Home

Tuesday, 3 January 2023

அ.மாசில்லாமணிப்பிள்ளை : உண்மையும் ஊக்கமும்

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலத்திலிருந்தே காந்தியடிகள் எளிய கதராடைகளைப் பயன்படுத்துவதை சமத்துவத்தின் அடையாளமாகவும் தேசியத்தின் உருவகமாகவும் முன்வைத்து உரையாடி வந்தார்.  முழுமனத்துடன் கதர்ப்பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு சத்தியாகிரக வழியில் போராடுவதன் வழியாக மட்டுமே சுதந்திரத்தை அடையமுடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.   கதர்ப்பயன்பாட்டைப் பரவலாக்கும் விதமாக பல தன்னார்வலர்களையும் தொண்டர்களையும் நாடெங்கும் உருவாக்கினார். நாடு முழுதும் ஒவ்வொரு தொண்டரும் கதராடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் கைராட்டையில் நூல்நூற்று தன் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

ஒரு காலத்தில் இந்தியாவின் ஏழ்மையைப் புலப்படுத்தும் அடையாளமாகக் கருதப்பட்ட கைராட்டையை, காந்தியடிகள் தன் தொடர்பிரச்சாரத்தின் வழியாக அகிம்சையின் அடையாளமாகவும் தன்னம்பிக்கையின் உருவகமாகவும் உருமாற்றி நிறுவினார். அவருடைய தொடர்ச்சியான பரப்புரையின் விளைவாக, 1925இல் கான்பூரில் சரோஜினி நாயுடுவின் தலைமையில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் கதராடைகளை கண்டிப்பாக அணியவேண்டும் என்றும் ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டுக்கு இரண்டாயிரம் கெஜம் நூலை  நூற்று அளிக்கவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக அனைத்திந்திய சர்க்கா சங்கம் உருவாகி வேகமாக வளர்ச்சி பெற்றது. அதன் தொடர்ச்சியாக காந்தியடிகள் உடனடியாக ஒரு கதர் யாத்திரையை நாடு தழுவிய அளவில் திட்டமிட்டுத் தொடங்கினார். குஜராத்திலும் வங்காளத்திலும் தொடங்கிய அவருடைய பயணம் மெல்ல மெல்ல எல்லா வடமாநிலங்கள் வழியாகவும் நீண்டு சென்றது. இறுதியாக 1927இல் கர்நாடகம் வழியாக அவர் தமிழகத்துக்கு வந்தார்.




வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், தேவகோட்டை, மதுரை என பல ஊர்களைக் கடந்து 06.10.1927 அன்று காந்தியடிகள் தூத்துக்குடியை அடைந்தார். அன்று மாலை வட்டக்கிணறு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆலைத்துணிகளைத் தவிர்த்து மக்கள் அனைவரும் கதராடைகளை அணியவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார் காந்தியடிகள். இதற்கு முன்பாக இந்தி கற்பதை ஊக்கப்படுத்தும் விதமாக சில மேடைகளில் காந்தியடிகள் ஆற்றிய உரையின் விளைவாக காந்தியடிகளுக்கு தமிழ் மொழியின் மீது அக்கறை கிடையாது என்னும் கருத்து எப்படியோ மக்களிடையில் பரவியிருந்தது. அச்செய்தி காந்தியடிகளை உடனடியாக வந்து சேர்ந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக காந்தியடிகள் அம்மேடையில் தமக்கிருக்கும் தமிழ் ஈடுபாட்டைப்பற்றி தன்னிலை விளக்கமாக விரி்வாகவே எடுத்துரைத்தார். திருக்குறளை நேரிடையாக படிக்கும் ஆர்வத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ் படிக்கத் தொடங்கியதையும் நினைவுகூர்ந்தார்.

காந்தியடிகளின் அன்றைய உரையை தொடக்கத்தில் இராஜாஜி மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் உடல்நிலை காரணமாக அவரால் தொடரமுடியாமல் போனபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த இளைஞரொருவர் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தடுமாற்றமே இல்லாத குரலில் அந்த இளைஞர் தெளிவாக மொழிபெயர்ப்பதைக் கவனித்த காந்தியடிகள் தன் உரையை முடித்த பிறகு அருகில் அழைத்துப் பாராட்டி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இளைஞருடைய ஆர்வம், தொண்டு, பணிகள் சார்ந்து சிறிது நேரம் உரையாடிவிட்டுச் சென்றார். அந்த இளைஞர் பெயர் அ.மாசில்லாமணிப்பிள்ளை.

காந்தியடிகளின் கருத்தை ஏற்று கதராடை உடுத்தி, சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பே, இளைஞரான மாசில்லாமணியின் நெஞ்சில் ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்றி இந்தியர் ஆட்சியை உருவாக்கி நிலைநிறுத்தும் கனவு மலர்ந்திருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து தூத்துக்குடியிலேயே வருமானத்துக்காக மரமண்டி, மாவு அரைவு ஆலை, கட்டட ஒப்பந்த வேலை என பலவிதமான தொழில்களில் ஈடுபட்டு மாசில்லாமணிக்கும் ஒட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்து வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் இடையில் உருவான தொடர்பு, அவரை சுதந்திரநாட்டம் கொண்டவராக வடிவமைத்தது. வ.உ.சி. உருவாக்கிய சுதேசி பிரச்சார சபையிலும் தூத்துக்குடி கைத்தொழில் சங்கத்திலும் தருமசங்க நெசவுச்சாலையிலும் மாசில்லாமணி பங்கெடுத்துக்கொண்டார். தேச விடுதலையை முதன்மை இலட்சியமாக எண்ணிய மாசில்லாமணி தாம் தொடங்கி நடத்திய எல்லாத் தொழில்களையும் தம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு, முழுநேரத் தேசத் தொண்டராக உழைக்கத் தொடங்கினார்.

வழக்கமாக கைத்தறி ஆடைகளை மட்டுமே உடுத்தும் பழக்கமுள்ள மாசில்லாமணி ஒருநாள் ஞாயிறு திருப்பலிக்குச் செல்வதற்கு புத்தாடை வாங்கச் சென்ற கடையில் கைத்தறி வேட்டி இல்லாததால் ஆலைவேட்டியை வாங்கிவந்து அணிந்துகொண்டு சென்றார். அங்கிருந்து நேராக வ.உ.சி. பங்கேற்கவிருந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டார். வ.உ.சி. தன் உரையை முடித்த பிறகு மாசில்லாமணியை உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். மாசில்லாமணியும் மேடையேறி ஊக்கமுடன் உரையாற்றினார். மேடையிலிருந்து இறங்கிவரும் தருணத்தில்தான் மாசில்லாமணி உடுத்தியிருந்த ஆலைவேட்டியின் மீது வ.உ.சி.யின் பார்வை படிந்தது.  அக்கணமே அவர் மாசில்லாமணியைக் கடிந்துகொண்டார். ஒரு கொள்கையை மக்களிடம் எடுத்துச் சொல்பவன், முதலில் அக்கொள்கையை முழுமனத்துடன் பின்பற்றி அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழவேண்டியது மிகமுக்கியம் என அவருடைய நெஞ்சில் பதியும்வகையில் அழுத்தமாக எடுத்துரைத்தார். அன்றே கதராடைகளைத் தவிர பிற ஆடைகளை ஒருபோதும் அணிவதில்லை என்று உறுதியேற்றார் மாசில்லாமணி. வீட்டுக்குத் திரும்பி ஆலை ஆடைகளை அகற்றிவிட்டு, கதராடைகளை அணிந்துகொண்டார். அன்றுமுதல் மாசில்லாமணி என்றாலே கதர் வேட்டி, கதர் குல்லாய் என்று அடையாளம் சொல்லும் அளவுக்கு அவர் கோலம் மாறிவிட்டது.

1907இல் கூடிய சூரத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய வ.உ.சி. மாவட்டமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மேடைதோறும் முழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுத்திய தீமைகளைப் பட்டியலிட்டுப் பேசி விடுதலைவிருப்பத்தை மக்களிடையில் விதைத்தார். அவருடைய சீடராக அவரோடு பயணம் செய்த மாசில்லாமணியும் மேடைகளில் முழக்கமிட்டார். வ.உ.சி.யின் அழைப்பின் பேரில் வடநாட்டிலிருந்து வருகை புரிந்து உரையாற்றும் பேச்சாளர்களின் உரையை தெளிவான தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

அக்காலத்தில் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டேம் நேவிகேஷன் கம்பெனி என்னும் நிறுவனம் மட்டுமே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல்களை இயக்கிவந்தன. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்கும் நடவடிக்கைகளின் ஒன்றாக வ.உ.சி. தம் நண்பர்களுடன் இணைந்து ஒரு கப்பல் கழகத்தைத் தொடங்கி வாடகைக்கு அதே வழித்தடத்தில் கப்பல்களை இயக்கினார். ஆங்கிலேயர் நிறுவனம் பயணச்சீட்டு விலையை மிகவும் குறைத்து பயணிகளை தம் பக்கமாக ஈர்த்து, சுதேசி நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தியது. ஆயினும் மனம் தளராக வ.உ.சி. கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்திவந்தார்.

அச்சமயத்தில் தூத்துக்குடி நூற்பாலையில் நடைபெற்ற தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தையும் வ.உ.சி.யே தலைமையேற்று நடத்தினார். ஒன்பதுநாள் தொடர்ச்சியாக நடைபெற்ற அப்போராட்டம் இறுதியில் வெற்றியில் முடிவடைந்தது. கூலி உயர்வு, வார விடுமுறை போன்ற தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்வெற்றிகளால் உத்வேகம் கொண்ட வ.உ.சி. அக்காலத்தில் வங்கத்தின் மிகப்பெரிய தலைவராக விளங்கிய பிபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஒரு பெரிய கூட்டத்தை தூத்துக்குடியில் நடத்த விழைந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவதை விரும்பாத ஆங்கிலேய அதிகாரிகள் அவரையும் சுப்பிரமணிய சிவாவையும் தந்திரமாக திருநெல்வேலிக்கு வரவழைத்து கைது செய்து சிறையிலடைத்தனர். அவருக்கு நாற்பது ஆண்டு கால தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது. பல்வேறு மேல்முறையீடுகளின் விளைவாக தண்டனை குறைக்கப்பட்டது. எனினும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதன் காரணமாக 1912ஆம் ஆண்டு இறுதியில் வ.உ.சி. விடுதலை செய்யப்பட்டார்.  அவர் சிறைப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருடைய குடும்பத்துக்கு தம்மால் இயன்ற எல்லா உதவிகளையும் தொடர்ந்து செய்துவந்தார் மாசில்லாமணி. விடுதலை பெற்றுவந்த வ.உ.சி. கப்பல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய நிலையில் பங்குதாரர்களின் பணத்தைத் திருப்பியளிக்க முடிவெடுத்தார். சிலர் பெற்றுக்கொண்டனர். சிலர் வாங்க மறுத்தனர். மாசில்லாமணி தமக்கு அத்தொகை வேண்டாம் என உறுதியாக மறுத்துவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடியிலேயே இருக்க விரும்பாத வ.உ.சி. 1913இல் சென்னைக்குக் குடியேறினார்.

அக்காலத்தில் கத்தோலிக்கக் கிறித்துவர்கள் அதிக அளவில் வாழ்ந்துவந்த ஊரான வடக்கன்குளத்தில் கிறித்துவ நாடார்களும் கிறித்துவ வேளாளர்களும் தேவாலயப் பிரார்த்தனைக்கூடத்தில் இரு தனிப்பிரிவுகளாகப் பிரிந்து பிரார்த்தனை செய்யும் பழக்கம் நிலவியது. தேவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கிறித்துவ நாடார்கள் தொடர்ந்து குரலெழுப்பி வந்தனர். அந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஒரு தேவாலயத்தில் இரு பிரிவினரும் தனித்தனியாக அமர்ந்து வழிபாடு செய்யும் வகையிலும் ஒருவர் பார்வையில் ஒருவர் தென்படாத வகையிலும்  பிரிவினைச்சுவர்களைக் கொண்ட பிரார்த்தனைக்கூடம் கட்டியெழுப்பப்பட்டது.  அந்தச் சுவரை தம் சுயமரியாதைக்கு இழுக்கு என கருதிய கிறித்துவ நாடார்கள், அதை அகற்றவேண்டும் என்று குரல் கொடுத்தனர். கிறித்துவ வேளாளர்களோ அந்தச் சுவர் அப்படியே நீடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

கிறித்துவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதும் மாசில்லாமணி கிறித்துவ நாடார்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அவரிடம் இயற்கையாகவே குடியிருந்த தேசியப்பார்வை அனைவரையும் சமமாகக் கருதி ஏற்றுக்கொள்ளும் பண்பை விதைத்திருந்தது. ஆயினும் அவருடைய அறிக்கை பலரையும் கொந்தளிக்க வைத்தது. அவருடைய சுற்றத்தாரே அவருடைய நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பைக் கண்டு கலங்காத மாசில்லாமணி பிரிவினைச்சுவர் இடிக்கப்படவேண்டும் என்னும் தன் நிலைபாட்டில் பின்வாங்காதவராக இருந்தார். அவரைக் கண்டித்து தினந்தோறும் அவருக்கு கடிதங்கள் வரத் தொடங்கின.  அவரை அவமதிக்க நினைத்த ஊராரில் ஒருவர் ஒரு செருப்பை அவருக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தார். அத்துடன் மாசில்லாமணியை வசைபாடும் வெண்பா ஒன்றையும் எழுதி இணைத்திருந்தார். அதைப் பிரித்துப் பார்த்த மாசில்லாமணி சற்றும் மனம் கலங்காமல் ’ஒரு செருப்பு இருக்கிறது, இன்னொரு செருப்பு எங்கே?’ என்றொரு வாசகத்தை எழுதி, அத்துடன் தன் நிலைபாட்டுக்கான காரணத்தை விளக்கும் வகையில் வெண்பா ஒன்றையும் எழுதி இணைத்து அனுப்பிவைத்தார். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரிவினைச்சுவர் இடிக்கப்பட்டது.

1915இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் தன் அரசியல் குருவான கோகலேயின் சொல்லுக்கிணங்கி இந்தியா முழுதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து உரையாடினார். 1917இல் சம்ப்ரான் சத்தியாகிரகத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி, அனைவரையும் அவரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அறவழியில் அமைந்த சத்தியாகிரகம் என்னும் புதிய போராட்டமுறை அனைவரையும் கவர்ந்தது. ஆமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் கேடா விவசாயிகள் சத்தியாகிரகமும் அடுத்தடுத்து நிகழ்ந்து மக்களை அகிம்சை வழிமுறையில் நம்பிக்கை கொள்ள வைத்தது. ரெளலட் சட்டத்தை எதிர்த்தும் சத்தியாகிரக உறுதிமொழியை வலியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய வ.உ.சிதம்பரம் பிள்ளை காந்தியடிகளின் வழியில் சாத்விக எதிர்ப்பில் நாம் உறுதியாக இருந்தால் அது நாம் சுயாட்சி பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று குறிப்பிட்டார். 1920இல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயருக்கு பேரிடியாக அமைந்தது. நீதிமன்றங்களை விலக்குதல், சட்டமன்றத்தை விலக்குதல், அயல்நாட்டுத் துணிகளை விலக்குதல் ஆகிய மூவகை விலக்குகளை அடிப்படை நோக்கங்களாகக் கொண்ட அவ்வியக்கம் மிக வேகமாக நாடெங்கும் பரவியது.

ஒத்துழையாமை இயக்க அறிவிப்பின் விளைவாக மீண்டும் ஊக்கம் கொண்ட மாசில்லாமணி, அயல்நாட்டுத் துணிகளை விலக்குதல் தொடர்பான பரப்புரையில் ஈடுபட்டு தொண்டர்களைத் திரட்டினார். தூத்துக்குடியிலும் பிற சிற்றூர்களிலும் தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். கதர் பயன்பாட்டை வலியுறுத்தும் வகையில் சில்லாநத்தம் என்னும் ஊரில் ஒரு நூற்புமையத்தை ஏற்படுத்தினார். முப்பதுக்கும் மேற்பட்ட கைராட்டைகள் அங்கே இயங்கின. ஆர்வம் கொண்ட ஊர்மக்களுக்கு நூற்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். அதற்கென ஒரு பயிற்சி ஆசிரியரையும் நியமித்தார். பஞ்சு வெட்டுதல், பட்டை போடுதல், நூற்றல் என எல்லா வேலைகள் சார்ந்தும் அவர் மக்களுக்கு பயிற்சியை அளித்தார். மிக மெலியதாகவும் நேர்த்தியாகவும் நூற்கப்பட்ட நூற்கண்டுகளை, அந்த மையத்தின் சார்பாக காந்தியடிகளுக்கு அனுப்பிவைத்தார்.

சட்டமன்ற விலக்கை முன்வைத்து  மாசில்லாமணி சிந்து அமைப்பில் எழுதிய   பாடல் அனைவராலும் விரும்பிப் பாடப்பட்டது. தெம்மாங்கு அமைப்பில் அமைந்த அப்பாடலை ஒருமுறை கேட்டாலே மனத்தில் பதிந்துவிடும் வண்ணம் எளிய சொல்லமைப்புடன் அப்பாடலை எழுதி வெளியிட்டார் மாசில்லாமணி. ”மானம் சிதைந்ததையா மரியாதை குலைந்ததையா ஞானமுள்ள மாந்தரவெர் நாடுவர்கொல் சட்டசபை?” “சட்டசபை மட்டசபை செளகரியம் அற்ற சபை இச்சபையின் தாபனத்தால் எய்தும்பயன் ஏதுமில்லை” என பாடிய வரிகள் பொதுமக்களை ஈர்த்தன.

அக்காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் பிற பொதுஇடங்களிலும் அமைதியான முறையில் தேசியக்கொடியை ஏற்றுவதும் கூட, ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாடெங்கும் இச்செயல்பாடுகள் பெருகின. எங்கெங்கும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. கொடி பறக்கும் காட்சியைக் காணும் காவலர்கள் அந்த இடத்திலேயே தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கம்பங்களிலிருந்து கொடிகளை இறக்கி எடுத்துச் சென்றனர். கொடி ஏற்றியதற்காக, நேரு, இராஜாஜி, படேல், வினோபா, இராஜேந்திரபிரசாத் போன்ற தலைவர்களை காவலர்கள் கைது செய்தனர். இச்செய்தியை பத்திரிகைகள் வழியாக அறிந்துகொண்ட மாசில்லாமணி தம் தொண்டர்களுடன் அடுத்த நாளே தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றார். முத்தையாதாஸ், சோமயாஜுலு, கந்தசாமிப்பிள்ளை, குருசாமி நாயுடு, சுப்பையர், கணபதி ஐயர் போன்ற பல இளம்தொண்டர்கள் அந்த ஊர்வலத்தில் மாசில்லாமணியைப் பின்பற்றி முழக்கமிட்டுச் சென்றனர். அந்த ஊர்வலம் காவல்நிலையத்தின் முன்னாலேயே சென்றபோதும், அந்த ஊர்வலத்தில் நிலவிய தன்னொழுங்கை நினைத்து காவலர்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

30.01.1930 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த சுயராஜ்ஜிய பிரகடனத்தைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் விதித்த உப்புவரியை அறவழியில் எதிர்க்கும் வகையில் காந்தியடிகள் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள தண்டி என்னும் கடற்கரையில் தடையை மீறி உப்பெடுக்கும் நோக்கத்துடன் ஒரு நடைப்பயணத்தை 12.03.1930 அன்று அவர் தொடங்கினார். 23 நாட்கள் தொடர்ச்சியாக 240 மைல்கள் தொலைவு நடந்து 06.04.1930 அன்று தண்டி கடற்கரையில் அவர் உப்பெடுத்து சட்டங்களை உடைத்தார். அதைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள வெவ்வேறு தலைவர்களும் தாம் வாழும் ஊர்களுக்கு அருகிலிருக்கும் கடற்கரைப்பகுதிகளுக்குச் சென்று உப்பெடுத்தனர்.  தமிழகத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கி தொண்டர்களுடன் ஒரு பயணத்தைத் திட்டமிட்டார் இராஜாஜி. அச்சூழலால் உத்வேகம் கொண்ட மாசில்லாமணி தம் தொண்டர்களுடன் திரண்டு சென்று தூத்துக்குடி கடற்கரையில் உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் இறங்கினார். காவல் துறையினர் உடனடியாக அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரையடுத்து மாசில்லாமணியின் நண்பர்களான ஜே.பி.ராட்ரிகஸ், பெ.கந்தசாமிப்பிள்ளை போன்றோர் அப்போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர்.

மூவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். மேடு பள்ளம் கொண்ட கட்டாந்தரையாக சிறைக்கொட்டடிகள் இருந்தன. பாய், தலையணை, போர்வை என ஒரு வசதியும் அங்கு இல்லை. உட்கார பலகையோ, ஜன்னலோ எதுவுமே அந்த அறையில் இல்லை. இருள் சூழ்ந்த பிறகு விளக்கும் ஏற்றப்படவில்லை. இரவு முழுதும் மாசில்லாமணி உறங்கவில்லை. சுயமாக பாடல் புனைந்து உரத்த குரலில் பாடிக்கொண்டே பொழுதைப் போக்கினார். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து அடிமைப்பட்டது வரையான வரலாற்று நிகழ்ச்சிகளை வெவ்வேறு ராகங்களில் புதிய புதிய பாடல்களைப் புனைந்து பாடினார். மற்ற அறைகளில் அடைக்கப்பட்டிருந்த நண்பர்கள் அப்பாடல்களைக் கேட்டு கைதட்டி உற்சாகப்படுத்தியபடி இருந்தனர். சிறைவாசத்தின் முதல் இரவை நண்பர்கள் அனைவரும் பாடல்களின் துணையோடு கழித்தனர்.

அடுத்தநாள் காலை சிறைக்காவலர் வந்து அறையின் கதவுகளைத் திறந்துவிட்டார். அடைபட்டிருந்த ஒவ்வொருவரும் தம் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிறுநீர்க்கலயத்தை அவரவர்களே எடுத்துவந்து தூய்மை செய்துகொள்வது அச்சிறைக்கூடத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கமாகும். ராட்ரிகஸும் கந்தசாமிப்பிள்ளையும் தத்தம் கலயங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். ஆனால், மாசில்லாமணி கலயமின்றி வெளியே வந்தார். அதைக் கவனித்த காவலர் அதட்டும் குரலில் அவரிடம் கலயத்தை எடுத்துக்கொண்டு வருமாறு ஆணையிட்டார். அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கலயங்களை எடுத்துச் செல்லவும் மீண்டும் கொண்டுவந்து வைக்கவும் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துவைத்திருந்த மாசில்லாமணி பணியாளர்கள் செய்யவேண்டிய பணியை தன்னால் செய்ய முடியாது என நேரிடையாக அறிவித்தார். அந்தப் பணியைச் செய்யக்கூடாது என்பது அவர் எண்ணமல்ல.  அப்பணிக்கென ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர் செய்யவேண்டிய பணியை இன்னொருவர் வழியாக செய்யவைக்க நினைப்பதை அவர் பெரும்பிழையாகக் கருதினார். கைதி என்னும் காரணத்தால் தன் உழைப்பு சுரண்டப்படுவதை அவர் விரும்பரும்வில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே காவலரிடம் அத்தகு பதிலைக் கூறினார். இருவருக்கும் இடையில் விவாதங்கள் நடைபெறுவதை அங்கிருந்த அனைவரும் கவனித்தனர். வேறு வழியின்றி, காவலர் பணியாளரை வரவழைத்து கலயத்தை அகற்றச் செய்தார். மற்ற கைதிகளிடமும் அச்செயல் ஒரு விழிப்புணர்வை ஊட்டியது. அடுத்தடுத்த நாட்களில் அவர்களும் மறுக்கத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக அச்சிறையில் இருந்த எல்லாக் கைதிகளுக்கும் கலயம் சுமக்கும் வேலையிலிருந்து விடுதலை கிடைத்தது.

05.03.1931 அன்று காந்தியடிகளுக்கும் வைசிராய் இர்வினுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக உப்பு சத்தியகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எல்லாக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டு வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய தேசிய காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. உப்புவரியை ரத்து செய்யவும் அவசர சட்டங்களை விலக்கிக்கொள்ளவும் கள்ளுக்கடைகள், அயல்நாட்டுத்துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் நின்று மறியல் செய்வதற்கும் அரசு அனுமதித்தது.

சிறையிலிருந்து விடுதலயான மாசில்லாமணி கள்ளுக்கடை மறியலில் தொண்டர்களுடன் ஈடுபட்டார். வாசலில் நின்றுகொண்டு மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகளையெல்லாம் பட்டியலிட்டு பாடலாகப் பாடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஆத்திசூடி அமைப்பில் அப்போது அவர் எழுதி பாடிய பாடல் அனைவரையும் ஈர்த்தது.

அக்கிரமங்களுக்கெல்லாம் ஆதி மதுப்பழக்கம்

ஆத்ம ஈடேற்றத்திற்கு ஹானி மதுப்பழககம்

இல்லற தர்மத்தை இனிதுநடத்த இடையூறு மதுப்பழக்கம்

ஈனரில் ஈனரென் றெண்ணப்படச் செய்வது  மதுப்பழக்கம்

உலகவாழ்க்கையை கலகமுளதாக்குவது மதுப்பழக்கம்

ஊதாரியிலெல்லாம் ஊதாரியாக்குவது மதுப்பழக்கம்

எல்லாத் துயர்க்கும் இருப்பிடம் மதுப்பழக்கம்

ஏடாகூடங்களில் பிறப்பிடம் மதுப்பழக்கம்

ஐம்புலன்களின் அறிவைக் கெடுப்பது மதுப்பழக்கம்

ஒழுக்க மதனை இழக்கவைப்பது மதுப்பழக்கம்

ஒழுக்கமதனை இழக்கவைப்பது மதுப்பழக்கம்

ஓதாமல் இறக்கவைப்பது மதுப்பழக்கம்

ஒளஷதமில்லா அரும்பிணி மதுப்பழக்கம்

26.03.1931 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கராச்சியில் வல்லபாய் படேல் தலைமையில் கூடியது. லண்டனில் நடைபெறவிருந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக கலந்துகொள்ள காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சென்று கலந்துகொண்டார் மாசில்லாமணி. அன்று நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள்  தொடர்பான தீர்மானமாகும். காந்தியடிகள் முன்மொழிந்த அத்தீர்மானத்தை ஆதரித்து மாசில்லாமணி பேசினார். அவருடைய பேச்சை மெச்சிப் பாராட்டினார் காந்தியடிகள்.

ஒருமுறை திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேரு பங்கேற்று உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் நிகழ்த்திய உரையை அன்று மாசில்லாமணி தமிழில் மொழிபெயர்த்தார். மற்றொரு தருணத்தில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரையையும் மாசில்லாமணியே மொழிபெயர்த்தார். அதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் பயணம் செய்ய வரும் வடமாநிலத் தலைவர்களின் உரைகளனைத்தையும் மாசில்லாமணியே மொழிபெயர்க்கும் சூழல் உருவானது.

06.91936 அன்று சிவகங்கை வட்டத்தில் ஏரியூர் என்னும் ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசியல் மாநாட்டுக்கு மாசில்லாமணி தலைமை தாங்கினார். அன்று மாநாட்டில் கூடியிருந்த தொண்டர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணம் அவர் ஆற்றிய தலைமையுரை அனைவராலும் பாராட்டப்பட்டது. சட்டசபையைப் புறக்கணிக்கும் முடிவில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்த காங்கிரஸ் சட்டசபைக்குச் செல்லும் முடிவை எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அவருடைய உரை அனைவருடைய உள்ளங்களிலும் இருந்த பலவிதமான ஐயங்களுக்கு விடையாக அமைந்தது. மேலும் சுயாட்சியின் தேவை குறித்த ஐயங்களுக்கும் அவர் விடையளித்தார். அன்றைய மாநாட்டு உரை ஒரு புத்தகமாகவே அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் பிற ஊர்களிலும் நடைபெற்ற எல்லா காங்கிரஸ் மாநாடுகளிலும் மாசில்லாமணியின் உரை ஒரு பகுதியாக இடம்பெறத் தொடங்கியது. அந்த அளவுக்கு கருத்தாழம் மிக்க தம் பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவருடைய உரையால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் அவரை பிரசங்க சிங்கம் என்று பட்டப்பெயரிட்டு அழைத்தனர்.

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்குத் துணையாக இந்தியாவை ஈடுபடுத்தும் முடிவை தன்னிச்சையாக எடுத்த ஆங்கிலேய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தார் காந்தியடிகள். ஆங்கில அரசு எடுக்கும் போர் ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 17.10.1940 அன்று காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்தார். முதல் சத்தியாகிரகியாக வினோபா பாவேயும் இரண்டாவது சத்தியாகிரகியாக நேருவையும் மூன்றாவடாக பிரம்மதத்தையும் தேர்ந்தெடுத்தார். இவ்வண்ணம் நாடெங்கும் வரிசை முறையில் சத்தியாகிரகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குச் சென்றனர். அமைச்சர்களாக இருந்தவர்களும் சட்டசபை உறுப்பினர்களும் கட்சியில் முக்கிய பொறுப்பை வகிப்பவர்களும் முதல் வரிசையில் இருந்தனர். அப்போது மாசில்லாமணியின்  மனைவியான ஜெபமணி சட்டசபையில் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அதனால் ஜெபமணி அம்மையார் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று முதலில் சிறைக்குச் சென்றார். அப்போராட்டத்தில் தானும் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளூர மாசில்லாமணியின் நெஞ்சில் நிறைந்திருந்தது. அதனால் உடனடியாக காந்தியடிகளுக்கு கடிதம் எழுதி, அவருடைய சிறப்பு அனுமதியைப் பெற்றார். அதனால் சட்டசபை உறுப்பினர்கள் அணியினரோடு இறுதிப்பட்டியலில் இணைந்து 20.01.1941 அன்று தூத்துக்குடி கடற்கரையில் பரிசுத்த பனிமயமாதா ஆலயத்தின் முன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். அவருக்கு ஆறு மாத கடுங்காவலும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால்  மாசில்லாமணி கூடுதலாக இரு மாதங்கள் சிறையில் கழித்தார்.

1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 08.08.1942 அன்று மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். அடுத்த நாளே அவரையும் பிற தலைவர்களையும் கைது செய்த காவல்துறை வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. காந்தியடிகள் கைதான செய்தியை அறிந்ததும், உடனே ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து  அனைவரும் கண்ணீர் உகுக்கும் வகையில் உருக்கமானதொரு உரையை ஆற்றினார் மாசில்லாமணி. அதையே காரணமாகக் காட்டி அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணைக்கைதியாகவே திருநெல்வேலி, வேலூர், சேலம், கண்ணனூர், தஞ்சாவூர் என பல சிறைகளில் இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், 19 நாட்கள் கழித்தார்.

சுதந்திரம் பெற்ற சமயத்தில் மாசில்லாமணி அறுபது வயதைக் கடந்திருந்தார். ஆயினும் ஒரு நாள் கூட ஓய்வாக அவர் உட்கார்ந்ததில்லை. அப்போதுதான் இன்னும் கூடுதலான விசையுடன் செயல்படத் தொடங்கினார். பெற்ற சுதந்திரத்தைப்  பேணிக் காப்பது அனைவருக்கும் உரிய தலையாய கடமை என்பதை உணர்த்தும் வகையில் மேடைகளில் முழங்கினார். நம் அரசே நம் நாட்டை ஆட்சி செய்யும் தருணத்தில் கடமை தவறாது வாழ்வது மிகமுக்கியம் என்பதை தாமே கட்டிய பாடல்களாலும் உரைகளாலும் உணர்த்தினார். சுதந்திரம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். அவருக்கு உதவியாக அவருடைய இளைய மகன் படுக்கைக்கு அருகிலேயே இருந்தார். ஒருநாள் மயக்கத்தில் அவர் எதையோ சொல்வதை அவர் காதில் விழுந்தது. ஏதோ கனவில் பிதற்றுகிறார் என்றுதான் அவருக்கு முதலில் தோன்றியது. எனினும் உடனடியாக அவரை நெருங்கிச் சென்று அவர் சொற்களை கூர்மையாகச் செவிமடுக்கத் தொடங்கினார். பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் கடமையை வலியுறுத்தும் விதமாக மேடையில் பேசுவதைப்போல மாசில்லாமணி பேசுவதைக் கேட்டார். அந்த மயக்கநிலையிலும் ஆற்றொழுக்காக பொங்கிவந்த சொற்களைக் கேட்டு அவர் மலைத்து நின்றுவிட்டார்.

பிறர்க்கென ஆற்றும் சேவையில் இன்பத்தையும் இறைவனையும் கண்டுணரும் ஞானத்தைப் பெற்றவனே உண்மையான சேவையாளன் என  காந்தியடிகள் தன் இறுதிமூச்சு வரை சொல்லிக்கொண்டே இருந்தார். காந்தியடிகளின் வழியில் தன் வாழ்க்கையை சேவைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர் மாசில்லாமணிப்பிள்ளை. அவருடைய  மனம் கனவிலும் நனவிலும் விடுதலை சார்ந்த எண்ணங்களால் மட்டுமே நிறைந்திருந்தது. விடுதலை கிட்டும்வரை விடுதலைக்கான போராட்டங்களில் அவர் மூழ்கியிருந்தார். விடுதலை கிடைத்தபிறகு அதைத் தக்கவைத்துக்கொள்ள ஆற்றவேண்டிய கடமைகளை நினைவூட்டும் பணிகளில் மூழ்கியிருந்தார்.

மாசில்லாமணியின் மறைவுக்குப் பிறகு 1952இல் சில்லாநத்தத்தில் அவருடைய நினைவைப் போற்றும் விதமாக மாசில்லாமணிப்பிள்ளை ஞாபகார்த்த வாசகசாலை திறக்கப்பட்டது. பின்னர் அது தொடக்கப்பள்ளியாக உருமாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

 

(சர்வோதயம் மலர்கிறது – டிசம்பர் 2022)