ஒருமுறை விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என் மனைவி காய்கறிகள் வாங்கி வருவதற்காகக் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்று கூடத்தில் அமரவைத்தேன். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு மேசையில் இருந்த புதிய பத்திரிகைகளை அவரிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு “கொஞ்ச நேரம் புரட்டிகிட்டே இருங்க சார். டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குச் சென்றேன். ஐந்து நிமிடங்களில் அவருக்கும் எனக்குமாகச் சேர்த்து தேநீர் தயாரித்து இரு கோப்பைகளில் நிரப்பி எடுத்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்குத் திரும்பினேன்.
’புக் டே’ என்னும் இணையதளத்தில் விட்டல்ராவ் ’வகுப்பறைக்கதைகள்’
என்னும் தலைப்பில் ஒரு தொடர் எழுதிவருகிறார். வாரத்துக்கு ஓர் அத்தியாயம். ஒவ்வொரு
அத்தியாயத்திலும் தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் அவர் படித்த காலத்தின்
நினைவுகளை அழகான ஒரு சிறுகதையைப் போல சித்தரித்திருக்கிறார். அவற்றைப் படிக்கும் வாசகர்கள்
ஒவ்வொருவரும் தம் பள்ளி நாட்களை நினைத்து அசைபோடுவது உறுதி. அந்த அளவுக்கு அவருடைய
கட்டுரைகள் மனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
அந்த வாரத்தில் ஒரு தமிழாசிரியரைப்பற்றி அவர் எழுதியிருந்தார்.
ஏற்கனவே இரு வரிகளில் சுருக்கமாக அமைந்திருக்கும் திருக்குறளை மேலும் சுருக்கி ஒரு
வரியாக சாராம்சப்படுத்தி எழுதி ஒரு நூலை எழுதியவர் அந்தத் தமிழாசிரியர். எப்போதும்
தூய தமிழிலேயே பேசவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர். ஒருநாள் ஏதோ ஒரு மாடு மோதி
கீழே விழுந்த அதிர்ச்சியில் கன்னாபின்னாவென்று ஆங்கில வசைச்சொற்களைப் பயன்படுத்துபவராக
மாறுகிறார். அந்தத் தருணத்தைத்தான் விட்டல்ராவ் அந்த வாரத்துக்குரிய கதையாக எழுதியிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக என்னைத் தேடிக்கொண்டு அல்சூரில் வசிக்கும்
என் நண்பரொருவர் வீட்டுக்கு வந்தார். அவருக்கு இன்னொரு தேநீரைத் தயாரித்துக் கொடுத்தேன்.
அவர் அத்தேநீரை அருந்திய பிறகு தன் கைப்பையிலிருந்து “ரெண்டு நாளுக்கு முன்னால கோயிலுக்குப்
போயிருந்தேன். உங்களுக்கும் சேர்த்து அங்கிருந்து பிரசாதம் எடுத்தாந்தேன்” என்று சொல்லிக்கொண்டே
ஒரு சிறிய பையை என்னிடம் கொடுத்தார்.
“எந்த ஊரு கோயில்?” என்று கேட்டேன்.
“திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்” என்றார் அவர்.
அவர் அளித்த பிரசாதப்பையை வாங்கிப் பிரித்து திருநீறை எடுத்து
நெற்றியில் பூசிக்கொண்டேன். விட்டல்ராவும் எடுத்துப் பூசிக்கொண்டார். அதற்குள் இனிப்பும்
இருந்தது. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டோம்.
“வீட்டுல மேடம் இல்லையா?”
“இல்லை. மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க.”
“சரி, வந்தா சொல்லுங்க” என்றபடி புறப்படுவதற்காக எழுந்தார் நண்பர்.
“நான் இன்னும் ரெண்டு மூனு இடங்களுக்குப் போகணும்.
இப்ப கெளம்பனாதான் சரியா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றார். நான் அவரோடு
வெளியே சென்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்தேன்.
நான் எனது இருக்கைக்குத் திரும்பிவந்து உட்கார்ந்ததும் “திருவிடைமருதூர்
கோயிலை நீங்க பார்த்திருக்கீங்களா பாவண்ணன்?” என்று கேட்டார் விட்டல்ராவ்.
“பார்த்திருக்கேன் சார். பெங்களூருலேர்ந்து தஞ்சாவூருக்கு ட்ர்யென்
ஓடத் தொடங்கிய நேரத்துல ஒருமுறை தஞ்சாவூருக்குப்
போய் நாலு நாள் தங்கினோம். அப்ப காவேரிக்கரையோரமா இருக்கற எல்லாக் கோயில்களையும் பார்த்து
முடிச்சோம். அப்ப திருவிடைமருதூர் கோயிலையும் பார்த்தோம் சார்.”
“திருவிடைமருதூர் கோயில் பேரைக் கேட்டதுமே உங்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வரக்கூடிய விஷயம்
எது?”
அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லமுடியவில்லை. ஒரு கணம்
யோசனையில் மூழ்கினேன். பிறகு “அந்தக் கோயில்ல மார்க்கண்டேய முனிவர்னு ஒருத்தர் இருந்ததாகவும்
அவருடைய பிரார்த்தனைக்காக அந்த சிவபெருமானே மனமிரங்கி அர்த்தநாரீஸ்வரர் கோலத்துல அவருக்குக்
காட்சியளித்ததாகவும் சொல்வாங்க. அதுதான் உடனடியா
ஞாபகத்துக்கு வருது” என்றேன்.
“அதுவும் ஒரு விசேஷம்தான். ஆனா அதைவிடவும் முக்கியமான விசேஷம்
ஒன்னு இருக்கு. நல்லா யோசிச்சிச் பாருங்க”
எனக்கு உடனடியாக எதுவும் தோன்றவில்லை. மீண்டும் நினைவுகளில்
மூழ்கினேன். பொறி தட்டியதுபோல சட்டென ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. “அந்தக் காலத்துல
வரகுணபாண்டியன்னு ஒரு அரசன் இருந்ததாகவும் ஒருநாள் அவர் ராத்திரி நேரத்துல குதிரையில
போகும்போது, அந்தக் குதிரை வழியில தூங்கிட்டிருந்த ஒரு பிராமணன மிதிச்சதாவும் அந்தப்
பிராமணன் இறந்ததால பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகவும் அந்தப் பாண்டியன்
தற்செயலா இங்க திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குள்ள வந்ததும் அந்த தோஷம்
நீங்கியதாவும் ஒரு கதை உண்டு. அன்னையிலேர்ந்து பிரம்மஹத்தி தோஷ பரிகாரத்துக்கு இந்தக்
கோயில் பேரைச் சொல்றது எல்லாருக்குமே வழக்கமா போயிடுச்சி” என்றேன்.
விட்டல்ராவ் அக்கதையைக் கேட்டுத் தலையசைத்துக்கொண்டார். ஆயினும்
தன் மனத்தில் இருப்பது அதுவல்ல என்பதுபோல கைகளை அசைத்தார். பிறகு “அதுவும் ஒரு விசேஷம்தான்
பாவண்ணன். ஆனா அதைவிடவும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் இருக்கு” என்று சொல்லிவிட்டுப்
புன்னகைத்தார்.
நான் குழப்பத்துடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன். அவர் “சரி,
விடுங்க. அதை நானே சொல்றேன்” என்று தொடங்கினார்.
“பட்டினத்தார், பத்திரகிரியார் பத்தியெல்லாம் நீங்க படிச்சிருப்பீங்க,
இல்லையா?”
“ஆமாம் சார்”
“அவுங்க ரெண்டு பேரும் அந்தத் திருவிடைமருதூர் கோயில்லதான் இருந்தாங்க. பட்டினத்தார் கிழக்கு கோபுர
வாசல்ல உக்காந்திருப்பாராம். பத்திரகிரியார் மேற்கு கோபுர வாசல்ல உக்காந்திருப்பாராம்.
பட்டினத்தார்தான் முதல்ல துறவியா மாறியவர். அவரைப் பார்த்து துறவியானவர் பத்திரகிரி.
ரெண்டு பேரும் குரு சீடன் மாதிரி”
“ஓ. இது எனக்கு உண்மையிலயே தெரியாது சார். இப்ப நீங்க சொல்லித்தான்
தெரிஞ்சிக்கறேன்”
“ஆனா குருவுக்கு முன்னால முக்தியடைஞ்சவர் பத்திரகிரியார்”
எல்லாமே எனக்குப் புதிதாக இருந்ததால் நான் அமைதியாக அவரையே பார்த்தபடி
அமர்ந்திருந்தேன்.
“இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால்
உண்பேன் பெருக்க அழைத்தாலும் போகேன் அரனே என் தேகம் இளைத்தாலும் போகேன் இனின்னு பாடினவர்
பட்டினத்தார். தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு பாடினவரும் அவருதான்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது எக்காலம்னு
பாடியவர் பத்திரகிரியார்”
“பாடல்களைப் படிச்சிருக்கேன் சார். ஆனா அவுங்க அந்தக் கோவில்ல
இருந்தவங்கங்கற விஷயம் தெரியாது சார்”
”குருவுக்கு முன்னால பத்திரகிரியார் ஏன் முக்தியடைஞ்சாருங்கற
கேள்விக்கு ஒரு கதையையே எல்லாரும் பதிலா சொல்வாங்க.
ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் கோயில் கிழக்கு வாசல்ல உக்காந்திட்டிருந்த பட்டினத்தாருகிட்ட
போய் பிச்சை கேட்டானாம். நான் இருக்கற இடத்துக்கு தேடி வரக்கூடிய சாப்பாட்டைச் சாப்புடற
ஆளு. என்கிட்ட என்னப்பா இருக்குது. அதோ அந்த மேற்கு வாசல்ல ஒரு குடும்பஸ்தன் இருக்கான்.
அவன்கிட்ட போய் கேளுன்னு சொல்லி அனுப்பிவச்சாராம். அந்தப் பிச்சைக்காரனும் அந்த வாசல்ல
இருந்த பத்திரகிரிகிட்ட போய் பிச்சை கேட்டானாம். பட்டினத்தார் சொன்னமாதிரி அவர் குடும்பஸ்தன்
கிடையாது. அவரும் இடுப்புல ஒரு துண்டைமட்டும் கட்டிகிட்டு பிச்சையில காலத்த ஓட்டறவருதான்.
சுத்தபத்தமா சாப்புடணும்கற எண்ணத்துல அவருகிட்ட ஒரு ஓடு இருந்தது. அவரு கூடவே ஒரு நாயும்
இருந்தது. அதை நினைச்சித்தான் பட்டினத்தாரு தன்னை குடும்பஸ்தன்னு சொல்றாருங்கற விஷயம்
அவருக்குப் புரிஞ்சிடுச்சி. அந்தக் கணமே அவர் அந்த ஓட்டைத் தூக்கி வீசி உடைச்சிட்டாராம்.
ஒரு துண்டு ஓடு பறந்து அந்த நாய் தலையில அடிபட்டதால, அப்பவே அந்த நாயும் செத்துப் போச்சாம்.
ஒரே நேரத்துல ஓடும் போச்சி. நாயும் போச்சி. ஆகாரம், உறக்கம் எல்லாத்தையும் மறந்து சிவசிந்தையிலயே
மூழ்கிட்டாரு பத்திரகிரி. அதனால சிவன் அவருக்குக் காட்சியளிச்சி, அவரை சீக்கிரமாவே
தன்கிட்ட அழைச்சிகிட்டாருன்னு சொல்றதுண்டு.”
பட்டினத்தார், பத்திரகிரியார் பற்றி விட்டல்ராவ் தொடர்ந்து கூறினார்.
எல்லாவற்றையும் கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது. ஒரு துறவுக்குப் பின்னால் இவ்வளவு
செய்திகளா என்று தோன்றியது.
“இல்லறத்தை விட்டவங்க துறவறத்துல இருக்கறாங்கன்னு நாம நினைச்சிட்டிருக்கோம்.
ஒரு வேகத்துல கெளம்பி போறவங்கதான் நிறைய பேரு. ஆனா துறவுல அவுங்களால நிலைச்சி நிக்கமுடியறதில்லை.
உடனடியா மான அவமானம் பார்க்காம திரும்பி வரவங்க பல பேரு. தன்னுடைய வீண் அகம்பாவத்தால
திரும்பி வரமுடியாம செத்து சீரழியறவங்களும் பல பேரு. எங்கயோ வைராக்கியத்தோடு இருக்கற
ஒன்னு ரெண்டு பேருதான் உண்மையிலயே துறவியா
மாறுவாங்க”
விட்டல்ராவ் சொல்லச்சொல்ல சமீபத்தில் ஓராண்டுக்கு முன்னால் பாண்டிச்சேரியில்
நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது.
“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார். பாண்டிச்சேரி மில்ல
வேலை செஞ்சவரு ஒருத்தர எனக்குத் தெரியும். அவருக்கு இந்தத் துறவு மேல ரொம்ப ஆர்வம்
உண்டு. குடும்பத்தோடு இருந்தாலும் காவிவேட்டிதான் கட்டிக்குவாரு. காவித்துண்டுதான்
போட்டுக்குவாரு. பாண்டிச்சேரியை சுத்தி இருக்கிற எல்லாக் கோவில்களுக்கும் போய் வருவாரு.
பாதி துறவின்னு அவரைச் சொல்லலாம்.”
“சரி”
“ஒருநாள் ஒரு நண்பர்கள் கூட்டம் பாண்டிச்சேரியிலிருந்து காசிக்குக்
கெளம்பிச்சி. காசியில இருக்கற துறவிகளைப்பத்தி புத்தகங்கள்லயும் பத்திரிகையிலயும் படிச்சிப்
படிச்சி அவருக்கு காசி மேல ஒரு மோகம் இருந்தது. அதனால அவுங்களோடு சேர்ந்து அவரும் காசிக்குப்
போனாரு. நாலைஞ்சி நாள் காசியிலயே தங்கி ஆசை தீர நல்லா சுத்திப் பாத்தாங்க. அஞ்சாவது
நாள் எல்லாரும் கெளம்பவேண்டிய நேரம். அவர் எங்கயோ காணாம போயிட்டாரு. நண்பர்களும் எல்லா
இடங்கள்லயும் தேடிப் பார்த்தாங்க. எங்கயும் கிடைக்கலை. சாமியாருங்க கூட சுத்தி திரிஞ்சிட்டு
கொஞ்ச நாள் கழிச்சி தானா வருவாருன்னு யாரோ ஒருத்தரு சொன்னதும் உடனே மத்த எல்லாரும்
அப்படித்தான் இருக்கும், அப்படித்தான் இருக்கும்னு நெனச்சிகிட்டாங்க. ரயிலுக்கு நேரமாகவே
வேற வழி இல்லாம ஸ்டேஷனுக்கு வந்து வண்டி புடிச்சி பாண்டிச்சேரிக்கும் வந்து சேர்ந்துட்டாங்க.”
”ஐயையோ. அந்த சாமியார் என்னதான் ஆனாரு?”
“ஊருக்குப் புறப்படறதுக்கு முன்னால கங்கையை ஒரு தரம் நல்லா பார்த்துட்டு
ஒரு முழுக்கு போட்டுட்டு வரலாம்னு யாருகிட்டயும் சொல்லாம கங்கைக்குப் போயிருக்காரு
அவரு. அப்ப ஏதோ ஒரு படகு கங்கைக்கு அந்தப் பக்கமா இருக்கற மறுகரைக்குக் கெளம்பியிருக்குது.
யாரு என்னன்னு எதுவும் கேக்காம அந்தக் கூட்டம் அவரையும் படகுல ஏத்திட்டு போயிடுச்சி.
மொழி புரியாததால அவரால எதையும் சொல்லி விளக்கமுடியலை. எப்படியோ திரும்பி வந்ததும் சத்திரத்துக்கு
தனியா வர வழி தெரியாம எங்க எங்கயோ அலைஞ்சி தடுமாறி போயிட்டாரு.”
“ஐயையோ”
“அதுவரைக்கும் தனியா எங்கயும் போய் அனுபவமில்லாத அவருக்கு அந்த
ஊரைப் பார்க்கப்பார்க்க திடீர்னு பயம் வந்துடுச்சி. எப்படியோ சத்திரத்தைக் கண்டுபிடிச்சி
வந்துட்டாரு. ஆனா அவுங்க எல்லாரும் எப்பவோ போயாச்சின்னு சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிட்டான்
சத்திரத்துக்காரன். அன்னைக்கு முழுக்க அவர் பட்டினி. அடுத்த நாளும் பட்டினி. அதுக்கு
மேல பட்டினி கெடக்கமுடியலை. கையேந்தி வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு. சாமியாரா வாழ்ந்தாலும்
சம்சாரி போல இருந்த ஆளுக்கு அன்னைக்கு உண்மையிலயே சாமியாரு வாழ்க்கைங்கறது என்னன்னு
புரிய ஆரம்பிச்சிட்டுது. அந்த நிலையிலயும் அவருக்குத் திருட்டு ரயிலேறி ஊருக்குப் போயிடலாம்னு
தோணலை. பிச்சையா விழுந்த சில்லறையை கொஞ்சம்கொஞ்சமா சேத்துவச்சி டிக்கட் வாங்கிகிட்டு
படாதபாடு பட்டு ஊரு வந்து சேந்தாரு”
“நீங்க சொல்லச்சொல்ல எனக்கு உண்மையிலயே பயமாவே இருந்தது. எப்படியோ,
பத்திரமா ஊருவந்து சேர்ந்தாரே, அதுவே பெரிய விஷயம் இல்லையா?”
“பெரிய விஷயம்தான். ஆனா அதுக்கப்புறம் அவரு ரொம்ப காலம் உயிரோடில்லை.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரு தனக்குள்ளயே குறுகிட்டாரு. ரொம்ப உடைஞ்சிட்டாரு.
எதையோ நினைச்சி நினைச்சி மனசுக்குள்ளயே வேதனைப்பட ஆரம்பிச்சிட்டாரு. அந்த வேதனையிலயே
அவரு ரொம்ப சீக்கிரம் செத்துட்டாரு.”
“பாவம். நீங்க சொல்றது உண்மைதான் பாவண்ணன், துறவுக்கு ஒரு வைராக்கிக்கியம்
வேணும். அது இல்லாதவங்களால கொஞ்ச காலத்துக்கு மேல தாங்கமுடியாது. அப்படிப்பட்டவங்க
தன்னையும் வருத்திக்குவாங்க. சுத்தி இருக்கறவங்களையும் வருத்தப்பட வச்சிடுவாங்க”
“சார், நீங்க வைராக்கியம்னு சொன்னதும் எனக்கு ஜெயகாந்தன் எழுதிய
ஒரு கதை ஞாபகத்துக்கு வருது. துறவுங்கறதுதான் கதையுடைய தலைப்பு. உங்களுக்கு ஞாபகம்
இருக்குதா?”
விட்டல்ராவ் சிறிது நேரம் யோசித்தார். பிறகு, “சரியா நினைவுக்கு
வரமாட்டுது. என்ன கதை சொல்லுங்க” என்றார்.
“வழக்கமா எல்லாக் கதைகளையும் மெட்ராஸ சுத்தி நடக்கறமாதிரியே
எழுதன ஜெயகாந்தன் இந்தக் கதையை சிதம்பரம், கடலூர் பக்கத்துல நடக்கறமாதிரி எழுதியிருப்பாரு.
இந்தக் கதை எனக்கு ஞாபகம் இருக்கறதுக்கே இந்தப் பின்னணிதான் காரணம்.”
“அப்படியா, ஆச்சரியமா இருக்குதே”
“சிதம்பரத்துப் பள்ளிக்கூடத்துல ஒரு பையன் படிக்கறான். அவன்
பேரு சோமு. பதினஞ்சி வயசுப் பையன். எட்டாம் வகுப்பு பரீட்சையில அவன் பாஸ் மார்க் வாங்காததால
ஃபெயிலாயிடறான். மறுபடியும் அதே க்ளாஸ்ல படிக்கவேண்டியதா இருக்குது.”
“சரி”
“சோமுக்கு மனசுக்குள்ள ஒரே வெறுப்பு. அவுங்கப்பா அவனை விளையாடக்கூட
வெளியே அனுப்பறதில்லை. எப்ப பார்த்தாலும் படி படின்னு வீட்டுல அடைச்சி வைக்கறாரு. அவுங்கம்மாதான்
ஒரு ஆறுதலா இருக்கட்டும், கோயிலுக்குப் போய் அந்த நடராஜர்கிட்ட நல்ல புத்திய குடுன்னு
வேண்டிகிட்டு வாடான்னு சொல்லி அனுப்பிவைக்கறாங்க. அப்படித்தான் அவனுக்கு தெனமும் கோயிலுக்கு
போகிற பழக்கம் உண்டாவுது.”
“ம்”
“கோயில்ல தினமும் யாரோ ஒருத்தர் மேடையில வேதாந்தப் பேச்சு பேசறாரு.
அதைக் கேட்டு அவனுக்கு வேதாந்தப் பித்து பிடிச்சிடுது. தன்னைச் சுத்தி நடக்கற எல்லா
விஷயங்களையும் தத்துவச்சாயலோடு பார்த்து தனக்குள்ளயே சிரிச்சிக்கறான். அந்தக் கோவிலைச்
சுத்தி ஏராளமான பண்டாரங்கள் அலையறாங்க. அவுங்களைப் பார்த்து அவனுக்கு தானும் ஒரு பண்டாரமாகணும்ங்கற
ஆசை வந்துடுது.”
“பெண்பித்து, பணப்பித்து மாதிரி, இந்த உலகத்துல அப்படியும் ஒரு
பித்து வகை உண்டு பாவண்ணன்”
”சோமுவுக்கு அந்தப் பித்து தலைக்கு மேல ஏறி ஆடுது. ஒருநாள் பெல்ட்
வாங்கறதுக்காக சேத்து வச்சிருந்த ஒரு ரூபாயை எடுத்துகிட்டு வீட்டைவிட்டு கெளம்பிடறான்.
சில்லறையா மாத்தி எல்லாப் பண்டாரங்களுக்கும் தாராளமா தானம் கொடுக்கறான். கடைசி ஓரணாவ
கொடுத்து மொட்டை அடிச்சிக்கறான். அப்ப கோவிலைச் சுத்தி உக்காந்திட்டிருக்கிற பண்டாரம்
மாதிரி இல்லாம, இமயமலைக்குப் போய் தவம் செய்யற பண்டாரமாகணும்னு அவனுக்குத் தோனுது.
உடனே கோவில் வாசல்லேர்ந்து இமயமலைக்கு நடக்க ஆரம்பிச்சிடறான். ஒருநாளைக்கு பத்து மைல்ங்கற
கணக்குல நடந்தாலும் ஆறு மாசத்துல இமயமலைக்கு போய் சேர்ந்துடலாம்னு அவனுக்குள்ள ஒரு
கணக்கு ஓடுது.”
”பெரிய பித்துதான்”
“ஆனா பரங்கிப்பேட்டை தாண்டறதுக்குள்ள அவனுக்கு கைகால் அசந்து
போகுது. பசிமயக்கத்துல கண்ணு சுத்துது. அதுக்குள்ள இருட்டாயிடுது. எங்கயும் நடமாட்டமே
இல்லை. அவனுக்கு ரொம்ப பயமா இருக்குது. கையும் காலும் நடுங்குது. ஒரு மரத்தடியில மயக்கம்
போட்டு விழுந்திடறான்.”
“அப்புறம்?”
“அப்ப ஒரு தாத்தா சந்தையிலேர்ந்து ஒரு மாட்டு வண்டியில வராரு.
அவனைப் பார்த்து வண்டியில தூக்கி போட்டு எடுத்துட்டு வராரு. மயக்கம் தெளிஞ்சதும் சோறு
போடறாரு. சாப்ட்ட பிறகு அவனுக்குத் தெளிவு வருது. தன்னுடைய குடும்பத்தைப் பத்தி சொல்றான்.
தாத்தா அவன்கிட்ட பேசிப்பேசி அவன் மனசுல இருந்த குழப்பத்தை நீக்கறாரு. கருக்கல்ல சிதம்பரம்
பக்கமா போகற ஒரு மாட்டுவண்டியில அவனை ஏத்தி அனுப்பிவைக்கறாரு. விடியற நேரம். அவங்க
அம்மா வாசல் பெருக்கி சாணம் தெளிச்சிட்டிருக்கிற சமயத்துல அவன் போய் நிக்கறான். அவன்
மொட்டைக்கோலத்தைப் பார்த்து அந்த அம்மா இவ்ளோ காலையில பிச்சைக்கு வந்து நிக்கறியே,
என்னப்பா இதுன்னு கேக்கறாங்க. அவன் அழுதுகிட்டே அம்மா, நான் சோமு வந்திருக்கேம்மான்னு
சொல்றான். அதுக்கப்புறம்தான் அவன் தன்னுடைய மகன்ங்கற விஷயம் அவளுக்குப் புரியுது. உள்ள
அழைச்சிட்டு போய் சாப்புடறதுக்கு பழைய சோறு வைக்கிறா. அதான் கதை.”
“அருமையான கதை பாவண்ணன். வெறும் பித்தும் ஆசையும் இருக்கறவங்க
கதையெல்லாம் இப்படித்தான் முடியும். அவுங்களால பாதி மரம் வரைக்கும்தான் ஏறமுடியும்.
வைராக்கியத்தோடு முடிவெடுக்கிற ஒருசிலர் இருக்கறாங்க பாவண்ணன். ஒரு விஷயத்தை வேணாம்னு
ஒதுக்கிவைக்கணும்னு முடிவெடுத்துட்டா, அதை ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டாங்க. அதேபோல
ஒரு விஷயம் வேணும்னு முடிவெடுத்துட்டா, அதை அடையறவரைக்கும் ஓயமாட்டாங்க. கருமமே கண்ணாயினார்னு
சொல்றாங்களே, அவுங்கள்லாம் இந்த மாதிரியான ஆளுங்க”
“அவுங்கள்லாம் ரொம்ப அபூர்வ மனிதர்கள் சார்”
“இப்ப உங்ககிட்ட பேசறப்போ எனக்கு ஒரு பழைய விஷயம் ஞாபகத்துக்கு
வருது. இப்ப நாம பேசிட்டிருக்கிற விஷயத்துக்கு ரொம்ப நெருக்கமான செய்தி”
“சொல்லுங்க சார்”
“ஒரு காலத்துல நம்ம போஸ்டல் டிப்பார்ட்மென்ட்டும் டெலிபோன் டிப்பார்ட்மென்ட்டும்
ஒன்னாதான் இருந்தது. அப்ப அதுக்குப் பேரு பி அன்ட் ட்டி டிப்பார்ட்மெண்ட். பிரிட்டிஷ்
காலத்துல உருவாக்கப்பட்ட பெரிய டிப்பார்ட்மென்ட் அது. மெட்ராஸ்ல நான் வேலை செஞ்ச ஆபீஸ்க்குப்
பக்கத்துலயே அப்ப ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸும் இருந்தது. அங்க எனக்குத் தெரிஞ்ச
பல நண்பர்கள் வேலை செஞ்சிவந்தாங்க. ராஜாமணின்னு ஒருத்தர் இருந்தார். பத்திரிகையில துணுக்குலாம்
எழுதுவாரு. அங்கதான் ஸ்டெனோக்ராபரா இருந்தார். அப்புறம் லூர்துநாதன்னு ஒருத்தர் இருந்தார்.
அவரு ஹெட்க்ளார்க். அப்புன்னு எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர் இருந்தார். அங்க டைரக்டர்கிட்ட
பி.ஏ.வா இருந்தாரு. கோமதி சாமிநாதன், மகரம், அப்துல் வகாப்னு பல எழுத்தாளர்கள் கூட
அதே பில்டிங்ல வேறவேற பிரிவுல இருந்தாங்க. ஓய்வா இருக்கற நேரத்துல அவுங்ககிட்ட பேசறதுக்காக
நான் அடிக்கடி அங்க போவேன். அந்த ஆபீஸ்ல அருமையான ஒரு லைப்ரரி கூட இருந்தது. அதுல புஸ்தகம்
எடுக்கறதுக்காகவும் போவறதுண்டு.”
“சரி”
“அந்தக் காலத்துல தஃப்த்தரின்னு ஒரு கேடர் உண்டு. க்ரூப் டி
கேடர்ல அதுவும் ஒன்னு. ஆபீஸ்ல ரெக்கார்ட் ரூம்னு ஒன்னு இருக்குமில்லையா, அதை இந்த தஃப்த்தரிதான்
மெய்ன்டெய்ன் செய்வாங்க. ஃபைல்களை அடுக்கறது, தூசி படியாம பார்த்துக்கறது, ஃபைல்களை
க்ளோஸ் செஞ்சதும் அழகா பிரிச்சி அடுக்கி பைண்டிங் செஞ்சி நெம்பர் போட்டு வைக்கறது,
வவுச்சர் தைக்கறது, ஆபீஸர்ங்க ரூமுக்கு தண்ணீ எடுத்தும் போய் வைக்கறது, எப்பனா ஆபீஸர்ங்க
ஃபைல் கேட்டா, தேடி எடுத்தும் போய் கொடுக்கறது மாதிரியான வேலைகளைச் செய்யறதுக்காக இந்தக்
கேடரை வச்சிருந்தாங்க.”
“சரி”
“நான் அந்த ஆபீஸ்க்கு போக வர இருந்த காலத்துல அங்க வேலை செஞ்ச
ஒரு தஃப்த்தரியை நான் பார்த்திருக்கேன். பேசிப் பழகியிருக்கேன். பாக்கறதுக்கு ஆள் நல்லா
பளபளன்னு அழகா இருப்பாரு. யூனிஃபார்ம் போடாத நேரத்துல அவரை பார்த்தா, அவரை ஒரு க்ரூப்
டின்னு சொல்லவே யாருக்கும் மனசு வராது. அவரு முகத்துல அப்படி ஒரு அமைதி தாண்டவமாடும்.
நெத்தியில பளிச்சினு திருநீறு பூசியிருப்பாரு. நடுவுல ஒரு சந்தனப்பொட்டு வச்சிருப்பாரு.
பக்திப்பழமா இருப்பாரு. ஒரு ஞானி மாதிரி இருப்பாரு. எப்பவும் ஏதாவது பழைய ரெக்கார்ட
அடுக்கி தச்சிட்டே இருப்பாரு. வள்ளலார் மேல பற்று உள்ளவர். திருவருட்பாவுல பல பாடல்களை
மனப்பாடமா சொல்லக்கூடியவரு. தனியா உக்காந்து பைண்டிங் வேலை செய்யும்போது ஏதாவது ஒரு
பாட்டை மனசுக்குள்ள முணுமுணுத்துகிட்டே இருப்பாரு.”
“சரி”
“அவருக்கு சித்த மருத்துவத்துல கூட கொஞ்சம் பயிற்சி உண்டு. நம்பிக்கையோடு
கேக்கறவங்களுக்கு நாடி புடிச்சி பார்த்துட்டு மருந்து கொடுப்பாரு. அதனால அந்த பில்டிங்ல அவருக்கு ஒரு
தனி மரியாதை இருந்தது. யாருமே அவரை வெறும் தஃப்த்தரியா பார்க்கமாட்டாங்க.”
“சில இடங்கள்ல அப்படி அபூர்வமான ஆட்கள் இருக்கறதை பார்த்திருக்கேன்
சார். தொழில வச்சி, ஒருத்தருடைய சுபாவத்தை நாம ஒருநாளும் எடைபோடவே முடியாது”
“ஆமாம். அதுதான் உண்மை. ஒருநாள் அவருக்கு டைரக்டரா இருந்த ஒரு
ஆபீசர் திடீர்னு ட்ரான்ஸ்ஃபர்ல வேற ஊருக்குப் போயிட்டாரு. அவர் போய் அந்த இடத்துக்கு
புதுசா வேற ஒரு ஆபீசர் வந்தாரு. வந்த நாள்லேர்ந்து அந்தப் புது டைரக்டருக்கு ஒரு காரணமும்
இல்லாமலே, அந்தத் தஃப்த்தரியைப் புடிக்கலை. வேணும்னே பெல் அடிச்சி அந்த ஃபைல எடுத்துவா,
இந்த ஃபைல எடுத்துவானு வேலை வச்சிகிட்டே இருப்பாரு. தேடி எடுக்க கொஞ்சம் லேட்டானாலும்
ஏன் லேட்டுனு எரிஞ்சி உழுவாராம்.”
“ஆமாம் சார். அப்படி சில பேருங்க எல்லா ஆபீஸ்ங்கள்லயும் இருப்பாங்க.
நான் பார்த்திருக்கேன்”
“குற்றம் கண்டுபுடிச்சி பேசறது கூட பரவாயில்லை. இதுக்கு முன்ன
இருந்த டைரக்டரும் சரி, மத்த க்ளார்க்குங்களும் சரி, அவரை நேரிடையா பேரு சொல்லி கூப்புடுறதுதான்
பழக்கம். பேரு சொல்ல விரும்பாதவங்க வாங்க போங்கன்னு கூப்புடுவாங்க. யாரும் அவரை வாப்பா
போப்பான்னோ அல்லது வாய்யா போய்யான்னோ கூப்ட்டது கிடையாது. எரிஞ்சி உழுந்ததும் கிடையாது.
அவமானப்படுத்தியதும் கிடையாது. அப்படி ஒரு சொல் கேட்டுக்கற அளவுக்கு அவரு நடந்துகிட்டதும்
கிடையாது. ஆம்பளைங்க, பொம்பளைங்கன்னு ஒரு நூறு பேரு வேலை செய்ற ஆபீஸ் அது. எல்லார்கிட்டயும்
மரியாதையாதயா பேசக்கூடிய ஆளு அவரு. அப்படிப்பட்டவரு மேல எப்ப பார்த்தாலும் அந்த டைரக்டர்
காரணமே இல்லாம எரிஞ்சி உழுந்தாரு”
“அப்புறம்?”
“ஒருநாள் ரெக்கார்ட் ரூம்லேர்ந்து ஏதோ ஒரு பழைய ஃபைலை தேடி எடுத்துக்
கொடுக்க கேட்டிருப்பாரு போல. அது எங்கயோ இடம் மாறி போயிருக்குது. நம்ம தஃப்த்தரியால
உடனடியா தேடி எடுக்கமுடியலை. ரெண்டுமூனு தரம் கூப்ட்டு, என்ன கிடைச்சிதா, என்ன கிடைச்சிதான்னு
கேட்டிருக்காரு. அவரும் ரொம்ப பொறுமையா அதைத்தான் தேடிட்டிருக்கேன் சார், கொண்டுவரேன்னு
சொல்லியிருக்காரு.”
“சரி”
”அதோட விட்டிருக்கலாம். ஒரு படி மேல போய் அந்த டைரக்டர் நீ எதுவரைக்கும்
படிச்சிருக்கய்யா, இங்க்லீஷ் தெரியுமா ஒனக்குன்னு ரொம்ப எகத்தாளமா கேட்டிருக்காரு.
இங்க்லீஷ் தெரியாத ஆளுங்களுக்கு எல்லாம் நம்ம டிப்பார்ட்மெண்ட் வேலை கொடுத்து வச்சிருக்குதுனு
ரொம்ப எரிச்சலா முணுமுணுத்திருக்காரு. அப்பவும் அந்த தஃப்த்தரி பொறுமையை இழக்காம ஃபைலைத்
தேடி எடுக்கற அளவுக்கு இங்க்லீஷ் தெரியும்ங்கய்யா, இதோ பார்த்து கொண்டுவரேன்ங்கய்யான்னு
சொல்லிட்டு வெளியே வந்துட்டாரு. எங்கயோ கெடந்த அந்த ஃபைல் கடைசியா கண்ணுல பட்டுட்டது.
உடனே அதை எடுத்துட்டு போய் டைரக்டர்கிட்ட கொடுத்துட்டு வெளியே வந்தாரு”
“பரவாயில்லை. எப்படியோ அந்த ஆபத்துலேர்ந்து தப்பிச்சிட்டாருன்னு
சொல்லுங்க”
“தப்பிச்சிட்டாருங்கறது ஒருவகையில உண்மைதான். அதுக்கப்புறம்
நம்ம தஃப்த்தரி செஞ்ச வேலைதான் யாருமே எதிர்பார்க்காத வேலை”
“என்ன செஞ்சாரு?”
“ஸ்டேஷனரி ரூமுக்கு போய் ஒரு வெள்ளைத்தாள் வாங்கினாரு. அதை எடுத்துட்டு
போய் நம்ம ஹெட்க்ளார்க் லூர்துநாதன்கிட்ட கொடுத்தாரு. ஏதோ லீவ் லெட்டர் எழுதறதுக்குக்
கொடுக்கறாருன்னு லூர்துநாதனும் கை நீட்டி அதை வாங்கிகிட்டாரு. சகஜமா எத்தனை நாள் லீவ்
வேணும்ங்கனு அவரைப் பார்த்துக் கேட்டாரு. அவரு சிரிச்சிகிட்டே மொத்தமா லீவ் வேணும்
சார்னு சொன்னாரு. லூர்துநாதனுக்கு ஒன்னும் புரியலை. என்ன சொல்றீங்க, புரியலையேன்னு
கேட்டிருக்காரு. போதும் சார் இந்த வேலை, இந்த இடத்துல என்னுடைய கடமை முடிஞ்சிட்டுதுன்னு
என் மனசு சொல்லுது. இனிமேல இங்க இருக்கறது பொருத்தமில்லை. பொருத்தமில்லாத இடத்துலேர்ந்து
வெளியே போவறதுதான் நல்லதுன்னு சொல்லிட்டு வேலையிலிருந்து விலகிக்கறேன்னு எழுதிக் குடுங்க
சார்னு கேட்டாரு”
“ஐயையோ, அப்புறம்?”
“அவரு ரொம்ப சீரியஸா சொல்றாருன்னு அப்பதான் லூர்துநாதனுக்குப்
புரிஞ்சது. டைரக்டர் மேல இருக்கற ஏதோ கோபத்துல இப்படி செய்யறாரோன்னு நெனச்சிகிட்டு
அவருக்கு ஆறுதலா சொல்றதுக்கு முயற்சி செஞ்சாரு. ஆனா அந்த தஃப்த்தரி தன்னுடைய முடிவுல
ரொம்ப உறுதியா இருந்தாரு. லூர்துசாநாதனுக்கு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதறதத் தவிர
வேற வழி தெரியலை. எழுதி வாங்கினதும் கையெழுத்து போட்டு, அதை தினசரி லெட்டர்ங்களை டைரக்டருக்கு அனுப்பற ஃபைலுக்குள்ள
வச்சிட்டு வந்துட்டாரு”
“கடைசியில என்னதான் முடிவு?”
“அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகுதான் தான் ரொம்ப சீரியசா நடந்துகிட்டோம்னு
அந்த டைரக்டருக்குத் தோணியிருக்குது. உடனே ஆளவிட்டு அவரை வரவழச்சிருக்காரு. நான் சொன்னது
ஏதாவது உங்களை சங்கடப்படுத்திடுச்சா? ஏன் இப்படியெல்லாம் லெட்டர் வைக்கறீங்கன்னு கேட்டாரு.
எனக்கு யார் மேலயும் எந்த வருத்தமும் இல்லைன்னு பதில் சொல்லியிருக்காரு தஃப்த்தரி.
பழம் ஓட்டுலேர்ந்து விலகி விடுதலையாகற காலம் வந்துட்டுதுன்னு என் மனசுக்குள்ள தோணுது.
நான் இங்க உழைக்கவேண்டிய காலம் முடிஞ்சிட்டுது. இனிமேல் என்னுடைய உழைப்பு வேறொரு இடத்துக்குத்
தேவைப்படுது. தயவுசெஞ்சி என்னுடைய ராஜினாவை ஏத்துகிட்டு என்னை இங்கேர்ந்து அனுப்பிவைங்க.
அது போதும் நன்றின்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டாரு”
அவர் வேலையை விட்டு வெளியேறிய செய்தி உண்மையிலேயே திகைக்கவைத்தது. இப்படியும் மனிதர்கள்
இருப்பார்கள் என்றே நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“இங்க்லீஷ் உங்களுக்குத் தெரியாதான்னு கேட்ட கேள்விதான் அவரை
ரொம்ப காயப்படுத்தியிருக்கும்னு நெனைக்கறேன் சார். பாவம், அதுக்கப்புறம் அவர் என்ன
செஞ்சாரு?”
“அவருக்கு எந்த விதமான காயமோ, வருத்தமோ கிடையாது. சந்தோஷமாதான்
வெளியேறினாரு”
“பாவம் சார், வெளியே வந்து என்ன செஞ்சாரு?”
“ஒரு பாவமும் இல்லை பாவண்ணன். அவர் நல்லாவே வாழ்ந்தார். அவருக்கு
ஊருக்கு வெளியே கொஞ்சம் நிலங்கள்லாம் இருந்தது. அவருக்கு ரெண்டு மனைவிகள். குழந்தைப்பேறு
இல்ல்லைன்னு அடுத்தடுத்து கல்யாணம் பண்ணிக்க
வேண்டிய சூழல். ஆனா எந்த மனைவி வழியாகவும் அவருக்கு புள்ளை பொறக்கலை. தன்னுடைய எல்லாச்
சொத்துகளையும் அவுங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சிக் கொடுத்துட்டு கண் காணாத இடத்துக்குக்
கெளம்பிப் போயிட்டாரு”
“சரி”
“பல ஊருகளுக்குப் போயிருக்காரு. பல பேரோடு பேசி பழகியிருக்காரு.
ஆன்மிகத்துல பெரிய ஆளா மாறிட்டாரு. கொஞ்ச காலத்துலயே இங்க்லீஷ்ல எழுத, படிக்க, பேசறதுக்குன்னு எல்லாத்தயும் கத்துகிட்டாரு.
இந்தியா முழுக்க ஒரு சுத்து சுத்தி நாலஞ்சி மொழிகள் கத்துகிட்டாரு. அவருக்கு வெளிநாட்டுத்
தொடர்புகள்லாம் கிடைச்சது. முடிஞ்சவரைக்கும்
சில வெளிநாட்டு மொழிகளையும் கத்துகிட்டாரு. பல வருஷங்கள் கழிச்சி தெற்குப் பக்கம் வந்தாரு.
திருவான்மியூர்ல ஒரு ஆசிரமத்துல பல நாட்கள் தங்கி மீட்டிங்லாம் பேசினாரு.”
விட்டல்ராவ் சொல்லச்சொல்ல ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் நெஞ்சில்
காட்சிகளாக எழுந்து விரிவடைவதை உணர்ந்தேன். எனக்கு உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.
“நம்ம லூர்துநாதனுக்கு இந்த மாதிரியான பக்திப்பேச்சுகள்ல கொஞ்சம்
ஆர்வம் உண்டு. மெட்ராஸ்க்குள்ள எங்க நடந்தாலும் ஒரு எட்டு போய் கேட்டுட்டு வருவாரு.
அந்தப் பழக்கத்துல திருவான்மியூர் ஆசிரமத்துக்கும்
போயிருக்காரு. முன்வரிசையில உக்காந்து அந்த சாமியார் பேசினதையெல்லாம் கேட்டிருக்காரு.
அவருக்கு அந்த அமைதியான பேச்சு ரொம்ப புடிச்சிடுச்சி. பேச்சு மாதிரியே அவருடைய அமைதியான
தோற்றமும் அவருக்குப் புடிச்சிடுச்சி. அதனால சாயங்காலங்கள்ல நேரம் கிடைக்கிற சமயத்துல
எல்லாம் அவருடைய பேச்சைக் கேக்கறதுக்காக அந்த ஆசிரமத்துக்குப் போக ஆரம்பிச்சிட்டாரு”
“நல்ல விஷயம்தான். நானா இருந்தாலும் அப்படித்தான் செய்வேன்”
“ஒருநாள் பேச்சு முடிஞ்சதும் அந்தப் பெரியவர் லூர்துநாதனைப்
பார்த்து கையைக் காட்டி பக்கத்துல வரச் சொல்லி அழைச்சாராம். கிட்ட போனதும் நீங்க லூர்துநாதன்
சார்தானன்னு கேட்டாராம். நம்ம பேரு இவருக்கு எப்படித் தெரியும்னு நெனச்சி திகைச்சி
ஆச்சரியமா அவருடைய முகத்தையே பார்த்தாராம். தெய்வாம்சமான முகம். கனிவான குரல். சட்டுனு
அடையாளம் புரியாம நின்னுட்டாராம். அதுக்கப்புறம் அந்த சாமியாரே என்னைத் தெரியலையா சார்?
நான்தான் உங்க தஃப்த்தரின்னு சொல்லிட்டு சிரிச்சாராம். அதுக்கப்புறம்தான் லூர்துநாதனுக்கு
அவருடைய அடையாளம் புடிபட்டிருக்குது. ரொம்ப அக்கறையோடு குடும்பத்தைப் பத்தி, ஆபீஸ்ல
இருக்கறவங்களைப் பத்தி எல்லாம் விசாரிச்சாராம். ஒருநாள் எல்லாரையும் அழச்சிட்டு வாங்கனு
சொன்னாராம். அவரு பேசப்பேச, சந்தோஷத்துல லூர்துநாதனுக்கு பறக்கறமாதிரி ஆயிட்டுதாம்.
கண்ணெல்லாம் கலங்கிப் போயிடுச்சின்னு சொன்னாரு.”
அதைக் கேட்கும்போது எனக்கும் கண் கலங்குவதுபோல இருந்தது. அந்த
அனுபவம் எனக்கே நேர்ந்ததுபோல இருந்தது.
“வாழ்க்கைங்கற நதி எப்படி எப்படியோ திரும்பி ஓடினாலும், எதிர்நீச்சல்
போடற மன உறுதி உள்ளவங்க எப்பாடு பட்டாவது கரை
சேர்ந்துருவாங்கன்னு சொல்றதை கேட்டிருக்கேன் சார். அதுக்கு சரியான உதாரணம் இந்த தஃப்தரி.
அற்புதமான மனிதர். அற்புதமான வாழ்க்கை”
ஆமாம் என்பதுபோல தலையை அசைத்துக்கொண்டார் விட்டல்ராவ்.
(அம்ருதா
– டிசம்பர் 2025)