்தில்
அடி பம்ப் வேலை தொடங்கியது எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சியைக் கொடுத்தது. வேலையின் ஒவ்வொரு கட்டத்தையும் நேருக்கு நேர் நின்று பார்ப்பதற்குக்
கிடைத்த பொன்னான வாய்ப்பாக அதை நான் எடுத்துக்கொண்டேன்.
கோவில் வாசலிலும் பம்ப்புக்காகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திலும் அடுத்தடுத்து கற்பூரம் வைத்து படைத்துவிட்டு பூமியில்
துளையிடும் வேலையைத் தொடங்கினர் தொழிலாளர்கள். போர்செட் காரர் பக்கத்திலேயே நின்று
வழிகாட்டிக்கொண்டிருந்தார்.
கடப்பாறையைப்போல செங்குத்தாக
வைக்கப்பட்ட ஹாக்கர் பூமிக்குள் கொஞ்சம்கொஞ்சமாக இறங்கத் தொடங்கியது. துளையிடும் பாதையிலிருந்து
விலகிவிடாமல் இரண்டடி ஆழத்துக்கு இறங்கும் வகையில் பக்கத்திலேயே நின்றிருந்தார் போர்செட்காரர்.
பிறகு அங்கிருந்து நடந்து சென்று கோவில் படிக்கட்டில் உட்கார்ந்தார்.
என்னைப்போலவே ஏராளமான சிறுவர்களும்
சிறுமிகளும் துளையிடும் எந்திரத்தைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர்.
அவர் அந்தக் கூட்டத்தில் மிக எளிதாக என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். “போன மாசம்
க்வார்ட்டர்ஸ்ல பைப் எறக்கன அன்னைக்கு பார்த்த பையன்தான நீ?” என்று கேட்டார். நான்
“ஆமாம்” என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். “இங்க வா” என்று என்னை அழைத்தார். நான் பக்கத்தில் சென்று நின்றேன்.
“பரீட்சையெல்லாம் நல்லா
எழுதுனியா?” என்று கேட்டார்.
“ம்” என்று தலையசைத்தேன்.
“எங்க இருக்குது உங்க வீடு?”
“அதோ, அங்க முருங்கை மரம்
நிக்குது பாருங்க. அங்கேர்ந்து நாலாவது வீடு”
நான் கையை நீட்டி சுட்டிக்
காட்டினேன். அவர் ஒரு கணம் அந்தத் திசையில் பார்த்துவிட்டு “ஓ, அதுவா?” என்று தலையை
அசைத்துக்கொண்டார்.
அவர் என்னிடம் பேசுவதைப்
பெருமையாக நினைத்து அக்கம்பக்கத்தில் நின்றிருந்த
சிறுவர்கள் அனைவரும் நெருங்கி வந்து நின்றனர். உடனே போர்செட்காரர் என்னைவிட்டு எனக்கு
அருகில் நின்ற பையனை விரல் நீட்டி அருகில் வருமாறு அழைத்தார். பச்சை வண்ணச் சட்டை போட்டிருந்த
அந்தப் பையன் “நானா?” என்பதுபோல கைவிரலை நெஞ்சில் வைத்துக்கொண்டு கேட்டான். “நீதான்
தம்பி, இங்க வா” என்றார் போர்செட்காரர்.
அவன் அவருக்கு அருகில்
சென்றான். அவர் வழக்கம்போல பெயரிலிருந்து தொடங்கி தேர்வில் அவன் எடுக்கும் மதிப்பெண்
வரைக்குமான கேள்விகளை ஒன்றையடுத்து ஒன்றாகக் கேட்டார். அந்தச் சிறுவன் உற்சாகத்தோடு
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். கடைசியாக “படிச்சி என்ன வேலைக்குப் போகப்
போறே?” என்று வழக்கமான கேள்விக்கு வந்து நின்றார்.
அவன் கொஞ்சம் கூட யோசிக்காமல்
“ஸ்டேஷன் மாஸ்டர்” என்று உற்சாகத்தோடு பதில் சொன்னான். அவர் ஆச்சரியத்தோடு புருவங்களை
உயர்த்தி ஏன் என்பதுபோல அவனைப் பார்த்தார். அவன் தொடர்ந்து ”எவ்ளோ நீளமான ரயிலானாலும்
சரி, ஒரு கொடியை அசைச்சி ஓட வைக்கலாம். இன்னொரு கொடியை அசைச்சி நிறுத்தவைக்கலாம். ஒரொரு
ரயிலும் பொட்டிப்பாம்பா அடங்கி ஓடுறத பார்க்கறதுக்கே ஆனந்தமா இருக்கும்” என்று மிடுக்கோடு
விவரித்தான்.
அந்தக் கேள்வி பதில் சுற்றியிருந்த
எல்லாச் சிறுவர்களுக்கும் பேசுவதற்கான தூண்டுதலைக் கொடுத்தது. யாரிடமும் தனியாகக் கேட்கவேண்டிய
அவசியமே இல்லாமல் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து “பைலட்” “நேவிகேட்டர்” ”ஓட்டல் மேனேஜர்”
”தாசில்தார்” “ட்ராயிங் மாஸ்டர்” என்று ஆளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். போர்செட்காரர்
எல்லா பதில்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
“நான் ஒரு வேலையைப் பத்தி
சொல்றேன். அது உங்களுக்குப் புடிக்குதா பாருங்க. புடிச்சா, அந்த வேலைக்குப் போவணும்ன்னு
மனசுக்குள்ள நெனச்சிக்குங்க, சரியா?”
சிறுவர்கள் அனைவரும் உற்சாகமாக
“ம்” என்று தலையசைத்தனர்.
கலெக்டர் பதவியின் பெருமையைப்பற்றி
அவர்களிடம் ஒவ்வொரு அம்சமாக எடுத்துரைக்கத் தொடங்கினார் போர்செட்காரர். கடைசியில்
”இப்ப சொல்லுங்க, கலெக்டர் வேலை பெரிய வேலையா, ஸ்டேஷன் மாஸ்டர், பைலட் மாதிரியான வேலை
பெரிய வேலையா?” என்று கேட்டார். சிறுவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் “கலெக்டர் வேலைதான்
பெரிய வேலை” என்று உற்சாகத்தோடு பதில் சொன்னார்கள்.
ஒருகணம் கழித்து தாடையைச்
சொரிந்தபடி “உண்மையாவே சொல்றீங்களா, எனக்காக சொல்றீங்களாடா?” என்று கேட்டார் போர்செட்காரர்.
“உண்மையாதான் சொல்றோம்”
என்று எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
”சரி, கலெக்டர் வேலை புடிச்சவங்க
எல்லாரும் கையைத் தூக்குங்க” என்று சொன்னார்.
எல்லாச் சிறுவர்களும் புன்னகையோடு
கையை உயர்த்தினார்கள்.
“ஆகா, இது நல்லா இருக்குதே.
எல்லோருக்குமே கலெக்டராகணும்னு ஆசை வந்துடிச்சா?”
“ம்”
“நீங்க எல்லோரும் கலெக்டராயிட்டா,
நம்ம ஊருக்கே பெரிய பெருமை. இந்த நாடே நம்ம ஊரைப் பத்தி பேசும். வளவனூருங்கற பேரு மாறி
கலெக்டரூருன்னு மாறிடும்”
“ஆமாம்”
“கலெக்டராகணும்னு மனசுக்குள்ள
கனவு கண்டா மட்டும் போதாது. புரியுதா? அதுக்குத் தகுந்த மாதிரி கஷ்டப்பட்டு படிக்கணும்.
ஓய்வு கிடைக்கிற நேரத்துல எல்லாம் படிச்சிகிட்டே இருக்கணும். அப்பதான் கலெக்டர் பரீட்சயை
எழுதமுடியும். புரியுதா?”
எல்லோரும் உற்சாகமாக ஒருங்கிணைந்த
குரலில் “ம்” என்றார்கள்.
அப்போது ஆழப்படுத்துவதற்காக
ஹாக்கரைச் சுற்றிக்கொண்டிருந்த ஒருவர் “அண்ணே, நீங்க சொல்றதுல எனக்கு ஒரு சந்தேகம்ண்ணே.
கேக்கலாமாண்ணே” என்று மிகவும் பணிவோடு தொடங்கினார்.
“தாராளமா கேளுடா. பதில்
சொல்லத் தெரிஞ்சா சொல்றேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்றேன்” என்றார் போர்செட்காரர்.
“பாக்கிற பசங்ககிட்ட எல்லாம்
கலெக்டர் பரீட்சை எழுது, கலெக்டர் பரீட்சை எழுதுன்னு சொல்றத நானும் ரொம்ப நாளா கேட்டுகிட்டுதான்
இருக்கேன். உங்களுக்கு நாலு பசங்க இருக்காங்க. அவுங்ககிட்டயும் கலெக்டர் பரீட்சை எழுது
கலெக்டர் பரீட்சை எழுதுன்னு சொல்வீங்களாண்ணே”
போர்செட்காரர் திகைத்ததுபோல
ஒருகணம் அந்த ஊழியரைப் பார்த்தார். “ஏன்டா, என்னைப் பார்த்தா ஊருக்கு மட்டும் உபதேசம்
செஞ்சிட்டு போற ஆளு மாதிரி தெரியுதா? ஒருநாள் வீட்டுக்கு வந்து அவனுங்ககிட்ட கேட்டுப்
பாரு. எந்த அளவுக்கு அவனுங்கள கலெக்டர் பைத்தியமா ஆக்கி வச்சிருக்கேன்னு ஒனக்கே தெரியும்”
என்றார்.
“அண்ணே, ஒங்கள பத்தி தெரியாதாண்ணே.
சும்மா ஒரு பேச்சுக்குத்தாண்ணே கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்கண்ணே”
“ஆண்டவன் எனக்கு நாலு ஆம்பள
பசங்களக் கொடுத்திருக்கான். நாலு பேரும் கலெக்டருதான்டா. இன்னைக்கு சொல்றேன், எழுதி
வச்சிக்கோ. போர்செட்காரர் ஊடுங்கற அடையாளம் என் தலைமுறையோடு முடிஞ்சிடணும். அடுத்த
தலைமுறை கலெக்டர் ஊடுங்கற அடையாளத்தோடு உருவாகி வரணும்”
”வரும்ண்ணே. வரும். அந்த
புள்ளையாரு கருணையில அந்தப் பேரு கெடைக்கும்ண்ணே” என்றார் அந்த ஊழியர். தொடர்ந்து பேச்சை
திசைதிருப்பும் விதமாக ”கலெக்டர் வேலை அந்த
அளவுக்கு அதிகாரமுள்ள வேலையாண்ணே?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
”என்னடா அப்படி கேட்டுட்ட?
ஒரு கலெக்டருக்கு உள்ள அதிகாரம் ஒரு மாவட்டத்துல வேற யாருக்கும் கிடையாது, தெரியுமா?”
“உண்மையாவாண்ணே சொல்றீங்க?”
என்று அந்த ஊழியர் நம்பமுடியாமல் கேட்டார்.
“போன வாரம் விழுப்புரத்துல
நடந்த ஒரு நிகழ்ச்சி பத்தி பேப்பர்ல பக்கம்பக்கமா படத்தோடு போட்டாங்களே, படிக்கலையா?”
“என்ன செய்திண்ணே? அதையெல்லாம்
படிக்க எங்கண்ணே நேரம் இருக்குது. காலையில எழுந்து நீராகாரம் குடிச்சிட்டு நேரா வேலைக்கு
ஓடியாந்துடறோம். அதுக்கப்புறம் எங்க போய்ண்ணே பேப்பர தேடிப் படிக்கிறது?”
“விழுப்புரத்துல ஒரு பணக்காரப்புள்ளி
அந்தக் காலத்துல ஒரு ஜவுளிக்கடையை ஆரம்பிச்சான்.
அவனுக்குச் சொந்தமான இடத்தோடு சேர்த்து பக்கத்துல இருந்த அரசாங்கத்துக்குச் சொந்தமான
இடத்தயும் ஆக்கிரமிச்சி கட்டிகிட்டான். இவ்ளோ காலமா அதை யாருமே கண்டுபுடிக்கலை. கண்டுபுடிச்சிருந்தாலும்
ஆக்ஷன் எதுவும் எடுக்கலை. புதுசா வந்த கலெக்டர் அதைக் கண்டுபிடிச்சிட்டாரு. முதல்ல வாயால சொல்லி வார்னிங் கொடுத்துப் பார்த்தாரு. அதுக்கப்புறம்
சட்டப்படி நோட்டீஸ் குடுத்துப் பார்த்தாரு. ஜவுளிக்கடைக்காரரு எதுக்கும் மசியலை. அரசியல்
கட்சி காப்பாத்தும்னு அலட்சியமா இருந்துட்டாரு. கலெக்டர் என்ன செஞ்சாரு தெரியுமா? போன
வெள்ளிக்கிழமை சாயங்காலமா போலீஸ் பாதுகாப்போடு அந்த ஜவுளிக்கடைக்குப் போய் ஆளுங்கள
வெளியேறச் சொல்லிட்டு ஆக்கிரமிச்சி கட்டியிருந்த முன்பக்கம் எல்லாத்தயும் இடிச்சி தள்ள
வச்சிட்டாரு. யாராலயும் ஒன்னும் செய்ய முடியலை. இப்ப தேங்கா மூடி மாதிரி கடையே தெறந்தமேனிக்குக்
கெடக்குது. அதான் ஒரு கலெக்டருக்கு இருக்கிற அதிகாரம்”
”அதெல்லாம் சரிதாண்ணே.
எல்லாருமே கலெக்டராயிட்டா, இருக்கிற மத்த வேலைங்களையெல்லாம் யாருண்ணே பாக்கறது?”
“கலெக்டர் பரீட்சைல பாஸாவறது
நீ நினைக்கறது மாதிரி சுலபமான வேலை இல்லைடா தம்பி. ஒரு லட்சம் பேரு எழுதுவாங்க. அதுல
பத்துல ஒரு பங்கு ஆளுங்கதான் பாஸாவானுங்க. அதுல முக்கால்வாசி பேர இண்டர்வியுங்கற பேருல
கழிச்சி கட்டிடுவானுங்க. கடைசியில ஆயிரம் பேரோ ஐநூறு பேரோதான் மிஞ்சுவானுங்க. அவனுங்களுக்குத்தான்
கலெக்டர் வேலை கெடைக்கும். புரியுதா?”
“எல்லாம் சரிதாண்ணே, எல்லாரும்
கலெக்டரு உத்தியோகத்துக்குக் கெளம்பிட்டா, இந்த சின்னச்சின்ன கைத்தொழில் வேலைகளை யாருண்ணே
பாக்கிறது?”
“இந்தக் கைத்தொழில் இன்னும்
எவ்ளோ காலத்துக்கு ஓடும்னு நெனைக்கற நீ? காலம் முழுக்க இது நெலச்சி நின்னுடும்னு நெனைக்கறியா?
அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இன்னும் அஞ்சி வருஷம். மிஞ்சிப் போனா பத்து வருஷம்.
அவ்ளோதான்.”
“என்னண்ணே அப்படி சொல்லிட்டீங்க?”
என்று அதிர்ச்சியோடு கேட்டார் அவர்.
“நான் விளையாட்டுக்கு சொல்லலை.
உண்மையிலேயே அவ்ளோதான். அதுக்குள்ள காலம் மாறிடும். வேலை செய்யற முறை மாறிடும்”
“எங்கள பயமுறுத்தறதுக்காக
சொல்றீங்களாண்ணே? நம்பவே முடியலையே”
“மத்த வேலைங்களை விட்டுத்தள்ளு.
நம்ம வேலையையே எடுத்துக்கோ. இன்னைக்கு ஒரு போர் போடறதுக்கு இத்தனை பேரு வேலை செய்யறம்.
எல்லா ஊருலயும் இப்படி இருப்பாங்கன்னு நெனைக்கறியா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
ஒவ்வொரு ஊருலயும் ஒன்னோ ரெண்டோ வாட்டர் டேங்க்க கட்டற வசதி உண்டாயிடுச்சின்னா, நம்ம
கதி அதோகதிதான். ஒரே ஒரு போர் போதும். மோட்டார போட்டு டேங்க்ல தண்ணி ஏத்திட்டா, குழாய் வழியா வீட்டுக்கு வீடு தானா போய் சேர்ந்துரும்.
அதுக்கப்புறம் போர்செட்டுக்கும் வேலை இல்லை. அடிபம்ப்புக்கும் வேலை இல்லை. புடுங்கி
எடைக்கு எடை பேரீச்சம்பழத்துக்கு போட வேண்டிதுதான்”
கேள்வி கேட்ட ஊழியர் பேசுவதற்கு
எதுவும் தோன்றாததால் அமைதியாக போர்செட்காரரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
“பயப்படற அளவுக்கு நம்ம
வேலை சுத்தமா அழிஞ்சி போவாது. ஆனா பத்து இருபது பேரு வேலை செஞ்ச இடத்துல ரெண்டுமூனு
பேரே போதும்ங்கற மாதிரி மாறிடும்.”
“அது எப்படிண்ணே?”
“அது அப்படித்தாம்பா. எல்லாத்தயும்
மிஷின் பாத்துக்கும்”
“ஓ”
“இப்ப சொல்லு, கைத்தொழிலை
எத்தனை நாளுக்கு நம்பிட்டே இருக்கறது?”
”என்னத்த சொல்றதுண்ணே.
எல்லாத்தயும்தான் நீங்க புட்டுப்புட்டு வச்சிட்டீங்களே” என்று பெருமூச்சுவிட்டார் அந்த
ஊழியர். நீண்ட நேரத்துக்கு எந்தப் பதிலும்
சொல்லவில்லை. ஏதோ யோசனையில் மூழ்கியபடியே வேலையைச் செய்யத் தொடங்கினார்.
“நம்ம தொழிலுக்கு மட்டுமில்லைடா,
எல்லாத் தொழிலுக்கும் இந்த நிலைமைதான் வரும். எல்லாத்துக்கும் மிஷினுங்க வந்துரும்”
போர்செட்காரர் சொன்னதுக்கு
யாரும் பதில் சொல்லவில்லை. மெளனத்தோடு குழாயைச்
சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரே ஒரு ஊழியர் மட்டும் போர்செட்காரரின்
பக்கம் திரும்பி “நீங்க சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குதுண்ணே. வேற ஏதாவது பெரிய
வேலைங்களை பார்த்து போவறதுதான் எதிர்காலத்துக்கு நல்லது” என்றார்.
பூமிக்குள் குழாய் இறங்கும்போது
வெளியேறும் சேற்றுக்குழம்பை ஒரு பக்கமாக ஒதுக்கியபடி இருந்தார் ஒரு ஊழியர். அவர் எந்தப்
பேச்சிலும் கலந்துகொள்ளவில்லை. அமைதியாக எங்கோ கவனித்தபடி இருந்தார்.
மதிய உணவு நேரம் நெருங்கிவிட்டதை
அறிவிக்கும் விதமாக நண்பகல் ஒரு மணிக்கு சங்கு ஊதியது. சாப்பிடுவதற்காக நான் வீட்டுக்குப்
புறப்பட்டேன். பத்தே பத்து நிமிஷம்தான். சாப்பிட்டதும் மீண்டும் போர் போடும் வேலையை
வேடிக்கை பார்க்கத் திரும்பிவிட்டேன். நண்பர்களும் வந்துவிட்டார்கள்.
ஊழியர்கள் அனைவரும் அப்போதுதான்
சாப்பிடுவதற்காக கோவில் திண்ணையில் வட்டமாக உட்கார்ந்திருந்தனர். போர்செட்காரரைக் காணவில்லை.
அவருடைய மிதிவண்டியையும் காணவில்லை.
வீட்டுக்குத் திரும்பிச்
செல்ல மனமில்லாமல் நாங்கள் கோவில் மதில் ஓரமாக அமர்ந்து சினிமாக்கதை பேசத் தொடங்கினோம்.
ஒருவர் மாற்றி ஒருவரென பல சினிமாக்களின் கதைகளை ஒவ்வொருவராக சொல்லி முடித்தனர். மாலை
பொழுது கவியும் நேரத்தில் ஊழியர்கள் வேலையை முடித்துக்கொண்டுக் புறப்படும் வரைக்கும்
அங்கேயே உட்கார்ந்து கதை பேசியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
நான்காவது நாள் மதிய உணவு
வேளை நெருங்கிய நேரத்தில் “அண்ணே, இங்க வந்து பாருங்க” என்று உள்ளே இறக்கிய குழாய்
வெளியேற்றிய சேற்றை கையிலெடுத்துக் காட்டினார். சேற்றுக்குழம்பு குறைவாகவும் நீர்த்தன்மை
மிகுதியாகவும் இருந்தது. தொட்டுப் பார்த்த போர்செட்காரர் கோவில் கோபுரத்தை அண்ணாந்து
பார்த்து ஒருகணம் கண்மூடி வணங்கினார். “தண்ணிதான்டா. இன்னும் ரெண்டு மூனு அடி கீழ எறக்கு.
அதுக்கப்புறம்தான் உறுதியா தெரியும்” என்றார். நாங்களும் அந்தச் சேற்றை கையால் தொட்டு
உருட்டி உருட்டிப் பார்த்தோம். சந்தனம் குழைவதுபோல அது கைமுழுக்க குழைந்து பரவியது.
அடுத்து ஒரு மணி நேரத்துக்குப்
பிறகு, அவர்கள் ஆழத்திலிருந்து எடுத்து ஊற்றிய சேற்றுக்குழம்பில் சேறு மிகமிகக் குறைவாகவே
இருந்தது. உள்ளே செல்லும் துளையிடும் குழாய் வெளியே வரும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து
வடியும் நீரில் சேற்றின் நிறமும் மணமும் குறைந்தபடியே வந்து ஒரு கட்டத்தில் வெறும்
தண்ணீராகவே வடிந்தது. ”அண்ணே, இங்க வந்து பாருங்கண்ணே. தண்ணி மட்டம் வந்துட்டுதுன்னு
நெனைக்கறேன்” என்று சத்தமிட்டார் ஒரு ஊழியர்.
போர்செட்காரர் நெருங்கிச்
சென்று வடியும் நீரை உள்ளங்கையில் வாங்கிப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது.
“இன்னும் ரெண்டு எறக்கு
எறக்கிட்டு எடுடா, பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு போர்செட்காரர் குழாய்க்குப் பக்கத்திலேயே
நின்றார். அவர் அணிந்திருந்த சட்டையில் சேறும் தண்ணீரும் கலந்த துளிகள் சிதறி நனைந்தது.
அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. வெளியே வரும் குழாயைப் பார்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக
இருந்தார்.
குழாயிலிருந்து வடிந்த
நீர் அந்த இடத்தைச் சுற்றித் தேங்கியது. குழாயைச் சுற்றியிருந்த ஊழியர்கள் மிகவும்
இயல்பாக குழாயிலிருந்து வடிந்த நீரைப் பிடித்து முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தனர்.
ஒருவர் மீது ஒருவர் அந்தத் தண்ணீரைப் பிடித்து விசிறியடித்துக் கொண்டனர். போர்செட்காரரும்
நின்ற இடத்திலிருந்து குழாயை நோக்கி வந்து ஒரு கை நீரைப் பிடித்து முகர்ந்து பார்த்துவிட்டு
ஒரு வாய் பருகிவிட்டு புன்னகைத்தார். அதைப் பார்த்ததும் நாங்களும் முன்னேறி கைநீட்டி
குழாயின் வாய்வழியே விழுந்த தண்ணீரை வாங்கி வாங்கி முகத்திலும் கழுத்திலும் அடித்துக்கொண்டோம்.
பிறகு ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினோம். எங்கள் மேல்சட்டையும் கால்சட்டையும் குளித்ததுபோல
தெப்பமாக நனைந்துவிட்டன. குழாயின் கையை அழுத்த அழுத்த விசையோடு வெளிப்படும் தண்ணீரை
நாங்கள் ஓர் அதிசயத்தைப் பார்ப்பதுபோலவே பார்த்தோம்.
திடீரென அம்மாவின் நினைவு
வந்தது. ஒரு கை நிறைய தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்குச் சென்றேன்.
முறத்தில் கேழ்வரகை வைத்துக்கொண்டு புடைத்துக்கொண்டிருந்தார் அம்மா. “இங்க பாரும்மா
தண்ணி” என்றபடி அம்மாவிடம் பரவசத்தோடு கையை நீட்டினேன்.
“கோவில் பக்கத்துல போட்ட
குழாய்ல தண்ணி வந்துடுச்சிம்மா. இதான் முதல் தண்ணி. குடிச்சி பாரும்மா. தேங்கா தண்ணி
மாதிரி இருக்குது” என்றேன். அம்மா உடனே குனிந்து என் கையிலிருந்த தண்ணீரில் ஒருவாய்
பருகினார். அக்கணமே அவர் கண்களில் ஒரு வெளிச்சம் மின்னி மறைந்தது. பிறகு திருப்தியுடன்
“ஊத்துத்தண்ணி மாதிரி ருசியா இருக்குது” என்று என்னைப் பார்த்து தலையசைத்தார். அடுத்த
கணமே கையை உதறிவிட்டு சட்டையிலேயே துடைத்தபடி குழாய் போடும் இடத்துக்கு ஓடினேன்.