வழக்கமாக கோடை விடுமுறை தொடங்கியதும் என் தம்பிகளின் குழந்தைகள் பெங்களூருக்கு வந்து சிறிது காலம் தங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வதும் பூங்காக்களுக்குச் செல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூங்காவுக்குச் செல்வோம். ஒரு பள்ளித்தோழனிடம் பகிர்ந்துகொள்வது போல தம் வகுப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் பற்றியெல்லாம் என்னுடன் அப்பிள்ளைகள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பல சமயங்களில் நான் அவர்களுக்கு புதிதுபுதிதாக பாடல்களை எழுதிப் பாடிக் காட்டுவேன். அவர்களும் அவற்றை ஆசையோடு பயிற்சியெடுத்து படித்து பாடிக் காட்டுவார்கள்.
இந்தக் கொரானா காலத்தில் எல்லாமே முடங்கிவிட்டது. ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்வதுகூட இணையத்தின் வழியாக மட்டுமே சாத்தியமான ஒன்றாகச் சுருங்கிவிட்டது. மாயக்கதைகளில்
அடிக்கடி சொல்லப்படுவதுபோல கொரானா என்னும் அரக்கன் எல்லோரையும் அவரவர்களின் வீடுகளான
குகைகளில் தள்ளி அடைத்துவிட்டான். கைபேசி என ஒரு கருவியும் இணையம் என்னும் கண்ணுக்குத்தெரியாமல்
பரந்துவிரிந்திருக்கும் நெடுஞ்சாலையும் இல்லையென்றால் உலகமே மனநோய் விடுதியாக மாறியிருக்கும். இன்றைய காலம்
இணையத்துக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
அனைவரையும் போல நாங்களும் இணையத்தின் வழியாகவே பார்த்துக்கொண்டோம், பேசிக்கொண்டோம். அவர்களுக்காக
ஒவ்வொரு நாளும் நான் ஒரு பாட்டை எழுதிப் படித்துக் காட்டினேன். எங்களுக்கிடையில்
இருந்த தொலைவை ஓரளவு அது மறக்க உதவி செய்தது. பிள்ளைகளும்
அப்பாடல்களை ஆசையோடு கற்றுக்கொண்டார்கள். அடுத்தடுத்த நாட்களில் அப்பாடல்களைப் பாடிப்
பயிற்சி பெற்று என்னிடம் பாடிக் காட்டினார்கள்.
பிள்ளைகளுக்கு அனுப்பிய பாடல்களை எங்கள் குடும்பத்தோழியான ஜெயஸ்ரீயுடன்
பகிர்ந்துகொண்டபோது, இசையார்வம் கொண்ட அவர் தனக்குப் பிடித்த சில பாடல்களை அவரே ராகத்தோடும்
தாளத்தோடும் பாடிக்காட்டினார். அவருடைய குரலும் ராகமும் ஒவ்வொரு நாளும் பொழுதுகளின் உற்சாகத்தை
வற்றாமல் பார்த்துக்கொண்டன. பிறகு அதே பாடல்களை என் இளமைக்கால நண்பன் பழனிக்கும் அனுப்பிவைத்தேன். அப்பாடல்களுக்கிடையில்
நிழல்போலப் படர்ந்திருக்கும் எங்கள் இளம்பருவத்தை அவனால் பார்க்க முடிந்தது. பிறகு பேச்சு
திசைமாறி கடந்த காலத்தை நோக்கிச் சென்றது. தொடர்ந்து
அதைப்பற்றி உரையாடுவதன் வழியாக அந்த இளமையின் கணங்களை நாங்கள் மீட்டுருவாக்கம் செய்து
மகிழ்ச்சியில் திளைத்தோம். பிள்ளைகளுக்காக எழுதிய பாடல்கள் ஒருவகையில் எங்களுக்கு நாங்களே
எழுதிய பாடல்களாக மாறிவிட்டன. விளையாட்டாக எழுதிப் பகிர்ந்துகொண்ட பாடல்கள் ஒரு தொகுப்பு அளவுக்கு
சேர்ந்துவிட்டதை நினைத்தால் மகிழ்ச்சியாகவே இருக்கிறது
உரையாடல் நீண்டுநீண்டு ஒவ்வொரு நாளும் எங்கள் தொடக்கப்பள்ளிக்
காலத்தில் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடல்களில் சென்று முடிவதே வழக்கமாகிவிட்டது. ’நிலா நிலா
ஓடி வா நில்லாமல் ஓடி வா’ பாட்டும் ’கைவீசம்மா கைவீசு’ பாட்டும் மறக்கவே முடியாத பாடல்கள். இந்தப் பாடல்களைப்போலவே
இன்று நான் எழுதும் பாடல்கள் ஒவ்வொன்றும் பிள்ளைகளின் உரையாடலிலும் நெடுங்காலம் நீடித்திருக்கவேண்டும்
என ஒருகணம் ஒரு கனவு மின்னலென எழுந்து மறைகிறது..
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் படித்த ‘பனைமரமே
பனைமரமே’ பாட்டும் ’ஈயும் குதிரையும்’ பாட்டும் மறக்கமுடியாதவை. ஈ, குதிரைக்குட்டி, கோல், கொக்கு, குளம், மீனவன், சட்டி, புல் ஆகிய
பாத்திரங்களுக்கு பிள்ளைகளையே வரிசையில் நிற்கவைத்து சொல்லிக்கொடுத்து பாடவைத்து, இந்தப் பாட்டை
மனத்தில் பசுமரத்தாணியைப்போல பதியவைத்த நவநீதம் டீச்சரும் மறக்கமுடியாதவர். இப்பாடல்களை
எழுதிய எம்.சி.ராஜாவும் ரங்கநாயகி அம்மையாரும் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகள். இருவரும்
கல்வித்துறையில் உயரதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் என்றபோதும் குழந்தை இலக்கியத்தில்
ஈடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். இரட்டைப்புலவர்கள் போல இவ்விருவரும் எண்ணற்ற பாடல்களை தமிழில்
எழுதியிருக்கிறார்கள். சந்தத்தாலும் கற்பனையாலும் அவை அனைத்தும் மேலான பாடல்கள். முன்னோடிப்
பாடலாசிரியர்களான அவ்விருவரையும் என் பாடல்கள் தொகுப்பாக உருப்பெறும்
இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுதியை அவர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில் உள்ள ஒருசில பாடல்களை வெளியிட்ட
பஞ்சுமிட்டாய், புதுவைபாரதி
ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்கு நன்றி. என் மனைவி அமுதா அளிக்கும் ஊக்கம் எனக்கு எப்போதும்
மாபெரும் துணை. அவர்
என் ஆழ்மனத்தில் எப்போதும் நிறைந்திருப்பவர். இத்தொகுதியை அழகான ஓவியங்களுடன் சிறப்பான முறையில்
வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் நன்றி.
கிடைக்குமிடம்
பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,
சுப்பராய நகர், தேனாம்பேட்டை
சென்னை - 18
விலை. ரூ.60.