அதோ அங்கே குள்ளநரி
அலைந்து திரியும் குள்ளநரி
கன்னங்கரிய குள்ளநரி
காதை அசைக்கும் குள்ளநரி
காட்டைச் சுற்றித் திரிந்தது
கனவில் மிதந்து நடந்தது
ஊளையிட்டுக் குதித்தது
உருண்டு புரண்டு களித்தது
பாறை மீது ஏறியது
பாதை கண்டு ஓடியது
பள்ளம் மேடு அலைந்தது
பசியில் களைத்து நின்றது.
குகைக்குள் புகுந்து பார்த்தது
குளத்தங்கரையில் திரிந்தது
உணவுக்காக அலைந்தது
ஏமாற்றத்தில் தவித்தது
எறும்பு நிறத்தில் புதியநரி
எதிரில் வருவதைப் பார்த்தது
குறுக்கில் சென்று நின்றது
உணவைப்பற்றிக் கேட்டது
அதோ அங்கே ஆலமரம்
அதற்குக் கீழே கரும்பாறை
பாறைக்கருகில் சுருண்டிருக்கும்
நத்தையொன்றைப் பார்க்கலாம்
உணவுச் செய்திகள் ஒவ்வொன்றும்
நத்தைக்கு நன்கு மனப்பாடம்
தேடிச் சென்று கேளென்று
செய்தியைச் சொன்னது புதியநரி
சுட்டிக் காட்டிய பாதையில்
துவண்டு நடந்தது குள்ளநரி
நாலா பக்கமும் தேடியது
நத்தையின் இடத்தை அடைந்தது
பணிந்து வணங்கி நின்றது
பசியைப் பற்றிச் சொன்னது
நத்தை தலையை அசைத்தது
கவலை வேண்டாம் என்றது
அதோ அங்கே நெடும்பாறை
அதற்குக் கீழே பெரும்பள்ளம்
பள்ளத்துக்குள் படுத்திருக்கும்
ஆமையொன்றைப் பார்க்கலாம்
உணவுச் செய்திகள் ஒவ்வொன்றும்
ஆமைக்கு நன்கு மனப்பாடம்
தேடிச் சென்று கேளென்று
நத்தை முதுகை அசைத்தது
நத்தை சொன்ன பாதையில்
நடந்து சென்றது குள்ளநரி
பள்ளத்தை நெருங்கி நின்றது
ஆமையைக் கூவி அழைத்தது
எட்டிப் பார்த்த ஆமையை
நெருங்கி வணங்கி நின்றது
பசியைப் பற்றிச் சொன்னது
உணவுக்கு வழியைக் கேட்டது
ஆமை உடலை அசைத்தது
அருகில் நெருங்கி வந்தது
அன்பும் கனிவும் வெளிப்பட
ஆறுதல் சொற்கள் சொன்னது
அதோ அங்கே தேக்குமரம்
அதற்குப் பின்னால் அரசமரம்
அரச மரத்தின் நிழலினிலே
கருத்த யானை நின்றிருக்கும்
அலைந்து திரிந்த அனுபவத்தில்
யானைக்கு அதிகம் தெரிந்திருக்கும்
யானையைக் கண்டு கேளென்று
ஆமை அனுப்பி வைத்தது
ஆமை சொன்ன வழியிலே
நடந்து சென்றது குள்ளநரி
அரச மரத்தை அடைந்தது
யானையைக் கூவி அழைத்தது
பாறை புரண்டு வருவதுபோல்
யானை நடந்து வந்தது
தும்பிக்கையை வளைத்தது
ஓங்கி முழக்கமிட்டது
நடுக்கம் கொண்ட குள்ளநரி
யானையின் முன்னால் நின்றது
பசியைப் பற்றிச் சொன்னது
உணவுக்கு வழியைக் கேட்டது
யானை நரியைப் பார்த்தது
பாவம் என்று நினைத்தது
மனசில் இரக்கம் கொண்டது
வருத்தம் வேண்டாம் என்றது
அதோ அங்கே நீர்வீழ்ச்சி
அதற்குப் பின்னால் நாணல்புதர்
புதரை ஒட்டி குகையிருக்கும்
குகைக்கு உள்ளே புலியிருக்கும்
மானைக் கொன்று தின்றபுலி
விட்டுச் சென்ற எச்சங்கள்
சிதறிக் கிடப்பதை உண்ணென்று
யானை எடுத்துச் சொன்னது
தளர்ந்து போன குள்ளநரி
தலையைக் குனிந்து கொண்டது
தயக்கம் வேண்டாம் போவென்று
யானை நரியை அனுப்பியது
யானை சொன்ன வழியிலே
ஓடிச் சென்றது குள்ளநரி
மானைச் சுவைத்துத் தின்றது
பசியைத் தணித்துக்கொண்டது
(பொம்மி – அக்டோபர் 2021)