Home

Sunday, 3 December 2023

முடிவு - சிறுகதை

 ஒரு கோழையைப் போல ஊரைவிட்டுப் போனவன் மீண்டும் திரும்பியிருக்கிறேன். நேற்றுப் போல்தான் நினைக்கத் தோன்றுகிறது. எட்டு வருஷங்கள் பறந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் அம்மாதான் காரணம் என்று நான் சொல்ல நினைக்கும் ஒரு காரணமே போதும், இன்னும் நான் கோழையாய்த்தான் இருக்கிறேன் என்பதற்கு. காலம் எதையுமே எனக்குள் மாற்றிவிடவில்லை.

இடம் நிறைய மாறிவிட்டது. மூன்று மொழிகளிலும் வளவனூர் என்று எழுதிய பலகை மட்டும் மூலைக்கொன்றாக நிற்கிறது. ரயில்வே ஸ்டேஷன் என்று சொல்லத்தான் மற்ற அடையாளங்கள் எதுவுமே இன்று இல்லை. டிக்கட்டுகள் வாங்க வரிசையாய் வரும்பொருட்டு கட்டிய சுவர் குட்டிச்சுவராகி கழுதை மேய்கிறது. கட்டிடம் சரிந்து கிடக்கிறது. குதிரை வண்டிகளும் பெட்டி வண்டிகளும் ஆள்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு இளைப்பாறுகிற இடம் புல்வெளியாக மாறிப் பரந்திருக்க பசுக்கள் மேய்கின்றன. இரண்டு ஆலமரங்களும் நாவல் மரமும் புளிய மரங்களுமாய் சுற்றுவட்டாரம் கொண்டிருந்த கம்பீரம் மட்டும் குறையவில்லை.

இன்றும்கூட பகல்வேளையில் அந்த இடத்தில் கிரிக்கெட் ஆட்டம் தொடர்வது ஆச்சரியமாய் இருக்கிறது. முற்றிலும் புதிய முகங்கள்.  யாரோ அந்நியன் போல என்னைப் பார்த்தார்கள். எனக்கும் நிற்கப் பிடிக்கவில்லை. யாராவது உற்று உற்றுப் பார்க்கத் தொடங்கினாலே ஒரு விதமான கசப்புணர்வு நெஞ்சை அடைக்கிறது. அன்றும் ஒரு கூட்டம் இப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் அது சிலம்பாட்டம். நல்ல இள மூங்கில்களின் சுழற்சியில் விர்விர் என்ற ஓசை ஒரு அழுத்தமான சங்கீதமாகச் சுழன்றது. எனக்கோ சிறிது பயம். ஆடுபவர்களின் கையில் இருந்து நழுவிப் பறந்து எந்த நிமிஷமும் நெற்றியைப் பிளந்து விடக்கூடும் என்கிற கலவரம். அதே சமயத்தில் கழிகளின் லாவகமான சுழற்சியில் ஒரு கவர்ச்சி இல்லாமல் இல்லை. அதுதான் என்னை அங்கேயே கட்டி நிறுத்தியது. நானும் அதுபோலவே கையும் காலும் இயங்க கழி சுழற்றி ஆடவேண்டும் என்று ஆசை எழுந்தது. இத்தனைக்கும் தள்ளி நின்றுதான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் துரைசாமி வந்தான்.

என்ன வேடிக்கை?” என்றான். ஆட்டத்தைக் காட்டினேன். ‘‘இப்போதுதான் பார்க்கிறாயா?’’ என்றான். ‘‘ஆமாம்”  என்றேன். ‘‘நீதான் ரோட்டுக்கு அந்தப்பக்கம் சுத்தற ஆளாச்சே, இந்தப் பக்கம் வந்தால்தானே இது நடப்பதெல்லாம் தெரியும்’’ என்று சிரித்தான். கொஞ்சம் தள்ளி இரண்டு பேரும் உட்கார்ந்தோம். துரைசாமிக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருந்தன. அடுக்கிக்கொண்டே போனான். நடுவில் பிரதானமாய் நின்று வித்தையின் நெளிவு சுளிவுகளைச் சொல்லிக்கொண்டிருப்பவர் ராமையா மாமா. கற்றுக் கொண்டிருப்பவர்கள் சிஷ்யர்கள். எல்லோருக்கும் மரத்தடிதான் குருகுலம் என்றான். ‘‘எனக்குக் கற்றுக் கொடுப்பாரா?’’ என்று கேட்டேன். துரைசாமிக்கு முகம்போன போக்கு சரியில்லை. ‘‘பார்த்ததும் ஆசையா?’’ என்றான் கிண்டலாக. ‘‘அதெல்லாம் அத்தனை சுலபமல்ல’’ என்று என் மன உறுதியைக் குலைத்தான். ‘‘மனசு வைத்தால் முடியாதா’’ என்று மேலும் கேட்டேன் நான். அத்தனை சீக்கிரம் பின்வாங்கிக்கொள்ள நானும் தயாராக இல்லை. அவன் பேசவில்லை. சுழலும் கழிகளிலும் வேர்வையில் மின்னும் முதுகுகளிலும் பார்வையைப் பதித்திருந்தான். கொஞ்ச நேரம் கழித்து நிதானமான குரலில் ‘‘நமக்கு இது வீண் வேலை’’ என்று தலையைக் குனிந்து கொண்டான். ‘‘எப்படி?’’ என்றேன். ‘‘எந்த வழியிலும் வாழ்வில் உபயோகமற்ற வித்தை அது’’ என்றான். விருப்பத்தோடு சொன்ன பதில் இல்லை அது. என்னைத் சமாதானப்படுத்த எங்கெங்கேயோ வார்த்தைகளைப் பிடுங்கிக் கோர்த்துச் சொன்னான். ‘‘நாம் விழுந்து விழுந்து படிச்ச ஓம்ஸ் லாவும் பித்தாகரஸ் தேற்றமும் எந்த வகையில் பயன்படுது? பொட்டாசியம் பர்மாங்னெட்டையும் சோடியம் நைட்ரெட்டையும் வேகவேகமாய் ஒரு மணி நேரத்தில் போட்டா போட்டில கண்டுபிடிச்ச அவசரம் இப்போது உதவுதா?’’ என்றேன். அடுக்கிக்கொண்டே போனேன். சரமாரியான என் பதில்கள் அவனை நிலைகுலையவைத்துவிட்டன. பித்தேறியவனைப் பார்ப்பதுபோல சிறிது நேரம் என்னையோ பார்த்திருந்தான். ‘‘ஆட்டம் முடியட்டும். அறிமுகப் படுத்துகிறேன்’’ என்றான். சொல்லும் போது எந்த உணர்ச்சியும் இல்லை அவன் முகத்தில். எனக்கோ அந்த நிமிஷத்திலேயே மனசுக்குள் அடிவைத்துப் படிகள் கட்டி கழி சுழற்றிக் கொண்டிருந்தேன்.

துரைசாமிக்கு நான் ஊருக்குத் திரும்பியது குறித்து ரொம்ப சந்தோஷம். ஆள் ரொம்பவும் ஒடுங்கிவிட்டான். கல்யாணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஓடி வந்து கையைப் பற்றிக் கொண்டான். ‘‘எந்த ஊருல இருக்கற?’’ என்று கேட்டான்

பம்பாய்லஎன்றேன். ‘‘என்ன வேலை செய்ற?’’ என்றான். ‘‘வங்கியில்’’ என்றேன். ‘‘நீ என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டேன். கசப்பாய்ச் சிரித்தான். ‘‘கற்றுக்கொண்ட எதுதான் நமக்கு பயன்பட்டது என்று நீதான் அடிக்கடி கேட்பாய். ஆனால் உனக்குத்தான் பயன்பட்டுள்ளது. எனக்குப் பயன்படவில்லை’’ என்றான். ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்டேன். ‘‘ரைஸ் மில்லில் கம்பும் கேழ்வரகும் மிளகாயும் அரச்சிட்டு காசு வாங்க பி.எஸ்.சி. மேத்ஸ் படிச்சிருக்க வேணாமில்லயா’’ என்றான். அவன் அப்பா பிடிவாதக்காரர். அவனைச் சம்மதிக்க வைத்து கல்யாணமும் செய்து வைத்து ரைஸ்மில்லில் கட்டிப் போட்டு விட்டாராம். ‘‘பழய ஞாபகம் போகலியா என்றேன். ‘‘இல்லை’’ என்று தலைசைத்தான். என்னைப் போலவே ஓர் அச்சுப் பிரதியை பார்த்தது போல இருந்தது. அவன் கையைப் பற்றிக் கொண்டேன். காலம் காலமாய் எல்லாரும் ஞாபகங்களின் துரத்துதல்களில்தான் வாழ வேண்டி இருக்கிறது.

பயிற்சி முடிந்த பின்பு ஆட்டக்காரர்கள் வணங்கி விலகியிபின் ஆசுவாசமாய் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போதுதான் ராமையா மாமாவை நேருக்கு நேர் சந்திக்கச் சென்றோம். நெருங்கியதும் பேச்சு வரவில்லை. எங்களுக்கும் அவருக்கும் ஐந்தடி தூரம்தான் இடைவெளி. துரைசாமியின் தோளை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருந்தேன். கையில் அழகான உருட்டு மூங்கில். வரிவரியாய் கோடுகளும் புள்ளிகளும் படர்ந்திருக்க மூங்கில் ஒரு பாம்பை நினைவு படுத்தியது. அகன்ற மார்பில் சின்னச் சின்னதாய் வேர்வை படிந்து மின்னும் நரைகலந்த ரோமம். கீழ்ப்பாய்ச்சி கட்டிய வேட்டி. ஓர் அட்டையை ஒட்டி வைத்த மாதிரி கழுத்தோரம் தடித்த வடு. நிதானம் குலையாத கண்கள். மரத்தோரம் கழியைச் சார்த்திவிட்டுத் திரும்பினார். தள்ளித்தள்ளி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த சீடர்களை விட்டு விலகி எங்களைப் பார்த்து ‘‘என்ன?’’ என்றார். ‘‘கொஞ்சம் பேசணும்’’ என்றோம் ‘‘யாரோடு?’’ என்றார் அவர் சந்தேகமான குரலில். ‘‘உங்களோடுதான்’’ என்றேன். ‘‘கொஞ்சம் இருங்க’’ என்று கையசைத்துவிட்டு விலகி நடந்தார். குட்டையான வேப்பமரம் அங்கிருந்தது. தாழ்ந்த கிளைகளில் நிறைய துணிகள் தொங்கின. அது வரையில் அந்த முடிச்சுகள் எங்கள் கண்களில் ஏன் படவில்லை என்று ஆச்சரியமாய் இருந்தது. அகலமான துண்டை எடுத்து உடம்பு முழுக்க துடைத்துக்கொண்டார். பிறகு இன்னொரு முடிச்சை அவிழ்த்து வெற்றிலைபாக்கு எடுத்தார். மெல்ல இலையைப் பிரித்து சுண்ணாம்பு தடவி வாயில்  அதக்கினார்.

இதற்குள் சீடர்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்து விட்டது. ‘‘யார் இவன்’’ என்பதுபோல புதிய பார்வை. எங்கள் சம்பாஷணையை அவர்களும் கவனிக்கப் போகிறார்கள் என்பதில் எனக்குக் கூச்சமுண்டாகியது. பலவந்தமாய் என் கவனத்தை ராமையா மாமாவின் மேல் குவித்திருந்தேன்.

வேப்பமரத்துக்குப் பக்கத்தில் வசதியாய் உட்கார்ந்து கொண்டு மாமா எங்களைப் பார்த்துச் சைகை செய்தார். செலுத்தப்பட்டவன் போல் நான் அவர் பக்கத்தில் போய் நின்றேன். உட்காரச் சொன்னார். ‘‘பரவாயில்லை’’ என்றேன். மீண்டும் உட்காரச் சொல்லி சைகை செய்தார் அவர். புல்தரை. அதன் மேல் வேப்பம்பூக்கள் உதிர்ந்திருந்தன. கையைத் தரையில் ஊன்றும் போது பஞ்சு போலிருந்தது. எனக்கு நெருக்கமாக துரைசாமி இருந்தான்.

அவர் கண்களில் அடங்கிய அமைதியும் அந்த ஆகிருதியும் என்னை மிகவும் வசியப்படுத்தின. அவரைப்போல நானும் ஆகவேண்டும் என்கிற கட்டுக்கடங்காத ஆவல் மனசில் துடித்தது. என் விருப்பங்களையெல்லாம் கொட்டி விட வேண்டும் என்று பரபரத்தேன். சரியான வார்த்தைகள் எழாமல் தவித்தேன். சீடர்கள் ஒவ்வொருவராய் வந்து சொல்லிக் கொண்டு நடந்தார்கள். ஒரு சீடன் அவருடைய கழியை அவர் அருகில் கொண்டு வந்து வைத்துவிட்டு நடந்தான். என் பார்வை மீண்டும் அந்தக் கழியில் படிந்தது. நீட்டிப் படுத்த ஒரு கண்ணாடிவிரியன் பாம்புபோல அதன் உடல். வழவழப்பு. நினைக்கும்போதே உடல் உதறியது.

‘‘யாரு நீங்க?’’ என்றார் மாமா. துரைசாமி தன்னைப் பற்றியும் என்னைப் பற்றியும் சொன்னான். தலையை அசைத்துக் கொண்டார் மாமா. என் ஆசையைப்பற்றி எடுத்துச் சொன்னேன். மேலும்கீழும் பார்த்தார் மாமா. திரும்பி வெற்றிலையைத் துப்பி விட்டு என்னோடு பேசினார்.

படிக்கற புள்ளைக்கு எதுக்கு இந்த ஆசை?’’

படிச்சி முடிச்சாச்சு. சும்மாதான் இருக்கறோம்.’’

”எதிர் காலத்துக்கு உதவற மாதிரி வேற எதயாச்சிம் கத்துக்குங்க. இது வேணாம். இது மோசமான வித்தை’’

எல்லா வித்தையும் நல்லதுதான். விளைவுகள் தான் நல்லது கெட்டதுன்னு பிரியுது

”அதெல்லாம் தத்துவம் தம்பி. நடைமுறை வேற’’

”நடைமுறைலயும் நல்லதுன்னு நெனச்சிக்கிட்டே பாத்தா நல்லது. கெட்டதுன்னு நெனச்சிக்கிட்டே பார்த்தா கெட்டது! எல்லாத்துக்கும் காரணம் புத்தி, பார்வை.’’

”பேச்சல்லாம் நல்லாத்தான் இருக்குது. உங்களுக்கு எதுக்கு இந்த முரட்டு சமாச்சாரம். பேசாம வேற ஏதாச்சிம் கத்துக்குங்க.’’

அவர் முகத்தை பார்த்தேன். குரல்தான் என்னை விரட்டிக் கொண்டே இருந்தது! முகத்தில் அந்தக் குறிப்பு இல்லை.

என்ன பாக்கற தம்பி. கோபமா?’’

மெல்லச் சிரித்தபடி தலையசைத்தேன்.

வேற யார் மேலயாச்சும் கோபமா?’’

இல்லை’’

ஏதாவது பொண்ணுகூட சம்பந்தமாகி அந்த பொண்ணு வீட்டுல வேணாம்ங்கறாங்களா?’’

இல்லை’’

எங்கயாவது வேலையில் சேர்ந்து விரோதமாய்டுச்சா-?’’

இல்லை’’

வேற என்ன கோபம்?’’

என்னை ஆழமாய்ப் பார்த்தார். எனக்குள் பதற்றம் பெருகியது. அவரை நம்ப வைக்கும் பொருத்தமான வார்த்தைகளைத் தேடினேன். ஏன் இப்படி சோதிக்கிறார் என்று எரிச்சலாக இருந்தது. உதடுகளைக் கடித்தபடி மூச்சு வாங்கினேன்.

என்ன யோசன?’’

பதிலுக்காக என்னை விரட்டிக்கொண்டே இருந்தார் ‘‘ஆத்திரம் அவசரத்துக்குப் பயன்படுத்திக்கத்தான் இந்த வித்தையை கத்துக்க வந்ததா நீங்க நெனைக்கிறிங்க போல. எனக்கு யார் மேலயும் ஆத்திரம் இல்ல. ஆத்திரப்படணும்ங்கற வெறியும் இல்ல. இந்த வித்தைல உடம்பும் மனசும் ஒன்னா குவியுதுன்னு நம்பறேன். ஓட்டப்பந்தயம் மாதிரி. கால்பந்தாட்டம் மாதிரி இதுவும் ஒரு வித்தை. ஒங்ககிட்ட கத்துக்கிடலாம்ன்னு ஒரு ஆசை. அவ்ளோதான்’’

ராமையா மாமா பதில் பேசவில்லை. மெல்ல எழுந்தார். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கழியையும் எடுத்துக்கொண்டார். ‘‘வாங்க’’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். குழப்பமான மனநிலையில் அவரைப் பின் தொடர்ந்தோம். ஏரியை நெருங்கும் வரை மாமா எதுவும் பேசவில்லை.

மெல்ல மெல்ல இருள் கவிந்துகொண்டிருந்தது. தண்ணீர்ப் பரப்பில் இருளில் நிறம் படியத் தொடங்கியது. இதமான காற்று. ஓர் உயரமான பாறையில் மீண்டும் மாமா உட்கார்ந்து கொண்டார்.

யாருக்கும் கத்துத்தரக் கூடாதுங்கறது என் எண்ணம் இல்ல. கர்வமோ ஆத்திரமோ இல்லாதவன்கிட்டதான் இந்த வித்தை நல்லா இருக்கும். ஆனா கர்வம் இல்லாதவன் உலகத்தில் எங்க இருக்கான் சொல்லு. கைல இந்த வித்தையை வச்சிருக்கறவன் கழுத்துல பாம்ப வச்சிருக்கறமாதிரிதான். பாம்பால எதிரிக்கும் சாவு வரலாம். அவனுக்கும் சாவு வரலாம்.’’

எப்படியும் சாவு வந்ததுதான் ஆவணும்’’

மெதுவாய் இடைமறித்தேன்

சாவு வர நூறு வழி இருக்கலாம். ஆனா தான் கத்துகிட்ட வித்தையால ஒருவனுக்கு சாவு வரக்கூடாது.

இப்ப கத்துக்கிறவங்க...?’’

திருவிழாவுல ஆடறதுக்கு கத்துக்கறாங்க. சும்மா இது வெறும் ஆட்டம்தான். அடி சூட்சுமம்லாம் சொல்லித் தரதில்லை’’

மாமா மெல்ல எழுந்து ஏரிக்குள் இறங்கினார். இடுப்பு ஆழம் வரை நடந்து சென்று அப்புறம் தண்ணீரில் மூழ்கி நீந்தினார். நாங்கள் அவரையே பார்த்திருந்தோம். எங்களுக்குள் எந்தப் பேச்சும் இல்லை. மாமா மேலே வந்தார். நாங்களும் எழுந்தோம்.

உங்க அம்மா அப்பாகிட்ட கேட்டிங்களா?’’

என் பலவீனமான இடம் சுட்டிக்காட்டப்பட்டதில் தப்பிக்க முடியாமல் தவித்தேன். எனினும் சட்டென்று பதில் சொல்லிவிட்டேன்.

என் ஆசைக்கு அவுங்க தடை சொல்ல மாட்டாங்க’’

இருந்தாலும் கூட நாளைக்கு ஒரு வார்த்தை கேட்டுட்டு வாங்க. பாக்கலாம்’’

நான் மெல்ல துரைசாமியைப் பார்த்தேன். ‘ஆவுட்டும் சரிங்கஎன்று இருவருக்கும் சேர்த்து அவனே பதில் சொல்லிவிட்டான்.

அந்தக்கணமே திட்டம் உருவாகிவிட்டது. அடுத்த நாள் அம்மா அப்பாவுக்குச் சம்மதம்தான் என்று சொல்லிச் சேர்ந்து விட்டேன். தினமும் என் மாலைகள் அங்கேயே கழிந்தன. அநேகமாக எல்லா நாள்களிலும் அவர் என்னை ஒரு பார்வையாளனாகவே வைத்திருந்தார். சுற்றி இருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதே முக்கியமான பாடமாய் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே என் கையில் ஒரு கழி விளையாடும் என்றெல்லாம் அலை மோதிய என் கனவுகள் தவிடு பொடியாகின.

சிஷ்யர்கள் எல்லாரும் வித்தையில் தேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். சொன்ன திசையில் அவர்கள் இடுப்பு வளைந்தது. கோணத்துக்குத் தகுந்ததுபோல கைகளும் கால்களும் மடிந்து நீண்டன. ரப்பர் மாதிரி வளைந்தது உடம்பு. முதலில் கைகள் இரண்டையும் நீட்டிய வாக்கில் உட்கார்வதும் எழுவதும்தான் எனக்கிடப்பட்ட பயிற்சி. பழக்கமில்லாதவை எனினும் உற்சாகம் உந்தச் செய்தேன். சுழலும் மூங்கில்களின் ஓசையில் அந்த இடமே அதிர்ந்தது. ஒரு வீணையின் நரம்பைத் தொடர்ச்சியாய் அதிரவைக்கப்பட்டது போன்றது அந்த ஓசை. பிறகு ஒரே தாளகதியில் நாலடி தூரம் நடந்து குரு இருக்கும் திசையில் நடன அசைவுடன் காலும் கையும் சுழலச்சுழல அடியெடுத்து வைத்து ஒரு புள்ளியில் குனிந்து நிலம் தொட்டு வணங்குதல், பிறகு அதே வீச்சில் பின்னோக்கியும் பக்கவாட்டிலும் அடிவைத்து மாறிமாறித் திரும்புதல். கால்கள் பின்னப் பின்னி முன்னும் பின்னும் சென்று லாவகமாய் வளைதல். தோள்கள் அதிரத் தாவி உறுதியாய் ஒரு திசையை நோக்கி காற்றில் வீசி விட்டு பக்கவாட்டில் வளைதல். இப்படியே தொடர்ந்து பயிற்சி. கால்கள் வளையும் போது இடுப்பு வளையாது. காலும் இடுப்பும் வளையும்போது தோள்கள் இயங்காது. முதலில் ரொம்ப சிரமமாய் இருந்தது. கற்றுக் கொள்வதில் எனக்கிருந்த அளவு கடந்த விடாமுயற்சியால்தான் கைவரப் பெற்றேன். இத்தனைக்குப் பிறகும்கூட முக்கியமாய்க் கழியைத் தொட விடவில்லை அவர். எனக்கோ பாம்பின் உடலாய் பளபளக்கும் அக்கழியைத் தொட்டுச் சுழற்றவேண்டும் என்கிற ஆர்வம் கூடிக்கொண்டே போனது.

ஆட்டம் முடிந்ததும் எல்லாரும் சென்றபிறகு கூட மாமா என்னிடம் பேச ஆரம்பித்தார். அந்த அளவுக்கு எங்கள் நெருக்கம் அதிகமானது. துரைசாமியும் அப்போது கூட இருந்தான். பெரும்பாலும் அதே மரத்தடியில். அல்லது ஏரிக்கரையில்.

நம்பிக்கைக்குரிய ஒருவனிடம் ஒரு அனுபவஸ்தன் தன் வாழ்க்கை நிகழ்ச்சியையெல்லாம் சொல்லி முடித்துவிட நினைக்கிறமாதிரி இருந்தது அது. மாமாவுக்குத் திருமணம் ஆகவில்லை. கழி சுழற்றும் பித்திலேயே ஊரூராய்ச் சுற்றிக்கொண்டிருந்ததில் விடுபட்டுவிட்டது. ஆசையும் இல்லை. அந்த அளவுக்கு ஆட்டத்தில் ஒரு ருசி. ஒரு போதை. கழியின் விளிம்பைச் சுரண்டியபடியே ஒவ்வொன்றாய்ச் சொன்னார். ‘‘ஆனால் எந்த காலத்திலும் கெட்ட நோக்கத்தோடு இதைத் தொட்டது இல்லை தெரியுமா’’ என்று என்னைப் பார்த்தார் அவர் கண்கள் மின்னின. ‘‘உண்மையா?’’ என்றேன் நம்ப முடியாமல். ‘‘இது ஒரு பயிற்சி. இதில் ஆழ்ந்து அது கொடுக்கிற இன்பத்தை அனுபவிக்கலாம். அதுதான் முக்கியம். அடிக்கும் ஆயுதமாய் மாறவே கூடாது” என்றார் நிதானமாக.

அப்ப எதுக்கு தற்காப்புக் கலைன்னு சொல்லணும்’’

அப்படிச் சொல்லக் கூடாது. பேர் வச்சவன் தப்பு அது. ஆழ்ந்து அனுபவிக்கணுங்கறதுங்கற மட்டத்திலேயே இருந்தா எதுவும் ஆயுதமா மாறாது. ஆயுதமா ஒன்ன நாமே மாத்திட்டு அப்புறம் அதுக்கு பதில் ஆயுதமா இன்னொன்னையும் எடுத்துட்டு தற்காப்புக்கலைன்னு சொல்றது முட்டாள்தனம் இல்லையா?’’

கராத்தே...’’

எதுவா இருந்தாலும் அந்த பயிற்சி தரக் கூடிய அனுபவம்தான் முக்கியம்’’

என்ன இப்படி பேசுகிறாரே என்று இருந்தது. நான் எனக்குத் தெரிந்த கராத்தே கதைகளைச் சொன்னேன். நான் பார்த்த ஷாவோலின் நகர சீன சினிமாக்கள் துணை வந்தன. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுச் சிரித்தார் அவர்.

‘‘அவங்க புத்திசாலிங்க, வித்தை நுணுக்கத்தைக் காட்டி காசு பண்ணத் தெரிஞ்சவங்க. ஆனால் அது உண்மையில்ல...’’

அப்புறம் எதுதான் உண்மை?’’

கத்துக்கறதும் கத்துக்கறதால நமக்கு கெடைக்கற அனுபவமும்தான் உண்மை

எனக்கு மனம் அதிர்ந்தது. மிக எளிமையான முறையில் ஒரு உண்மையைச் சொல்லிவிட்ட மாதிரி இருந்தது. ‘‘அப்புறம் ஏன் இந்த யுத்தங்கள் நடந்தன?’’ என்றேன் மெதுவாக.

மனிதனின் துர்புத்திதான் காரணம்” என்றார்

பெருமூச்சோடு.

மீண்டும் ‘‘நான் எந்த காலத்திலயும் யாரையும் அடிக்கவோ காயப்படுத்தவோ நெனச்சதே இல்ல. என் குருவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் அது!’’

உங்களுக்கு குருவா...?’’

வெறும் வித்தை நுணுக்கம் தெரிஞ்சவர் மட்டுமில்ல. பெரிய படிப்பாளி. ஆசிரமம் மாதிரி வச்சி நடத்தனார். பத்து பன்னெண்டு வயசுல போய் சேர்ந்தேன். அவர் மறையற வரிக்கும் கூடவே இருந்தேன். அப்பறம் அப்படியே ஊரூரா கௌம்பிட்டேன். எங்கெங்கோ சுற்றி இங்க வந்து சேந்தேன்...’’

மாமா கொஞ்ச நேரம் நிறுத்தி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

ரெண்டு மூணு ஊர்ல சொல்லிக் கொடுத்தேன். எல்லார்க்கும் முழு ஆர்வம் இருந்ததுன்னு சொல்ல முடியாது. பாதியிலேயே நெறயபேரு போய்டுவாங்க. ஒருத்தன் ரொம்ப ஆர்வமா கத்துகிட்டான். அடிமுறை எல்லாம் சொல்லித்தந்தேன். அடுத்த நாளே தன்னோட தாய் மாமன தீத்துட்டான். மர்ம அடி. பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சி. கைவரிசை இவன்தான்னு. அடிக்கும்போது பாத்தவன் ரகசியமா போலீஸ்ல போய் சொல்லிட்டான். ஆள் ஜெயிலுக்குப் போய்ட்டான். எனக்கு வெறுத்துப்போச்சி. மனுஷங்க மேலயே நம்பிக்கை போச்சு. ஊரவிட்டு கௌம்பிட்டேன். அப்புறம் ஏழெட்டு வருஷம். யாருக்கும் எதுவும் சொல்லித் தரல. ஏதோ வேல செஞ்சி எப்படியோ பொழச்சேன். இவுங்க வந்து ரொம்ப கேட்டுக்கிட்டாங்க. தொழில் செய்றவங்க. சரின்னு நாலு விஷயம் சொல்லித் தரேன்’’

யாருக்காவது முழுசா சொல்லித் தரலாமில்லயா?’’

எவனுக்கும் அந்த ஆர்வம் இல்ல. அந்தப் பக்குவமும் இல்ல. என் குருவுக்கும் அந்த ஆதங்கம் இருந்தது. தான் கத்துக்கிட்டதுல பாதியத்தான் எங்களுக்குச் சொல்லித் தந்தார். அவர் சாகக் கூடிய வயசில்ல. ஆனாலும் போயாச்சு. அந்த பாதியக் கூட நான் இங்க சொல்லித் தர முடியல. யார் மேலயும் நம்பிக்கை வரலை. அதுவும் சிஷ்யனையே கொலைகாரனா பாத்தப்பறம் சுத்தமா நம்பிக்கை வரமாட்டுது!... இத நெனச்சிட்டாவே மனசு ரொம்ப கஷ்டப்படும். இப்படியே நாமும் வாழ்ந்துட்டு விதி வந்து செத்துப் போக வேண்டியதுதானான்னு நெனச்சிக்குவன். கவலதான் மிச்சம்...’’

யாரையாவது ஒருத்தரை நம்பித்தான ஆவணும்’’

அதுவும் சரி’’ என்றார் முதலில். ‘‘உன்னை நம்பலாம்ன்னு நெனைக்கிறேன்” என்றார் அடுத்து.

எனக்குச் சின்ன அதிர்ச்சி. ‘‘என்ன சொல்றீங்க?’’ என்று கேட்டேன்.

உனக்கு விருப்பம்ன்னா முழுசயும் கத்துக்கொடுத்துடலாம்’’

நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லயே

அது ஒன்னும் பெரிய காரியம் இல்ல. நாளைக்குக் கூட ஆரம்பிச்சிடலாம். ஏழெட்டு மாசம். அதிகமா போனா ஒரு வருஷம். அவ்வளவு போதும். உன்னைப் பூரண கலைஞனாக்கிடுவேன்...’’

இந்த ஜென்மத்தில் எனக்கு வேலை கிடைக்கும்ன்னு நம்பிக்கையில்ல. ஒரு வருஷமென்ன, ரெண்டு வருஷம்கூட. இருக்கலாம்.’’

நான் ஏதோ வேலை கிடைக்காத சங்கடத்திலும் எரிச்சலிலும் சொன்னேன். அவருக்கு ஏக சந்தோஷம். ‘சரிஎன்று எழுந்திருந்தார்.

இருள் முழுக்க கவிந்தது.

போவலாமா”  என்றார்.

அவருடைய கழியை எடுத்துத்தரக் குனிந்தேன். ‘‘வேண்டாம் கொடு’’ என்று அவரே எடுத்துக் கொண்டார். நானும் துரைசாமியும் பின் தொடர்ந்தோம்.

தற்சமயம் ஏதாவது பயிற்சி நடக்கிறதா?’’ என்று மெல்ல துரைசாமியிடம் விசாரிப்பைத் தொடர்ந்தேன்.

எந்தப் பயிற்சியும் கிடையாது. ஊரைச்சுற்றி இப்போது வீடியோ. கேபிள். ஸ்டார் டிவி. போதாக் குறைக்கு வீடியோ மேக்ஸ். எட்டு வருஷத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இப்போது இந்த ஊரை கிராமம்ன்னு யார் சொல்வாங்க...?’’

ஊர் மாறித்தான் இருந்தது. ஒரு பக்கம் விழுப்புரம். இன்னொரு பக்கம் பாண்டிச்சேரி. இரண்டு பெரு நகரங்களின் நடுவில் கிராமத்தின் முகம் நசுங்கித் தேய்ந்து கொண்டிருந்தது. சத்திரம் மாறிவிட்டது. கருங்கல் கட்டிடம் உருமாறி மின்விளக்குகள் தொங்கும் விடுதியாகிவிட்டது. ரயில்களின் முக்கியத்துவத்தை அழித்துவிட்ட டீசல் புகை கக்கும் பஸ்கள். இரண்டு சக்கர வாகனங்கள். மாமா கழிசுழற்றிப் பயிற்சி செய்த இடத்தில் யாரோ  கோயில் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம் ராமையா மாமாவின் வார்த்தை வீட்டுக்குத் திரும்பும்போது மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நிறைய கனவுகள். சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சிப் பட்டாளங்கள் அலைந்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு வாரமே இன்னும் மிச்சமிருக்கும் மும்முரம் அவர்களுக்கு. எந்த வார்த்தையையும் அல்லது சம்பவத்தையும் தனக்கு சாதகமாய்த் திரித்து உபயோகப்படுத்திக்கொள்ள முடியாதா என அலைந்து கொண்டிருந்தார்கள். பணக்கட்டுகள் கைமாறின. சாயங்காலமே அதன் முஸ்தீபுகள் ஆரம்பித்துவிட்டன போலும். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இரவுச் சாப்பாட்டின்போது தான் அம்மா சொன்னாள். சாப்பிட்டுவிட்டுக் காலாற ஒரு நடை நடந்து வர வழக்கம்போல கிளம்பியபோது என்னைத் தடுத்து நிறுத்துவதற்காக எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.

கடைத்தெருவில் ஏக கூட்டம். பிதுங்கப் பிதுங்க ஆண்களை ஏற்றி வந்து நின்ற வண்டியில் இருந்து சிரமப்பட்டு பிரயாணிகள் இறங்கி இருக்கிறார்கள். கால்வைக்கவும் இடம் இல்லாமல் தடுமாற்றத்துடன் இறங்கிய ஒருவனை ஏறும் அவசரத்தில் இன்னொருவன் தள்ளிவிட பக்கத்தில் பழம் வாங்கிக் கொண்டிருந்த பெண்மேல் விழுந்து விட்டான் அவன். பயத்திலோ அல்லது அவசரத்திலோ அவளது தோளை உறுதியாய்ப் பிடித்துக்கொள்ள கலவரத்தில் அவளும் கீழே விழுந்து விட்டாள். பை நழுவி பழங்கள் சிதறிவிட்டன. பயந்து போன இளைஞன் விழுந்த காய்களை எல்லாம் சேகரித்துக் கொடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு போய் இருக்கிறான். அவன் நூறடி தூரம் கூட சென்றிருக்க மாட்டான். சம்பவத்துக்கு ஏகப்பட்ட நிறம் பூசியாகிவிட்டது. ‘‘ரெட்டிப் பொண்ண கவுண்டமூட்டுப் பையன் கையப் புடிச்சி இழுத்துட்டான்.’’ ‘‘திங்கறதுக்குக் கூட கவுண்டனுங்களுக்கு கை இருக்கக் கூடாது. வெட்டித் தள்ளுங்கடா’’, ‘‘நம்ம கட்சி ஜெயிக்கக் கூடாதுன்னே எதிர்க்கட்சி திட்டம் போட்டு செஞ்ச வேலை இது.’’ ஆளாளுக்குக் கத்திக் கொண்டு போய் அந்தப் பையனின் கையை வெட்டிவிட்டார்கள். வெட்டுண்டவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். போகிற வழியில் ஒருவன் பெரிய ரெட்டிவீட்டு வைக்கோற்போருக்கு நெருப்புப் பற்றவைத்துவிட்டான். இவ்வளவையும் சொல்லி விட்டு ‘‘இனி இரவில் எதுவும் நடக்கலாம். எங்கேயும் போகாதே’’ என்று அம்மா சொல்லி முடித்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்பு ரகளை அதிகமாகி விட்டது. அப்பாவையும் என்னையும் விளக்குக் கூட போடவிடாமல் தடுத்துவிட்டாள். எழுந்து வெளியே செல்லக்கூட முடியவில்லை. இருளில் விழித்தபடி படுத்துக் கிடந்தோம்.

விடிந்த பிறகு அப்பா மட்டும் வெளியே போய்விட்டு வந்தார். வந்தவர் முகத்தில் கலவரம் அப்பி இருந்தது. குழப்பமான பார்வையில் பதற்றத்துடன் காணப்பட்டார். அம்மாவும் நானும் உலுக்கி உலுக்கி விவரங்களை விசாரித்தோம்.

மூள கெட்டவனுங்க, மூள கெட்டவனுங்க. கட்சிச் சண்டய சாதிச் சண்டயா மாத்திட்டானுங்க. விழுப்பும் ஆஸ்பத்திரில அவன் கைய எடுத்துட்டாங்களாம். உயிருக்கு ஆபத்தில்ல. வெளியில எவனுக்கும் கண்ணு மண்ணு தெரியல. அவுங்க பையன் ஒருத்தன இவனுங்களும் வெட்டிட்டாங்க. நேரடியா அடிச்சா தெரியுமுன்னு அடுத்த ஊர் சேரி ஆளுங்களுக்கு தண்ணி ஊத்தி கூப்புட்டு வந்துட்டானுங்க. வந்தவங்க கண்ணுக்குத் தெரிஞ்ச எல்லாக் குடிசைங்களையும் நெருப்பு கொளுத்திட்டானுங்க. ராத்திரி பதினஞ்சி குடிச எரிஞ்சிருக்குது. கழி சுத்தக் கத்துக்கறானுங்களே, அந்தப் பட்டாளத்தையும் இதுல ஆசைகாட்டி இழுத்து உட்டுட்டானுங்க. இந்தப்பக்கம் நாலு பேரு அந்தப் பக்கம் நாலு பேருன்னு மாறி அவனுங்களே துடிச்சிகிட்டானுங்க. காலைலேருந்து போலீஸ் எல்லாரயும் தேடுது. செய்யறதெல்லாம் செஞ்சிட்டு தலைமறைவாய்ட்டானுங்க திருடனுங்க. இப்ப இவனத்தான் பத்திரமா பாத்துக்கணும்

எனக்குப் பகீர் என்றது. ராமையா மாமாவின் நிலைமைகளைத் தெரிந்து கொள்ள நான் கட்டாயம் போயே தீர வேண்டும் என்று நினைத்தேன். வெளியே நான் போகவே கூடாது என்று அம்மா வற்புறுத்தி அறைக்குள் தள்ளிச் சாத்தினாள். எனக்குத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. யாருடைய பேச்சின் மேலும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. திட்டம் போட்டு எல்லாரும் என்னிடம் பொய் சொல்கிறமாதிரி தோன்றியது. இரவில் அவர் முகத்தில் கண்ட மின்னலை மீண்டும் நினைத்துக்கொண்டேன். அவர் கேட்டுக் கொண்டபடி கலையின் நுணுக்கங்களைக் கற்கப் போகிறேன் என்று நினைத்த என் ஆவல் பொசுங்கியது. அம்மாவோ என்னை வெளியே செல்லக்கூட அனுமதிக்கவில்லை.

பகலுக்குள் என்னென்னமோ நடந்து விட்டது. சம்பவங்களுக்கான ஆதி காரணங்கள் திரிக்கப்பட்டு விட்டன. சிலம்பம் கற்றுக் கொடுக்கும் குருவும் சீடர்களும்தான் ரகளைக்குக்  காரணம் என்று சொல்லப்பட்டது. மூலைமுடுக்குகளில் எல்லாம் போலீஸ் தேடத்தொடங்கிவிட்டது. இந்த அரசியல் கதைகள் எல்லாம் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. மாமாவை நினைத்து மனம் வருந்தத் தொடங்கியது. வெளியே கேட்கும் சன்னமான நடமாட்டம் கூட என்னைத்தான் தேடி யாரோ வருவதாக நினைக்கத் தூண்டியது. அறைப்புழுக்கமும் தனிமையும் உறுத்தின. என்னைவிடவும் அம்மா மிகவும் பயந்து காணப்பட்டாள். அவளிடம் என் கெஞ்சுதல்கள் எதுவும் பலிக்கவில்லை. அப்பா எங்கோ சென்று பணம் புரட்டிக் கொண்டு வந்து தந்தார். அம்மா என்னை அன்று ராத்திரியே பம்பாய்க்குப் போகச் சொன்னாள். பம்பாயில் இருக்கும் அம்மாவின் சித்தப்பா பிள்ளையுடைய முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து தந்தாள். நான் பிடிவாதமாய் மறுத்தேன். ஆனால் அம்மாவின் கண்ணீர் முன் எதுவும் நிற்கவில்லை. அவளது வார்த்தைகளைக் கேட்டே தீரவேண்டியதாயிற்று. முன்னிரவுக்குப் பிறகு பின்வாசல் கதவைத் திறந்து வெளியேற்றினாள். கூடவே அப்பா. என் சான்றிதழ்களும் சில சட்டைகளும் மட்டுமிருந்த லெதர்பேக் தோளில் கனத்தது. வெளியே குளிர்ச்சியாய் வீசும் காற்றிலும் எனக்கு வியர்த்தது! இருட்டுக்குள்ளேயே இடறி இடறி வாய்க்கால் ஓரமாகவே நடந்து சென்றோம். அடுத்த ஊர் வந்ததும் மேலேறி பாதையை அடைந்து வண்டி ஏறினோம். அப்புறம் விழுப்பும் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயிலேற்றி விட்டார். அக்கணமே ரயிலில் இருந்து இறங்கி ஓடி மாமாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. மறுகணம் அம்மாவின் அழுகை மனசில் எழுந்து நெஞ்சில் அடைத்து. தலையே வெடித்துவிடும்போல குழப்ப அலைகள். ரயில் புறப்பட்டு விட்டது. அப்பாவின் கண்கள் தளும்பி இருந்தன. ஏறெடுத்துப் பார்ப்பதற்குள் அவர் உருவம் இருளில் மூழ்கியது.

மாமாவை கடைசியில் போலீஸ் கண்டு பிடித்து விட்டது’’ என்று சொன்னான் துரைசாமி. சக்கையாய் அடித்து நொறுக்கினார்களாம். அவர் பேச முனைந்தபோது வாயிலேயே உதைத்துவிட்டார்களாம். அவர் வார்த்தை எதுவும் எடுபடவில்லையாம். கடைசி வினாடியில் அனைவரையும் உதறிக்கொண்டு எழுந்தாராம். பல்லைக் கடித்தபடி இரண்டு கைகளிலும் இரண்டு லத்தித் தடிகளைப் பிடுங்கி சுழற்றினாராம். ஒரு அங்குலம்கூட அவரை நெருங்க முடியவில்லையாம். எல்லாம் மர்ம அடிகள். கொட்டடிக்குள்ளேயே மூன்று போலீஸ்காரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு பேருக்குத் தலை பிளந்துவிட்டது. எஞ்சி இருந்தவனை எட்டி நெஞ்சில் உதைத்துத்  தள்ளிய பின்பு தப்பி வந்து விட்டாராம். வந்தவர் நேராக ஏரிக்கரையோரம் மரத்தடிக்கு வந்து தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

பிணமாக அவர் தொங்கிய மரம் இதுதான்’’ என்று சுட்டிக்காட்டினான் துரைசாமி. பூவாசத்தோடு நின்றிருந்தது வேப்பமரம். இதயம் படபடக்க மரத்தோடு ஒட்டிக் கொண்டேன் நான். கண்கள் தளும்பின. அதன் பட்டைகளை வருடியபடி நின்றிருந்தேன். ஆசுவாசமாய்ச் சாய்ந்தபடி அந்த மரத்தடியில் மாமா பேசிய சித்திரம் மனசில் அசைந்தது. இந்த மரத்தடியில் வைத்துத்தான் ஒருநாள் அவருக்கு கல்யாணம் ஆகாத சங்கதியைப்பற்றிக் கேட்டேன். சிரித்து மழுப்பத்தான் முதலில் நினைத்தார் போலும். நான் மேலும்மேலும் வற்புறுத்தவே அவர் சொன்னார்.

என்ன பொறுத்தவரிக்கும் இந்த ஆயுதம்கூட ஒரு கலைதான். கலைக்கும் காதலுக்கும் அதிக வித்தியாசம் இல்ல தெரியுமா”

புரியாமல் நிமிர்ந்தேன்.

ரெண்டுலயும் உச்சகட்ட ஆனந்தம் ஒன்றுதான். இது வேறு அது வேறன்னு நெனைக்கறவனுக்கு மன ஆழம் போதலைன்னுதான் அர்த்தம்’’

மாமாவின் பதில் பாதி புரிந்தமாதிரி இருந்தது. பாதி புரியாத மாதிரியும் இருந்தது. மாமாவின் மின்னும் கண்கள் என்மேல் பதிந்திருந்தன. அதன் ஆழ்ந்த அமைதி என்னை உருக வைத்தது. எனக்குள் ஏதோ வெளிச்சம் புகுந்தமாதிரி இருந்தது.

ஏதோ ஒரு சண்டைக்கு யாரோ பலியாய்ட்டாங்க. பொணத்த போட்டா புடிச்சி அரசியல் அராஜகம் பாரீர்னு இன்னொரு கட்சிக்காரன் விளம்பரம் செஞ்சாங்க. எரியற வீட்டுல புடுங்கறவரிக்கும் லாபம்ன்னு ஒவ்வொரு கட்சியும் அலஞ்ச அலச்சல இப்ப நெனச்சாலும் அருவருப்பா இருக்குது. இந்த சாதிச்சண்ட இன்னொரு அசிங்கம்...’’

பேசமுடியாத அளவுக்கு வெலவெலத்துப் போனேன். அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சாதியும் மதமும் கட்சியும் இனமும் சூடிக்கொள்ளும் புதுப்புது பேர்களையும் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் முடிவுகளையும் ஆயிரக்கணக்கில் நான் வசிக்கும் பெருநகரில் பார்க்கிறவன்தான். எனினும் ஒவ்வொரு முறையும் அது கொடுக்கும் அதிர்ச்சியும் சங்கடமும் தாங்கமுடியாததாகவே இருக்கிறது.

அன்னைக்கு ஊரைவிட்டு நீ போய்ட்டேன்னு கேள்விப்பட்டதும் ரொம்பவும் வருத்தப்பட்டேன். உங்க வீட்டுல யாரும் சரியா தகவல் சொல்லல. நானா நெனச்சிக்கிட்டேன். அவுங்க செஞ்சதும் சரிதான். ராமையா மாமா சிஷ்யனுங்க எல்லாரையும் புடிச்சி உண்டு இல்லன்னு ஆக்கிட்டானுங்க. அடிச்ச அடில குமரேசன்னு ஒரு பையன் பைத்தியமாகவே ஆய்ட்டான். என்னையும் எங்கப்பா பாண்டிச்சேரிக்கு அனுப்பிட்டார். ரெண்டு மாசம். அப்பறம் ரைஸ் மில்ல பார்த்துக்க ஆள் இல்லன்னு வந்தவன்தா, இன்னம் ரைஸ் மில்ல உடமுடியல’’

விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன். முதுகில் தட்டிக்கொடுத்தான் துரைசாமி. கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னான். ‘‘ஊர்ல இருக்கற வரிக்கும் அடிக்கடி பார்’’ என்று சொன்னான்.

அன்றைய இரவின் சித்திரம் இன்னும் அழியாமல் இருந்தது. மனசில் அம்மாவிடம் ஊரை விட்டுப்போக உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தேன். ‘‘ஊர்ல இருந்தா அடிச்சியே கொன்னுடுவானுங்க ராசா. எனக்கு கொள்ளி போட ஒரு புள்ள வேணாமா?’’ என்றாள் அம்மா. ‘‘நா எந்த தப்பும் செய்யலம்மா’’ என்று கெஞ்சினேன். ‘‘ஆளு கெடச்சா அடியோட நாசம் செய்யற கும்பல்டா இது! நாயம் அநியாயத்துக்கு ஏதுடா காலம்?’’ என்றாள். குரல் விம்ம அழ ஆரம்பித்தாள். ‘நீ தலையெடுத்து இந்த குடும்பத்த காப்பாத்துவேன்னு நெனச்சனே. இந்த புடிவாதத்தால எல்லாத்தையும் மண்ணாக்கறியே’’ என்றாள். ‘‘கவுண்டனும் ரெட்டியும் இன்னிக்கு அடிச்சிக்குவானுங்க நாளைக்கி கூடிக் கொலாவுவானுங்க. பறச்சாதிக்கு எந்த ஈனப் பயலும் வரமாட்டான்டா... போடா... சொல்ற பேச்ச கேளுடா... போடா...’’ என்று தேம்பித்தேம்பி அழுதபடி அம்மா காலில் விழக் குனிந்துவிட்டாள். அவசரமாய் அவளைத் தடுத்தபோது தான் சத்தியம் கேட்டாள். நான் வண்டியேற வேண்டியதாகிவிட்டது.

(கணையாழி 1993)