Home

Sunday, 10 December 2023

எஸ்.வி.எஸ். என்னும் மாமனிதர்

  

காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மூத்த பத்திரிகையாசிரியரும் கட்டுரையாளருமான அ.இராமசாமி அவர்களின் நூற்றாண்டையொட்டி, அவர் எழுதிய ’தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூலை சந்தியா பதிப்பகம் சிறப்புப்பதிப்பாக வெளியிட்டது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 07.07.2023 அன்று சென்னையில் காந்தி கல்வி மையத்தில் நடைபெற்றது. நான் அவ்விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குச் சென்றிருந்தேன்.

விழா நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் விட்டல்ராவிடமிருந்து கைப்பேசியில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் ஒலியெழாதபடி கைப்பேசியை அமைதிநிலையில் பைக்குள் வைத்திருந்ததால், நான் அதைக் கவனிக்கவில்லை. நிகழ்ச்சி முடிவடைந்து பேருந்து நிலையத்துக்குத் திரும்பிய பிறகே கவனித்தேன். அப்போது நேரம் இரவு பத்தரையைக் கடந்துவிட்டது. அதனால், மறுநாள் பெங்களூருக்குத் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து பேசிக்கொள்ளலாம் என நினைத்து அழைக்கவில்லை.

மறுநாள் அவருடைய வீட்டுக்குச் சென்று விழாவில் கண்டும் கேட்டும் மகிழ்ந்த விவரங்களைச் சொன்னேன். நிகழ்ச்சியில் எடுத்த நிழற்படங்களை அவருக்குக் காட்டினேன். நிகழ்ச்சி நடைபெற்ற காந்தி கல்வி மையம் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தையும் சிற்சில கோணங்களில் படமெடுத்திருந்தேன். அவற்றையும் அவரிடம் காட்டினேன்.

படங்களையெல்லாம் பார்த்துவிட்டு கைப்பேசியைத் திருப்பியளித்தபோது “இந்த வளாகத்துக்குள்ளதான் இதுக்கு முன்னால இராஜாஜி பேருல ஒரு நூலகம் இருந்தது” என்றார் விட்டல்ராவ்.

“அப்படியா, நான் பார்க்கலையே? காந்தி கல்வி மையத்துக்குள்ள ஒரு சின்ன நூலகம் இருக்குது. அவ்வளவுதான். வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலையே” என்று ஐயத்தோடு சொன்னேன்.

“இல்லை இல்லை, இப்ப அந்த நூலகம் அங்க இல்லை” என்று அவசரமாக மறுத்தார் விட்டல்ராவ். ”பாரதிய வித்யா பவன் அதை தன் பொறுப்புல பல வருஷங்களுக்கு முன்னாலயே எடுத்துகிட்டாங்க. இராஜாஜி நூற்றாண்டு நினைவு நூலகம்ங்கற பேருல மைலாப்பூருல அந்த நூலகம் இப்பவும் இருக்குது”

நான் அதுவரை கேட்டிராத சரித்திரமாக அது இருந்தது. “ஏன் அப்படி?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

“சில சமயங்கள்ல நாம எதிர்பார்க்காத சில விஷயங்கள் இப்படித்தான் திடுதிப்புனு நடந்துடும். இதுக்கெல்லாம் நாம வெறும் சாட்சி. இன்னைக்கு இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல, தெரிஞ்ச ஆளா நான்  ஒருத்தன் இருக்கேன். அப்புறம் படிப்படியா காத்தோடு கரைஞ்சிபோயிடும். ஞாபகம் இருக்கிற வரைக்கும்தான் ஒவ்வொன்னும் சரித்திரம்”

“அந்த நூலகம் ஏன் உருவாயிச்சி? யாரு உருவாக்கினாங்க? ஏன் அந்த இடத்தைவிட்டு போச்சி? ஒன்னுமே புரியலையே சார்” என்று விட்டல்ராவிடம் கேட்டேன்.

விட்டல்ராவ் ஒருகணம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு மெதுவாகச் சொல்லத் தொடங்கினார்.

“காந்தி இந்தியாவுல ஹரிஜன சேவா சங்கம் தொடங்கியதுமே, அந்த சங்கத்தின் சார்பா எல்லா முக்கியமான இடங்கள்லயும் ஒரு தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சாரு. ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையில முன்னேற்றம் ஏற்படணும்ன்னா, அவங்களுக்கு சில துறையில நல்ல பயிற்சியும் திறமையும் ரொம்ப அவசியம்னு அவர் நினைச்சார். அந்த நோக்கத்துக்காக ஆரம்பிச்சதுதான் தொழிற்பயிற்சி மையம். ஆரம்பத்துல அந்த மையத்த கோடம்பாக்கத்துல தொடங்கினாங்க. அப்புறமா இடம் வாங்கி கட்டட வசதியெல்லாம் வந்த பிறகு இந்த இடத்துக்கு மாத்திகிட்டாங்க. அப்பதான் தக்கர்பாபா பேர வச்சாங்க.”

“சரி சரி”

“ஒரே சமயத்துல நூத்துக்கணக்கான பேருக்கு ஃபிட்டர் பயிற்சி, எலெக்ட்ரிசியன் பயிற்சி, தச்சுவேலைப்பயிற்சி எல்லாம் கொடுத்தாங்க. அந்தப் பிள்ளைகள் படிச்சி நாலு பொது விஷயங்களையும் கத்துக்கிடணும்ம்னுதான்  நூலகத்துக்குன்னு ஒரு கட்டடத்தை வளாகத்துக்குள்ளயே கட்டி தொடங்கினாங்க. இருந்த கொஞ்சநஞ்சம் புத்தகங்களை வச்சி எப்படியோ ஆரம்பிச்சிட்டாங்க. அந்த நூலகத்துக்கு எஸ்.வி.எஸ்.னு ஒருத்தர் நூலகரா வந்தார். முழுப்பெயர் எஸ்.வி.சுப்பிரமணியன்”

“அவரும் சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டவரா?”

“ஆமாம். பெரிய காந்தியத்தொண்டர். சிறைக்கெல்லாம் போயிருக்கார். கல்கி கூட ரொம்ப காலம் இருந்தார். கதைகள் கூட எழுதியிருக்கார். நிறைய படிச்சிருக்கார். நான் அவரைப் பார்த்திருக்கேன்.”

“அப்படியா?”

“அது மட்டுமில்லை. கல்கி பத்திரிகையில கொஞ்ச காலம் துணையாசிரியரா வேலை பார்த்திருக்காரு. இலக்கியச்சிந்தனை அமைப்புடைய ஆலோசனைக்குழுவுல கூட அவரும் இருந்திருக்காரு. டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலட்சுமி மாதிரியான ஆளுமைகளோடு பழகிய அனுபவம் உள்ளவர். அசோகமித்திரன், தி.க.சி. போன்ற எழுத்தாளர்களுக்கும் நண்பரா இருந்திருக்காரு. நல்ல இலக்கிய ஈடுபாடு கொண்ட மனிதர்.”

“சரி” 

“ஆமாம். தங்கமான மனிதர். ரொம்ப சுறுசுறுப்பு. யாராவது ஒரு எழுத்தாளரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைச்சா, அவர் என்னென்ன கதைகள் எழுதியிருக்கார், எந்தெந்த பத்திரிகைகள்ல எழுதியிருக்கார், என்னென்ன புத்தகங்கள் வந்திருக்குதுன்னு எல்லா விவரங்களையும் கேட்டுக்குவார். பிறகு அவரே எல்லாத்தையும் தேடி புடிச்சி படிப்பாரு. அடுத்த முறை அந்த எழுத்தாளரைப் பார்க்கும்போது அந்த கதைகளைப்பத்தி பேசுவார். சில சமயத்துல ஃபோன்லயே கூப்பிட்டும் கூட கதைகளைப்பற்றி தன்னுடைய கருத்துகளைச்  சொல்வார்”

“இப்படியும் இந்த காலத்துல ஒரு மனுஷனான்னு ஆச்சரியமாத்தான் இருக்குது”

“நூலகத்தை இன்னும் விரிவாக்கி பெரிசாக்கணும், வந்து போகிற எல்லாருக்கும் பயன்படணும்ன்னு அவரு ரொம்ப பாடுபட்டாரு. அந்த நேரத்துல அந்த அமைப்பால நூலகத்துக்குன்னு புத்தகங்கள் வாங்கறதுக்கு செலவு செய்யமுடியலை. அதனால முடிஞ்ச அளவு தெரிஞ்ச நண்பர்கள்கிட்ட புத்தகங்களை அன்பளிப்பா வாங்கி சேர்க்கணும்னு அவரு மனசுக்குள்ள முடிவு செஞ்சிட்டார். ஒருநாள் நான் அந்தப் பக்கமா போயிருந்தபோது என்கிட்ட அவருடைய திட்டத்தைச் சொன்னாரு. சிறுதுளிதானே பெருவெள்ளம், நல்ல திட்டமா இருக்குது, செய்யலாம் சார்னு நான் அவரை உற்சாகப்படுத்தினேன். உங்கள மாதிரி எழுத்தாளர்கள்தான் எனக்கு உதவி செய்யணும், புத்தகங்களை கொடுத்து நீங்கதான் மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும், உங்க நட்பு வட்டத்துல இருக்கிற எழுத்தாளர்கள்கிட்டயும் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவங்ககிட்டயும் அன்பளிப்பு வாங்கித் தரணும்னு சொன்னாரு.  நல்ல திட்டம்னு மனசுல பட்டுது. சரின்னு நானும் உற்சாகத்துல தலையாட்டிட்டு வந்துட்டேன்.”

“அப்புறம், என்ன செஞ்சீங்க?”

“வீட்டுக்கு வந்து என்கிட்ட இருந்த புத்தகங்கள்ல ஒரு ஐம்பது புத்தகங்களை ஒரு கட்டா கட்டி தூக்கி எடுத்துட்டு போய் எஸ்.வி.எஸ்.கிட்ட கொடுத்தேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த நூலகத்தை பத்தி அசோகமித்திரன்கிட்டயும் கந்தசாமிகிட்டயும் போய் சொன்னேன். அவுங்களும் ஆளுக்கு நாற்பது, ஐம்பது புத்தகங்கள் கொண்டுவந்து அவருகிட்ட கொடுத்தாங்க.”

“அவர் நினைச்சமாதிரியே நடந்துட்டுது”

“ஆமாம். அவர் உடனே ஒரு பெரிய ரெஜிஸ்டர் வாங்கி ஒரு அட்டவணை போட்டார். புத்தகத்துடைய பெயர், எழுத்தாளருடைய பெயர், நன்கொடையா கொடுத்தவங்களுடைய பெயர், தேதி எல்லாத்தயும் விவரமா எழுதி புத்தகங்களுக்கும் நெம்பர் கொடுத்து ஒரு பெரிய ரேக்குல அடுக்கி வைக்க ஆரம்பிச்சார். கொஞ்சம்கொஞ்சமா நண்பர்கள் பங்களிப்புலயே நூலகம் உருவாயிடுச்சி”

“ஆச்சரியம்தான் சார்”

“ஒரு ஆறு மாசத்துக்குள்ள ஆயிரத்துக்கும் மேல புத்தகங்கள் சேர்ந்துட்டுது. ஆனாலும் எஸ்.வி.எஸ். என்னை பார்க்கும்போதெல்லாம் இன்னும் நண்பர்கள்கிட்ட சொல்லுங்க சார்னு சொல்லிட்டே இருப்பார். அந்த நூலகத்தை பெரிய அளவுல முக்கியத்துவம் உள்ள இடமா மாத்தணும்னு அவருக்குள்ள ஒரு வேகம் இருந்தது”

“சரி”

“அதுக்கு இன்னொரு நல்ல திட்டத்தை தொடங்கினார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலயும் மாலை நேரத்துல நூலக கட்டிடத்துக்குள்ள ஒரு இலக்கியக்கூட்டத்தை நடத்த ஆரம்பிச்சாரு. க.நா.சு., நா.பா., சிட்டி மாதிரியான பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் வந்து பேசினாங்க.  க.நா.சு.வுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைச்ச நேரத்துல, இந்த நூலகத்துலதான் அவருக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தினாங்க. நிகழ்ச்சியைப் பார்க்கிறதுக்கு நிறைய வாசகர்கள் வந்தாங்க. எல்லாருமே இந்த வளாகத்துக்குள்ள இப்படி ஒரு நூலகம் இயங்கிகிட்டிருக்கிறத பார்த்து ஆச்சரியப்பட்டுட்டாங்க. பிறகு ஒவ்வொருவருமே ஆளுக்கு கொஞ்சம் புத்தகங்களை கொண்டுவந்து கொடுத்தாங்க. சில பேர் ஆங்கில புத்தகங்களையும் கொண்டுவந்து கொடுத்தாங்க”  

“ம்”                           

“அந்த காலத்துல தாட்(THOUGHT) ங்கற பேருல ஒரு ஆங்கில பத்திரிகை வந்துட்டிருந்தது. ரொம்ப தரமான இலக்கியக்கட்டுரைகள் எல்லாம் அதுல வரும். க.நா.சு. அதுல எழுதுவாரு. அந்தப் பத்திரிகைய ஆஞ்சநேயலுன்னு ஒருத்தர் எடிட்டரா இருந்து நடத்தினாரு. அவரும் அந்த நூலகத்துக்கு அடிக்கடி வந்து போவாரு. அவர் கூட நிறைய புத்தகங்களை நூலகத்துக்கு அன்பளிப்பா கொடுத்தார். இப்படி மற்றவர்களுடைய பங்களிப்பாலயே அந்த நூலகத்தை எஸ்.வி.எஸ். கொஞ்சம் கொஞ்சமா வளர்த்து பெரிசாக்கினார்”

அதைக் கேட்கும்போது உண்மையிலேயே அது ஒரு மகத்தான செயல் என்று தோன்றியது. “இதைவிட பெரிய சேவை உலகத்துல என்ன இருக்கப்போவுது சார். எஸ்.வி.எஸ். மாதிரியான ஆளுமைகளுக்கு இந்தக் காலத்துத் தலைமுறை ரொம்ப கடமைப்பட்டிருக்குது சார்” என்றேன்.

“என் மூலமா விஷயத்தை தெரிஞ்சிகிட்ட எல்லாருமே ஏதோ ஒரு வகையில நாற்பது புத்தகம், அம்பது புத்தகம், நூறு புத்தகம்னு கொண்டு வந்து கொடுத்திட்டு போனாங்க. அந்த வகையில ஏதோ ஒரு வகையில ஒரு நல்ல செயலைச் செய்றோம்னு எனக்கும் ஒரு திருப்தியா இருந்தது.

விட்டல்ராவின் முகத்தில் ஒருகணம் வெளிச்சம் படர்ந்ததைப் பார்த்தேன். அவர் ஆற்றியிருப்பது உண்மையிலேயே பெருமைக்குரிய செயல் என்றுதான் எனக்கும் தோன்றியது.

சிரிது நேர இடைவெளிக்குப் பிறகு, “உங்களுக்கு அப்துல் ரஹீம்னு ஒருத்தர பத்தி சொல்லியிருக்கேனே, நினைவிருக்கிறதா?” என்று திடீரென கேட்டார் விட்டல்ராவ்.

“ஆமாம் சார். சொல்லியிருக்கீங்க. நியூ காலேஜ்ல வேலை செஞ்சவர். உங்களுக்கு பக்கத்துல அறையில தங்கியிருந்தவர், அவர்தானே?”

“அவரேதான். எல்லார்கிட்டயும் சொல்றமாதிரி ஒருநாள் அவர்கிட்டயும் அந்த நூலகத்தை பத்தி சொன்னேன். அதைக் கேட்டதும் அவருக்கும்   ஒரு ஆர்வம் வந்துட்டுது. என்னையும் ஒருநாள் அங்க அழைச்சிகிட்டு போங்க, பார்க்கறேன்னு சொன்னார் ரஹீம். ஒரு செவ்வாய்க்கிழமை கூட்டத்துக்கு அவரை நானும் அழைச்சிகிட்டு போனேன். அவரும் உற்சாகமா வந்தார். நூலகத்தையெல்லாம் சுத்தி பார்த்தார்.”

“புத்தகங்கள் அன்பளிப்பு கொடுத்தாரா?”

“அறைக்குத் திரும்பியதுமே ரெண்டு பெரிய அட்டைப்பெட்டிங்கள தயார் செஞ்சி அதுக்குள்ள புத்தகங்களை அடுக்க ஆரம்பிச்சார். அம்பது, இல்லை நூறு கொடுப்பார்னுதான் நான் நினைச்சேன். ஆனா, அவர் இருநூறு புத்தகங்களை எடுத்து அடுக்கி வச்சார். அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமா ஆட்டோவுல தூக்கி வச்சி எடுத்துச் சென்று எஸ்.வி.எஸ்.கிட்ட கொடுத்திட்டு வந்தோம். எஸ்.வி.எஸ்.க்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைன்னு என் கைகளைப் புடிச்சி அழுத்தினார் எஸ்.வி.எஸ்.”

அந்நிகழ்ச்சியைக் கேட்டதுமே  எனக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. “நோக்கம் நல்லதா இருந்தா, இப்படி தானாவே உதவிகள் பல பக்கங்கள்ல இருந்து கிடைக்கும் சார்” என்று பொதுவாகச் சொன்னேன்.

“ஒவ்வொரு செங்கல்லா வச்சி வீடு கட்டறதுமாதிரி சிறுகச்சிறுக பாடுபட்டு அந்த நூலகத்தை உருவாக்கினார் எஸ்.வி.எஸ். துரதிருஷ்டவசமா அவருடைய மரணத்துக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு அந்த நூலகம் சரியா இயங்கலை. அப்படிப்பட்ட சூழல்தான் எஸ்.வி.எஸ்.சுடைய அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு மகத்தானதுன்னு இந்த உலகத்துக்கு உணர்த்தறமாதிரி இருந்தது.”

அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். “அப்படியா?” என்று நம்பமுடியாமல் கேட்டேன். விட்டல்ராவ் உதட்டைப் பிதுக்கியபடி தலையசைத்தார்.

“பல மாசங்கள் ஓடிட்டுது. எஸ்.வி.எஸ்.க்குப் பிறகு வேற யாருமே நூலகரா அங்க வரலை. அந்த நேரம் பார்த்து மைலாப்பூர்ல பாரதிய வித்யா பவன் இராஜாஜி பேருல ஒரு நூலகம் அமைக்கணும்னு நெனச்சிட்டிருந்தாங்க. அமைப்புகளுக்கு நடுவுல எந்த மாதிரியான பேச்சு நடந்ததோ தெரியலை. ஒருநாள் திடீர்னு தக்கர் பாபா வளாகத்துல எஸ்.வி.எஸ். நூலகம் பாரதிய வித்யா பவனுக்குள்ள போயிடுச்சி. அன்னைக்கு இருந்ததைவிட ரெண்டு மூனு மடங்கு பெரிசா, இன்னைக்கும் அந்த நூலகம் அங்க இருக்குது.”

அதைச் சொல்லிவிட்டு விட்டல்ராவ் ஒருமுறை பெருமூச்சு விட்டார். பிறகு ”நான் அந்த நூலகத்தைப் பார்க்கிற போதெல்லாம், ராஜாஜியுடைய முகத்தைவிட எஸ்.வி.எஸ். முகத்தைத்தான் நினைச்சிக்குவேன். அந்த அளவுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் கொண்டவர் அவர். முதுமை அவரை தொட்டுக்கூட பார்க்கலை. எண்பது வயசைக் கடந்த பிறகும் இளமையாவே இருந்தார்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

 

(அம்ருதா – டிசம்பர் 2023 )