Home

Sunday 24 December 2023

திண்ணை வைத்த வீடு

 

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு வீடுகளும் திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்தன. சிமெண்ட் பூசிய திண்ணை எப்போதும் குளிர்ந்திருக்கும். ஒவ்வொரு திண்ணையும் பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது. வழவழப்பான உருண்ட உயரமான மரத்தூண்கள் திண்ணைகளுக்கு அழகு சேர்க்கும்.

எல்லாத் திண்ணைகளிலும் பெரும்பாலான சமயங்களில் கேழ்வரகு அல்லது கம்பு பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.  அதற்குப் பக்கத்திலேயே ஒரு தாத்தா அல்லது பாட்டி காவலுக்கு உட்கார்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட திண்ணைகளை சிறுவர்களால் நெருங்கவே முடியாது. ”என்னடா வேணும்?”  என்று அதட்டுவார்கள். அல்லது “போ போ” என்று விரட்டிவிடுவார்கள். அந்த வரிசையில் தங்கமுத்து அண்ணன் வீட்டுத் திண்ணை மட்டும் ஒரு பெரிய விதிவிலக்கு.

எந்த நேரத்திலும் சிறுவர்கள் அந்தத் திண்ணைக்குச் சென்று விளையாடலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து கதை பேசலாம்.  அந்தத் திண்ணையின் மூலையில் எப்போதும்  நிறைத்துவைக்கப்பட்ட ஒரு தண்ணீர்க்குடம் இருக்கும். தட்டு போட்டு மூடி, அதன் மீது ஒரு தம்ளரும் வைத்திருப்பார்கள். தாகமாக இருக்கும்போது அந்தக் குடத்திலிருந்து யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுத்துக் குடிக்கலாம். தங்கமுத்து அண்ணனும் அவர் அம்மாவும் அந்தச் சுதந்திரத்தை சிறுவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள்.

திண்ணையை ஒட்டி வாசலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நந்தியாவட்டை மரம் நின்றிருக்கும். அம்மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் வெள்ளைவெளேரென பூக்கள் பூத்து அடர்ந்திருக்கும். பிள்ளையார் கோவிலுக்குப் போகிறவர்கள் அந்த மரத்தடியில் நின்று கைநிறைய பூக்களைப் பறித்துக்கொண்டு செல்வார்கள். அந்த வீட்டில் தங்கமுத்து அண்ணனும் அவருடைய அம்மாவும் மட்டும்தான் இருந்தார்கள். பூப்பறித்துச் செல்பவர்களுக்கும் அவர்கள் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்.

தங்கமுத்துவின் அப்பாவை நான் பார்த்ததில்லை. அவர் முருகக்கடவுள் மீது ஆழ்ந்த பக்தியுள்ளவர் என்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருகனுக்குப் பூஜை செய்யும் பழக்கம் உள்ளவர் என்றும் ஒருமுறை மைலம் மலைமீது குடியிருக்கும் முருகன் தரிசனத்தைப் பார்ப்பதற்கு வளவனூரிலிருந்து பாதயாத்திரையாகவே சென்றார் என்றும் திரும்பி வரும்போது வழியில் ஒரு மாடு முட்டி பள்ளத்தில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டார் என்றும் சொல்வார்கள். தங்கமுத்து அண்ணன் சின்னக்குழந்தையாக இருந்த சமயத்தில் நடந்த விபத்து அது.

தங்கமுத்து அண்ணன் வாட்டசாட்டமாக இருப்பார். நல்ல உயரம். மாநிறம். அழகான உருண்ட கண்கள். அடர்த்தியான தலைமுடி. நடிகர் ஜெய்சங்கர் மாதிரி முழுநெற்றியும் பளிச்சென தெரிகிற மாதிரி தலைமுடியை மேலே ஏற்றி அழகாக படியப்படிய சீவியிருப்பார். நல்ல சிரித்த முகம்.

நான் படித்த கோவிந்தையர் பள்ளியில்தான் அவரும் படித்ததாக அடிக்கடி சொல்வார். அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக இருந்த ராமதாஸ் சார், வள்ளி டீச்சர், துரை சார் எல்லோரையும் அவர் தெய்வங்கள் என்றுதான் குறிப்பிடுவார். படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தபோதும்  ஆங்கிலப்பாடமும் கணக்குப்பாடமும்  அவருக்கு சிக்கல்களாக இருந்தன. அதனால் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தங்கித்தங்கி படித்துவிட்டு பதினெட்டு பத்தொன்பது வயதில்தான் அவர் எட்டாவது வகுப்பைக் கடந்தார்.

அண்ணனை உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அவருடைய அம்மாவுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அண்ணனுக்கு படிப்பைத் தொடர்வதில் நாட்டமில்லை. மீசை முளைத்து இளைஞனாக மாறியிருக்கும் கோலத்தில், தன்னைவிட வயது குறைந்த சிறுவர்களோடு சேர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கும் பாடம் படிப்பதற்கும் அவர் கூச்சப்பட்டார். அதனால் படித்தவரைக்கும் போதும் என அவராகவே நின்றுவிட்டார்.

தங்கமுத்து அண்ணனிடம் ஒரு பழைய ஹெர்குலிஸ் சைக்கிள் இருந்தது. அது திண்ணைக்குப் பக்கத்திலேயே எப்போதும் நின்றிருக்கும். அண்ணன் அந்த சைக்கிளை பளபளவென்று துடைத்து சுத்தமாக வைத்திருப்பார். இரு கைப்பிடி விளிம்புகளிலும் பன்னீர்ப்பூ போன்ற அமைப்பில் பச்சைவண்ண பிளாஸ்டிக் கொத்து தொங்கியபடி இருக்கும். இருக்கையின் உறைகளை அடிக்கடி அவர் மாற்றிக்கொண்டே இருப்பார். ஒருநாள் பச்சை நிறத்தில் இருக்கும். இன்னொருநாள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஐந்தாறு நாளுக்குப் பிறகு நாவல் பழ நிறத்தில் ஒரு புதிய உறை இருக்கும். அண்ணனுக்கு அது ஒரு பொழுதுபோக்கு.

ஒவ்வொரு நாளும் தங்கமுத்து அண்ணன் கருக்கலில் கோழி கூவுகிற நேரத்தில் எழுந்துவிடுவார். பல்துலக்கி உடை மாற்றிக்கொண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார். சைக்கிளை மிதிக்கத் தொடங்கும்போது அவருக்கு எந்தத் திசையில் செல்லலாம் என்று தோன்றுகிறதோ, அந்தத் திசையில் சைக்கிளை மிதித்துக்கொண்டு செல்வார். கிழக்குத் திசையில் திரும்பினால் திருபுவனை வரைக்கும் சென்றுவிட்டுத் திரும்புவார். மேற்குத் திசையில் திரும்பினால் விழுப்புரம் மாதாகோவில் வரைக்கும் சென்றுவிட்டுத் திரும்புவார். தெற்கே புறப்பட்டால் மடுகரை அவருடைய எல்லையாக இருக்கும். வடக்கே புறப்பட்டால் முண்டியம்பாக்கத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புவார்.

சைக்கிள் பயணத்தை முடித்துக்கொண்டு வேர்வை சொட்டச்சொட்ட வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் பளபளவென்று விடிந்திருக்கும். அப்போது அவருடைய அம்மா வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருப்பார். அம்மாவிடம் ஏதாவது பேசுவார். அம்மா கோலம் போட்டபடி அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அந்தப் பதில்களைக் கேட்டுக்கொண்டே அண்ணன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து திண்ணைக்குப் பக்கத்தில் நிறுத்திவிடுவார்.

திண்ணை ஓரத்தில் அம்மா கோலம் போடுவதற்கு வரும்போது கொண்டு வந்து வைத்த ஒரு செம்பு இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அண்ணன் உடனே கடைத்தெருவுக்கு நடந்து செல்வார். முதலில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் கல்யாண மண்டப வாசலில் செய்தித்தாள் கட்டுகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருக்கும் தாத்தாவிடம் சென்று சில்லறையைக் கொடுத்து ஒரு தினத்தந்தி வாங்கிக்கொள்வார். பிறகு அங்கிருந்து கிராமணி ஓட்டல் கடைக்குச் சென்று ஆவி பறக்க ஒரு டீ கேட்டு வாங்கிக் குடிப்பார். அதைத் தொடர்ந்து செம்பு நிறைய தன் அம்மாவுக்காக ஒரு டீ வாங்கி எடுத்துக்கொள்வார். சூடு ஆறிவிடாதபடி மந்தாரை இலை போட்டு மூடி அந்தச் செம்பை வீட்டுக்கு எடுத்து வந்து அம்மாவிடம் கொடுப்பார்.

திண்ணையில் உட்கார்ந்து தினத்தந்தியைப் பிரித்துவைத்துக்கொண்டு பாடப்புத்தகம் படிப்பதுபோல சத்தம் போட்டு ஒவ்வொரு செய்தியையும் படிப்பார் தங்கமுத்து அண்ணன். அவர் படிக்கும் விதம் வானொலியில் செய்தி வாசிப்பாளர்கள் படிப்பதைப்போல இருக்கும். ஒவ்வொரு சொல்லையும் திருத்தமாக உச்சரிப்பார். அதைக் கேட்பவர்களுக்கு இந்தப் பிள்ளை ஏன் படிப்பை பாதியில் நிறுத்தியது என்று நினைக்கத் தோன்றும்.

செய்தித்தாளை சத்தம் போட்டு படிக்கத் தேவையில்லை என்பதை அண்ணனிடம் சொல்லி யாராலும் புரியவைக்கவே முடியாது. அண்ணன் சின்ன வயசில் கோவிந்தையர் பள்ளியில் படித்த காலத்தில் “மனசுக்குள்ளயே முணுமுணுன்னு படிக்காதீங்கடா மூதேவிங்களா. படிப்பு மண்டையில ஏறணும்ன்னா வாயைவிட்டு சத்தமா படிக்கணும்” என்று ராமதாஸ் சார் எப்போதோ அடித்துச் சொல்லியிருக்கிறார். அந்த வாக்கியம் அப்படியே கல்மீது பொறிக்கப்பட்ட எழுத்தைப்போல அவருடைய நெஞ்சில் பதிந்துவிட்டது.

ராமதாஸ் சார் சொன்ன வாக்கியத்தை அப்படியே எழுத்து மாறாமல் சொல்வார் அண்ணன். அந்த வார்த்தையை அவர் தன் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சொல்லாகவே எடுத்துக்கொண்டார். எல்லாச் செய்திகளையும் திருத்தமாகப் படித்த பிறகுதான் அண்ணன் வீட்டுக்குள் திரும்பிச் செல்வார்.

அப்போது சத்திரத்துக்கு அருகில் குடோன் வசதியோடு கூடிய ஒரு ரைஸ்மில் இருந்தது. அந்த ரைஸ்மில் முதலாளியும் தங்கமுத்துவின் அப்பாவும் நண்பர்கள். ஒரே வயதுக்காரர்கள். ஒருநாள் தங்கமுத்து அண்ணனின் அம்மா அண்ணனை ரைஸ்மில்லுக்கு அழைத்துச் சென்று முதலாளியைச் சந்தித்து  மகனுக்கு ஒரு வேலை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தங்கமுத்து அண்ணனுடைய திடகாத்திரமான தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்துவிட்டு, மில் மேற்பார்வையாளராக உடனே வேலையில் சேர்த்துக்கொண்டார் அந்த முதலாளி.

அண்ணன் வேலைக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து செய்தித்தாள் படிக்கும் நேரம் குறைந்துவிட்டது. ஒருசில செய்திகளைப் படிப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் இருந்தது. வேகவேகமாக குளித்து சட்டை மாற்றிக்கொண்டு பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மில்லுக்கு சைக்கிளில் கிளம்பிவிடுவார். உச்சிப்பொழுதில் சைக்கிளிலேயே மீண்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார். படிக்காமல் மிச்சமிருக்கும்  செய்திகளை வேலையை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு இரவு நேரத்தில் படித்து முடிப்பார்.

தங்கமுத்து அண்ணன் வேலையை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வரை அவருடைய அம்மா வாசலில் அமர்ந்திருப்பார்.  பக்கத்துவீட்டுச் சிறுவர்களும் சிறுமிகளும் திண்ணையில் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுவார்கள். சில நேரங்களில் கல்லா மண்ணா ஆடுவார்கள். அவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்தால் பொழுது போவதே தெரியாது.  அவர்கள் போடும் சத்தம் அவரை ஒன்றும் செய்ததில்லை.

ஸ்டேஷனுக்கு விளையாடப் போகாத நாட்களிலும் மழை நாட்களிலும் எங்களுக்கும் அந்தத் திண்ணைதான் பொழுதுபோக்குக்கான இடமாக இருக்கும். அந்தச் சமயத்தில் தங்கமுத்து அண்ணன் வீட்டில் இருந்தால் அவரும் எங்கள் உரையாடலில் உற்சாகத்தோடு சேர்ந்துகொள்வார்.

தங்கமுத்து அண்ணனுக்கு சினிமாதான் மிகவும் பிடித்தமான விஷயம். அதனால் வினாடி வினா போட்டி மாதிரி அவர் சினிமா தொடர்பான கேள்விகளைக் கேட்பார்.

“சந்திரபாபு பொம்பளையா நடிச்ச படம் எது?”

”சிவக்குமார் முதன்முதலா எந்தப் படத்துல முருகன் வேஷம் போட்டு நடிச்சாரு?”

”எந்தெந்த படத்துல எம்.ஜி.ஆர். போலீஸ்காரரா நடிச்சிருக்காரு?”

”ஜெயலலிதா நரிக்குறத்தியா பாட்டுப் பாடி நடிச்ச படம் எது?”

”கைவண்டி ரிக்‌ஷா இழுக்கிறவரா சிவாஜி எந்தப் படத்துலயாவது நடிச்சிருக்காரா?”

சரியான பதிலைச் சொல்லிவிட்டால் பக்கத்தில் வந்து “சபாஷ்டா சிங்கக்குட்டி” என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் செல்வார். தவறாகச் சொல்லிவிட்டால் “ஐய, என்னடா இது? உனக்கு இது கூடத் தெரியலையா?” என்று சொல்வார். சரியான பதிலை எப்படியாவது சொல்லவைத்துவிடும் ஆசையில் நாலைந்து கூடுதலான துணைத்தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்வார். அதன் வழியாக சரியான பதிலை நாங்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால், உடனே அவர் முகம் பூரித்துவிடும். அப்போதும் கண்டுபிடிக்கமுடியாமல் விழித்தால் “சரி விடு, அந்தக் கேள்வியே வேணாம், வேற கேள்வி கேக்கறேன்” என்று புதிய கேள்விக்குத் தாவிவிடுவார்.

ஒருநாள் அண்ணன் எங்களுக்கு பட்டணத்தில் பூதம் திரைப்படத்தின் கதையைச் சொன்னார். அந்தப் படத்தில் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்றொரு பாட்டு உண்டு. அந்தப் பாடல் இடம்பெறும் கட்டம் வரைக்கும் அண்ணன் உற்சாகமாக கதை சொல்லிக்கொண்டே வந்தார். பிறகு சட்டென நிறுத்திவிட்டு “அந்தப் பாட்டை யாருக்காவது  முழுசா பாடத் தெரியுமா?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.

நான் மனசுக்குள் அப்பாடல் வரிகளைச் சொல்லிப் பார்த்தேன். இரண்டாவது வரிக்கு மேல் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. அதற்குள் மனோகரன் கையை உயர்த்தி “எனக்குத் தெரியும்ண்ணே” என்று உற்சாகத்தோடு சொன்னான். அதைக் கேட்டதும் அண்ணன் முகம் மலர்ந்துவிட்டது. “பாடு. பாடு” என்று அவனைத் தூண்டிவிட்டார். அவன் உடனே எங்கள் எல்லோரையும் ஒருமுறை பெருமையோடு சுற்றிப் பார்த்துவிட்டு புன்னகையோடு பாடத் தொடங்கினான். அண்ணன் விழிமூடி அந்தப் பாட்டை ரசித்துக் கேட்டார்.

பாடல் முடிந்த சமயத்தில் வெளியே மழைத்தூறல் தொடங்கியது. சின்ன ஊசி மழைதான். அண்ணன் உடனே நந்தியாவட்டை மரத்தடியில் நின்றிருந்த சைக்கிளை திண்ணையில் ஏற்றி நிறுத்துமாறு என்னிடம் சொன்னார்.

ஒரு சைக்கிளை சரிந்துவிடாதபடி சமநிலையுடன் பிடித்துக்கொள்ளக்கூடத் தெரியாத ஆள் நான். அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக நின்றேன். “சைக்கிள தள்ளியாந்து நிறுத்துடான்னா ஏன்டா முழிச்சிகினு நிக்கிற?” என்று மறுபடியும் சொன்னார் அண்ணன்.

“எனக்கு சைக்கிள சரியா புடிக்கத் தெரியாதுண்ணே” என்று மெதுவாகச் சொன்னேன்.  ”என்ன?” என்று வியப்போடு கேட்டபடி அண்ணனே திண்ணையிலிருந்து இறங்கிச் சென்று சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து திண்ணைக்கு அருகில் நிறுத்தினார்.

“எனக்கு சைக்கிள சரியா புடிக்கத் தெரியாதுண்ணே” என்று மீண்டும் தங்கமுத்து அண்ணனிடம் சொன்னேன். “அப்படியா? ஆச்சரியமா இருக்குதே. ஒன் வயசுல நான் பாண்டிச்சேரி கடல் பார்க்கறதுக்காக வளவனூருலேர்ந்து சைக்கிள்லயே போய் வந்திருக்கேன். தெரியுமா?” என்றார் அண்ணன். நான் பதில் எதுவும் சொல்லாமல் அவருடைய முகத்தையே பார்த்தபடி நின்றேன். “அப்பல்லாம் நெனச்ச நேரத்துக்கு சைக்கிள எடுத்துகினு கெளம்பிடுவேன். இந்தப் பக்கத்துல செஞ்சிக்கோட்டை, அந்தப் பக்கத்துல கடலூருன்னு நான் சைக்கிள்ல சுத்தாத இடமே இல்லை” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

“இங்க யாருக்கெல்லாம் சைக்கிள் ஓட்டத் தெரியும்? யாருக்குத் தெரியாது? அதை சொல்லுங்கடா முதல்ல”

அண்ணன் பொதுவாக திண்ணையில் உட்கார்ந்திருந்த அனைவரையும் பார்த்துக் கேட்டார். அந்தக் கூட்டத்தில் பரசுராமன் மட்டுமே தைரியமாக கையை உயர்த்தினான். மனோகரன் அரைகுறையாக கையை உயர்த்தி “அரைசைக்கிள்னா நானே ஏறி உட்கார்ந்து நல்லா ஓட்டவரும். பெரிய சைக்கிள்னா கொரங்கு பெடல் போட்டுத்தான் ஓட்ட வரும்” என்று சொன்னான். “என்னமோ ஒன்னு, ஓட்டத் தெரியுமில்ல, அது போதும்” என்று அவனை உட்காரச் சொன்னார். பிறகு கையை உயர்த்தாதவர்களின் தலையை எண்ணிவிட்டு “ஏழு பேருக்கு சைக்கிள் தெரியாது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். பிறகு ”சைக்கிள் ஓட்டத் தெரியாமலேயே பத்தாங்கிளாஸ் வரைக்கும் வந்துட்டீங்க. நாளைக்கு ஒரு அவசரம் ஆத்தரம்னா என்னடா செய்வீங்க?” என்றார். அதைத் தொடர்ந்து அவராகவே “வர ஞாயித்துக்கெழம உங்க ஏழு பேருக்கும் ஆஸ்பத்திரி மைதானத்துல சைக்கிள் ட்ரெய்னிங். நம்ம சைக்கிள்லயே நீங்க எல்லோரும் கத்துக்கலாம்” என்று அறிவித்தார். நாங்கள் அனைவரும் உற்சாகமாக “சரிண்ணே” என்று தலையசைத்தோம்.

“அதுக்கு முன்னால் இன்னைக்கு எல்லாருக்கும் ஒரு சின்ன டெஸ்ட். எத்தனை பேர் சரியா செய்றீங்கன்னு பார்க்கப் போறேன்”

“என்ன டெஸ்ட்ண்ணே”

“உங்கள்ல எத்தனை பேருக்கு நிக்கிற சைக்கிள்ல ஏறி உக்கார முடியுதுன்னு முதல்ல நான் தெரிஞ்சிக்கணும். அதுதான் டெஸ்ட்”

இது என்ன விபரீதமான சோதனை என்ற பதற்றத்தோடு நாங்கள் அண்ணன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அண்ணன் முதலில் கஜேந்திரன் பக்கம் விரலை நீட்டி சைக்கிளுக்கு அருகில் வருமாறு அழைத்தார். அவன் பக்கத்தில் வந்து ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு காலை மறுபுறத்தில் கொண்டுசெல்ல இயலாமல் தடுமாறினான். அண்ணன் அவனுடைய தோளை உறுதியாகப் பற்றிக்கொண்டு “பெடல மிதிச்சி ஏறி அந்தப் பக்கமா கால போடணும், தெரியுதா?” என்றார். அவன் தலையசைத்தபடியே அவர் சொன்னபடி செய்தான். ஒரே நொடியில் மாயவித்தையைப்போல அவன் சைக்கிள் இருக்கையில்  ஏறி குதிரை மீது உட்கார்வதுபோல உட்கார்ந்துவிட்டான். அவன் முகத்தில் புன்னகையும் பரவசமும் மின்னின.

“ரெண்டு காலும் எப்பவும் பெடல்மேலயே இருக்கணும். உனக்கு முன்பக்கமா ரோடு இருக்குதுன்னு நெனச்சி நேரா பார்த்து மிதிச்சிகிட்டே இரு”

பக்கத்தில் நின்றுகொண்டு அண்ணன் சொன்ன ஆலோசனையை அவன் அப்படியே பின்பற்றினான். இரண்டு மூன்று முறை கால்கள் இடறி நழுவின. பிறகு சரியாக வந்துவிட்டது. காலம்காலமாக பழகியவனைப்போல மிதிக்கத் தொடங்கினான்.

”குனிஞ்சியே பார்க்கக்கூடாது. உன் கண்ணு எப்பவும் நேராதான் இருக்கணும். உடம்பை வளைக்காத. நிமுந்து உக்காரு”

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் நீண்ட காலம் சைக்கிள் பழகியவனைப்போல மிதிக்கத் தொடங்கினான். அந்த லாவகமும்  லயமும் அவனுக்குக் கைகூடி வந்ததும் தங்கமுத்து அண்ணன் ”போதும் போதும். நிறுத்திக்கோ” என்று சொல்லி அவனை இறங்கச் சொன்னார்.

நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், குமரவேல், சுந்தரம் என வரிசையாக ஒவ்வொருவராக அழைத்து அக்கம்பக்கம் திரும்பாலும் உடலை வளைக்காமலும் நேர்த்திசையில் பார்த்து மிதிக்கும் பயிற்சியைக் கொடுத்தார். நான் அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். கால், கை, கண்கள் எல்லாம் தனித்தனியாக தன் போக்கில் இயங்குகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு நோக்கத்துடன் செயல்படுகின்றன. அதைப் பார்த்ததும் சைக்கிளை மிதிப்பதும் அது ஓடுவதும் உலக அதிசயம் என்றே தோன்றியது.

கடைசியாக என் முறை வந்தது. என்னால் சைக்கிள் இருக்கைமீது உட்காரவே முடியவில்லை. ஒரு காலை ஊன்றிக்கொண்டு அடுத்த காலை உயர்த்தி மறுபக்கம் கொண்டு செல்லவே இயலவில்லை. ஒவ்வொரு முறையும் நான் முயற்சி செய்வதும் ஒரு பக்கமாக சரிவதும் கீழே விழாதபடி அனைவரும் என்னைத் தாங்கிப் பிடிப்பதுமாகவே நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசியில் வேறு வழியில்லாமல் என்னை எல்லோரும் சேர்ந்து தூக்கி இருக்கையின் மீது உட்கார வைத்தார்கள்.

எனக்கும் அப்போது நிம்மதியாக இருந்தது. மற்றவர்களைப்போல இரு கைகளையும் நீட்டி பிடிகளைப் பற்றிக்கொண்டு மிதிப்பதற்காக அழுத்தினேன். ஒருங்கிணைந்த வகையில் என்னால் கால்களைப் பயன்படுத்தவே முடியவில்லை. உடல்பாரம் என்னை ஒருபக்கமாகவே இழுத்துக்கொண்டு சென்றது. அச்சத்தில் உடலெல்லாம் வேர்த்துவிட்டது.

“சரி, போதும் எறங்கிடு. ஞாயித்துக்கெழமை பார்த்துக்கலாம்” என்று சொன்னபடி என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார். நான் மெதுவாக இருக்கையிலிருந்து விலகி கீழே இறங்கினேன். “ஒன்னும் பயப்படாத. புரியுதா? சைக்கிள் ஓட்டறது ஒன்னும் பெரிய வித்தை கெடையாது” என்று சொன்னபடி என் முதுகில்  அண்ணன் தட்டிக் கொடுத்தார்.

தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று காலையில் தங்கமுத்து அண்ணன் சொன்னபடி நாங்கள் எல்லோருமே ஆஸ்பத்திரி மைதானத்தில் ஒன்றாகக் கூடிவிட்டோம். அண்ணன் சைக்கிளை எடுத்து வந்திருந்தார். என்னைத் தவிர எல்லோரும் சைக்கிளில் ஏறி கீழே விழாமல் மிதிக்கப் பழகினார்கள். முதல் முயற்சியிலேயே நான் கீழே விழுந்துவிட்டேன். கால் முட்டியில் அடி. வேதனை. வலியின் காரணமாக நான் ஒதுங்கிவிட்டேன். ஓரமாக நின்று அவர்கள் ஓட்டுவதை வேடிக்கை பார்த்தேன். மூன்று ஞாயிறுகளில் தொடர்ச்சியாக அண்ணன் கொடுத்த பயிற்சியால் அனைவருமே சைக்கிள் மன்னர்களாக மாறிவிட்டனர்.

“உனக்கு கத்துக்குடுக்க முடியலையேன்னு நெனைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்குதுடா” என்று அண்ணன் என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இருக்கட்டும்ண்ணே. வேற ஒரு சந்தர்ப்பம் வரும்போது கத்துக்கறேண்ணே” என்று நான் அண்ணனுக்கு ஆறுதலாகச் சொன்னேன்.

“அதுக்கில்லைடா. சைக்கிள்தான்  எல்லாத்துக்கும் ஆதாரம். இன்னைக்கு சைக்கிள் கத்துகிட்டாதான் நாளைக்கு ஸ்கூட்டர் கத்துக்க முடியும். அதுக்கப்புறம் கார் ஓட்டக் கத்துக்க முடியும்”

“பரவாயில்லைண்ணே. பாத்துக்கலாம். விடுங்கண்ணே”

அண்ணன் சைக்கிளை ஓட்டி ஓட்டியே எல்லோரும் சைக்கிள் மன்னர்களாகிவிட்டார்கள். அதற்குப் பிறகு வாடகை சைக்கிள் எடுத்து சொந்தமாக ஓட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.

சைக்கிள் பயிற்சி கொடுத்ததுபோலவே அண்ணன் எல்லோருக்கும்  நீச்சல் பயிற்சியும் கொடுத்தார். ஸ்டேஷனுக்கு அருகிலேயே இருந்த ஏரிக்கரை அந்தப் பயிற்சிக்கு வசதியாக இருந்தது.

கார்த்திகை மாதம் பெய்த மழையால் ஏரி நிறைந்திருந்த நேரத்தில் அண்ணன் அந்தப் பயிற்சியைத் தொடங்கினார். துரதிருஷ்டவசமாக அதுவும் எனக்கு கைவராத கலையாகவே அமைந்துவிட்டது. என் கைகளும் கால்களும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. என் கோழைத்தனத்தையும் அச்சத்தையும் பார்த்து அண்ணன் மிகவும் சங்கடப்பட்டார். நாலைந்து ஞாயிறுகளில் தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாக நண்பர்கள் எல்லோரும் நீச்சல் திறமை வாய்க்கப் பெற்றவர்களாக மாறினார்கள்.

பொங்கல் முடிந்து கரிநாள். அன்று பள்ளிக்கு விடுமுறை நாள். தங்கமுத்து அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அண்ணன் எங்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய் பொங்கல் காசு கொடுத்தார். ”வேணாம்ண்ணே” என்று தயக்கத்துடன் சொன்னேன். “அண்ணன்தானடா கொடுக்கறேன், வச்சிக்குங்கடா” என்று அண்ணனே அந்த ரூபாய் நாணயத்தை சட்டைப்பையில் போட்டுவிட்டார். “நம்ம ஊரு கொட்டாய்ல கனிமுத்து பாப்பா போட்டிருக்காங்கடா. போய் பாருங்க” என்று சொன்னார்.

”நீங்க பாத்துட்டீங்களாண்ணே?” என்று கேட்டான் சுந்தரம்.

“போன வருஷம் விழுப்புரத்துல ரிலீஸ் ஆவும்போதே நான் பாத்துட்டேன். நம்ம ஆளு படம்டா அது. வளவனூருக்கு இப்பதான் வருது”

அப்போது யாரோ தெருவில் “ஆயா, ஓரமா போ. பின்னால மாடு வருது. மாடு” என்று மீண்டும் மீண்டும் சத்தமிட்டுச் சொல்லும் குரல் கேட்டது. என்ன என்று பார்ப்பதற்காக நாங்கள் எல்லோருமே திண்ணையை விட்டு இறங்கி வாசலுக்கு வந்தோம்.

ஆஸ்பத்திரி தெருவிலிருந்து திரும்பும் பாதை வழியாக ஒரு ஆயா வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கொழுகொழுவென இருக்கும் ஒரு மாடு துரத்திக்கொண்டு வந்தது. கொம்புகளை இப்படியும் அப்படியுமாக அது அசைத்துக்கொண்டு வந்த தோற்றத்தைப் பார்த்து உடல் நடுங்கியது. ஏதோ சிந்தனையில் வந்துகொண்டிருந்த ஆயாவுக்கு அந்த எச்சரிக்கைக்குரல் கேட்கவில்லை.

யாரும் எதிர்பாராதபடி அந்தக் கணத்தில் வேகவேகமாக ஓடி அந்த ஆயாவின் கையைப்பற்றி பாதையோரமாக இழுத்தார் தங்கமுத்து அண்ணன். ஆயாவை முட்டுவதற்காக நெருங்கி வந்த மாடு இலக்கு விலகியதை அறிந்ததும் வெறிகொண்டு கழுத்துமணி ஒலிக்க தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்தது. பிறகு அண்ணனை முட்டுவதற்காக நெருங்கி வந்தது.

கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் அதன் கொம்புகளைப்பற்றி கழுத்தை ஒடித்துவிடுவதுபோல வளைத்தார் அண்ணன். ”ஆயா போங்க போங்க” என்று அண்ணன் சத்தம் போட்டதும் ஆயா அந்த இடத்திலிருந்து ஓடி வந்து திண்ணையின் பக்கமாக நின்றுகொண்டார். அவர் உடல் நடுங்கியது. ஈஸ்வரா ஈஸ்வரா என்று முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.

அண்ணன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள மாடு உடலை வளைத்து வளைத்துச் சுற்றியது. மாடு திரும்பிய திசையிலெல்லாம் அண்ணனும் திரும்பி தன் பிடியை அழுத்தி இறுக்கினார். வசமாக ஒரு தருணத்தில் அதன் முன்னங்காலில் ஓங்கி ஒரு உதை கொடுத்து கீழே தடுமாறி விழவைத்தார். பிடியின் இறுக்கத்தைக் குறைக்காமலேயே பிடரியில் ஐந்தாறு முறை உதைத்தார். கடைசியாக ஓங்கி உதைத்துவிட்டு,  உதைத்த வேகத்தில் சட்டென பின்வாங்கி தொலைவாக திண்ணைக்கு அருகில் வந்து நின்றுகொண்டார்.

தெருவிலிருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் நின்று அந்தச் சண்டையை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். ஒருவர் கூட உதவிக்கு நெருங்கி வரவில்லை. என்ன நேருமோ என ஒவ்வொரு கணமும் நாங்கள் அச்சத்தில் உடல்நடுங்க நின்றிருந்தோம். ஆனால் தங்கமுத்து அண்ணன் மட்டும் ஒரு அங்குலம் கூட பின்வாங்காமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

கழுத்தை இடதுபக்கமாகவும் வலதுபக்கமாகவும் சுழற்றிச்சுழற்றி இளைப்பாறிய மாடு  ஒருமுறை வாயைத் திறந்து மூச்சுவிட்டது.  பிறகு அந்த இடத்திலிருந்து பின்வாங்கி தன் திசையில் நடந்து செல்லத் தொடங்கியது. சிறிது தூரம் அது போகும் வரை நம்பிக்கையில்லாமல் அந்த மாடு நடக்கும் திசையிலேயே பார்த்திருந்தார் அண்ணன். பிறகுதான் திரும்பி திண்ணையின் பக்கம் வந்தார்.

“ஆஸ்பத்திரியில மாத்திரை வாங்கிட்டு வந்தேன் தம்பி. அந்த மாடு வந்ததையே நான் பார்க்கலை. கடவுள் மாதிரி வந்து நீ என்னை காப்பாத்திட்ட” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டார்.

திண்ணையில் இருந்த குடத்திலிருந்து தம்ளரில் தண்ணீரை எடுத்து தூணுக்குப் பக்கத்தில் உடல்நடுங்க நின்றிருந்த அந்த ஆயாவிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பருகிய பிறகுதான் அந்த ஆயா சற்றே இயல்பான நிலைக்குத் திரும்பினார்.

”எங்க இருக்குது உங்க வீடு ஆயா? வீடு வரைக்கும் கொண்டுவந்து விட்டுட்டு வரணுமா? இல்லை நீங்களாவே போயிடுவீங்களா?” என்று பேச்சை மாற்றினார் அண்ணன்.

“இல்ல தம்பி, நானே போயிடுவேன். இப்பதான் மாடு போயிடுச்சே” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தபடி அந்த ஆயா படியிறங்கிச் சென்றார்.

அதற்குப் பிறகு நாங்கள் திண்ணையில் வட்டமாக உட்கார்ந்து மறுபடியும் சினிமாக்கதையைப் பேசத் தொடங்கினோம்.

எங்கோ கடைக்குச் சென்றிருந்த தங்கமுத்து அண்ணனின் அம்மா அப்போதுதான் இடுப்பில் ஒரு பையை வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அவர் படியேறி உள்ளே வருவதற்காகவே காத்திருந்ததுபோல பரசுராமன் உற்சாகத்தோடு “எங்க போயிட்ட ஆயா நீ? கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்திருந்தா அருமையான ஒரு சண்டைக்காட்சியை பார்த்திருக்கலாம்” என்றான்.

“சண்டையா? என்னடா சண்டை?”

“நம்ம அண்ணனுக்கும் ஒரு மாட்டுக்கும் நடந்த சண்டை”

“மாடா?” என்று அதிர்ச்சியோடு அண்ணன் பக்கம் திரும்பினார் ஆயா.

“என்ன ஒன்னும் செய்யலைம்மா. அதுதான் எங்கிட்ட ஒதை வாங்கிகிட்டு ஓடிடுச்சி”

எதுவும் சொல்லாமல் அண்ணனையே ஒருகணம் ஆழமாகப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் ஆயா.

அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்பதுபோல அண்ணன் வேறொரு விஷயத்தைப் பற்றி பேச்சைத் தொடங்கினார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. “சரிண்ணே, வரோம்” என்று சொல்லிவிட்டு நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம்.

பொங்கல் விடுப்பு முடிந்து பள்ளிக்கூடம் திறந்த அன்றே எங்களுக்கு பள்ளியில் கடுமையான பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஒரு வாரம் முழுதும் தொடர்ச்சியாக அவை நடைபெற்றன. அதற்கு அடுத்த வாரத்தில் தேர்வுகள் நடந்தன.  இப்படியே நான்கு கட்டமாக பயிற்சி வகுப்புகள். நான்கு கட்டமாக தேர்வுகள்.  இரண்டு மாத காலம் ஓடியதே தெரியவில்லை. வீட்டையும் பள்ளியையும் தவிர எங்கும் திரும்பிக் கூட பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

அவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே ஆண்டுத் தேர்வுக்குரிய அட்டவணையை அறிவித்துவிட்டார்கள். ஒருநாள் கூட ஓய்வில்லை. படிப்பது, எழுதிப் பார்ப்பது என ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருந்தது. நண்பர்களைக்கூட பள்ளிக்கூடத்தில் தேர்வுக்கூடங்களில் மட்டுமே பார்த்துப் பேசமுடிந்தது.

ஸ்டேஷன் திடல் விளையாட்டு, தங்கமுத்து அண்ணன் வீட்டுத் திண்ணைப்பேச்சு, ஏரிக்கரை விளையாட்டு, வேலந்தோப்பு விளையாட்டு, குளத்தங்கரை விளையாட்டு எல்லாவற்றையும் நிறுத்திவிட்டோம். தேர்வுகளில் முடிந்தவரை அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறவேண்டும் என்பது மட்டுமே எங்கள் லட்சியமாக இருந்தது. ஒவ்வொரு தேர்வையும் எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து வெளியேறும் சமயத்தில் ஏதோ ஒரு கடலையே நீந்திக் கடந்துவந்ததைப்போல ஆறுதலாக உணர்ந்தோம்.

கடைசித்தேர்வை எழுதிய பிறகுதான் நெஞ்சில் ஏற்றி வைத்திருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கிவைத்ததுபோல இருந்தது. அடுத்தநாள் விடுதலை பெற்ற பறவைகளாக உணர்ந்தோம்.

அடுத்தநாள் காலையில் பழைய சோறு சாப்பிட்டுமுடித்த கையோடு மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் திடலுக்குச் சென்றுவிட்டேன். மனோகரன், பரசுராமன், நெடுஞ்செழியன், கஜேந்திரன், சுந்தரம், குமரவேல் என நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தனர். விளையாட்டு, பேச்சு, கதை என பொழுது போனதே தெரியவில்லை. சூரியன் தலைக்கு மேலே தகிப்பது கூட தெரியவில்லை.

“என்னடா, எப்படா பரீட்சை முடியும், எப்படா மட்டையைத் தூக்கலாம்னு காத்திருந்தீங்களா?”

ஸ்டேஷன் கிராதிக்கம்பங்களுக்கு அப்பால் புங்கமர நிழலில் நின்றபடி காசி மாமா குரல் கொடுத்த பிறகுதான் ஆட்டத்தை நிறுத்தினோம். “ஆமாம் மாமா” என்று சொன்னபடி அவரைப் பார்த்து புன்னகைத்தோம்.

“பரீட்சையெல்லாம் எப்படிடா எழுதியிருக்கீங்க? பாஸாயிடுவீங்களா?

“ஓ. கேரண்டி பாஸ் மாமா”

”அது சரி, விளையாட்டு மும்முரத்துல சாப்படறத மறந்துடாதீங்கடா.  போங்கடா போங்க. ஏதாவது வயித்துக்குப் போட்டுகிட்டு பொழுது சாஞ்சப்புறம் வந்து ஆடுங்க. போங்க”

“இப்பதான் ஆடறதுக்கு ஆரம்பிச்ச மாதிரி இருக்குது. அதுக்குள்ள மதியானம் ஆயிட்டுதா?” என்று ஆச்சரியத்தோடு ஆகாயத்தை அண்னாந்து பார்த்தான் கஜேந்திரன்.

“மணி ரெண்டாவப் போவுது. ஓடுங்கடா”

மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு சாலையில் நிழல்  படிந்திருக்கும் பக்கமாகவே நடந்தோம். பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தை அடைந்ததும் அங்கிருந்து இடது பக்கமாகத் திரும்பினோம். எல்லோருடைய வீடுகளும் தள்ளித்தள்ளி இருந்தன.

முதலில் மனோகரன் விடைபெற்றான். அப்புறம் கஜேந்திரன் புறப்பட்டுச் சென்றான். . பிறகு நெடுஞ்செழியன் விளையாட்டாக எல்லோருடைய முதுகிலும் செல்லமாக அழுத்தித் தட்டிவிட்டு கிளம்பினான்.. மற்றவர்களும் அவரவர் வீடு வந்ததும் “சரிடா, சாயங்காலம் நால்ரை மணிக்கு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றனர்.

அடுத்து ஏதோ சினிமாப்பாட்டு வரிகளை முணுமுணுத்தபடி நான் மட்டும் தனியாக நடக்கத் தொடங்கினேன். ராகம் போட்டு இழுத்தபடி இரண்டு வீடுகள் கடந்த பிறகு தன்னிச்சையாக தங்கமுத்து அண்ணனின் வீட்டுப் பக்கம் பார்வையைத் திருப்பினேன். வாசலில் நின்றிருந்த நந்தியாவட்டை மரத்தைச் சுற்றி உலர்ந்து சுருங்கி கருத்துவிட்ட பழைய பூக்களும் புதிய பூக்களுமாக ஒரே குப்பைமேடாக இருந்தது. அதைப் பார்த்ததும் திகைத்து ஒருகணம் நின்றுவிட்டேன். வழக்கமாக மரத்தடியில் நின்றிருக்கும் சைக்கிளும் இல்லை.

ஏன் வீடு இப்படி இருக்கிறது, ஏன் சைக்கிள் இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தங்கமுத்து அண்ணனுக்கு என்ன நேர்ந்தது, அவர் எங்கே போனார் என்று நினைத்துக் குழம்பினேன்.

ஒருகணம் தயங்கி, தங்கமுத்து அண்ணன் வீட்டுக்கு முன்னால் சென்று நிமிர்ந்து பார்த்தேன். வீடு பூட்டியிருந்தது. திண்ணையெங்கும் புழுதிமயமாக இருந்தது. தூணுக்கு மேலே ஒட்டடை தொங்கியது. திண்ணையை ஒட்டி இருந்த குடத்தை ஒட்டி விழுந்து கிடந்த பல்லியைச் சுற்றி எறும்புகள் மொய்த்துக் கிடந்தன.  

குழப்பத்தோடு எதைஎதையோ நினைத்தவாறு மெதுவாக நடந்து வீட்டை அடைந்தேன். வாசலில் உலர்ந்துகொண்டிருந்த எருமுட்டைகளை ஒவ்வொன்றாக அம்மா திருப்பிப் போட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே  “லீவ் உட்டதுமே தொரைக்கு இப்படித்தான் நேரம் காலம் தெரியாம ஆடச் சொல்லுதாடா?” என்று கேட்டார்.

நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பேசாமல் தோட்டத்துக்குச் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்தேன். அம்மா ஒரு தட்டு நிறைய கஞ்சி வைத்திருந்தார். அதற்குப் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலைச் சட்டினி.

“என்னாச்சி? யாராச்சிம் ஏதாச்சிம் சொன்னாங்களா? ஏன் மூஞ்சிய ஒரு மாதிரி வச்சிருக்க?” என்று கேட்டார் அம்மா. நான் “த்ச்.ஒன்னுமில்ல” என்றபடி தட்டை உயர்த்தி கஞ்சியைக் குடித்தேன்.

“என்னடா? எதுவா இருந்தாலும் சொல்லு. யாராவது அடிச்சிட்டாங்களா?”

அம்மாவின் மனம் எண்ணும் திசையை உணர்ந்ததும் என் சிந்தனைக்குழப்பம் கலைந்துவிட, எனக்கு சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பு என்னை இயல்பான மனநிலைக்குத் திருப்பிவிட்டது.  “அடியா? அடிவாங்கறதுக்கு நான் என்ன சின்ன குழந்தையாம்மா?” என்று சொன்னேன்.

“அடி வாங்கலைன்னா, வேற என்ன விஷயம்?”

விளையாடிவிட்டு பஞ்சாயத்து அலுவலகம் வழியாக நண்பர்களோடு சேர்ந்து வீட்டுக்குத் திரும்பி வந்ததையும் தங்கமுத்து அண்ணன் வீடு இருந்த கோலத்தைப் பார்த்ததையும் அவர் ஞாபகம் எழுந்ததையும் அவரை நினைத்துக் குழம்பியதையும் சுருக்கமாகச் சொன்னேன்.

“அந்த மாட்டைப் புடிச்சி கீழ தள்ளி அடக்கி, அந்த ஆயாவை காப்பாத்தனானே, அதுக்கப்புறம் நடந்த கதை எதுவும் உனக்குத் தெரியாதா?”

அம்மாவின் சொற்களைக் கேட்டு ஒருகணம் திகைத்துவிட்டேன். “அதுக்கப்புறம் நான் வெளிய எங்கம்மா போனேன்? பள்ளிக்கூடம், ரிவிஷன், பரீட்சைன்னு ஓடறதுக்குத்தான நேரம் சரியா இருந்தது. அந்த நெருக்கடியில அந்த அண்ணன் ஞாபகமே வரலை”

அப்படியா என்பதுபோல அம்மா மேலும் கீழுமாக தலையை அசைத்தார். பிறகு நீண்டதொரு பெருமூச்சை இழுத்துவிட்டபடி என் பக்கமாகத் திரும்பினார். “மாட்டு புடியிலிருந்து அந்த ஆயாவை காப்பாத்தனானே, அன்னைக்கு சாயங்காலம் பெரிய சண்டையே நடந்ததாம்” என்று தொடங்கினார்.

“சண்டையா?”

“ஆமாம். அந்த வண்டிக்காரமூட்டு ஆள் ரைஸ்மில்லுக்கு தேடிப் போய் தங்கமுத்துவை சண்டைக்கு இழுத்திருக்கான். என் மாடு மேல நீ எப்படிடா கை வச்சி தள்ளி உடலாம்னு சத்தம் போட்டிருக்கான்.  தள்ளி உடலைன்னா அந்த ஆயா செத்திருப்பாங்க தெரியுமான்னு தங்கமுத்து பதில் சொல்லியிருக்கான். செத்தா சாவட்டுமே, அவுங்க என்ன உன்ன பெத்த அம்மாவா, இல்ல ஆயாவான்னு அலட்சியமா அடிக்கறதுக்கு போயிருக்கான் வண்டிக்காரன்.”

“ஐயையோ, அப்புறம்?”

“அப்புறம் ரைஸ் மில்லுல சுத்தி நின்னுட்டிருந்த ஆளுங்களும் மொதலாளியும் சேர்ந்து நடுவுல பூந்து வண்டிக்காரனை இழுத்து சண்டையை விலக்கி உட்டு அனுப்பிட்டாங்க”

“அந்த வண்டிக்கார ஆளுக்கு பெரிய தலைவர்னு நெனப்பு”

“அந்த ஆயாவுடைய பேரன் விழுப்புரம் கோர்ட்ல வக்கீல் குமாஸ்தாவா இருக்கானாம். சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ஆயாவ மாடு முட்டின சேதியை சொல்லியிருக்காங்க. உடனே அவன் இந்தத் தெருவுக்கு வந்து வண்டிக்காரனைப் பார்த்து என்னமோ சொல்லிட்டு போயிருக்கான். அதைத்தான் அந்த வண்டிக்காரனால தாங்கிக்க முடியலை. என்னைப் பார்த்து அவன் எப்படி பேசலாம்னு அவனுக்கு ஒரு ரோஷம். அந்த ரோஷத்தை தங்கமுத்துகிட்ட காட்டணும்னு கெளம்பி போயிட்டான்.”

“அது சரி, அன்னைய பிரச்சினை அத்தோடு முடிஞ்சிபோச்சிதான? அதுக்கப்புறம் தங்கமுத்து அண்ணன் எங்க போனாரு?”

“அதைத்தான் சொல்லணும்னு ஆரம்பிச்சேன். கடைசியில ஒங்கிட்ட எதைஎதையோ சொல்லிட்டிருக்கேன். இந்த மாடு விஷயத்துக்குப் பிறகு அவுங்கம்மா ரொம்ப பயந்துட்டாங்க. தங்கமுத்து அப்பா கூட அந்தக் காலத்துல மாடு முட்டித்தான செத்தாரு. அதையும் இதையும் நெனச்சி, அந்த அம்மா கொழப்பிகிட்டாங்க. பண்ருட்டியில இருக்கற தம்பிகாரனுக்கு சேதி அனுப்பிட்டாங்க.  உடனே அவரு பஸ் புடிச்சி வளவனூருக்கு வந்துட்டாரு. இந்த மாடு சங்காத்தமே வேணாம், ரெண்டு பேரும் என் கூட வாங்கன்னு ஊட்டப் பூட்டிகினு பண்ருட்டிக்கே அழைச்சிம் போயிட்டாரு”

“அப்படின்னா பண்ருட்டிலதான் இருக்காரா அண்ணன்?”

“அங்கயும் இல்லை” என்று அம்மா உதட்டைப் பிதுக்கினார். எதுவும் புரியாமல் குழப்பத்தோடு நான் அம்மாவின் முகத்தையே பார்த்தேன்.

“அவுங்க பண்ருட்டி போய் சேர்ந்த நேரத்துல ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற கேம்ப் ஒன்னு விழுப்புரத்துல ரெண்டுமூனு வாரம் நடந்திச்சி. யாரோ ஒரு சொந்தக்காரங்க அந்த விஷயத்தை அந்த மாமன்காரன்கிட்ட சொல்லியிருக்காங்க. அடுத்த நாளே அவரு தங்கமுத்துவை அங்க கூட்டிகினு போயி நிறுத்திட்டாரு. அவன் இருக்கற வாட்டசாட்டமான நிலைமைக்கு மிலிட்டரிகாரன் வேணாம்னா சொல்லப்போறான்? என்னமோ பேருக்கு ரெண்டு மூனு டெஸ்டு வச்சி முடிச்சிட்டு, லட்டு மாதிரி ஆள எடுத்துகிட்டாங்களாம்.”

“இதெல்லாம் உனக்கு எப்பிடிம்மா தெரியும்?”

“அவனே ஊட்டுக்கு வந்து சொல்லிட்டுப் போனான்டா”

“என்னம்மா சொல்ற நீ? அவரு எப்ப வந்தாரு இங்க?”

“ஆமாம்டா. பட்டாளத்துக்கு போகறதுக்கு தேவையான துணிமணிய எடுத்துட்டு போவறதுக்காக வளவனூருக்கு வந்தானாம். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போனான். நீ அப்ப ஸ்கூலுக்கு போயிருந்த. இந்த மாதிரி பட்டாளத்து வேலைக்கு போறேன் சின்னம்மா, விபூதி வச்சி வுடுங்க சின்னம்மான்னு வந்து கேட்டான். நிகுநிகுன்னு நல்லா பனை மரம் மாதிரி வளந்து நிக்கிற புள்ளை. பேசிகினு இருக்கும்போதே சட்டுனு கால்ல உழுந்துட்டான். எனக்கு உடம்பே ஒரு உலுக்கு உலுக்கிடுச்சி. ஆசீர்வாதம் பண்ணி எழுப்பி  நெத்தியில விபூதி வச்சிவிட்டேன். அப்பதான் இந்தக் கதையையெல்லாம் சொன்னான். மகராசனா இருடா தம்பின்னு சொல்லி அனுப்பிவச்சேன்”

அந்த நேரத்தில் அம்மா மீது கடுமையான வருத்தம் ஏற்பட்டது. “அன்னைக்கே ஏன் எங்கிட்ட சொல்லலை நீ?” என்று சிணுங்கினேன்.

“ஏன்டா, ஒரு சிந்தனை, ரெண்டு சிந்தனைன்னா எனக்கு ஞாபகம் இருக்கும். அடுத்த வேளை சோத்துக்கு என்ன செய்யறதுங்கற சிந்தனையே எனக்கு பெரிய ரோதனையா இருக்குது. இதுல எதுவுமே ஞாபகத்துல நிக்கமாட்டுது. நான் என்ன செய்யறது, சொல்லு”

அதைத் தொடர்ந்து அம்மாவிடம் நான் எதையும் கேட்கவில்லை.

அன்று சாயங்காலம் விளையாட்டைத் தொடர்வதற்காக மீண்டும் ஸ்டேஷன் திடலுக்குச் சென்றேன். நண்பர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். அப்போது தங்கமுத்து அண்ணனைப்பற்றி தெரிந்துகொண்ட விஷயங்களையெல்லாம் நண்பர்களிடம் தெரிவித்தேன். யாருக்குமே அது தெரிந்திருக்கவில்லை.

மாட்டின் பிடியிலிருந்து ஆயாவை அண்ணன் காப்பாற்றியதை ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சியாக நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் ஊரைவிட்டே வெளியேறிச் செல்லும் அளவுக்கு அது ஒரு திருப்பத்தை உருவாக்கும் என நாங்கள் யாரும் நினைத்ததில்லை.

“வீடு பூட்டியிருக்கறத பார்த்ததும் எங்கியோ ஊருக்குப் போயிருக்காருன்னு  நெனச்சிட்டேன்டா” என்று நெடுஞ்செழியன் நாக்கு சப்புக்கொட்டினான்.

விளையாட்டை ஆரம்பிக்கும் மனநிலையே யாருக்கும் வரவில்லை. எதைப் பேசத் தொடங்கினாலும் அது எப்படியோ தங்கமுத்து அண்ணனைப்பற்றியதாக மாறிவிடத் தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்கமுத்து அண்ணன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்த நாட்களையும் நீச்சல் கற்றுக்கொடுத்த நாட்களையும் நினைவுகூர்ந்து ஏதேதோ சொன்னார்கள்.

“ஒரு வாரம் என் கூட சுத்திப் பார்த்துட்டு உனக்கு சைக்கிளும் வராது, நீச்சலும் வராது, நீ ஒரு மக்கு. துப்பு கெட்டவன். உடம்பே உனக்கு வளையமாட்டுது, நீ பெராக்கு பாக்கறதுக்குத்தான்ன் லாயக்குன்னு என் சொந்த அண்ணனே வாய்க்கு வந்தபடி திட்டிட்டு போயிட்டாரு. ஆனா தங்கமுத்து அண்ணன் நாலே நாள்ல கடவுள் மாதிரி எல்லாத்தயும் சொல்லிக் கொடுத்தாரு. அவர மாதிரி ஒரு அண்ணன உலகத்துல பார்க்கவே முடியாது”

பரசுராமன் நாக்கு சப்புக்கொட்டியபடி சொன்னான். உடனே மற்றவர்களும் அவனோடு சேர்ந்து “ஆமாம்டா. அவரு ஆயிரத்துல ஒருத்தன் மாதிரி” என்று சொன்னார்கள். ”அவரு ஒரு அதிசயப்பிறவிடா” என்றான் கஜேந்திரன்.

”எதுவும் கத்துக்காம நீ எப்படித்தான் இந்த உலகத்துல பொழைக்கப் போறியோ?” என்று என்னைப் பார்த்து தங்கமுத்து அண்ணன் வருத்தத்தோடு சொன்ன சொற்கள் ஆழ்நெஞ்சில் எதிரொலித்தன. நான் அதை யாரிடமும் சொல்லவில்லை.

“வரிங்களாடா, நாம போய் தங்கமுத்து அண்ணன் ஊட்டுத் திண்ணையை சுத்தம் பண்ணலாமா?” என்று எல்லோரிடமும் திடீரென ஓர் ஆவலைத் தூண்டினான் பரசுராமன்.

“பண்ணலாம்தான். ஆனா இந்த ஊட்டுல என்னடா உங்களுக்கு வேலைன்னு யாராவது கேட்டால்….?” என்று தயக்கத்தோடு இழுத்தான் நெடுஞ்செழியன்.

“கேக்கும்போது பார்த்துக்கலாம், தைரியமா வாங்கடா” என்று கால்சட்டையின் பின்புறத்தில் ஒட்டியிருந்த புல்துணுக்குகளை உதறிக்கொண்டு எழுந்தான் பரசுராமன். அவனைத் தொடர்ந்து எல்லோரும் எழுந்தார்கள். மட்டை, பந்துகளைச் சுமந்துகொண்டு தங்கமுத்து அண்ணன் வீட்டுக்குச் சென்றோம்.

கஜேந்திரன் தன் வீட்டுக்கு ஓடோடிச் சென்று முறம், கூடை, ஒட்டடைக்கோல் எல்லாவற்றையும் எடுத்து வந்தான். நெடுஞ்செழியன் தன் வீட்டிலிருந்து துடைப்பத்தை எடுத்துவந்தான்.

முதலில் நந்தியாவட்டையைச் சுற்றி விழுந்திருந்த பூக்குப்பைகளையெல்லாம் கூட்டி தள்ளிவந்து சுவரோரமாக குவித்தோம்.  ஒட்டடை அடித்தோம். சுவரை ஒட்டியும் திண்ணையிலும் விழுந்து குவிந்திருந்த மணலையெல்லாம் பெருக்கிக் கூட்டி வாரி எடுத்த பிறகு தண்ணீர் ஊற்றி பளபளவென்று கழுவி்த் துடைத்தோம். ஒரு மணி நேரத்தில் அந்தத் திண்ணை பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. அதைப் பார்க்கப்பார்க்க எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அதே சமயத்தில். அதைப் பார்க்க தங்கமுத்து அண்ணன் இல்லையே என்று வருத்தமும் ஏற்பட்டது.

மறுநாள் முதல் விடுப்புக்காலம் முடியும் வரைக்கும் பகல் பொழுது முழுவதையும் தங்கமுத்து அண்ணன் வீட்டுத் திண்ணையில் கழிக்கத் தொடங்கினோம். பரசுராமன் தன் வீட்டிலிருந்து கேரம் போர்டு எடுத்து வந்தான். சுப்பிரமணி சதுரங்கக்கட்டங்கள் வரையப்பட்ட பலகையைக் கொண்டுவந்து எல்லோருக்கும் காய்களை நகர்த்தும் விதத்தைச் சொல்லிக் கொடுத்து ஆட வைத்தான். நகரங்களின் பெயர்களோடு சதுரம்சதுரமாக காணப்படும் கட்டங்கள் நிறைந்த அட்டையைக் கொண்டுவந்து வைத்து ம்பிசினெஸ் என்றொரு புதிய ஆட்டத்தைக் கற்றுக் கொடுத்தான் நெடுஞ்செழியன்.

ஆடி முடித்து ஓய்ந்த நேரங்களில் சினிமாக்கதைகள் பேசினோம். முதல் எழுத்தைச் சொல்லி சினிமாப்படத்தின் முழுப்பெயரைக் கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆடினோம். மாலையில் பொழுது சாய்ந்த வேளையில் ஸ்டேஷன் திடலுக்குச் சென்று பந்து ஆடினோம்.

அண்ணன் அங்கே இல்லை என்கிற உணர்வே எங்களுக்கு எழவில்லை. வீட்டுக்குள் தன் அம்மாவுக்கு உதவியாக ஏதோ வேலை செய்துகொண்டிருக்கிறார், எந்த நேரத்திலும் வந்து சேர்ந்துவிடுவார் என்கிற எண்ணம்தான் இருந்தது.

கனவு கலைவதுபோல விடுமுறைக்காலம் வெகுவிரைவில் கரைந்துவிட்டது. பள்ளி தொடங்கி புதிய வகுப்புக்குச் செல்லத் தொடங்கிவிட்டோம். பள்ளியிறுதி வகுப்பு என்பதால் முதல் நாளிலேயே எங்கள் பாடங்கள் தொடங்கிவிட்டன.

வகுப்புக்கு வந்த ஒவ்வொரு ஆசிரியரும்  “இந்த ஒரு வருஷம் உங்க வாழ்க்கையில முக்கியமான ஒரு வருஷம்டா. அந்தக் கதை இந்தக் கதைன்னு மனசை அலைபாய உடாம படிக்கணும். இந்த வருஷத்துல  நீங்க எடுக்கற மார்க்குதான் உங்க எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போவுது”  என்று தாரகமந்திரம் போல சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

புத்தகமே கதியென்று எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. ஏரிக்கரைக்கோ, ஸ்டேஷன் திடலுக்கோ எப்போதாவதுதான் செல்ல முடிந்தது. அந்த நேரம் கூட சிறிது விளையாட்டு, சிறிது பேச்சு என நாக்கில் வைத்த மிட்டாயென வேகவேகமாகக் கரைந்துவிட்டது.

திண்ணைக்குச் செல்வது குறைந்துவிட்டதால், வாசலில் புல் அடர்ந்து குப்பை மண்டியது. திண்ணையில் தூசு படிந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது அக்கணமே அனைவரும் கூடிச் சென்று முன்புபோல சுத்தம் செய்துவிட்டு புழங்கத் தொடங்கவேண்டும் என்றொரு எண்ணம் எழும். அப்புறம் அது வந்த வேகத்திலேயே அடங்கிவிடும்.

தங்கமுத்து அண்ணனின் முகத்தை ஒருநாளும் மறக்கமுடிந்ததில்லை. சைக்கிள் ஒட்டத் தெரியாமலும் நீச்சலடிக்கத் தெரியாமலும் தவித்து சங்கடத்தில் நெளியும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் நினைவு வந்துவிடும். அவருக்கு அமைந்திருந்த ஜெயசங்கரின் முகச்சாயலும் புன்னகையும் என்றென்றைக்குமாக ஒரு சிற்பம்போல நினைவில் பதிந்துவிட்டன.

அந்தத் திண்ணையைப் பார்க்கும்போதெல்லாம் கூட்டிலிருந்து ஒரு குருவி எட்டிப் பார்ப்பதுபோல அவருடைய முகம் ஆழ்மனத்திலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு மறையத் தொடங்கியது.

ஒரு ராணுவச்சிப்பாயின் கோலத்தில் தங்கமுத்து அண்ணனின் தோற்றம் எப்படி இருக்கும் என பலமுறை கற்பனையில் யோசித்திருக்கிறேன். அப்போது கூட ஜெய்சங்கரின் சிப்பாய்த்தோற்றம்தான் அவருக்குக் கச்சிதமாக பொருந்திப் போவதாக நினைத்துக்கொள்வேன். எங்கோ மிக அருகில் அந்தச் சிப்பாய்த்தோற்றத்தில் நின்று என்னை நோக்கி அவர் புன்னகைப்பதாக நினைத்து மகிழ்ச்சியடைவேன்.