ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில் உட்கார்ந்துகொண்டு கோலிக்குண்டுகளை வளைத்துவளைத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தான். அடுக்கும் வேலை முடிந்ததும் “அப்பா, இங்க பாருங்க, பாம்பு” அச்சுறுத்தும் குரலில் சொன்னான்.
அவர் ஓர் அதிசயத்தைப் பார்ப்பதுபோல ஒருகணம் புருவத்தை உயர்த்திப் பார்த்துவிட்டு அவன்
முதுகில் தட்டிக் கொடுத்தார். உடனே அவன் அதைக் கலைத்துவிட்டு அடுத்து சில நொடிகளிலேயே
இன்னொருவிதமாக அடுக்கி “ரயில்” என்று சொன்னான். தொடர்ந்து புதுப்புது உருவங்களை கற்பனை செய்து உருவாக்கி கரும்பு
என்றும் மரம் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் வேகமும் கற்பனையும் ஆச்சரியமளித்தது.
நான் அதைப் பார்த்ததும் மனத்துக்குள் மகிழ்ச்சியுடன் புன்னகை
செய்துகொண்டேன். அச்சிறுவன் கற்பனையில் மிதந்தபடியே இருந்தான். ஒன்றை இன்னொன்றாக மாற்றும்
கலையின் மீது அவன் கொண்டிருந்த ஆர்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. பாடம்,
கல்வி, பள்ளி என பல சுமைகளைக் கடந்து அவன் தன் நெஞ்சில் தக்கவைத்திருக்கும் சுதந்திரத்தையும்
கனவுகளையும் கண்டபோது என் கண்களுக்கு அச்சிறுவன் ஒரு கலைஞனாகவே தெரிந்தான்.
ஒரு சாதாரண மனிதனை கலைஞனாகவும்
அதைத் தொடர்ந்து மகத்தான கலைஞனாகவும் இந்தச் சமூகத்தின் முன் நிலைநிறுத்துவது அவனுடைய
கற்பனைதான். ஆனால் அது மனம்போன போக்கில் உருவாகும் கற்பனை அல்ல. ஒன்றைச்
சித்தரிக்கும்போது இன்னொன்றை நினைவூட்டும் செறிவான கற்பனை.
சங்ககாலப் பாடல்கள்
எழுதப்பட்ட காலத்திலேயே அத்தகு சித்தரிப்புகள் தொடங்கிவிட்டதை நாம் பார்க்கலாம்.
பொருத்தமான ஒரு சொல் வழியாக இரண்டு வெவ்வேறு காட்சிகளை நெஞ்சில் இணைத்துப்
பார்க்கவைப்பது ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டிய முக்கியமான பண்பு என்பது என் எண்ணம்.
மானுடர் மீது நிபந்தனையற்ற அன்பும் கற்பனையும் கொண்ட கலைஞர்கள் அதன் வழியாக பிறர்
சென்று தொடமுடியாத எல்லையையும் அறியாத உலகையும் கூட தொட்டுச் சித்தரித்துவிட
முடியும்.
கார்த்திக் திலகனின்
‘நீராக இளகும் நிழல்’ கவிதைத்தொகுதியைப் படித்துமுடித்ததும், அக்கவிதைகளில் மிக
இயல்பாக வெளிப்படும் கற்பனை அம்சம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்து,
அந்தக் கற்பனையை எவ்விதமான திருகலும் இல்லாமல் நேரடியாக முன்வைக்கும் மொழியழகும்
பிடித்திருந்தது. சிறப்பான மொழிவெளிப்பாடு என்பது கேட்கும்போதே ஈர்க்கும் இசைக்கு
நிகரானது. கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் மொழியாலும் கச்சிதமான வடிவத்தாலும் அழகான
சொல்லாட்சியாலும் சமீபத்தில் வெளிவந்திருக்கும் கவிதைத்தொகுதிகளில் கார்த்திக்
திலகனின் கவிதைத்தொகுதியை குறிப்பிடத்தக்க ஒன்றாக நினைக்கத் தோன்றுகிறது.
வரிசையாக அந்த
மலைப்பாதையில்
மேலிருந்து கீழாக
அகல்விளக்கை
வைத்துக்கொண்டே
வருகிறாள் ஒருத்தி
ஒவ்வொன்றிலும்
தீபம் ஏற்றிக்கொண்டே
வருகிறாள் இன்னொருத்தி
சில்லென்று காற்று
வீசியதுதான் தாமதம்
எல்லா தீபப்பறவைகளும்
கூட்டமாக எழுந்து
வானில்
பறந்துசெல்கின்றன.
மலைப்பாதையை ஒட்டி
பறவைகள் உட்கார்ந்திருந்து, ஏதோ ஒரு
கணத்தில் அவை சட்டென்று கூட்டமாக வானை நோக்கிப் பறந்துசெல்லும் தருணம்தான்
இக்கவிதையில் காட்சியாக விரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நேரிடையாகச்
சுட்டாமல் யாரோ ஒருத்தி அகல்விளக்கை வைப்பதுபோலவும் இன்னொருத்தி தீபத்தை
ஏற்றிவைப்பதுபோலவும் ஏதோ ஒரு மாயக்கணத்தில் அவை மாயப்பறவையாக மாறிப்
பறந்துசெல்வதுமாக கற்பனையான இன்னொரு
காட்சியாக மாற்றுகிறார். பறவைகளை வெறுமனே பறவைகள் எனக் குறிப்பிடாமல் தீபப்பறவைகள்
என்று குறிப்பிடுவதைப் படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
இந்த உலகம் மாயத்தன்மை
மிக்கது. கடலின் ஆழத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத சிப்பிகளும் சங்குகளும்
முத்துகளும் பவழங்களும் மீன்களும் நிறைந்திருப்பதுபோல,
வாழ்க்கையில் அன்பு, பாசம், கருணை
ஆகியவற்றுக்கு இணையாக வெறுப்பு, துரோகம்
கசப்பு ஆகியவையும் இணைந்தே உள்ளன. முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலை என எதுவுமில்லை.
யாரோ ஒருவர் ஒரு வாய் தண்ணீர் கொடுக்கிறார். யாரோ ஒருவர் வேதனைக்கு அருமருந்தாக
இருக்கிறார். அந்த யாரோ ஒருவர் முகம் தெரியாதவராக, எங்கோ நம்மைச் சுற்றி
இருக்கிறார் என்னும் நம்பிக்கையோடு வாழ்ப்வர்களே இவ்வுலகில் வாழ முடியும். இது ஒரு
வாழ்வியல் உண்மை. ஆனால் திரண்ட கருத்தாக இதை எழுதாமல் கார்த்திக் திலகன்
வழக்கம்போல அதற்கு இணையான ஒரு கற்பனைச்சித்திரத்தை எழுதியிருக்கிறார்.
அடுத்து, அடுத்து என
நம்மைச் செலுத்திக்கொண்டிருப்பது நம் எண்ணமே. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு
புள்ளியை நோக்கிச் செல்லும்படி எப்போதும் அதுதான் நம்மைத் தூண்டிக்கொண்டே
இருக்கிறது. அதுதான் விசை. முனையில் கொக்கி பொருத்தப்பட்ட ஒரு கயிற்றை வானத்தை
அல்லது உயரமான ஒரு மலையை நோக்கி வீசி, அதை எங்கோ ஓரிடத்தில் சிக்கவைத்த பிறகு,
அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல மேலேறும் பயணம் ஆர்வமும்
சாகசத்தன்மையும் கொண்டதாகும். இதுதான் வாழ்க்கைக்கு இணையான ஒன்றாக கார்த்திக் திலகன்
வகுத்துரைக்கும் கற்பனைச்சித்திரம். கயிற்றின்
வழியாக மேலே ஏறி வருபவன் மீது பொறாமை கொண்ட மற்றொருவன் உச்சியிலிருந்து கயிற்றின்
நுனியில் பொருத்தப்பட்ட கொக்கியை அவிழ்த்துவிடுகிறான். நல்லூழாக, கீழே சரிந்து
விழும் அவனை கடல் தன் மடியில் ஏந்திக்கொள்கிறது. ஒரு பக்கம் பொறாமை கீழே
தள்ளுகிறது. இன்னொரு பக்கம் அன்பு தன் மடியில் ஏந்திக்கொள்கிறது.
இதே உண்மையை வேறொரு
கவிதையில் வேறொரு கற்பனை வழியாக சித்தரித்திருக்கிறார் கார்த்திக் திலகன்.
ஒரு கை தழையத்தழைய
உன்னை
அணைத்துக்கொள்கிறது
மறு கை உன் இடுப்பில்
குறுங்கத்தியைப்
பாய்ச்சுகிறது.
ஒரே உடம்பில் உள்ள
இரு கைகளுக்கு
எப்படி வந்தன
இருவேறு குணங்கள்
ஒரு மரத்திலிருந்து
வீட்டு ஜன்னலுக்குத் தாவி, பிறகு அங்கிருந்து முற்றத்துக்குத் தாவி, மேசையில்
வைக்கப்பட்டிருக்கும் தட்டுக்கு அருகில் நின்று, அதிலுள்ள உணவைக் கொத்திக்கொத்திச்
சாப்பிடும் குருவிகளின் காட்சியை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அழையாத
விருந்தாளிகளாக உள்ளே வந்த குருவிகள் உணவை உண்ணும் இக்காட்சியை உணர்த்துவதற்காக கார்த்திக்
திலகன் தன் கவிதையில் ஒரு கற்பனைக்கதையைச் சொல்கிறார்.
ஒரு வீட்டில்
அழைப்புமணி பொருத்தப்பட்டிருக்கிறது என்றும், தன் வீட்டுக்கு அழைப்பமணியை அழுத்தி
தம் வருகையைத் தெரிவித்துவிட்டு வரும் நண்பர்களும் உள்ளனர், அழைப்புமணியை
அழுத்தாமலேயே திடுதிப்பென நேராக வரும் நண்பர்களும் உள்ளனர் என்றும் ஒரு
முன்குறிப்பை முதலில் கொடுத்திருக்கிறார். ஒருபோதும் அழைப்புமணியை அழுத்தாமல்
உள்ளே வரும் இரண்டு குருவிகளைத்தான் அவர் இரண்டாம் வகை நண்பர்கள் என வகுத்துரைக்கிறார்.
இரண்டு குருவிகளும்
அந்த வீட்டைத் தம் சொந்த வீடாகவே நினைத்துக்கொண்டு சுதந்திரமாக அலைகின்றன. அவர்
சாப்பிடத் தயாராகும்போது அக்குருவிகளும் அவரோடு சேர்ந்து ஒரே தட்டில்
சாப்பிடுகின்றன. சாப்பிட்டு முடித்ததும் விடை பெறாமலேயே பறந்துபோய் விடுகின்றன.
குருவிகள் வீட்டுக்குள் வருவதைவிட,
தட்டில் இருப்பதைக் கொத்திச் சாப்பிடுவதைவிட, போகும்போது அலட்சியமாகப்
பார்த்துவிட்டு பறந்துபோகின்றன என்னும் குறிப்பு புன்னகையை வரவழைக்கிறது.
குருவி
இடம்பெற்றிருக்கும் இன்னொரு கவிதையும் இத்தொகுப்பில் உள்ளது. அது அளிக்கும்
புன்னகையும் மகத்தானது.
எதிர்வீட்டு
மொட்டைமாடியில் இருந்து
என்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
சிவப்பு
வண்ணக்குருவியைக் கேட்டேன்
என்னைப்பற்றி என்ன
நினைக்கிறாய் என்று
என்னைப் பொருத்த அளவில்
நீ எதிர்வீட்டு
மொட்டைமாடியில் இருந்து
என்னைப் பார்க்கும்’
கருப்புவண்ணக்குருவி
என்றது
அவரவர் நினைப்பு
அவரவர்களுக்கு
குருவி தன்னைப்பற்றி
உயர்வாக நினைத்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தோடு இருக்கிறான் மனிதன். ஆனால் ஒரு
குருவியின் பார்வையில் அனைத்தும் அதற்கு
குருவியாகவே தோன்றுகிறது என்பது புன்னகைக்க வைக்கும் உண்மை.
ஒரு மரத்தில் காய்த்த இரு கனிகள் இருவேறு
சுவைகளைக் கொண்டிருப்பதுபோல இருவேறு விளைவுகளை உருவாக்கும் தருணங்கள் நம் வாழ்வில்
அடுத்தடுத்து நிகழ்வது இயற்கையாகும்.
வீட்டுக்கு வந்துபோகும்
குருவியைப்பற்றி எழுதிய கார்த்திக் திலகன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும்
செடிகளைப்பற்றி அழகான ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
ஒரு வாரம் கழித்து
வீட்டுக்கு
வந்திருந்தேன்
தோட்டத்துச் செடிகள்
என்னிடம் பேசவே இல்லை
அந்த மந்தாரைச்
செடியின்
இலைகளைத் தடவிக்
கொடுத்தேன்
அதன் சாந்தம்
உறுத்தியது
என் கைகளில்
செடி என்பது வெறும்
செடி மட்டுமல்ல. அதுவும் அன்பையும் நெருக்கத்தையும் கோரும் ஓர் உயிர் என்பது ஓர்
எளிய உண்மை. அந்த உண்மையை அதுவே உணர்த்தும் வரை உணராதவனாகவே மனிதன்
இருந்துவிடுகிறான் என்பதுதான் துயரம்.
கன்னத்தில் அடித்த
வாழ்க்கையை
இனி திருப்பி அடிக்க
வழி இல்லை
கண்ணாடிப்
பெட்டியின்மேல் விழும்
மாலைகள் அடிக்கடி
அப்புறப்படுத்தப்படுகின்றன
கடைசி நாளிலும்
மகனுக்காகக்
காத்திருக்கிறான்
பிணத்துக்கு அருகிலேயே
படுத்திருக்கிறது
நாய்
தலைப்பில்லாமல் இப்படி ஒரு கவிதை இத்தொகுதியில் இருக்கிறது.
படித்து முடித்ததும் ஒவ்வொரு வரியும் ஊசியைப்போல குத்தத் தொடங்கிவிடுகிறது. இதில் கற்பனை
என எதுவும் இல்லை. ஆனால் நான்கு வெவ்வேறு காட்சித்துணுக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
மகனுக்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவின் சிக்கல்தன்மையை உணர்த்துவது ஒரு காட்சி. இறந்துபோன உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிப்பெட்டியின்
மீது அஞ்சலிமாலைகள் குவிவதும் எடுக்கப்படுவதுமான இரண்டாவது காட்சி. அப்பாவின் இறுதி
அஞ்சலிக்கும்கூட குறித்த காலத்தில் வராமல் அனைவரையும் காத்திருக்கவைக்கும் மகனுடைய
போக்கைச் சுட்டிக்காட்டுவதாக மூன்றாவது காட்சி. அப்பாவின் வளர்ப்புநாய் பிணப்பெட்டிக்கு
அருகிலேயே படுத்திருக்கும் நான்காவது காட்சி. இந்த நான்கு புள்ளிகளை வைத்து நாம் விரித்தெடுக்கும்
சித்திரம்தான் கவிதை.
அன்பு நிலவவேண்டிய ஒரு குடும்பச்சூழல் கசப்பும் ஒவ்வாமையும்
கொண்டதாக உருமாறுவது மிகப்பெரிய துரதிருஷ்டம்.
நல்ல குளத்தில் பாசி படர்வதுபோல ஏதோ ஒரு கணத்தில் அவை படர்ந்துவிடுகின்றன. அதை விலக்கவிலக்க
வளர்ந்துகொண்டே செல்கிறதே தவிர, ஒருபோதும் முற்றிலும் இல்லாமல் போவதில்லை. ஒரு சாபம்போல
ஒட்டிக்கொண்டுவிடுகிறது.
கன்னத்தில் விழும் அடியைக் கூட ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் உணர்வின் மீது விழும் அடியைத் தாங்கிக்கொள்வது இயலாத செயல். மனிதன் கொடுக்கும்
அடியை திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் விதி கொடுக்கும் அடியையும் வலியையும் ஏற்று விழுங்குவதைத்
தவிர வேறு வழியில்லை. ’கன்னத்தில் அடித்த வாழ்க்கையை இனி திருப்ப அடிக்க வழியில்லை’
என்னும் வரிகள் இத்தொகுப்பை வாசிக்கும் ஒருவர் அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ளும்
வரிகளாக இனி இருக்கும் என்பது உறுதி.
(நீராக இளகும் நிழல். கார்த்திக் திலகன். கவிதைகள். படைப்பு பதிப்பகம். 8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம்,
கடலூர் -607002. விலை. ரூ.170)
(புக் டே – இணைய தளம் – 21.03.2025)