வாழ்க்கையிலும் கதைகளிலும் நிகழும் எதிர்பாராத திருப்பங்களைப்போல, கிருஷ்ணன் சந்தரின் பதினான்கு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு தற்செயலாக உருவாகிவிட்டது. இரண்டு மாதங்கள் முன்புவரையில் கூட இப்படி ஓர் எண்ணம் யாருடைய நெஞ்சிலும் இல்லை. உரையாடலின் போக்கில் எதிர்பாராத விதமாக கருக்கொண்டு வேகவேகமாக ஒரு தொகுதியாக மலர்ந்துவிட்டது.
இப்படி எதிர்பாராத விசித்திரங்கள் நிகழும்போதெல்லாம் என்னால் அல்லமப்பிரபுவின் வசனவரிகளை நினைக்காமல் இருக்கமுடியாது. “எங்கோ மாமரம் எங்கோ குயில், எங்கிருந்து எங்கே சம்பந்தம் ஐயா, மலை உச்சியில் நெல்லிக்காய் கடலிலிருக்கும் உப்பு எங்கிருந்து எங்கே சம்பந்தம் ஐயா” என்பவைதாம் அவ்வசன வரிகள். பதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக நூற்றாண்டைக் கடந்த உருது எழுத்தாளரான கிருஷ்ணன் சந்தரின் கதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதும் இத்தருணத்தில் அந்த வரிகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.
கிருஷ்ணன்
சந்தரின் கதைகளை என் கல்லூரிக்காலத்தில் ’நம்பிக்கை நட்சத்திரம்’ என்னும் தொகுதியில்தான்
நான் முதன்முதலாகப் படித்தேன். முதல் வாசிப்பிலேயே
அவருடைய சிறுகதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்குப் பிறகு இந்தியன் லிட்டரேச்சர், இந்தியன்
ஹாரிசன், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற ஆங்கில இதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சமயங்களில்
படித்திருக்கிறேன். நான் படித்த அவருடைய முதல் கதை வழியாக கிருஷ்ணன் சந்தர் என்னும்
பெயர் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அன்றுமுதல் அவர் எழுதிய படைப்பு என்று
தெரிந்தால் போதும், உடனே எடுத்துப் படித்துவிடுவேன்.
தற்செயலாக
ஒருசில மாதங்களுக்கு முன்பு மூத்த எழுத்தாளர் விட்டல்ராவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது,
அவர் தன் இளமைப்பருவத்தில் வீக்லி இதழில் வாசித்த கிருஷ்ணன் சந்தரின் சிறுகதையை நினைவுபடுத்திக்கொண்டு
நீண்ட நேரம் பேசினார். அந்த உரையாடலின் முக்கியத்துவம் காரணமாக, நான் அத்தருணத்தை ஒரு
சொற்சித்திரமாக எழுதினேன். அம்ருதா இதழில் வெளிவந்த அக்கட்டுரையைப் படித்த என்னுடைய
நண்பர் ஆனந்த் அக்கதையின் உள்ளடக்கத்தினால் ஈர்க்கப்பட்டு, அக்கதையை வாசிக்கும் ஆர்வத்தில்
அதன் பிரதியைத் தேடத் தொடங்கினார். ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியிலேயே அவர் அக்கதையின்
இந்தி மொழிபெயர்ப்புப் பிரதியைக் கண்டுபிடித்துவிட்டார். அவர் இந்தி மொழியில் நன்கு
தேர்ச்சி பெற்றவர் என்பதால், அடுத்த நாளே அக்கதையைத் தமிழில் மொழிபெயர்த்துவிட்டார்.
இப்படி,
சில மாதங்களாகவே கிருஷ்ணன் சந்தர் என்னும் படைப்பாளரைப்பற்றி உரையாடல் என்னைச் சுற்றி
நிகழ்ந்தபடியே இருந்தது. ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக, நண்பர் ராணி திலக்கும்
அந்த உரையாடலில் இணைந்துகொண்டார்.
அவருடைய
செயல்வேகம் வியப்பளிப்பதாக இருக்கிறது. எள் என்பதற்குள் அவர் எண்ணெயாக இருக்கிறார்.
நளன் தேரோட்டிய வேகத்தைப்பற்றி புகழேந்திப்புலவர் எழுதிய பாடல் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.
நம் பார்வையைவிட்டு விலகிவிட்ட பழைய பிரதிகளை ராணி திலக் தேடிக் கண்டடைகிற வேகம் நளன்
தேரோட்டிய வேகத்தைவிட அதிகமானது என்றே சொல்லவேண்டும்.
எப்படியோ,
இன்று எல்லோருடைய கனவும் நனவாகியிருக்கிறது. இந்தியச் சிறுகதை மேதைகளில் ஒருவரான உருது
எழுத்தாளர் கிருஷ்ணன் சந்தருக்கு தமிழில் இப்படி ஒரு தொகுப்பு உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தன் தாய்மொழியான உருதுவில் 51 நாவல்களும் 34 சிறுகதைத்தொகுதிகளும் எழுதிய ஒரு மூத்த
படைப்பாளி இத்தொகுதி வழியாக தமிழ்வாசகர்களை வந்தடைந்திருக்கிறார். இக்கதைகளை மொழிபெயர்த்த மூத்த மொழிபெயர்ப்பாளர்களான
அசோகன், முக்தார், ரா.வீழிநாதன் ஆகியோரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
இத்தொகுதியில்
பதினான்கு கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையையும் புதுப்புதுப் பின்னணியில் புதுப்புதுப்
பாத்திரங்களை மையமாக்கி எழுதியிருக்கிறார் கிருஷ்ணன் சந்தர். ஒரு கதை காதலைக் களமாகக்
கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்னொரு கதை தியாகத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
பிறிதொரு கதை அரசியல் களத்தில் கண்ட ரத்தக்களறியைச் சித்திரமாக்கியிருக்கிறது. ஒரு
கதையில் கனிவு கரைபுரண்டோடுகிறது. அடுத்த கதையிலேயே நையாண்டியும் கேலியும் விரவியிருக்கின்றன. கதையின்
களங்கள் மாறுபட்டாலும், அடிப்படையில் மானுட இருப்புக்கான பொருள் என்ன என்னும் வினா
எல்லாக் கதைகளின் ஊடாக ஒலித்தபடி இருக்கிறது. அவரை மேதை என்று குறிப்பிடுவதற்கு இது
ஒரு முக்கியமான காரணம்.
இத்தொகுதியின்
மிகமுக்கியமான கதை குப்பைச்சாமியார். அதை வாசித்து முடிக்கும்போது எல்லோருக்குமே ஒரு
கணம் ஜெயகாந்தனை நினைத்துக்கொள்ளத் தோன்றும். அவருடைய குருபீடம் சிறுகதை தொடக்கத்தில்
ஒரு சோம்பேறிப்பிச்சைக்காரரைப்பற்றிய சித்திரத்தை ஜெயகாந்தன் வழங்கியிருப்பார். ஆனால்
ஒரு சிறுவனின் தொடர்சேவை அந்தச் சாமியாருக்குள் உருவாக்கும் நுட்பமான மாற்றங்களைப்
பதிவு செய்தபடி கதை போகும். ஒரு கட்டத்தில் சேவகனாக வந்தவனே குருவாக மாறிவிடுவான்.
பிச்சைக்காரர் சாமியாராக மாறிவிடுவார்.
கிருஷ்ணன்
சந்தரின் குப்பைச்சாமியார் கதையிலும் அப்படிப்பட்ட ஒரு சோம்பேறிச்சாமியார் இடம்பெற்றிருக்கிறார்.
அவர் விரும்பி அக்கோலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நிலைமையை வந்தடைந்ததற்கு ஒரு காரணம்
இருக்கிறது. வருமானம் இல்லாத குடும்பம். மருத்துவம் செய்துகொள்வதற்காக மனைவியால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டவர் அவர்.
முதலில்
அக்குடும்பத்தின் சேமிப்பு கரைகிறது. அடுத்து அவருடைய மனைவியின் நகைகளை விற்பனை செய்ததால்
கிடைத்த பணமும் செலவாகிறது. பிறகு அந்த மனைவியின் வருமானமும் செலவாகிறது. செலவு கைமீறிப்
போகும் சமயத்தில் மனைவி அவரைவிட்டு விலகிவிடுகிறாள். அவள் தனக்கென ஒரு புதிய துணையைத்
தேடிக்கொண்டு பறந்துவிட்டாள் என்னும் உண்மையை அவரால் புரிந்துகொள்ளமுடிகிறது. அவரால்
எதையும் தடுக்க முடியவில்லை. அவரால் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது.
ஒருநாள்
நோயாளியான அவர் மருத்துவமனையால் வெளியேற்றப்படுகிறார். போக்கிடம் இல்லாத அவர் நாள்முழுதும் நடந்து நடந்து
ஒரு தெருவோரத்துக் குப்பைத்தொட்டிக்கு அருகில் வந்து சேர்கிறார். அத்தொட்டியில் கிடைப்பதை
உண்டு, அங்கேயே உறங்கி இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக காலம் கழிக்கிறார். அந்த
வட்டாரத்துக்கே அவர் பழக்கமான ஒரு மனிதராகிவிடுகிறார்.
ஒருநாள்
அந்தக் குப்பைத்தொட்டியில் உணவைத் தேடும்போது அவர் அங்கே ஒரு குழந்தையின் அழுகுரல்
கேட்டு, தேடியெடுத்து சுத்தப்படுத்தி பசியைப் போக்கி, தன்னோடு வைத்துகொள்கிறார். அக்குழந்தையின்
குரல் அவர் மனத்தை மாற்றிவிடுகிறது. அக்குழந்தையை அவர் மறுபடியும் தொட்டியில் வீசவோ,
முகம் தெரியாத பிறரிடம் கொடுக்கவோ அவருக்கு விருப்பமில்லை. அவரே அக்குழந்தையை ஒரு தந்தையாக
வளர்க்க முடிவெடுக்கிறார். அன்று இரவே அவர் அந்தக் குப்பைத்தொட்டியைவிட்டு வெளியேறிவிடுகிறார்.
மறுநாள் புதிய கோலத்துடன் அருகிலிருந்த கட்டுமானத்தொழில்
நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கட்டடத்தில் சித்தாளாக வேலைக்குச் செல்லத் தொடங்கிவிடுகிறார்.
குப்பைச்சாமியாராக இருந்த ஒரு மனிதரை, ஒரு கைக்குழந்தை தன்மானம் கொண்ட ஒரு தொழிலாளியாக
மாற்றிவிடுகிறது.
கிருஷ்ணன்
சந்தரின் கதைத்தொகுதியின் செல்திசை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக,
இம்முன்னுரையில் இக்கதையைப்பற்றி சற்றே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அவருடைய பிற
சிறுகதைகளின் உலகத்தில் நுழையும் வாசகர்கள் இதைவிடச் சிறந்த பேரனுபவத்தை அடைவார்கள். அது உறுதி.
மிகவும்
குறுகிய காலத்தில் தளரா முயற்சியோடும் உற்சாகத்தோடும் வெவ்வேறு இதழ்களில் நாற்பதுகளிலும்
ஐம்பதுகளிலும் வெளிவந்த கிருஷ்ணன் சந்தரின் கதைகளைத் தேடியெடுத்துத் தொகுத்திருக்கும்
நண்பர் ராணி திலக் அவர்களுக்கும் வாழ்த்துகள். எழுத்தாளர் கிருஷ்ணன் சந்தரின் செல்வாக்கு
தமிழ்ச்சூழலில் நீடித்திருக்கட்டும்.
(ராணிதிலக் தொகுத்து எழுத்து பிரசுரம் வழியாக
வெளிவந்திருக்கும் ’கிருஷ்ண சந்தர் கதைகள்’ தொகுதிக்கு எழுதிய முன்னுரை)