Home

Tuesday 10 January 2023

நயனக்கொள்ளை - முன்னுரை

  

ஒருமுறை அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றினார் என்றும்  ஒரு புதிய பாடலைப் பாடுவதற்கான தொடக்கம் சரியாக அமையாது கலக்கத்தில் மூழ்கியிருந்த அருணகிரிநாதருக்கு ’முத்து’ என்றொரு சொல்லை எடுத்துக் கொடுத்தாரென்றும், அதையே தொடக்கச்சொல்லாகக் கொண்டு அவர் ’முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண ‘என்று பாடலை எழுதத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.





இக்குறிப்பை இந்த முன்னுரையில் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தினசரிச்சலிப்பை வென்றெழும் முயற்சியாக திருவாசகத்தில் அடிக்கடி தோய்ந்துவிடும் நண்பர் சந்தியா நடராஜன் அந்த வாசிப்பில் மனம்கவர்ந்த வரிகளை என்னுடன் அடிக்கடி பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்படி ஒருமுறை மிகவும் மனம் மகிழ்ந்து சொன்ன சொல் நயனக்கொள்ளை. அருணகிரிநாதருக்கு முருகன் சொன்னதுபோல அவர் அச்சொல்லைச் சொன்னார். அவர் அத்துடன் நிற்கவில்லை, ஒரு படி மேலே சென்று அந்தச் சொல்லை தலைப்பாகக் கொண்டு ஒரு கதை எழுதும்படி கேட்டுக்கொண்டார்.

எனக்கும் அச்சொல் பிடித்திருந்தது. உடனே அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதாக நானும் வாக்களித்துவிட்டேன். மீண்டும் மீண்டும் அச்சொல்லை மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். சொல்லச்சொல்ல ஒருவித இனிமையை உணர்ந்தேன். பொருத்தமான கதைக்காக அப்போதே என் மனம் பழைய நினைவுகளைத் துழாவத் தொடங்கிவிட்டது. ஒருசில நினைவுகள் முதல் தோற்றத்தில் கதைக்குப் பொருந்துவதுபோலத் தோன்றின. ஒரு பரபரப்பில் நானும் காட்சிகளை மனத்துக்குள்ளேயே அடுக்கித் தொகுக்க முயற்சி செய்தேன். ஆனால் எங்கோ ஓரிடத்தில் அந்த இணைப்பில் உள்ள பொருத்தமின்மையை மனம் நுட்பமாக உணர்ந்துவிட்டது. அக்கணமே  அந்த இழை அறுந்துவிட்டது. இப்படி அரைகுறையாக பல இழைகள்  அறுந்துவிழுந்தபடியே இருந்தன. நானும் என் முயற்சியைக் கைவிடாதவனாக ஒவ்வொருமுறையும் புதிதுபுதிதாகத் தொகுத்தபடியே இருந்தேன்.

ஒருமுறை புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். ஒரு மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றுவிட்டு கடைத்தெரு வழியாக வேடிக்கை பார்த்தபடி நகரத்துக்குள் நடந்துவந்தேன். ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த வ.உ.சி.யின் பெயர் தாங்கிய அரசுப் பள்ளியின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அரைகுறையான சுவர்களோடு காட்சியளித்தன. அந்த இடிபாடுகள் பரபரப்பும் நவீனமயமுமான அத்தெருவுக்குள் கைவிடப்பட்டு பாழடைந்த ஓர் அரண்மனையைப் போலத் தோன்றின. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது கட்டிடத்தின் கட்டுமானம்  சிதைந்துவிட்டதால் அரசு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார்கள். அந்தப் பள்ளியின் முன்பக்க மைதானத்தில் கூச்சலோடு விளையாடிய சிறுவர்களைப் பார்த்து ரசித்தபடி நடந்துபோன என் இளமைநாட்களை அசைபோட்டபடி பெருமூச்சுடன் நடக்கத் தொடங்கினேன்.

யானத்தந்தத்தின் வண்ணம் கொண்ட ஒரு மகிழுந்து ஒரு கணம்  என்னைத் தொடுவதுபோல நெருக்கமாகக் கடந்து சென்று சிறிது தொலைவிலிருந்த கோவில் வரைக்கும் சென்று நின்றது. அந்தத் திகைப்பில் என் நினைவுகள் கலைய, நான் அந்த மகிழுந்தைக் கவனிக்கத் தொடங்கினேன். மகிழுந்திலிருந்து முதலில் ஒருவர் இறங்கினார். அவரே பின்கதவைத் திறந்தார். மகிழுந்துக்குள் ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தார். குனிந்து அப்பெண்ணின் இரு கால்களையும் பற்றி சாலையில் பதியும்வண்ணம் திருப்பிவிட்டார். பிறகு அப்பெண்ணின் தோளைப் பற்றி முன்னோக்கி இழுத்து நிற்பதற்கு உதவி செய்தார். ஊன்றி நின்றுவிட்டோம் என்ற நம்பிக்கை பிறந்ததும் அப்பெண் புன்னகையோடு ”இனிமே நானே நடந்துருவேன்” என்று சொன்னதைக் கேட்டேன். அக்குரலின் இனிமையே அவரை மென்மேலும் கவனிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஒருகணம் அவர் முகத்தைப் பார்த்தேன். அழகு ததும்பும் முகம். காதோரக்குழல் காற்றில் நெளிந்தசைந்தவண்ணம் இருந்தது. நாலைந்து எட்டு நடந்து அவர் கோவில் வாசல் வரைக்கும் சென்று ஒருகணம் நின்று கோபுரத்தை அண்ணாந்து பார்த்தார். தாமரையைப்போன்ற அம்முகத்தில் ஒரு கண்ணின் இமைகள் மூடித் திறப்பதையும் மற்றொரு கண் அசைவின்றி நிலைத்து நிற்பதையும் பார்த்தேன். அக்கண்ணின் அசைவற்ற தன்மை ஒருகணம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தி உறையவைத்தது. அது பொய்விழி. நம்பமுடியாமல் நான் அந்த இடத்திலேயே உறைந்து நிற்க, அவர் ஆலயத்துக்குள் என்னைக் கடந்து சென்றுவிட்டார்.

பார்வையிலிருந்து மறையும் வரைக்கும் அவரைப் பார்த்திருந்துவிட்டு நான் நடக்கத் தொடங்கினேன். சற்றே உருண்ட அப்பொய்விழி தன்னிச்சையாக மீண்டும் மீண்டும் என் முன் நிழலாடியது. அதே கணத்தில் எங்கோ நினைவில் ஆழத்தில் புதைந்திருந்த நயனக்கொள்ளை சொல் சட்டென எழுந்துவந்து அந்த நிழலுடன் இணைந்துகொண்டது. அக்கணத்திலேயே என் மனத்தி அக்கதை உருவாகிவிட்டது. எல்லாக் காட்சிகளும் வேகவேகமாக தானாகவே உருவாகி இணைந்துகொண்டன. ஊருக்குத் திரும்பிய முதல் நாளே நான் அச்சிறுகதையை எழுதி முடித்தேன்.

ஏராளமான சிறுகதைகளை எழுதிவிட்ட போதும், சிறுகதை எழுதுவது எளிதானதா, சிரமமானதா என்று யாராவது என்னிடம் கேட்கும்போது, அக்கேள்விக்கு திணறாமல் ஒருபோதும் விடை சொன்னதில்லை. நெஞ்சுக்குள் சிறுகதை உருவாக எடுக்கும் காலத்தை ஒருபோதும் வரையறுத்துச் சொல்ல இயலாது. சில சமயங்களில் ஒருசில மணி நேரங்களே போதுமானதாக இருக்கும். சில தருணங்களில் நாட்கணக்கில் நீளும். சிற்சில பொழுதுகளில் வாரக்கணக்கிலும் நீளும். அது மழையின் வரவு போல. தானாக நிகழ்ந்தால்தான் உண்டு. ஆனால் உருவாகிவிட்டால் போதும், எழுதியெடுப்பது எளிதாக நிகழ்ந்துவிடும். இது என் அனுபவம். எல்லோருக்கும் இது பொருந்திவர வேண்டும் என்னும் அவசியமில்லை.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் இப்படி ஒரு பின்னணி உண்டு. ஒவ்வொரு அனுபவத்தையும் எழுதத் தொடங்கினால் அது ஒரு தனிக்கட்டுரையாக நீண்டுவிடும். இச்சிறுகதைகள் கடந்த சில ஆண்டுகளில் அம்ருதா, ஆனந்த விகடன், பேசும் புதிய சக்தி, புரவி ஆகிய அச்சிதழ்களிலும் கனலி இணைய இதழிலும் வெளிவந்த.  இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் மனைவி அமுதாவின் அன்பும் ஒத்துழைப்பும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாகத் திகழ்பவை. அவரை நினைக்காமல் ஒருநாளும் கழிவதில்லை. எப்போதும் என் நெஞ்சிலேயே இருப்பவர் அவர்.   இந்தச் சிறுகதைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சமீபத்தில் இயற்கையெய்திவிட்ட மருத்துவர் ஈரோடு ஜீவாவின் ஏற்பாட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சூழியல் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. பல எழுத்தாளர்கள் பல திசைகளிலிருந்து வந்து அச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போதுதான் முதன்முதலாக நான் மணி என்கிற நிர்மால்யாவைச் சந்தித்தேன். அது எங்களுக்குள் நட்பு மலர்ந்த நாள்.  ஊட்டியைச் சேர்ந்த அவரை அனைவரும் ஊட்டி மணி என்றே அன்புடன் அழைத்துப் பழகினோம். அப்போதே மலையாளக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் அவர். குறிப்பாக அவருடைய மொழிபெயர்ப்பில் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகள் பல புதிய வாசகர்களை எட்டியிருந்தன. இன்றுவரை, கமலாதாஸ், சாராஜோசப், கோவிலன், காக்கநாடன், உமர், என்.எஸ்.மாதவன், சுபாஷ் சந்திரன் என தமிழுக்கு அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் மலையாளப்படைப்பாளர்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அர்ப்பணிப்புணர்வோடு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பவர் அவர்.  அவருடைய ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பவன் நான். அவரை இக்கணத்தில் மிகவும் அன்போடும் நெகிழ்ச்சியோடும் நினைத்துக்கொள்கிறேன். ந்தப் புதிய சிறுகதைத்தொகுதியை நண்பர் நிர்மால்யா என்கிற ஊட்டி மணிக்கு அன்புடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.