சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது.
அந்தக் கடையைக் கடந்துசெல்லும்
ஒவ்வொருவரையும் அந்தக் கடையிலிருந்து எழும் பட்டாணியின் மணம் இழுத்து நிற்கவைத்துவிடும்.
பட்டாணி, பொட்டுக்கடலை, உப்புக்கடலை, வேர்க்கடலை, அவல் எல்லாமே அந்தக் கடையில் கிடைக்கும்.
அந்தக் குடும்பத்தின் சகோதரர்களும்
அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்து அந்தக் கடையை நிர்வகித்தார்கள். பொட்டலம் கட்டுவதிலிருந்து
சில்லறைகளை வாங்கி கல்லாவில் போடுவது வரை எல்லா வேலைகளையும் அவர்களே செய்தார்கள்.
தமிழ்நாட்டில் லாட்டரிச்சீட்டு
அறிமுகமாகி, அதற்கு ஆதரவு பெருகி வந்த நேரம் அது. ’விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால்
நாட்டுக்கு’ என்னும் விளம்பர வாசகம் ஒவ்வொரு செய்தித்தாளிலும் வெளிவந்து பிரபலமடைந்திருந்தது.
அந்தப் பட்டாணிக்கடைக்காரரின்
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு குலுக்கலில் ஒரு லட்ச ரூபாய்
பரிசு கிடைத்தது. எங்கள் ஊரின் முதல் லட்சாதிபதி.
பரிசு விழுந்த அன்று அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும் அவருக்கு வணக்கம் சொல்லி
வாழ்த்து தெரிவித்தனர். சிலர் கடைக்கு எதிர்ப்புறத்தில் ஒதுங்கி நின்று விழுங்கிவிடுவதுபோல
அவரைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஒரே நாளில் எங்கள் ஊரின் முக்கியப் பிரமுகராக
அவர் மாறிவிட்டார்.
சென்னையிலிருந்து செய்தித்தாள்
நிரூபர்கள் வந்து அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றார்கள்.
அடுத்த நாளே புதிய லட்சாதிபதியின் படம் எல்லாச் செய்தித்தாட்களிலும் முதல் பக்கத்தில்
இடம் பெற்றிருந்தது.
அவர் வழக்கம்போல பட்டாணிக்கடைக்கு
வருவதும் போவதுமாகவே இருந்தார். ஆனால் கடைத்தெருவில் இருப்பவர்கள் அவரைப் பார்த்து
பேசும் விதமும் சிரிக்கும் விதமும் திடீரென மாறிவிட்டன. பழக்கமே இல்லாதவர்கள் கூட அவரைப்
பார்த்து புன்னகைத்து வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அவருக்கு பரிசு விழுந்த
செய்தியை திரும்பத்திரும்ப அலுப்பில்லாமல்
பேசிக்கொண்டே இருந்தார்கள். அவரைப்போல லட்சாதிபதி ஆகவேண்டும் என்னும் ஆசை ஒரு விதையைப்போல
பலருடைய நெஞ்சில் விழுந்துவிட்டது.
பட்டாணிக்கடை இருந்த வரிசையில்
சிறிதும் பெரிதுமாக துணிக்கடைகள், வட்டிக்கடைகள், இங்கிலீஷ் மருந்துக்கடைகள், நாட்டுமருந்துக்கடைகள்
இருந்தன. அவை அனைத்துமே கடைக்காரர்களுக்குச் சொந்தமான இடங்கள். அந்த வரிசைக்கு எதிர்ப்புறத்தில்
வெற்றிலைபாக்குக் கடைகள், பூக்கடைகள், சோடாக்கடை, தையல்கடை, மிதிவண்டி நிலையம், சாக்கு
தைப்பவர் கடை என ஏராளமான சில்லறைக்கடைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான கடைகள் அந்தப்
பக்கமாகச் செல்லும் வாய்க்காலை ஒட்டி உருவான கூரைகளின் கீழே இருந்தன. ஒன்றிரண்டு கடைகள்
மட்டும் கல்கட்டடங்கள். அவை அனைத்தும் எதிர்வரிசை கடைக்காரர்களுக்குச் சொந்தமான இடங்கள்.
தொழிலாளிகள் அந்த இடத்துக்கு வாடகை செலுத்திவிட்டு கடைவைத்து தொழில் செய்துவந்தனர்.
அந்த வரிசையில்தான் எங்கள்
அப்பாவின் தையல்கடை இருந்தது. எதிர்வரிசையில் நாட்டுமருந்து விற்கும் கடைக்காரருக்குச்
சொந்தமான இடம் அது. அப்பா அந்தக் கடைக்கு மாதவாடகை செலுத்தி வந்தார். அந்தக் கடைக்கு
இடது புறத்தில் தர்மலிங்கம் பெரியப்பாவின் தையல்கடை. வலதுபுறத்தில் தெய்வநாயகம் பெரியப்பாவின்
சைக்கிள்கடை. அதையடுத்து சண்முகம் பெரியப்பாவின் சாக்குக்கடை. அதற்குப் பிறகு ஆறேழு
தையல்கடைகள். சோடாக்கடை, பூக்கடை என நீண்டு அந்த வரிசை கடைத்தெரு சந்திப்பில் சென்றுமுடிந்தது.
அப்பா, தர்மலிங்கம், தெய்வநாயகம்,
சண்முகம் நான்கு பேரும் ஏறத்தாழ ஒரே வயசுக்காரர்கள். வெவ்வேறு வேலை செய்பவர்களாக இருந்தாலும்
நண்பர்களாக இருந்தனர். வீட்டுச் செலவுக்கு பணம் வாங்கிச் செல்வதற்காக சாயங்கால நேரங்களில்
நான் கடைக்குச் செல்வேன். அப்போதெல்லாம் நான்கு பேரும் ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றிப்
பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா மட்டும் தைத்துக்கொண்டிருப்பார். அவருக்கு எதிர்ப்புறத்தில்
ஸ்டூல் போட்டு மற்ற மூன்று பேரும் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருப்பார்கள்.
பட்டாணிக்கடைக்காரருக்கு
லட்ச ரூபாய் விழுந்ததிலிருந்து அவர்களுடைய பேச்சு அதிர்ஷ்டம் தொடர்பானதாக மாறிவிட்டது.
“ஒரே ஒரு ரூபாய்தான் செலவு.
ஆனா வரவைப் பார்த்தியா? ஒரு லட்ச ரூபாய். எவ்ளோ பெரிய பணம்”
“ஒரு லட்ச ரூபாய்க்கு எத்தனை
சைபர்னு கூட நமக்குத் தெரியாது. நமக்கு எதுக்கு ஒரு லட்சமும் ரெண்டு லட்சமும்? தெனம்
தெனம் கைக்குக் கெடைக்கறத வச்சி பட்டினி இல்லாமல் மூனு வேளையும் கஞ்சி குடிக்கறோம். அது போதாதா?”
”இன்னைக்கு போதும், இல்லைன்னு
சொல்லலை. அதுக்காக நாம காலம் பூரா கஞ்சியே குடிச்சிட்டிருக்கணுமா? நமக்கும் ரெண்டு
கொழம்பு, ரெண்டு பொரியல் போட்டு சாப்புடணும்னு ஆசை இருக்காதா?”
“அதுக்காக, நாம குறுக்கு
வழியில போக ஆசைப்படலாமா?”
”அத எதுக்கு குறுக்கு வழின்னு
சொல்ற? அதிர்ஷ்டவழின்னு சொல்லு. லட்சுமியே
நம்ம வீட்டைத் தேடி வரேன்னு சொல்லும்போது, வராதே போன்னு சொல்றதுல நியாயமே இல்லை. ஒரே
ஒரு ரூபாய்தான? போனா போவுது.”
“ஒரே ஒரு ரூபாய்னு வாய்சுளுவா
சொல்லிட்டியே. அந்த ஒரு ரூபாய் மட்டும் சுலபமா கைக்கு வந்துடுதா? ரெண்டு ஜாக்கெட்டோ
மூனு ஜாக்கெட்டோ தைச்சாதான் எனக்கு ஒத்த ரூபாய் கூலி கெடைக்கும். யாராவது ரெண்டுமணி
நேரம் மூனு மணி நேரம் வாடகைக்கு சைக்கிள எடுத்தும் போனாதான் அண்ணனுக்கு ஒரு ரூபா கெடைக்கும்.
நாலஞ்சி சாக்கு தச்சாதான் ஒன்கிட்டயும் ஒரு ரூபாய் வரும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற
ஒரு ரூபாய ஒரு லாட்டரி சீட்டுக்கு தூக்கிக் குடுக்கிறது, எனக்கு என்னமோ சரியா படலை”
”சும்மா எதுக்குப்பா தூக்கி
குடுக்கறோம்? நம்ம அதிர்ஷ்டத்துக்கு பரிசு
விழுந்தா ஒரு லட்ச ரூபாய் வருமே, அதுக்காகத்தான தூக்கி குடுக்கறோம்”.
“நல்ல அதிர்ஷ்டமோ? குருட்டு
அதிர்ஷ்டமோ? அதெல்லாம் நமக்கு எதுக்கு? ஒவ்வொரு நாளும் பாடுபட்டாதான் நாம கஞ்சி குடிக்க
முடியும். கடைசிவரைக்கும் நமக்கு கைகாலுங்க நல்லா இருக்கணும். அது போதும் நமக்கு. அதுதான்
நல்ல அதிர்ஷ்டம்” என்றார் அப்பா.
“அப்படி ஒதுங்கிப் போனா
எப்படிப்பா? நாமளும் ஒரு முட்டு முட்டி பாத்தா என்ன? பட்டாணிக்கடைக்காரர் பக்கமா அடிச்ச
காத்து நம்ம பக்கமும் அடிக்காம போயிடுமா என்ன?” என்றார் தர்மலிங்கம் பெரியப்பா.
“இங்க பாருண்ணே, ஆறு நிறைய
தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்ங்கறது பெரியவங்க சொல்ற வார்த்தை. நம்ம
தலையில எழுதுன எழுத்து அந்த மாதிரி. இருக்கறத உட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா, உள்ளதும்
போயிடும். அத மறக்கக் கூடாது” என்று அப்பா பொதுவாகச் சொன்னார்.
“நான் அத ஒத்துக்க மாட்டேன்.
நம்ம பட்டாணிக்கடைக்காரரு அந்த மாதிரி நெனச்சி தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்திருந்தா,
இன்னைக்கு லட்சாதிபதியா ஆயிருப்பாரா? ஏதோ அவர் அளவுல ஒரு முயற்சி செஞ்சதனாலதான், இன்னைக்கு
எங்கயோ உச்சிக்கு போயிருக்காரு” என்றார் தர்மலிங்கம் பெரியப்பா.
“நாமளும் அந்த மாதிரி எதயாவது
செய்யணும். நமக்கும் நாலஞ்சி புள்ளைங்க இருக்குது.
பரிசுப்பணம் நமக்கு உதவலைன்னாலும் அவுங்களுக்கு உதவியா இருக்கும், இல்லையா?” என்றார்
சண்முகம் பெரியப்பா.
“பணம் உதவியா இருக்காதுன்னு
இப்ப யாருப்பா சொன்னா? எதிர்பாராத நேரத்துல கையில ஒரு ரூபா கெடைச்சாலும் உதவிதான்.
பத்து ரூபாய் கெடைச்சாலும் உதவிதான். ஆனா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு முதல்
வச்ச பணமும் போயிட்டா, நாம எங்க போய் நிக்கமுடியும்?” என்றார் தெய்வநாயகம் பெரியப்பா.
“இங்க பாரு. துணிஞ்சவனுக்கு
துக்கமில்லை. எறங்கி வலையை வீசணும். அப்பதானே விரால் கிடைக்குதா, கெண்டை கிடைக்குதான்னு
தெரியும்? யோசனயில கொழம்பிகிட்டிருந்தா, நம்மால ஒரு எலியைக் கூட புடிக்கமுடியாது”
ஒவ்வொருநாளும் சாயங்கால
நேரத்தில் கடைக்குச் செல்லும்போதெல்லாம் இப்படித்தான் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எந்தப் பேச்சைப் பேசினாலும் அது எப்படியோ கடைசியாக லாட்டரிச்சீட்டிலும் அதிர்ஷ்டத்திலும்தான் வந்து முடிந்தது.
அப்பாவுக்கும் தெய்வநாயகம்
பெரியப்பாவுக்கும் லாட்டரிச்சீட்டு மீது எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் தர்மலிங்கம் பெரியப்பாவுக்கும்
சண்முகம் பெரியப்பாவுக்கும் அதிக அளவில் ஆர்வம் இருந்தது.
”நேரம் நல்லா இருந்து,
நம்ம கைக்கு ஒரு லட்ச ரூபா கெடைச்சிதுன்னு வை, மொதல் வேலையா பெரியவளுக்கு எங்கயாவது
ஒரு நல்ல எடத்தை பார்த்து கல்யாணத்த முடிச்சிடுவேன். செலவு போவ மிச்சமிருந்தா இந்த
பழைய லொட லொட மிஷினுங்கள மாத்திட்டு பாண்டிச்சேரிகாரனுங்க கிட்ட செக்கன்ட் ஹேன்ட்ல
ரெண்டு வாங்கி வச்சிட்டா, அடுத்த பத்து வருஷம் கவலை இல்லாம போயிடும்” என்று பட்டியலோடுதான்
தொடங்குவார் தர்மலிங்கம் பெரியப்பா.
“பணம் கெடைச்சா செய்யவேண்டிய
வேலை ஏகப்பட்டது இருக்குது எனக்கு. மொதல் வேலையா கூரையை மாத்தணும். மழை நாள்ல ஊடெல்லாம்
தண்ணி நின்னுடுது. ஒரு பொட்டு கூட நிம்மதியா தூங்க முடியறதில்லை. பனங்குப்பம், பேட்டை,
நறையூரு பக்கமா சின்னதா ஒரு எடத்தைத் தேடி புடிச்சி வாங்கி, சொந்தமா ஒரு ஊடு கட்டணும்.
நம்ம தலையெழுத்து. பொறம்போக்குல ஊடு கட்டி குடுத்தனம் பண்ணிட்டிருக்கோம். நம்ம புள்ளைங்களாவது
கெளரவமா ஒரு சொந்த ஊட்டுல வாழறமாதிரி செய்யணும்”
ஒவ்வொருவரும் தத்தம் நிலைபாட்டுக்கே
உரிய நியாயங்களை வைத்துப் பேசினார்கள்.
பேச்சிலேயே ஒரு மாதம் ஓடி
விட்டது. அந்த மாதத்தில் ஒரு லட்ச ரூபாய் பரிசு திருநெல்வேலி பக்கத்தில் யாரோ ஒருவருக்கு விழுந்தது. விழுப்புரத்தைச் சேர்ந்த
ஒரு துணி வியாபாரிக்கு பத்தாயிரம் ரூபாய் விழுந்தது. அவருடைய புகைப்படத்தோடு அந்தச்
செய்தி தினத்தந்தி பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
“சுத்தி சுத்தி தொழிலாளிங்களுக்குத்தான்
பரிசு கெடைக்குது. நாமளும் வாங்கிப் பார்த்தா, நமக்கும் கெடைக்கும்” என்று சண்முகம்
பெரியப்பா மறுபடியும் தன் புராணத்தைத் தொடங்கினார்.
“சீட்டு வாங்கறவன் யாரு?
தொழிலாளிதான? அப்ப பரிசும் தொழிலாளிக்குத்தான விழும்? பணக்காரன் எதுக்கு சீட்டு வாங்கப்
போறான், சொல்லு? பேங்க்ல சும்மா போட்டு வச்சிருந்தாவே மாசாமாசம் வட்டிப்பணமே லாட்டரிச்சீட்டுல
பரிசு விழற மாதிரி லட்டுலட்டா சேரும். அதுக்கு இதுக்குன்னு ஆசைப்பட்டு, கையில இருக்கிறதத்
தொலைச்சிட்டா நாளைக்கி நாமதான் கஷ்டப்படணும்”
அடுத்த மாதம் ஒரு லட்ச
ரூபாய் பரிசு சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விழுந்தது.
கடையில் மீண்டும் பரிசுச்சீட்டு
வாங்கும் செய்தி உரையாடலுக்கு உரிய விஷயமாக மாறிவிட்டது. முடிவே இல்லாமல் ஒட்டியும்
வெட்டியும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
ஒருநாள் அந்த விவாத்தை
முடித்துவைக்கிற மாதிரி தெய்வநாயகம் பெரியப்பா தலையிட்டு “ஒரு சோதனை மாதிரி ஒருதரம்
வங்கிப் பார்ப்போம். பரிசு கெடைச்சாலும் சரி, கெடைக்காட்டாலும் சரி, அதோட விட்டுடணும்.
இன்னொரு தரம் பரிசுச்சீட்டுங்கற பேச்சையே எடுக்கக் கூடாது, புரியுதா?” என்று கறாராகச்
சொன்னார். எல்லோரும் அதை உற் சாகத்தோடு ஏற்றுக்கொண்டனர்.
“இன்னொரு முக்கியமான விஷயம்.
யாரும் தனியா வாங்க வேணாம். ஆளுக்கு பத்து ரூபா போடுவோம். நாலு வரிசையிலேர்ந்தும் நாப்பது
ரூபாய்க்கு சீட்டு வாங்குவோம். விழுந்தா நாலு பேரும் சமமா பிரிச்சிக்குவோம்”
எல்லோரும் தெய்வநாயகம்
பெரியப்பாவின் முகத்தையே பார்த்தனர். சில கணங்களுக்குப் பிறகு “என்னைக்கு பணம் கொடுக்கணும்?”
என்று கேட்டார் தர்மலிங்கம் பெரியப்பா. ”புதன் கிழமை கொடுங்க. நாம அன்னைக்கே சீட்டு
வாங்கிடலாம். பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது, இல்லையா?” என்றார் தெய்வநாயகம்
பெரியப்பா. “நான் இப்பவே கொடுத்துடறேன்” என்றபடி வேட்டி மடிப்பில் முடிந்து வைத்திருந்த
ரூபாய்த்தாள்களை எடுத்து பிரித்து அடுக்கி பத்து ரூபாயை எண்ணிக் கொடுத்தார் சண்முகம்
பெரியப்பா. “என்னப்பா அவசரம்? வீட்டுச் செலவுக்கு பணம் வச்சிருக்கியா?” என்று தயக்கத்தோடு
கேட்டார் தெய்வநாயகம் பெரியப்பா. “இருக்குது இருக்குது” என்று சொல்லிக்கொண்டே அவர்
எழுந்துபோனார்.
புதன் கிழமை. வழக்கம்போல
செலவுக்குப் பணம் வாங்கி வருவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். லாட்டரிச்சீட்டு விற்பனை
செய்யும் கடைக்குச் செல்வது பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அண்ணே, இந்த உருப்படிய
தச்சி முடிக்காம மிஷின விட்டு எறங்கமுடியாது. வெளக்கு வைக்கறதுக்கு முன்னால நீங்க கடைக்கு
போய் வாங்கிட்டு வந்துடுங்கண்ணே” என்று அப்பா தெய்வநாயகம் பெரியப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
”நரையூருலேர்ந்து ஒரு கல்யாண பார்ட்டி வரேன்னு சொல்லியிருக்காங்க. அவுங்க வர நேரத்துல
நான் இங்க கடையில இருந்தாதான நல்லா இருக்கும். நீங்க போய் வாங்கிட்டு வாங்க” என்றார்
தர்மலிங்கம் பெரியப்பா. ”சரி. சண்முகம். நாம ரெண்டு பேரும் போய் வரலாம். வா” என்று
சண்முகம் பெரியப்பாவை அழைத்துக்கொண்டு கடையை விட்டு இறங்கினார் தெய்வநாயகம் பெரியப்பா.
ஸ்டூலில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்துவிட்டு “வாடா அதிர்ஷ்டக்காரா. நீ வந்து சீட்ட
எடுத்துக் கொடு. வா” என்று அழைத்தார். நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவரும்
“போ, போ. பெரியப்பா கூப்புடறாரு. போ” என்றார். நான் உடனே அவர்களோடு சென்றேன்.
சீட்டுக்கடையில் பச்சை,
நீல, சிவப்பு நிறங்களில் குண்டுகுண்டான சீரியல் பல்புகளை மாலையைப் போல அங்கங்கே தொங்கவிட்டு
அலங்காரம் செய்திருந்தார்கள். பொழுது சாய்வதற்கு முன்பேயே ஒளிர விடப்பட்ட விளக்கொளியால்
கடையே மாய உலகத்தைப்போல இருந்தது. தெய்வநாயகம் பெரியப்பாவைப் பார்த்ததுமே கடைக்காரர்
புன்னகை புரிந்தபடியே “வாங்க வாங்க” என்று வரவேற்றார். கடையில் வேலை செய்யும் ஒரு பையனைப்
பார்த்து ”டேய். அண்ணனுக்கு ஒரு ஸ்டூல் போடு” என்றார். அவன் அறைக்குள் ஓடோடிச் சென்று
ஒரு ஸ்டூலை எடுத்துவந்து பெரியப்பா உட்கார்வதற்கு வசதியாக ஸ்டூலை வைத்தான்.
”என்ன ராமச்சந்திரா? வியாபாரம்
எல்லாம் எப்படி போவுது? நீ விக்கிற லாட்டரிச்சீட்டு இண்டு இடுக்குல இருக்கப்பட்ட கிராமத்து
ஜனங்களையெல்லாம் கடை வரைக்கும் இழுத்து வந்துட்டுது. மந்தரிச்சி விட்ட ஆடுங்கமாதிரி
எல்லாரும் உன் கடைக்கு முன்னாலதான் பகல் முழுக்க நிக்கிறாங்க”
“எல்லாம் அண்ணன் ஆசீர்வாதம்”
என்று தோளைக் குறுக்கி வணங்கிக்கொண்டே சிரித்தார் கடைக்காரர். தொடர்ந்து “அண்ணனுக்கு
எத்தனை சீட்டு வேணும்? சொல்லுங்கண்ணே. வளவனூருல அடுத்த லட்சாதிபதி நீங்கதாண்ணே” என்றார்.
கடைக்காரரைப் பார்த்து
புன்னகைத்தார் பெரியப்பா. பிறகு “மொதல்ல பரிசு விழட்டும். அந்தக் கதையை அப்புறம் பார்த்துக்கலாம்”
என்றார். பையில் வைத்திருந்த நாற்பது ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்து “நாப்பது
சீட்டு” என்றார். பிறகு என்னைச் சுட்டிக் காட்டி “தம்பிகிட்ட சீட்டுக்கட்டுகளை காட்டு.
எனக்காக அவன் பார்த்து எடுப்பான்” என்றார்.
கடைக்காரரே எழுந்து சென்று
நான்கு அட்டைகளை எடுத்து வந்தார். ஒவ்வொரு அட்டையும் தேர்வு அட்டை மாதிரி தடிமனாக இருந்தது.
லாட்டரிச்சீட்டுக் கட்டு அட்டையின் க்ளிப்பில் தொங்கியது. அவற்றை எனக்கு முன்னால் கண்ணாடி
மேசையின் மீது வைத்தார்.
நான் அந்த அட்டைகளைப் பார்த்துவிட்டு
பெரியப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். பெரியப்பா தலையசைத்தபடியே “ம். ஒவ்வொரு கட்டுலயும்
பத்து சீட்டு எண்ணி எடு ராசா” என்றார்.
“மேல கீழ எப்படி வேணுமானாலும்
எடுக்கலாமா?”
“ம்” என்றார் பெரியப்பா.
“ஜோசியக்காரன் கிளி ஒரு சீட்ட தள்ளி உட்டுட்டு
இன்னொரு சீட்ட எடுக்குமே, அதுமாதிரி வேணும்னாலும் எடு”
பெரியப்பாவின் சொற்கள்
எனக்கு உற்சாகமளித்தன. முதலில் ஒரு அட்டையை என் கைவாகுக்கு ஏற்றபடி பிடித்துக்கொண்டு
சில சீட்டுகளைத் தள்ளிவிட்டு ஒரு சீட்டை மட்டும் பிடித்துக்கொண்டு “இது வேணும்” என்று
கடைக்காரரைப் பார்த்துச் சொன்னேன். அவர் உடனே அட்டையின் கிளிப்பைத் தளர்த்தி அதை மட்டும்
எடுத்துக் கொடுத்தார்.
இப்படியே நான்கு அட்டைகளிலிருந்தும்
நாற்பது சீட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். கடைக்காரர் அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து
மீண்டுமொருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு ”அண்ணே, இந்தாங்கண்ணே, அந்த மகாலட்சுமி உங்கள
கண் தெறந்து பார்க்கணும்” என்று சொல்லிக்கொண்டே பெரியப்பாவிடம் கொடுத்தார். புன்னகைத்தபடி
அவரும் அதை வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டார். பிறகு அந்தக் கடையைவிட்டு இறங்கி எங்கள்
கடையை நோக்கி நடந்து சென்றோம். வழியிலேயே ஒரு நோட்டுபுஸ்தகம் விற்கிற கடையில் நின்று
நான்கு வெள்ளைத்தாள்களையும் மூன்று கார்பன் தாள்களையும் வாங்கிக்கொண்டார்.
“அது எதுக்கு பெரியப்பா?”
“வா. வா. எல்லாத்துக்கும்
ஒரு காரணம் இருக்குது. சொல்றேன்”
கடைக்கு வந்ததுமே நாற்பது
சீட்டுகளையும் அப்பாவின் மிஷின் மேசை மீது வைத்தார் தெய்வநாயகம் பெரியப்பா. ஒவ்வொருவராக
அவற்றை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு வைத்தார்கள். “நல்லா மழமழன்னு வாசனையா
இருக்குது” என்று சிரித்தார் சண்முகம் பெரியப்பா.
வெள்ளைத்தாட்களையும் கார்பன்
தாட்களையும் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி, அடுக்கு குலைந்துவிடாதபடி குண்டூசியால் குத்தி
மேசை மீது வைத்தார் தெய்வநாயகம் பெரியப்பா. பிறகு நாற்பது சீட்டுகளின் வரிசை எண்களையும்
ஒவ்வொன்றாகப் பார்த்துப்பார்த்து தாளில் எழுதும்படி என்னிடம் சொன்னார். எனக்கு அருகிலேயே
நின்று என் எழுத்தில் பிழை எதுவும் நேர்ந்துவிடாதபடி அவர் கண்காணித்தார்.
முதலில் இதெல்லாம் எதற்கு
என்றே எனக்குப் புரியவில்லை. ஏதோ எழுதச் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். எழுதிய பின்னர்
ஒவ்வொரு தாளாகப் பிரித்து எடுத்த பிறகே அதற்கான காரணம் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது.
வரிசை எண்கள் எழுதப்பட்ட
ஒவ்வொரு தாளும் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது. வாங்கிய சீட்டு எண்கள் என்ன என்கிற விவரம்
அதில் எழுதப்பட்டிருப்பதால், சீட்டுகளை தனியாக யாரும் வைத்திருக்கத் தேவையில்லை. அவற்றைப்
பாதுகாப்பாக எங்காவது ஓரிடத்தில் வைத்துவிட்டு, அந்தச் சீட்டை மட்டும் வைத்துக்கொண்டால்
போதும். அதுதான் பெரியப்பாவின் திட்டம்.
அன்று இரவு வீட்டுக்க்
வந்ததும் அப்பா அந்தத் தாளை அம்மாவிடம் காட்டினார். அதை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு
“இத்தன நெம்பருங்க இருக்குதே, ஏதாச்சும் ஒரு நம்பருக்கு உழுந்தா சரி” என்று சிரித்துக்கொண்டே
அப்பாவிடம் திருப்பிக் கொடுத்தார் அம்மா.
“அப்படியே கொடுத்தா எப்படி?
உன் அதிர்ஷ்டம் என்ன சொல்லுது பார்ப்போம். எந்த நெம்பருக்கு பரிசு விழும், நீ தொட்டு
சொல்லு பார்ப்போம்” என்றார் அப்பா. ”ம்ஹூம். ம்ஹூம்” என்று தலையசைத்தபடி அம்மா தயங்கினார்.
அப்பா விடவில்லை. “அதெல்லாம் முடியாது. தொட்டு காட்டித்தான் ஆவணும்” என்று பிடிவாதமாகச்
சொன்னார் அப்பா.
அம்மா முதலில் சிணுங்கினார்.
”சரியான சிங்கநாதம் புடிச்ச ஆளா இருக்கியே, எதுக்கெடுத்தாலும் சின்னப்புள்ள மாதிரி
புடிவாதம்” என்று முனகியபடி “கொடு இங்க” என்று தாளை வாங்கினார். வேகமாக ஒரு பார்வையை
ஓட்டிவிட்டு நாற்பது எண்களில் ஓர் எண்ணைத் தொட்டுக் காட்டிவிட்டு “இப்ப திருப்திதான?”
என்று உதட்டைச் சுழித்து அழகு காட்டினார்.
“டேய், இந்த நெம்பருக்கு
எதுத்தாப்புல அம்மா பேர எழுது” என்று என்னிடம் சொன்னார் அப்பா. நான் உடனே பென்சிலை
எடுத்து அந்த எண்ணுக்கு எதிரில் சின்ன கோட்டை இழுத்து அம்மா என்று எழுதினேன்.
அடுத்து “ம். இப்ப நீ தொடு
பார்ப்போம். உன் அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு இருக்குது, பார்க்கலாம்” என்று என்னிடம்
சொன்னார். நான் ஆர்வத்தோடு அந்தத் தாளை வாங்கி மேலும் கீழுமாக இரண்டுமுறை பார்த்தேன்.
பிறகு கண்களை மூடிக்கொண்டு ஒரு நெம்பரைத் தொட்டேன். “இதான்” என்றேன்.
“சரி. உன் பேர அங்க நீயே
எழுதிக்கோ” என்றார் அப்பா. நான் அந்த எண்ணுக்கு எதிரில் கோடிழுத்து என் பெயரைக் குறித்தேன்.
அடுத்து அந்தத் தாள் என்
தங்கையிடமும் பிறகு தம்பியிடமும் சென்றது. அவர்கள் ஏதோ அதை ஒரு விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு
ஆர்வத்தோடு எண்களைத் தொட்டு சுட்டிக் காட்டினர். அந்த எண்களுக்கு எதிரில் நான் அவர்களுடைய
பெயர்களை எழுதி வைத்தேன்.
எல்லாம் முடிந்தது என்று
நினைத்தபோது “உங்க அப்பா நம்மள தொட வச்சிட்டு அவரு மட்டும் ஏமாத்தலாம்னு பார்க்கறாரு.
நீயும் தொடுப்பான்னு அவர நீ கேக்கமாட்டியா?” என்று என் தோளைத் தட்டிச் சொன்னார் அம்மா.
அப்போதுதான் எனக்கும் அது உறைத்தது. உடனே நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டோம். ”தொடு தொடு”
என்று தாளை அவருக்கு முன்னால் நீட்டினேன். அவர் அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே
அந்தத் தாளில் ஒரு நெம்பரைத் தொட்டார். அது நான் தொட்ட எண்ணுக்குக் கீழே இருந்தது.
நான் உடனே அந்த எண்ணுக்கு எதிரில் ஒரு கோட்டை இழுத்து அப்பா என்று குறித்துக்கொண்டேன்.
“அந்தச் சீட்டை அப்படியே
பொட்டிக்குள்ள வை. யாரு அதிர்ஷ்டக்காரங்கன்னு குலுக்கல் அன்னைக்கு கண்டுபிடிச்சிடலாம்”
என்று சொன்னார் அம்மா. உடனே நான் அதை மடித்து பள்ளிக்கூட சீருடைகளை மடித்து வைத்திருக்கும்
பெட்டிக்குள் வைத்தேன்.
“குலுக்கலுக்கு இன்னும்
எத்தனை நாளிருக்குது?”
“இன்னும் பன்னெண்டு நாள்
இருக்குது”
அதைக் கேட்டு தம்பி உடனே
விரல்விட்டு ஒன்று இரண்டு என எண்ணத் தொடங்கினான்.
அதிர்ஷ்டம் தொடர்பாக பேசத்
தொடங்கியதுமே எல்லோருக்கும் உற்சாகம் பிறந்துவிட்டது. பரிசுச்சீட்டு தொடர்பான உரையாடல்
வளர்ந்துகொண்டே சென்றது.
பேச்சோடு பேச்சாக திடீரென
”ஒரு லட்ச ரூபா கெடைச்சா என்ன செய்வ?” என்று அம்மாவிடம் முதலில் கேட்டார் அப்பா.
“மொதல்ல பரிசு கெடைக்கட்டும்.
அதுக்கப்புறம் அந்தப் பேச்ச வச்சிக்கலாம். யாரோ ஒருத்தி ஆக்கம் கெட்டவ என்னைக்கோ வரப்போற
அமாசைக்கு ஆக்கிப் படைக்கறதுக்கு இன்னைக்கே வாழை எலைய அறுத்துவந்து வச்சிகிட்ட கதையா
இருக்குது ஒன் கதை. மொதல்ல கைக்கு பணம் வரட்டும். மிச்சத்தை அப்பறமா பார்த்துக்கலாம்”
என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகச் சொன்னார் அம்மா.
“கிடைச்சமாதிரின்னு வச்சிக்கோ.
பட்டாணிக்கடைக்காரருக்குக் கெடைக்கும்போது நம்மளமாதிரி ஆளுங்களுக்குக் கெடைக்காதா என்ன?”
“தாராளமா கெடைக்கும். நானும்
கெடைக்கட்டும்னுதான சொல்றேன். சட்டியில இல்லாத மாவுல தோசை எத்தனை சுடறது, இட்லி எத்தன
சுடறதுன்னு கேக்கறதுல என்ன அர்த்தம் இருக்குது?”
“உத்தேசமா எதிர்காலத்துல
என்ன செய்யறது, எப்படி செய்யறதுன்னு ஒரு திட்டம் இருக்கணுமில்லயா? அதுக்காகத்தான் கேக்கறேன்”
“திட்டம்தான? பத்து திட்டம்
போட்டாதான் நமக்கு ஒன்னு ரெண்டாவது பலிக்கும்? நம்ம ராசி அப்படி?”
“சரி, இழுத்துகினே போவாத.
இதுக்கு என்ன திட்டம் சொல்லு”
அம்மா ஒரு கணம் அப்பாவின்
முகத்தை மெளனமாகப் பார்த்தார். பிறகு மெதுவாக “மொதல்ல ஒரு லட்சம் ஒரு லட்சம்னு சொல்றத
நிறுத்து” என்றார்.
“ஏன்?”
“நாலு பேரு கூட்டு சேர்ந்து
வாங்கற சீட்டுக்கு ஒரு லட்சம் உழுந்தா, ஒவ்வொரு
ஆளுக்கும் நாலுல ஒரு பங்குதான கெடைக்கும்? என்னமோ ஆளுக்கு ஒரு லட்சம் கெடைக்கும்ங்கற
மாதிரி சொல்ற?”
“ஓ. அதைச் சொல்றியா? நான்
அதைப்பத்தி யோசிக்கவே இல்லையே. நாலுல ஒரு பங்குதான் கெடைக்கும். இருபத்தஞ்சாயிரம்.
இப்ப என்ன அதுக்கு?”
“நம்ம திட்டம் அதுக்குள்ள
இருக்கணும். அதுக்காகச் சொல்றேன்”
“சரி, திட்டம் என்ன? அதச்
சொல்லு”
“இந்த செவுத்துக்கு வெள்ளை
அடிச்சி எத்தன வருஷம் ஆவுது? எப்படி கன்னங்கரேல்னு இருக்குது பாரு. மொதல்ல கீத்து, கூரை எல்லாத்தயும் மாத்தி வெள்ளையடிக்கணும். அப்பதான்
ஊடு லட்சணமா இருக்கும்”
“அப்புறம்?”
“அப்புறமும் இல்லை. விழுப்புரமும்
இல்லை. அவ்ளோதான். அந்த ஒரு வேலய திருத்தமா செஞ்சாவே போதும்”
அதற்கு மேல் அம்மா பேச
விரும்பவில்லை என்று தோன்றியது. அவர் பாயை விரித்து அதன் மீது போர்வையை விரிப்பதற்காக
எழுந்து நின்று உதறத் தொடங்கினார்.
உரையாடலின் தொடர்ச்சி அறுந்துவிடாதபடி
அப்பா என் பக்கமாகத் திரும்பி “சொல்லுடா, உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.
“எனக்கு வெள்ளை பேண்ட்.
வெள்ளை சட்டை. கருப்பு பெல்ட். ஷூ. எல்லாம் வேணும்” என்று உற்சாகத்தோடு அடுக்கினேன்.
“அவ்ளோதான? வாங்கிடலாம்.
விடு”
“எங்க வீட்டுப் பிள்ளைல
எம்.ஜி.ஆர். போட்டிருப்பாரே, அதே மாதிரி ஸ்டைலா வேணும்”
“நானே அந்த மாதிரி தச்சித்
தரேன். போதுமா?” என்று சொல்லிக்கொண்டே அப்பா தங்கையைப் பார்த்தார். “எனக்கு பெரிய சங்கிலி,
வளையல், ஜிமிக்கி எல்லாம் வேணும்” என்று முகத்தை நிமிர்த்திச் சொன்னாள் அவள். அப்பா
உடனே “என் மகாலட்சுமிக்கு கேட்டதெல்லாமே கெடைக்கும், சரியா?” என்று கன்னத்தைக் கிள்ளி
முத்தம் கொடுத்தார்.
அவர் கேட்காமலேயே தம்பி
அவர் தோளைத் தொட்டு “எனக்கு ஒரு பொட்டி சாக்லெட். ஒரு பொட்டி முறுக்கு. ஒரு பொட்டி
கமர்கட் வேணும்” என்றான். பெட்டியின் அளவை உணர்த்தும் வகையில் இரு கைகளையும் இரு பக்கங்களில்
விரித்துக் காட்டினான்.
அதைக் கேட்டு அப்பா சிரித்துக்கொண்டே
“உண்மையிலயே மனசுலேர்ந்து கேட்ட ஒரே ஆள் நீதான்டா. என் செல்லக்குட்டி. அது சரி, பிஸ்கட்ட
விட்டுட்டியே” என்று விடுபட்ட பொருளைச் சுட்டிக்காட்டினார். உடனே அவன் “ஆமாமாம். ஒரு
பொட்டி பிஸ்கட்” என்று சொன்னான்.
இதையெல்லாம் அப்பா திட்டமிட்டுக்
கேட்டாரா அல்லது ஒரு பேச்சுக்காகக் கேட்டாரா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குப் பிறகு கதை,
பேச்சு என செல்லும் எங்கள் உரையாடல் எப்படியோ அந்தப் பரிசுப்பணத்தின் திசையில் செல்லத்
தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நாங்கள் யோசித்து யோசித்து சொல்லும் புதுவகையான பொருட்கள்
சேர்ந்துகொள்வதால் எங்கள் விருப்பப்பட்டியல் கணக்கில்லாமல் நீண்டுகொண்டே சென்றது.
ஒவ்வொரு நாளும் நேரம் பார்த்து
அப்பாதான் அந்த உரையாடலைத் தொடங்குவார். நாங்கள் அனைவரும் பதில் சொல்கிறவர்களாகவே இருந்தோம்.
எதிர்பாராதபடி ஒருநாள் கேள்வி கேட்ட அப்பாவை இடைமறித்து “எங்களுக்கு என்ன வேணும் என்ன
வேணும்னு தெனமும் நீ கேக்கறியே, உனக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே. இப்ப சொல்லு.
என்ன உன் திட்டம்?” என்று கேட்டார் அம்மா.
“எனக்கா? எனக்கு ஒரு திட்டமும்
இல்லை. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா, எனக்கு அதுவே போதும். அதைவிட பெரிய திட்டம்
எதுவும் எனக்கு இல்லை” என்று உதட்டைப் பிதுக்கியபடி புன்னகைத்தார் அப்பா.
“அந்தக் கதையெல்லாம் வேணாம்.
என்ன வேணும்? அதை சொல்லு. எல்லாருக்கும் வாங்கறதுக்கு பணம் இருக்கும்போது உனக்குக்
கெடைக்கப்போற பரிசுப்பணத்துல உனக்குன்னு வாங்கறதுக்கு மட்டும் பணம் இல்லாம போயிடுமா?”
“உண்மையிலயே எனக்கு எதுவும்
வேணாம்” என்று அப்பா சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
உடனே “சரி, உனக்கு என்ன
வேணும்ன்னு நான் சொல்றேன்” என்று அவரைப் பேசவிடாமல் செய்தார் அம்மா.
“என்ன?”
“முதல்ல கடைக்கு உன் ஓட்டை
மிஷின மாத்திட்டு புதுசா ஒரு மிஷின் வாங்கற வழியைப் பாரு” என்றார். தொடர்ந்து ”திட்டம்
போடறாராம் திட்டம். எது முக்கியமோ அத விட்டுட்டு மத்ததுக்கெல்லாம் திட்டம் போடறாராம்”
என்று சிரித்துக்கொண்டே முணுமுணுத்தார். அதைக்
கேட்டு அப்பா எதுவும் பேசவில்லை. ஒரு கணம் அம்மாவின் முகத்தை ஆழமாகப் பார்த்துவிட்டு
“சரி, கடைக்கு ஒரு மிஷின். அதையும் சேர்த்துக்கலாம்” என்று அறிவித்தார்.
சாயங்கால நேரங்களில் கடைக்குச்
செல்லும் சமயங்களில் அங்கும் அதே பேச்சாகவே இருந்தது. எல்லாப் பெரியப்பாக்களும் சேர்ந்து
விருப்பப்பட்டியலை கூட்டியும் குறைத்தும் சரிப்படுத்தியபடியே இருந்தனர். மெல்ல மெல்ல
லாட்டரிச்சீட்டு உரையாடல் தினசரிப் பொழுதுபோக்காக மாறிவிட்டது.
ஒன்று, இரண்டு என ஒவ்வொரு
நாளாக நகர்ந்து நகர்ந்து பந்னிரண்டு நாள்களும் நகர்ந்துவிட்டன. அன்று மாலையில் சென்னையில்
குலுக்கல் நடந்திருக்கும். அங்கே இருப்பவர்களுக்கு அப்போதே செய்தி கிடைத்துவிடும்.
வெளியூர்க்காரர்கள் மறுநாள் விடிந்து செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள
வேண்டும்.
மாலை நேரத்தில் எல்லோருமே
பரபரப்பாக இருந்தனர். கடைத்தெருவே பரபரப்பாக இருந்தது.
“லட்சம் நமக்குத்தான்.
அந்தக் கடவுள் நம்மள கைவிடமாட்டாரு. எனக்கு உறுதியா நம்பிக்கை இருக்குது” என்று மீண்டும்
மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார் சண்முகம் பெரியப்பா.
“பணம் வச்சிருக்கிறவனுங்ககிட்டயே
போய் போய் பணம் சேர்றதுல என்ன அர்த்தம் இருக்குது? நம்ம மாதிரி சாமானியமான ஆளுங்ககிட்டயும்
பணம் வரணும். அதுக்காகத்தான இந்தக் குலுக்கல்சீட்டு. நமக்குத்தான் வரும்னு தோணுது.
விடிஞ்சா தெரிஞ்சிடும்” என்றார் தர்மலிங்கம் பெரியப்பா.
“இங்க பாரு. ரொம்ப எதிர்பார்த்து
கிடைக்காம போயிடுச்சின்னா ரொம்ப ஏமாத்தமா போயிடும். கிடைச்சிதுன்னு வை, யாரோ நாலு பேரால
நமக்குக் கிடைச்சிதுன்னு நெனைச்சிக்குவோம். கிடைக்கலைன்னு வை, நம்ம மாதிரி நாலு பேரால
வேற யாருக்கோ கிடைச்சிதுன்னு நெனச்சிக்குவோம். புரியுதா?” என்று பட்டும் படாமல் சொன்னார்
தெய்வநாயகம் பெரியப்பா.
“லட்சுமி நம்மகிட்ட வர
நேரமா இருந்தா, எவ்ளோ தடை இருந்தாலும் உடைச்சிகிட்டு வந்து சேர்ந்துருவா. ஒருவேளை அதுக்கான
நேரம் வரலைன்னு சொன்னா, அவளுக்கு உண்டான வழியில போயிகிட்டே இருப்பா. தானா வராதவள வா
வான்னு கைய புடிச்சா இழுக்கமுடியும்? இந்த தரம் இல்லைன்னு சொன்னா, அடுத்த தரமாச்சிம்
கெடைக்கும்னு நெனச்சி போயிட்டே இருக்கவேண்டிதுதான். அதுக்காக மூஞ்சிய கவுத்துகிட்டு
உக்காரமுடியுமா என்ன?” என்றார் அப்பா.
“அந்தத் தெளிவு இருந்தா
போதும். நம்ம வழியில நாம நிம்மதியா போயிகினே இருக்கலாம்” என்று நெஞ்சில் கைவைத்தபடி
சொன்னார் தெய்வநாயகம் பெரியப்பா.
வழக்கமாக பொங்கி வழியும்
உற்சாகமும் கனவும் அவர்களுடைய உரையாடலில் வெளிப்படவில்லை. மாறாக, எல்லோரும் ஒருவித
தெளிவோடும் ஞானத்தோடும் பேசினார்கள். அந்த
மாற்றம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நேரம் அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்துவிட்டு
அப்பா கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.
அடுத்தநாள் காலையிலேயே
அப்பா என்னிடம் சில்லறையைக் கொடுத்து சத்திரத்துக்குச் சென்று தினத்தந்தி வாங்கிவரும்படி
சொன்னார். வழக்கமாக பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் வழியிலிருக்கும் எம்.ஜி.ஆர். மன்றத்துக்குச்
சென்று தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அன்று காலையிலேயே
சொந்தமாக தினத்தந்தி வாங்குவதால், எல்லோருக்கும் முன்னால் கன்னித்தீவு படிக்கப் போகிறோம்
என்கிற எண்ணத்தால் எனக்கு சிறகு முளைத்ததுபோல இருந்தது. ஒரே ஓட்டமாக ஓடி செய்தித்தாளை
வாங்கினேன். அங்கேயே ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று ஒரு கணம் செய்தித்தாளைப் புரட்டி
கன்னித்தீவு கதைவரிகளைப் படித்துமுடித்தேன். அந்தச் சித்திரங்களின் கோடுகளையும் பார்த்து
ரசித்தேன். பிறகு மீண்டும் ஓட்டமாக ஓடி வந்து செய்தித்தாளை அப்பாவிடம் கொடுத்தேன்.
அப்பா பரிசுச்சீட்டு எண்கள்
குறிக்கப்பட்ட தாளை கையில் வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருந்தார். “வா. வா. வந்து
நீயும் நெம்பர் இருக்குதான்னு பாரு” என்றபடி என்னையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார்.
பரிசு எண்கள் அறிவிக்கப்பட்டிருந்த
பக்கத்தைப் புரட்டிவைத்துக்கொண்டு நான் முதல் எண்ணைத் தேடினேன். முதல் பரிசு, இரண்டாம்
பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு என எல்லாத் தொகுப்பிலும் தேடிப் பார்த்துவிட்டேன்.
எங்கள் எண் அந்தப் பட்டியலில் இல்லை.
நான் அப்பாவின் முகத்தை
ஏமாற்றத்துடன் பார்த்தேன். அவர் புரிந்துகொண்டார். “சரி சரி. அதை விடு. அடுத்த நெம்பர
பாரு” என்று தொடர்ந்து செல்லும்படி தலையசைத்தார். அம்மா அதற்குள் வீட்டிலிருந்து நீராகாரச்
செம்போடு வெளியே வந்து அப்பாவிடம் கொடுத்தார். பிறகு “என்னடா, நெம்பர் இருக்குதா?”
என்று என்னிடம் கேட்டார். “தோ, பார்த்துகிட்டே இருக்கேம்மா” என்று பொதுவாகச் சொன்னேன்.
அவரும் சுவரோரமாக வந்து உட்கார்ந்துகொண்டார்.
நான் அடுத்த எண்ணை வைத்துக்கொண்டு
முதலிலிருந்து தேடினேன். எங்கும் இல்லை. என்ன
சொல்வது என்று புரியாமல் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். “போ, போ, அடுத்து போ” என்றார்
அப்பா. மெதுவாக நீராகாரத்தை குடித்துவிட்டு செம்பை கீழே வைத்தார்.
நான் நாற்பது எண்களையும்
ஒன்றுவிடாமல் பார்த்தேன். எதுவும் இல்லை. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அப்பாவின்
முகத்தில் எந்த ஏமாற்றமும் தெரியவில்லை. உறுதியாக இருப்பதுபோலவே இருந்தது. கடைசியாக
“சரி, எடுத்து வச்சிட்டு படிக்கிற வேலையை பாரு” என்று சொல்லிவிட்டு ஏரிக்கரையின் திசையில்
நடந்து போனார்.
“என்னடா பார்க்கிற நீ?
இங்க குடு” என்றபடி செய்தித்தாளையும் எண்கள் எழுதிய தாளையும் அம்மா என்னிடமிருந்து
வாங்கிக்கொண்டார். பிறகு ஒவ்வொரு எண்ணாக அவரே பார்த்தார். பிறகு இரண்டையும் சுவரோரமாக
ஒதுக்கிவிட்டு “ஆத்தமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அரிவாளாம்” என்று முணுமுணுத்துக்கொண்டே
எழுந்தார். “இதோ வெடிக்கப்போவுது இதோ வெடிக்கப்போவுதுன்னு சொல்லிட்டே இருந்தாரு. கடைசியில
எல்லாமே புஸ்வாணமாயிடுச்சா?” என்று சலித்துக்கொண்டார். “இந்த லட்சணத்துல லட்ச ரூபா
விழுந்தா என்ன செய்யலாம், கோடி ரூபா விழுந்தா என்ன செய்யலாம்னு ஆயிரம் கதை. ஆயிரம்
பாட்டு. உங்க அப்பா வாயாலயே உலகத்தை அளந்துருவாரு” என்பதுபோல நினைத்து நினைத்து ஏதாவது
ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
சாயங்காலம் கடைக்குச் சென்றிருந்தபோது
எல்லோரும் சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய உரையாடலில் பெரிய ஏமாற்றம்
எதையும் யாரும் காட்டிக்கொள்ளவில்லை. சண்முகம் பெரியப்பா மட்டும் “இத இப்படியே விட்டுடக்கூடாது.
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு ஓடறதுக்கு நாம ஒன்னும் நரி கிடையாது. எப்படியாவது
அந்தப் பழம் நம்ம கைக்கு வந்தே ஆகணும். அதுவரைக்கும் முயற்சி செஞ்சிகினே இருப்போம்”
என்று உற்சாகம் ஊட்டுவதுபோல சொல்லிக்கொண்டிருந்தார். தெய்வநாயகம் பெரியப்பா “பார்க்கலாம்
பார்க்கலாம்” என்று பொதுவாகச் சொன்னார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு
சண்முகம் பெரியப்பாவின் குரலில் பிடிவாதம் தெரியத் தொடங்கியது. “பத்து ரூபாய்தான? போடுங்கப்பா”
என்று மற்றவர்களை வற்புறுத்தத் தொடங்கினார். அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடுத்த
இரு நாட்களில் ஆளுக்கு பத்து ரூபாய் திரட்டி தெய்வநாயகம் பெரியப்பாவிடம் கொடுத்துவிட்டனர்.
பரிசுச்சீட்டு விற்கும்
கடைக்குப் புறப்படும் அன்று ”நான் வரலை. எனக்குத்தான் ராசி இல்லை போல இருக்குது. நீங்க
மூனு பேரும் போய் வாங்க” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் தெய்வநாயகம். அப்பா எவ்வளவோ
வற்புறுத்தியும் அவர் ஆர்வம் காட்டவில்லை. அப்பாவோடு தர்மலிங்கம் பெரியப்பா, சண்முகம்
பெரியப்பா இருவரும் புறப்பட்டார்கள். நானும் அவர்களோடு சென்றேன். அந்த முறையும் நான்தான்
சீட்டுகளை எடுத்துக் கொடுத்தேன். நாற்பது ரூபாய்க்கு நாற்பது சீட்டுகள். திரும்பி வரும்
வழியில் வெள்ளைத்தாட்களை மட்டும் வாங்கிக்கொண்டேன். போன முறை வாங்கிய கார்பன் தாட்கள்
அப்படியே கடை ரெஜிஸ்டரில் இருந்தன. கடைக்கு வந்ததும் சீட்டு எண்களைப் பட்டியலிட்டு
எழுதி, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தாளைக் கொடுத்தேன்.
ஒரு மாதம் வரைக்கும் பரிசு
பற்றிய எதிர்பார்ப்புகள் அடங்கிய உரையாடல்களால் ஒவ்வொரு சாயங்காலமும் பொழுது போவது
தெரியாமல் வேகமாகக் கழிந்தது. குலுக்கல்நாள் நெருங்க நெருங்க, வேறு எந்த விஷயமும் பேச
முடியாதபடி, பரிசின் எதிர்பார்ப்பு மட்டுமே எங்கள் நெஞ்சில் நிறைந்திருந்தது.
துரதிருஷ்டவசமாக, அந்த
மாதக் குலுக்கலிலும் நாங்கள் வாங்கியிருந்த எந்த எண்ணுக்கும் எந்தப் பரிசும் கிடைக்கவில்லை.
லட்சரூபாய் பரிசு கோயம்பத்தூருக்குப் பக்கத்தில் யாரோ ஒரு பஞ்சு வியாபாரிக்குக் கிடைத்திருந்தது.
அவருடைய படமும் குடும்பப்படமும் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
”மாசத்துல பத்து ரூபாய்
பெரிய செலவா இருக்குது, இத்தோடு நம்ம பரிசோதனை முயற்சியை நிறுத்திக்கலாம். இனிமேல பரிசுச்சீட்டு
பக்கமே போகவேணாம்” என்று பின்வாங்கினார் அப்பா. “இன்னும் ரெண்டு தரம் பார்ப்போம் பலராமா.
அதோடு சரி. அதுக்கப்புறம் தலை முழுகிடலாம்” என்றார் தர்மலிங்கம் பெரியப்பா. எல்லோரைவிடவும்
அவர்தான் வயதில் மூத்தவர். வேறு வழியில்லாமல் எல்லோருமே அதற்கு ஒப்புக்கொண்டனர்.
பரிசுச்சீட்டு வாங்குவதற்கு
தர்மலிங்கம் பெரியப்பாவும் சண்முகம் பெரியப்பாவும் மட்டும் சென்றார்கள். அவர்களுக்கு
உதவியாக நானும் சென்றேன். வழக்கம்போல பரிசுச்சீட்டு எண் விவரங்களை தாளில் எழுதி ஆளுக்கொன்றாக
பிரித்துக் கொடுத்தேன்.
குலுக்கல் நாள் நெருங்கியபோதும்,
யாருக்கும் பதற்றம் இல்லை. எல்லோரும் சாதாரணமாகவே நடந்தார்கள். பேசினார்கள். தூங்கி
எழுந்தார்கள். “பரிசு விழுந்தா என்ன செய்வே?” என்று பேச்சுக்குக்கூட யாரும் யாரிடமும்
கேட்கவில்லை. அப்படி கேட்பதே நகைச்சுவையாக மாறிவிட்டது.
பரிசு விவரம் வெளிவந்த
அன்று கூட எந்தப் பரபரப்பும் யாரிடமும் இல்லை. காசு கொடுத்து செய்தித்தாள் வாங்கவேண்டாம்
என்று சொல்லிவிட்டார் அப்பா. எம்.ஜி.ஆர்.மன்றம் திறக்கும் வரைக்கும் காத்திருந்து செய்தித்தாள்
போட்ட பிறகு சென்று பரிசுப்பட்டியலில் எண் விவரம் இருக்கிறதா என்று நான் மட்டும் சென்று
பார்த்துவிட்டுத் திரும்பினேன். ஒரு எண்ணுக்கும் பரிசு இல்லை. நான் உற்சாகமின்றி மெதுவாக
நடந்துவருவதைப் பார்த்ததுமே அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. எதுவும் கேட்கவில்லை. அம்மா
மட்டும் “என்னடா? என்னாச்சி? ஒரு லட்சமா, ரெண்டு லட்சமா? எவ்ளோ கெடைச்சிது?” என்று
கேள்விகளை கிண்டலாக அடுக்கிக்கொண்டே சென்றார். நான் த்ச் என்று நாக்கைச் சப்புக்கொட்டிவிட்டு
“எதுவுமில்லை” என்று அடங்கிய குரலில் சொன்னேன். “தரித்திரம் புடிச்சவன் தலைமுழுக போனானாம்.
சமுத்திரத்தண்ணி தரைமட்டத்துல ஓடிச்சாம்” என்று முணுமுணுத்தபடியே பின்கட்டுக்குச் சென்றார்
அம்மா. “சீட்டுசீட்டுனு செலவு பண்ண பணத்துக்கு பத்து படி அரிசி வாங்கி போட்டிருந்தாலாவது
ஒரு வாரத்துக்கு சோத்து பிரச்சினை இல்லாம போயிருக்கும்” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்த
அவர் குரல் நெடுநேரம் வரைக்கும் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு வாரம் கழித்து கடைக்குச்
சென்றிருந்த சமயத்தில் பரிசுச்சீட்டு வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.
சண்முகம் பெரியப்பாவைத் தவிர வேறு யாருக்கும் ஆர்வமில்லை. “எனக்காக ஒரே ஒருதரம் எல்லோரும்
கூட்டு சேருங்கப்பா. இந்த முறை நமக்கு விழலைன்னா, இனிமேல அந்தப் பக்கமே திரும்பிப்
பார்க்கவேணாம். தலைமுழுகிடலாம்” என்று கேட்டுக்கொண்டார்.
சீட்டு விவகாரத்தில் எல்லோருக்கும்
ஆர்வம் வற்றிவிட்டது. ஒருவருக்கும் அதில் விருப்பமில்லை. சண்முகம் பெரியப்பா மீண்டும்
மீண்டும் வற்புறுத்தியதால் எல்லோரும் கூட்டாளிகளாகச் சேர்ந்துகொண்டனர்.
அந்த முறை சின்னதாக ஒரு
பரிசாவது விழும் என்று சண்முகம் பெரியப்பா மிகவும் ஆவலோடு காத்திருந்தார். பரிசு விழுந்த
இடங்கள் சேலம், கன்னியாகுமரி, கோயம்பத்தூர் என ஒரு சுற்று சுற்றி முடித்துவிட்டதால்
அந்த முறை விழுப்புரம் பக்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் பரிசு என்று ஏதேதோ ஆராய்ச்சி
செய்த பிறகு அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த முறையும் முடிவு ஏமாற்றமளிப்பதாகவே
இருந்தது.
“போதும் போதும் இந்த விளையாட்டு.
இனிமே ஒத்த ரூபாய்க்குக் கூட சீட்டு வாங்கலாம்ங்கற பேச்சுக்கே இடமில்லை. இந்தச் சீட்டு
விவகாரமே நம்ம மாதிரி ஏழைபாழைங்களுக்கு என்னமோ வசியமருந்து வச்சமாதிரி இருக்குது”
தெய்வநாயகம் பெரியப்பா
கசப்போடு சொன்னார். “ஆமாமாம். அதுதான் சரி” என்று அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.
பத்து நாட்கள் வரைக்கும்
கடையில் அதைப்பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. பதினொன்றாம் நாள் சண்முகம் பெரியப்பா
மனம் மாறி மீண்டும் சீட்டு வாங்கும் திட்டத்தைத் தெரிவித்தார். அந்த முறை அவருக்கு
யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
சண்முகம் பெரியப்பாவும்
எளிதில் பினவாங்குபவராக இல்லை. மீண்டும் மீண்டும் வலை விரித்தபடி இருந்தார். யாரும்
அவர் சொல்லுக்கு மயங்கவில்லை. இறுதியாக “சரிப்பா, நீங்க யாரும் வரவேணாம். நான் மட்டும்
வாங்கப் போறேன். நாளைக்கு ஒருவேளை எனக்கு பரிசு கெடைச்சதும் ஐயோ எங்களை ஏன் கூப்பிடலைன்னு
யாரும் சொல்லக் கூடாது. அத மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோங்க” என்று சோர்வோடு சொல்லிவிட்டுச்
சென்றார். “தாராளமா வாங்கிக்குக்க சண்முகம். நீ வாங்கற பரிசுல பங்குக்கு யாரும் வரமாட்டாங்க”
என்றார் தெய்வநாயகம் பெரியப்பா.
“நாப்பது சீட்டு வாங்கப்
போறேன்”
அதைக் கேட்டு தெய்வநாயகம்
அதிர்ச்சியடைந்தார். “அவ்ளோ பணத்துக்கு எங்கய்யா போவ? ஆசையா இருந்தா ஏதோ அஞ்சி ரூபாய்க்கு
வாங்கு. பத்து ரூபாய்க்கு வாங்கு அத விட்டுட்டு நாப்பது வாங்கப் போறேன்னு சொல்ற”
“வழக்கமா நாம நாப்பதுதான
வாங்கற பழக்கம்”
“கூட்டு சேர்ந்து வாங்கறதுக்கும்
தனியா வாங்கறதுக்கும் வித்தியாசம் இல்லையா? யோசிச்சி செய். அந்தப் பணத்துக்கு முப்பது
நாப்பது படி அரிசி கெடைக்கும்”
சண்முகம் பெரியப்பா அதைக்
காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. எப்படியோ பணத்தைப் புரட்டி நாற்பது சீட்டு வாங்கிவிட்டார்.
“எனக்கு மட்டும் தனியா
பரிசு விழப்போவுது. அதைப் பார்த்து ஐயோ நாம கூட்டு சேரலையேன்னு நெனச்சி நெனச்சி நீங்க
எல்லாரும் ஏங்கப் போறீங்க” என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டே இருந்தார். “ஏன் சண்முகம்?
நம்ம கூட்டத்துல நீ ஒரு ஆளு பெரியவனா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம்தானப்பா. இந்தப்
பணம் வந்தா நம்மள பிரிச்சிடப் போவுது?” என்றார் தர்மலிங்கம் பெரியப்பா.
அந்த முறையும் சண்முகம்
பெரியப்பாவுக்கு பரிசு விழவில்லை. மனத்தளவில் அவர் மிகவும் உடைந்துவிட்டார். அவர் கடைப்பக்கம்
வருவதையே சில நாட்களுக்கு நிறுத்திவிட்டார். தெய்வநாயகம் பெரியப்பாதான் டீ அருந்தும்
சமயங்களில் அவரை அவ்வப்போது சாக்குக்கடைக்குச் சென்று கடைப்பக்கம் அழைத்துக்கொண்டு
வருவார்.
கூட்டத்திலிருந்து ஒதுங்கி
ஒதுங்கிச் சென்றாலும் சண்முகம் பெரியப்பா சீட்டு வாங்குவதை நிறுத்தவில்லை. கொஞ்சம்
கொஞ்சமாக பரிசுச்சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். மாதங்கள் உருண்டபடி
இருந்தன. ஒருமுறை கூட அவர் வாங்கிய சீட்டுக்கு ஒரு நூறு ரூபாய் கூட பரிசு விழவில்லை.
ஆனால் அவரால் பரிசுச்சீட்டுகளை வாங்காமல் இருக்கவே முடியவில்லை. முன்புபோல கடையில்
அதைப்பற்றி பொதுவில் பேசுவதே இல்லை. சீட்டு பற்றிய பேச்சே இல்லை என்பதால், அவர் தொடர்ச்சியாக
சீட்டு வாங்குவது குறித்து பெரிய அளவில் ஒருவருக்கும் தெரியாமலும் இருந்தது.
ஒருநாள் சாயங்காலம் சண்முகம்
பெரியப்பாவின் சாக்குக்கடை முன்னால் ஒரே சத்தமாக இருந்தது. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள்
அங்கே கூட்டம் சேர்ந்துவிட்டது.
”பலராமா. நம்ம சண்முகம்
கடைமுன்னால என்னமோ சண்டை நடக்குது. வா வா. என்னன்னு பார்த்துட்டு வரலாம்” என்று சத்தம்
கொடுத்தார் தெய்வநாயகம் பெரியப்பா. அப்பா உடனே கடையிலிருந்து இறங்கி அவருக்குப் பின்னாலேயே
சென்றார். அவருக்குப் பின்னால் தர்மலிங்கம் பெரியப்பாவும் சென்றார். எல்லோருக்கும்
பின்னால் நானும் சென்றேன்.
“சோத்த தின்னறியா? வேற
ஏதாச்சிம் தின்னறியா? கெடா மாதிரி வளர்ந்திருக்கியே, வாங்கன கடன கொடுக்கணும்ங்கற அறிவு
வேணாம்? சொளயா நூறு ரூபாய வாங்கிட்டு போன இல்ல. வாராவாரம் பத்து ரூபாய் கட்டறேன்னு
சொல்லித்தான வாங்கிட்டு போன. சொன்ன மாதிரி செஞ்சியா நீ? யோக்கியனா நீ? மானரோஷம் எதுவும்
கெடையாதா ஒனக்கு?”
அவர் போட்ட சத்தம் கடைத்தெரு
முழுதும் எதிரொலித்தது. கழுத்தில் பட்டையாக
ஒரு செயின் போட்டுக்கொண்டிருந்தார் அவர். சண்முகம் பெரியப்பா அவருக்கு முன்னால் தலைகுனிந்து
நின்றார். எல்லோரும் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். அவரைப் பார்த்துப் பேசவே
எல்லோருமே அஞ்சினர்.
ஒருவரும் எதிர்பாராதவகையில்
அப்பா அந்தப் பட்டை செயின் போட்டிருந்தவருக்கு அருகில் சென்று “நீங்க கடன் கொடுத்தவரு.
அவரு கைநீட்டி கடன் வாங்கினவரு. நீங்க கடுமையா பேசுங்க. நான் வேணாம்னு சொல்லலை. கொடுத்த
பணம் வரலையேன்னு ஒரு நெருப்பு உங்களுக்குள்ள எரியுது. அது அப்படி பேசச் சொல்லுது. அதெல்லாம்
புரியுது. அதுக்காக வயசுல பெரியவரை இப்படி கடைத்தெருவுல வச்சி அசிங்கப்படுத்தலாமாண்ணே”
என்று பொறுமையாக மன்றாடும் குரலில் சொன்னார்.
அதைக் கேட்டதும் செயின்காரரின்
குரல் மாறியது. “நீ சாக்கு தைக்கிற தொழில் பண்ற. நான் வட்டிக்கு விடற தொழில் பண்றேன். தொழில்ல நமக்கு நாணயம் வேணுமா வேணாமா? நீயே சொல்லு”
என்று நியாயத்துக்கு அழைத்தார்.
“வேணும்ண்ணே. யாரா இருந்தாலும்
நாணயம் வேணும்ண்ணே. நாணயம் போச்சின்னா மனுஷனா இருக்கறதுலயே அர்த்தம் இல்லைண்ணே”
“எங்கிட்ட சொல்றது போதாது.
அந்த நாய்கிட்ட சொல்லு. நல்லா ஒறைக்கிறமாதிரி எடுத்துச் சொல்லு. அப்பவாச்சிம் புத்தி
வரட்டும்”
“சரிங்கண்ணே. நான் சொல்லி
அவருக்கு புரியவைக்கறேன். இத்தோடு விட்டுடுங்கண்ணே.”
“விட்டுட்டு நான் எங்க
போவறது? வாரா வாரம் எனக்கு யாரு பணம் கொடுப்பா?”
“கொடுப்பாருண்ணே. நான்
சொல்லி வைக்கறேன். இனிமேல வாராவாரம் ஒழுங்கா
ஒங்க பணம் ஒங்க கைக்கு வந்துரும்”
ஒருகணம் செயின்காரர் அப்பாவையும்
சண்முகம் பெரியப்பாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு கரகரத்த குரலில் ”ஒருவேளை வரலைன்னா?”
என்று கேள்வி கேட்டார்.
“வரும்ண்ணே. நம்புங்கண்ணே”
“வரலைன்னா என்ன செய்யறது?
அதுக்கு பதில் சொல்லு”
அப்பா ஒருகணம் ஆழமாக மூச்சை
இழுத்துவிட்டார். சண்முகம் பெரியப்பாவின் பக்கம் பார்த்தார். “அவரு கொடுக்கலைன்னா நான்
கொடுக்கறேண்ணே. போதுமா?” என்றார்.
செயின்காரர் ஒருகணம் திகைத்து
நின்றுவிட்டார். அப்பா அப்படி பொறுப்பேற்றுக்கொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
சண்முகம் பெரியப்பாவும் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்துவிட்டு கண் கலங்கினார்.
செயின்காரர் ஒன்றும் பேசாமல்
தன்னுடைய வண்டியை நோக்கி நடந்து சென்றார். ”இங்க பாரு. தையக்கடைக்காரரே. ஒங்க பேச்ச
நம்பி நான் போறேன். அந்த ஆள் கொடுக்கலைன்னா அடுத்த நிமிஷம் ஒங்க கடை முன்னால வந்து
நிப்பேன். ஞாபகம் இருக்கட்டும். ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டு யாருடைய முகத்தையும்
பார்க்காமல் போய்விட்டார். கூடியிருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. தெய்வநாயகம்
பெரியப்பா சண்முகம் பெரியப்பாவின் தோள் மீது
ஆறுதலாகக் கைவைத்து தட்டிக் கொடுத்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு கடைப்பக்கமாக அழைத்து
வந்தார். சைக்கிள் கடையில் இருந்த அண்ணனிடம் பணம் கொடுத்து “சூடா நாலு டீ வாங்கிட்டு
வா. ஓடு” என்று அனுப்பினார்.
“ஒனக்கு எதுக்கு நூறு ரூபா?
அந்த அளவுக்கு என்ன முடை? அவன் ஒரு மலைமுழுங்கி. அவன்கிட்ட போய் கை நீட்டியிருக்க?”
என்று அடுக்கடுக்காக சண்முகம் பெரியப்பாவிடம் கேள்விகளைக் கேட்டார் தெய்வநாயகம் பெரியப்பா.
முதலில் சிறிது நேரம் அமைதியாக இருந்த சண்முகம்
பெரியப்பா தலைகுனிந்தபடி ”இந்த பாழா போன லாட்டரி சீட்டு வாங்கறதுக்காக……” என்று
இழுத்தார். அவரால் தொடர்சியாக பேச முடியவில்லை. அழுகை வந்து தடுத்தது
நான் அங்கேயே நெடுநேரமாக
நிற்பதை அப்போதுதான் கவனித்த அப்பா மிஷின் டிராயரைத் திறந்து பணத்தை எடுத்து “இந்தா.
அம்மாகிட்ட குடு. இதான் இருக்குதுன்னு சொல்லு” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
சண்முகம் பெரியப்பாவைப்
பார்க்க பாவமாக இருந்தது. நான் அவரை திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டுக்கு
நடந்து சென்றேன்.
பணத்தை அம்மாவிடம் கொடுத்ததும்
ஒருமுறை அவர் எண்ணிப் பார்த்தார். “இதத் தூக்கிட்டு வரதுக்கு ஒனக்கு இவ்ளோ நேரமா?”
என்று கேட்டார். கடைத்தெருவில் நடந்ததை உடனே அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று சொற்கள்
திரண்டெழுந்தன. ஆனால் ஏதோ ஓர் இனம்புரியாத விசை எல்லாச் சொற்களையும் அப்படியே உள்ளிழுத்துவிட்டது.
அம்மா என்னையே பார்த்தார். “என்னடா? என்னமோ சொல்லவந்த?” என்றார். நான் தலையாட்டியபடியே
“ஒன்னுமில்லம்மா” என்றேன்.
அப்பா அன்று இரவு சீக்கிரமாகவே
வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அவர் கொடுத்த கடைச்சாவியை வாங்கி மாடத்தில் வைத்தபடி
“பையனை கடையில ஏதாச்சிம் சொன்னியா?” என்று அம்மா அப்பாவிடம் கேட்டார். “ஏன்? நான் ஒன்னும்
சொல்லலையே” என்றார் அப்பா. “வந்ததுலேர்ந்து மூஞ்சி ஒருமாதிரி இருந்திச்சி. என்னடான்னு
கேட்டேன். ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டான். அதான் ஒன்கிட்ட கேட்டேன்” என்றார் அம்மா.
“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று பதில் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்தார் அப்பா. அவர்
என்னைப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு நான் புத்தகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.