எங்கள் அலுவலகத்தில் சதாசிவராவ் என்பவர் வேலை செய்துவந்தார். அவருடைய அப்பாவின் பெயர் சாம்பசிவராவ். அவர் சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றவர். ஒரு காலத்தில் அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சதாசிவராவுக்கு ஏழு வயது. மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு வந்து சிறைச்சாலையில் கைதிகள் சந்திப்பு நேரத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும் அம்மாவோடு சதாசிவராவும் வருவார். அம்மாவிடம் பேசுவதைவிட சிறுவனான அவரிடம்தான் அவர் அதிக நேரம் பேசுவது வழக்கம்.
ஒருநாள் சாம்பசிவராவுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.
ஆனால் அவர் வீட்டுக்குத்
திரும்பிச் செல்லவில்லை. அங்கிருந்து வார்தா ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்ட வேறொரு குழுவுடன் ஆர்வத்தோடு சேர்ந்துகொண்டார். பிறகு அங்கிருந்தும் புறப்பட்டு வட இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். அடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மறைந்துவிட்ட செய்திமட்டுமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. குடும்பத்தினரை அவர் சந்திக்கவே
இல்லை.
வீட்டிலிருக்கும்போது
கதைசொல்லி பாட்டு பாடி சிரிக்கவைத்த கணங்களும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலிருந்தபடி பெயர்சொல்லி அழைத்து புன்னகைத்த கணங்களும் மட்டுமே அப்பாவின் நினைவுகளாக சதாசிவராவின்
நெஞ்சில் நிறைந்திருந்தன. ஆனால் அவருக்கு தன் அப்பாவின் மேல் எவ்விதமான கசப்புணர்வும் இல்லை. தாத்தாவின் பராமரிப்பும் அம்மாவின் உழைப்பும் அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்றன. அவர்
கண்ணும் கருத்துமாகப் படித்து பட்டம் வாங்கி அரசு வேலையில் அமர்ந்தார். அப்பாவின் நினைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அப்பாவை நினைக்கும்போதெல்லாம் பெங்களூரு சிறைச்சாலைதான் அவர் மனத்தில் விரிந்து நின்றது. அதற்காகவே அவர் பெங்களூருக்கு மாற்றல் பெற்று வந்தார்.
அப்பாவைப்பற்றிய
நினைவு வரும்போதெல்லாம் சிறைச்சாலைக்கு அருகில் சிறிது நேரம் நின்றுவிட்டுத் திரும்பிவருவார் சதாசிவராவ். மாதத்துக்கு ஒருமுறை ஐம்பது அறுபது சாப்பாட்டுப் பொட்டலங்கள் வாங்கிச் சென்று பூங்காக்களிலும் மருத்துவமனை வளாகங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் கண்களிலும் முகத்திலும் பசிக்களை
படர உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு வருவார். அப்பாவைப்பற்றிய பேச்சை எடுத்தாலே அவர் மனமும் குரலும் நெகிழ்ந்து கரைவதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
சதாசிவராவுக்கு நேர்மாறான பார்வையைக் கொண்ட இன்னொருவரைப்பற்றியும் இந்த இடத்தில் குறிப்பிடத்
தோன்றுகிறது. அவருடைய அப்பாவும் சுதந்திரப் போராட்ட வீரர். உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய காலத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றுவந்த காலம் வரைக்கும் பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற அனுபவம் உள்ளவர். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையிலேயே கழித்தார். விடுதலையடைந்த இந்தியாவில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மறைந்தார். நேரடி கட்சி அரசியலுக்குள் வராமல் தீண்டாமை ஒழிப்பு, கதரியக்க வளர்ச்சி, மதுவிலக்கு போன்ற நிர்மாணப்பணிகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். அவருடைய தியாகத்தைப் போற்றும் விதமாக அரசு ஒதுக்கியளித்த ஐந்து ஏக்கர் நிலத்தை தன் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளாமல் அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டவும் பேருந்துநிலையம் அமைக்கவும் ஊருக்கே
தானமாக அளித்துவிட்டார்.
அவர்
அந்த நிலத்தை ஊருக்குத் தானமாக வழங்கியபோது அவருடைய மகன் சிறுவனாக இருந்தார். வளரும்போதே தன் அப்பாவின் மீது எவ்விதமான உயர்ந்த மதிப்பும் இல்லாமலேயே அவர் வளர்ந்தார். தன் அப்பாவின் விடுதலைப்போராட்ட ஈடுபாடு பற்றியோ, தியாக வாழ்க்கையைப்பற்றியோ அவருக்கு எவ்விதமான ஆர்வமும் இல்லை. பிழைக்கத்தெரியாத மனிதர், தமக்குக் கிடைத்திருக்கக்கூடிய நல்ல வாழ்க்கையையும் வசதியையும் தடுத்துவிட்ட மனிதர் என்றும் இகழ்ச்சியாகச் சுட்டிக்காட்டிப் பேசுவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது.
அவரைப்பற்றி
கூடுதலாக சில விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக நான் அவரைச் சந்திக்க விரும்பினேன். பல
நண்பர்கள் வழியாக நடைபெற்ற தேடல் முயற்சிகளுக்குப் பிறகே அவருடைய தொடர்பு எண் கிடைத்தது. மிகவும் ஆர்வத்தோடு அவரிடம் பேசினேன். ஆனால் அவர் எந்தச் செய்தியையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை.
”நான் இன்னைக்கு
மாசம் நாலாயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டுல இருக்கேன். கையில பணமில்லாததால டிகிரி முடிக்கமுடியலை. தாசில்தார் ஆபீஸ்ல காண்ட்ராக்ட் ஒர்க்கரா இருக்கேன். எல்லாத்துக்கும் அவருதான் காரணம்” என்று ஒருமுறை சலித்துக்கொண்டார்.
மற்றொருமுறை
அணுகியபோது ”அரசாங்கம் குடுத்த அஞ்சி ஏக்கர் நிலம் அப்படியே இருந்திருந்தா இன்னைக்கு என்
வாழ்க்கை நிலைமையே வேற மாதிரி மாறியிருக்கும். ஒரு வீடு, வாசல், நிலம்னு கெளரவத்தோடு வாழ்ந்திட்டிருப்பேன். இவருக்கு
மாலை மரியாதை வேணும்கறதுக்காக இருக்கறதயெல்லாம் தானமா குடுத்திட்டு பெத்த புள்ளைய நடு ரோட்டுல உட்டுட்டு போயிட்டாரு” என்று வெறுப்போடு பேசினார்.
மூன்றாவது
முறை உரையாடலைத் தொடங்கும்போதே கசப்போடுதான் தொடங்கினார். தன் அப்பாவை அப்பா என்று குறிப்பிடுவதற்குக் கூட அவருக்கு மனமில்லை. ’அந்த ஆளு, இந்த ஆளு’ என்ற அடைமொழியோடு குறிப்பிட்டுப் பேசினார். ”மனுஷன்னு சொன்னா, ஒன்னு சொந்தமா சம்பாதிக்க தெரிஞ்சிருக்கணும். இல்லைன்னா கைக்கு கெடைச்சத புடிச்சிட்டு கொஞ்சம்கொஞ்சமா படியேறி முன்னேறி வரவாவது தெரியணும். ரெண்டும் தெரியாத மக்கு சார் அந்த ஆளு…” என்று கசப்பு படிந்த சொற்களைச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் அவர். அதற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்வதையே நான் விட்டுவிட்டேன்.
இங்கே
குறிப்பிட்ட இரு தியாகிகளுமே தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தன்னலமற்றவர்கள். அதில் சந்தேகமே இல்லை. ஒருவருடைய மகன் அன்பு கனிந்த தன் அப்பாவின் முகத்தை நினைக்காத நாளே இல்லை. இன்னொருவருடைய மகன் அப்பாவை நினைத்தாலே வெறுக்கிறவராக இருக்கிறார்.
சரி, தவறு பார்த்து மதிப்பிட்டுச் சொல்லும் பார்வைக் கோணத்துக்காக நான் இங்கே இவர்களைப்பற்றிய செய்திகளைக் குறிப்பிடவில்லை. அப்பா பற்றிய இருவிதமான பார்வைகளும் இயல்பாகவே இந்த மண்ணில் காலம்
காலமாகத் திகழ்கின்றன
என்பதை சுட்டிக்காட்டுவதற்காகக் குறிப்பிடுகிறேன்.
அப்பா
– மகன் உறவு என்பது நுட்பமானது. ’சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்பது புறநானூறு காலத்துச் சமூகம் வகுத்தளித்த கடமை. ஒரு போர்ச்சமூகத்தில் போர்க்கலையில் நாட்டமுள்ளவனாக பிள்ளையை வளர்ப்பதே முக்கியத் தேவையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு சூழலில் அக்கலையில் தேர்ச்சி பெற வைத்தலை பயிற்சி நிலையங்களின் கடமையாக வரையறை செய்துவிட்டு, ஒழுக்கமும் கருணையும்
இரக்கமும் அன்பும் நியாய உணர்வும் நிறைந்த சான்றோனாக வளர்ப்பதை மட்டுமே தந்தைக்குரிய கடமையாக வரையறை செய்கிறது. ஒரு பிள்ளையை அரசாட்சிக்குத்
துணையாக இருப்பதைவிட சமூகத்துக்குத் துணையாக நிலைநிறுத்துவதே ஒரு தந்தைக்குரிய முக்கியமான
கடமை என்பதுதான் இதன் உட்பொருள். ஆனால்
வாழ்க்கை என்பது எப்போதும் நாம் வகுத்துவைத்திருக்கும் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குவதையே தன் இயல்பாகக் கொண்டிருக்கிறது.
அப்பாவின்
வழியில் உலகத்தை அறியத் தொடங்கி, மேலும் மேலும் சிறப்பாக அறிந்துகொள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்பாவின் வழியை முற்றிலும் உதறி தன் போக்கில் சொந்தமாக உயர்வடையும்
பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்பாவின் வழியை தனக்கிடப்பட்ட தளையென நினைத்து குமைந்தும் புகைந்தும் நின்றுவிடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்பாவின்மீது உருவாகும் கசப்பின் காரணமாக அவர் காட்டும் வழியை நிராகரித்தும், அவர் வழியின் மீது உருவாகும் கசப்பின் காரணமாக அவரையே நிராகரித்தும் அவர் உறவையே துண்டித்துக்கொண்டு வெளியேறிச் செல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அப்பாவின் வழிகளை
உதறிவிட்டும் அவருடைய கணிப்புகளை முற்றிலும் பொய்யாக்கிவிட்டும் தமக்கான பாதையை தாமே வகுத்துக்கொண்டு தன் போக்கில் முன்னேறிச் சென்று நிற்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அப்பாக்களும் பலவிதமானவர்கள். பிள்ளைகளும் பலவிதமானவர்கள்.
அப்பா – மகன் உறவைப் பின்னணியாகக் கொண்டு இந்த உலகம் கண்ட கதைகள் எண்ணற்றவை.
அவற்றில் காந்தியடிகளுக்கும் அவருடைய மூத்த மகனான ஹரிலாலுக்கும் இடையிலான கசப்பு படிந்த கதை முக்கியமான ஒரு கதைக்களன். இருவருமே எதிரெதிர் திசைகளில் தம் பயணத்தை அமைத்துக்கொண்டவர்கள் என்கிற வகையில் இக்களனுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. தந்தை, மகன் இருவருமே தோற்று நிற்கும் விசித்திரமான முடிவைக் கொண்டது இவர்களுடைய கதைக்களன். அவலம் தோய்ந்த இக்கதையை தாய்மைக்கே உரிய பரிவுடன் ஒரு நாவலாக வழங்கியிருக்கிறார் கலைச்செல்வி.
காந்தியடிகளின்
தென்னாப்பிரிக்க வாழ்க்கையையே கலைச்செல்வி நாவலுக்கான பின்னணியாக அமைத்துக்கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில்
இந்தியன் ஒப்பீனியன் இதழைத் தொடங்கி பலவேறு போராட்டங்களை காந்தியடிகள் ஒருங்கிணைத்திருந்த
நேரத்தில் அவரோடு இணைந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து ஹரிலால் செல்கிறார். சில ஆண்டுகள்
அங்கேயே தங்கி அவருடைய பணிகளில் ஒத்துழைக்கிறார். ஆனால் அவருடைய இயல்பு, அவரை அக்களத்தில்
நீடித்து உழைக்க விடவில்லை. விலகி நிற்க வைக்கிறது. அப்பாவின் கருத்தில் சந்தேகம் கொள்ளவைக்கிறது.
தலைமையின் கருத்தை ஏற்று அதைப் பின்தொடர்ந்து செல்வதையே முக்கியமான கடமையென நினைக்கும் மனம் அவரிடம் இல்லை.
பாதை மாறி சொந்த முன்னேற்றம் சார்ந்த யோசனைகளில் மூழ்குகிறார். ஆனால் அதற்கான தனித்துவமான
திட்டமெதுவும் அவரிடம் இல்லை. அதையும் தன் தந்தையிடமிருந்தே எதிர்பார்க்கிறார். அது
கிட்டாதபோது எரிச்சலடைகிறார். ஆப்பிரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்க விருப்பமில்லாமல்
இந்தியாவுக்குத் திரும்பிவிடுகிறார். அடிப்படைப் படிப்பான மெட்ரிகுலேஷன் தேர்வை இருமுறை
எழுதியும் இருமுறைகளிலும் தோல்வியடைந்துவிடுகிறார். வாழ்வின் அடுத்த படியை நோக்கி அடியெடுத்துவைக்க
முடியாதபடி இத்தோல்விகள் அவரைத் தடுக்கின்றன. ஒருவேளை தன் தோல்விக்கான காரணத்தை அவர்
தனக்குள் தேடி சரிப்படுத்திக்கொண்டிருந்தால், ஒருவேளை அவருக்கு வெற்றி கிடைத்திருக்கலாம்.
ஆனால் தன் தோல்விக்கான காரணத்தை மற்றவர்களிடம் தேடும் இயல்பு கொண்டவராக இருக்கிறார்
ஹரிலால். இதுதான் அவர் பிரச்சினை. தென்னாப்பிரிக்கப் போராட்டம் வெற்றியடைந்துவிட்ட
நிலையில் காந்தியடிகள் குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பும் ஏற்பாடுகள் ஒருபுறம்
நடைபெற்று வரும்போது, இந்தியாவில் தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் தோற்று அமைதியையும்
வாழ்க்கையையும் ஒருசேர இழந்து நிற்கிறார் ஹரிலால்.
மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று
காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக்
கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில்
தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும்
உள்ளூர விழைபவராகவும் அதற்காக கணவரிடம் உரையாடுபவராகவும் காணப்படுகிறார். தன் முயற்சிகளில்
அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது. ஹரிலால் மூன்றாவது தரப்பு. இளைய காந்தி என பட்டப்பெயர்
சூட்டி மற்றவர்கள் அழைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சி அடையும் அவர் மீண்டும் மீண்டும்
சிறைக்குச் செல்வதன் வழியாக எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு அவரால் சரியான
விடையைக் கண்டுபிடிக்க முடியாதவராக தடுமாறுகிறார். தன் தந்தை வகுத்தளிக்கும் வழியின் மீது அவநம்பிக்கையுற்று தனக்கு முன்னேற்றமளிக்கும்
வேறொரு வழியை நாடி குடும்பத்துடன் முரண்கொள்கிறார் ஹரிலால். அவரும் இறுதியில் தோல்விப்புள்ளிக்கே
வந்து சேர்கிறார்.
மூன்று தரப்பு நிலைகளையும் கலைச்செல்வி இந்த நாவலில்
கச்சிதமாக வரையறுத்துக்கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது. எந்த இடத்திலும் ஒருசிறிதும்
மிகையாக தோற்றமளித்துவிடாதபடி கவனமுடன் எழுதிச் செல்கிறார் கலைச்செல்வி. மடியில் தன்
குழந்தையை வைத்துக்கொண்டு “நான் பிறந்த காலத்தில்
அப்பா இதுமாதிரி உணர்ந்தாரா?” என்றும் “அவர் என்னை மடியில் போட்டு கொஞ்சியதுண்டா?”
என்றும் “நான் பிறந்த காலத்தில் என்னைப்பற்றி அவர் என்ன சொன்னார்?” என்றும் அடுக்கடுக்காக
கேள்விகளைத் தொடுக்கும் தருணத்தில் ஹரிலாலிடம் எழும் பதற்றத்தைப் பார்க்க முடிகிறது.
பா வின் பகுதிகளைப் படிக்கும்போது ஒரு தாயின்
குரலே ஒலிக்கிறது. ஹரிலாலில் சொற்களைப் படிக்கும்போது ஒரு மகனின் ஆதங்கமே ஒலிக்கிறது.
காந்தியடிகளின் சொற்களைப் படிக்கும்போது தேர்ந்த ஞானியொருவரின் சொற்களைப்போலவே காட்சியளிக்கின்றன.
வழக்கமாக இத்தகு தருணத்தை எழுதுபவர்கள், ஏதேனும்
ஒரு தரப்பின் சார்பாக சாய்ந்துவிடுவதே இயற்கை. ஆயினும் கலைச்செல்வி கட்டுப்பாடான தன் கலையாளுமை வழியாக அந்தச் சிக்கலிலிருந்து
மீண்டுவிடுகிறார்.
நாவலை வாசிக்கும்போது, சிற்சில கணங்களில் கலைச்செல்வி
தன்னைத்தானே காந்தியடிகளாகவும் கஸ்தூர் பா
வாகவும் ஹரிலாலாகவும் நினைத்துக்கொண்டிருப்பதை எளிதாக உணர்ந்துகொள்ள முடிகிறது. மூன்று
தரப்பையும் சமநிலையில் எடுத்துவைக்க இந்த உணர்வுதான் காரணமாக இருக்கவேண்டும். மூன்று
நிலைகளிலும் கலைச்செல்வி மிகச்சிறப்பாக பங்காற்றியிருக்கிறார் என்றபோதும் பா வின் கோணத்தில்
இருந்து அவர் அளித்திருக்கும் பங்களிப்பின் எடை ஒரு நெல்மணியளவு கூடுதலாகவே இருப்பதை என்னால் உணரமுடிகிறது. பெற்ற
மகனின் மனத்தை மாற்றிவிட முயற்சி செய்யும் தாயின் ஆற்றாமை படிந்த குரலை கஸ்தூர் பா
வின் சொற்களே அதற்குச் சான்று.
அறிமுகமான களம், அறிமுகமான மனிதர்கள். அறிமுகமான
வாழ்க்கைத் தருணங்கள். ஆனால் புதியவைபோல தோற்றமளிக்கும் விதத்தில் அனைத்தையும் கச்சிதமான
காட்சிகளாக்கித் தொகுத்திருக்கிறார் கலைச்செல்வி. அவர் தொகுத்து முன்வைக்கும் கோணம்
மிகமுக்கியமானது. மகனின் முன்னிலையில் கண்ணீர்
விடும் ஒரு தந்தையாக, மன்னிப்பு கேட்கும் தந்தையாக காந்தியடிகளைக் கொண்டுவந்து நிறுத்தும்போது,
அவையெல்லாம் மிக இயல்பானவையாகவே தோற்றமளிக்கின்றன. அந்தக் கண்ணீரையும் மன்னிப்பையும்
தனக்குக் கிடைத்த இறுதி வாய்ப்பாக எண்ணி, அதைப்பற்றிக்கொண்டு
ஹரிலால் மீண்டிருக்கலாம். ஆனால், கெடுவாய்ப்பாக ஹரிலால் அதை உதறிவிட்டு முன்னால் போய்விடுகிறார்.
காந்தியடிகள் தமக்குப் பிடித்த குஜராத்திப் பாடலொன்றை
பாடிக் காட்டும் ஒரு தருணம் இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. காந்தியடிகளின் ஆளுமைக்கு
ஏற்ற பாடல்.
தாகத்துக்கு நீர் கொடுத்தவருக்கு நீ திரும்ப
நீர் கொடுத்துவிடுவதில் பெரிது ஏதுமில்லை
தீமை செய்தவருக்கு நன்மை செய்வதிலேயே
உண்மை பெருமை உண்டு
உண்மை பெருமை உண்டு
‘உண்மையான பெருமை எது?’ என்ற கேள்விக்கான விடையையே
அவர் தன் ஆளுமைப்பண்பாக கொண்டிருக்கிறார். காந்தியடிகளிடம் இத்தகு பண்பு நிறைந்திருந்ததாலேயே,
கண்ணுக்குக் கண் என ஒவ்வொருவரும் இந்த மண்ணில் பழிவாங்கத் தீர்மானித்துவிட்டால், இந்த
உலகம் மிகவிரைவில் பார்வையற்றோர் உலகமாகவே மாறி நிற்கும் என்று சொல்ல முடிகிறது.
காந்தியடிகள் கீதை மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
கீதையின் சொற்களை தினசரி வாழ்க்கையில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்தவர். கலைச்செல்வி
இந்த நாவலெங்கும் கீதையின் பல வரிகளை காந்தியடிகளின் சொற்கள் வழியாக பொருத்தமான விதத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்.
காந்தியடிகளும் போலக்கும் உரையாடிக்கொள்ளும் தருணத்தைச் சித்தரிக்கும் போக்கில், ஆசைக்கும்
கோபத்துக்கும் இடையிலான உறவின் விளைவைப்பற்றி எடுத்துரைக்கும் கீதையின் வரி முன்வைக்கப்படுகிறது.
கோபமும் ஆசையும் மனிதனை அடிமைபோல விரட்டிக்கொண்டே இருக்கும். எதைக் கண்டாலும் ஆசைப்படுவதும்,
அது நிறைவேறவில்லையெனில் கோபப்படுவதும் சகோதர உணர்வுகள். ஆசைக்கும் கோபத்துக்கும் அடிமையாக
இருப்பவன் இனம்புரியாத வெறியுணர்ச்சிக்கு விரைவில் அடிமையாகிவிடுகிறான். ஹரிலாலின் மொத்த வாழ்க்கையும் இந்த இந்த இரு வரிகளிடையில்
மறைந்திருப்பதை உய்த்துணரும் வகையில் அமைத்திருக்கும் கலைச்செல்வி பாராட்டுக்குரியவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சி.சு.செல்லப்பா சுதந்திரப்
போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு சுதந்திர தாகம் என்ற நாவலை எழுதினார்.
அதில் காந்தியடிகளைப்பற்றிய பல தகவல்களை, பாத்திரங்களுடைய உரையாடல்களின் வழியாக அறிந்துகொள்ளலாம்.
இப்போது, காந்தியடிகளையே ஒரு முக்கியமான கதைப்பாத்திரமாகக் கொண்டு கலைச்செல்வி இந்த
நாவலை எழுதியிருக்கிறார். சிறப்பான தமிழ் நாவல் வரிசையில் கலைச்செல்வியின் நாவலுக்கும்
இடமுண்டு. கலைச்செல்விக்கு வாழ்த்துகள்.
(தன்னறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள கலைச்செல்வியின்
புதிய நாவலான ஹரிலால், த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரை
)