மாப்பிள்ளை பொம்மை
குடுகுடு தாத்தா வந்தாரு
கொழகொழ சேற்றை எடுத்தாரு
மடமட என்றே பிசைஞ்சாரு
மாப்பிள்ளை பொம்மை செஞ்சாரு
கொழுகொழு மாமா வந்தாரு
மழமழ பொம்மையை பார்த்தாரு
பளபள துணியை கிழிச்சாரு
தொளதொள சட்டை தைச்சாரு
தடதட அண்ணன் வந்தாரு
மொடமொட தாளை எடுத்தாரு
கடகட சுருட்டி மடிச்சாரு
பொம்மைக்கு தொப்பி போட்டாரு
லொடலொட மச்சான் வந்தாரு
கலகல என்றே சிரிச்சாரு
மடமட குச்சியை உடைச்சாரு
பொம்மையின் கையில் கொடுத்தாரு
முத்தம்மாவின் தோட்டம்
கொண்டைக்காரி முத்தம்மா
குதித்துக்கொண்டே போனாளாம்
குளத்திலிருந்து தண்ணீர்க் குடத்தை
இடுப்பில் சுமந்து வந்தாளாம்
வேலிப் படலில் செருகி வைத்த
கொட்டாங்கச்சியை எடுத்தாளாம்
செடிகளுக்கும் கொடிகளுக்கும்
மொண்டு மொண்டு இறைத்தாளாம்
பவழமல்லி பட்டுரோஜா
செடிகள் பக்கம் நடந்தாளாம்
வேரின் தாகம் தணியும் வண்ணம்
பக்குவமாக தெளித்தாளாம்
எலுமிச்சைக்கும் கொய்யாவுக்கும்
கூடுதலாக இறைத்தாளாம்
எஞ்சிய நீரை எடுத்துச் சென்று
கீரைப்பாத்தியில் கவிழ்த்தாளாம்
பூனைக்குட்டியின் ஆசை
மியாவ் மியாவ் பூனைக் குட்டிக்கு
ஆசை வந்தது
மிடுக்கு காட்டி உடம்பு விறைக்க
நடந்து சென்றது
கொய்யா மரத்தைச் சுற்றி ஆடும்
அணிலைப் பார்த்தது
கோணல் பார்வை புன்னகையோடு
மேலும் நடந்தது
குப்பையைக் கிளறி அலையும் கோழியை
மேட்டில் பார்த்தது
திரும்பிப் பார்க்க நாட்டமில்லாமல்
அசைந்து நடந்தது
வேலிப்படலில் நாய்கள் குரைக்கும்
சத்தம் கேட்டது
வெடவெடத்து கனவு கலைய
ஓட்டம் எடுத்தது
இனிமை
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
என்ன சொன்னது?
பறந்து திரிதல் இனிமையென்று
பறந்து விட்டது
வானம்பாடி வானம்பாடி
என்ன சொன்னது?
பாடிப் பறத்தல் இனிமையென்று
தாவிச் சென்றது
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
என்ன சொன்னது?
பூவும் தேனும் இனிமையென்று
பறந்து போனது
ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி
என்ன சொன்னது?
அலைந்து திரிதல் இனிமையென்று
ஓட்டம் எடுத்தது
ஆட்டின் விளையாட்டு
வேலி தாண்டி வந்த ஆடு
தோட்டத்தில் புகுந்து விட்டது
விரட்டும் போது அச்சம் கொண்டு
வேறு திசையில் பாய்ந்தது
சாமந்திச் செடியை மிதித்து விட்டு
கீரைப் பாத்தியில் நின்றது
தக்காளித் தளிர்கள் கூழ்கூழாக
தாண்டித் தாண்டிச் சென்றது
தண்ணீர்ப் பானையை உருட்டி உடைத்து
மிரண்டு திரும்பிப் பார்த்தது
மல்லிகைப் பந்தல் கொம்பால் கிழிபட
நடுங்கிக் கொண்டு தவித்தது
உலர வைத்த கம்பு மீது
குளம்பு பதிய நடந்தது
வாழைக் குருத்தை இழுத்து விட்டு
அடுப்பு மேடையில் குதித்தது
வட்டமடித்துத் திரிந்த பின்பு
சுற்று வேலியைத் தொட்டது
அடுத்த சத்தம் எழுப்பும் முன்னே
தப்பி ஓடி விட்டது