Home

Saturday, 13 December 2025

எதிர்பாராமையும் தற்செயலும்

 

 

ஒரு நிகழ்ச்சி. கடந்த வாரத்தில் ஒருநாள் ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் தோல்வியுற்ற அவர் பேராசிரியர் பதவி வரை வந்து சேர்ந்த  தன்  வாழ்க்கைப்பயணத்தைப்பற்றி விவரித்தார்.

பள்ளித்தேர்வில் அடைந்த தோல்வி அவருடைய வாழ்க்கையையே திசைதிருப்பிவிட்டது.  இனிமேல் படிப்பு வராது என நினைத்த அவருடைய தந்தையார் அவரை விவசாய வேலைகளில் ஈடுபடுத்தினார். நான்கு ஆண்டு கால விவசாயத்திலேயே மூழ்கியிருந்தார் அவர். இடையில் இரண்டாவது முறையாக மேல்நிலைத்தேர்வை எழுதி வெற்றி பெற்றுவிட்டார். ஆனாலும் தொடர்ந்து படிக்க அனுப்பவில்லை அவருடைய தந்தையார்.

தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர் விவசாய வேலைகளைச் செய்தபடியே தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இலக்கிய இதழ்களை வாங்கி ஓய்வு நேரங்களில் படிப்பதைப் பழக்கமாகக் கொண்டார். அப்போது அவரை அழைத்துச் சென்று தனக்கு அறிமுகமுள்ள ஒருவருடைய துணிக்கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்தார் அவருடைய தந்தையார். அங்கு ஆறுமாத காலம் ஓடிவிட்டது.

ஒருநாள் தற்செயலாக முதலாளிக்குப் பதிலாக முதலாளியின் மருமகன் கடைக்கு வந்து வியாபாரத்தைப் பார்த்தார். வியாபார நேரம் தவிர பிற நேரங்களில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவரை ஓர் அதிசயத்தைப் பார்ப்பதுபோலப் பார்த்தார் அவர்.  அவர் படித்த இதழ்களை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அவருடைய ஆர்வத்தைத் தெரிந்துகொண்டதும்  எடுபிடி ஆளை நடத்துவதுபோல நடத்த அவருக்கு மனம் வரவில்லை. உடனே அந்த ஊரிலேயே தனக்குத் தெரிந்த புலவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். இளைஞனின் ஆற்றலைப் புரிந்துகொண்ட புலவர் அவருடைய தந்தையாரை வரவழைத்துப் பேசி அவரை புலவர் படிப்பில் சேர்த்துவிட்டார். அந்த நாள் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையான நாள். மெல்ல மெல்ல புலவர் படிப்பை முடித்து, அதற்குப் பிறகு முதுகலை முடித்து, முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக உயர்ந்தார். 

இன்னொரு நிகழ்ச்சி. நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு பெரிய இரும்புக்கடை இருந்தது. நான்கு சகோதரர்கள் இணைந்து பங்கு போட்டு நடத்தினார்கள். திடீரென ஏற்பட்ட பொருளிழப்பால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இன்னொருவருக்கு கைமாற்றிவிட்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டு விலகிவிட்டனர். ஒவ்வொரு சகோதரரும் தனக்குகந்த வழியில் தனக்குப் பிடித்த தொழிலைச் செய்யத் தொடங்கினர். பிற சகோதரர்கள் அனைவரும் எப்படியோ தத்தளித்து முன்னேறிவிட, மூத்த சகோதரர் தொடங்கிய தொழில் தோற்றுவிட்டது. பொருளிழப்பு ஏற்பட்ட அதே சமயத்தில் அவருடைய ஆரோக்கியமும் சீர்குலைந்தது. ஏராளமான மருத்துவச் செலவில் இருந்த வீடும் செல்வமும் பறிபோனது.

தற்செயலாக காட்சிகள் மாறியதும் வாழ்க்கையின் திசையே மாறியது. அவருடைய மரணத்துக்குப் பிறகு அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஆதரவற்றவரானார்கள். உறவினர்கள் யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எங்கோ ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தபடி கல்யாண மண்டபத்தில் ஏதேதோ வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்தார் அந்த அம்மையார். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி தத்தம் போக்கில் சென்றுவிட, தள்ளாமையால் வேலை செய்யமுடியாமல் தனிமையில் உழன்றார். வேறு வழியில்லாமல்  கோவில் வாசலில் அடைக்கலமானார் அவர். இறுதியில் அங்கேயே ஒருநாள் உயிர் துறந்தார்.  நகராட்சி ஊழியர்கள் அனாதைப்பிணம் என எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இந்த எதிர்பாராமையும் தற்செயல்களும் இருவித இயக்கங்களைக் கொண்ட விசை. கீழே இருப்பதை மேலே கொண்டு செல்லும். மேலே இருப்பதைக் கீழே கொண்டுவரும். காற்றடிக்கும் திசையில் பறந்துசெல்லும் காகிதத்தைப்போல மனித வாழ்க்கை மாறிவிடுகிறது. ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். அது எந்த நாள் என்பதுதான் புதிர். அந்தப் புதிரைப் புரிந்துகொள்ளாத மனிதர்கள் தம் பேச்சாலும் செயலாலும் உடலாலும் அருகில் இருப்பவர்கள் அனைவரையும் நோகடித்தபடியே இருக்கின்றனர். அது ஒரு விசித்திர நோய்.

காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, இருமல் போன்ற வெளிப்படையான நோய்களுக்கு சில குறிகுணங்கள் உண்டு. அவற்றைத் தெரிந்துகொண்டு, பொருத்தமான மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்திவிடலாம். ஆனால் மேற்சொன்ன விசித்திர நோய் எவ்விதமான குறிகுணங்களும் அற்றது. கண்டுணரவும் முடியாது. குணப்படுத்தவும் முடியாது. இத்தகு விசித்திர நோயாளிகளிடம் சிக்கிக்கொண்டவர்களின் பாடுகள் சொற்களால் விவரிக்கமுடியாதவை.

அனுசுயா கவிஞர். இயற்கைச்சூழலை மட்டுமல்ல, தம்மைச் சுற்றி நிகழ்பவற்றையும் ஆழ்ந்து நோக்கும் ஆற்றல் கொண்டவர். அவருடைய இயல்பான குணம், தற்செயலாக வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினரையும் ஆழ்ந்து நோக்க வைத்திருக்கிறது. அவர்களைக் காப்பாற்றும் அல்லது  கரையேற்றிவிடும் இடத்தில் இருப்பவர்கள் பாராமுகத்துடன் இயங்குவதைப் பார்த்து பரிவுகொள்கிறார் அவர். பாராமுகத்தோடு, மேற்சொன்ன விசித்திர நோயும் கொண்ட உறவுகள் நடந்துகொள்ளும் விதங்களைக் கொண்டு மனம் கலங்குகிறார். கலைங்காத கலைஞர்கள் உலகத்தில் உண்டா, என்ன?

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதுவாக நின்று கைதூக்கி விடவும் வழியில்லை. விசித்திர நோயின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு குணப்படுத்தவும்  வழியில்லை. அனைத்துக்கும் அவர் மெளன சாட்சியாக நிற்கிறார். புகைப்படக்கருவியைப் போன்ற அவருடைய ஆழ்மனம் அனைத்தையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்துவைத்திருக்கிறது. ‘காயசண்டிகை கதைகள்’ என்னும் தலைப்பில் அனுசுயா அந்தப் பதிவேட்டைத்தான் நம் முன் வைத்திருக்கிறார். அவருடைய மன உளைச்சலால் உருவான பதிவேடு. இவை பிறர் கதைகளாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எங்கேனும் ஓரிடத்தில் நாமும் இருக்கலாம். நம் நிழலை நாமே அறிவோம்.

அமாவாசைக்கு படையலிட காலையிலிருந்து விதம்விதமாகச் சமைத்த மருமகள், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிட்டுப் போனதும் இறுதியாக சாப்பிட உட்காரும்போது ஒரு கரண்டி குழம்பு கூட இல்லை. உப்புமிளகாயைக் கடித்துக்கொண்டு நீர்மோர் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு எழுந்துபோவது ஒரு கதையின் மையப்பொருளாக உள்ளது. கணவனை இழந்து பிள்ளைகளோடு அண்டியிருக்க வந்தவளுக்கு பழைய சோற்றில் ரசத்தை ஊற்றிக் கொடுக்கும் அண்ணி தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் மீன் குழம்பை ஊற்றி சோறு பரிமாறுவது இன்னொரு கதையின் மையப்பொருளாக அமைந்துள்ளது. மற்றொரு கதையில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வேலைக்காரியாகப் போகிறாள் ஒரு சிறுமி. பிறிதொரு கதையில் ஒரு பிள்ளைக்கு வடையை எடுத்துக் கொடுக்கும் ஒருத்தி, அண்டிப் பிழைக்க வந்த ஒரு பிள்ளையின் கையில் சூடு போட்டு அனுப்புகிறாள்.  தம் பிள்ளைகளுக்கு ஆர்லிக்ஸ் கலந்த பாலையும் பெரியப்பா வீடு என்று தங்கிவிட்டுப் போக ஆசையொடு வந்த பிள்ளைகளுக்கு அரை தம்ளர் டீயைக் கொடுக்கும் பெண்மணி வேறொரு கதையில் இடம்பெறுகிறாள். இன்னுமொரு கதையில் “சும்மா சும்மா காப்பி தர இது என்ன சத்திரமா, சாவடியா? வயசாவுதே தவிர அறிவு வேணாம்?” என்று சூடான சொற்களை ஒரு முதியவரைப் பார்த்துக் கேட்கிறாள் ஒருத்தி.

’காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்பது திருவள்ளுவரின் சொல். கோழிகளும் கூட்டமாக மேய்வதைப் பார்க்கிறோம். குளங்களில் வாத்துகளும் மீன்களும் கூட்டமாகத்தான் வாழ்கின்றன. வானத்தில் பறக்கும் கொக்குகளும் நாரைகளும் கூட்டமாகத்தான் செல்கின்றன. சிங்கமும் புலியும் தனித்துண்ணும் பிறவிகளென்ற போதும், அவை பசியாறிச் சென்ற பிறகு எஞ்சியதைப் பிற விலங்குகள் கூடி உண்ணுவதை அவை ஒருபோதும் தடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டுமே தனித்துண்ணும் பிறவிகளாக இருக்கிறார்கள். தாம் மட்டுமே உண்டு சிறக்கவேண்டும் என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நேற்றுவரை தமக்குச் சமமாக இருந்து, தற்செயலாக இன்று சரிந்துவிட்டவர்களை அவர்கள் மனிதப்பிறவிகளாகக்கூட மதிக்காதவர்களாக மாறிவிடுகிறார்கள். இந்த விசித்திர நோயை யார் குணப்படுத்தமுடியும்? இதற்கு மருந்து என்ன?

ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு கதையாக எழுதியிருந்தாலும் அனுசுயா எந்தக் கதைக்கும் தனியாக ஒரு தலைப்பைச் சூட்டவில்லை. எல்லாக் கதைகளுக்கும் சேர்த்து பொதுவாக ’காயசண்டிகை கதைகள்’ என்று வைத்துவிட்டார். அத்தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

காயசண்டிகை யார்? மணிமேகலையின் கதையை மேலோட்டமாக அறிந்துவைத்திருப்பவர்களுக்கு மணிமேகலை அமுதசுரபியிலிருந்து எடுத்தளித்த உணவை வாங்கியுண்டு தன் தீராத பசிப்பிணியிலிருந்து குணமடைந்தவள் என்ற அளவுக்கே தெரிந்திருக்கக்கூடும். அந்தக் கதையின் இன்னொரு பக்கத்தையும் தெரிந்துகொண்டால் மட்டுமே, இத்தொகுதிக்கு இந்தத் தலைப்பு எப்படிப் பொருந்தி வருகிறது என்பதைப்  புரிந்துகொள்ளமுடியும்.

காயசண்டிகை இமயமலைச்சாரலில் காஞ்சனாபுரத்தில் வாழ்ந்த இளம்பெண். அவளுடைய கணவன் காஞ்சனன். இருவரும் ஒருமுறை பொதிகைமலையின் அழகைக் கண்டு களிப்பதற்காக வருகிறார்கள். சோலைகளில் ஆடித் திரிகிறார்கள். அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். ஆனந்தமாக உரையாடியபடி கைகோர்த்து நடக்கிறார்கள். அவர்கள் பார்வையில் ஒரு குளம் தென்படுகிறது. உடனே குளக்கரைக்குச் செல்ல திரும்பி நடக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாக, கரையை நோக்கிச் செல்லும் வேகத்தில், புல்தரையில் கிடந்த ஒரு நாவல் பழத்தை மிதித்துவிடுகிறாள் காயசண்டிகை.  குளிப்பதற்காக குளத்துக்குச் சென்ற ஒரு முனிவர் குளித்துவிட்டுத் திரும்பிய பிறகு உண்ணவேண்டும் என்பதற்காக வைத்திருந்த பழம் அது. பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை மட்டுமே உணவுண்டு வாழும் முனிவர் அவர். ஒரு வேளை உணவால் பன்னிரண்டாண்டு பசியின்றி வாழும் வரம் பெற்றவர்.

தற்செயலாக காயசண்டிகையின் பாதம் பட்டு அந்தப் பழம் கூழாகிவிட, கரையிலிருந்து எழுந்துவந்த முனிவர் அதைப் பார்த்துவிடுகிறார். தன் அரிய உணவுக்குரிய பழம் கூழாகிவிட்டதைப் பார்த்து வெகுண்டெழுந்து, அடுத்துவரும் பன்னிரண்டு ஆண்டு காலமும் பசிப்பிணியில் துடித்துத் துன்பமடைய வேண்டும் என காயசண்டிகையைச் சபித்துவிடுகிறார்.  தற்செயலாக நேர்ந்த ஒரு விபத்து, அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது.

நெருப்பென   எரியும் பசிப்பிணியால் காயசண்டிகை தவிக்கிறாள். அவளுடைய துன்பத்தைத் தீர்க்கமுடியாத அவள் கணவன் அவளை பூம்புகார் வரைக்கும் அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். பன்னிரண்டு ஆண்டு காலம் அந்தத் துன்பத்தோடு அவள் பூம்புகாரில் அல்லாடுகிறாள். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மணிமேகலை அமுதசுரபியிலிருந்து அளித்த உணவே அவளுக்கு மருந்தாக அமைந்தது. தீராத நோயை அது தீர்த்தது.

அமைதியடைந்த அவள் மனத்தில் கணவனைக் காணும் ஆவல் எழுந்தது. உடனே வான் வழியாக இமயத்தை நோக்கிப் பறந்து செல்லத் தொடங்கினாள். இடையில் விந்தியமலை குறுக்கிட்டது. விந்திய மலையை ஒரு முழு சுற்று வலம் வந்து வணங்கிய பின் கடந்துசெல்ல வேண்டுமே தவிர, நேரடியாகக் கடப்பது அவர்களின் மரபல்ல. ஆனால் காதல் நினைவுகளில் தோய்ந்ந்திருந்த காயசண்டிகை தற்செயலாக அம்மரபை மறந்து மலையைக் கடந்தாள். அதைப் பார்த்து வெகுண்டெழுந்த காவல் தெய்வம் தன் பேரொளிப்பிழம்பால் அவளை ஈர்த்து விழுங்கிவிட்டது. ஒருவரும் அறியாமலேயே அவள் மறைந்துபோனாள்.

ஒரு தற்செயல் காயசண்டிகையை தீராத பசிப்பிணிக்கு இலக்காக்கி பூம்புகார்த்தெருவில் அலையவைத்தது. இன்னொரு தற்செயல் அவள் உயிரையே பறித்துவிட்டது. நன்றாக வாழ்ந்து தற்செயலாக எல்லா வளங்களையும் தொலைத்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் ஒற்றைப் படிமமாக விளங்குகிறாள் காயசண்டிகை. அனுசுயாவின் கதைகளில் அழுத கண்ணீரோடு ஆற்றாமையில் வெந்து தவிக்கும் பெண்கள் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருடைய பொதுப்பெயராக காயசண்டிகை அமைந்திருக்கிறது. இந்த உலகம் காயசண்டிகைகளே இல்லாத உலகமாக மலரவேண்டும் என்கிற அனுசுயாவின் எண்ணமே இக்கதைகளுக்கான மூல ஊற்று.

சரி, இந்தக் கதைகள் எதற்கு என சிலருக்குத் தோன்றலாம். வெயிலோ, நிழலோ எதுவும் நிரந்தரமல்ல. இப்போது வெயில் பரவியிருக்கும் இடத்தில் சிறிது நேரத்தில் நிழல் வரலாம். இப்போது நிழலாக இருக்கும் இடத்தில் இன்னும் சிறிது நேரத்தில் வெயில் படியலாம். அதை உணர்ந்துகொள்ளும் பெருந்தன்மையான மனம் கொண்டவர்கள் பிறரிடம் கருணையோடு நடந்துகொள்வதற்கு, இக்கதைகள் ஒரு தூண்டுதலாக அமையக்கூடும்.

’ஒருபோதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்பது திருவள்ளுவரின் கூற்று. வாழும் கலையை அறிந்து வாழ்பவர்களுக்கே இன்பமும் வசப்படும். வாழ்க்கையும் வசப்படும். வாழும் கலையை அறிய அன்பும் கருணையும் இரு விழிகளாக மாறவேண்டும். அனுசுயாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(கவிஞர். அனுசுயா தேவி எழுதிய ‘காயசண்டிகைகள்’ சிறுகதைத்தொகுதிக்காக எழுதிய முன்னுரை)